Showing posts with label தொடர் ஆட்டம். Show all posts
Showing posts with label தொடர் ஆட்டம். Show all posts

Wednesday, May 19, 2010

பதின் வயது நினைவுகள்...

பதின் வயது நினைவுகளை மீட்டெடுக்கும் இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தோழர் ஜெயமார்த்தாண்டனுக்கு நன்றி.

பதின் வயது என்றெண்ணும் பொழுது....... அம்மாச்சி வீட்டில் கழித்த விடுமுறை நாட்கள்,பள்ளி நட்புகள்,சந்திரகாந்தா /மோக்லியுடனான ஞாயிறு காலைகள்,பல்லாங்குழி/ஆட்டம்,கல்லா-மண்ணா/தாயம்/கொக்கோ,அம்புலிமாமா-ராணி மிக்ஸ்,ஒலியும் ஒளியும்,பள்ளிக்கு தினமும் சென்று வந்த ரிக்சா பயணம்,பங்கு கொண்ட பேச்சு - கட்டுரை போட்டிகள்,பரிட்சைக்கு பயந்து தூங்காது கழித்த இரவுகள்,பிரியத்திற்குரிய ஆசிரியைகள்,ஏக்கமாய் இருந்த ரயில்பயணம்,கடலை காணும் பேராவல்,கிராமத்தில் கமலை கிணற்று குளியல்கள்,பட்டாசலை வாசலில் அமர்ந்து தாத்தாவிடம் பழங்கதைகள் பேசிய பொழுதுகள் என கலவையாக பலவும் நினைவிற்கு வந்து போகின்றன...மீண்டும் மீண்டும் பேசினாலும்/நினைத்தாலும் தீராத நாட்கள் அவை!!

படித்த பள்ளி..அம்மையும்,அம்மாச்சியும் படித்ததும் அங்கே தான்..முதல் நாளில் அதன் பிரம்மாண்ட தோற்றம் தந்த ஆச்சர்யம் விலக பல நாட்கள் பிடித்தது.ஆங்கிலேய காலத்து கட்டிடங்கள்,ஓங்கி வளர்ந்த மரங்கள்,பரந்த மைதானங்கள்,கிறிஸ்துமஸ் கால கொண்டாட்டங்கள்,சேல்ஸ் டே என வீட்டு பாடம்,கண்டிப்பான ஆசிரியைகள் தாண்டி பள்ளி நாட்கள் பிடித்து போக அனேக காரணங்கள் இருந்தன.பள்ளி தந்த நட்புகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன....மழை ஓய்ந்த ஒரு மாலையில் கூடை பந்து மைதானத்தில் சைக்கிளில் வட்டமடித்தபடி பிரிவை குறித்து பேசிகொண்டிருந்தேன் தோழிகள் இருவரோடு ....ஆச்சர்யமாய் இப்போது மூவருமே ஒரே பணியிடத்தில்.இப்பொழுதும் மழை நாட்களில் என் பள்ளியை நினைத்து கொள்வேன்,சில இடங்களை மழையோடு பொருத்தி பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை!!

மனோகரன் அண்ணா,தல்லாகுள வீதிகளில் எங்கே இடர்பட்டாலும் பெரிதாய் புன்னகைப்பார்..சட்டென,ரிக்சா 8:௦௦ மணிக்கு என பரபரத்த காலை பொழுதுகள் நினைவிற்கு வந்து மறையும்.ஒவ்வொரு வருடமும் நோட்டு/புத்தகங்களுக்கு அட்டை போட்டு லேபிளில் எழுதும் பொழுது, அப்பா "ம்ம்ம்..சார் பெரிய கிளாஸ் போறிங்களா" என சொல்லி கொண்டே தன் அழகிய கையெழுத்தில் பெயர்,வகுப்பு எழுதி தந்தது நேற்றைய நிகழ்வு போல உள்ளது...





விடுமுறை நாட்களை கழிக்க எப்போதும் எனக்கு இரண்டு சாய்ஸ் உண்டு.அம்மாச்சி வீடு அல்லது அப்பாவின் கிராமம்...அம்மாச்சி.பெரியம்மாக்கள் எல்லாரும் ஆசிரியர்கள் என்பதாலோ ஒரு வித மிலிட்டரி தனமான ஒழுங்கு முறை விடுமுறை நாட்களிலும்...நேரத்திற்கு சாப்பாடு,குளியல்,நிழலில் மட்டுமே விளையாட வேண்டும் என்று..இதற்கு தலைகீழாய் எங்கள் கிராமத்தில் தாத்தா பாட்டி உடன் கழித்த பொழுதுகள்,பேருந்து வசதியற்ற அன்றைய நாட்களில் பக்கத்துக்கு கிராமத்தில் இருந்து நடந்தே எங்கள் ஊருக்கு செல்வோம்..வீட்டை சென்றடைய எந்நேரம் ஆனாலும் பாட்டியை தேடி வயற்காட்டிற்கு ஓடி விடுவேன்..வாழை தோட்டத்திலோ,கடலை காட்டிலோ,தென்னந்தோப்பிலோ.....தேடி சென்று கட்டிக்கொள்வதில் ஒரு அலாதி பிரியம்!!

அங்கு தங்குதடைகள் எதுவும் இல்லை..புழுதி காட்டில் ஆடி திரியலாம்..பம்ப் செட்டில் குளித்து மகிழலாம்..மாலையானால் மந்தையில் பிள்ளைகளோடு விளையாடலாம்..... வளையல் வியாபாரிகள்,குச்சிஐஸ் வண்டிக்காரர்,பருத்திப்பால் வியாபாரிகள் என சில்லறை செலவு செய்ய காரணமானவர்கள் நிறைய..!!மாலை நேரங்களில் ஆட்கள் நிரம்பி சலசலவென இருக்கும் பட்டாசலையில்,அமைதியான பகல் பொழுதுகளில் அமர்ந்து தெருவை..அரிதாய் வரும் இரண்டொரு வியாபாரிகளை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் கூட அன்றைய பொழுதுகளில் சுவாரஸ்யமே!!

தொலைகாட்சியின் ஆதிக்கம் இப்போது போல 90களில் இல்லாத காரணத்தினால் இயல்பாய் கவனம் வாசிப்பின் பக்கம் சென்றதில் வியப்பில்லை.சிறுவர்மலர்,அம்புலி மாமா,ராணி காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி,சிந்துபாத் கதைகள்,அரேபியன் நைட்ஸ்,ஈசாப் நீதி கதைகள்,தெனாலி ராமன்,பீர்பால் என விடுமுறை நேர பகல் பொழுதுகள் கற்பனைகள் நிறைந்ததாகவே கழிந்தன.வெள்ளி இரவு ஒலியும் ஒளியும்,ஞாயிறு காலை மோக்லி,சந்திரகாந்தா ..மற்றும் இரவு தந்தூரி நைட்ஸ்,ஓஷின்(வெகுவாய் ரசித்த தொடர் இது..),ஸ்ட்ரீட் ஹாக் என குழப்பிக்கொள்ள அதிகம் இல்லாது தொலைகாட்சியோடு கழிந்த பொழுதுகள்..தீவிர வாசிப்பும்,ராஜாவின் இசை மீதான கிறுக்கும் தொற்றிகொண்டது பதின்மங்களில் இறுதியில்.

பதின்மன் காலம் குறித்து யோசிக்க யோசிக்க மீண்டும் அதனுள் புகுந்து விடமுடியாதா என ஏக்கமே மிஞ்சுகின்றது..சுழட்டி அடிக்கும் எந்திர வாழ்க்கைக்குள் புகுந்தாகி விட்டது. இப்பெருநகர சிடுக்கில் தொடர்ந்து இயங்க நினைவுகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன.அவ்வகையில் கீழ் உள்ள வண்ணதாசனின் வரிகள் அர்த்தம் மிகுந்ததாய் படுகின்றன.

"இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது"

-- வண்ணதாசன்


பதின்மன் கால நினைவுகளை தொடர நர்சிம்மை அழைக்கின்றேன்

Monday, September 14, 2009

புனைவுகளே வரலாறாய் ஆனது அல்லது வரலாறு புனைவுகளால் ஆனது

பதிவுலகம் குறித்த இந்த தொடர் பதிவிற்கு அழைத்த அய்யனாருக்கு நன்றி..

இலக்கியம்...இங்கே தொடர்ந்து இயங்கி கொண்டிருக்க எனக்கான ஒரே காரணம்.பள்ளி,கல்லூரி காலங்களில் வாசித்ததை பகிர்ந்து கொள்ள ஆள் இருக்காது..சினிமா காரியங்கள் தவிர்த்து சக தோழர்கள் ஆர்வமாய் பேசிக்கொள்ளும் விஷயங்கள் மிகக்குறைவு.வாசிப்பவைகளை பகிர்ந்து கொண்டது முதலில் ஆர்குட் தளத்தில்..அங்கே உலக தமிழ் மக்கள் இயக்கம் என்னும் குழுமத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும்.இணையத்தில் தமிழ் விவாதம் நடைபெறுவதை கண்ட பொழுது கொண்ட மகிழ்ச்சியை சொல்லிமீளாது.

அக்குழும நண்பர்களே "தமிழ் இலக்கிய அரங்கம்" என ஒன்றை துவக்கி அங்கே இலக்கியம்,உலக சினிமா குறித்த விவாதங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.ஆர்குட் நண்பர் ஒருவர் தந்த அறிமுகத்திற்கு பின் பதிவுலகம் குறித்து எதுவும் அறியாமல் விளையாட்டாய் எழுத துவங்கினேன்.உலக வாசகர்களை இது சென்றடையும் என்கின்றன விவரங்கள் எல்லாம் தெரியாது ஏனோதானோவென இருக்கும் எனது ஆரம்ப கால கட்டுரைகளை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாய் உள்ளது.எனினும் அக்கட்டுரைகளை நீக்கிவிட மனமில்லை.

வாசித்த புத்தகங்களை குறித்து மட்டுமே எழுத வேண்டும் என்கிற நோக்கம் ஏதுமில்லை.என் பொழுதுகள் அதிகமாய் வாசிப்பிலேயே செல்வதால் அதை தவிர்த்து வேறேதும் எழுத தோன்றவுமில்லை.எழுத்தாளனுக்கும்,வாசகனுக்குமாய் உள்ள தொடர்பு கடிதத்தோடு முடிந்து விடுவதாய் இருந்த காலங்கள் மாறி,இணையத்தின் அறிமுகம் மூலம்..தொடர்ந்து விவாதிக்கவும்,இலக்கிய கூட்டங்களில் சந்தித்து உரையாடவும் பதிவுலகம் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.சுஜாதா,எஸ்.ரா,சாரு என விரும்பி வாசித்த எழுத்தாளர்களை எளிதில் சென்றடைய உதவியது இப்பதிவுலகம் தான்.




இங்கு ஆண்,பெண் பேதங்கள் ஏதுமில்லை,சாதி சண்டைகள் இல்லை,தொழில் முறை வேறுபாடுகள் இல்லை,தமிழ் என்னும் ஒற்றை வார்த்தையால் நண்பர்களோடு இணைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.பதிவுலகில் எழுத தொடங்கி ஓராண்டுக்கு மேலாகின்றது...கசப்பான அனுபவம் ஏதுமின்றி தெளிந்த நீரோடையாய் போய்கொண்டிருக்கின்றது.நல்லவேளை பதிவெழுத வந்தேன்.ஏதோ ஒரு நிறைவு..இல்லாவிட்டால் சென்னை வாழ்க்கை அலுவலகம் - விடுதி - வாசிப்பு என இயந்திரத்தனமாய் தான் இருந்திருக்கும்.

பதிவுலகம் தந்த நண்பர்களை குறித்து அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.அய்யனார்,நர்சிம்,ஜக்ஸ் என சந்தித்து பேசிய நண்பர்கள் தவிர்த்து,சிவராமன்,அஜய்,ராம்ஜி,கிருஷ்ணன்,கார்த்திக்,வடகரை வேலன்,செய்யது என முகம் அறியா நண்பர்கள் பலர்..ஆரோக்கியமான சூழலில் உரையாடல்கள்,விவாதங்கள், புதிய காரியங்கள் குறித்த அறிமுகங்கள் என யாவற்றிலும் நேரடி பங்களிப்பு செய்ய முடிவதால் வெகுஜன பத்திரிக்கைகளில் மீது இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது என்பது உண்மை.

பதிவுலகம் அதிசய குகை போல...எத்தைனையோ வேர்கள் விட்டு படர்ந்திருக்கும் அதனுள் ஒருமுறை புகுந்து விட்டால் வெளிவருது அவ்வளவு சுலபம் இல்லை..வெளி வரவேண்டிய ஆவசியமும் இல்லை..இனிதாய் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க காரணங்கள் பல இங்குண்டு....கனவாய் இருந்த பலவும் சாத்தியப்பட்டு கொண்டிருப்பது இங்கே தான்.

Tuesday, July 21, 2009

சுவார‌ஸிய‌ வ‌லைப்ப‌திவு விருது

வலைத்தளம் குறித்து எந்த அறிமுகமும் இன்றி இலக்கியம் பகிரும் ஒரே ஆவலில் எழுத தொடங்கியது....வேலை காரணமாய் சென்னைக்கு வந்த பிறகு ஒரே ஆறுதல் வாசிப்பு.திரும்ப திரும்ப சென்னை நகரம் எனக்கு நினைவூட்டுவது ஒன்று தான் "If u are not sure about your boundaries tats it".அதன் காரணமாய் முகம் தெரியா நட்புகளை தேடிசெல்வதில் ஆர்வம் இருந்ததில்லை.ஆனால் வலைத்தளம் மூலம் பெற்றிற்றுக்கும் முகம் அறியா நண்பர்கள் பல.வெகு ஆரோக்கியமான சூழலில் இலக்கியம் பகிர்ந்து கொள்ளபடுவதில் எண்ணற்ற மகிழ்ச்சி.

இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த "மழைக்கு ஒதுங்கியவை" செய்யது அவர்களுக்கு நன்றி.எனக்கு மிக பிடித்த,தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டும் சில வலைப்பதிவுகள்..



தனிமையின் இசை - அய்யனார்

அய்யனார் எனக்கு முதன் முதலில் இட்ட பின்னூட்டம் இவ்வாறு வரும் "சில சொல்லாடல்களை மீள் ஆளுமை செய்வது சமகால புரிதலுக்கு சரியாய் இருக்கலாம்.உதாரணம் வேசியர்: பாலியல் தொழிலாளர்கள் ..."

நான் வெகு கவனமாய் பாலியல் தொழிலாளி என்னும் சொல்லாடலை தவிர்த்திருப்பேன்.பொதுவில் சில வார்த்தைளை உபயோகிக்க கூடாது என்கின்ற கருத்து அப்பொழுது உண்டு.:-))

அய்யனார், வலையுலகில் எனக்கு கிடைத்த முதல் நண்பர்.அப்பாவிற்கு பிறகு அதிகமாய் இலக்கியம் பேசியது அய்யனாரிடம் தான். ஆதவன்,பா.சிங்காரம்,கோபி,ஆதவன் தீட்சண்யா,ஜி.நாகராஜன் என இவர் எனக்கு அறிமுகம் செய்த எழுத்தாளர்கள் அநேகம்.எழுத்தாளர்கள்,புத்தகங்கள்,உலக சினிமா கவிதைகள்,கதைகள்,கட்டுரைகள் என நிறைந்திருக்கும் இவரின் வலைத்தளத்திற்கு அறிமுகம் எதுவும் தேவை இருக்காது என்றே நினைக்கின்றேன்.

கவிதைகளை ரசிக்க தொடங்கியது "தனிமையின் இசையில்" தொடங்கி அங்கு மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கின்றது ..மிக பிடித்த இவரின் கவிதை ஒன்று இங்கே..

முதல் முத்தம்

ஒரு பின்பனிக்கால விடியலில்
பனியில் குளித்த ரோஜாவினையொத்த
உன் இதழ்களில் முத்தமிட்ட தருணமொன்றில்
சில பறவைகள் விழித்தெழுந்தன

தொலைவில் அபூர்வமாய் மலரும் மலரொன்றின் விதை
தனக்கான வெடிப்புகளின் முடிவில் துளிர்க்கலாம்
தன் முதல் துளிரை
காட்டு மர இடுக்குளில் இடப்பட்ட முட்டைகளிலொன்று
ஓடுடைத்து மெல்ல எட்டிப்பார்க்கலாம்
தனக்கான உலகத்தை
பாதைகளற்று அலைந்து திரிந்த சிற்றாறு
இத்தருணங்களில்
நதியின் விரிந்த கரங்களில் தஞ்சமடையலாம்

இன்னும் பிரபஞ்சத்தின் எத்தனையோ
முதல் நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதற்க்கான
சாத்தியக்கூறுகளுமிருக்கிறது

எப்போதும் அதிகாலையிலேயே
விழித்துவிடுகிறார்கள்
குழந்தைகள்


பிச்சைபாத்திரம் - சுரேஷ் கண்ணன்

எஸ்.ராவின் வலைத்தளத்தில் பிச்சைப்பாத்திரம் குறித்த முதல் அறிமுகம் கிடைத்தது.எனது அபிமான வலைத்தளங்களில் ஒன்று.சுஜாதாவின் "கணையாழியின் கடைசி பக்கங்கள்" குறித்த இவரின் நேர்த்தியான விமர்சனம் மிக பிடித்திருந்தது.எழுத்தாளர்கள் "தோப்பில் முகமது மிரான்" மற்றும் "எக்பர்ட் சச்சிதானந்தம்" குறித்த அறிமுகம் இவரின் பதிவுகளின் மூலமே கிடைத்தது.பகடி யாவருக்கும் எளிதாய் அமைந்து விடாது,சுரேஷின் பதிவுகளில் இருக்கும் ஒரு வித ஹாஸ்யம் ரசிக்க கூடியது.உலக சினிமா,ரசித்த புத்தகங்கள்,அரசியல்,சமூகம் என இவர் முன்வைக்கும் கருத்துக்கள் யாவும் முதிர்ச்சியானவை.

குசும்பன்

எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு என்னை குறித்த சீரியஸ் டைப் என்னும் எண்ணம் வருவது இயல்பு.நிஜத்தில் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டு எப்பொழுதும் ஜோக் அடித்து கொண்டிருக்கும் ரகம் நான்.எனவே குசும்பனின் வலைத்தளம் பிரியமானதாய் இருப்பதில் அதிசயம் கொள்ள வேண்டாம்.கொஞ்சம் அயர்வாய் தோன்றினாலும் முதலில் செல்வது இவ்வலை தளத்திற்கே..பதிவுகள் மட்டும் இன்றி இவரின் பின்னூட்டங்களும் ரசிக்க கூடியவை.

ஸ்மைல் பக்கங்கள் - லிவிங் ஸ்மைல் வித்யா

வித்யாவின் "நான் வித்யா" நாவல் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.பொதுவாய் திருநங்கைகள் குறித்து இருந்த கருத்துக்களை முற்றிலுமாய் மாற்றி போட்டது.உறவினர்களுக்கும் பரிந்துரைத்தேன்.நாவலில் இவ்வலைத்தளத்தின் இணைப்பு இருந்தது.ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.திரைத்துறையில் துணை இயக்குனராய் இருக்கும் வித்யாவின் பதிவுகள் அநேக திரைப்படங்கள் குறித்து விவாதிப்பவை.மேலும் திருநங்கைகளுக்கு ஆதரவாய் குரல் தரும் ஆதங்கம் மிகுந்த கட்டுரைகளும் அடக்கம்.அனல் தெறிக்கும் அக்கட்டுரைகள் சமூகத்தின் மீதான கோபத்தை அதிகரிக்க செய்பவை.வித்யா,கல்கி என வலைத்தளத்தில் திருநங்கைகளின் வருகை மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.

Thursday, November 20, 2008

வாசிப்பு..தனிமையின் தேடல்!!

சில விஷயங்கள் எத்தனை முறை பேசினாலும் அலுப்பு தருவதில்லை.இலக்கியம்,இசை,சினிமா இவை குறித்து ஒவ்வொரு காலகட்டத்திலும்,வெவ்வேறு பார்வைகள்,ரசனைகள்,விமர்சனங்கள்,எதிர்ப்புகள்..எது எப்படியாயினும் கால சுழற்சியில் நம்மை விட்டு நீங்காது சில காரியங்கள் தொடர்ந்து கொண்டே வருபவை..வாசிப்பும் அதில் ஒன்று.வாசிப்பு அனுபவம் குறித்த தொடர் பதிவிற்கு அழைத்த நர்சிமிற்கு நன்றி..இப்பதிவில் எனது தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தை சம்பவங்கள் கோர்வையோடு சொல்லாமல்,முடிந்த வரை படித்த நூல்களை மேற்கோள் காட்டியே எழுத முயன்றிருகின்றேன்.

எங்கள் வீட்டில் சிறிய புத்தக அலமாரி உண்டு,சிறிதும் பெரிதுமாய் நூற்றிற்கும் மேலான புத்தகங்கள் இருக்கும்.இசையும்,இலக்கியமும் ரசிக்க கற்று தந்தது அப்பா.எதை படிப்பது,படித்தால் புரிந்து கொள்ள முடியும் என புத்தகங்களை தரம் பிரித்து எனக்கு பரிந்துரைத்தும் அப்பா.இலக்கியம் குறித்தும்,ராஜாவின் இசை குறித்தும் அப்பாவோடு உரையாடும் பிரிய தருணங்கள் விருப்பதிற்குரிய ஒன்று.


முதல் வாசிப்பு என்றதும் நினைவில் வந்தது சிறுவர்மலர் - கேலி சித்திரங்கள்,நீதி கதைகள்,வினா விடை,புதிர்,தொடர் கதைகள் என குழந்தைகளுக்காகவே வடிவமைக்க பெற்ற அந்த இதழில் படித்த பல கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றது.ராணி காமிக்ஸ்/இரும்புக்கை மாயாவி/அம்புலி மாமா கதைகள் என கழித்த விடுமுறை நாட்கள் மறக்க முடியாதவை.வாசிப்பு கற்பனை திறனை வளர்க்க பெரும் உந்துதல்..ஆங்கில திரைப்படங்களை ஒத்த சாகச காட்சிகள் நிறைந்த மாயாவி கதைகள்,ஓங்கி வளர்ந்த பெண்களும்,குடுமியிட்ட புஷ்டியான ஆண்களும் சித்திரங்களாய் நிரம்பிய அம்புலி மாமாவின் நீதி கதைகள் என குழந்தை பருவத்து புத்தகங்கள் குறித்து சமீபத்தில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த பொழுது திரும்ப அப்புத்தகங்களை படிக்க ஆவல் மிகுந்தது.

>


பேரதிசியமாய் வியந்து படித்த நாவல்கள் "சிந்துபாத்" மற்றும் "அலாவுதீனும் அற்புத விளக்கும்".மாமா வீட்டு புத்தக அலமாரியில் சுஜாதா,பாலகுமாரன் நாவல்களுக்கு மத்தியில் இருந்த சிறுவர் நாவல்களான "தெனாலி ராமன் கதைகள்","அக்பர்- பீர்பால்","சிந்துபாத் சாகசங்கள்","ட்விங்கிள்" மற்றும் அப்பா பிறந்த நாளுக்கு பரிசளித்த "எறும்பும் புறாவும்" , "ஈசாப் நீதி கதைகள்" ஆகியவை இன்றும் என் புத்தக அலமாரியில் உள்ளவை.ஆரம்ப கால வாசிப்பை குறித்து இவ்வளவு விரிவாய் எழுத எழுத எனக்கே ஆச்சர்யம் உண்டாகின்றது. தொலைக்காட்சியும்,கணினியும் குழந்தைகளின் நேரத்தை ஆக்ரமித்து கொண்டுள்ள தற்பொழுதைய சூழலில் நம் காலத்தில் வாசிப்புக்கள் சாத்தியமானத்தில் வியப்பில்லை.

இலக்கியம் என தரம் பிரித்து வாசித்த முதல் நாவல் கி.ரா வின் "பிஞ்சுகள்",அகாதமி விருது பெற்ற சிறுவர்களுக்கான இந்நாவலை படிக்க சொல்லி அப்பா கொடுத்த கணம் இன்றும் நினைவில் உள்ளது.அந்நாவலில் வரும் வேதி நாயக்கர் கதாபாத்திரம் எனக்கு மிக பிடித்த கதை மாந்தர்களுள் ஒன்று.பள்ளி இறுதி ஆண்டுகளில் சாருவின் "கோணல் பக்கங்கள்" படித்த பின் அவரின் எழுத்தின் வசியம் மிகுந்த விருப்பத்திற்குரிய ஒன்றாய் ஆனது, பின் படிக்க தொடங்கியது வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவனின் எழுத்துக்கள்,எதார்த்த நடுத்தர வாழ்வை இயல்பு மாறாமல்,கவித்துவம் கலந்து கூறிய இருவரின் நடையும்,எளிமையும் இவர்களின் எல்லா படைப்புகளையும் தேடி தேடி படிக்க செய்தது.

கி.ரா வின் "கோபல்ல கிராமம்" ,எழுவது அவ்வளவு கடினம் அல்ல என உணர்த்திய நாவல்,கதை சொல்லியிடம் கதை கேட்பது போன்ற உணர்வை தந்த இந்நாவலின் பல காட்சிகளை என் கிராமத்து நிகழ்வுகளோடு சுளுவாய் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது.இன்று நடைமுறையில் இல்லாத கரிசல் பழக்க வழக்கங்கள் பலவற்றை விரிவாய் எடுத்துரைக்கும் இந்நாவல் ஒரு அறிய பொக்கிஷம்.

கல்லூரி நாட்களில் வெளிவந்த எஸ்.ராவின் விகடன் தொடர் கட்டுரைகள் என்னையும் ஈர்த்ததில் வியப்பில்லை.தனது பயண அனுபவங்களை,சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மிக நுட்பமாய் எழுத்தில் வடிக்கும் எஸ்.ரா வின் எழுத்துக்கள் அந்த நேரத்தில் பெரும் ஆறுதலாய் இருந்தது.அழிந்து வரும் நாட்டுபுற கலைகளை தனது பயண அனுபவத்தோடு விவரித்துள்ள அவரின் "இலைகளை வியக்கும் மரம்" தொகுப்பிற்கு எனது விருப்ப பட்டியலில் எப்பொழுதும் இடம் உண்டு.இவை தவிர்த்து என்னை மிகவும் ஈர்த்த நூல்கள் தகழியின் "தோட்டி மகன்",யு.ஆர்.அனந்த மூர்த்தியின் "சம்ஸ்கார",ஜெயகாந்தனின் "ஒரு வீடு,ஒரு மனிதன் ஒரு உலகம்" மற்றும் "என்னை போல் ஒருவன்",பஷீர் மற்றும் வைக்கம் முஹமது மீரானின் படைப்புகள்.

கி.ரா,தி.ஜா,வண்ணதாசன்,வண்ணநிலவன்,சாரு,சுஜாதா என சிறு வட்டத்திற்குள் பயணித்த எனது வாசிப்பு விஸ்தாரம் பெற்றது சென்னை வந்த பின்னரே.பெரும்பாலான நாவல்கள் இலக்கிய நண்பர்கள் பரிந்துரைத்ததே!அதில் முக்கிய நாவல்களாய் நான் கருதுபவை பா.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி",கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்",ஜி.நாகராஜனின் "நாளை மற்றும் ஒரு நாளே" ,ஆதவனின் "ஏன் பெயர் ராமசேஷன்",கந்தசாமியின் "சாயா வனம்" மற்றும் ஜே.பி.சாணக்யாவின் படைப்புகள்.
விளிம்பு நிலை மனிதர்கள் குறித்த ஜி.நாகராஜன் மற்றும் சாணக்யாவின் பதிவுகள் அது வரை படித்திராத எவரும் எழுத தயங்கும் உண்மை நிலையை விவரிப்பவை.

காண கிடைக்காத உலகை காண்பித்தும்,அன்றாட சந்திக்கும் மனிதர்களை வேறு சூழ்நிலைக்கு பொருத்தி உலாவவிட்டும்,இடத்திற்கு இடம் வேறுபடும் வாழ்கை சூழலை,வாழ்வின் அவலங்களை எடுத்துரைக்கும் ஒவ்வொரு வாசிப்பும் ஒரு புது அனுபவம் தந்தபடி தொடர்கின்றது.வாசிப்பு கட்டாயப்படுத்தி வருவதில்லை, இயல்பாய் சுய ஆர்வத்தின் பேரில் வருவது, எனினும் ஏதேனும் ஒரு உந்துதல் அவசியம்.வாசிக்கும் பழக்கத்தை நம்மோடு நிறுத்தி விடாது மற்றவர்களுக்கு முடிந்தவரை பரிந்துரைக்க வேண்டும்,அதிலும் முக்கியமாய் குழந்தைகளுக்கு.தமிழ் வாசிப்பு என்பது கொடிய விஷத்தை விட மோசமாக தோன்றுகிறது தற்பொழுதைய கணினி யுக குழந்தைகளுக்கு,வாசிப்பின் அவசியமும்,தேவையும் இவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.

இத்தனை நீண்டதொரு பதிவை நான் எழுவது இதுவே முதல் முறை.வாசிப்பு குறித்து எழுத இன்னும் இருக்கின்றது படித்து,ரசித்த நூல்களை நினைவில் உள்ள மட்டும் பகிர்துள்ளேன்.தொடர்ந்து வாசிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நான் அழைப்பது

மாதவராஜ்
உஷா
குப்பன்_யாஹூ
அனுஜன்யா

Wednesday, October 15, 2008

தமிழ் சினிமா இன்னுமொரு தொடர்

இரண்டு தமிழர்கள் பார்த்து பேசினால் அங்கு சினிமா குறித்த பேச்சு கட்டாயம் இருக்கும் என கூற கேட்டு இருக்கின்றேன்.அந்த அளவில் திரைபடங்கள் நம் தின சரி வாழ்கையில் ஒன்றாகிவிட்டது!!அமைதியாய் இத்தொடர் ஓட்டத்தை கவனித்து கொண்டிருந்தேன்..அய்யனாரின் அழைப்பை ஏற்று நானும் இங்கே..

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

(அதிகம் யோசிக்க வைத்த கேள்வி இது)முதலில் பார்த்த படம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை..சிறு வயதில் சனி,ஞாயிறு மத்திய பொழுதுகளில் டிடி யில் ஒளிபரப்பான இரு குறும்படங்கள் இன்றும் என் நினைவில் உண்டு.

-முதலை தன் முட்டைகளை பாதுகாப்பதை வியந்து பார்க்கும் கிராமத்து சிறுவன்,தானும் பகல் பொழுதுகளில் அதற்கு துணையாய் இருப்பதாய் வரும்.

-வெளிநாட்டு பெண்ணை மனது வரும் மகனுக்கும் படிப்பறிவில்லாத மாடு மேய்க்கும் தாய்க்குமான உறவின் பிணைப்பு சொல்லும் படம்.



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சிவாஜி - சாவித்திரி நடித்த நவராத்திரி.கேபிள் சானல் ஒன்றில் பார்த்தது.இருவரின் நடிப்பு வியப்பில் ஆழ்த்தியது,அதிலும் முக்கியமாக அந்த தெரு கூத்து நடனம்.
எஸ்.ரா வின் சமீபத்திய கட்டுரையான "இரு புகைப்படங்கள்" ளில் சாவித்திரியின் இறுதி நாட்கள் குறித்த செய்திகள் நினைவில் வந்து மனதை பிசைந்தது!!


4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மஹாநதி - ஒரு மனிதனின் ஒரு நிமிட சபலத்தால் குடும்பமே சீரழியும் கதையை
மிகுந்த எதார்த்தத்தோடு சித்தரித்த படம்.

அவள் அப்படிதான் - இப்படம் குறித்து தனியே பதிவு போடும் அளவிற்கு பாதித்தது
மஞ்சுவின் பாத்திர படைப்பு.


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
எதுவும் இல்லை

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.நிவாஸ் ஒளிப்பதிவு குறித்து அப்பா எப்பொழுதும் ஸ்லாகித்து சொல்வதுண்டு.

பாரதிராஜா - நிவாஸ்(பெரும்பாலான படங்கள்)
மஹேந்திரன் - பாலுமகேந்திரா(முள்ளும் மலரும்,உதிரி பூக்கள் )
மணிரத்தினம்-பி.சி.ஸ்ரீராம்(அக்னி நட்சத்திரம்)

நாம் தினம் காணும் காட்சிகளை தங்கள் காமெராக்கள் மூலம் கவிதையாக்கிய இவர்களின் எதார்த்த நிலை இப்பொழுது எவரிடமும் காணகிடைப்பதில்லை.அதி நவீன தொழில் நுட்பம் என்கிற பெயரில் தற்பொழுதைய திரைப்படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அபத்தத்தின் உச்சம்.

இளையராஜாவின் பின்னணி இசை (சிகப்பு ரோஜாக்கள்,மௌன ராகம் )


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

குமுதம்,விகடனில் வாசிப்பதோடு சரி.முன்பெல்லாம் ஒரு பக்கம் மட்டுமே சினிமா செய்திகளுக்கு ஒதுக்கி இருப்பர்,இப்போ நிலைமை தலைகீழ்.பெரும்பாலான பக்கங்கள் நடிகையர் பேட்டி,புகைப்படம் என நிரம்பி வழிகின்றது!!விகடனும் தன் தரத்தை இழந்து வருகின்றது.

7. தமிழ்ச்சினிமா இசை?

எப்பொழுதும் இளையராஜா.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ரசித்து பார்த்த உலக மொழி படங்கள் - Amelia,Monster,cider house rules
வேற்று மொழி படங்கள் - செம்மீன்(மலையாளம்),கடஷ்ரேத (கன்னடம்)
Mr & Mrs Iyer,Fire இன்னும் சில


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாலா,அமீர்,ராம்,சேரன்,தங்கர் பச்சன்,ராதாமோகன்,செல்வா ராகவன் என நம்பிக்கை கூட்டும் இயக்குனர்களும் சூர்யா,விக்ரம்,ஜீவா போன்ற படத்தின் தேவைகேற்ப தம்மை வருத்தி கொள்ளும் நாயகர்களும் ஒரு புறம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு செல்ல செய்யும் முயற்சிகள் மகிழ்வூட்டுவதே!! அதே சமயம் குத்து பாட்டு,தாலி சென்டிமன்ட்,3 டூயட்,நாலு பைட் பார்முலாக்களை விடாது பற்றி படம் எடுக்கும் பேரரசு வகையறாக்களை நினைத்தால் தமிழ் சினிமா எதிர்காலம் புகைமூட்டமாகவே தெரிகின்றது!!

மேம்போக்கான இக்கேள்விகளை தவிர்த்து இன்னும் சில கேள்விகள் இணைக்கப்பட்டு இருக்கலாம் என தோன்றுகின்றது..உதாரணமாக "சிறந்த பத்து தமிழ் படங்கள்","நாவலை தழுவி எடுக்க பட்ட படங்கள் குறித்து","இசையை மையமாய் கொண்ட திரை படங்கள்" "தமிழ் சினிமாவில் பெண்ணியம்" என்று..

இத்தொடர் ஓட்டத்தில் பங்கு கொள்ள நான் அழைப்பது

'ரகசிய கனவுகள்' கார்த்திக் மற்றும் வால் பையன் 'அருண்'

Monday, October 13, 2008

புத்தக வாசம்- ஒரு தொடர் ஆட்டம்

வாசிப்பு - தேடல் மிகுந்த என் தனிமைகளை போக்கியது வாசிப்பு மட்டுமே!! என் மட்டிலும் வாசிப்பு என்பது சுகானுபவம்..உஷாவின் இந்த அழைப்பு பெரு மகிழ்ச்சியை தருவதாய் உள்ளது.பகிர்தல் என்றும் சுவாரசியமானதே!!

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

கி.ராஜநாராயணனின் 'பிஞ்சுகள்",குழந்தைகளுக்கான இலக்கிய நாவல்..அந்நாவலில் கி.ரா குறிபிட்டிருக்கும் அரிய பறவை இனங்களும்,வழக்கொழிந்த தமிழ் சொற்களும் முதல் வாசிப்பின் பொழுது ஏற்படுத்திய ஆச்சர்யம் இன்றும் நினைவில் உள்ளது.


2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
அம்புலிமாமா கதைகளில் இருந்து தான் வாசிப்பு தொடங்கியது.10 வயதில் என நியாபகம்.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

அ. சமூக நாவல்கள்
ஆ. சரித்திர நாவல்கள்
இ. ஹரிபாட்டர் வகையான வினோத நாவல்கள்
ஈ. ராணிமுத்து, மாலைமதி மற்றும் பாக்கெட் நாவல்கள்

சமூக நாவல்கள்
எதார்த்தம் நிறைந்த,மனித உறவுகள் முன்னிறுத்தி சொல்லப்படும் கதைகள்.
விளிம்பு நிலை மக்கள் குறித்த பதிவுகளும்.


4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு
ஆ. பத்திரிக்கைகளில் நூல் மதிப்புரைப் படித்து
இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து
ஈ. நாவலின் முன்னுரையைப் படித்துப் பார்த்து
உ. புத்தகத்தின் வடிவமைப்பையும், அட்டையையும் பார்த்து
ஊ. (வேறு எதேனும் காரணம் இருந்தால் எழுதவும்)


பெரும்பாலான நாவல்கள் எனக்கு அறிமுகம் செய்தது என் தந்தையே.வலையுலக அறிமுகத்திற்கு பிறகு நண்பர்கள் மூலம் அறிந்து சில நூல்கள் படிக்க நேர்ந்தது.

5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

அ. பக்க அளவு
ஆ. சொல்லப்படும்ம் கதையின் கால எல்லை
இ. (வேறு எதேனும் காரணம் இருந்தால் எழுதவும்)

பக்க அளவு

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

அ. வாசகனின் அக நிலையிலிருந்து

ஆ.எழுத்தாளரின் முன்வைப்பிலிருந்து

இ.(வேறு எதேனும் காரண இருந்தால் எழுதவும்)

வாசகனின் அகநிலையில் இருந்து


7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

கதையின் தேவைக்கேற்ப எத்துணை பக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். பக்கங்களை மறந்து படிக்க ஆர்வத்தை தூண்டும் ஆற்றல் உள்ள எழுத்திற்கு புயலிலே ஒரு தோணி,கோபல்ல கிராமம் நூல்களை உதாரணமாய் சொல்லலாம்.

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

தேர்ந்தெடுத்த நூல்களை மட்டுமே வாசிப்பதால்,எத்துணை பக்கம் கொண்ட நாவலாய் இருந்தாலும் மலைப்பாய் உணர்ததில்லை.

9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

நிச்சயமாக இல்லை.

10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
பெரும்பாலும் இரவு

11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?

எதுவும் இல்லை

12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

சுஜாதாவின் " பிரிவோம் சிந்திப்போம்" ,பாலகுமாரனின் "மெர்குரி பூக்கள்"

13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
தி.ஜாவின் "மரபசு" , புதுமைப்பித்தனின் மொத்த சிறுகதைகளின் தொகுப்பு.

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

வண்ணநிலவனின் "கடல்புரத்தில்"
சுந்தரராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை"
எஸ்.ராவின் "உறுபசி"
கி.ராவின் "கோபல்ல கிராமம்"
தி.ஜாவின் "மோகமுள்"
வண்ணநிலவனின் " ரைநீஸ் ஐயர் தெரு"
ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்'
சாருவின் "சீரோ டிகிரீ"
கோபிகிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்"
ப.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி"


பட்டியல் பெரியது,மிக பிடித்தவற்றை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

அனிதா தேசாயின் "கடல்புறத்து கிராமம்"
யு.ஆர்.அனந்த மூர்த்தியின் " சம்ஸ்கார"
தகழியின் "செம்மீன்"
தகழியின் " தோட்டியின் மகன்"
வைக்கம் முகமது பஷீரின் "பாத்திமாவின் ஆடு"
பாறபுரத்துவின் "அப்பாவின் காதலி"
யு.ஆர்.அனந்த மூர்த்தியின் "அவஸ்தை"


16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?

புதுமை பித்தனின் "பலிபீடம்" ,எர்னஸ்ட் ஹெமிங்க்வேயின் "கடலும் கிழவனும்" தவிர்த்து வாசித்த ஆங்கில நூல்கள் சுவாரஸ்யம் அற்றவை.

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

கி.ராவின் "பிஞ்சுகள்","கோபல்ல கிராமம்"

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

பெரும்பாலும் தலைப்பு எவ்விதத்தில் நாவலோடு ஒத்து போகின்றது என யோசிப்பதுண்டு. "சாயா வனம்" "ரப்பர்" நாவல்களின் தலைப்பு மறைமுக அர்த்தம் போதிப்பவை.

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

லட்சிய மனிதர்களாக் கொண்டதில்லை.பிடித்த கதாபாத்திரங்கள் உண்டு.
மோகமுள் "யமுனா"
பிஞ்சுகள் நாவலில் வரும் "வேதி நாயக்கர்"
புயலிலே ஒரு தோணியின் "மாணிக்கம்"
ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் நாவலின் "துரைகண்ணு"


20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?


மிதமிஞ்சிய எதார்த்தம்,துணிந்து தன் எதிர்ப்பை வெளிபடுத்தும் பாங்கு பிற மொழி நாவல்களில் மிகுந்துள்ளது.பிற மொழி என இங்கே குறிப்பிடுவது கன்னட மற்றும் மலையாள நாவல்கள்.பிராமண சட்ட திட்டங்களை தொடர்ந்து தன் நாவல்கள் (கடஸ்ரேதா,சம்ஸ்கார) மூலம் எதிர்த்து வரும் அனந்தமூர்த்தியின் துணிவு பாராட்டுதலுக்கு உரியது..


21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?


"கோபல்ல கிராமம்" ,"கடல் புறத்தில்
"


22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?

ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்"
கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்"


23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

அ.எழுத்து மொழி
ஆ.பேச்சு வழக்கு
இ.வட்டார வழக்கு

வட்டார பேச்சு வழக்கு


24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?

குறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் இல்லை.

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

கி.ரா வின் கோபல்ல கிராமம்,எஸ்.ரா வின் "இலைகளை வியக்கும் மரம்" - பயண கட்டுரை தொகுப்பு

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?

நாவலின் தன்மையை பொருத்தது.பெரும்பாலும் விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பேன்.எதுவாயினும் ஒரு வாரத்திற்குள் முடித்து விடுவேன்.

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

கி.ராஜநாராயணன்,சுந்தர ராமசாமி

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?

இதுவரை அத்தகைய வாசிப்பு அனுபவம் இல்லை.


29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.

ஜெயகாந்தனின் "ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்"
சு.ரா வின் "ஒரு புளியமரத்தின் கதை"
வண்ணநிலவனின் "கடல் புறத்தில்" "ரைநீஸ் ஐயர் தெரு"


30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக.

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

ஜி.நாகராஜனின் "நாளை மற்றும் ஒரு நாளே"

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?

இல்லை.

33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?

--------------------------

அப்பா தவிர்த்து இலக்கியம் குறித்து நான் அதிகமாய் உரையாடியது இருவரிடம் மட்டுமே அய்யனார் மற்றும் வனிதா.

தமிழ் வலையுலகம் அறிமுகம் ஆனதிற்கு முன்பே வனிதாவின் நட்பு கிடைத்தது.
சென்ற ஆண்டு புத்தக கண்காட்சிக்கு சேர்த்து சென்ற பொழுது வழி நெடுக இலக்கியம் பேசி சென்றது மறக்க முடியாத அனுபவம்.

வாசிப்பு மீதான எனது ஆர்வத்தை வேறு தளத்திற்கு இட்டு சென்றது அய்யனார் பரிந்துரைத்த தமிழ் நாவல்கள்.அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்" மற்றும் ஆதவன்,நகுலன்,கி.நாகராஜன்,ப,சிங்காரம் நாவல்கள்.விளிம்பு நிலை வாழ்கை குறித்த பதிவுகளை அறிமுகம் செய்ததில் அவருக்கு மிக்க பங்குண்டு.

இத்தொடர் ஓட்டத்தில் இவர்களின் பங்களிப்பு மேலும் புதிய நூல் அனுபவங்களை தரும் என்பதில் ஐயமில்லை.