Tuesday, December 29, 2009

ஆர்மேனியா தேசத்து சிறுகதைகள்

ஆர்மேனியா....சோவியத் யூனியன் குடியரசுகளில் ஒன்றான இந்த தேசத்தின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பிது.இந்த நூலிற்கு அசோகமித்திரன் எழுதியுள்ள விரிவான முன்னுரை ஆர்மேனியா தேசம் குறித்தும்,ஆர்மேனியாவிற்கும் இந்தியாவிற்குமான வர்த்தக மற்றும் காலாச்சார தொடர்பினை குறித்தும் சொல்லும் செய்திகள் ஏராளம்.ஆர்மேனியர்கள் வர்த்தகம் தொடர்பாய் இந்தியாவிற்கு வரும் முன்னரே உலக யுத்த காலத்தில் அகதிகளாய் கொல்கத்தாவிலும்,சென்னையிலும்,கேரளத்திலும் குடியேறி உள்ளனர் என்னும் செய்தி ஆச்சர்யம் தருவதாய் இருந்தது.மேலும் சென்னையில் ஆர்மேனியா வீதியில் மிகப்பழமையான கிறிஸ்துவ தேவாலயம் இன்றும் அவர்களின் சுவடினை நினைவூட்டுவதாய் உள்ளதாம்.இச்செய்திகள் யாவும் படிக்க படிக்க ஆர்மேனியா தேசம் குறித்து அறிய ஆர்வம் மேலிட,இணையத்தில் தேடியதில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்களில் ஒருநாள் முழுதும் மூழ்கி போனேன்.

அடர்ந்த மலைகளும்,பூக்கள் விரிந்த சோலைகளும்,புராதான கட்டிடங்களும் நிறைந்த அழகிய ஆர்மேனியா தேசத்தின் இலக்கிய சூழல் 1990 களில் தொடக்கத்தில் வெகு சிறப்பாய் இருந்துள்ளது.இத்தொகுதியின் சிறுகதைகள் யாவும் 1880-1930களில் எழுத பெற்றவை. "என் நண்பன் நெசோ",சிறு பருவத்து நண்பன் நேசொவை பின்னாட்களில் பரம ஏழையாய் சந்திக்கும் பணக்கார வாலிபனின் கதை.மங்கிய நிலவொளியில் வட்டமாய் அமர்ந்து பேசும் சிறுவர்களுக்கு மத்தியில் விசித்திர கதைகளை சொல்லுவதில் நெசோ ஒரு நாயகன்....ஏற்ற தாழ்வுகள் அற்ற சிறுவர் பிராயம் மெல்ல மெல்ல மறைந்து அவர் அவர் பெற்றோரின் பொருளாதார நிலைக்கேற்ப மாறுபடுவதை அழகாய் சொல்லி இருகின்றார் இக்கதை ஆசிரியர் ஹோவன்னஸ்."வயிறு",பெரும் பசி கொண்ட தச்சன் ஒருவனின் கதை.வருமானம் ஏதும் அற்ற நிலையில் தன் பசியின் பொருட்டு கிடைக்காத உணவு வகைகளை,பார்க்காத பதார்த்தங்களை கனவில் உண்டு மகிழும் விசித்திர பிறவியான தச்சனின் கதையை எழுதி இருப்பவர் தெரனிக்."ஆட்டு குட்டி",தனித்து வாழும் ஒரு ஏழை தந்தை தூர நகரத்தில் பெரும் பதவியில் இருக்கும் தம் மகன் குறித்தான நினைவுகளில் மூழ்கி, அவன் வரவை எதிர்நோக்கும் ஒரு நாளின் குறிப்புகள். மலிந்து வரும் உறவுகளுக்கிடையேயான பிணைப்பு குறித்து 1915 இல் எழுத பட்ட இக்கதை கூறுவது ஆச்சர்யம் ஏற்படுத்துகின்றது. "ஒரு சிறுவனும் பெரிய லாரி டிரைவரும் ",உலகத்தை சுற்றி வர ஆர்வம் கொண்டிருக்கும் சிறுவனுக்கும் அந்த ஆவலை தன கற்பனையால் பூர்த்தி செய்யும் ஆர்மேனிய எல்லையை தாண்டிடாத ஏழை லாரி டிரைவருக்குமான நடப்பை சொல்லுகின்றது இக்கதை.உலக வரைபடத்தை மனப்பாடமாய் வைத்திருக்கும் சிறுவனின் கேள்விகளுக்கு,தன் கற்பனையை கொண்டு ஆப்பிரிக்க யானைகளையும்,காட்டேருமைகளையும்,அவர்களின் வேட்டை திறமைகளையும் வர்ணிக்கும் உரையாடல் அழகானது.


"ஆட்டு குட்டி" ,சிறுகதையை ஒத்திருந்த கதை "அம்மாவின் வீடு",கிராமத்தில் தனித்திருக்கும் தாயை சந்திக்க வரும் மகனின் கதை.இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் இரண்டு,"துரோகி" மற்றும் "பெண்களே,நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்" ."துரோகி",பாம்பிற்கும் மனிதனுக்குமான நட்பு சாத்தியமா என்கிற கேள்விக்கு கொஞ்சம் கற்பனை கலந்து பதில் அளிக்கும் கதை இது.வேட்டையின் பொழுது குழியில் விழுந்துவிடும் நாயகன் அங்கு வசித்திருக்கும் பாம்பிடம் நட்பு கொண்டு அதன் உதவியால் மீண்டு வருகின்றான்.சிறப்பு பொருந்திய அப்பாம்பினை சில வருடங்கள் கழித்து அவனே சிறு தொகைக்காக பாம்புகளை வைத்து வித்தை காட்டுபவர்களிடம் காட்டி கொடுத்து விடுகின்றான்.துரோகத்தை தாங்காத அப்பாம்பு கக்கிய விஷமானது அவன் முகத்தை அகோரமாக்கிவிடுகின்றது.நட்பின் துரோகத்தை விசித்திர உறவுகள் மூலம் சொல்ல முயலும் கதை.

"பெண்களே,நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்",1800 மற்றும் 1900இல் நிகழ்வதான இரு வேறு காதல் கதைகள்.இரு கதைகளும் ஏழை - பணக்கார - ஜாதி - எதிர்ப்பு என பார்த்து சலித்த திரைகாதல் போல இருப்பினும் ஆசிரியரின் விவரிப்பு ஏரவான் நகரத்தின் அழகினை அற்புதமாய் வர்ணிப்பதோடு காலங்களுக்கு ஏற்ப மாறும் காதலின் தீவிரத்தை அழகாய் சொல்லி செல்கின்றன.காதல்,துரோகம்,உறவுகளின் பிரிவு என இந்த கதைகள் ஒவ்வொன்றும் ஒரு களத்தை மையபடுத்தியே உள்ளன.வயலட் பூக்களின் தேசமான ஆர்மேனியா குறித்து அறியும் ஆவலை தூண்ட போதுமான செய்திகள் இந்த தொகுப்பில் உள்ளன.ஆர்மேனியா மொழியில் இருந்து ஆங்கிலத்திலும் பின்பு ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.சென்ற பதிவில் குறிபிட்டது போல நேசனல் புக் டிரஸ்ட் தொடர்ந்து இம்மாதிரியான மொழிபெயர்ப்புகளை வெளியிடாமல் போனது வருத்தம் தரும் விஷயமே.

வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட்
தமிழில் முதல் பதிப்பு - 1991
தமிழில் மொழிபெயர்ப்பு - வல்லிகண்ணன்

Thursday, December 24, 2009

பனகர்வாடி - மராத்திய நாவல்

பனகர்வாடி..ஆடு மேய்ப்பதை பிரதான தொழிலாய் கொண்ட மக்கள் வாழும் ஒரு சிறிய மராத்திய கிராமம்.படிப்பறிவில்லாத அம்மக்களுக்கு நடுவே இளைஞன் ஆன வாத்தியார் ராஜாராம் விட்டல் மூன்று வருடம் பெரும் அனுபவங்களின் கோர்வை.கதை முழுதுமே நாயகனான ஆசிரியன் சொல்லுவதாய் அமைந்துள்ளது.அச்சிறு கிராமத்தின் ஒவ்வொரு மனிதரையும் அவர்தம் விருப்பு வெறுப்புகளையும் உடனிருந்து அவதானிக்கும் நாயகன்..மெல்ல மெல்ல தயக்கங்கள் விலகி அவர்களின் ஒருவனாகின்றான்.
பாடம் கற்பிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் தன்னால் இயன்றதை செய்ய முனையும் நாயகன் ஒரு கட்டத்தில் அவர்களின் எல்ல சிக்கல்களுக்கும் தீர்வு தர வேண்டிய ரட்சகனாய் ஆகிறான்.

பள்ளிக்கூடம் என்ற ஒன்றினை மறந்துவிட்டிருந்த பனகர்வாடி கிராமத்திற்கு வந்து சேரும் நாயகன்..பெரும் குழப்பமும்,அக்கிராமத்தில் கழிய போகும் மீதி நாட்கள் குறித்த அச்சத்தோடும் தன் நாட்களை தொடங்குகின்றான்.அக்கிராமத்தின் நாட்டாண்மை கிழவரின் ஆதரவு தரும் நம்பிக்கையில் பள்ளிக்கு சிறுவர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் அடைகின்றான்.பெரும்பால குழந்தைகளை ஆடு மேய்க்க செல்வதால் பள்ளி நடைபெற தடங்கல் ஏற்படுகின்றது..மெல்ல மெல்ல பெற்றோர் மனநிலையை மாற்றி..குழந்தைகளை பள்ளிக்கு வர வழைக்கின்றான்.படித்தவர்களுக்கு கிராமத்தில் எப்பொழுதும் மரியாதை உண்டு.படித்தவர்களின் எடுக்கும் முடிவும் சொல்லும் தீர்ப்பும் உறுதியானது என நம்பும் மக்கள் அவர்கள்..அவ்விதத்தில் வாத்தியாரான ராஜாராமும் சில நாட்களில் அங்கு முக்கிய நபராக எல்லோராலும் விரும்படுகின்றான்.அக்கிராமத்தில் நாயகனுக்கு நெருக்கமாய் இருக்கும் சிலரை குறித்த கிளைக்கதைகள் சுவாரஸ்யமாய் சொல்லபடுகின்றன.ஆனந்தா ராமோஷி-வேட்டையாடுவதில் சிறந்தவரான ராமோஷி இனத்தவரான ஆனந்தா சிறு சிறு திருட்டுக்கள் செய்து பிழைத்தாலும் யாராலும் வெறுக்கபடாதவன்,அக்கிராமத்தின் நாட்டாண்மை கிழவர்- தன் பேத்தி அஞ்சியோடு வசிக்கும் அவர் ஊரின் எல்லா முடிவுகளையும் திறத்தோடு எடுக்கிறார்,நாயகனோடு அவருக்கு வரும் சிறு ஊடல் தோன்றி மறைவது வெகு அழகாய் சொல்லப்பட்டுள்ளது.ராமாகோனான்- அவ்வூரின் மிகப்பெரும் ஆட்டு மந்தைக்கு சொந்தக்காரன்..மந்தை முழுதும் பார்த்து கொள்வது ராமாக்கொனானின் தந்தையான காகூபா கிழவன்,ஆடு மேய்ச்சலில் பல வருட அனுபவம் கொண்ட அவர் வாசத்தை கொண்டு ஓநாய்கள் நடமாட்டத்தை கண்டுபிடித்துவிடுவார்.கசாப்பு தொழில் செய்யும் ஆய்பு ஆகியோரே ராஜாராமின் உற்ற தோழமையுடன் இருந்தனர்.

பனகர்வாடி கிராமத்தில் விளையாட்டு கூடம் ஒன்றினை கட்டிட நாயகன் முடிவு செய்கின்றான்.கூரை வீடுகளே உள்ள அவ்வூரில் திடமான கட்டிடம் ஒன்றினை நிறுவினால் அது பல காரியங்களுக்கு பயன்படும் நோக்கில்."வீட்டை கட்டி பார்.." என்னும் சொலவைடைக்கு ஏற்றார் போல பல சிக்கல்களுக்கு இடையே கிராமத்தினரை ஒன்று சேர்த்து விளையாட்டு கூடத்தை கட்டி முடித்து அதை மகாராஜாவை கொண்டே திறந்து வைக்கின்றான்.அக்கிராமத்து பெண்களும் காதலும் வீரமும் கொண்டவர்களே.நோஞ்சானான சேகூவின் மனைவி கலைப்பையில் ஒரு எருதை கட்டி மறுமுனையில் தான் நின்று நிலத்தை உழுது ஊரை வியக்க வைத்தவள்.எதிர்பாரா திருப்பம் போல வறட்சி காலம் தீவிரமடைந்து பனகர்வாடி கிராமத்தை ஆட்டி படைகின்றது.ஆடுகள் இறந்துவிட,விளைநிலங்கள் பொய்த்து விட மக்கள் யாவரும் பிழைக்க வழி தேடி வேற்று ஊர்களுக்கு செல்வதோடு நாவல் முடிகின்றது.

வெங்கடேஷ் மாட்கூல்கரின் இந்நாவல் 1954 இல் ஒரு மராட்டி வார பத்திரிகையில் வெளிவந்து பின் நூல் வடிவம் பெற்றுள்ளது.இந்திய கிராமங்கள் யாவும் ஒன்றே என எண்ண தோன்றியது இந்நாவலை வாசித்த பொழுது.பள்ளி ஆசிரியனான நாயகன் கிராமத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் - ஆடு வளர்ப்பு,பயிர் விளைச்சல்,சண்டை சச்சரவுகள்,கருத்து வேற்றுமைகள்,பஞ்சகால அழிவு என தன் பார்வையில் நமக்கு முன்வைகின்றான்.இந்நாவல் "The Village Had No Walls" என்கின்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.பனகர்வாடி மொழிபெயர்ப்பு என்கின்ற நெருடல் ஏதும் இல்லாத மிக சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரும் நாவல்.

வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட்
ஆசிரியர் - வெங்கடேஷ் மாட்கூல்கர்
மொழி பெயர்ப்பு - உமா சந்திரன்
விலை - 18 ரூபாய் முதல் பதிப்பு (1977)

Saturday, December 12, 2009

Death Of A President

சில திரை முயற்சிகள் மேலை நாடுகளில் மட்டுமே சாத்தியம்.பெருவாரியான வசூல் சாதனை படைத்த படங்களை இரக்கமே இல்லாமல் காட்சிக்கு காட்சி கிண்டல் செய்து உடனே படம் எடுப்பார்கள்.அவை பலி வாங்கும் நோக்கில் அல்ல..பகடி அவ்வளவே!!Scarie Movie Series ,Super Hero Movie என அது போன்ற படங்களின் பட்டியல் ஏராளம்.இதில் குறிப்பிட வேண்டியது என்ன வென்றால் Scarie movie series மாபெரும் வெற்றி பெற்றது.அங்கே அதற்கான ஆரோக்கியமான சூழல் உள்ளது.சக கலைங்கர்களும் ரசிகர்களும் பகடியை பகடியாகவே எடுத்து கொள்ளும் மனப்பான்மை கொண்டுள்ளனர்.இங்க அது போன்ற..வேணாம் புலம்பி பிரயோஜனமில்லை!!Death Of A President,பகடி வகையை சார்த்தது இல்லை.வித்தியாச முயற்சி என சொல்லுவதை காட்டிலும் துணிச்சலான முயற்சி எனலாம்.

சிகாகோ நகரில் 2006 ஆண்டு அக்டோபரில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சுட்டு கொலை செய்யப்படும் பரபரப்பான காட்சியோடு தொடங்குகின்றது இத்திரைப்படம்.ஜனாதிபதியின் மரணத்தை அடுத்த விசாரணைகள்,உள்நாட்டு அரசியல்,இஸ்லாமிய ஒடுக்கு முறை,சிறுபான்மை நாடுகள் மீதான அமெரிக்காவின் பார்வை என காட்சிகள் விரிகின்றன.ஆவண படம் போன்ற காட்சி அமைப்புகள் படத்திற்கு பெரியதோர் பலம்.படம் முழுவதும் மாறி மாறி தொடரும் சம்பந்தப்பட்டவர்களின் நேர்காணல்கள் பூடகமாய் விளக்கும் விஷயங்கள் ஏராளம்.சிரியா நாட்டு இளைஞர் ஒருவரை குற்றவாளியென கண்டுபிடிக்கும் போலீஸ் அவருக்கும் அல் கொய்தாவிற்குமான தொடர்பை அம்பல படுத்த முயற்சிகள் ஒரு புறம் விளக்க படும் பொழுதே,குற்றவாளியின் மனைவி அதை மறுத்து முன் வைக்கும் காரணங்கள் மறுபுறமும் நேர்காணல் வடிவில் வெகு இயல்பாய் படம் பிடிக்கபட்டுள்ளது.படம் பார்த்து கொண்டிருக்கும் வேளையில் சட்டென தோன்றியது....நடைபெறாத ஒரு கொலையை இவ்வளவு தீவிரமாய் விசாரணைக்கு உட்படுத்தி அலசி,ஆராய்ந்து இருக்கும் இயக்குனரின் முயற்சியை நினைத்து வெகுவாய் வியந்தேன்.பரபரபிற்காக கூட "ஜனாதிபதியின் மரணம்" என்பதை கையாண்டிருக்கலாம்.அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பிய படம் இது,பல நாடுகளில் வெளியிடவும் தடை செய்யபட்டுள்ளது.

அமெரிக்க ராணுவத்தில் இருந்து இராக் சென்று வந்த கறுப்பின இளைஞன் ஒருவனின் தந்தையின் தற்கொலையும் அதே நாளில் சிகாகோவில் நடப்பதால் அவரையும் சந்தேகிக்கின்றது போலீஸ்,அந்த கறுப்பின குடும்பத்தின் வாயிலாக இராக்கில் அமெரிக்காவின் இரக்கமற்ற தாக்குதல் சொல்லபடுகின்றது.கொலை சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கழித்து வெளிவரும் தீர்ப்பு சிரியா இளைஞரை குற்றவாளியென தீர்மானிக்கின்றது.அதை எதிர்த்து அவரின் மனைவி மேல் முறையீடு செய்வதோடு படம் முடிகின்றது.

எங்கோ,எப்பொழுதோ இப்படம் குறித்து வாசித்தது.படம் பார்த்ததும் இணையத்தில் தேடியதில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தது.அக்டோபர் 2006 ஆண்டு கொலை சம்பவம் நடைபெற்றதாக வரும் நாளிலேயே இத்திரைப்படம் பல இடங்களின் முதலில் திரையிடபட்டுள்ளது..காப்ரியல் ரேஞ்இயக்கியுள்ள இத்திரைப்படம் எம்மி,அகாதெமி உட்பட பல விருதுகளை பெற்றுள்ளது.பரபரப்பிற்கான முயற்சி,இயக்குனரின் துணிகரம் என்பவை ஒருபுறம் இருப்பினும் இத்திரைப்படம் முன் வைக்கும் அரசியல் முக்கியமானது.

Saturday, December 5, 2009

இரா.முருகனின் "அரசூர் வம்சம்"

கால எந்திரத்தின் உதவி இன்றி தலைமுறைகள் பல பின்நோக்கி பயணிக்க செய்கின்றது
இந்த "அரசூர் வம்சம்" .தாத்தா பாட்டி உடன் கூட அமர்ந்து பேச நேரம் இன்றி ஓடிடும், உறவுகள் மலிந்து வரும் இன்றைய சூழலில் முன்னோர்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டிடும் நாவல் இது.பாட்டனும்,பூட்டனும் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை நினைக்கவே சுவாரசியமாய் இருக்கும் தானே??!!.அப்பாவும்,அம்மாவும் எப்போதும் அவர்களின் அம்மச்சி குறித்தோ,பெரிய தாத்தா குறித்தோ பேசி கொண்டிருப்பார்கள்.பெரியவர்களிடம் நிறைய கதைகள் புதையுண்டு கிடக்கும்..அதை கிளறி கேட்பதும் ஒதுங்கி போவதும் நம் விருப்பம்.மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகளற்ற அந்த காலங்களில் கூட்டு வண்டி கட்டி மதுரைக்கு இரவில் ராக்கொள்ளையர்களுக்கு பயந்து ஆண்களும்,பெண்களுமாய் சென்று வந்த கதையை அப்பாவின் அத்தை முறை பாட்டி சொல்லி கேட்டது ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சி.

இரா.முருகனின் இந்நாவல் குறித்த சில கட்டுரைகளை சிவராமன் பகிர்ந்திருந்தார்..சுஜாதாவின் கட்டுரை அதில் ஒன்று.தி.ஜ,கு.பா.ரா என பல எழுத்தாளர்களின் சாயல் தொனிப்பதாய்..அற்புத நடையில் இந்நாவல் அமைந்துள்ளதாகவும் சொல்லி இருக்கின்றார்.அது முற்றிலும் உண்மை.கோர்வையாய் கதையாடல் இல்லாது முன்னும் பின்னுமாய் கொஞ்சம் சுழற்றி அடித்து நாவலின் முதல் சில அத்தியாயங்கள் குழப்புவதாய் தொடங்கினாலும் பின்பு சுவாரஸ்யமாய் ஜெட் வேகமெடுக்கின்றது..முன்னோர்கள் அல்லது நாவலில் குறிப்பிடுவது போல மூத்தகுடிகள் தாம் இக்கதையின் நாயகர்கள்...கற்பனைக்கு எல்லையில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தும் முயற்சி இது.
அரசூர் வம்சம் ...புகையிலை விற்று செல்வதில் கொழித்த பிராமணர்களின் வம்சம். சுப்ரமணிய அய்யர்..அவர் தம் புதல்வர்கள் சாமிநாதன் மற்றும் சங்கரன்,இவர்களின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் ஜமீன்தார் அவரின் மனைவி,சங்கரன் பெண் எடுக்கும் கிட்டவாயனின் குடும்பம் என மூன்று குடும்பங்களை பற்றிய கதை.இதில் பன்யன் சகோதரர்கள் காலத்தின் குறியீடாய் வந்து போகின்றனர்.மூத்த குடிகளோ கடந்த காலத்தின் எச்சங்களை நிகழ் காலத்தில் பதித்திடவும்,எதிர்காலம் குறித்த எச்சரிக்கைகளை கோடிட்டு காட்டவும் வந்து போகின்றனர். சுப்ரமணிய அய்யரின் வளர்ச்சியை கண்டு பொறாமைபடும் ஜமீந்தார் பின்பு சமரசம் செய்து கொண்டு அரண்மனையை புகையிலை கிடங்காக மாற்றி லாபம் சம்பாதிக்கின்றார்.ஜமீந்தார் வரும் காட்சிகள் யாவும் சிரிப்பை வரவழைப்பவை.அளவில்லாத பகடி.

தன்னை விட பல நூறு வருடம் மூத்த பெண்ணுடன் காதல் கொள்ளும் சாமிநாதன்,விசித்திர சாபம் கொண்டு நித்திய சுமங்கலியாய் இருக்கும் சுப்பம்மா கிழவி,பறக்கும் சக்தி கொண்ட கிட்டவாயனின் மாமனார்,பணத்தின் பொருட்டு மதம் மாறும் குடும்பத்தார்,துர் தேவதைகள்-மந்திரங்கள்-ஜபித்த எந்திரங்கள் என காலத்தை ஓட்டும் ஜோஸ்யர்,சகல வித்தைகளும் கற்று அறிந்த கொட்டகுடிதாசி என அரசூர் வம்சத்தின் கதாபாத்திரங்கள் யாவும் மர்மமும் ஆச்சர்யங்களும் பொருந்தியவர்கள்.

எங்கள் வீட்டு முந்தைய தலைமுறை பெண்கள் தொட்டு தடவிய வேலைபாடுகள் கொண்ட பல்லாங்குழி,கரையான் அரித்த புகைப்படங்களின் அமர்ந்திருக்கும் முண்டாசு கட்டிய கிழவன்கள், பாம்படம் மாட்டிய கிழவிகள்,பாட்டன் காலத்து கைத்தடிகள்,வைத்தியர் என அறியப்பட்ட தாத்தாவின் அப்பா காலத்து ஓலை சுவடிகள் என கிராமத்து வீடு முழுதும் சின்ன சின்ன விஷயங்கள் மூதாதையர்களை இன்றும் நினைவுபடுத்தி கொண்டே இருக்கின்றன.இந்த நாவல் இதுபோல எத்தனையோ விஷயங்களை கிளறிவிட்டது.இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பாட்டன் பூட்டன் குறித்த காரியங்கள் அவசியம் தானா? என கேட்பவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாய் இந்த நாவல் உங்களுக்கானது இல்லை.

Sunday, November 15, 2009

மழை... இசை..ஒரு தூர பயணம்!!

மழை..!!!எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு மழை குறித்து அதிகமாய் நண்பர்களிடம் பேசுகின்றேன்..மழையை வெறுக்க போதுமான காரணங்கள் சென்னையில் இருப்பினும் அது தரும் மகிழ்ச்சியும் நிறைவும் தவிர்க்க முடியாதது.மழையை சில இடங்களோடு பொருத்தி பார்க்க மிகவும் பிடிக்கும்.மதுரையில் பரந்து விரிந்து இருக்கும், 100 ஆண்டுகள் பழமையான எனது பள்ளி, மழை நாட்களில் இன்னும் அழகாய் இருப்பதாய் தோன்றும்..பெருமழை பொழுதில் மந்தையில் இருந்து அடித்து வரும் மழைநீரானது எங்கள் கிராமத்தின் ஆள் அரவம் அற்ற நடுவீதியில் செல்லும் காட்சி,அழகர் மலை காற்றோடு அடிக்கும் சாரல்,மழை..சாரல் என்றதும் நினைவிற்கு வரும் குற்றாலம்,சாரல் பொழுதில் செல்லும் மின்சார ரயில் பயணம்..மஞ்சள் வெயிலோடு பெய்யும் மழை...வேனிற்கால தூரல்கள் எழுப்பும் மண்வாசனை.....என.
கடந்த வாரத்தில் ஒரு மழை நாளில் மதுரைக்கு அருகில் இருக்கும் அணைப்பட்டிக்கு செல்வதென திடீரென முடிவு செய்து மூவரும் புறப்பட்டோம்.பெருமழையின் பொழுது வயல்வெளிகளில் பயணம் செய்வது அதுவே முதல் முறை.சோழவந்தான்,வாடிப்பட்டி வழியே மட்டபாறை,கரட்டுப்பட்டி கிராமங்களை கடந்து, இன்னும் இன்னும் என மழையை ரசித்த படி சென்றது மறக்கமுடியாதது.அணைபட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அப்பகுதியில் பிரசித்தம்..அம்மாவிற்கு விருப்பமானது.வைகையில் நீரை எதிர்பார்த்து சென்றது மட்டும் வீணானது..இருப்பினும் மழை காட்சிகள் அந்த குறையை மறக்கடித்துவிட்டன.


கொட்டும் மழையில் செம்மண் காட்டிற்கு நடுவே பார்த்த கிடை மாடுகள் கூட்டம்!!ம்ம்.....அப்பாவிற்கு பிடித்தமான காட்சி அது.அரிதான காட்சியும் கூட..இனிமையான மணியோசையோடு கூட்டமாய் வயல்வெளிகளில் திரியும் கிடை மாடுகள் குறித்த தனது பள்ளி கால நினைவுகளை அப்பா சொல்லி கேட்டதுண்டு..அடுத்த தலைமுறைக்கு செய்தியாய் மட்டுமே சென்றடைய போகும் விஷயங்களில் இதுவும் ஒன்று.கரட்டு காட்டில் பெய்த மழை நீரானது ..வழியெங்கும் ஓடையில்..வாய்காலில்....ஏன் வழியெங்கும் குண்டும் குழியுமான சாலைகளில் கூட வழிந்தோடியது அழகாய்!!"இன்னும் என்னை
வெகு தூரம் கூட்டி செல்லடி........" என ராஜாவின் இசையில் மயங்கியபடி சென்று வந்த இந்த பயணம் சில மணி நேரமே என்றாலும் அது தந்த உற்சாகம் சொல்லில் அடங்காதது.

சமீபத்தில் எங்கோ கண்ட மழை குறித்தான இந்த வாசகம் "If someone tells sunshine brings happiness,then they might not hav danced in the rain" எவ்வளவு உண்மை என தோன்றியது.மீண்டும் சென்னை வந்து எந்திர சுழற்சியில் உள்புகுந்தாகிவிட்டது!! "ஆதவன் பார்த்தாச்சா","Q3 ரிசல்ட் நல்லா இருக்காமே " வகையறா உரையாடல்களுக்கு மத்தியில்..மீண்டும் மீண்டும் அணைபட்டியில் எடுத்த புகைப்படங்களை புரட்டி கொண்டிருக்கின்றேன்..மழையின் ஈரம் அதில் கொஞ்சமேனும் மிச்சமிருக்கும் என்கிற நம்பிக்கையில்!!

Saturday, November 14, 2009

ரஸ்டியின் வீரதீரங்கள் - ரஸ்கின் பாண்ட்

மீண்டும் ஒரு சிறுவர் நாவல்.ரஸ்கின் பாண்ட் எழுதியுள்ள இந்த சிறுவர் இலக்கியம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.ரஸ்கின் பாண்ட் குறித்து பல சுவையான செய்திகள் இணையத்தில் கிடைத்தன.ஆங்கிலோ இந்தியரான இவர் சிறுவர்களுக்காக பல நூல்கள் எழுதியுள்ளார்.பெரும்பாலான இவரின் நாவல்கள் குழந்தைகள் பார்வையில் உலகம் என்கிற போக்கில் உள்ளது.சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் நிகழ்வதாய் வரும் இக்கதை கூட ரஸ்டி என்னும் சிறுவன் பள்ளி வாழ்கையை வெறுத்து உலகத்தை சுற்றி பார்க்க ஆர்வம் கொண்டு மேற்கொள்ளும் பயணத்தை பற்றியது.


தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டு பாகங்களாக உள்ளது "கென் மாமா" & "ஓடி போதல்" என.கோடைகால விடுமுறைகள் பள்ளிபருவத்தின் போது மிகுந்த விருப்பத்திற்குரிய ஒன்றாய் இருக்கும்.பாட்டி தாத்தாவுடன் செலவிட எங்கள் கிராமத்திற்கு சென்று விடுவேன்!!!பேசுவதற்கு அவர்களிடம் அதிக செய்திகள் உண்டு..கேட்பதற்கு தான் நாம் தயாராக இல்லை."கென் மாமா" பகுதி ரஸ்டியின் கோடைகால விடுமுறைகள் குறித்தது.அருமையாக சமையல் செய்வதில் வல்லவலான தனது பாட்டியின் வீட்டிற்கு செல்லும் ரஸ்டி,தனது தூரத்து உறவினரான கென் மாமாவோடு டெகராடூன் நகரில் கழித்த காலங்களை கூறுவதாய் உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் மலைகளை,பள்ளத்தாக்குகளை..அழகாய் வர்ணித்துள்ளார்.நாவலின் இரண்டாம் பகுதி சுவாரஸ்யமானது.ஜாம் நகருக்கு வரபோகும் கப்பல் காப்டனான தனது மாமா கென்னை சந்தித்து அவரோடு உலக பயணம் மேற்கொள்ள முடிவு செய்து பள்ளியை விட்டு அந்நகருக்கு மேற்கொள்ளும் பயணம் குறித்தது. பயணங்கள் எப்போதும் உற்சாகம் தரக்கூடியவை.புதிய இடங்கள்..புதிய மனிதர்கள்..புதிய உணவு பழக்கங்கள்..மொழிவேற்றுமை என முற்றிலுமாய் புதிய உலகத்திற்குள் பயணிப்பது சுவாரசியமானது தானே!!டெகராடூன்இல் இருந்து ஜாம் நகருக்கு ரஸ்டியும் அவனின் நண்பன் தல்ஜித்தும் ஆர்வமும்,பயமும் கொண்டு மேற்கொள்ளும் பயணம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானாதாய் இல்லை..இருப்பினும் அச்சிறுவர்களின் மன உறுதி அவர்களின் இலக்கை சுலுவாய் சென்றடைய துணை நிற்கின்றது.

தேகராடூனில் தொடங்கும் இச்சிறுவர்களின் பயணம்..டெல்லி..ராஜஸ்தான் வழியாக ஜாம் நகர் சென்றடையும் வரை இடறல்களை மட்டுமே தருகின்றது.இவர்கள் சந்திக்கும் நபர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகை.அன்பாய் வரவேற்கும் டீ கடைகாரர்,பணம் எதுவும் வேண்டாமல் ராஜஸ்தான் அழைத்து செல்லும் லாரி ஓட்டுனர்..இவரின் சத்தம் மிகுந்த ஹாரன் குறித்த ரஸ்டியின் கருத்துக்கள் சிரிப்பை வரவைப்பவை,இடிந்த மண்டபம் ஒன்றில் சந்திக்கும் கொள்ளையர் கூடம்,ஜாம் நகரின் துறைமுகத்திற்கு செல்ல உதவும் ஜட்கா வண்டிக்காரன் என.கஷ்டங்கள் பல கடந்து ஜாம் நகரை வந்தடையும் ரஸ்டியின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பது சின்ன சோகத்தோடு சொல்லப்படுகின்றது.

ரஸ்கின் பாண்ட் நாவல்கள் தவிர்த்து கவிதைகள்,கட்டுரைகள்,சுயசரிதைகள் பல எழுதியுள்ளார்.சாகித்திய அகாதமி மற்றும் பத்மஸ்ரீ விருதுகளும் பெற்றுள்ளார்.நேஷனல் புக் டிரஸ்ட் பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளன தமிழில்.எளிய தமிழில் உள்ள இந்நாவல்கள் சிறுவர்களின் உலகினுக்குள் சென்று வந்த திருப்தியை தருகின்றன.

Tuesday, November 10, 2009

உயிர்மை

தமிழில் இலக்கிய இதழ்கள் வெகுஜன பத்திரிக்கைகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாய் வந்து கொண்டுதான் இருக்கின்றன.எப்போதும் அப்பாவின் கேஸ் கட்டுக்களின் ஊடாக இருக்கும் இலக்கிய இதழ்கள் பள்ளி காலங்களில் ஏதோ படிக்கவே முடியாத தமிழில் உள்ள நூல்கள் என உணர்வை தரும்.கணையாழி,சுபமங்களா,புதிய பார்வை என தொடங்கி..கொஞ்ச கொஞ்சமாய் இலக்கிய புத்தகங்கள் அறிமுகம் ஆயின. தி.ஜா வின் "மோகமுள்" தொடராய் வந்த பழைய கணையாழி இதழ்களை கிராமத்து வீட்டில் வாசித்த அனுபவம் அலாதியானது."தீபம்" 80களில் குறிப்பிட தக்க இலக்கிய இதழ் என அப்பா சொல்லி அறிந்துள்ளேன்.

தீராநதி,உயிர்மை,காலச்சுவடு,தீம்தரிகிட,வார்த்தை ஆகிய இலக்கிய இதழ்களை தொடர்ந்து வாசித்து வந்தாலும் கட்டுரைகளை தேர்ந்தெடுத்து மட்டுமே படிக்கும் பழக்கம் என்னிடம்.இதற்கு முற்றிலும் மாறாய் உயிர்மையின் 75 ஆவது இதழ்..தேர்ந்தெடுத்த கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள் என முழுதாய் வசப்படுத்தி கொண்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு வண்ணதாசனின் சிறுகதை படிக்க கிடைத்தது.வண்ணதாசனின் கதை தலைப்புகளே கவிதை போல தான்.."அவனுடைய நதி அவளுடைய ஓடை" ,"பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக","ஒரு வாதாம் இல்லை ஒரு நீலச்சிறகு" என் அவரின் கதை தலைப்புகள் நான் வெகுவாய் ரசித்தவை.உயிர்மையின் 75 வது இதழில் வெளி வந்துள்ள வண்ணதாசனின் கதை "சுலோச்சனா அத்தை,ஜெகதா மற்றும் ஒரு சுடுமந் காமதேனு".மனித உறவுகளுக்கிடையேயான சிடுக்குகளை வெகு இயல்பாய் எடுத்தாள்வதில் வண்ணதாசனுக்கு நிகர் அவர் தான்.இவர் விவரிக்கும் எதார்த்த உலகின் மனிதர்கள் சௌந்தர்யம் மிக்கவர்கள்.

சாருவின் " தமிழ் சினிமா பாடல்கள் - ஒரு பண்பாட்டு வீழ்ச்சியின் அடையாளம்" கட்டுரை தமிழ் சினிமாவின் பாடல் வரிகளின் ஆளுமை குறித்து அலசுகிறது..தற்பொழுதைய பாடல் வரிகள் குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை..சாரு பாணி விளாசல் கட்டுரை."துறவிகளின் தனிமைக்குரல்" - எஸ்.ரா வின் இந்த கட்டுரை உலக சினிமாவில் பௌத்தம் குறித்து அலசுகின்றது."தமிழ் சினிமாவின் புதிய அலை" என்னும் அம்ஷன் குமாரின் கட்டுரை நம்பிக்கை தரும் தமிழின் புதிய திரை முயற்சிகளின் குறித்தது.
ஞானகூத்தன் மற்றும் மனுஷ்யபுத்ரனின் கவிதைகள் மழை நாளின் பின்னிரவில் வாசித்து மகிழ வேண்டியவை. "சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்" என்னும் மனுஷ்ய புத்ரனின் கவிதை இவ்வாறாக வருகின்றது..

"புனிதர்களோ கடவுள்களோ சட்டென மண்டியிடும்படி நம்மை கட்டாயபடுதுவதில்லை......

...."சக்கர நாற்காலிகள் பூமியின் எந்த மையத்தோடும் பிணைக்கபடுவதே இல்லை"..

இவை தவிர்த்து..அ.முத்துலிங்கத்தின் "இருளில்" கட்டுரை பார்வையற்றவர்கள் குறித்தது.அவர்களின் உலகம் நமக்கு விசித்திரம் நிறைந்ததாய் தோன்றினாலும்..வெகு இயல்பாய் அதை வழி நடத்தி செல்லும் தமது நண்பர் ஒருவர் குறித்து இக்கட்டுரையில் சொல்லுகின்றார்.எஸ்.வி.ராமகிருஷ்ணனின் "என் அக்காவின் காது குத்து கல்யாணம்" கட்டுரை சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் இந்து சடங்கு ஒன்றினை பற்றியது.முன்னவர்கள் குறித்து அடிக்கடி நினைவு கொள்வேன் நான்..கால சுழற்சியில் எத்தைனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும்..அவர்கள் தூக்கி எறிந்த மிச்சத்தை கொஞ்சமேனும் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கின்றோம் ஏதோ ஒரு செயலில்.

அழகிய மழை நாளில் நல்ல இலக்கியம் வாசித்த திருப்தி..மனுஷ்யபுத்ரனுக்கு நன்றி.

Sunday, October 11, 2009

நையாகரா(1953 )

கருப்பு வெள்ளை ஆங்கில திரைப்படங்கள் மீதான ஆர்வம் எப்போதும் எனக்கு குறைந்ததில்லை.அந்த காலகட்டத்தில் தொழில் நுட்பம் அவ்வளவாய் முன்னேற்றம் அடைந்திடாதபோதிலும் வெகு நேர்த்தியாய் காட்சிகளை அதீத தரத்துடன் படம்பிடித்து இருப்பர்.சமீபத்தில் பார்த்து அசந்த திரைப்படமான 'நயாகரா' அவ்வகையை சேர்ந்ததே.பிரபஞ்ச அழகிகள் பட்டியலில் நிரந்தர இடம் பெற்றிருக்கும் மர்லின் மன்றோ நடித்துள்ள இப்படம் த்ரில்லர் வகையை சேர்ந்தது.ஒரு வகையில் ஹிட்ச்காக் படங்களின் சாயலை ஒத்திருந்தது.

அளவற்ற அன்பில் திளைத்திருக்கும் கட்லர் தம்பதியினர் மூன்று ஆண்டுகள் கழித்து தமது தேனிலவை கொண்டாட நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள விடுதியில் தங்கிட செல்கின்றனர்.அங்கே அவர்கள் லூமிஸ் தம்பதியினரை சந்திக்க நேர்கின்றது.ஜார்ஜ் லூமிஸ், ரோஸ் லூமிஸ்(மர்லின் மன்றோ) யை விட பல வயது மூத்தவன்..மனைவி மீது அதீத அன்பு கொண்டவன்..கொஞ்சம் உணர்ச்சி வசபடகூடியவனும் கூட.பேரழகியான ரோஸ் கணவனை விட்டு வேறு ஒரு இளைஞனோடு காதல் கொண்டிருக்கின்றாள்.ரோசின் இந்த போக்கினை குறித்து ஜார்ஜ் கட்லர் தம்பதியினரிடம் வருந்தும் காட்சி அவன் தன மனைவி மீது கொண்டிருக்கும் உண்மை காதலை எடுத்துரைக்க போதுமானாதாய் இருக்கின்றது.ரோஸ் தம் காதலனோடு சேர்ந்து கணவனை கொல்ல சதி செய்ய..பெரும் திருப்பமாய் காவல்துறையினர் கண்டுபிடிப்பதோ அவளின் காதலனின் உடலை.
தேனிலவு கொண்டாட்டங்களை விடுத்து கட்லர் தம்பதியினர் இந்த கொலை வழக்கில் சிக்கி கொள்ள..ரோசின் மரணத்திற்கு பிறகு உண்மைகள் மெல்ல வெளிவருகிறது.அப்பாவி கணவனான ஜார்ஜின் முடிவு சோகமானது.

இத்திரைப்படத்தில் என்னை வெகுவாய் கவர்ந்தது மூன்று விஷயங்கள்..ஒன்று மர்லின் மன்றோ...சொக்க வைக்கும் பார்வையில் ஒய்யாரமாய் நயாகரா வீழ்ச்சியின் பின்னணியில் இவர் நடந்து வரும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்..இரண்டு,நயாகரா..படத்தில் 95 சதவீத காட்சிகள் நயாகாரா நீர்வீழ்ச்சியின் பின்னணியிலேயே எடுக்கபட்டுள்ளது.நையகராவின் பிரமாண்டத்தை முழு திரையில் பார்க்க ஆர்வம் கூடியது.மூன்று..காட்சியமைப்பு..கருப்பு வேலை காலத்திலும் கலக்கியவர் என ஹிட்ச்காக்கை சொல்லுவர் அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தில் மிரட்டி இருப்பார்.இந்த திரைப்படமும் அந்த வகையில் மிக சிறந்ததே.

1953 இல் வெளிவந்த இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்துள்ளது என்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.காதலை இருவேறுவிதமாய் சொல்லியும்,நயாகராவின் பிரமாண்டத்தை வெகு அழகாய் படம்பிடித்து காட்டியுள்ள விதமும் வெகு அருமை..த்ரில்லர் படங்கள் உங்களுக்கு பிடிக்குமாயின் தாராளமாய் இதை பரிந்துரைப்பேன்.

Monday, September 14, 2009

புனைவுகளே வரலாறாய் ஆனது அல்லது வரலாறு புனைவுகளால் ஆனது

பதிவுலகம் குறித்த இந்த தொடர் பதிவிற்கு அழைத்த அய்யனாருக்கு நன்றி..

இலக்கியம்...இங்கே தொடர்ந்து இயங்கி கொண்டிருக்க எனக்கான ஒரே காரணம்.பள்ளி,கல்லூரி காலங்களில் வாசித்ததை பகிர்ந்து கொள்ள ஆள் இருக்காது..சினிமா காரியங்கள் தவிர்த்து சக தோழர்கள் ஆர்வமாய் பேசிக்கொள்ளும் விஷயங்கள் மிகக்குறைவு.வாசிப்பவைகளை பகிர்ந்து கொண்டது முதலில் ஆர்குட் தளத்தில்..அங்கே உலக தமிழ் மக்கள் இயக்கம் என்னும் குழுமத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும்.இணையத்தில் தமிழ் விவாதம் நடைபெறுவதை கண்ட பொழுது கொண்ட மகிழ்ச்சியை சொல்லிமீளாது.

அக்குழும நண்பர்களே "தமிழ் இலக்கிய அரங்கம்" என ஒன்றை துவக்கி அங்கே இலக்கியம்,உலக சினிமா குறித்த விவாதங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.ஆர்குட் நண்பர் ஒருவர் தந்த அறிமுகத்திற்கு பின் பதிவுலகம் குறித்து எதுவும் அறியாமல் விளையாட்டாய் எழுத துவங்கினேன்.உலக வாசகர்களை இது சென்றடையும் என்கின்றன விவரங்கள் எல்லாம் தெரியாது ஏனோதானோவென இருக்கும் எனது ஆரம்ப கால கட்டுரைகளை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாய் உள்ளது.எனினும் அக்கட்டுரைகளை நீக்கிவிட மனமில்லை.

வாசித்த புத்தகங்களை குறித்து மட்டுமே எழுத வேண்டும் என்கிற நோக்கம் ஏதுமில்லை.என் பொழுதுகள் அதிகமாய் வாசிப்பிலேயே செல்வதால் அதை தவிர்த்து வேறேதும் எழுத தோன்றவுமில்லை.எழுத்தாளனுக்கும்,வாசகனுக்குமாய் உள்ள தொடர்பு கடிதத்தோடு முடிந்து விடுவதாய் இருந்த காலங்கள் மாறி,இணையத்தின் அறிமுகம் மூலம்..தொடர்ந்து விவாதிக்கவும்,இலக்கிய கூட்டங்களில் சந்தித்து உரையாடவும் பதிவுலகம் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.சுஜாதா,எஸ்.ரா,சாரு என விரும்பி வாசித்த எழுத்தாளர்களை எளிதில் சென்றடைய உதவியது இப்பதிவுலகம் தான்.
இங்கு ஆண்,பெண் பேதங்கள் ஏதுமில்லை,சாதி சண்டைகள் இல்லை,தொழில் முறை வேறுபாடுகள் இல்லை,தமிழ் என்னும் ஒற்றை வார்த்தையால் நண்பர்களோடு இணைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.பதிவுலகில் எழுத தொடங்கி ஓராண்டுக்கு மேலாகின்றது...கசப்பான அனுபவம் ஏதுமின்றி தெளிந்த நீரோடையாய் போய்கொண்டிருக்கின்றது.நல்லவேளை பதிவெழுத வந்தேன்.ஏதோ ஒரு நிறைவு..இல்லாவிட்டால் சென்னை வாழ்க்கை அலுவலகம் - விடுதி - வாசிப்பு என இயந்திரத்தனமாய் தான் இருந்திருக்கும்.

பதிவுலகம் தந்த நண்பர்களை குறித்து அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.அய்யனார்,நர்சிம்,ஜக்ஸ் என சந்தித்து பேசிய நண்பர்கள் தவிர்த்து,சிவராமன்,அஜய்,ராம்ஜி,கிருஷ்ணன்,கார்த்திக்,வடகரை வேலன்,செய்யது என முகம் அறியா நண்பர்கள் பலர்..ஆரோக்கியமான சூழலில் உரையாடல்கள்,விவாதங்கள், புதிய காரியங்கள் குறித்த அறிமுகங்கள் என யாவற்றிலும் நேரடி பங்களிப்பு செய்ய முடிவதால் வெகுஜன பத்திரிக்கைகளில் மீது இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது என்பது உண்மை.

பதிவுலகம் அதிசய குகை போல...எத்தைனையோ வேர்கள் விட்டு படர்ந்திருக்கும் அதனுள் ஒருமுறை புகுந்து விட்டால் வெளிவருது அவ்வளவு சுலபம் இல்லை..வெளி வரவேண்டிய ஆவசியமும் இல்லை..இனிதாய் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க காரணங்கள் பல இங்குண்டு....கனவாய் இருந்த பலவும் சாத்தியப்பட்டு கொண்டிருப்பது இங்கே தான்.

Saturday, September 5, 2009

கண்மணி குணசேகரனின் "ஆதண்டார் கோவில் குதிரை"

"இந்த மண்ணை,மக்களை,மொழியை,முந்திரிகளை விட்டு விட்டு எங்கேயோ ஒரு நகர காட்டுக்குள் அடைபட்டு,உயிரற்றவர்களை எழுத நேர்த்திடாதவாறு ஓர் எதிர்காலம் எனக்கு வாய்க்குமானால்,அது போதும் எனக்கு."

-- கண்மணி குணசேகரன்

முந்திரி காடுகளும் அதன் புழுதியில் தோய்ந்த மனிதர்களுமே கண்மணி குணசேகரனின் கதைகளில் பிரதானம்.சமீபத்தில் வாசித்த மிக சிறந்த புத்தகம் இது.மண்ணோடு கலந்த கதைகள் நெருக்கமானதொரு உணர்வை தரவல்லவை.ஒவ்வொரு கதையிலும் ஒரு கதாபாத்திரம் நம் மனதை தொட்டு செல்வதாய் உள்ளது..பெண்கள்,காதல்,தொழில் நிர்பந்தங்கள்,தலைமுறை இடைவெளி,கடவுள் நம்பிக்கை என பொதுவான விஷயங்களை முற்றிலும் புதிதாய் சொல்லி செல்கின்றன இக்கதைகள்.முந்திரி காடுகள் குறித்து அறிமுகம் எனக்கு இருந்ததில்லை,சேலம் - தருமபுரி இடையே உள்ள கிராமங்கள் பல இந்த முந்திரி காடுகளை கொண்டே பிழைக்கின்றன என அப்பா சொல்லி அறிந்தேன்.

"பால் நரம்பு",குழந்தை பேறில்லாத சோலைச்சி பைத்தியம் ஆனா கதையை கனமான சோகத்தோடு விவரிக்கும் கதை.மனநிலை பாதிக்க பெற்றவர்கள் காணும் பொழுது மனம் இனம் புரியாத ஒரு கனத்தை கொண்டுவிடும்..கோபியின் 'உள்ளே இருந்து சில குரல்கள்" படித்த பின் இவர்களின் மீதான பார்வை முற்றிலும் மாறி போனது."நினைப்பும் பிழைப்பும்",அடுத்த வீட்டு நிகழ்வுகளில் மூக்கை நுழைக்கும் வழக்கம் அநேகருக்கு அதிலும் முக்கியமாய் பெண்களுக்கு."ராசபாட்டை",கூத்து கலைஞர்கள் குறித்த பதிவுகள் மிக குறைவு.இந்த சிறுகதை எனக்கு எஸ்.ராவின் "கர்ண மோட்சம்" குறும்படத்தை நினைவூட்டியது.கூத்து நடத்திட கிராமம் ஒன்றிற்கு செல்லும் கூத்து கோஷ்டியினரின் சோக அனுபவங்களே இக்கதை."முறிவு",எலும்பு முறிவிற்கு நாட்டு வைத்தியம் செய்யும் முதியவர்,தலைமுறை இடைவெளியின் காரணமாய் உழலுவதை சொல்லும் கதை.

கூத்து,நாட்டு வைத்தியம் வரிசையில் இந்த தலைமுறையினர் அறியாத மற்றொரு தொழில் பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவது.ஒடுக்கு எடுக்க,ஈயம் பூச ஊர் ஊராய் திரியும் ஒரு தொழிலாளி நிரந்தரமாய் தங்கிட வீடு இன்றி தவிப்பதை வெகு இயல்பாய் சொல்லும் கதை 'தாய் வீடுகள்".சொந்த வீடு குறித்த ஏக்கத்தை அழகாய் பதிவு செய்கின்றது இக்கதை.மருதாணி வாசம் விரும்பாதவர்கள் யாரும் இல்லை.மருதாணி வாசம் முகர்ந்திட துடிக்கும் பண்ணை கூலி சிறுவன் ஒருவனின் ஏக்கத்தை சொல்லுவது "வாசம்".

கண்மணி குணசேகரனின் கதைகளில் அழிந்து வரும் கலைகள்,தொழில்கள் குறித்த கவலை அதிகம் தெரிகின்றது.அழிந்து வருவது கலைகள் மட்டும் அல்ல அந்த கலைஞர்களின் வாழ்கையும் தான்.தலைமுறை தலைமுறையாய் கூத்து கட்டியவர்கள் இன்று சினிமா பாட்டுக்கு நடனம் ஆடும் நிலைக்கு ஆளானது சமூகத்தின் அக்கறையின்மையாலேயே..எதையும் ஒதுக்கி விடமுடியாதபடி இத்தொகுப்பில் எல்லா சிறுகதைகளும் அர்த்தம் மிகுந்து ஏதோ ஒரு செய்தியை சொல்லுவதாகவே உள்ளது .

வெளியீடு - தமிழினி
விலை - 50 ரூபாய்

Sunday, August 23, 2009

கந்தர்வனின் "கொம்பன்" - சிறுகதை தொகுப்பு

எழுத்தாளர் கந்தர்வன் குறித்த அறிமுகம் இதுவரை எனக்கில்லை.இவரின் இந்த சிறுகதை தொகுப்பு இவரின் பிற நூல்கள் குறித்து அறியும் ஆவலை அதிகரிக்க செய்வதாய் அமைந்துவிட்டது.இந்த தொகுப்பின் கதைகள் அனைத்தும் ஒரே வகை என சொல்லிவிட முடியாது.கிராமம்,நகரம் என கதைதளங்கள் மாறுகின்றன.இதில் "தண்ணீர்" சிறுகதையை படித்ததும் ஆகா இந்த கதை இவருடையதா என எப்பொழுதோ படித்து,நெகிழ்ந்ததை மீட்டு தந்தது.பல நடைமுறைகள்/விஷயங்கள் சென்ற தலைமுறையோடு அழிந்துவிட்டது..அதில் சில செவி வழி செய்தியாய் மட்டுமே இந்த தலைமுறைக்கு மிஞ்சி இருக்க..அடுத்த தலைமுறைக்கு அதுவும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே...கந்தர்வனின் கதைகள் முழுதும் இந்த ஆதங்கமே மேலோங்கி உள்ளது..

"கொம்பன்",மந்தை மாடுகள் ரெண்டு,உளவு மாடுகளாக ஆக்கபடுவதை வெகு அழகாய் சித்தரிக்கும் கதை.அந்திப்பொழுதில்,மேய்ச்சல் முடித்து ஊர் திரும்பும் மந்தை மாடுகள் கழுத்தின் மணியோசை தூரத்தில் ஒலிப்பதை, கேட்பதற்கு அற்புதமாய் இருக்குமென அப்பா சொல்லி கேட்ட பொழுது அந்த ஓசையை கற்பனை செய்து பார்க்கவே சுகமாய் இருந்தது.விருமாண்டி திரைப்படத்தில் ஒரு பாடலில் அழகாய் அவ்வோசையை இணைத்திருப்பர்.மந்தையில் கம்பீரமாய்,சுதந்திரமாய் திரிந்த மாடுகள் உழுவதற்கு ஏற்ப தயார் செய்யபடுவதை விரிவாய் பதிவு செய்கின்றது இக்கதை.


"கதை தேசம்",இந்த கதையை படிக்க தொடங்கிய பொழுது,என்ன ஒரு சம்பந்தம் அற்ற தலைப்பு என தோன்றியது..வாசிக்க வாசிக்க இதை விட வேறு தலைப்பேதும் பொருத்தமில்லை என தோன்றியதில் வியப்பில்லை.ராமேஸ்வரத்திற்கு நீங்கள் சென்றவர் என்றால் நன்கு புரியும்.வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் வடகத்தியர்களும்,அவர்களை மொய்க்கும் கைடுகளும்,ஊர் சுற்றி காட்டி உண்மையும் பொய்யுமாய் கதைகள் பலவற்றை தருவித்து பணம் சம்பாதிக்கும் அவர்களின் ஒரு நாள் பொழுதினை உடன் இருந்து பார்ப்பது போல இருக்கின்றது இக்கதையை வாசிக்கும் பொழுது.நான் இதுவரை படித்த சிறுகதைகளில் இக்கதை குறிப்பிடத்தக்கது."தண்ணீர்",முதல் பத்தியில் குறிப்பிட்டது போல வெகுவாய் கவர்ந்த கதை இது.தமிழக கிராமங்கள் பல குடிநீருக்கு படும்பாட்டை தினமும் ஊடகங்களில் படித்தும்,பார்த்தும் வருகின்றோம்.அப்படிப்பட்ட கிராமம் ஒன்றில் குடிநீருக்காக பெண்கள் பயணிகள் ரயிலில் ஏறி அடித்து பிடித்து தண்ணீர் பிடிப்பதை சோகமும் சிரிப்புமாய் சொல்லும் கதை."தெரியாமலே",அரசு அலுவலகம் ஒன்றின் தினசரி காட்சிகளை விவரிக்கும் இக்கதைகளம் எல்லா அலுவலகங்களுக்கும் பொருந்தும்.அலுவலக ஓய்வு நேரங்களில் கூடி கூடி சினிமா தொடங்கி அரசியல்,விளையாட்டு என பேசும் நண்பர்கள் கூட்டம் ஒன்று கிராமத்து கிழவர் ஒருவரிடம் சிறுமை பட்டுபோகும் காரியம் ஒன்றை நேர்த்தியாய் சொல்லும் கதை.

"அதிசயம்",விழுதூன்றி வளர்ந்த பனை மரம் ஒன்றை தன உடல் பலத்தால் சாய்க்கும் வீரன் ஒருவனின் கதை.பெரும் மரியாதையோடு கிராமத்தினரால் வரவேற்கபட்டு சாகச வீரனாய் தோன்றும் அவ்வீரன் பனை மரத்தை வேரோடு விழுதாட்டிய பிறகு அதற்கு தட்சணம் வேண்டி ஊரார் முன் கையேந்தும் காட்சி பல செய்திகள மறைமுகமாய் சொல்லி செல்கின்றது."மணியாடர்",பணத்தின் பொருட்டு ஏற்படும் பிரிவுகள் தவிர்க்க முடியாதவை.வெளியூருக்கு தம் குழந்தைகளை பணிக்கு அனுப்பும் பெற்றோர்களின் மனவோட்டத்தை,பிள்ளைகள் அதை இயல்பாய் எடுத்து கொள்ளுவதையும் கிராமத்து பின்னணியில் சொல்லி உள்ளார்.

இவை தவிர்த்து "அவுரி","தலைவர்","யாரோ ஒருவர்","காளிப்புள்ளே" ஆகிய சிறுகதைகளும் இத்தொகுப்பில் உண்டு.நடைமுறையில் நாம் கவனிக்க தவறிய,கவனிக்க வேண்டிய சின்ன சின்ன காரியங்களை வெகு அழுத்தமாய் பதிவு செய்துள்ளார் கந்தர்வன்.அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பிது.

வெளியீடு - அகரம்(முதல் பதிப்பு)
விலை - 30 ரூபாய்

Tuesday, August 11, 2009

கி.ரா வின் "கொத்தை பருத்தி"...சிறுகதை தொகுப்பு

கி.ராவை வாசிக்கும் பொழுதெல்லாம் எங்கள் கிராமத்தின் நினைவுகள் வந்து போகும்..சம்சாரிகளின் வாழ்வை நகைச்சுவை கலந்து மிகையின்றி சொல்வதில் கி.ராவிற்கு நிகர் எவருமில்லை.1985 இல் வெளிவந்துள்ள இத்தொகுதியின் பெரும்பான்மையான கதைகள் கால சுழற்சி ஏற்படுத்தும் மாற்றங்களால் சம்சாரிகள் சந்திக்கும் இன்ப துன்பங்களை குறித்து சொல்பவை.மாற்றங்கள் வரவேற்க படவேண்டியபவையே நம்மை பாதிக்காதவரை..விவசாயம் அழிந்து வருவது குறித்த ஏக்கமும் அக்கறையும் கி.ராவின் எழுத்துக்களில் எப்போதும் காணலாம்..

"கொத்தை பருத்தி", விவசாய நிலம் இல்லாத காரணத்தால் பில்லா கலெக்டருக்கு பெண் கொடுக்காத செங்கன்னா நாயக்கர் பின்னாளில் விவசாயம் பார்க்கும் தனது பேரனுக்கு பெண் தேடி அலையும் கதை.இந்த கதையில் பெண் பார்க்க பில்லா கலெக்டரின் தந்தை செங்கன்னா வீட்டிற்கு வரும் காட்சியை கி.ரா நகைச்சுவையோடு விவரித்திருக்கும் அழகு..திரும்ப திரும்ப படிக்க தூண்டும்."அங்கணம்",குளிப்பதற்கும்,பாத்திரங்கள் கழுவவும் வீட்டின் பின் பகுதியில் இருக்கும் அங்கணம் குறித்த ஒரு வீட்டின் நினைவுகளை அதிக நகைச்சுவை கொண்டு விவரித்துள்ளார் இக்கதையில்..கி.ராவின் "நாற்காலி" சிறுகதையும் இது போலவே..சில பொருட்கள்,இடங்கள்,காரியங்கள் மீது ஏனோ மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுவதுண்டு,அவை குறித்த நினைவுகளில் மூழ்கி போவதில் ஒரு அலாதி சுகமுண்டு.
"ஒரு செய்தி", பகல் பொழுதுகளில் வயல்களில் ஓடி திரிந்தும்,மாலையில் ஊர் மந்தையில் கூட்டமாய் விளையாடி திரிந்த குழந்தைகள் தீப்பெட்டி தொழில் சாலைக்கு வேளைக்கு செல்வதை சோக செய்தியாய் தெரிவிக்கும் கதை.பரத்வாஜம்,ஆக்காட்டி குருவி,அக்காகுருவி என வித விதமான் பட்சிகளின் குரல் கேட்டு விடியும் கிராமத்து காலைகள், இப்பொழுதெல்லாம் நகரத்திற்கு குழந்தைகளை அழைத்து செல்ல வரும் பேருந்துகளின் ஹாரன் சத்தத்தில் திடுக்கிட்டு விழிப்பதை கொஞ்சம் கோபமாகவே பதிவு செய்துள்ளார்.இந்த சிறுகதை தொகுதியை பல வருடங்களுக்கு முன்பே படித்துள்ளேன்...மீண்டும் வாசித்த பொழுது இந்த சிறுகதை அப்பொழுது ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடிந்தது.கிராமம் ஒன்றில் கழிப்பிடம் அமைத்து அதை உபயோகிக்க அந்த மக்களை பயிற்றுவிக்கும் ஒரு சுகாதார அதிகாரியின் ஓயாத உழைப்பும்,முயற்சிகளும் பயனற்று போவதை தன் பாணியில் சொல்லி இருப்பார் கி.ரா.கழிப்பிட கட்டடத்தை சுகாதார கேடென கருதி முள் வேலியிட்டு அடைத்து வைத்திருக்கும் கிராமங்கள் இன்றும் இருக்கின்றன தானே??!!....


"இவர்களை பிரித்தது"...ஒற்றுமையாய் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த அண்ணன் தம்பிகள்..கால போக்கில் திருமணம்,பிள்ளைகளின் சம்பாத்தியம் என வாழ்கை சூழல் மாற தனியே தனியே பிரிந்து,பேச்சு வார்த்தை முறிந்து வீதியில் சண்டையிட்டு கொள்ளும் நிலைக்கு ஆளாவதை காரணங்கள் ஆராயாமல் சொல்லும் இக்கதை கூட்டு குடும்பங்கள் மலிந்து வரும் தற்பொழுதைய சூழலில் அதற்கான காரணங்களை யோசிக்க வைப்பதாய் இருக்கின்றது.இவை தவிர்த்து "குரு பூசை","சுப்பண்ணா","நிலை நிறுத்தல்.","உண்மை","விடுமுறையில்"..ஆகிய சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவையே.


இரவின் ஆழ்ந்த நிசப்தத்தில் இத்தொகுதியை படித்து முடிந்தேன்....என் கிராமம் குறித்த நினைவுகளை அதிகமாய் கிளறிவிட்டது இந்த வாசிப்பு.. .நகரத்தின் போலி நாகரிகமும்,சினிமாத்தனங்களும்,இயந்திர நடைமுறைகளுக்கு சிக்காமல் என் கிராமம் அதன் போக்கில் தொடர்ந்து கொண்டிருப்பதில் ஒரு நிம்மதி. மேலும் கி.ரா வை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற ஆவலும் அதிகரித்தது.அவரின் தற்பொழுதைய புதுச்சேரி முகவரி அறிந்த நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.

வெளியீடு - அன்னம்

Thursday, July 30, 2009

பஷீரின் "உலக புகழ் பெற்ற மூக்கு" - சிறுகதை தொகுப்பு

பஷீர்,மலையாள இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர்.பஷீரின் கதை நாயக நாயகிகள் பேரழகும்,பெருஞ்செல்வமும் கொண்டு சாகசங்கள் புரிபவர்கள் அல்ல.உங்களையும் என்னையும் போல கோபமும்,நகைச்சுவை உணவும் கொண்ட சாதாரண மனிதர்கள்.பஷீரின் நாவல்கள் மட்டுமே இதற்கு முன்பு படித்திருக்கின்றேன்.இவரின் "பாத்திமாவின் ஆடு","பால்ய கால சகி" குறுநாவல்கள் குறித்து ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.சில எழுத்தாளர்களால் மட்டுமே மோசமான ஏழ்மையை கூட துன்பம் கூட்டாமல் வர்ணிக்க முடியும்.வண்ணதாசன் கதைகளை தொடர்ந்து வாசிப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு எளிதாய் புரியும்.பஷீரின் எழுத்துக்கும் அந்த வலிமை உண்டு.மிகுந்த நகைச்சுவை கொண்டு சொல்லப்பட்டுள்ளன இத்தொகுப்பின் கதைகள்.

"ஐசு குட்டி", வாய் விட்டு சிரிக்க வைக்கும சிறுகதை. பஷீர், பெண்களின் மனவோட்டத்தை,பெருமை பீற்றும் பேச்சுக்களை வர்ணிப்பதில் தேர்ந்தவர்.இவரின் "பாத்திமாவின் ஆடு" நாவல் அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.பிரசவ வேதனையிலும் ஐசுக்குட்டி நாட்டு மருத்துவச்சி வேண்டாமென பிடிவாதம் பிடித்து கார் பிடித்து பட்டணத்தில் இருந்து மருத்துவரை கொண்டு வர நடத்தும் நாடகமே இக்கதை.அவள் நடத்தும் அத்தனை நாடகமும் பின்நாட்களில் பெருமை பீற்றவே...பெண்களுக்குள்ள பொதுவான குணத்தை நகைச்சுவை மிகுந்து கதையாக புனைந்துள்ளார் பஷீர்."பூவன் பழம்",கணவன் மனைவிக்கு இடையே இருக்க வேண்டிய அன்னோனியத்தை அழகாய் சொல்லும் கதை. சில கருத்து பேதம் இருப்பினும் இக்கதை ரசிக்க கூடியதாகவே தோன்றியது.
"எட்டு கால் மம்மூது",மம்மூது போன்றவர்கள் கிராமங்களில் அதிகம் தென்படுவர்.கொடுக்கும் கூலியை வாங்கி கொண்டு சொன்ன வேலையை செய்து கொண்டு பார்க்க அரைகிறுக்கன் போல இருக்கும் மம்மூது ஊரில் நடக்கும் சுவாரஸ்யம் மிகுந்த செய்திகளை தருவதில் முதலாமவன்.கிராமத்து டீ கடை வெட்டி அரட்டைகளில் பேச்சு பொருளாய் மம்மூதே இடம்பெற தொடங்கும் பொழுது நிகழும் ஆச்சர்யங்களும்,அதிர்ச்சிகளுமே மீதி கதை."பகவத் கீதையும் சில முலைகளும்", இக்கதையில் தனது சக எழுத்தாளர் நண்பர்கள் குறித்தும்,புத்தக பதிப்பாளர் நண்பர் ஒருவர் குறித்த தனது நினைவுகளை காட்சிகளாய் பகிர்ந்துள்ளார்.

"சிரிக்கும் மரப்பாச்சி",இத்தொகுப்பில் எனக்கு மிக பிடித்த கதை.அழகான காதல் கதை.ஏழை காதலி,பணக்கார காதலன் என திரைபடங்களில் சுழற்றி அடிக்கப்படும் சராசரி காதல் கதை தான்..இருப்பினும் பஷீரின் வார்த்தைகளில் படிக்கும் பொழுது ஏற்படும் நிறைவு அலாதியானது."தங்கம்",முதல் பத்தியில் சொன்னது இக்கதைக்கு பொருந்தும்.துன்பத்தில் உழலும் பிச்சைகாரனான கூனன் நாயகன்,குறைபாடுகள் நிறைந்த தனது மனைவி தங்கத்தை சந்தித்த நாள் தொடங்கி,அவளை கைபிடித்து வரை தனது கதையை,தனது குறைகளை சோகம் கூட்டாமல் எதார்த்தமாய் சொல்லுவதாய் உள்ளது இக்கதை.

இவை தவிர்த்து "அம்மா",'மூடர்களின் சொர்க்கம்","பர்ர்ர்...","புனித ரோமம்" ஆகிய கதைகளும் ரசிக்கும் ரகம்.இத்தொகுப்பை குறித்து குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை இரண்டு.முதலில்,குளைச்சல். யூசுபின் மொழிபெயர்ப்பு,இடறல் ஏதும் இல்லாத நேர்த்தியான மொழிபெயர்ப்பு.இரண்டாவது ஒவ்வொரு கதைக்கும் வரையபட்டுள்ள கார்டூன் சித்திரங்கள்.பஷீரின் முகம் கார்டூனுக்கு ஏற்றது..கதைகளுக்கேற்றபடி வெகு அழகாய் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன.எதார்த்தம்,பகடி,போலித்தனம் கலைந்த மனித முகங்கள்...இவையே பஷீரின் கதைகளில் பிரதானம்.இந்த தொகுப்பின் கதைகளும் அது போலவே!!

வெளியீடு - காலச்சுவடு
விலை - 240 ரூபாய்

Tuesday, July 21, 2009

சுவார‌ஸிய‌ வ‌லைப்ப‌திவு விருது

வலைத்தளம் குறித்து எந்த அறிமுகமும் இன்றி இலக்கியம் பகிரும் ஒரே ஆவலில் எழுத தொடங்கியது....வேலை காரணமாய் சென்னைக்கு வந்த பிறகு ஒரே ஆறுதல் வாசிப்பு.திரும்ப திரும்ப சென்னை நகரம் எனக்கு நினைவூட்டுவது ஒன்று தான் "If u are not sure about your boundaries tats it".அதன் காரணமாய் முகம் தெரியா நட்புகளை தேடிசெல்வதில் ஆர்வம் இருந்ததில்லை.ஆனால் வலைத்தளம் மூலம் பெற்றிற்றுக்கும் முகம் அறியா நண்பர்கள் பல.வெகு ஆரோக்கியமான சூழலில் இலக்கியம் பகிர்ந்து கொள்ளபடுவதில் எண்ணற்ற மகிழ்ச்சி.

இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த "மழைக்கு ஒதுங்கியவை" செய்யது அவர்களுக்கு நன்றி.எனக்கு மிக பிடித்த,தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டும் சில வலைப்பதிவுகள்..தனிமையின் இசை - அய்யனார்

அய்யனார் எனக்கு முதன் முதலில் இட்ட பின்னூட்டம் இவ்வாறு வரும் "சில சொல்லாடல்களை மீள் ஆளுமை செய்வது சமகால புரிதலுக்கு சரியாய் இருக்கலாம்.உதாரணம் வேசியர்: பாலியல் தொழிலாளர்கள் ..."

நான் வெகு கவனமாய் பாலியல் தொழிலாளி என்னும் சொல்லாடலை தவிர்த்திருப்பேன்.பொதுவில் சில வார்த்தைளை உபயோகிக்க கூடாது என்கின்ற கருத்து அப்பொழுது உண்டு.:-))

அய்யனார், வலையுலகில் எனக்கு கிடைத்த முதல் நண்பர்.அப்பாவிற்கு பிறகு அதிகமாய் இலக்கியம் பேசியது அய்யனாரிடம் தான். ஆதவன்,பா.சிங்காரம்,கோபி,ஆதவன் தீட்சண்யா,ஜி.நாகராஜன் என இவர் எனக்கு அறிமுகம் செய்த எழுத்தாளர்கள் அநேகம்.எழுத்தாளர்கள்,புத்தகங்கள்,உலக சினிமா கவிதைகள்,கதைகள்,கட்டுரைகள் என நிறைந்திருக்கும் இவரின் வலைத்தளத்திற்கு அறிமுகம் எதுவும் தேவை இருக்காது என்றே நினைக்கின்றேன்.

கவிதைகளை ரசிக்க தொடங்கியது "தனிமையின் இசையில்" தொடங்கி அங்கு மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கின்றது ..மிக பிடித்த இவரின் கவிதை ஒன்று இங்கே..

முதல் முத்தம்

ஒரு பின்பனிக்கால விடியலில்
பனியில் குளித்த ரோஜாவினையொத்த
உன் இதழ்களில் முத்தமிட்ட தருணமொன்றில்
சில பறவைகள் விழித்தெழுந்தன

தொலைவில் அபூர்வமாய் மலரும் மலரொன்றின் விதை
தனக்கான வெடிப்புகளின் முடிவில் துளிர்க்கலாம்
தன் முதல் துளிரை
காட்டு மர இடுக்குளில் இடப்பட்ட முட்டைகளிலொன்று
ஓடுடைத்து மெல்ல எட்டிப்பார்க்கலாம்
தனக்கான உலகத்தை
பாதைகளற்று அலைந்து திரிந்த சிற்றாறு
இத்தருணங்களில்
நதியின் விரிந்த கரங்களில் தஞ்சமடையலாம்

இன்னும் பிரபஞ்சத்தின் எத்தனையோ
முதல் நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதற்க்கான
சாத்தியக்கூறுகளுமிருக்கிறது

எப்போதும் அதிகாலையிலேயே
விழித்துவிடுகிறார்கள்
குழந்தைகள்


பிச்சைபாத்திரம் - சுரேஷ் கண்ணன்

எஸ்.ராவின் வலைத்தளத்தில் பிச்சைப்பாத்திரம் குறித்த முதல் அறிமுகம் கிடைத்தது.எனது அபிமான வலைத்தளங்களில் ஒன்று.சுஜாதாவின் "கணையாழியின் கடைசி பக்கங்கள்" குறித்த இவரின் நேர்த்தியான விமர்சனம் மிக பிடித்திருந்தது.எழுத்தாளர்கள் "தோப்பில் முகமது மிரான்" மற்றும் "எக்பர்ட் சச்சிதானந்தம்" குறித்த அறிமுகம் இவரின் பதிவுகளின் மூலமே கிடைத்தது.பகடி யாவருக்கும் எளிதாய் அமைந்து விடாது,சுரேஷின் பதிவுகளில் இருக்கும் ஒரு வித ஹாஸ்யம் ரசிக்க கூடியது.உலக சினிமா,ரசித்த புத்தகங்கள்,அரசியல்,சமூகம் என இவர் முன்வைக்கும் கருத்துக்கள் யாவும் முதிர்ச்சியானவை.

குசும்பன்

எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு என்னை குறித்த சீரியஸ் டைப் என்னும் எண்ணம் வருவது இயல்பு.நிஜத்தில் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டு எப்பொழுதும் ஜோக் அடித்து கொண்டிருக்கும் ரகம் நான்.எனவே குசும்பனின் வலைத்தளம் பிரியமானதாய் இருப்பதில் அதிசயம் கொள்ள வேண்டாம்.கொஞ்சம் அயர்வாய் தோன்றினாலும் முதலில் செல்வது இவ்வலை தளத்திற்கே..பதிவுகள் மட்டும் இன்றி இவரின் பின்னூட்டங்களும் ரசிக்க கூடியவை.

ஸ்மைல் பக்கங்கள் - லிவிங் ஸ்மைல் வித்யா

வித்யாவின் "நான் வித்யா" நாவல் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.பொதுவாய் திருநங்கைகள் குறித்து இருந்த கருத்துக்களை முற்றிலுமாய் மாற்றி போட்டது.உறவினர்களுக்கும் பரிந்துரைத்தேன்.நாவலில் இவ்வலைத்தளத்தின் இணைப்பு இருந்தது.ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.திரைத்துறையில் துணை இயக்குனராய் இருக்கும் வித்யாவின் பதிவுகள் அநேக திரைப்படங்கள் குறித்து விவாதிப்பவை.மேலும் திருநங்கைகளுக்கு ஆதரவாய் குரல் தரும் ஆதங்கம் மிகுந்த கட்டுரைகளும் அடக்கம்.அனல் தெறிக்கும் அக்கட்டுரைகள் சமூகத்தின் மீதான கோபத்தை அதிகரிக்க செய்பவை.வித்யா,கல்கி என வலைத்தளத்தில் திருநங்கைகளின் வருகை மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.

Monday, July 13, 2009

லா.ச.ராவின் "அபிதா"

தமிழில் அதிகமாய் எனக்கு பரிந்துரைக்க பட்ட பெயர்களில் ஒன்று லா.ச.ரா.சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் சென்றிருந்தேன் அம்மாவிற்காக ராஜேந்தரகுமாரின் "வால்கள்" புத்தகம் வாங்கிட.அந்த புத்தகத்தை தேட தொடங்கி கடையையே முழுதாய் புரட்டி போட்டதில் சில(??!!) நல்ல புத்தகங்களும் (அசோகமித்ரனின் "தண்ணீர் தண்ணீர்" ,வண்ணநிலவனின் " கடல்புரத்தில்" ,மற்றும் "அபிதா") கிடைத்தன.ராஜேந்தரகுமாரின் "வால்கள்" குறித்து
சொல்வதிற்கு ஒன்றும் இல்லை.கால இடைவெளி தான் ரசிக்க முடியாமல் செய்கின்றதோ என்னவோ.70 களில் உங்கள் பள்ளி காலம் இருந்திருந்தால் நிச்சயமாய் "வால்கள்" பிடிக்க வாய்ப்புள்ளது.
லா.ச.ரா வின் இந்நாவலை எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி படிக்கச் துவங்கினேன்.கசப்பான நிகழ் காலத்தை மறந்திட இனிமையான கடந்த நாட்களின் நினைவுகளுக்குள் மீண்டும் மீண்டும் மூழ்கும் நாயகனின் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களை அதிர்ச்சியோ ஆரவாரமோ இன்றி மெல்லிய நகைச்சுவையோடு சொல்லுகின்றது. லா.ச.ராவின் எழுத்து,தேட கிடைக்காத வார்த்தைகள்.....வர்ணிப்புகள்.. என விரிகின்றது.பொதுவாய் அயர்ச்சி தரும் நீண்ட வர்ணிப்புகள் இருந்தால் அந்த பத்தியை தவிர்த்து விட்டு தாவி செல்லும் வழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும்.லா.ச.ராவின் நடையின் வசீகரம் அதற்கு இடம் தருவதில்லை.மேலும் ஒவ்வொரு பத்தியும் முக்கியத்துவம் கொண்டதாய் உள்ளது.


சிறுவயதில் தனது ஊரான கரடி மலையில் இருந்து ஓடி வந்து பட்டணத்தில் ஒரு முதலாளியிடம் தஞ்சம் புகும் அம்பி வேலையில் சிறந்து அவரின் மகளையே மணம் புரிகின்றான்.செழிப்பான வாழ்கையை அனுபவிக்க இயலாது அவனை துரத்துவது பால்யம் முதல் சிநேகம் கொண்டு விரும்பிய ஏழை காதலி சகுந்தலையின் நினைவுகள்!!நீண்ட நாட்களுக்கு பிறகு தனது ஊருக்கு செல்லும் அம்பி அங்கு சகுந்தலையின் வடிவாய் அவளின் மகள் அபிதாவை சந்திக்கின்றான்.அபிதாவின் மீது அம்பி கொள்ளும் பிரியத்தை வகைபடுத்துவதில் வாசகனுக்கு சிரமம் ஏற்படுகின்றது.அம்பி அபிதாவின் மீது கொள்ளும் காதல்(?),அபிதாவின் முறைமாமனான நவநாகரீக இளைஞன் மீது பொறாமை கொண்டு அம்பி புகையும் காட்சிகள் சற்றே அந்த பாத்திரத்தின் ஸ்திரதன்மையை சிறிது குலைக்கின்றது.

தீவிரமான வாசிப்பிற்கு பிறகு இரண்டு விஷயங்கள் மட்டுமே பளிச்சென புலப்படுகின்றது.அம்பியை ஆட்டுவிக்கும் குற்ற உணர்ச்சி மற்றும் அபிதாவின் மீது கொள்ளும் வகைப்படுத்த இயலா காதல்.மறு வாசிப்பின் பின் வேறு விஷயங்கள் புலப்படலாம்.கரடி மலை,கன்னி குளம் தொடங்கி ஆன்மிகம்,காதல்,அபிதா,மண உறவு என வர்ணனைகளுக்கு சிக்காதவை எதுவுமில்லை.லா.ச.ர எழுத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கின்றது..அதுவே வாசகனை சோர்வின்றி தன் வசப்படுதுவதாய் உள்ளது.லா.ச.ராவின் பிற நூல்கள் குறித்து அறிய ஆவலாய் உள்ளது.நண்பர்கர் பரிந்துரைக்க வேண்டுகின்றேன்.

வெளியீடு - கிழக்கு பதிப்பகம்

Thursday, July 9, 2009

சர்க்கஸ்

சர்க்கஸ் என்றதும் உங்களின் நினைவிற்கு சட்டென வந்து மறைவது எது? எனக்கு எப்பொழுதோ அப்பாவுடன் சென்று மரப்படிகள் போன்ற அமைப்பில் அமர்ந்து பார்த்த சர்க்கஸ் காட்சிகள் இன்றும் நினைவில் உள்ளது.சில விஷயங்கள் குழந்தை பருவத்திற்கே உரியது போல..சர்க்கஸ் காட்சிகளை ரசித்து விட்டு மறு நாள் பள்ளியில் கோமாளியின் சேட்டைகள் முதல் ஒவ்வொன்றாய் பேசி பேசி மாய்ந்த நாட்களின் ஞாபகங்கள் எளிதில் மறக்க இயலாதது.சர்க்கஸ் வருவதற்கு முன்னே அது குறித்த ஒலிபெருக்கி அறிவிப்புகளும்,சுவரொட்டிகளும் நகருக்கு வேறு தோற்றம் தருவித்துவிடுவதுண்டு.திருவிழா போல தான்,எங்கும் அது குறித்த பேச்சுக்கள்,விசாரிப்புகள் என...
மிக சமீபத்தில் ஓசூரில் சர்க்கஸ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது..ஓசூர்,ஆசிர்வதிக்க பட்ட நகரம் என தோன்றும் எனக்கு.தலை தட்டும் மேகங்கள்,குளிர் காற்று,நகரின் அமைப்பு என...ம்ம்ம்...சென்னையில் இருப்பதால் மற்ற நகரங்கள் எனக்கு அழகாய் தெரிகின்றதோ என்னவோ!!அதிகரித்துள்ள நுழைவு சீட்டு விலை,அதிகப்படியான தின்பண்டங்கள் விற்பனை,விலங்குகள் இல்லா காட்சிகள் இவை தவிர்த்து எதுவும் பெரிதாய் மாற்றங்கள் இல்லை.அரங்கெங்கும் உற்சாகத்தோடு நிறைத்திருந்த குழந்தைகளின் ஆரவாரத்திற்கு இடையே ஒளி வெள்ளத்தில் தொடங்கிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை தன்வசம் ஆக்கி கொண்டன.


சர்க்கஸ் குறித்து எழுத துவங்கியதும் சோபியா லாரன் நடித்த திரைப்படம் ஒன்று குறித்தும் எழுத தோன்றுகின்றது.1960 களில் வெளிவந்த "Boccaccio '70" நான்கு கதைகளின் தொகுப்பாய் ஒவ்வொரு கதையும் ஒரு இயக்குனரால் இயக்கபட்டிருக்கும்.நவீன வாழ்வில் காதல் மனிதர்களை படுத்தும் பாட்டை ஒவ்வொரு கதையும் ஒரு விதமாய் எடுத்தாலும்.இதில் சோபியா லாரன் நடமாடும் சர்க்கஸ் வண்டியில் ஊர் ஊராய் சென்று வித்தை காட்டும் பெண்ணாய் நடித்திருப்பார்.சோபியாவின் அசர வைக்கும் அழகை குறித்து தனி கட்டுரையே எழுதலாம்.கேளிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அந்த சிறு கிராமத்து திடலில் சர்க்கஸ் கூடாரங்கள்,துப்பாக்கி சுடும் போட்டி அரங்கம்,ராட்டினங்கள்..என தத்ரூபமாய் செட்டில் கொண்டு வந்திருப்பர்.


அன்றைய பொழுதுகள் போல இந்த சமயம் சர்க்கஸை ரசித்து பார்க்க முடியவில்லை.ஒவ்வொரு பகுதியையும் ரசிப்பதற்கு பதிலாக அக்கலைஞர்கள் அதற்கு எடுத்து கொண்ட முயற்சிகளும்,வேதனைகளுமே கண் முன்னே வந்து போனது.சர்க்கஸ்,தற்சமயம் சத்தமின்றி அழிந்து வரும் கேளிக்கைகளில் ஒன்று.நம் முகத்தில் சிரிப்பும்,ஆச்சர்யத்தையும் தோற்றுவிக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு பின்னே உள்ள வலி வார்த்தைகளினால் சொல்லி விட முடியாது..நாம் தொடர்ந்து தரும் ஊக்கமும்,ஆதரவுமே இது போன்ற கலைஞர்களுக்கு உற்சாகத்தை தந்து தொடர்ந்து பணி செய்திட வழி செய்யும்!!

Monday, June 29, 2009

அழகிய பெரியவனின் "நெரிக்கட்டு"

நெரிக்கட்டு,இந்த தொகுப்பிற்கு இதைவிட சிறந்த தலைப்பு எதுவும் இருக்க முடியாது.தொகுப்பின் ஒரு சிறுகதை தான் நெரிக்கட்டு எனினும் ஏனைய எல்லா கதைகளுக்கும் இப்பெயர் பொருந்தும்.ஒவ்வொரு கதையும் ஒருவித மனநிலையை தோற்றுவிட்டது.எல்லா கதைகளும் விளிம்பின் நிலையை சோகத்துடன் சொல்பவையே,இருப்பினும் இந்த கதைகளங்கள் இதுவரை படித்திடாதது.இப்படியுமான சூழ்நிலைகளை யோசிக்க இயலுமா என ஆச்சர்யத்தை தோற்றுவித்த கதைகள் "நெரிக்கட்டு" மற்றும் "நீர் பரப்பு".

நெரிக்கட்டு,வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வெளியேறிய நாயகன் புலம் பெயர்ந்த ஊரில் மணமான பெண்ணொருத்தியுடன் கொள்ளும் காதலும் அதன் காரணமாய் சந்திக்கும் மரணமும் பற்றிய கதை.இக்கதையில் தெளிவாய் சொல்லபடாதது நாயகனின் வயது,அதன் காரணமாய் புரிதலில் சிறிது குழப்பம் உள்ளது. "திசையெட்டும் சுவர்கள் கொண்ட கிராமம்",மேல்குடியினருக்கு எதிரான தலித் இளைஞர்களின் போராட்டத்தை பற்றிய கதை.தலைமுறை தலைமுறையாய் தொடரும் தீண்டாமை,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் என தீராத கொடுமைகளை மையபடுத்தி பின்னப்பட்டுள்ள இக்கதை அழுத்தமாய் வலியுறுத்துவது தலித் இளைஞர்களுக்கு/பெண்களுக்கு இவற்றை எதிர்த்து போராட வேண்டிய மன தைரியத்தையும் உறுதியையும்.
"இறகு பிய்த்தல்",உயிர்களின் மீது பேரன்பு கொண்டவனும்,தான் சார்ந்துள்ள சமூகத்தை குறித்த நுண்ணறிவு பெற்றவனாகவும் உள்ள பிச்சைகாரனை பற்றிய கதை.அவனின் தெரிவிக்கப்படாத தொடக்க காலங்களை காட்சிகளின் விவரிப்பில் மறைமுகமாய் தெரிவிக்கின்றார்."உயிரிடம்",சொந்தமாய் வீடு இல்லாதவர்களுக்கு அது குறித்த கனவுகளும்,ஏக்கமும்,கற்பனையும் இருப்பது போலவே வீடு உள்ளவர்களுக்கு அது குறித்த நினைவுகளும்,பெருமைகளும் இருப்பது இயல்பு.பிறந்த வீடும்,புகுந்த வீடும் ஒரு பெண்ணிற்கு நெருக்கமாய் அமைவதை உருக்கமாய் விவரிக்கும் கதை.

"நீர்பரப்பு",இக்கதையில் மிக சிக்கலான மன போராட்டத்தை எழுத்தில் கொணர்ந்து உள்ளார் அழகிய பெரியவன்.கரகாட்டகாரியான தனது காதலியின் தாய்,அவன் ஊருக்கே ஆட வரும் சமயத்தில் நாயகனுக்கு ஏற்படும் மன போராட்டமே கதை.தர்மசங்கட நிலையில் தத்தளிக்கும் அவனின் ஒவ்வொரு கனங்களும் விவரிக்கப்பட்டுள்ள விதம் மிகையில்லாதது."கண்காணிக்கும் மரணம்",மரணத்தின் பிடியில் இருக்கும் மனைவியை உயிராய் கவனித்து கொள்ளும் கணவன் அவளோடு கூடிய கடந்த கால வாழ்கையை நினைவு கொள்வதை சில பூடகங்களோடு சொல்லும் கதை.

இவை தவிர்த்து "பால் மறதி","யாரும் யாரையும்" ஆகிய கதைகளும் குறிப்பிட்டு சொல்லபடவேண்டியவை.ஆழமான வாசிப்பு இக்கதைகள் நன்கு உணர செய்யும்.அழகிய பெரியவனின் கதைகள் மனித உறவுகளுக்குள்ளான மிக மிக மென்மையான உணர்ச்சி போராட்டங்களை தொட்டு செல்பவை.

வெளியீடு - United Writers
விலை - 50 ரூபாய்.

Tuesday, June 23, 2009

குற்றால சாரல்....

சமீபத்திய அலுவலக பயிற்சி வகுப்பொன்றில் "DRIVE" என்கிற வார்த்தையை கேட்டதும் தோணும் ஐந்து விஷயங்களை பட்டியலிட சொன்னார்கள்.சட்டென எனக்கு தோன்றியது "மழை நாள்".மழையோடு செய்யும் எந்த காரியமும் அழகு தானே!!சமீபத்தில் மழையோடு கூடிய நெருக்கத்தை அதிகரிக்க செய்வதாய் அமைந்தது குற்றால பயணம்.மதுரைக்கு அப்பால் ஒரு நாலு மணிநேர பயணத்தில் ஒரு சொர்க்கபுரி இருக்கின்றது என்பதே பெரிய சமாதானம் தான்.
பள்ளி,கல்லூரி நாட்களில் குற்றாலம் சென்று திரும்புவது ஏதோ ஒரு வருடாந்திர கடமை போல இருக்கும்.சென்னை வந்த பிறகு மெல்ல குற்றால ஆசை தூர கனவாய் போனது.இந்த வருடம் சீசன் துவக்கதிலேயே செல்லும் வாய்ப்பு..குற்றாலதிற்கே உரிய சாரல்,குளிர் காற்று,ஈரம் ஒட்டிய நீண்ட சாலைகள்,முன்பின் அறிமுகம் இல்லாத பொழுதும் அருவியின் பொருட்டு நட்பாய் சிரித்த பெண்கள்,சாரலோடு கூடிய பயணத்தில் கேட்ட ராஜாவின் பாடல்கள்,இரவில் வெள்ளி கம்பியென தூரத்தில் காட்சியளித்த மெயின் அருவி என மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ பல காட்சிகளை எனக்காய் பத்திரபடுத்தி வைத்துள்ளேன்.வாசுதேவநல்லூரை கடந்ததும் வைக்கோல் போருக்கும் பாழடைந்த ஒரு மண்டபத்தின் பின்னணியிலும் கண்ட வானவில் காட்சி..பிரம்மாண்ட காற்றாலைகள்...சின்ன சின்ன பழைமை மாறாத கிராமங்கள்..நெல்லை தமிழ் என முற்றிலுமாய் என்னை உள்ளிழுத்து கொண்டது இந்த பயணம்.தலையை தட்டும் மேகங்கள் உங்களுக்கு பிடிக்குமா?? பெரு மழைக்கு முன் திரண்டு இருக்கும் மேகங்கள் அச்சத்தை மீறிய சிலிர்ப்பை தருவதை மறுக்க முடியாது.குற்றாலத்தில் மேக கூட்டங்களுக்கு பஞ்சமில்லை.நிற்பதாய்..நடனமிடுவதாய். அசைந்து நடப்பதாய் உருவம் தரித்து மலைகளை வலம் வருகின்றன.குற்றாலம், அருவிகளின் இரைச்சலும்,மனதை வருடும் சாரலும்,குளிர் தென்றலோடு எண்ணெய் பிசுபிசுப்பு மணமும்,தீரா மர்மங்கள் பொதிந்த மலைகளும் என ஒருவித சௌதர்யத்தை ஏந்தி நிற்கும் ஊர்...வேறென்ன சொல்ல?!!!

Monday, May 25, 2009

வண்ணதாசன் சிறுகதைகள்....

வண்ணதாசன்,தொடர்ந்து என்னை தமிழ் இலக்கியம் படிக்க ஆவலை தூண்டிய எழுத்துக்கள் இவருடையது.தமிழ் இலக்கிய உலகில் சத்தமாய் தம் படைப்புக்களை பதிவு செய்ததில் ஜெயகாந்தன்,புதுமைப்பித்தனின்,சு.ரா ஒரு வகை எனில்..தி.ஜா,கி.ரா, வண்ணதாசன்,வண்ணநிலவன்,எஸ்.ராவின் எழுத்துக்கள் அமுங்கிய குரலில் வாழ்க்கை எதார்த்தத்தை பதிவு செய்பவை.குழப்பமான மனநிலையிலோ,வெறுமையான பொழுதுகளிலோ எனது முதல் தேர்வு இவரின் சிறுகதைகள்.கூச்சலும்,எந்திரதனமும் பெருகிவரும் இந்நாட்களில் அமைதியான உலகிற்கான தேவை அதிகரித்து வருகின்றது.அந்த வகை சூழலுக்குள் வாசகனை கூட்டி செல்ல வல்லவை வண்ணதாசனின் கதைகள்.
வாதாம் மரங்கள் குறித்த முதல் அறிமுகம் வண்ணதாசனின் கதைகள் மூலமே எனக்கு கிடைத்தது.வாதாம் மரம் குறித்து ஆச்சர்யத்துடன் வீட்டில் விசாரித்தது நினைவிற்கு வருகின்றது.சில வர்ணிப்புகள் பார்த்திடா பொருட்களின் மீதான ஆவலை அதிகரிக்க செய்பவை."ஒரு வாதாம் இலை ஒரு நீலச்சிறகு" சிறுகதை கணவன் மனைவிக்கு இடையேயான அன்யோனியத்தை அழகாய் சித்தரிக்கின்றது.குற்றாலம் - அருவிகளின் இரைச்சலும்,மனதை வருடும் சாரலும்,குளிர் தென்றலோடு எண்ணெய் பிசுபிசுப்பு மணமும் கலந்து ஒருவித சௌதர்யத்தை ஏந்தி நிற்கும் ஊர்."ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்" - சிறுகதை குற்றால அருவி ஒன்றின் அருகில் எண்ணெய் கடை வைத்திருப்பவரை பற்றிய கதை.நித்தம் கடையில் முகம் சுளித்து வியாபாரம் செய்யும் அவர் சிறு நஷ்டத்திற்கு பிறகு அருவியில் குளிக்கும் சுகத்தை உணர்ந்து கடையை சாத்திவிட்டு புறப்படுவதை நகைச்சுவை கூட்டி சொல்லும் கதை.

"சொர்க்கத்திற்கு வெளியே கொஞ்சம் நரகம்",அலுவலகத்திலும்,நண்பர்களிடத்திலும் பகட்டாய் சுகவாசி போல பேசி திரியும் சிலரின் வீட்டு நிலை மோசமாய் இருப்பதை பேச்சில் அறிய முடியாது.இக்கதை நாயகன் தாஸ் அதுபோலவே பகட்டு பேர்வழி.அலுவலகத்தில் எப்போதும் சுத்தம் குறித்து பேசிக்கொண்டும்,மின்சாரம் இல்லாத நேரங்களில் அலுத்து கொள்ளும் தாஸ் இரவில் வீட்டில் ஆடு,மாடுகளுக்கு மத்தியில் உறங்கி போகும் காட்சிகளின் விவரிப்புகள் சிரிப்பை வரவைப்பவை."பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக",கதையின் சாரத்தை வெகு அழகாய் சொல்லும் தலைப்பு.வேலை தேடி கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனின் மனநிலை பண்டிகை நாளில் எப்படி இருக்கும்?தாழ்வு மனப்பான்மையும்,கொஞ்ச குற்ற உணர்ச்சியும் சேர்ந்து இயல்பை மாற்றி பண்டிகை குதூகுலத்தில் இருந்து தனித்து விட செய்வதை வெகு அழகாய் சொல்லி இருக்கும் கதை.

"சில பழைய பாடல்கள்", இந்த சிறுகதை கோபியின் இடாகினி பேய்கள் தொகுப்பில் ஒரு பகுதியை நினைவுபடுத்தியது.கோபி தான் நட்பு கொண்டிருந்த அலுவலக தோழி குறித்து விரிவாய் எழுதி இருப்பார்,அத்தொகுப்பில். ஆண் பெண் நட்புறவு இன்றைய அலுவலக சூழலில் வெகு இயல்பான ஒன்று.80 களில் இது சாத்தியம் இல்லை.விதவையான அலுவலக தோழியுடனான நாயகனின் நட்பை சொல்லும் கதை இது.."அவனுடைய நதி அவளுடைய ஓடை",சின்ன சின்ன காரியங்களில் கூட அழகை புகுத்தி சிறுகதையாய் நீட்டிக்கும் திறன் வண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு.முன்பெல்லாம் சாயுங்காலத்தில் பெண்கள் கூடி பேச அமர்ந்து விடுவார்கள்,அதை மையபடுத்திய கதை.தொலைக்காட்சியின் வரவால் அந்த காட்சிகள் இன்றைய சூழலில் சாத்தியம் இல்லை.

இந்த தொகுப்பில் வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளும் அடக்கம். இங்கு குறிப்பிட்டுள்ள சிறுகதைகளில் என்னை கவர்ந்தது அவற்றின் தலைப்புகள்.தலைப்புகள் தேர்வில் கல்யாண்ஜி தெரிகிறார்.வண்ணதாசனின் எழுத்து குறித்து பொதுவான சில எதிர்வினைகள் உண்டு.என்பதுகளிலேயே பின் தங்கிய எழுத்து என்றும்,ஒரு கட்டத்திற்கு மேல் அயர்ச்சி தருபவை என்றும்.ஏனோ அதை நான் எப்பொழுதும் உணர்ததில்லை. சொல்ல போனால் 80 களில் மீதான ஏக்கமும்,பிரியமும் அதிகரிக்க செய்தது ராஜாவின் இசையும்,வண்ணதாசனின் கதைகளுமே!!

வண்ணதாசன் சிறுகதைகள் குறித்த எனது முந்தைய பதிவு

வெளியீடு - புதுமைபித்தன் பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

Wednesday, May 20, 2009

ஆர்.கே.நாராயணனின் "மால்குடி டேய்ஸ்"

மால்குடி டேய்ஸ் - பலருக்கும் பரிட்சயமான பெயர் இது.முன்பு தொலைகாட்சியில் தொடராய் வந்த ஆர்.கே நாராயணனின் சிறுகதை தொகுப்பு.தமிழ் அளவிற்கு ஆங்கில இலக்கியம் படிக்க ஆர்வம் இருப்பதில்லை.முதல் முயற்சியாய் இந்த சிறுவர் இலக்கியத்தை படித்து முடித்தேன்."மால் குடி" நாராயணனின் கற்பனை கிராமம்,அதன் சூழல்,அதன் மனிதர்கள் இவற்றை மையப்படுத்தி வெகு எளிமையாய் சொல்லபட்டுள்ள கதைகளின் தொகுப்பு.மால்குடி டேய்ஸ் படிக்க துவங்கியதும் சட்டென நினைவில் வந்து போனது பள்ளியில் பாடத்தில் வாசித்திருந்த சரோஜினி நாயுடுவின் "Bazaar's Of Hydrebad' கவிதை.மிக சில வரிகளில் ஐதராபாத்தின் ஜன நெருக்கடி மிகுந்த கடை வீதி ஒன்றை நுட்பமாய் வர்ணித்திருப்பார்.மால்குடி டேய்சின் கதை நாயகர்களை தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர் எந்த சிரமமும் மேற்கொள்ளவில்லை. தபால்காரர்,ரோட்டோர ஜோசியக்காரர்,அலுவலக காவலர்,மருத்துவர்,ரோட்டோர பலகார கடை வைத்திருப்பவர் என நாம் அன்றாட காண நேரிடும் நபர்களையே மையப்படுத்தி,சிறு கருத்தை வலுயுறுத்துவதாய் உள்ளன இச்சிறுகதைகள்.இத்தொகுப்பை குழந்தைகளுக்கு மட்டும் என ஒதுக்கி விட முடியாது,கற்பனைக்கு மீறிய சாகசங்களோ,மாயஜாலங்களோ ஏதும் இல்லாவிடினும் வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை தாங்கி உலவுகின்றன இக்கதைகள்.

முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் இருந்து மிக பிடித்த சில கதைகளை பகிர்ந்து கொள்கின்றேன்."An Astrologer's day",ஊரை விட்டு ஓடி வந்து பிழைக்க வழி இல்லாது ஜோசியகாரனாய் வேடம் தரித்து நடைபாதையில் கடை விரித்திருக்கும் நாயகனின் ஒரு நாள் பொழுதினை விவரிக்கும் கதை.ஜோசியம் கேட்கவந்தவனை கவர அவன் சொல்லும் ஒரே மாதிரியான குறிப்புகள்,அலுப்பில்லாமல் சொல்லும் பொய்கள் நகைப்பிற்குரியதாய் இருப்பினும் அவனின் தினக்கூலி அவன் நடிப்பின் சிறப்பை பொறுத்தே!!"Tiger's Claw",புலியுடன் தான் நிகழ்த்திய சாகச நிகழ்வை கிராமத்து சிறார்களுக்கு விளக்கும் ஒரு வீரனின் கதை."Leela's Friend", திருடனாய் இருந்து திருந்திய ஒருவனோடான ஒரு குழந்தையின் உறவை/நட்பை விளக்கும் கதை.

"Missing Mail", வெயிலும்,மழையும் பாராது சைக்கிளில் அலைந்து தபால் பட்டுவாடா செய்யும் தபால்காரர்களிடம் உற்சாகாதையோ,சீரான நட்பையோ எளிதில் கண்டு பெற்றுவிட முடியாது.பொதுவான இந்த குணத்திற்கு மாறாக இக்கதையின் நாயகன் எல்லோரிடத்திலும் பேரன்போடு, பொதுவான காரியங்களை பகிர்ந்துகொள்வதோடு துன்ப பொழுதில் உதவும் உற்ற நண்பனாகவும் சித்தரிக்கபட்டுள்ளார்.மேலும் "Mother and a Son","Shadow","Ishwaran","Wife's Holiday" ஆகிய கதைகளும் சிறந்தவையே.மால்குடி கற்பனை கிராமமாய் இருந்தாலும்,அதன் சூழலும்,மனிதர்களும் எல்லா இந்திய கிராமங்களுக்கும் பொதுவானவையே..

வெளியீடு - Indian Thoughts Publications

விலை - 110 ரூபாய்

Wednesday, May 13, 2009

தோப்பில் முகமது மீரானின் "ஒரு கடலோர கிராமத்தின் கதை"மிகச்சமீபத்தில் நான் படித்து மகிழ்ந்த நாவல் தோப்பில் முகமது மிரான் எழுதிய ஒரு கடலோர கிராமத்தின் கதை.தலைப்பை கொண்டு கடல் சார்ந்த மீனவர்களின் கதையாக இருக்கக்கூடும் என எண்ணியே நாவலை வாசிக்க தொடங்கினேன்.அதற்கு முற்றிலும் மாறாக கதை பயணிக்க தொடங்கியது.கடலோர கிராமத்தின் கதை வாழ்ந்து மறைந்த ஒரு தலைமுறையின் சரித்திரம்..

ஓர் இஸ்லாமிய கிராமத்தின் ஓர் தலைமுறை நிகழ்வை நம் கண் முன்னே காட்சிகளாய் பதிவு செய்துள்ளார் முகமது மிரான்.தேவையற்ற காட்சிகளையும் உரையாடல்களையும் புகுத்தாமல் கதை தன் போக்கில் செல்கிறது.. காதல்,கோபம்,வன்மம்,பொறாமை,பழிவாங்கல்,அறியாமை என யாவும் மிகை இல்லாமல் கூறப்படுகின்றது.நாவலில் முக்கியமாக குறிப்பிட படவேண்டிய ஒன்று கதை மாந்தர்கள் பேசும் வட்டார தமிழ் மற்றும் உருது கலந்த உரையாடல்கள்.பிற சமய வாசிபாளர்களுக்கு அது ஒரு முற்றிலும் புதிய,இனிய அனுபவம்.

சுதந்திரத்திற்கு முன் நிகழும் இக்கதை,மேல் ஜாதி கீழ் ஜாதி வேற்றுமைகள் எல்லா மதத்திலும் உள்ளதே என்பதை தீவிரமாய் உணர்த்துகிறது.மேலும் உயர் ஜாதி வீட்டோர் தம் சுயநலத்திற்காக ஏழைகள் மீது காட்டும் வன்மம்,அக்காலத்தில் அவங்களுக்கு இருந்த மதிப்பு,அதிகாரம்...எல்லா விதத்திலும் துன்ப பட்ட பிறகும் அவர்களுக்குள் இருக்கும் தீராத ஆணவம் என யாவற்றையும் கிராமிய சூழலுடன் ஆசிரியர் விவரித்துள்ள விதம் நேர்த்தி.நாவலில் பெரும் பகுதி மசூதியில் நிகழ்வதாய் உள்ளது.தொழுகை அம்மக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றென உள்ளது.அங்கும் கீழ் ஜாதியினர் தனி இடத்தில் அமர விதிக்கப்பட்டுள்ளனர்.அஹமது என்னும் பாத்திரத்தின் வழியாக இத்தகைய வேற்றுமைகளை கடுமையாய் சாடியுள்ளார் ஆசிரியர்.

நாவலின் பிற்பகுதியில் அக்கிராமத்தில் ஆங்கில அரசு பள்ளிகூடம் தொடங்க அதை கிராமமே எதிர்ப்பதும் எல்லா வழியிலும் பள்ளியை நடத்தும் ஆசிரியருக்கு இடையூறு விளைவிப்பதும் அக்காலத்தில் நடக்க கூடிய நிதர்சனமே.. கதையில் நாயகன்,நாயகி என்று யாரும் இல்லை...கடலோர கிராமத்தின் மாந்தர்கள் யாவரும் கதை நாயகர்களே.மொத்தத்தில் இந்நாவல் முற்றிலும் ஒரு புதிய வாசிப்பு அனுபவம்

Wednesday, May 6, 2009

அழகிய பெரியவனின் " தகப்பன் கொடி"

பெருமாள் முருகனின் "கூள மாதாரி",இமயத்தின் "கோவேறு கழுதைகள்",பாமாவின் "கருக்கு' வரிசையில் தமிழில் மற்றும் ஒரு சிறந்த தலித் நாவல் "தகப்பன் கொடி".இந்நாவலுக்கு அழகிய பெரியவன் எழுதியுள்ள முன்னுரை தலைமுறை தலைமுறையாய் மாற்றங்கள் ஏதும் காணாது ஒடுக்கப்பட்டு வரும் தலித் மக்களின் வாழ்க்கையை அழுத்தமாய் பதிவுசெய்கின்றது.நமது முந்தைய தலைமுறை குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வமும் ஆசையும் இயல்பானது.பாட்டன் காலத்து கதைகள் கேட்பதற்கு ஏதோ வேறு உலகில் நிகழ்தனவாய் தோன்றும்,கால மாற்றங்கள் வாழ்க்கை முறைகளில் ஏற்படுத்தி உள்ள வித்தியாசத்தை எண்ணி வியந்திடாமல் இருக்க முடியாது.அழகிய பெரியவனின் இந்த நாவல் மூன்று தலைமுறை பற்றியது.அம்மாசி அவனின் தந்தை மற்றும் அவனின் மகன்கள் என ஒவ்வொரு தலைமுறையிலும் நிகழும் மாற்றங்கள் மிகை இன்றி நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.பண்ணை கூலிகளாய் இருக்கும் அம்மாசி,அபரஞ்சி தம்பதியர்கள் பண்ணையாரிடம் தங்களின் நிலத்தை இழந்து அபரஞ்சியின் ஊருக்கு பிழைக்க செல்கின்றனர்.நிலத்தில் அல்லும் பகலும் உழைத்து பழகிய அம்மாசிக்கு அவ்வூரும்,அங்கு செய்ய நேரும் தோல் தொழிற்சாலை வேலையும் புதிதாய் இருக்க..புதிய புதிய நட்புகள்,அரசியல் பேசும் தொழிலாளர்கள்,வண்ண திரைப்படங்கள் காட்டும் கொட்டகைகளும் என நகர சூழல் மெதுவாய் அவனுக்கு பழகிவிடுகின்றது.

அம்மாசியை முன்னிறுத்தி சுழலும் கதை அவனுக்கு பிரியமான தெருக் கூத்தை விஸ்தாரமாய் அலசுகின்றது.அர்ஜுனன் கூத்தில் அம்மாசி அர்ஜுனனை வேடம் தரித்து இராப்பொழுதொன்றில் கூத்து கட்டும் காட்சிகளின் விவரிப்பு எதையோ நாம் இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மீண்டும் நினைவூட்டுவதாய் உள்ளது.தோல்பாவை கூத்து,தெருகூத்து,ஒயிலாட்டம்,கரகம் என மெல்ல அழிந்து வரும் கலைகள் பல.அடுத்த தலைமுறைக்கு படம் காட்டி விளக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.மேலும் துப்பாக்கி கொண்டு தூரத்து மலையில் கட்டி இருக்கும் ஆட்டை சுடும் கிராமங்களுக்கு இடையே நடக்கும் விளையாட்டு குறித்த செய்தி புதிதாய் இருந்தது.

நாவலில் சோகம் படர தொடங்குவது அபரஞ்சியின் மரணத்திற்கு பிறகு..தனது இரு மகன்களும் படித்து உருப்பட நினைத்த அம்மாசியின் எண்ணம் நிறைவேறாது அவன் கனவிலும் நினைத்திடா பாதைகளில் அவர்கள் தம் வாழ்வை அமைத்து கொள்கின்றனர். இக்கதையில் தலைமுறை இடைவெளியை அழகாய் சொன்னதோடு அந்தந்த தலைமுறையின் மாற்றங்களை இயல்பாய் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பெற்றவர்களாய் இக்கதை மாந்தர்கள் உள்ளனர்.விளிம்பு நிலை குறித்த இலக்கியமாய் இருப்பினும் நெஞ்சை பிழியும் சோகம் எதுவும் இன்றி வெகு இயல்பாய்,அதன் போக்கில் கதையை சொல்லி இருக்கும் விதம் அருமை.

வெளியீடு - தமிழினி
விலை - 65 ரூபாய்

Monday, May 4, 2009

யுவன் சந்திரசேகரின் "ஏற்கனவே" - சிறுகதை தொகுப்பு

யுவனின் முந்தைய படைப்புகளான 'குள்ள சித்தன் சரித்திரம்' மற்றும் 'ஒளி விலகல்' ஏற்படுத்திய ஆவல் இந்த சிறுகதை தொகுப்பை படிக்க தூண்டியது.எனினும் இத்தொகுப்பு முன்னவற்றை போல முழுக்க முழுக்க மாய உலகத்தில் பயணிக்காது எல்லா வகை கதைகளின் கலவையே.

"மீகாமரே மீகாமரே" சிறுகதை சிந்துபாத் பயண கதைகளில் வருவது போன்றதொரு புனைவு.ஆள் இல்லாத நடுத்தீவோன்றில் தனியே மாட்டிக்கொள்ளும் மீனவனிற்கு துணையாய் வந்து சேர்கிறாள் கடல் மோகினி,பெண்ணுடல் பாதியும் மீனுடல் பாதியுமாய் இருக்கும் அவளோடு கழித்த நாட்களை பிறிதொரு நாளில் நினைத்து பார்க்கிறான்.கடலும்,காற்றும் தவிர்த்து இருவரும் பொதுவாய் அறிந்திருந்த விஷயங்கள் ஏதும் இல்லாததினால் ஒவ்வொரு பொழுதும் புதிதாய் அதிசயங்கள் பல கூட காதலோடு கழிகின்றது."மூன்று ஜாமங்களின் கதை" - பெரும்பாலான கதைகளில் யுவன் தன் தந்தையை பற்றி குறிப்பிடுவது உண்டு.சில உறவுகளோடான பிரிய தருணங்கள் மறக்க இயலாதவை.இக்கதை தம் தந்தை குறித்த மூவரின் பகிர்தல்.

கதை சொல்லுவதில் தேர்ந்த நபர்கள் குடும்பத்தில் ஒருவரேனும் இருப்பர்.எங்கள் குடும்பத்தில் அப்படி யாரும் இல்லாததால் என்னவோ குழந்தைகளுக்கு கதை சொல்ல மிகுந்த விருப்பம் உண்டு எனக்கு.ஒரு வேடுவன் கதையை எங்கோ தொடங்கி,விசித்திர முடிச்சுக்கள் போட்டு,ஆவல் கூட்டி எங்கோ கதையை செலுத்தி சிறுவர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்த தன் சித்தப்பாவை குறித்த யுவனின் பகிர்தல் "காற்புள்ளி"."தெரிந்தவர்" -எங்கோ பார்த்த முகமாய் யாரேனும் எதிர்பட்டால் அந்நாள் முழுதும் அது பற்றி சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்,அது போன்றதொரு அனுபவத்தை பகிரும் கதை.

வண்ணதாசனின் "கடைசியாய் தெரிந்தவர்கள்" சிறுகதையை ஞாபகம்படுத்திய கதை 'வருகை'. எதிர்பாராது எதிர்படும் சிலரின் முகங்கள் தொலைந்து போன நட்பையோ,காதலையோ நினைவுபடுத்துவது இயல்பு.மருத்துவமனைஒன்றில் நாயகன் சந்திக்கும் நோயாளி அவனை தனது பள்ளி நண்பன் என நினைத்து ,ஏதோ ஒரு பெண்ணை குறித்து ஆவலாய் விசாரிப்பது தெரிந்து அவனை ஏமாற்றம் கொள்ள செய்யாது ஏதோ ஒரு பதிலை சொல்லி முகமற்ற அந்த நண்பனாய் இடத்தை சில நிமிடங்கள் நடித்து விடைபெறுவதாய் வரும் அக்கதை."ஏற்கனவே" - அசல் யுவன் பாணி சிறுகதை.தொடரும் நிகழ்ச்சிகள் யாவும் ஏற்கனவே நடந்துவிட்டதாய் பிரேமை கொள்ளும் நாயகன் அது குறித்து அறிய எடுக்கும் முயற்சியும் அதன் விபரீத முடிவுமே இக்கதை.

வெளியீடு - உயிர்மை
விலை - 100 ரூபாய்

Saturday, April 18, 2009

சிவராமகரந்தின் "அழிந்த பிறகு" - கன்னட மொழிபெயர்ப்பு

கன்னட இலக்கியத்தில் யு.ஆர்.அனந்தமூர்த்தியின் எழுத்துக்களை தீவிரமாய் வாசித்ததுண்டு.பாவண்ணனின் "நூறு சுற்று கோட்டை" தொகுப்பின் மூலம் கன்னடத்தின் மிக சிறந்த எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம் கிடைத்தது.இந்நாவல் படித்த முடித்த பின் அந்த தேசத்தின் இலக்கியம் மீதான தேடலும்,ஆர்வமும் அதிகரித்து.சிவராமகரந்த் குறித்து இணையத்தில் தேடிய பொழுது கிடைத்த தகவல்கள் எண்ணற்றவை.எழுத்தோடு இசையும்,ஓவியமும் இவரின் தனி சிறப்புக்கள்.மேலும் மிகச்சிறந்த சமூக போராளியாய் இருந்துள்ளார்.உங்கள் கடைசி ரயில் பயணத்தில் சந்தித்த நபர்களை குறித்து கேட்டால் சட்டென சொல்ல இயலுமா?பொதுவாய் நம்மிடையே முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களோடு பயணத்தின் பொழுதோ,எதிர்பாரா சந்திப்புகளிலோ பேசுவது என்பது அரிதான ஒன்று.அபூர்வமாய் கிடைக்கும் சில சிநேகங்கள் இறுதிவரை தவிர்க்க முடியாததாகி விடுவதுண்டு. சிவராமகரந்தின் இந்நாவல் பயணிப்பது ரயில் பயணத்தின் பொழுது அறிமுகமான தனது தன் நண்பனின் கடந்த கால நினைவுகளை தேடி..அவனின் மரணத்திற்கு பிறகு!!

மரணத்திற்கு பிறகான மனிதனின் வாழ்கை நிறைவு பெறுவது அவன் விட்டு சென்ற நினைவுகள் அர்த்தம் பெரும்பொழுது.ரயில் பயணத்தில் அறிமுகமான நண்பரின் மரணத்தை தொடர்ந்து தனிமையில் தங்கி இருந்த யசுவந்தரின் மும்பை வீட்டுக்கு செல்கின்றார்.யசுவந்தரின் ஓவிய குறிப்புகளும் தொடர்ந்து அவர் பணம் அனுப்பி வந்த சிலரின் முகவரிகலுமே மிஞ்சி இருக்க...அம்முகவரி மனிதர்களை தேடி கர்நாடக கிராமம் ஒன்றிற்கு செல்கிறார்.இவ்விருவருக்கும் இடையே வெகு சில சந்திப்புகளே நிகழ்த்திருந்த பொழுதும் இருவரின் நட்பின் ஆழம் ஒருவரின் மரணத்திற்கு பின் கூடுகின்றது.

சிவராமகரந்தின் பயணம் நினைத்ததை போல அவ்வளவு சுலுவாய் இல்லை.யசுவந்தர் குறித்து வைத்திருந்த அனைவருமே அவரின் நெருங்கிய உறவினர்கள்.யசுவந்தரின் வளர்ப்பு தாய்,அவரின் மகள்,மகன்,இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என விட்டு பிரிந்து வந்த தனது சொந்தங்களுக்கு தனிமையை தேடி வந்த பொழுதும் மறக்காது பணம் அனுப்பி அவர்களின் நினைவுகளில் நிரந்தர இடம்பிடித்துள்ள நண்பரை எண்ணி பெருமிதம் கொள்வதோடு அவர்களின் ஒவ்வொருவரின் ஆசைகளையும்,தேவைகளையும் அறிந்து உதவி செய்து திரும்பிகின்றார்.மற்றொரு சிறப்பான விஷயம் யசுவந்தர் தமது உறவுகளை குறித்து வரைந்து வைத்து சென்ற ஓவிய குறியீடுகள்.மனிதர்களை பறவைகளோடு,மிருகங்களோடு,மரம் செடிகளோடு ஒப்பிட்டு அவர்களின் இயல்பினை விளக்குவதை உள்ளன அவ்வோவியங்கள்.

மொழிபெயர்ப்பு என்கின்றன நெருடல் ஏதும் இன்றி வெகு நேர்த்தியாய் உள்ளது இந்நாவல்.

வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட்
மொழிபெயர்ப்பு - சித்தலிங்கையா

Wednesday, April 15, 2009

கி.ரா மற்றும் கழனியூரனின் "மறைவாய் சொன்ன கதைகள்"

இந்த வலைத்தளத்தில் அதிகமாய் உச்சரிக்கப்பட்டிருக்கும் சில பெயர்களில் முக்கியமான பெயர் கி.ராஜநாராயணன்.தவிர்க்க இயலாத பெயரும் கூட.தமிழ் இலக்கியம் என்றவுடன் சட்டென நினைவிற்கு வருவது கி.ராவின் எழுத்து.கை பிடித்தி நடத்தி செல்வது போல கரிசல் பூமியின் மக்களை,பழக்க வழக்கங்களை,தொடர்ந்து வரும் பெருமைகளை நம்பிக்கைகளை தெளிவாய் எடுத்துரைப்பவை கி.ராவின் எழுத்துக்கள். நல்ல கதை,கெட்ட கதை என எந்த பாகுபாடின்றி எல்லா வகை கதைகளும் கூறுபவரே தேர்ந்த கதைசொல்லி கி.ராவை போல.கணையாழியின் கடைசி பக்கங்களில் தமிழில் சிறந்த போர்னோ இலக்கியம் இல்லை என்று சுஜாதா குறிப்பிட்டு இருப்பார். பின் சாருவின் "எஸ்டன்சியலிசமும் பேன்சி பனியனும்" மற்றும் கி.ரா வின் "வயது வந்தோர்க்கு மட்டும்" ஆகிய நூல்களின் அறிமுகம் தமிழில் போர்னோ வகை எழுத்துக்களுக்கு முன்னோடி எனவும் சொல்லி இருந்தது இந்நூல் படிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.கரிசல் எழுத்தாளர் கழனியூரனோடு இணைந்து நாட்டுப்புறங்களில் உலவி வரும் பாலியல் கதைகளை தொகுத்துள்ளார் கி.ரா.அவரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் கெட்ட வார்த்தை கதைகள் இவை.

100 பாலியல் கதைகள் கொண்ட தொகுப்பு இது.அனைத்துமே ஒரு பக்க அல்லது இரண்டு பக்க கதைகள்.அய்யோ..சீய்!! என ஒரேடியாய் ஒதுக்கி தள்ளும் படி ஒன்றும் இல்லை.பாலியல் குறித்த ஆரோக்கிய விவாதங்கள்/அறிவுரைகள்/விழிப்புணர்வு அனேக தளங்களில் சிறப்பாய் நடந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்நூல் மிகுந்த தேவையே.கிராமங்களில் உலவும் கதைகளுக்கு பஞ்சம் இருக்காது அதிலும் பாலியல் கதைகள் மற்றும் அதை முன்வைத்த கேலியும் கிண்டலும் கரிசல் மண்ணிற்கே உரித்தான ஒன்று.

இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் எடுத்தாள்பவை கணவன் மனைவிக்குள் நிகழும் பாலியல் சிக்கல்கள்,கணவனை விடுத்து வேறு ஆணோடு பழகும் பெண்கள் நடத்தும் நாடகங்கள்,வேசியர் தந்திரங்கள் என நீள்கின்றது.மதுரை வந்திருந்த பொழுதொன்றில் கவிஞர் விக்ரமாதித்யன் தன்னிடம்"அப்பச்சி கெட்ட வார்த்தை கதை ஒன்னு சொல்லுங்க' என கேட்டதை கி.ரா ஓரிடத்தில் நினைவு கூறுகிறார்.கி.ராவிடம் நேரடியாய் கதை கேட்கும் வாய்ப்பு கிடைக்காவிடினும் அவர் நாவல்களில்,கடிதங்களில்,கட்டுரைகளில் கொட்டி கிடக்கும் கதைகளை படித்து பெரும் இன்பம் அலாதியானது.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 230 ரூபாய்

Wednesday, April 1, 2009

யுவன் சந்திரசேகரின் "ஒளி விலகல்" - சிறுகதை தொகுப்பு

சராசரி கதை சொல்லும் பாணியில் இருந்து முற்றிலுமாய் வேறுபட்டு பயணிப்பவை யுவனின் கதைகள்.கவிதை உலகில் எம்.யுவனாகவும் கதையுலகில் யுவன் சந்திரசேகராகவும் அறியப்படும் யுவனின் "குள்ளசித்தன் சரித்திரம்" நாவல் தந்த வாசிப்பு அனுபவம் அலாதியானது.இவரின் முதல் சிறுகதை தொகுப்பு இது.இத்தொகுப்பு முழுதும் கதைகள் தொடர் சங்கிலியாய் உள்ளது. கி.ராவின் கதைகளுக்கு பிறகு யுவனின் கதைகள் மிக பிடித்தமானதாய் போனது.தேர்ந்த கதை சொல்லிக்கு தெரியும் கேட்பவனை நேர்கோட்டில் பயணிக்க செய்யும் வித்தை.மிகையான நிகழ்வுகளை கதையின் ஊடே இயல்பாய் புகுத்தி தன் வசப்படுத்தும் ஜாலம் யுவனுக்கு தெரிந்திருக்கின்றது."நச்சு பொய்கை" சிறுகதை, கதைக்குள் கதை சொல்லும் கதையாடல்.சமூகத்தால் ஒதுக்கப்படும் திருநங்கை ஒருத்தியின் சோகத்தில் தொடங்கி அவள் சந்திக்கும் சாமியார்,அவர் சொல்லும் தமது பயண அனுபவங்கள்,அந்த அனுபவத்தின் வாயிலாய் கிட்டும் ஆண்,பெண் என இரு நண்பர்கள்,அவர்களின் நட்பு தொடங்கிய அனுபவம் என ஒரு நிகழ்வின் முடிவு மற்றொன்றின் தொடக்கமாய் கதையை வழிநடத்துகின்றது."ஒளி விலகல்" சிறுகதை,மனபிறழ்வு நோயாளியின் விசித்திர கனவுகளும் அதை அவன் மருத்துவரிடம் விவரிக்கும் சமயம் தொடரும் உரையாடலுமே இக்கதை.

சொந்த அனுபவங்களின் வாயிலாய் புனையப்பட்டுள்ள சில கதைகள் சுவாரஸ்யம் சேர்ப்பவை.டெல்லி நகரின் வீதிகளை வர்ணித்தபடி தொடங்கும் "ஊர் சுற்றி கலைஞன்" சிறுகதை அங்கிருந்து காசி பயணிக்கின்றது.தினப்படி சுமைகளை மறந்து செல்லும் நீண்ட தூர பயணங்கள்,சந்திக்கும் மனிதர்கள்,கடந்து செல்லும் கிராமங்கள்,நதிகள்,வயல் வெளிகள் இன்னும் எவ்வளவோ பயணத்திற்கு அர்த்தம் கூட்டுபவை.இந்த சிறுகதையும் அது போலவே நண்பர்களுடன் சென்ற வட இந்திய பயணத்தின் பொழுது சந்தித்த புல்லாங்குழல் கலைஞன் ஒருவனை பற்றியது.இதிலும் கதைக்குள் கதைகள் அவை போடும் புதிர்கள் என சற்று மிகைபடுத்தி ரசிக்கும் படி சொல்லபட்டுள்ளது.

நாம் குழந்தை பருவத்தில் கேட்ட கதைகள் இன்று வெவ்வேறு மாற்றம் கொண்டு புதுவிதமாய்,நவீனமாய் உலவுகின்றன எனினும் பஞ்சதந்திர கதைகள்,மாயாஜால கதைகள்,நீதி கதைகள் என நாம் கேட்டறிந்த கதைகள் எத்துணை சிறந்த இலக்கியம் படித்தாலும் மனதின் ஒரு மூலையில் குழந்தை பருவத்தை நினைவூட்டி கொண்டிருப்பவை."அப்பா சொன்ன கதை" சிறுகதை விக்ரமாதியன்,வேதாளம் புதிர்கதைகள் இருந்து புனைய பட்டது."சாதுவன் கதை ஒரு முன்விவாதம்" ஒரு நண்பரை குறித்த சிறுகதை தோன்றுவதற்கு முன்பான உரையாடல்களை,ஒரு நபர் குறித்த இருவரின் பார்வையை முன்வைத்து வருகின்றது.

இவை தவிர்த்து "1999 இன் மிக சிறந்த கதை","தாயம்மா பாட்டி சொன்ன 23 காதல் கதைகள்","மேஷ புராணம்" ஆகிய சிறுகதைகளும் குறிப்பிடதக்கவை.மாறுபட்ட கதையாடல் மட்டும் இன்றி யுவனின் கதைகளில் நம்மை ஈர்ப்பது கதையோடு இயைந்து வரும் நகைச்சுவை.வாய் விட்டு சிரிக்க செய்யும் பத்திகள் அதிகம்.வித்தியாசமான வாசிப்பனுபவம் வேண்டுபவர்களுக்கு தாராளமாய் இந்நூலை பரிந்துரைக்கலாம்.

நூல் வெளியீடு - காலச்சுவடு (முதல் பதிப்பு)
விலை - 90 ரூபாய்

Wednesday, March 25, 2009

சம்பத்தின் ‘இடைவெளி’

மரணத்தின் மீதான பயத்தை,கேள்விகளை அதிகரிக்க செய்யும் நாவல் சம்பத்தின் "இடைவெளி".எஸ்.ரா வின் தமிழின் சிறந்த 100 நூல்களை பட்டியலில் இந்நாவலும் உள்ளது. நீண்ட தேடலுக்கு பிறகு படித்த கிடைத்தது.மேலோட்டமாக படித்தால் பெரும் குழப்பம் விளைவிக்கும் கருத்துக்களாக தெரியலாம்.சற்றே தீவிரமான வாசிப்பு தேவை படுகின்றது இதன் சாரத்தை புரிந்து கொள்ள.

நடுத்தர வயதினரான தினகரன் மரணம் குறித்தான அடிப்படை தத்துவத்தை அடைய எடுக்கும் முயற்சிகள் சம்பவங்களின் கோர்வையாக சொல்லப்படுகின்றது.சந்திக்கும் மனிதர்களிடத்தில் மரணத்தின் தத்துவம் குறித்து பேசி,அறிய முயன்று தோற்று போய் தாமே சுய பரிசோதனைகளில் இறங்குகிறார்.30 ஆண்டுகளுக்கு முன்பு நிகழும் இக்கதைகளம் பெரும் அளவில் தற்பொழுதைய நடைமுறைகளோடு மாறி வருகின்றது. வீட்டிலும்,அலுவலகத்திலும்,காபி பாரிலும் விடாது சாவு குறித்த எண்ணங்களோடு உலாவரும் தினகரன் மன நோயாளி என யாவராலும் கேலிக்கு ஆளாகிறார்.

தனது தூரத்து உறவினர் ஒருவரின் மரணத்தினாலும்,விடாது துரத்தும் கனவுகளாலும்,தூக்கு கயிற்றில் சாவை அருகில் கண்டு உணர்ந்து அதை முரண்பாட்டின் இடைவெளி என கண்டடைகிறார்.மரணம் - முரண்பாட்டின் இடைவெளி என்பதை நிருபிக்க சொல்லும் விளக்கங்கள் சற்றே தலை சுற்ற செய்பவை.இடைவெளிகளின் வேறுபாட்டால் வெவ்வேறு வித மரணங்கள் நிகழ்கின்றன.இடைவெளியை அல்லது சாவை வெல்ல முடியுமா?? நிச்சயமாக முடியாது.எனவே முரண்பட்ட இடைவெளியே மரணம் என முடிகின்றது நாவல்.சற்றே குழப்பம் விளைவிக்கும் கருத்துக்கள் நாவல் முழுதும் விரவி இருந்தாலும் ஏதேனும் ஒரு இடத்தில் மரணம் குறித்து நம்மால் ஒரு முடிவிற்கு வர முடிகின்றது.

Sunday, March 22, 2009

தகழியின் "இரண்டு படி" மலையாள மொழிபெயர்ப்பு

எழுத்தாளர் தகழிக்கு அறிமுகம் தேவை இல்லை.மலையாள இலக்கிய உலகில் மிக சிறந்த படைப்புகளை வரிசைப்படுத்தினால் தகழியின் படைப்புகளுள் முதல் பத்து இடத்தில இடம் உண்டு.விளிம்பின் குரலாய் ஒலிப்பது இவரின் படைப்புகள்.செம்மீன்,தோட்டியின் மகனை தொடர்ந்து இவரின் "இரண்டு படி" நாவல் சமீபத்தில் படிக்க கிடைத்தது.குட்ட நாடு என அழைக்கப்படும் கேரள தேசத்தின் சோறு பகுதியின் விவசாய பண்ணை கூலிகளை பற்றிய கதை.தகழியின் எழுத்தில் மிகபிடித்தது பட்டவர்த்தனம்.இந்நாவலும் அது போலவே விவசாய கூலிகளின் சுதந்திரத்திற்கு முந்தைய நிலையின் கொடூரங்களை,பண்ணையார்களின் அதிகார மேம்போக்குதனத்தை விரிவாய் விவரித்து செல்கின்றது.
வயல் வேலையில் கெட்டிக்காரியான சிருதையை பெண் பார்க்கும் படலத்தை விவரித்து தொடங்கும் கதை,நாட்டுபுறங்களின் அழகும்,அறிவும் கடந்து உடல் உழைப்பில் ஆண்களுக்கு சலிக்காத பெண்களுக்கு உள்ள பெருமையை மறைமுகமாய் சொல்லுகின்றது.சிறுத்தையை மணக்கும் பொருட்டு அவளின் தந்தை கேட்கும் பணமும் நெல்லும் தரும் பொருட்டு பண்ணை கூலியாய் பணி சேர்கிறான்.அப்பகுதியின் விவசாயமுறை படிப்பதிற்கே அதிர்ச்சியாய் உள்ளது.நீர் நிறைந்த ஏரிகளில் வரப்பு கட்டி உள்ளுள்ள நீரை வெளியேற்றி விவசாயம் செய்ய தயார் செய்து பின் நெற்பயிர் விளைவிக்க பறை கூலிகள் மெனக்கிடும் காட்சிகளின் விவரிப்புகள் கற்பனையிலும் நினைத்து பார்க்க இயலாதது.

கோரன் தனது பண்ணையாரின் நிலத்தில் இரவு பகல் பாராது உழைத்தும் இறுதியில் கிடைக்கும் கூலியை கண்டி அதிர்ச்சி அடைகின்றான்.எதிர்த்து கேட்க வழியின்றி மருகும் கோரன் முடிவாக விவசாய கூலிகளின் நலன் காக்கும் சங்கத்தில் இணைத்து புரட்சி இயக்கத்தில் பங்கு கொள்கின்றான்.நாவலின் பின்பகுதி பெரும்பாலும் அக்காலகட்டத்தின் விவசாய புரட்சி,அரசியல் நிலைப்பாடு,அரசின் ஒடுக்குமுறை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

பறை பல்ல கூலிகளின் வாழ்கை நிலையை துணிகரமாய் சொல்லுவதோடு மட்டும் இல்லாது இந்நாவல் அழுத்தமாய் பதிவு செய்யும் மற்றொன்று கோரன்-சிருதை இவர்களின் மெய் காதல்.துன்பத்தின் பிடியில் இருக்கும் கணங்களிலும் இருவரின் அன்பும்,பிரியமும் குறையாது எதிர்காலம் குறித்த கனவுகள் சுமந்து தொடர்கின்றது இவர்களின் நாட்கள்.டி.ராமலிங்கத்தின் நேர்த்தியான மொழிபெயர்ப்பில் சாகித்திய அகாதமியால் வெளியிடபட்டுள்ள இந்நாவல் வாசிக்க பட வேண்டிய ஒன்று.

வெளியீடு - சாகித்திய அகாதமி

Friday, March 13, 2009

லேலா - ஈரானிய திரைப்படம்.

குத்து பாட்டு,மொக்கை திரைப்படங்கள்,இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.......என அனேக தமிழ் தொலைக்காட்சிகள் விடாது இம்சித்து கொண்டிருக்க மிக சிறப்பான பல நிகழ்ச்சிகளை சத்தமின்றி கொடுத்து வருகின்றது மக்கள் தொலைக்காட்சி.கிராமப்புற நிகழ்வுகள்,தெரு கூத்து,எழுத்தாளர்களுடன் உரையாடல்,இலக்கியசந்திப்புகள்,உலக சினிமா என பெரிதும் தனித்துவம் கொண்டு விளங்குகின்றது.இவற்றுள் ரோட்டோர சிறார்களின் விருப்பத்தை நிறைவும் செய்யும் நிகழ்ச்சி மிகுந்த மனநிறைவை தருவதாய் இருக்கும்.சமீபத்தில் இத்தொலைக்காட்சியில் ஈரான் நாட்டு திரைப்படமான "லேலா" பார்க்க நேர்ந்தது.சற்று சிக்கலான கதை களத்தை வெகு இயல்பாய் எடுத்தாளுகின்றது இத்திரைப்படம்.குழந்தை பெற்று கொள்ள இயலாத லேலா தனது கணவனுக்கு தானே பெண் பார்த்து மறுமணம் முடித்து வைக்க எடுக்கும் முயற்சிகளும்,அதை தொடர்ந்து உள்ளாகும் மன உளைச்சல்களும் நேர்த்தியாய் சொல்லப்பட்டுள்ளது.ஈரான் போன்ற கட்டுகோப்பான சமூக அமைப்பில் குடும்பங்களுக்குள்ளான நிகழ்வுகள்,பெண்களின் நிலை போன்றவை நம்மில் இருந்து பெரிதும் வேறுபட்டு இருக்கவில்லை.

மகிழ்ச்சியாய் செல்லும் திருமண நாட்கள்,லேலாவிற்கு துன்பம் தர தொடங்குவது குழந்தை குறித்தான ஏக்கம் மேலிடும் பொழுது.கணவனின் எதிர்ப்பை மீறி அவனிற்கு பெண் பார்க்க சம்மதிக்கிறாள்.விளையாட்டாய் தொடங்கும் பெண் பார்க்கும் படலம் லைலாவிற்கும் அவள் கணவனிற்கும் கேலியாய் தெரிகின்றது.பார்த்து வந்த பெண்களை குறித்து கிண்டலாய் அவன் சொல்வதை கேட்டு புன்னகை செய்யும் லேலா,இறுதியில் ஒரு பெண்ணை தனக்கு மிக பிடித்திருப்பதாய் அவன் கூறும் தருணத்தில் தனிமையை உணர தொடங்குகிறாள்.மெல்ல மெல்ல தனக்கு நேர போகும் பிரிவை நினைத்து லேலாவின் உடல்நிலை மோசமாகிறது.

லேலாவின் மீது மிகுந்த காதல் கொண்ட அவளின் கணவன் வற்புறுத்துதலின் பேரால் செய்யும் மறுமணம் நீடித்ததா,கணவனை விட்டு பிரிந்த லேலாவின் நிலை என்ன என்பதை மெல்லிய அதிர்வுகள் கொண்டு சொல்லி முடிகின்றது கதை.லேலா வாக நடித்துள்ள நடிகை மெல்லிய புன்னகையும்,சோகத்தை கூட்டும் இறுக்கத்தையும் வெகு இயல்பாய் வெளிக்காட்டுகின்றார்.காட்சிகளின் வேகத்தை கொஞ்சம் அதிகரித்து இருக்கலாம்,விருது படங்களுக்கே உரிய நிரந்தர குறைபாடு இது.எனினும் நல்ல திரைஅனுபவம்.தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்கள் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் என்பதே பெரும் ஆறுதல்.

Tuesday, March 10, 2009

பாவண்ணனின் "நூறு சுற்றுக்கோட்டை" - கன்னட மொழிபெயர்ப்பு

மொழி,இனம்,பிரதேசங்கள் கடந்து உலவும் கதைகள் தலைமுறை தலைமுறையாய் மாற்றங்கள் பல கண்டும் இன்றும் நிலைத்திருப்பது பகிர்தலின் பொருட்டே.கதைகளின் பகிர்தல் குறித்து நீண்டதொரு முன்னுரையோடு பாவண்ணன் மொழிபெயர்த்திருக்கும் கன்னட கதைகளின் தொகுப்பிது.கன்னட இலக்கிய உலகில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளின் மொழியாக்கம்,மறைந்த பிரபல கன்னட எழுத்தாளர்களை குறித்தும்,மிக சிறந்த நாவல்களின் சிறு பகுதியும் வெகு நேர்த்தியாய் தொகுக்கப்பட்டுள்ளன.

கன்னட எழுத்தாளர்களில் யு.ஆர்.அனந்தமூர்த்தி மட்டுமே எனக்கு நன்கு பரிட்சயம்.இவரின் சம்ஸ்காரா,அவஸ்தை,கடஷ்ரதா நாவல்கள் முன்வைக்கும் முற்போக்கு சிந்தனைகள் முக்கியமானவை. இவரின் "சூரியனின் குதிரை" சிறுகதை இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.பால்ய கால நண்பனை சற்றும் எதிர்பாரா நிலையில் சந்திக்க நேர்ந்த தனது அனுபவங்களை காட்சிகளாய் விவரித்துள்ளார்.ஏழ்மையை பொருட்படுத்தாது,வெகுளியாய் தினப்படி பொழுதை கதைகளோடும்,கற்பனைகளோடும் கடக்கும் நண்பனின் கதாபாத்திரம் அரிதாய் காணமுடிவது.யஷ்வந்த் சித்தாளின் "பயணம்" நவீன பாணி கதையாடல்.விற்பனை பிரதிநிதி ஒருவனின் மரணத்திற்கு முந்தைய பொழுதின் காட்சிகள் நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை மொகள்ளி கணேஷின் "காளி",தலித் இலக்கிய வகை சார்ந்த இக்கதை எனக்கு உணர்த்தியது ஒன்றே ஒன்று,இந்தியாவின் எல்லா பகுதியிலும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையும்,அவர்களின் வாழ்க்கை முறையும்,தலித் குழந்தைகளுக்கான நிறைவேற கனவுகளும் ஒன்றே என்று.இந்த ஒரு சிறுகதை மொழிபெயர்ப்பு என்பதை முற்றிலுமாய் மறக்கடிக்க செய்தது.இவை தவிர்த்து சிந்தாமணி கொட்லகெரே வின் "வசிட்டர் குகை" மற்றும் வெங்கடேஷின் 'சின்ன சிறு விஷயம்" சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை.

அணையாத சுடர்கள் என்னும் தலைப்பின் கீழ் வாழ்ந்து மறைந்த கன்னட எழுத்தாளர்கள் மூவரை குறித்து விவரித்துள்ளார் ஆசிரியர்.கொள்கைகளின் பொருட்டு விருதுகளை திருப்பி அனுப்பிய சிவராம கரந்த் கன்னட எழுத்துலகில் கொண்டிருந்த மதிப்பு படிப்பதற்கே பிரம்மிப்பாய் உள்ளது. இலக்கியம்,சினிமா,நாடகம்,பத்திரிகை,அரசியல் ஆய்வாளர் என பன்முகம் கொண்டு விளங்கிய லங்கேஷ் மற்றும் தி.ஆர்.நாகராஜ் பற்றிய குறிப்புகளும் சுவாரஸ்யம் கூட்டுபவை.ஆறுகளின் தடம் என்னும் தலைப்பின் கீழ் சிவராம கரந்த் மற்றும் லங்கேஷின் நாவல்களில் இருந்து சிறு பகுதிகளை மொழிபெயர்த்தும் தொகுத்துள்ளார்.

வெளியீடு - அன்னம்
விலை - 110 ரூபாய்

Saturday, February 28, 2009

சந்தோஷ்சிவனின் "டெரரிஸ்ட்"

வெளிவந்த காலகட்டத்தில் பரபரப்பாய் பேசப்பட்ட சந்தோஷ்சிவனின் "டெரரிஸ்ட்" திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது.1998 இல் வெளிவந்துள்ள இத்திரைப்படம் ராஜிவ் கொலைக்கு காரணம் என பெரிதும் நம்பபடும் விடுதலைபுலிகளின் தற்கொலை படையை சேர்ந்த தனுவை மையமாய் கொண்டு பின்னப்பட்டுள்ள கதை.இருப்பினும் இக்கதை முழுக்க முழுக்க தனுவின் சுயசரிதை என எடுத்து கொள்ள முடியாது,அக்கொலை சம்பவத்தை மையமாய் வைத்து முழுவதுமாய் மூளை சலவை செய்யப்பட்டு சமூகத்தின் மீதான தீராகோவமும் வன்மமும் கொண்ட பெண்ணை பற்றிய கதை.தான் சேர்ந்த இயக்கத்தின் போராட்டத்தில் குடும்பத்தையும்,காதலனையும் இழக்கும் மல்லி அரசியல் தலைவர் ஒருவரை தற்கொலை தாக்குதலினால் கொலை செய்ய பொறுப்பேற்று அழகிய கிராமம் ஒன்றில் ஊரின் பெரிய மனிதர் வீட்டில் தங்குகின்றாள். இயக்க நண்பர்கள் இருவர் அவ்வப்பொழுது வந்து திட்டங்களை விளக்கி கொண்டு செல்ல அவளின் நீண்ட பகல்கள் அவ்வீட்டின் பெரியவரோடு கழிகின்றது.மகனின் பிரிவால் கோமா நிலையில் உள்ள மனைவியோடு வசிக்கும் அப்பெரியவர் மல்லி மீது மிகுந்த அன்பு கொண்டு வாழ்வின் மீதான பிடிமானங்களை மெல்ல மெல்ல உணர்த்துகிறார்.

முழுதுமாய் வாழ்வை வெறுத்து,சமூகத்தின் மீதும்,சக உறவுகள் மீதும் நம்பிக்கை இழந்து இயக்கத்திற்காக முழு மனதுடன் சாவை ஏற்கும் மனநிலை கொண்டு இருக்கும் மல்லியின் மனநிலையில் தடுமாற்றம் நிகழ்வது அவள் தான் கர்ப்பமுற்று இருப்பதை உணரும் நேரம் முதல்.வெடிகுண்டு பொருத்திய பெல்டை இடுப்பில் அணித்து கொண்டு தலைவரை கொல்ல பயிற்சி அளிக்கப்படும் மல்லி திட்டத்தை நிறைவேற்றினாலா இல்லையா என்பதே முடிவு.உணர்ச்சிகள் மரத்து இறுக்கத்தோடு வளைய வரும் மல்லியிடம் கிராமத்து பெரியவர் நடத்தும் உரையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.செடியின் விதையை கொண்டு பூமிக்கும் வானுக்கும் உள்ள உறவை சொல்லும் இடமும்,மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் மனைவியை அன்போடு அணுகும் இடமும் இதில் குறிப்பிடத்தக்கவை .

இதில் மல்லியாய் நடித்துள்ள ஆயிஷா நல்ல தேர்வு. இறுக்கம், வன்மம்,கனவுகள்,ஆச்சர்யம்,ஆச்சர்யம்,பயம் என மாறி மாறி காட்டும் முகபாவனைகள் அற்புதம்.சந்தோஷ் சிவனின் காமிரா,அழகிய அச்சிறுகிராமத்தை வெயிலோடும்,மழையோடும் கவித்துவமாய் படம்பிடித்துள்ளது.தற்கொலைபடையை சேர்ந்த பெண்ணொருத்தியின் நிச்சயிக்கப்பட்ட மரண நாளின் முந்தைய நாட்கள் குறித்த இப்படம் ஆவணபடங்களுக்கே உள்ள சில குறைபாடுகளை கொண்டிருப்பினும் காணப்படவேண்டிய ஒன்று.

Wednesday, February 25, 2009

பஷீரின் "பாத்திமாவினுடே ஆடு / பால்ய கால சகி" - குறுநாவல் தொகுப்பு

மலையாள நாவல்கள் வரிசையில் தகழியின் "செம்மீன்", "தோட்டியின் மகன்",பாறபுரத்துவின் "அப்பாவின் காதலி" யை தொடர்ந்து எனது விருப்ப பட்டியலில் உள்ள நாவல் பஷீரின் "பால்ய கால சகி".எல்லா நாவக்களும் மறுவாசிப்பிற்கு உகந்ததாய் இருக்காது.சில நாவல்கள் பாதி படித்து கொண்டிருக்கும் பொழுதே அயர்ச்சியின் காரணமாய் கடைசி அத்தியாயத்திற்கு இழுத்து செல்லும்.எத்தனை முறை படித்தாலும் சலிக்காத நாவல் என்றால் என்னளவில் கி.ரா வின் 'கோபல்ல கிராமத்தை" சொல்லுவேன்.பஷீரின் "பால்ய கால சகியும்" அது போலவே."பாத்திமாவின் ஆடு" மற்றும் "பால்ய கால சகி" இரு குறுநாவல்களின் தொகுப்பை மீண்டும் வாசிக்க ஆர்வம் மேலிட உடனே படித்து முடித்தேன்.
பஷீரின் பெரும்பாலான கதைகள் சொந்த அனுபவங்களை கொண்டு எழுதப்பட்டவை.மேலும் தீவிர இலக்கண பிடிப்பின்றி பேச்சு வழக்கில் அமைக்கப்பட்டவை இவரின் கதாபாத்திரங்களின் உரையாடல்கள்."பாத்திமாவின் ஆடு" முழுக்க முழுக்க அவர் தம் குடும்பத்து மனிதர்களை பற்றியது.தம்பிமார்கள்,தங்கைகள் இவர்களின் குழந்தைகள் மற்றும் தனது தாயுடன் கழித்த நாட்கள் குறித்த குறிப்புகளை ஹாசியம் கலந்து விவரித்துள்ளார்.தம் குடும்பத்தில் பணத்தின் பொருட்டு எழும் சிறு சிறு ஊடல்களும்,அதனை முன்னிட்டு உறவுகளுக்குள் நிகழும் சிறு சச்சரவுகளும் மிகையின்றி வெளிப்படையாய் கூறி உள்ளார்.தனது தங்கையின் ஆட்டை முன்வைத்து அவ்வீட்டு பெண்களுக்கும் ஆண்களுக்கும் எழும் பூசல்கள் நகைச்சுவையாய் கூறப்பட்டாலும்,வறுமையின் பிடியில் சிறு விஷயங்கள் தேவையின் பொருட்டு பூதாகரபடுத்தப்படுவது கசப்பான உண்மை.

"பால்ய கால சகி",ஹஜ்ரா - மஜீத் சிறு வயது முதல் பேரன்பு கொண்டு பழகும் இவர்களின் வாழ்க்கை கால சுழற்சியில் துன்பத்தின் பிடியில் முற்றிலுமாய் சிக்கி சிதிலடைவதே இக்கதை.குழந்தை பருவத்து காட்சிகள் எதனை கதைகளில் படித்தாலும் சலிக்காதது.இக்கதையிலும் இவர்களின் பால்ய கால நாட்கள் விவரிக்கப்பட்டுள்ள விதம் மீண்டும் மீண்டும் அந்த அப்பருவத்தின் மீதான பிரியத்தை அதிகரிக்க செய்வது.பால்ய காலம்,பதின் பருவம்,நடுத்தர வயது என ஒவ்வொரு காலகட்டத்திலும் இவர்களின் பிரிவு சத்தமின்றி அதிகரிப்பதும் கொண்டகாதல் அதனினும் மேலாக பெருகுவதும் சோகம் கொண்டு சொல்லபடுவதால் இக்கதை காவியம் ஆகின்றது.

இவ்விரு நாவகளிலும் சில வார்த்தைகள் புரியவில்லை.மொழிபெயர்ப்பாளர் எதற்கு வம்பு என்று அப்படியே விட்டு விட்டார் போல.புரிய சொற்களை குறிப்பெடுத்து கொண்டு அலுவலக தோழியிடம் (கேரளத்தவர்) அர்த்தம் கேட்டேன்,அவருக்கும் தெரியவில்லை.இருப்பினும் சில சுவாரசிய தகவல் கிடைத்தது.பஷீரின் இவ்விரு நாவல்களும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாட திட்டத்தில் உள்ளதாம்.அது மட்டும் இன்றி தகழி,வாசுதேவன் நாயர் ஆகியோரின் கதைகளும் உண்டாம்.வாசிப்பு மீது ஈடுபாடு இல்லாதிருப்பினும் தம் தேசத்தின் எழுத்தாளர்களையும்,அவர்களின் படைப்புகளையும் அறிந்து வைத்திருக்கின்றனர்.என்னுடைய பள்ளி காலத்தில் அழகிரிசாமியின் "ராஜா வந்திருகின்றார்" சிறுகதை மட்டுமே பாடத்திட்டத்தில் இருந்தவற்றுள் உருப்படி.:-((

சுயசரிதை எழுத துணிவோர் ஒளிவு மறைவுகளை முற்றிலுமாய் துறந்திட வேண்டும் என Mc.Court இன் சுயசரிதை நூலான "Teacher Man" பற்றிய தன் கட்டுரை ஒன்றில் முத்துலிங்கம் குறிப்பிட்டு இருப்பார்.பஷீரின் எழுத்துக்கள் அவ்வகையில் நிஜத்தை மட்டுமே பகிர்ந்தளிப்பது.

வெளியீடு - நேஷனல் புக் டிரஸ்ட்