Saturday, January 31, 2009

எஸ்.ராவின் "கால் முளைத்த கதைகள்" - கட்டுரை தொகுப்பு

சில காரியங்கள்,சில நம்பிக்கைகள் காரணம் ஏதும் இன்றி நாம் தொடர்ந்து பின்பற்றி வருகின்றோம்.இயற்கையின் ரகசியங்களை கேள்விகள் ஏதும் இன்றி அப்படியே ஏற்று கொண்டிருக்கின்றோம்.எஸ்.ராவின் இந்த தொகுப்பு சிறுவர்களுக்கானது என எளிதாய் ஒதுக்கி தள்ள முடியாது.சூரியன் சந்திரன் தோன்றிய கதை, பறவைகள் நிறம் பெற்ற கதை,தென்னையும்,பனையும் தோன்றிய வரலாறு என பரவலாய் உலகின் பல பகுதிகளில் இருக்கும் நம்பிக்கைகளை பலவற்றை தொகுத்துள்ளார்.இந்திய உட்பட பிலிபைன்ஸ், பர்மா,தாய்லாந்து,இந்தோனேசியா,எகிப்து,மெக்சிகோ,கென்யா,அரேபியா என பல்வேறு நாடுகளில் உலவி வரும் நாடோடி கதைகள் படிக்க படிக்க சுவாரஸ்யம் கூட்டுபவை.



கதைகள் கற்பனா திறனை கூட்டுபவை.இரவு பொழுதுகளில் என் கழுத்தை கட்டி கொண்டு கதை கேட்கும் குட்டி தங்கைக்கென கதைகளை சேகரித்து கொண்டிருப்பேன்.கதைகளின் தோழி என்ற வார்த்தை அவளை ஞாபகபடுத்தியது.சூரியனும்,சந்திரனும்,நட்சத்திரங்களும் தோன்றிய கதை இரவும் பகலும்,கடலும் நிலமும் பிரிந்த கதைகள் தேசத்திற்கு தேசம் வேறுபடினும் பொதுவாய் முன்னிறுத்துவது கடவுளின் படைப்பின் மகிமையை.வானவில்லின் வண்ணங்கள் கொண்டு பூக்கள் நிறம் பெற்றதும்,சாபம் பெற்ற காதலனும்,காதலியும் பூவும்,வண்டுமாய் மாறியதும்,கன்னி பெண்கள் பனைமரமாய் மாறியதும்,பாம்புகள் தென்னை மரமாய் மாறியதுமாகிய நாடோடி கதைகள் அவற்றின் மீதான பார்வையை மாற்றி அமைப்பவை.

50 திற்கும் மேற்பட்ட நாடோடி கதைகள் கொண்ட இத்தொகுப்பில் நான் ரசித்த கதைகள் உப்பு மற்றும் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு உருவானத்திற்கு சொல்லப்படும் நாடோடி கதைகள்.வியாபாரி ஒருவனின் பேராசையால் உப்பு தருவிக்கும் எந்திரம் கடலில் மூழ்கி அதை நிறுத்தம் மந்திரம் தெரியாததால் இன்றும் கடல் உப்பு தன்மை கொண்டுள்ளதாய் சொல்லுகின்றது குஜராத் பழங்குடியின கதை.ஒரே பெண்ணின் மீது ஆசை கொண்ட இரட்டையர்கள் அவள் மீதுள்ள காதலின் காரணமாய் எப்பொழுதும் இணைபிரியாதிருக்க வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பாக பிறவி எடுத்தாய் சொல்லுகின்றது வியட்நாம் தேசத்து கதை.நாள்முழுதும் பறவைகளுக்கும்,மிருகங்களுக்கும் வர்ணங்களை தீட்டிய கடவுள் இறுதியாய் வந்த குயிலை வர்ணம் ஏதுமின்றி அனுப்பியதால் அது சோகத்தோடு பாடி திரிவதாய் பிகார் பழங்குடியினர் நம்பிக்கை.

மேல சொன்ன கதைகள் இத்தொகுபிற்கான சிறிய அறிமுகம்.இதுபோன்ற எண்ணற்ற நாடோடி கதைகள் இதில் அடக்கம்.சர்ப்பம் நதியாகவும்,நதிகள் மரமாகவும்,மரங்கள் கடவுளாகவும் மாறியதாய் இருக்கும் நம்பிக்கைகள் ஆச்சர்யமூட்டுபவை.கதைகளை தருவிக்கும் ரகசிய குகையின் வாயில் எப்பொழுதும் திறந்தே இருக்கின்றது.அதை தேடி செல்வதும்,தேடாதிருப்பதும் அவரவர் விருப்பம்.எது எப்படியாயினும் கதைகளின் தோழியாய் இருப்பதே எனக்கு பெரும் மகிழ்ச்சி!!

வெளியீடு - உயிர்மெய்
விலை - 100 ரூபாய்

Monday, January 26, 2009

யுவன் சந்திரசேகரின் "குள்ளசித்தன் சரித்திரம்"

சாமியார்கள்,நாடி ஜோதிடம்,ரேகை ஜோசியம்,சுவடி ஜோசியம், சித்து விளையாட்டு போன்ற விஷயங்கள் நகைப்புகுறியதாகவே தோன்றினாலும் அது குறித்த விவாதங்கள்,நிகழ்வுகள் படிப்பதற்கும்,கேட்பதற்கும் சுவாரசியமானவை.இந்நாவல் முழுதும் அது போன்றதொரு சித்து வெளியில் உலவுகின்றது.கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் இதை ஒரு அற்புத புனைவென கொண்டு வாசித்து மகிழலாம்.பக்திமான்கள் மதுரை வீதிகளில் வாமன ஸ்வாமிகள் மடத்தை தேடி அலையலாம்.இப்படி குறிப்பிட காரணம் யுவன் கதை சொல்லியுள்ள பாங்கு.



குள்ள சித்தனை சந்தித்தவர்களின் ஆச்சர்ய விவரிப்புகள் மற்றும் அவரின் சித்த விளையாட்டுகள் ஒருபுறமும்,பழமையான நூலகம் ஒன்றில் கணக்கராய் பணிபுரியும் ராம.பழனியப்பனின் வாழ்வின் தின போராட்டங்கள் ஒருபுறமுமாய் கதை கோர்வையின்றி தொடங்குகின்றது.இரண்டு கதைக்கும் பொதுவானதை தேட தொடங்கி புத்தகதிற்குள் முழுதுமாய் தொலைந்து போனேன்.இது போன்ற கதைகளில் மிகை படுத்தபடும் நிகழ்வுகள் பெரும் நகைபிற்குறியதாய் மாறும் வாய்ப்புகள் அதிகம்,இருப்பினும் இதில் சொல்லப்பட்டுள்ள சித்து விளையாட்டுகள் ரசிக்கத்தக்கவை.

இந்நூல் மிக பிடித்து போனதற்கு முக்கிய காரணம்,இதற்கு முன் எதிலும் வாசித்திடாத மதுரை நகரின் வீதிகளும்,அதன் கொண்டாட்டங்களும்.மதுரை நகரை சித்திரை திருவிழாவின் பொழுது பார்த்திருக்கின்றீர்களா? என்ற ஒரு வரி சட்டென எனக்கு மிகபிடித்த சித்திரை திருவிழா பொழுதைய காட்சிகளை நினைவில் கொண்டுவந்தது.இவ்வாண்டு திருவிழா குறித்த பதிவு ஒன்றை எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.மதுரை தவிர்த்து சோழவந்தான்,கரட்டுபட்டி,பெரியகுளம்,நிலக்கோட்டை என அதை சுற்றியுள்ள ஊர்களிலும் பயணிக்கின்றது நாவல் சித்தரின் வரலாறை சொல்லியபடி.

நாவல் முழுவதும் கேள்விகள்,முடிச்சுக்கள்,ஏதோ ஒரு தேவையின் பேரில் அலைபாயும் மனிதர்கள் அதன் பொருட்டு நடைபெறும் குள்ளசித்தரின் ஜாலங்கள் என அமானுஷ்யம் கொண்டு தொடர்கின்றது.யுவனின் வித்யாச கதை சொல்லும் பாங்கு முதலில் புரிந்து கொள்ள கடினமாய் உணர்தாலும் மெல்ல மெல்ல முழுதாய் நம்மை உள் இழுத்து கொள்ளும் திறன் கொண்டது.

வெளியீடு - தமிழினி
விலை - 100 ரூபாய்

அ.முத்துலிங்கத்தின் "கடிகாரம் அமைதியாய் எண்ணி கொண்டிருக்கின்றது"

தேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் தங்களுக்கு மிக பிடித்த நூல் ஒன்றினை குறித்து விவரித்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு.இத்தொகுப்பினை சாத்தியமாக்கிய முத்துலிங்கத்தின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன்,சாரு நிவேதிதா, நாஞ்சில் நாடன்,அசோகமித்திரன், சுஜாதா,அம்பை,மனுஷ்யபுத்திரன்,பாவண்ணன் உட்பட 20 எழுத்தாளர்களின் விருப்ப நூல் குறித்த கட்டுரைகள் இதில் அடக்கம்.



ஜோ.டி.குரோஸ் இன் "ஆழி சூழ் உலகு" குறித்த நாஞ்சில் நாடனின் கட்டுரை கடல்-கடலோடி- கடலோடியின் வாழ்வு குறித்து தமிழில் வெளிவந்த முதல் சிறந்த நாவல் என்பதாய் உள்ளது.இவ்வாண்டு புத்தக சந்தையில் வாங்கிய இந்த புத்தகத்தை விரைவில் தொடங்கும் ஆர்வம் மேலிட்டது.மனுஷ்யபுத்திரன் தமக்கு பிடித்த நூல் என ஜெயமோகனின் "ஏழாம் உலகம்" நாவலை குறிபிட்டுள்ளார்.முழுக்க முழுக்க பிச்சைகாரர்களின் வாழ்வை குறித்த இந்நாவலை தமிழின் மற்றுமொரு சிறந்த விளிம்புநிலை இலக்கியம் என கூறுகிறார்.

இதற்கு முன் நான் கேட்டிராத பெயர் கால பைரவன்,இவரின் "புலிப்பாணி ஜோதிடம்" சிறுகதை தொகுப்பை குறித்தது பாவண்ணனின் கட்டுரை.மதுரை நகரம் குறித்த முழு ஆராய்ச்சி நூலை படிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.எஸ்.ரா பரிந்துரைத்துள்ள "எண்படுங்குன்றம்" தொகுதி மதுரையை சுற்றி உள்ள சமண குகைகள் குறித்த முனைவர் வேதாச்சலத்தின் ஆராய்ச்சி கட்டுரைகள் கொண்ட தொகுப்பு.நிச்சயம் தேடி வாசிக்க வேண்டிய நூல்.

குறிப்பிட்டு எந்த நூலை குறித்தும் சொல்லாது பொதுவாய் தமது வாசிப்பு அனுபவம் குறித்து சுஜாதா எழுதியுள்ள "படிப்பின் பயணம்" கட்டுரை அதிகமாய் புதுமைப்பித்தனின் முதல் தற்பொழுதைய ஆங்கில இலக்கியம் வரை அலசுகிறது.சா.கந்தசாமியின் "மாயவலி" நாவல் மற்றும் அம்ஷன்குமாரின் "ஒருத்தி"(திரைப்படமாய் வந்தது) திரைக்கதை நூலும் அசோகமித்ரனின் விருப்ப பட்டியலில் உள்ளவை.

பள்ளி ஆசிரியராய் வாழ்வை தொடங்கி எழுத்தாளராய் ஆனா Mc.Court இன் சுயசரிதை நூலான "Teacher Man" பற்றிய முத்துலிங்கத்தின் விரிவான கட்டுரை Mc.Court இன் பேட்டியின் சிறு பகுதியோடு சுவாரஸ்யம் கூட்டுகின்றது.சாருவின் கலகம்,இசை,காதல் மற்றும் வரம்பு மீறிய பிரதிகள் இரண்டு நூல்களில் இருந்த அயல் இசை மற்றும் இலக்கிய கட்டுரைகள் பரிந்துரைத்த எழுத்தாளர்கள் பட்டியல் மிக நீளம்.படித்து வியந்த தொகுப்புகள் அவை.அதில் ஒரு சிறு பகுதி என "சம கால அரபு இலக்கியம்" கட்டுரை அமைந்துள்ளது.

வெளியீடு - உயிர்மெய்
விலை - 85 ரூபாய்

Saturday, January 17, 2009

கல்யாண்ஜியின் தேர்ந்தெடுத்த கவிதைகள்

கல்யாண்ஜியின்(கதை உலகில் வண்ணதாசன்) தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு நான் விரும்பி வாசித்த முதல் கவிதை நூல்.வண்ணதாசனின் சிறுகதைகளோடு இருந்த பரிட்சயம் அவரின் கவிதைகளோடு இருந்ததில்லை.இத்தொகுதியின் கவிதைகள் யாவும் நம்மை சுற்றி தொடரும் தினசரி நிகழ்வுகளை,எந்திர வாழ்கை ஓட்டத்தில் கவனிக்க மறந்தவற்றை நினைவூட்டுபவை.மிகபிடித்த சில வரிகளை இங்கே குறிப்பிட்டுள்ளேன்..



நிலா பார்த்தல்

ரயில் வண்டியின் குலுங்குகிற
ராத்திரி விழிப்பில்
கண்ணாடி ஜன்னல் வலி
கலங்கி தெரிந்தது
நீரற்று ஆற்று மணல் மேல் நிலா.
-------------------------------------
மரணத்திலிருந்து
தாபித்த கண்கள்
மருத்துவமனைக் கட்டிலில்
உறங்க,
கணக்கும் மனதுடன்
நிசியில் வெளிவந்தது நின்ற பொழுது
வேப்பமர கிளைகளுக்கிடையில்
நிலா அசைந்தது.
---------------------------------------------------
தானாக இப்படி
தட்டுப்பட்டது தவிர
நிலா பார்க்க என்று போய்
நிலா பார்த்து நாளாயிற்று.

- கல்யாண்ஜி

தொலைந்த வெளிச்சம்

கார்த்திகை ராத்திரி
ஏற்றின கடைசி விளக்கை
வைத்து திரும்பும் முன்
அணைந்துவிடுகின்றது
முதல் விளக்குகளுள் ஒன்று
எரிகிறபோது பார்க்காமல்
எப்போதுமே
அணைத்த பிறகு தான்
அதை சற்று
அதிகம் பார்க்கிறோம்
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தை விட
அணைந்த பொழுதில்
தொலைத்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.

- கல்யாண்ஜி

வெளியீடு - ஆழி பதிப்பகம்
விலை - 45 ரூபாய்

Thursday, January 15, 2009

The Last Viceroy(1986)

1986 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் அடிமை இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இறுதி நாட்களை,நாடு சுதந்திரம் பெற லார்ட் மௌன்ட் பேட்டன் (Lord Mount Batten) வகித்த முக்கிய பங்கு குறித்து விரிவாய் அலசுகிறது.சுதந்திர கால கதைகள் எப்பொழுதும் கேட்பதற்கும்,படிப்பதற்கும் இனிமை.எளிதாய் பெற்றதல்ல இந்த சுந்தந்திரம் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர இது போன்ற சரித்திர பதிவுகள் அவசியமே.



பெருத்த அரசியல் குழப்பங்களுக்கிடையில் இந்தியாவின் கடைசி வைசிராயாக மௌன்ட் பேட்டன் பதவி ஏற்பதோடு படம் துவங்குகின்றது.தனி நாடு கேட்கும் ஜின்னாவின் கோரிக்கைகள், இந்து முஸ்லீம் கலவரங்கள்,பாதிக்கப்படும் கிராமங்கள், அமைதி வேண்டி கிராமங்களுக்கு செல்லும் மகாத்மா,ஆங்கிலேய அரசிடம் தோழமையாய் பழகி சுயலாபம் சம்பாதிக்க விரும்பும் அரசியல் தலைவர்கள் என யாவற்றையும் கண்டு,நீடிக்கும் குழப்பத்தை முடிவிற்கு கொண்டு வர மௌன்ட் பேட்டன் நேருவையும் ஜின்னாவையும் அழைத்து பேசி முஸ்லிம்களுக்கு தனி மாநிலம் அமைக்க சம்மதிக்கின்றார்.அதன் பின் தொடரும் எல்லைகள் நிர்ணயம்,முப்படைகளை பகிர்தல் என யாவும் தீர்மானிக்கபட்டபின் 1947- ஆகஸ்டு 15 - ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெறுவதாக அறிவிக்கின்றார்.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க லார்ட் மௌன்ட் பேட்டன் குறித்த பதிவே.இருப்பினும் இந்தியாவின் சுதந்திர போராட்ட இறுதி நாட்களை வெகு நேர்த்தியாய் சொல்லுகின்றது.பிரிவினையை அதிகரிக்கும் முஸ்லிம்களுக்கு தனி மாநிலம் தருவதில் காந்திக்கும்,நேருவிற்கும் ஏற்படும் மாற்று கருத்து,பிடிவாத குணம் கொண்ட ஜின்னாவின் வாக்குவாதங்கள்,மௌன்ட் பேட்டன் மனைவி எட்வினாவிற்கும் நேருவிற்கும் இடையே மலரும் நட்பு கடந்த உறவு என மறைமுகமாய் அறியப்பட்டவை காட்சிகளாய் திரையில் வந்த பொழுது ஏற்பட்ட ஆச்சர்யம் மறுப்பதற்கில்லை.

சுதந்திரம் பெறுவதிற்கு முந்தைய இரு ஆண்டுகள் குறித்த முழு பதிவு இது.திரைபடத்தின் பெரும்பாலான காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கபட்டுள்ளன.இத்திரைப்படத்தில் என்னை கவர்ந்த ஒன்று நடிகர்கள் தேர்வு.மௌன்ட் பேட்டன், எட்வினா,நேரு,காந்தி, ராஜாஜி,வல்லபாய்படேல், இந்திராகாந்தி பாத்திரங்கள் ஏற்று நடித்தவர்கள் யாவரும் நிஜ தலைவர்களோடு கொண்டிருந்த உருவ ஒற்றுமை ஆச்சர்யம் கொள்ள வைத்தது.தேர்ந்த நடிகர்கள்,தெளிவான காட்சியமைப்பு,அளவான இசை,மேலும் அந்த நாளைய காட்சிகளை கண்முன் கொண்டு வர முயன்று வெற்றி பெற்ற கலை இயக்கம் என பிரமிப்பை ஏற்படுத்தியது இத்திரைப்படம்.

Monday, January 12, 2009

சு.ரா வின் "அக்கரை சீமையிலே" மற்றும் "பிரசாதம்" - சிறுகதை தொகுப்புகள்

கி.ரா தனது வேட்டி தொகுதியில் சுந்தர ராமசாமியின் "அக்கரை சீமையிலே" மற்றும் புதுமைபித்தனின் "துன்பக்கேணி" சிறுகதைகள் குறித்து பிரமித்து எழுதி இருந்தார்.இரு கதைகளையும் தேடி படித்தேன்.இருகதைகளுக்கும் உள்ள ஒற்றுமை தாயகத்தில் இருந்து வேற்று நாட்டிற்கு பிழைக்க சென்ற கூலி தொழிலாளிகளை குறித்தது."துன்பக்கேணி" - சற்றே பெரிய சிறுகதை,தனி பதிவு போடும் அளவிற்கு விஷயம் கொண்டது.சு.ரா வின் "அக்கரை சீமையிலே" தொகுப்பில் இரெண்டு கதைகளை தவிர மற்றவை சொல்லி கொள்ளும் வண்ணம் இல்லை.



ஆப்பிரிக்க நாட்டில் ரயில்வே கூலி தொழிலாளியாய் இருக்கும் தமிழனின் கதை.இக்கதை நாயகன் கொண்டிருக்கும் சூழல் இந்திய கூலிக்கும் பொருந்தும்.வறுமை,தினம் சண்டை இடும் மனைவி,ஓயாத புலம்பல்கள் என தொடரும் அவன் நாட்களுக்கு பெரும் பாரமாய் இருப்பது தாயகம் குறித்த நினைவுகள்.தாய் மண்ணை விட்டு பிரிந்து,கட்டாயத்தின் பேரில் அந்நிய மண்ணில் வாழும் பலரில் ஒருவனை பற்றிய குறிப்பு.இத்தொகுப்பில் பிடித்த கதை மற்றொரு "முதலும் முடிவும்" .சிறுவயது காதலை தீவிரமாய் கொண்டு கனவுகள் கொள்ளும் நாயகி விதி வசத்தால் காதலனின் தந்தையை மணக்கும் கதை.

முந்தைய தொகுப்பிற்கு மாறாக சு.ரா வின் "பிரசாதம்" தொகுதியில் உள்ள சிறுகதைகள் யாவும் அருமை.எனக்கு மிக பிடித்த கதை "சன்னல்" - படுத்த படுக்கையாய் இருக்கும் ஒரு நோயாளிக்கு அலுப்பை போக்குவதாய்,நிரந்தர தோழனாய் அமைந்த சன்னல் குறித்த பதிவு.வெகு வித்தியாசமான கதை வெளி.மருத்துவமனைகளில் தேடி பார்த்த சன்னல் காட்சிகள் நினைவிற்கு வந்தது உள்ளிருக்கும் சோகத்தை சற்றே மறந்து ஆறுதல் பெற ஜன்னல் காட்சிகள் அவசியமென தோன்றும்.மற்றொரு கதையான "ஒன்றும் புரியவில்லை" பெண்ணிற்கு திருமணம் ஏற்படுத்தும் மாற்றங்கள் சிறுவனின் பார்வையில் சொல்லப்பட்டது.

"பிரசாதம்" சிறுகதை - மகளின் பிறந்தநாளை கொண்டாத பணம் வேண்டி மாமூல் பெற ஒரு போலீச்காரன் கோவில் அர்ச்சகரோடு தெருவில் நடத்தும் நாடகம் நகைச்சுவை ததும்ப சொல்லப்பட்டுள்ளது.சூழ்நிலை மனிதனை எந்த நிலைக்கும் இழுத்து செல்லும் என்பதை சோகம் கலக்காது சொல்லுகின்றது இக்கதை.இவை தவிர்த்து "அடைக்கலம்","லவ்வு",ஸ்டாம்பு ஆல்பம்", "சீதைமார்க் சிகைக்க்காயதூள்" ஆகிய கதைகளும் ரசிக்கும் வண்ணம் உள்ளவையே.

வெளியீடு - காலச்சுவடு

Friday, January 2, 2009

அ.முத்துலிங்கத்தின் "மகாராஜாவின் ரயில் வண்டி" - சிறுகதை தொகுப்பு

ரயில் பயணத்தின் பொழுது புத்தகம் வாசிப்பது எனக்கு மிக பிடித்தமான ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்கு பயணித்த ஒரு நீண்ட பகல் பொழுதில் முத்துலிங்கத்தின் இச்சிறுகதை தொகுப்பை படித்தேன்.உயிர்மெயில் அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகள்,சிறுகதைகள் படித்ததோடு சரி.இதற்கு முன் இவரின் எழுத்துக்களோடு அவ்வளவு பரிட்சயம் இருந்ததில்லை.எழுத்தாளரின் ஆப்பிரிக்க அனுபவங்கள்,சில புனைகதைகள் கொண்ட இத்தொகுப்பு தந்த வாசிப்பு அனுபவம் அலாதியானது.இத்தொகுப்பினை எனக்கு அனுப்பி மறுபடியும் வாசிக்க உதவிய நண்பர் பாலராஜனிற்கு நன்றி.



"மகாராஜாவின் ரயில் வண்டி" - பால்ய கால நினைவுகளை கிளரும் இக்கதை தான் சிறு வயதில் சந்தித்த யுவதியை,அவளோடு இருந்த ஒரு வார நிகழ்வுகளை அசை போடும் நாயகனின் பார்வையில் செல்கிறது இக்கதை.நன்கு பாட தெரிந்த,கிதார் இசைக்க தெரிந்த,பூனைகளின் மீது பேரன்பு கொண்ட சிறு வயது ரோசலின் குறித்த வர்ணனைகள் மென்கவிதைகள்.முதல் வாசிப்பின் பொழுது சரிவர பிடிபடாத கதை "தொடக்கம்",நெருக்கடி மிகுந்த ஒரு அலுவலக நாளில் எங்கோ இருந்து வந்து ஜன்னலில் அடிபட்டு இறந்த அகதி பறவையை மிகுந்த அக்கறை கொண்டு புதைத்த அனுபவத்தை பகிர்கின்றார்.அகதிகளின் நிலையை மறைமுகமாய் சொல்லும் இக்கதை மற்றொரு புறம் இறக்கை கட்டி கொண்டு பறக்கும் எந்திர வாழ்கையில் நாம் கவனிக்க தவறும் அல்லது கவனிக்க விரும்பாத சிறு சிறு நிகழ்வுகள் எவ்வளவு அர்த்தம் உள்ளவை என அழுத்தமாய் சொல்லுகின்றது.

இத்தொகுப்பில் எனக்கு பிடித்த இரு கதைகள் "நாளை" மற்றும் "விருந்தாளி".ஒரு வேலை உணவிற்காக அகதி முகாம்களில் கையேந்தி தினப்பொழுதை கழிக்கும் இரு சகோதரர்கள் குறித்த கதை "நாளை'.துயரம் மேலிட்ட அகதிகளின் வாழ்வை இச்சிறுகதை சில காட்சிகளின் விவரிப்பில் முழுதாய் உணர்த்துகின்றது.மற்றொரு கதையான "விருந்தாளி",ஆப்பிரிக்க கிராமம் ஒன்றில் தனித்திருந்த பொழுதுகளின் ஏக்கங்களை துடைத்தெறிந்த எதிர்பாரா பயணியின் வருகை குறித்த நியாபக குறிப்புகள்.இவை தவிர்த்து மெல்லிய நகைச்சுவை கதைகளான "எதிரி" மற்றும் "ராகு காலம்" ரசிக்ககூடியவை.மென்மையான வாசிப்பனுபவம் வேண்டுபவர்களுக்கு தாராளமாய் இத்தொகுப்பை பரிந்துரைக்கலாம்.

வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
விலை - 75 ரூபாய்