Friday, October 31, 2008

பாவண்ணனின் "எனக்கு பிடித்த சிறுகதைகள்" மற்றும் "கடலோர வீடு"

நாவலோ சிறுகதையோ படிக்கும் பொழுது அதன் மனிதர்களும்,நிகழ்வுகளும் ஏதோ ஒரு இடத்தில் நமக்கு மிக நெருக்கமாய் தோன்றலாம்.அவ்வாறு தான் மிகவும் நெருக்கமாய் உணர்ந்த சிறுகதைகளை தனக்கு நேர்ந்த நிகழ்ச்சிகளின் பின்னணி கொண்டு தொகுத்துள்ளார் பாவண்ணன்.தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்கள் அனைவரின் சிறுகதைகளும் இதில் அடக்கம்.நாம் படித்த மற்றும் படிக்காத சிறுகதைகளை குறித்து முற்றிலும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் மிக எளிமையாய் சொல்லியுள்ளார் பாவண்ணன்.


எனக்கு பிடித்த வண்ணதாசனின் "தனுமை" சிறுகதை மிக பிடித்தமானதாய் மாறிபோனது பாவண்ணனின் விமர்சனம் படித்த பின்னரே.சிறிதும் ஒத்து போகாத மனநிலை கொண்ட இருவர் ஒரே அறையில் தங்க நேரும் சங்கடத்தை சொல்லும் ஆதவனின் "ஒரு அறையில் இரு நாற்காலிகள்',விளிம்பு நிலை மக்களின் வாழ்கையை மிகையின்றி சொல்லும் ஜி.நாகராஜனின் "ஓடிய கால்கள்", விதவை தாயின் மனநிலையை சொல்லும் அசோகமித்ரனின் "அம்மாவுக்காக ஒரு நாள்", புதுமைபித்தனின் "மனித எந்திரம்" , சு.ரா வின் "பள்ளம்" என ஒவ்வொரு சிறுகதையையும் ரசித்து தம் அனுபவ நிகழ்ச்சிகளோடுகூறியுள்ளார் ஆசிரியர்.பாவண்ணனின் சிறுகதை தொகுப்பு "கடலோர வீடு" .பெரும்பாலான கதைகள் மனிதனின் தனிப்பட்ட மனநிலையை,விருப்பங்களை முன்னிறுத்தி சொல்லப்பட்டவை.பெரியதொரு பறவைகள் சரணாலயத்தை விருப்பத்தோடு பராமரிக்கும் ஒரு முதியவரின் மனபோராட்டங்களை சொல்லும் கதை "பறவைகள்".
புராண நிகழ்வின் புனைவாக கிருஷ்னையை மணக்க வைக்கப்படும் சுயம்வரத்தில் வென்றிட துடிக்கும் துரியோதனனின் ஒவ்வொரு நொடி மனவோட்டத்தையும் விவரிக்கும் கதை "இன்னும் ஒரு கணம்".

முதியோர் இல்லத்தில் தங்க வைக்கபட்டிருக்கும் நண்பனின் உறவினரை காண செல்லும் நாயகனின் ஒரு நாள் பொழுதினை,தாள முடியாத சோகத்தில் தள்ளும் அப்பெண்மணியின் நிலையை வெகு நேர்த்தியாய் சொல்லும் கதை "விளிம்பின் காலம்" .பெருகி வரும் முதியோர் இல்லங்கள் மலிந்து வரும் பந்த பாசத்தை மறைமுகமாய் உணர்துபவையே!!நவீன உலகில் பிராணிகளுக்கு அளிக்கப்படும் மதிப்பும்,பிரியையும் சக மனிதர்களுக்கு தரப்டுவதில்லை என்பதை சற்றே நகைச்சுவை கலந்து சொல்லும் சிறுகதை "பாதுகாப்பு".


பாவண்ணனின் எழுத்துலகம் சராசரி மனித வாழ்வின் அவலங்களை வெகு நுட்பமாய் எடுத்தாளுகின்றது.மிக கடினமான கருத்துக்களை கதை போக்கில் இயல்பாக உணர்த்தி, மிக அழுத்தமாக பதிவு செய்கின்றார்.

"எனக்கு பிடித்த சிறுகதைகள்" - காலச்சுவடு வெளியீடு
"கடலோர வீடு" - காவ்யா வெளியீடு

Wednesday, October 29, 2008

ரயில் பயணங்கள்,வாசிப்பு மற்றும் சுதாவின் 'அனல் மேலே பனித்துளி.....'எனது பால்ய கால ஏக்கங்களில் முக்கியமான ஒன்று ரயில் பயணம்..கல்லூரி முடித்து சென்னையில் பணியில் சேர்ந்த பிறகு ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி போனதோடு சுவாரசியம் கூட்டும் அனுபவமாய் மாறிப்போனது.மிக விருப்பத்திற்குரியது வாசிப்பிற்கு அனுகூலமான நீண்ட பகல் பொழுது பயணங்கள்.ஜன்னல் காட்சிகள் துண்டிக்கப்படும் குளிர்வசதி கொண்ட ரயில் பெட்டி பயணம் தண்டனை அனுபவிப்பது போன்ற நிலையில் தள்ளும்..எல்லாவற்றிற்கும் மேலாக அரிதாய் புன்னகைக்கும் சக பயணிகள்,தொடர் சேட்டைகளால் கவனம் பெரும் சிறுவர்கள்,இரவில் ஒளிரும் நதிகள்,உடன் நகரும் வயல்வெளிகள்,மரங்கள், நாகை,நெல்லை,மதுரை என சரளாமாய் புரளும் வட்டார மொழிகள் என சுவாரசியத்திற்கு குறைவில்லாத ரயில் பயணங்கள் சலிப்பற்று தொடர்கின்றது!!

*************************************

வாசிப்பு..புத்தக வாசிப்பு தொடர் ஆட்டத்தில் பங்கு கொண்டு கேள்விகளுக்கான பதில் எழுதும் பொழுது வாசிப்பு மீது கொண்டிருக்கும் ஆர்வமும்,முற்று புள்ளி அற்று தொடரும் அதன் சுழற்சியில் சுகமாய் பயணிப்பது குறித்து யோசிக்க செய்தது.வாசிப்பு என்றைக்குமே திணிக்கபட்டு வருவதில்லை,தேடல் மிகுதியின் தொடர்ச்சியாய் வருவது!!சமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டி ஒன்றில் வாசிப்பு குறித்த வைரமுத்துவின் "வாசிப்பு மனிதனை விசாலபடுத்துவது.வாசிப்பு உலகம் வாசகன் வாழாத உலகத்தை அவன் வாசலுக்கு கொண்டு வருவது " என்கின்றன வரிகள் வெகு உண்மையாய் தோன்றியது.நெருக்கடி மிகுந்த தினசரி வாழ்வில் காண கிடைக்காத உலகம் குறித்த தேடல் மிக அவசியமே!!சமீபத்திய பண்டிகை விடுமுறையில் தொடர்ந்து மூன்று நாட்கள் வாசிக்காமல் இருந்தது வெறுமையாய் உணர செய்தது..சென்னை பட்டணம் நெருங்க நெருங்க அந்த வெறுமை தேவை ஆகா உருமாறி ரயிலிலேயே வாசிப்பை தொடங்கி விட்டேன்...

**********************************************
முன் எப்போதும் இல்லாத அளவு ஒரு பாடலின் மீது பைத்தியம் கொண்டு, எத்தனை முறை கேட்டிருப்பேன் என கணக்கில் கொள்ளாது தொடர்ந்து ரசித்து கொண்டிருகின்றேன் சுதா ரகுநாதனின் குரலில் வரும் வாரண ஆயிரம் படப்பாடல் "அனல் மேலே பனித்துளி....." யை.சுதாவின் முந்தைய இரு திரை பாடல்கள் அதிக கவனம் பெறவில்லை..ராஜாவின் இசையில் இவன் படப்பாடல் "எனை என்ன செய்தாய்.." அற்புதமான தொடக்கமாய் இருந்த போதிலும் ஏனோ வெகுஜன ரசிப்போடு ஒன்றவில்லை.

கர்நாடக இசையை பொறுத்த மட்டில் எனது அறிவும்,ரசனையும் பூஜ்யம்.நேர் எதிராய் கர்நாடக சங்கீதத்தில் அப்பாவிற்கு உள்ள ஈடுபாடும்,சுதாவின் பாடல்களுக்கு மீது கொண்ட தீவிர ரசனையாலும் இப்பாடலை கேட்க முடிந்தது.மெல்ல இப்பாட்டின் வசீகரத்தில் மூழ்கி போகும்படியும் ஆனது..

"எந்த காற்றின் அளாவலில் மலர்
இதழ்கள் விரிந்தனவோ ..........."

"சந்தித்தோமே கனாக்களில் சில முறைய பலமுறையா
அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா........"

தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கொண்டு முழுமை அடைவது தாமரையின் வரிகள் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புதுவித அனுபவம் தந்தபடி தொடர்கின்றது!!

எம்.வி.வெங்கட்ராமின் "நித்ய கன்னி"

சரித்திர நாவல்கள் தரும் கற்பனை வெளி எல்லை அற்றது.அரண்மனைகளும்,போர் படைகளும்,அரச குமாரிகள் குறித்த வர்ணனைகளும் சொல்லபட்டதிற்கு மேல் அதிகமாய் எண்ணி வியக்க கூடியவை.25 ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த 'நித்யகன்னி" புராண சம்பவம் ஒன்றினை அடிப்படையாய் கொண்டது.மிகுந்த வர்ணனைகள் அற்று பெண் உடலை முன்னிறுத்தி பின்னபட்டிருக்கும் இந்நாவல் அந்த காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டதில் வியப்பில்லை.

விசுவாமித்திர முனிவரின் சிஷ்யனான காலவன் குரு தட்சணையாக முனிவருக்கு 400 அதிசய வெண் புரவிகளை அளிக்க பணிக்கிறான்.பேரு வள்ளலான யயாதி மன்னனின் மகள் மாதவி 'நித்யகன்னி' வரம் பெற்றவள் என்பதை அறிந்து அவரிடம் சென்று அவளை பெற்று பின் அப்புரவிகள் உள்ள மன்னர்களுக்கு அவளை மணமுடித்து தன் குரு சேவையை நிறைவு செய்ய முடிவு செய்கிறான்
இந்நிலையில் காலவன் வந்த நோக்கம் அறியாது அவன் மீது காதல் கொள்கிறாள் மாதவி.மாதவி என்று அறியாது காலவனும் அவள் அழகில் மையல் கொள்கிறாள்.காலவனின் முடிவை மாற்றிவிடலாம் என எண்ணி அவன் உடன் புறப்படுகிறாள்.விசுவாமித்திர முனிவரின் கடுங்கோபத்திற்கு அஞ்சி காலவன் தன் காதலியை புரவி வேண்டி மன்னர்களுக்கு மனம் முடிக்க அழைத்து செல்கிறான்.
காமுகனான அயோத்தி மன்னனை மனம் முடித்து,பிள்ளை பெற்று கன்னியாக மாறிய மாதவியை தன் பிள்ளையை விட்டு பிரித்து அறத்தின் மீது பெரு நம்பிக்கை கொண்ட காசி மன்னனை மணக்க அழைத்து செல்கிறான் காலவன்.


அயோத்தி மன்னனும்,காசி மன்னனும் மாதவியின் அழகின் பொருட்டே அவளை மணக்க சம்மதித்து,அவள் உள்ளம் அறியா நடந்துகொள்கின்றனர்.காமம்,ஆறாம் தவிர்த்து கலைகளின் மீது ஆர்வம் கொண்ட மூன்றாவது மன்னன் மாதவியின் குணம் அறிந்து அவளை காலவனோடு செல்ல அனுமதிக்கிறான்.துயரங்கள் யாவும் முடிவுற்றது என எண்ணி காலவன்,மாதவியை மனம் செய்ய இருக்கும் தருணம் அவள் அழகில் மயங்கி விசுவமித்ரர் அவளை மணக்க முடிவு செய்து,தன் குடிலில் தங்க செய்கிறார்.தொடர் திருமணங்களாலும்,ஸ்திர புத்தி அற்ற காதலான காலவனாலும் புத்தி பேதலித்து பைத்தியம் ஆகிறாள் மாதவி.பேரழகியாய்,நித்ய கன்னியாய் அரண்மனையில் உலா வந்த மாதவி,தனக்கு சிறிதும் சம்பந்தம் அற்ற விச்வாமித்ரரின் சாபத்திற்கு பலியாகி வாழ்கை முழுதும் தொடர் அல்லல்களால் சுழட்டி அடிக்கபடுவதை மிகை இன்றி,பெரும்பாலும் மாதவியின் மனநிலை கொண்டு விளக்கி உள்ளார் எம்.வி.வெங்கட்ராம்.

எந்த ஒரு கால கட்டத்திற்கும் பொருந்தி போகும் கதை இது.தனிப்பட்ட விருப்பத்திற்கு மாறாக,சுயேச்சையாக முடிவு எடுக்க வழியின்றி எப்போதும் எவரையேனும் சார்ந்து வாழும் நிலை பெண்களுக்கு நம் சமூகத்தில் இன்றும் உண்டு.பெண் உடல் குறித்த சமூகத்தின் பார்வையை மாதவி மணக்கும் மூன்று மன்னர்களின் குணங்களாய் கொள்ளலாம்.காமம் மிகுந்த,அற ஒழுங்கம் பற்றி,போற்ற பட வேண்டிய அழகிய கலை போல நோக்கப்படும் பார்வைகளில் பெண்ணிற்கு மிக விருப்பமானதாய் இருப்பது மூன்றாவதே!!

மிக கடினமான கருத்தை சரித்திர பின்னணியுடன் புனைந்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.நாவல் முடியும் தருவாயில் அதன் சாரத்தை முழுதாக உணர முடிந்தது,ஒவ்வொரு காட்சிக்கும் ,உரையாடல்களுக்கும் பல்வேறு உட்பொதிந்த அர்த்தங்கள் உண்டு.தனது கிளாசிக் நாவல்கள் வரிசையில் காலச்சுவடு இந்நாவலை வெளியிட்டுள்ளது..


வெளியீடு - காலச்சுவடு
விலை - 100 ரூபாய்

Wednesday, October 22, 2008

வைரமுத்துவின் "கள்ளிகாட்டு இதிகாசம்"

கவிஞராக மட்டுமே அறிந்து இருந்த எனக்கு வைரமுத்துவை சிறந்த எழுத்தாளனாய் காட்டிய கரிசல் இலக்கியம் இது!!பகட்டில்லாத,முக பூசில்லாத கரிசல் மனிதர்களும்,மண்ணுடன் ஆனா அவர்களின் உறவும்,பிரியமும் மிக நெருக்கமாய் உணர செய்யும் இந்த நாவல் விகடனில் தொடராக வந்தது.ஒரு கரிசல்பூமியில் வாழ்ந்து மடிந்த பேயதேவர் என்னும் மனிதனின் சோக வரலாறே "கள்ளிகாட்டு இதிகாசம்".

மண்ணோடும் பெற்ற மக்களோடும் போராடும் பேயத்தேவர் ஒரு சிக்கலில் இருந்து விடுபட்டு தலை நிமிர நினைக்கும் பொழுதில் இன்னொன்று வந்து புயலென சூழ தொடர்ந்து சுழட்டி அடிக்கபடுவது மனதை கனக்க செய்வதாய் உள்ளது.கோழி குழம்பு வைப்பதில் இருந்து சாராயம் காய்ச்சுவது வரை,சவர தொழில் நேர்த்திமுறைகள் முதல் வெட்டியானின் ஒரு பிணம் எரிக்கும் அனுபவங்கள் வரை அனுபவித்து சொல்லப்பட்டுள்ளன.இவ்வாறு சிறு சிறு விஷயங்களை விரிவாய் விவரித்துள்ள இடங்கள் வைரமுத்துவின் எழுத்தாளுமைக்கு எடுத்துக்காட்டு.கிராமத்து வாழ்க்கையோடு நமக்கு சிறிது பரிட்சயம் இருந்தால் இந்நாவல் மேலும் சுவாரசியமாக தோன்றும்.கமலை தோட்டத்தில் உழவு செய்யும் அழகை,தனி ஆளை தரிசு நிலத்தை விலை நிலமாக்க கிணறு வெட்டும் பேயதேவரின் உழைப்பும் எனக்கு வெவ்வேறு சம்பவங்களை நினைவு படுத்தியது.கோழி,ஆடு திருட்டு முதல் சாராயம் காய்ச்சுவது முதல் சகல கெட்ட காரியங்களில் ஈடுபட்டிருக்கும் பேயதேவரின் மகன் பாத்திர படைப்பு சண்டியர் தனம் செய்து திரியும் அசல் கிராமத்து இளைஞனின் குறியீடு.

பேயதேவரின் இளம் வயது காதல்,மனைவி மீதான பிரியம்,நாயக்கரோடு கொண்டிருந்த நட்பு,பேரனோடான தோழமை என யாவும் இயல்பு மாறாது உரையாடல்களால் சொல்லப்படுகின்றது. கிராமத்து மனிதர்களுக்குள்ளான நட்பும்,பிரியமும்,துன்பம் நேர்கையில் உதவும் மனமும்,மண்ணின் மீது கொண்ட பிரியமும்,கரிசல் பெண்கள் எப்படி எல்லா விதத்திலும் சராசரி பெண்களை விஞ்சி நிற்கின்றனர் என வைரமுத்து காலை முதல் மாலை வரை வயலில் உழைக்கும் அவர்களின் தின காரியங்களை பட்டியலிடும் இடமும் புழுதி காட்டின் மீதான பிரியத்தை அதிகரிக்க செய்பவை.

தொடர்ந்து வரும் துன்பங்களை சாபமாக கருதாது வாழ்க்கை மீதான நம்பிக்கைக்கும் வைக்கப்படும் சவால் என எண்ணி ஒவ்வொரு சிடுக்குகளையும் விடுவித்து கொண்டே பேயதேவர் முன்னேற இனி ஒரு போதும் வெளிவர முடியாத பெரும் துக்கம் வந்து தாக்குகின்றது.அணை கட்டும் பொருட்டு தேவரின் ஊரோடு சேர்த்து சில கிராமங்களை இடம் பெயர அரசாங்கம் வற்புறுத்துகிறது.அதை மீள இயலாது வீட்டு பொருட்களை கொஞ்ச கொஞ்சமாய் கொண்டு மேடு சேர்க்க,இறுதியில் தன் பூமியின் பிடிமண் எடுத்து திரும்பும் பொழுது நீரில் மூழ்கி இறக்கின்றார்.

நாவல் முழுவதும் தொடர்ந்து வரும் அதீத சோகம் ஒரு கட்டத்தில் அயர்ச்சியை தருகின்றது.இருப்பினும் சுவாரசியம் கூட்டும் வர்ணனைகளும்,மண்ணோடு வேர்விட்டு மழைக்கும்,புயலுக்கும் அஞ்சாது நிற்கும் ஆலம் விழுதென பேயத்தேவர் பாத்திர படைப்பின் வலிமையும் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை தருகின்றது.சேரும் புழுதியும் அப்பி மண்ணோடு மல்லு கட்டும் கரிசல் மக்களின் வாழ்க்கையை இந்நாவலில் அழகாய் பதிவு செய்துள்ளார் வைரமுத்து.

கிடைக்கும் இடம் : திருமகள் புத்தக நிலையம்,தி.நகர்
விலை : 200 ரூபாய்

Friday, October 17, 2008

கோபி கிருஷ்ணனின் 'உள்ளே இருந்து சில குரல்கள்'

எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் மரணத்திற்கு பிறகு குமுதம் இதழ் ஒரு பக்க அளவில் அஞ்சலி கட்டுரை வெளியிட்டு இருந்தது,அதற்கு முன்பு வரை கோபியை பற்றிய எந்த அறிமுகமும் இருந்ததில்லை.வாழ்ந்த காலத்தில் பெரிதும் அறிய படாத எழுத்தாளர்கள் வரிசையில் பா.சிங்காரத்தை போல கோபியும் உண்டு.

நண்பர்கள் மூலமாகவும்,வலைத்தளங்களிலும் இவரின் "உள்ளே இருந்து சில குரல்கள்" நாவல் குறித்த விமர்சனங்கள் இந்நாவலை படிக்கும் ஆவலை தூண்டியது.நாவலை படித்து கொண்டிருந்த கணங்களில் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள வழியின்று பல சமயம் பாதியில் புத்தகத்தை மூடி வைத்தேன்..கனத்த வலி தரும் மனித நிலைகளின்(பிறழ்வு) தொகுப்பு வெகுவான ஏற்ற இறக்கம் இன்றி சீராக பயணிக்கின்றது.மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க பட்டிருக்கும் மனநிலை பாதிக்கபட்டோர் அல்லது அவர்களின் உறவினரின் நேரடி கூற்றாக ஒவ்வொரு நிலையும் விவரிக்கப்பட்டுள்ளது.ஐம்பதிற்கும் மேலான மனநிலை வெளிப்பாடுகளில் பெரும்பாலான பிறழ்வுகளுக்கு காரணமாய் அமைவது அதீத கடவுள் பக்தி,திருமண/காதல் தோல்வி,உறவுகள்,வேலை,அர்த்தம் அற்ற பயம்,சந்தேகம் என பொதுவாய் கொள்ளலாம்.இவ்வாறு சிறு சிறு அதிர்வுகளை உள்வாங்கி ஒவ்வொரு நிலையும் கடக்க வேண்டியுள்ளது.மன பிறழ்வை நோய் என கூறுவதை காட்டிலும் ஒரு வகை பாதிப்பு என சொல்வது சரியாக இருக்கும்,சில நிலைகளை படிக்கும் பொழுது நமக்கும் அவர்களுக்குமான வித்யாசம் பெரிதாய் இல்லை.சிந்தனையையும்,மனவோட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் வரையில் நமது நிலை குழப்பம் இன்றி தொடர்கின்றது.

இது தவிர்த்து நாவலின் இறுதியில் மன நல பாதிப்பிற்க்கு வைத்தியம் (?!) செய்யும் சில சாமியார்கள், மற்றும் மாந்த்ரீகர்களின் சந்திப்புகள்,மன நலம் குறித்து விவாதிக்கும் பல நூல்களின் மேற்கோள்கள் என இறுதி பகுதி முழுவதும் மன பிறழ்வு குறித்து முழுதுமாய் உணர்ந்து கொள்ள உதவுகின்றது.

மனித மனங்களின் வலிகளை,இருண்ட வாழ்வின் அவலங்களை மிக அழுத்தமாக பதிவு செய்கின்றது இந்நாவல்.கோபி குறித்த எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை இந்த எழுத்தாளனுக்கு சிறந்ததோர் அஞ்சலி.

வெளியீட்டார் - வம்சி புக்ஸ்
விலை - 80 ரூபாய்

Wednesday, October 15, 2008

தமிழ் சினிமா இன்னுமொரு தொடர்

இரண்டு தமிழர்கள் பார்த்து பேசினால் அங்கு சினிமா குறித்த பேச்சு கட்டாயம் இருக்கும் என கூற கேட்டு இருக்கின்றேன்.அந்த அளவில் திரைபடங்கள் நம் தின சரி வாழ்கையில் ஒன்றாகிவிட்டது!!அமைதியாய் இத்தொடர் ஓட்டத்தை கவனித்து கொண்டிருந்தேன்..அய்யனாரின் அழைப்பை ஏற்று நானும் இங்கே..

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

(அதிகம் யோசிக்க வைத்த கேள்வி இது)முதலில் பார்த்த படம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை..சிறு வயதில் சனி,ஞாயிறு மத்திய பொழுதுகளில் டிடி யில் ஒளிபரப்பான இரு குறும்படங்கள் இன்றும் என் நினைவில் உண்டு.

-முதலை தன் முட்டைகளை பாதுகாப்பதை வியந்து பார்க்கும் கிராமத்து சிறுவன்,தானும் பகல் பொழுதுகளில் அதற்கு துணையாய் இருப்பதாய் வரும்.

-வெளிநாட்டு பெண்ணை மனது வரும் மகனுக்கும் படிப்பறிவில்லாத மாடு மேய்க்கும் தாய்க்குமான உறவின் பிணைப்பு சொல்லும் படம்.2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சிவாஜி - சாவித்திரி நடித்த நவராத்திரி.கேபிள் சானல் ஒன்றில் பார்த்தது.இருவரின் நடிப்பு வியப்பில் ஆழ்த்தியது,அதிலும் முக்கியமாக அந்த தெரு கூத்து நடனம்.
எஸ்.ரா வின் சமீபத்திய கட்டுரையான "இரு புகைப்படங்கள்" ளில் சாவித்திரியின் இறுதி நாட்கள் குறித்த செய்திகள் நினைவில் வந்து மனதை பிசைந்தது!!


4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மஹாநதி - ஒரு மனிதனின் ஒரு நிமிட சபலத்தால் குடும்பமே சீரழியும் கதையை
மிகுந்த எதார்த்தத்தோடு சித்தரித்த படம்.

அவள் அப்படிதான் - இப்படம் குறித்து தனியே பதிவு போடும் அளவிற்கு பாதித்தது
மஞ்சுவின் பாத்திர படைப்பு.


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
எதுவும் இல்லை

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.நிவாஸ் ஒளிப்பதிவு குறித்து அப்பா எப்பொழுதும் ஸ்லாகித்து சொல்வதுண்டு.

பாரதிராஜா - நிவாஸ்(பெரும்பாலான படங்கள்)
மஹேந்திரன் - பாலுமகேந்திரா(முள்ளும் மலரும்,உதிரி பூக்கள் )
மணிரத்தினம்-பி.சி.ஸ்ரீராம்(அக்னி நட்சத்திரம்)

நாம் தினம் காணும் காட்சிகளை தங்கள் காமெராக்கள் மூலம் கவிதையாக்கிய இவர்களின் எதார்த்த நிலை இப்பொழுது எவரிடமும் காணகிடைப்பதில்லை.அதி நவீன தொழில் நுட்பம் என்கிற பெயரில் தற்பொழுதைய திரைப்படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அபத்தத்தின் உச்சம்.

இளையராஜாவின் பின்னணி இசை (சிகப்பு ரோஜாக்கள்,மௌன ராகம் )


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

குமுதம்,விகடனில் வாசிப்பதோடு சரி.முன்பெல்லாம் ஒரு பக்கம் மட்டுமே சினிமா செய்திகளுக்கு ஒதுக்கி இருப்பர்,இப்போ நிலைமை தலைகீழ்.பெரும்பாலான பக்கங்கள் நடிகையர் பேட்டி,புகைப்படம் என நிரம்பி வழிகின்றது!!விகடனும் தன் தரத்தை இழந்து வருகின்றது.

7. தமிழ்ச்சினிமா இசை?

எப்பொழுதும் இளையராஜா.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ரசித்து பார்த்த உலக மொழி படங்கள் - Amelia,Monster,cider house rules
வேற்று மொழி படங்கள் - செம்மீன்(மலையாளம்),கடஷ்ரேத (கன்னடம்)
Mr & Mrs Iyer,Fire இன்னும் சில


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாலா,அமீர்,ராம்,சேரன்,தங்கர் பச்சன்,ராதாமோகன்,செல்வா ராகவன் என நம்பிக்கை கூட்டும் இயக்குனர்களும் சூர்யா,விக்ரம்,ஜீவா போன்ற படத்தின் தேவைகேற்ப தம்மை வருத்தி கொள்ளும் நாயகர்களும் ஒரு புறம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்ல செய்யும் முயற்சிகள் மகிழ்வூட்டுவதே!! அதே சமயம் குத்து பாட்டு,தாலி சென்டிமன்ட்,3 டூயட்,நாலு பைட் பார்முலாக்களை விடாது பற்றி படம் எடுக்கும் பேரரசு வகையறாக்களை நினைத்தால் தமிழ் சினிமா எதிர்காலம் புகைமூட்டமாகவே தெரிகின்றது!!

மேம்போக்கான இக்கேள்விகளை தவிர்த்து இன்னும் சில கேள்விகள் இணைக்கப்பட்டு இருக்கலாம் என தோன்றுகின்றது..உதாரணமாக "சிறந்த பத்து தமிழ் படங்கள்","நாவலை தழுவி எடுக்க பட்ட படங்கள் குறித்து","இசையை மையமாய் கொண்ட திரை படங்கள்" "தமிழ் சினிமாவில் பெண்ணியம்" என்று..

இத்தொடர் ஓட்டத்தில் பங்கு கொள்ள நான் அழைப்பது

'ரகசிய கனவுகள்' கார்த்திக் மற்றும் வால் பையன் 'அருண்'

Tuesday, October 14, 2008

ஜி.நாகராஜன் மற்றும் ஜே.பி.சாணக்கியாவின் எழுத்துலகம்

விளிம்பு நிலை மக்கள் குறித்த பதிவுகளை தீவிரமாக தேடி படித்ததில்லை.ஜெயகாந்தனின் "உன்னை போலே ஒருவன்" அவ்வகையில் நல்ல பதிவு.ஜி.நாகராஜன் மற்றும் ஜே.பி.சாணக்கியாவின் நூல்கள் குறித்தான அறிமுகம் கிடைத்ததும் இருவரின் நூல்களை தேடி படித்து முடித்தேன்.சமூகம் வரையறுத்த கட்டுபாடுகளை மீறி தன் இயல்பில் நடமாடும் நிஜ மனிதர்களை குறித்து முழுதாய் விரிவாய் எடுத்துரைப்பவை இவர்களின் எழுத்துக்கள்.

ஜே.பி.சாணக்கியாவின் "என் வீட்டின் வரை படம்" சிறுகதை தொகுப்பு

"ஊருக்கு சென்று திரும்பும் பொழுதெல்லாம் மீசை தாடி பெருத்து வளர்ந்த பிள்ளையை தொட்டு பேச முடியாத துக்கத்தில் வார்த்தைகளை சோறாய் ஆக்கி போடும் என் அம்மாவிற்கு"

- சாணக்கியா


இந்நூலின் முகப்புரையில் சாணக்கியா குறிப்பிட்டுள்ள மேற்சொன்ன வார்த்தைகளை அப்பா அழுத்தி கோடிட்டு இருந்தார்,, தாயும் மகனுக்குமான பிரியத்தை அழகாய் விளக்கும் இவ்விரு வரிகள் என்னையும் ஈர்த்ததில் வியப்பில்லை!!

இத்தொகுப்பின் முதல் சிறுகதை 'ப்ளாக் டிக்கட்' ,சென்னை நகரின் ஒரு காலை நேர பிளாட்பார காட்சிகளோடு தொடங்குகின்றது...குப்பை மேடுகளும்,மூத்திர நெடியும் மிகுந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் திரையரங்கு ஒன்றில் ப்ளாக் டிக்கட் விற்று பிழைப்பு நடத்துகின்றனர்..விற்பனை மந்தம் ஆகும் வேளைகளில் வேசியராய் திரையரங்கை சுற்றி வருகின்றனர்...மற்றொரு சிறுகதையான 'என் வீட்டின் வரை படம்' கனத்த மௌனத்தோடு நகருகின்றது.வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதின் குறியீடாய் குப்பையில் எரிய படும் குடும்ப புகைப்படத்தின் நினைவுகளோடு அவ்வீட்டு சிறுவனின் பார்வையில் கதை விரிகிறது.இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை "வெகு மழை",ஒரு பெரு மழை நாளில் தன் வீட்டின் அருகே முன்பு குடி இருந்த வேணி அக்காவை அவள் ஊரில் வழியறியாது தேடி திரியும் நாயகன் அக்கணங்களில் அவளோடான தனது கடந்த கால நிகழ்வுகளை பகிர்கிறான்.திருமணத்திற்கு பிறகு கணவனை விட்டு வேறு ஆடவர்களோடு பிரியம் கொண்டு,பின்பு மன நோய்க்கு ஆளான வேணி பற்றிய குறிப்புகள் மழையின் கனத்தோடு நம்மை தாக்குகின்றது.

இக்கதைகள் தவிர்த்து "ரிஷப வீதி","தனிமையின் புகைப்படம்","உருவங்களின் ரகசியங்கள்" ஆகிய சிறுகதைகளும் குறிப்பிட தக்கவையே..சாணக்கியா கையாளும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வேசியர்,தடம் மாறும் குடும்ப பெண்கள்,பிளாட்பார மனிதர்கள்,பிச்சைக்காரர்கள்..இம்மனிதர்களின் வாழ்க்கை சூழலும்,உரையாடல்களும்,முக பூச்சு இல்லாத மனித வாழ்வின் அவல நிலையை எடுத்துரைப்பவை.

வெளியீடு :காலச்சுவடு
விலை : 75 ரூபாய்

ஜி.நாகராஜனின் 'நாளை மற்றும் ஒரு நாளே"

மதுரை நகரில் வாழும் நாயகன் கந்தனின் ஒரு நாள் குறிப்புகளை முழு நாவலை தொகுத்திருக்கின்றார் நாகராஜன்.பெண் தரகு,கட்ட பஞ்சாயத்து என கழியும் கந்தனின் நாட்களில் ஒரு நாள் அவனோடு பயணித்த அனுபவம்.நாம் எப்போதும் அறிய விரும்பாத அசிங்கம் என ஒதுக்கி தள்ளும் வாழ்கை முறையை முழு மனதாய் ஏற்று நடத்தும் எத்தனையோ மனிதர்களுள் கந்தனும் ஒருவன்.படித்த இளைஞன் ஒருவனோடான கந்தனின் சமூக மாற்றம் குறித்தான உரையாடல்,அவனின் அறியாமையை விளக்குவதாய் இருப்பினும் எந்த ஒரு சமூக மாற்றமும் அவனின் வாழ்க்கை தரத்தை மாற்ற போவதில்லை என்பதை உணர்த்துவதாய் உள்ளது.

எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை ஒன்றில் "ஜி.நாகராஜன் போல மதுரை நகரை யாரும் வருணிக்க முடியாது" என குறிப்பிட்டு இருந்தார்.இந்நாவலிலும் 'வடம் போக்கி தெரு','ஷெனாய் நகர்','மசூதி தெரு' போன்ற மதுரையின் சில பகுதிகளை குறிபிட்டுள்ளார்,விரிவான வருணிப்புகள் எதுவும் இல்லை.அவரின் மற்றும் ஒரு நாவலான 'குறத்தி முடுக்கு" இல் மதுரை நகரின் விவரிப்புகள் இருக்கலாம் என கருதுகிறேன்!!

நன்றி அய்யனார்

வெளியீடு - காலச்சுவடு
விலை - 90 ரூபாய்

Monday, October 13, 2008

புத்தக வாசம்- ஒரு தொடர் ஆட்டம்

வாசிப்பு - தேடல் மிகுந்த என் தனிமைகளை போக்கியது வாசிப்பு மட்டுமே!! என் மட்டிலும் வாசிப்பு என்பது சுகானுபவம்..உஷாவின் இந்த அழைப்பு பெரு மகிழ்ச்சியை தருவதாய் உள்ளது.பகிர்தல் என்றும் சுவாரசியமானதே!!

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

கி.ராஜநாராயணனின் 'பிஞ்சுகள்",குழந்தைகளுக்கான இலக்கிய நாவல்..அந்நாவலில் கி.ரா குறிபிட்டிருக்கும் அரிய பறவை இனங்களும்,வழக்கொழிந்த தமிழ் சொற்களும் முதல் வாசிப்பின் பொழுது ஏற்படுத்திய ஆச்சர்யம் இன்றும் நினைவில் உள்ளது.


2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
அம்புலிமாமா கதைகளில் இருந்து தான் வாசிப்பு தொடங்கியது.10 வயதில் என நியாபகம்.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

அ. சமூக நாவல்கள்
ஆ. சரித்திர நாவல்கள்
இ. ஹரிபாட்டர் வகையான வினோத நாவல்கள்
ஈ. ராணிமுத்து, மாலைமதி மற்றும் பாக்கெட் நாவல்கள்

சமூக நாவல்கள்
எதார்த்தம் நிறைந்த,மனித உறவுகள் முன்னிறுத்தி சொல்லப்படும் கதைகள்.
விளிம்பு நிலை மக்கள் குறித்த பதிவுகளும்.


4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு
ஆ. பத்திரிக்கைகளில் நூல் மதிப்புரைப் படித்து
இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து
ஈ. நாவலின் முன்னுரையைப் படித்துப் பார்த்து
உ. புத்தகத்தின் வடிவமைப்பையும், அட்டையையும் பார்த்து
ஊ. (வேறு எதேனும் காரணம் இருந்தால் எழுதவும்)


பெரும்பாலான நாவல்கள் எனக்கு அறிமுகம் செய்தது என் தந்தையே.வலையுலக அறிமுகத்திற்கு பிறகு நண்பர்கள் மூலம் அறிந்து சில நூல்கள் படிக்க நேர்ந்தது.

5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

அ. பக்க அளவு
ஆ. சொல்லப்படும்ம் கதையின் கால எல்லை
இ. (வேறு எதேனும் காரணம் இருந்தால் எழுதவும்)

பக்க அளவு

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

அ. வாசகனின் அக நிலையிலிருந்து

ஆ.எழுத்தாளரின் முன்வைப்பிலிருந்து

இ.(வேறு எதேனும் காரண இருந்தால் எழுதவும்)

வாசகனின் அகநிலையில் இருந்து


7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

கதையின் தேவைக்கேற்ப எத்துணை பக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். பக்கங்களை மறந்து படிக்க ஆர்வத்தை தூண்டும் ஆற்றல் உள்ள எழுத்திற்கு புயலிலே ஒரு தோணி,கோபல்ல கிராமம் நூல்களை உதாரணமாய் சொல்லலாம்.

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

தேர்ந்தெடுத்த நூல்களை மட்டுமே வாசிப்பதால்,எத்துணை பக்கம் கொண்ட நாவலாய் இருந்தாலும் மலைப்பாய் உணர்ததில்லை.

9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

நிச்சயமாக இல்லை.

10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
பெரும்பாலும் இரவு

11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?

எதுவும் இல்லை

12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

சுஜாதாவின் " பிரிவோம் சிந்திப்போம்" ,பாலகுமாரனின் "மெர்குரி பூக்கள்"

13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
தி.ஜாவின் "மரபசு" , புதுமைப்பித்தனின் மொத்த சிறுகதைகளின் தொகுப்பு.

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

வண்ணநிலவனின் "கடல்புரத்தில்"
சுந்தரராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை"
எஸ்.ராவின் "உறுபசி"
கி.ராவின் "கோபல்ல கிராமம்"
தி.ஜாவின் "மோகமுள்"
வண்ணநிலவனின் " ரைநீஸ் ஐயர் தெரு"
ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்'
சாருவின் "சீரோ டிகிரீ"
கோபிகிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்"
ப.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி"


பட்டியல் பெரியது,மிக பிடித்தவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

அனிதா தேசாயின் "கடல்புறத்து கிராமம்"
யு.ஆர்.அனந்த மூர்த்தியின் " சம்ஸ்கார"
தகழியின் "செம்மீன்"
தகழியின் " தோட்டியின் மகன்"
வைக்கம் முகமது பஷீரின் "பாத்திமாவின் ஆடு"
பாறபுரத்துவின் "அப்பாவின் காதலி"
யு.ஆர்.அனந்த மூர்த்தியின் "அவஸ்தை"


16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?

புதுமை பித்தனின் "பலிபீடம்" ,எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் "கடலும் கிழவனும்" தவிர்த்து வாசித்த ஆங்கில நூல்கள் சுவாரஸ்யம் அற்றவை.

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

கி.ராவின் "பிஞ்சுகள்","கோபல்ல கிராமம்"

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

பெரும்பாலும் தலைப்பு எவ்விதத்தில் நாவலோடு ஒத்து போகின்றது என யோசிப்பதுண்டு. "சாயா வனம்" "ரப்பர்" நாவல்களின் தலைப்பு மறைமுக அர்த்தம் போதிப்பவை.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

லட்சிய மனிதர்களாக் கொண்டதில்லை.பிடித்த கதாபாத்திரங்கள் உண்டு.
மோகமுள் "யமுனா"
பிஞ்சுகள் நாவலில் வரும் "வேதி நாயக்கர்"
புயலிலே ஒரு தோணியின் "மாணிக்கம்"
ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் நாவலின் "துரைகண்ணு"


20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?


மிதமிஞ்சிய எதார்த்தம்,துணிந்து தன் எதிர்ப்பை வெளிபடுத்தும் பாங்கு பிற மொழி நாவல்களில் மிகுந்துள்ளது.பிற மொழி என இங்கே குறிப்பிடுவது கன்னட மற்றும் மலையாள நாவல்கள்.பிராமண சட்ட திட்டங்களை தொடர்ந்து தன் நாவல்கள் (கடஸ்ரேதா,சம்ஸ்கார) மூலம் எதிர்த்து வரும் அனந்தமூர்த்தியின் துணிவு பாராட்டுதலுக்கு உரியது..


21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?


"கோபல்ல கிராமம்" ,"கடல் புறத்தில்
"


22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?

ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்"
கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்"


23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

அ.எழுத்து மொழி
ஆ.பேச்சு வழக்கு
இ.வட்டார வழக்கு

வட்டார பேச்சு வழக்கு


24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?

குறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் இல்லை.

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

கி.ரா வின் கோபல்ல கிராமம்,எஸ்.ரா வின் "இலைகளை வியக்கும் மரம்" - பயண கட்டுரை தொகுப்பு

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?

நாவலின் தன்மையை பொருத்தது.பெரும்பாலும் விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பேன்.எதுவாயினும் ஒரு வாரத்திற்குள் முடித்து விடுவேன்.

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

கி.ராஜநாராயணன்,சுந்தர ராமசாமி

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?

இதுவரை அத்தகைய வாசிப்பு அனுபவம் இல்லை.


29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.

ஜெயகாந்தனின் "ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்"
சு.ரா வின் "ஒரு புளியமரத்தின் கதை"
வண்ணநிலவனின் "கடல் புறத்தில்" "ரைநீஸ் ஐயர் தெரு"


30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

ஜி.நாகராஜனின் "நாளை மற்றும் ஒரு நாளே"

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?

இல்லை.

33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?

--------------------------

அப்பா தவிர்த்து இலக்கியம் குறித்து நான் அதிகமாய் உரையாடியது இருவரிடம் மட்டுமே அய்யனார் மற்றும் வனிதா.

தமிழ் வலையுலகம் அறிமுகம் ஆனதிற்கு முன்பே வனிதாவின் நட்பு கிடைத்தது.
சென்ற ஆண்டு புத்தக கண்காட்சிக்கு சேர்த்து சென்ற பொழுது வழி நெடுக இலக்கியம் பேசி சென்றது மறக்க முடியாத அனுபவம்.

வாசிப்பு மீதான எனது ஆர்வத்தை வேறு தளத்திற்கு இட்டு சென்றது அய்யனார் பரிந்துரைத்த தமிழ் நாவல்கள்.அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்" மற்றும் ஆதவன்,நகுலன்,கி.நாகராஜன்,ப,சிங்காரம் நாவல்கள்.விளிம்பு நிலை வாழ்கை குறித்த பதிவுகளை அறிமுகம் செய்ததில் அவருக்கு மிக்க பங்குண்டு.

இத்தொடர் ஓட்டத்தில் இவர்களின் பங்களிப்பு மேலும் புதிய நூல் அனுபவங்களை தரும் என்பதில் ஐயமில்லை.


Tuesday, October 7, 2008

ச.கந்தசாமியின் "சாயாவனம்"

ஒரு பெரு வனம் அழிக்கபடுவதை முழு நாவலாக இத்துணை சுவாரசியமாக சொல்ல முடியுமா என ஆச்சர்யமாக உள்ளது.நாகரிக வளர்ச்சியின் காரணமாய் நாம் இழந்த இயற்கையின் செல்வங்கள் பல..வனங்களும் அதில் ஒன்று.மனிதனின் தேவைகளும்,விருப்பங்களும் பெருக பெருக ஏதேனும் ஒரு வகையில் இயற்கை அதற்கு பலியாகிறது.கரும்பாலை நிறுவும் பொருட்டு பெரும் வனம் ஒன்றினை அழிக்க நாயகன் எடுக்கும் முயற்சிகளும்,அவன் பெரும் அனுபவங்களும்,அதில் அவன் காணும் வெற்றியுமே(?) இக்கதை.

இலங்கையில் இருந்து தன் சொந்த ஊரான சாயவனதிற்கு திரும்பும் சிதம்பரம்,கரும்பு ஆலை நிறுவ விரும்பி வனம் ஒன்றினை விலைக்கு வாங்குகிறான். விவசாயத்தை நம்பி பிழைக்கும் அவ்வூரில் யாரும் வனத்தை அழிக்க கூலிக்கு வராததால்,தானே சிறுவர்கள் இருவரை துணை கொண்டு செடிகளை அகற்றி,மரங்களை வெட்டி திட்டம் வகுத்து துரிதமாய் வேலையில் இறங்குகிறான்.கொஞ்சம் கொஞ்சமாய் வனம் அழிந்து வரும் நிலையில் வாசிக்கும் நமக்கு ஒரு கசப்பான மன உணர்வை தருவதாய் உள்ளது.அதிலும் பறவைகளும்,அணில்,முயல்,காளை மாடு ஆகிய விலங்குகளும் வனத்தை அழிக்க வைத்த தீயில் இரையாவது வலி அதிகரிக்க செய்யும் வர்ணனை.
கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலில் சிறு காட்டினை தீ வைத்து அளித்து சம வெளியாக்கி,பின் அதில் குடியேறி விவசாயம் செய்த வேதி நாயக்கரின் மூதாதையர் பற்றிய குறிப்புகள் இந்நாவல் படிக்கும் பொழுது வந்து போனது.ஒரு சமூகம் செழிக்க மேற்கொள்ளப்பட்ட அந்த அழிப்பு நியாமாக தோன்றியது.சிதம்பரம் தன் விருப்பம் நிறைவேற வனத்தினை அழிக்கும் செயல் முரணாக தோன்றினாலும்,
அதில் அவன் கொண்டிருக்கும் உறுதி,சிறு சிறு தோல்விகளில் பெறும் பாடத்தை கொண்டு வரும் நாட்களுக்கான வியுகம் அமைப்பது,எப்பொழுதும் எதிர்மறை கருத்து கூறி அவனை திசை திருப்ப முயலும் ஊரார்களை சிறு புன்னகை யோடு எதிர்கொள்ளும் பாங்கு என சிதம்பரத்தின் பாத்திர படைப்பு வெகு நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

கதை தொடங்கி வெகு நேரம் வரை அது நடக்கும் காலத்திற்கான குறிப்பு இல்லை,நிகழ கால கதை எனவே கருதும் வண்ணம் செல்லும் கதையோட்டம் சுதந்திரத்திற்கு முன்பு நிகழ்வதாய் உள்ளது.நிலவின் ஒளியில் அழிந்து வரும் வனத்தை ரசிக்கும் சிதம்பரத்தின் மனவோட்டம்,சாயாவன மக்களின் ஜாதி பேதம் தாண்டிய நட்பு,திருமண சடங்குகள்,புதிதாய் தொழில் தொடங்க வந்திருக்கும் இளைஞனிற்கு அவர்கள் தரும் உற்சாகம்,முரண் பட்ட சிந்தனையால் ஏற்படும் மன பிறழ்வுகளை எளிதில் மாற்றி கொள்ளும் முதிர்ச்சி,சற்றும் மனம் தளராது எடுத்த காரியத்தில் உறுதி கொண்டு உழைக்கும் சிதம்பரம் என நாவல் முழுவதும் நாம் சாயாவன மனிதர்களிடம் கற்று கொள்ள ஏராளமானது உள்ளது.யாவருக்கும் பயன்பட்ட எக்காலமும் காய்த்து குலுங்கிய வனத்தின் புளியமரங்களை அழித்தது குறித்து சிதம்பரத்திடம் கிழவி ஒருத்தி இடிந்து கூறும் இடத்தில் அவன் கொள்ளும் அமைதி,அவன் அதுவரை செய்த முயற்சிகள் அனைத்தையும் அர்த்தமற்றதாகிவிட்டதின் குறியீடாய் உள்ளது.

வெளியீடு : கவிதா பதிப்பகத்தார்
விலை : 60 ரூபாய்

Sunday, October 5, 2008

பாரதியார் கட்டுரைகள்

1970 களில் பூம்புகார் பதிபகத்தால் வெளியிடப்பட்ட பாரதியாரின் கட்டுரைகள் தொகுப்பு படிக்க கிடைத்தது.கவிதைகள் மூலமாகவே பாரதியை உணர்திருந்த எனக்கு அவரின் கருத்து தெளிவும்,சிந்தனை தெளிவும் கொண்ட கட்டுரைகள் வாசிக்க வாசிக்க சிறப்பாய் தோன்றியது.தாம் வாழ்காலத்தின் சூழ்நிலைகளையொட்டிசமயம்,சமூகம்,அரசியல்,கலைகள் குறித்து பாரதி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாய் வெளிவந்துள்ளது இந்நூல்.

தத்துவம்,உண்மை,மாதர்,கலைகள்,சமூகம் என பல்வேறு தலைப்புகளில் கீழ் தொகுக்கபட்டுள்ள கட்டுரைகளுள் மாதர் என்னும் தலைப்பின் கீழ் உள்ள பெண் விடுதலை குறித்த விழிப்புணர்வு கட்டுரைகள் இப்பதிவு எழுத காரணமாய் அமைந்தது.அதிலும் சீனத்து புரட்சி பெண்மணி "சியூ சீன்" குறித்து தன் மகளுக்கு பாரதியின் கடிதம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று.900களில் வாழ்ந்த சியூ சீன் திருமணம் ஆகி வீட்டில் பொழுதை கழித்த காலங்களில் அந்நிய படையெடுப்புகளில் பங்கு கொள்ள பெண்களுக்கு வழி இல்லாதது குறித்து " மனிதர்களாய் பிறந்து,தமது மனித சக்தியை காண்பிக்கும் பொருட்டாக கஷ்டங்களையும்,விபத்துக்களையும் எதிர்த்து உடைக்கும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே!வீட்டு காரியங்களின் அற்ப கவலைகளுக்கு இரையாகி மடியவா நாம் பூமியில் பிறந்தோம்??" என வருத்தம் கொண்டு குடும்பம் விட்டு பிரிந்து போர் கலைகளில் தேர்ந்து,நாடு தாண்டி இளைஞர்களை பயிற்றுவிக்கும் போர் பாசறை ஒன்றினை தொடங்கி வீர பெண்மணியாய் திகழ்ந்துள்ளார்.."ஏஷியாடிக் ரிவியூ" என்னும் இதழில் வெளிவந்த சியூ சீன் குறித்த கட்டுரையின் சாராம்சத்தை தன் மகள் தங்கம்மாவிற்கு கடிதமாய் எழுதியுள்ளார் பாரதி.

பாரதி என்றதும் என் நினைவிற்கு வருவது அவர் கவிதைகளோடு, தன் மனைவியோடு கம்பீரமாய் நிற்கும் எங்கள் வீட்டு பட்டகசாலையில்யுள்ள உள்ள புகைப்படம்.இனி சியூசீன் யின் வீர வரலாறும் சட்டென நினைவிற்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

நூல் வெளியீடு : பூம்புகார் பதிபகத்தார்
விலை : 10 ரூபாய்