- இயக்குநர் லூயிஸ் புனுவல்
மிகை எதார்த்தவாதியாக தன்னை முன்னிறுத்தும் ஸ்பெயின் நாட்டு இயக்குநர் லூயிஸ் புனுவலின் சுயசரிதை "இறுதி சுவாசம்" வாசிக்க கிடைத்தது.முதன் முதலில் பார்த்த புனுவலின் Belle de jour ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது.எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் தெளிவான மணவாழ்க்கை கொண்ட பெண் திடீரென விபச்சார விடுதியின் காரியங்களில் ஈடுபட துணிவதும்,தொடர்ச்சியாய் அவளை துரத்தும் வினோத கனவுகளுமென அத்திரைப்படம் அதுவரை கண்டிராத திரை அனுபவமாக இருந்தது.அதன் தொடர்ச்சியாய் புனுவலின் திரைப்படங்களை தேடிப் பார்க்க துவங்கினேன்.படைப்பாளியின் சுதந்திரம் என்பது எல்லைகளற்று நீண்டு கொண்டே இருப்பதென்பதை மெய்ப்பிக்கும் படியான திரைப்படங்கள் புனுவலுடையவை.
ஒரே கதாபாத்திரத்தை இரு வேறு நாயகிகள் செய்வது,ஒரு காட்சியின் முடிவில் அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத மற்றொரு கதை துவங்குவது,கண்ணுக்கு புலப்படாத மந்திர கோட்டினால் பீடிக்கப்பட்டு ஒரு அறையில் மாட்டிக் கொள்ளும் மனிதர்கள் என புனுவல் தேர்ந்தெடுக்கும் காட்சிப் பின்னணிகள் ஆச்சர்யம் கொள்ள வைப்பவை.
மத நம்பிக்கைகள் மீதும்,அதிகாரவர்க்கத்தின் மீதும் தனது கறாரான விமர்சனத்தை தெளிவாக முன்வைக்கும் புனுவல் அதன் காரணமாக தொடர்ச்சியாய் சந்தித்த எதிர் விமர்சனங்களும்/மிரட்டல்களும் குறித்து இப்புத்தகத்தில் தனக்கே உரிய பகடியோடு விவரித்துள்ளார்.Un Chien Andalou,Viridiana,Los Olvidados முதலான படங்கள் கடும் எதிர்ப்பை சந்தித்தவை.Virdianaவில் இடம் பெரும் "Last Supper"யை பகடி செய்யும் ஒரு காட்சி பிரசித்தி பெற்றது.தேவகுமாரன் மீண்டும் பூமியில் ஜனித்தால், அவனது பரிசுத்தம் அர்த்தமற்று போகும்படியாகவே உலகம் பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதை உரத்துச் சொல்லுவதாக இருக்கும் அவரது Nazarin.கடவுளின் இருப்பையும்,மிஷினரிகளின் சேவைகளையும் தொடர்ந்து விமர்சிக்கும் லூயிஸ்,இரக்கமற்ற இவ்வுலகிற்கு புனிதர்கள் தேவையில்லை என்கிறார்.
ஸ்பெயின்-மெக்சிகோ-பாரிஸ் என தொழில் நிமித்தமாய் பயணப்பட்ட அவரது நினைவுப் பாதை முழுக்க நிறைந்திருப்பது நண்பர்களே. சார்லி சாப்ளின்,பிக்காஸோ உடனான புனுவலின் அனுபவ பகிரல்கள் வாசகனுக்கு நிச்சயம் சுவாரஸ்யம் கூட்டுவது.புனுவலின் கதைகளில் கனவுகளுக்கு முக்கிய இடமுண்டு.அவை அசாதாரணமானவை.ஒரு நாளில் 2 மணி நேரம் தவிர்த்து மீதமுள்ள 22 மணிநேரமும் கனவுகளில் லயித்திருப்பதையே விரும்புவேன் என்கிறார் புனுவல்.திரையில் அவர் இடம்பெறச் செய்த காட்சிகள் மிகக் குறைவே என எண்ணும்படியாக தன் வினோத கனவுகளை குறித்து மட்டுமே நான்கு பக்கங்களுக்கு மேலாக விவரிக்கிறார்.
குடும்பம்,மனைவி,காதலிகள் குறித்து அதிகம் பகிரவில்லை மாறாக விதவிதமான மது வகைகள் குறித்து பக்கம்பக்கமாக விவரிக்கிறார். புனுவலின் படங்களின் விருந்துண்ணும் காட்சிகள் பிரதான இடம் பிடித்திருப்பதற்கு காரணம் புலப்படுகிறது.இயக்குநராய் கால் பாதிக்கும் முன்னர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எதிர் கொண்ட சிரமங்களை குறித்தும்,மனதிற்கு ஒப்பாத ஹாலிவுட் படங்களில் பணியாற்றியது குறித்தும் புனுவல் சொல்பவை இத்தொழிலின் மீது அவர் கொண்டிருந்த தீரா காதலை பறைசாற்றுவது.உலக யுத்தம் உச்சத்தில் இருந்த சமயம் கொண்டிருந்த அரசியல் கொள்கைகள் காரணமாக எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள்,மறைந்து திரிந்த நாட்கள் என உலக யுத்தத்தின் நாட்களையும் பதிவு செய்துள்ளார்.வரலாறுகளால் நிரம்பிய கடந்த காலம் புனுவலுடையது.
தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகப் பிடித்ததென்ன "Phantom Of Liberty"யை குறிப்பிடுகின்றார்.வாழ்வில் நிகழ்ந்த மறக்கவியலா சம்பவங்களை பிற்காலத்தில் தமது படத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இடம்பெறச் செய்ததாக குறிப்பிடுகின்றார்.ஒளிப்பதிவு அழகியலின் அதிக நாட்டமில்லை அது கதையின் போக்கிலிருந்து பார்வையாளனை நகர்த்தி விடும் எனக் கூறும் புனுவல், தனக்கு பிரியமான இயக்குநர்கள் என பெடரிக்கோ பெலினி,பிரிட்ஸ் லேங்,ஹிட்ச்காக்,விட்டோரியோ டிசிகா,பெர்க்மான் முதலானோரை குறிப்பிடுகின்றார்.
மத நம்பிக்கைகள் மீதும்,அதிகாரவர்க்கத்தின் மீதும் தனது கறாரான விமர்சனத்தை முன்வைத்த புனுவலின் சுயசரிதை அவரை குறித்து மேலும் புரிந்து கொள்ள உதவுகிறது. திரைப்படங்களின் வழி நாம் அறிந்திருந்த புனுவலுக்கும் சுயசரிதையில் காணும் புனுவலுக்கும் அதிக வித்தியாசமில்லை.தன் கருத்துக்களில் பிடிவாதமும் படைப்புகளில் சமரசமும் செய்து கொள்ளாத மாபெரும் மனிதனின் நாட்குறிப்புகள் இவை.
Te amo Luis Bunuel!
புத்தகம்: இறுதி சுவாசம்
ஆசிரியர்: லூயிஸ் புனுவல்
தமிழில் சா.தேவதாஸ்
வெளியீடு: வம்சி