Monday, February 14, 2011

யுவனின் "மணற்கேணி"

"யுவன் சந்திரசேகரையும் கதைசொல்லி என்றே சொல்ல வேண்டும். கதைசொல்லிகள் எப்போதுமே சொல்லும் உற்சாகத்தில் ஆழ்ந்து போகிறவர்கள். நுண்ணிய அகத்தைவிட அழகிய புறங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். செறிவை விட சரளத்தை சாதிப்பவர்கள். எத்தனை தூரம் இயல்பாக அவர்களின் எழுத்து நிகழ்கிறதோ அத்தனை தூரம் அவை சிறந்த கலைப்படைப்பாக ஆகின்றன. யுவன் சந்திரசேகரையும் அவ்வகையில் தயக்கமில்லாமல் சேர்க்கலாம்."

- ஜெமோ



யுவனின் எழுத்துக்களில் விரியும் மாய வெளியை வாசித்து உணர்ந்துவிட்டால் அதிலிருந்து மீள்வது எளிதல்ல.புனைவின் உச்சம் என நான் கருதும் குள்ள சித்தன் சரித்திரத்தில் கிடைத்தது யுவனின் முதல் அறிமுகம்.ஒளி விலகல்,ஏற்கனவே,பகடையாட்டம் என தொடர்ந்து வாசித்த யுவனின் படைப்புகள் தந்து சென்ற அனுபவத்தை வார்த்தைகளில் சொல்ல தெரியவில்லை...ம்ம்....மாயவெளிப் பயணம் என கொள்ளலாம்.மணற்கேணி இவற்றிற்கு மாறான தொகுப்பு.கதையா, கட்டுரையா,சுயசரிதையா என்ற கேள்விகளுக்குள் அடங்காது எல்லாமுமாய் உள்ளது.

"ஒரு மாபெரும் மரத்தையும் அதன் அடித்திண்டாக அமைந்த சிமென்ட்டுத் திண்ணையையும் ,நன்கு விளைந்த ஐந்து மனித உருவங்களையும் ஒரு சின்னஞ்சிறு நெஞ்சுக்குள் சுமப்பது எளிதா என்ன?இவற்றின் மொத்த எடையை விட,ஒரே ஒரு கோணல் வகிட்டின் எடை இன்னும் அதிகம்.."

வாசிக்கும் புத்தகத்தில் பிடித்த வரிகளை கோடிட்டு வைப்பது வழக்கம்.மாறாய் இத்தொகுப்பில் பிடித்த வரிகள் வரும் பக்கத்தின் நுனியை மடித்து வைத்து கொண்டே வந்ததில்...அனேகமாய் எல்லா பக்கங்களும் மடிப்பில் இருந்து தப்பவில்லை என வாசித்து முடித்ததும் அறிந்தேன். வாழ்வனுபவங்களை சுவாரஸ்யம் கூட்டி,எளிமையான வார்த்தைகள் கொண்டு விவரிக்கும் 100 குறுங்கதைகளின் தொகுப்பு மணற்கேணி.

"மனநிலை பிறழ்வு என்றெல்லாம் எதுவும் கிடையாது.மரபணு வழியாகவும்,சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் ஒவ்வொரு தனிமனமும் ஒரு ஸ்திதிக்கு வந்து சேர்க்கிறது.அதை சரி என்றும் தவறு என்றும் நிர்ணயிப்பதற்கு பிறருக்கு அதிகாரம் கிடையாது.உடல் ஊனமுற்றவர்களுடன் சகஜமாக கோ-எக்சிஸ்ட் பண்ண கற்று கொண்டுவிட்ட சமூகத்துக்கு மாற்று மனநிலையாளர்களுடன் வசிப்பது எப்படி என்று இன்னும் தெரியவில்லை............."

யுவனின் பிரதியாய் கிருஷ்ணன் என்னும் கதாபாத்திரத்தின் வழியே,கடந்து வந்த மனிதர்களை குறித்த கூர்மையான அவதானிப்பை முன்வைத்து சொல்லப்படும் கதைகள்.சொல் வித்தைகள் எதுவும் இன்றி எளிமையான சம்பவங்களின் மூலம் அம்மனிதர்களின் ஊடே நாமும் நடமாட முடிகின்றது. இஸ்மாயில், ரவி, அனுராதா, விசாலாட்சி,தபால்காரர் சுப்பிரமணியம்,தாயம்மா பாட்டி, வேங்கோபராவ், பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸில் சந்திக்க நேரிடும் போலீஸ்காரர், எதிரியாகி போன ஜப்பானிய நண்பன் ஒருவன்,மலாவி தேசத்து மாணவன்,பெயர் குறிப்பிடப்படாத காதலி என உயிர் பெற்று உலவும் மனிதர்கள் அநேகம்.

குறிப்பாய் வங்காள விவசாய கிராமத்தில், இரவொன்றில் சந்திக்க நேரிடும் அக்கிழவர் ..வார்த்தைகள் அற்று அவரோடு நிகழ்ந்த உரையாடல் என நீளும் அக்கதை யுவன் பாணியிலான புனைவாக இருக்க கூடும் முடிவு செய்து கொண்டேன்.இத்தொகுப்பில் வரும் கீழ் உள்ள வரிகள் என் போன்றவர்களுக்கு தான் போல....

"கடந்த சில வருடங்களில் எனக்கென்று உருவாகி இருக்கும் வாசகர்களில் பலரும்,நான் சொல்லும் நிஜமான செய்திகளில் கூட புனைவின் நெடியை நுகரும் வல்லமை கொண்டவர்கள்"




அப்பாவை ஆதர்ச நாயகனாய் கொள்ளாதோர் யாரிங்கே? தந்தையை குறித்தான யுவனின் தொடர்ச்சியான குறிப்புகள் அளப்பரிய பிரியத்தை சொல்லுபவை.இத்தொகுப்பில் பல கதைகள் தந்தையோடு கரட்டுப்பட்டியில் கழித்த நாட்களை பற்றி பேசுபவை.நடுத்தர வாழ்வின் சிக்கல்கள் உறவுகளை முன்வைத்து தொடரும் சங்கடங்கள்... சமநிலையை பாதிக்கும் எல்லா சம்பவங்களுமே எல்லாருக்கும் பொதுவானவையே.முடிந்த வரை இவை யாவும் கழிவிரக்க மனநிலையில் இருந்து விலகி பகடி கூட்டியே முன்வைக்கப்படுகின்றன.யுவனிற்கு கைகூடும் பகடி இங்கு அரிதாய் காணக்கிடைப்பது..ஒரு கதை இவ்வாறாக தொடங்குகின்றது.

"மகாவாக்கியங்களை இன்ன சந்தர்ப்பத்தில் இன்னார் உதிர்ப்பார் என்று யூகிக்க இயலாது.முந்தைய வாக்கியத்தில் ஒரு சிறு மிரட்டல் இருக்கிறதல்லவா?ஒன்றுமில்லை,இந்த பத்தியை ஒரு கனமான வாக்கியத்துடன் தொடங்க ஆசையாய் இருந்தது.தொடங்கி விட்டேன்.அதற்கு மேல ஒன்றுமில்லை."


சோழவந்தான்,கரட்டுப்பட்டி தொடங்கி.. தல்லாகுளம், கோரிப்பாளையம்,சிம்மக்கல்,ஜெய்கிந்தபுரம்,குரு தியேட்டர்,காலேஜ் ஹவுஸ் என மதுரை நகரின் ஊடே பயணித்து சென்னையில் முடிவற்று தொடர்ந்து கொண்டிருக்கும் பயணம்... முன்னும் பின்னுமாய் கலைத்து போடப்பட்டுள்ள சம்பவங்கள்..முரணான குணாதிசியங்கள் கொண்ட மனிதர்கள்... கொண்ட இத்தொகுப்பு கலைவையான மனநிலையை தந்தது. கால ஓட்டத்தில்,முற்றிலுமாய் தொடர்பு துண்டிக்கப்பட்ட சில முகங்களை மீண்டும் நினைவிற்கு கொண்டு வர முயற்சி செய்ய தூண்டுவதே இத்தொகுப்பின் வெற்றி.

வெளியீடு - உயிர்மை

Wednesday, February 2, 2011

Yesterday (2004 ) - THE MOTHER


நாயகியின் பெயரே yesterday.தந்தை தனக்கு yesterday என பெயரிட்டதை குறித்தான அவளின் சிறு விளக்கம், தன் மகளுக்கு அவள் Beauty என பெயரிட்டுள்ளதை நியாயபடுத்த போதுமானது.தூரத்து நகரமொன்றில் வேலை செய்யும் கணவனின் வரவை எதிர் நோக்கி,ஏழு வயது மகளுடன் அமைதியாய் கழியும் நாட்கள் அவளுக்கானவை.தாயும் மகளும் பேசிக்கொள்ளும் காட்சிகள் கொள்ளை அழகு.."நமக்கு ஏன் சிறகுகள் இல்லை...பறவையை போல..வேகமாய் உயரமாய் சென்றிட..","ஓடை நீரானது நிலத்தில் இருந்து மலைக்கு செல்லாதது ஏன்.......?" என சிறுபிள்ளையின் வியப்பும்,கேள்விகளும் நிறைந்த உலகினுக்குள் மலர்ந்த சிரிப்புடன் இவளும் பயணிக்கும் தருணங்கள்...உன்னதம்.

அழகும்,அமைதியும் நிறைந்த கிராமம்,அவ்வூரின் பள்ளிக்கு புதிதாய் வரும் ஆசிரியை..தாய் மற்றும் மகளின் பேரன்பிற்குரிய தோழியாய் மாறிப்போவது,குழாய் அடியில் சந்திக்கும் பெண்களின் வம்பு பேச்சுக்கள்,Yesterday க்கு நிகழும் எதிர்பாரா நிலையை அக்கிராமத்தினர் எடுத்துக்கொள்ளும் விதம்,கிராமங்களுக்கு அரசாங்கம் மறுத்தலிக்கும் மோசமான மருத்துவ வசதிகள் என யாவும் வெகு இயல்பாக படமாக்கப்பட்டுள்ளன.

ஏதோ ஒரு நோயின் அறிகுறிகளை கொண்டு,Yesterday அவதிப்படுவது சலனமில்லாமல் முதல் காட்சியில் இருந்தே தெரிவிக்கப்படுகின்றது.மெல்ல மெல்ல வீரியத்தை உணரும் பொழுது..நிலை குலைந்து போகாமல், எதிர்காலம் குறித்து திடமான முடிவு செய்யும் பக்குவபட்ட பெண்ணாக Yesterday இருக்கிறாள்."Your body is strong enough to resist the virus" என கூறும் மருத்துவரிடம்.."No,my mind is strong" என்கிறாள்.

எய்ட்ஸ் நோயின்மோசமான விளைவுகளை இத்தனை மென்மையாக சொல்ல இயலுமா என்றிருந்தது. கணவனின் போக்கால் அழகான குடும்பம் சிதைந்து போவதாக காட்டி இருந்தால் இத்திரைப்படம் முழு மதிப்பை பெற்றிருக்காது.மாறாக நோயாளிக்கு தேவையான மன உறுதியை yesterdayயின் மூலம் அழுத்தமாகவே பதிவு செய்கின்றது ஆர்ப்பாட்டம் இல்லாத காட்சிகளின் வழியே.

நோயால் பீடிக்கப்பட்டு ஊர் திரும்பும் கணவனை கவனித்து கொள்ள அவள் எடுத்து கொள்ளும் பிரயத்தனங்கள் கடுமையானவை.முகம் சுளிக்கும் கிராமத்தினரிடம் இருந்து அவனை பாதுகாத்து,கிராமத்திற்கு வெளியே தனியொரு வீட்டை உருவாக்கி கவனித்து கொள்ளும் yesterday ராட்சச பலம் பொருந்திய பெண்ணாக தோற்றம் கொள்வதில் வியப்பில்லை.

கொண்ட உறுதியுடன் மகளை முதல் நாள் பள்ளியில் சேர்க்கும் வரை நோயின் தீவிரத்தை நெருங்க விடாமல் மனவலிமை மிக்க பெண்ணாக Yesterday.வெள்ளந்தி சிரிப்பும் ,உணர்ச்சிபூர்வமான நடிப்புமாய் Yesterdayவாக வரும் லிலிடீயின் நடிப்பு அபாரம்.அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக புகுத்தப்பட்ட காட்சிகளோ..பிரச்சார நெடியோ சிறிதும் இல்லாத கதையமைப்பு.படிப்பறிவில்லாத,மனவலிமை பொருந்திய ஒரு தாயின் உணர்வு பூர்வமான பயணம்.எளிதில் மனதைவிட்டு அகல கூடியவள் அல்ல Yesterday .