
மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல் குட்டியையே
நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லை என
-------------------------
தோட்டத்து நாகலிங்க பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது
இந்த கிளர்வில்
இருளை கலைக்காது
மழையை வெறிக்கலாம்
ஆழ புகைக்கலாம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட
தருணத்தை நினைத்துக்
கொள்ளலாம்.
---------------------------
கூடுகளை விரும்பிடாத
பறவையின் பின்
தொடர்ச்சியாய் பயணித்துக்
கொண்டிருக்கின்றேன்
இளைபாரல்களில் மிகுந்த ஆர்வம்
கொண்டவனேனினும்
இளைப்பாரல்களை
தொலைத்துவிடச் செய்தது
இதுவரை கடந்திடாத
தொலைவுகளை கடந்தபின்னும்
பறவை பறந்துகொண்டிருக்கிறது
வழி தப்பும் பயத்தில்
நானும் தொடர்ந்து
கொண்டிருக்கிறேன்
-----------------

நீளத்தின் கடலும்
கடலின் ஆகாயமும்
ஒன்றென்றேன்
எப்படி யென்றால்
இதழ்களை கவ்வியபடி
முணுமுணுத்தேன்
"முத்தமிடுகையில்"
-------------------------------
புத்தகங்களாலும் அழுக்குத்
துணிகளாலும்
நிரம்பி கிடக்கும்
என் மொட்டைமாடித் தனியறையில்
இப்போது இரண்டு மீன்கள்
கண்ணாடி தொட்டிக்குள்
உலவுகின்றன
நானில்லாத பொழுதுகளில் அவை
சத்தமாய் பேசி கொள்வதாய்
சொல்கிறார்கள்
இரண்டில் அழகானதிற்கு
உன் பெயர் வைத்திருக்கின்றேன்
ஒரு முறை வந்து
பார்த்துவிட்டுபோயேன்.
* * *
புத்தக கண்காட்சியில் இம்முறை பெரிதாய் எதிர்பார்த்தது அய்யனாரின் நூல்களே, எதிர்பார்த்தது பொய்க்கவில்லை..தேர்ந்தெடுத்த காதல் கவிதைகளை அழகிய நூல் வடிவில் வெளியிட்டுள்ள வம்சிக்கு நன்றிகள்..வாழ்த்துக்கள் அயிஸ்!!
ஆசிரியர் - அய்யனார்
வெளியீடு - வம்சி
விலை - 50 ரூபாய்


