Monday, November 24, 2008

"வேட்டி" - கி.ராவின் சிறுகதை மற்றும் கட்டுரை தொகுப்பு

கி.ரா வின் கதைகள் யாவும் கரிசல் மண்ணின் அனுபவ பகிர்தல்கள்.சற்றே கற்பனை கலந்து கேட்பவனை தன்வச படுத்த கதை சொல்லும் யுக்தி கதை சொல்லிகளுக்கே உண்டானது.அவ்வகையில் கி.ரா வின் கதைகளில் வரும் கற்பனை காட்சிகள் சுவாரசியமானவை.சில எழுத்துக்கள் எத்தனை முறை படித்தாலும் சலிக்காத வசீகரத்தை கொண்டிருப்பவை,கி.ரா வின் எழுத்துக்களை போல.நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் படித்த பொழுது இத்தொகுப்பு தந்த நிறைவு அலாதியானது.

கரிசல் பக்கத்து சம்சாரிகளின் நித்ய ஆடை வேட்டி.துங்கா நாயக்கரின் ஒரே ஒரு வேட்டி கிழிந்து விட கவலையில் அமர்ந்து அவர் வேட்டி குறித்து தம் சிந்தனையை ஓட விடுகிறார்.ஊரில் உள்ள ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தன் வேட்டியை பராமரிகின்றான் என நகைச்சுவை கலந்து சொல்லுகின்றது "வேட்டி" சிறுகதை. சீவி,சிங்காரித்து,மை பூசி அழகு பார்க்க கரிசல் பெண்களுக்கு நேரமும் இல்லை விருப்பமும் இருக்காது.பிறந்தது முதல் வீட்டு வேளையிலும்,காட்டு வேளையிலும் நாட்களை கழித்த பெண்ணொருத்தி திருமணம் அன்று தலையில் வைத்த பூவின் வாடை தாளாது மயங்கி விழுந்த கதை "பூவை".

இத்தொகுதியில் பெரும்பாலான கதைகள் கரிசல் பக்கத்து பெண்களை மையமாய் கொண்டவை.வேலை..வாழ்கையே வேலை சிறுகதை சம்சாரி வீட்டு பெண்ணொருத்தியின் காட்டிலும்,வீட்டிலும் கழியும் ஒரு நாள் பொழுதினை விவரிப்பது.கால சுழற்சியில் விவசாய வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்களை வயதான சம்சாரியின் பார்வையில் சொல்லும் கதை "எங்கும் ஒரே நிறை".மற்றும் புதிதாய் திருமணமான தம்பதியருகுள்ளான பிரியத்தை சொல்லும் கி.ரா வின் பிரபலமான சிறுகதை "கனிவு"ம் இதில் அடக்கம்.




இத்தொகுதியில் அமைந்த சற்றே நீண்ட சிறுகதை,"கரிசல் காட்டில் ஒரு சம்சாரி".எனக்கு பிடித்த சிறுகதையும் கூட.துரைச்சாமி நாயக்கர் - உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு,விவசாயத்தில் புதிய தந்திரங்களை கையாண்டு,பண விஷயத்தில் கருமி தனம் செய்து காண்பவர் ஆச்சர்யப்படும் வண்ணம் வாழ்ந்த சம்சாரி.உளவுக்கு மாடு பிடிப்பது,பஞ்ச காலத்திற்கு முன்பே தானியங்கள் சேமிப்பது,உறவுகளை விட்டு விலகியே இருந்து பணத்தையும்,சச்சரவுகளையும் குறைப்பது,பெரு மழைகால இரவில் வயலில் சென்று நீரின் தடம் மாற்றுவது,அதிக விலை பெறுமானமுள்ள தோட்டத்தை பேச்சு சாதுர்யத்தால் குறைவாய் பேசி முடிப்பது என செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் திட்டமிடுதலை கையாண்ட துரைசாமி நாயக்கரின் கதையை கதை சொல்லி தம் நண்பருக்கு சொல்வதை அமைந்துள்ள இக்கதை சில இடங்களில் எனக்கு என் தாத்தாவை நினைவூட்டியது.

சிறுகதைகள் தவிர்த்து கி.ராவின் சில கட்டுரைகளும் இதில் உண்டு.தமது கிராமமான இடைசெவல் குறித்த கி.ராவின் "எங்கள் கிராமம்".தாம் முதலில் எழுதிய கடிதம் குறித்தும் நினைவுகளை,கதைக்கு கரு உருவாக காரணமாய் அமைந்த சில நிகழ்ச்சிகளையும் குறித்து விரிவாய் பதிவு செய்துள்ளார்.இதில் புதுமைபித்தனின் "துன்பக்கேணி" மற்றும் சு.ரா வின் "அக்கரை சீமையிலே" ஆகிய கதைகள் சிறப்பானவை என குறிப்பிட்டு சொல்லி உள்ளார்.சிறுகதைகள்,கட்டுரைகள் தவிர்த்து கி.ரா வின் பல கடிதங்களும் இதில் உண்டு.மொத்தத்தில் கி.ராவின் கதைகள்,கட்டுரைகள்,கடிதங்கள் என யாவும் சேர்ந்த அறிய தொகுதி இது.

வெளியீடு - அன்னம் பதிப்பகம்

Friday, November 21, 2008

"Me You Them" - பிரசிலிய திரைப்படம்



ஒரு ஆண் தன் வாழ்கையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் சந்தித்த பெண்களை,அவர்களோடு கொண்டிருந்த காதலை,சிநேகத்தை சொல்லும் ஆட்டோக்ராப் திரைப்படம் வெளிவந்த சமயம் இதே கதை ஒரு பெண்ணை மைய படுத்தி வெளிவந்தால் சமூகம் ஏற்குமா என்ற கேள்வி பரவலாய் இருந்தது.அதற்கான சூழலும்,தைரியமும் தற்சமயம் இங்கில்லை.பிரேசிலில் நடந்த நிஜ கதையை மையமாய் கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் மூன்று கணவர்களோடு ஒரே வீட்டில் வசிக்கும் பெண்ணை பற்றியது.படம் பார்க்கும் பொழுது பெரிய அதிர்ச்சியோ,எரிச்சலோ ஏற்படவில்லை,மெல்லிய புன்னகையோடு அதன் போக்கை ஏற்றுக்கொள்ள முடிந்தது.

தாயை இழந்த டர்லீன் கைகுழந்தையோடு அவதியுறும் வேளையில் சற்றே முதியவனான வசதி படைத்த ஓசியாசை மணக்கிறாள்.ஒசியாசின் உறவினான ஜெசின்கோ தன் தாயின் மரணத்திற்கு பிறகு ஓசியாசோடு தங்கி பிழைக்க வருகின்றான்.தன் மீது பிரியம் கொள்ளும் ஜெசின்கோவை ஏற்று குழந்தை பெறுகிறாள்.எப்பொழுதும் வானொலி கேட்டபடி உறங்கும் ஓசியாஸ்,வீட்டு பராமரிப்பு வேளைகளில் தன்னை மூழ்கடித்து கொண்ட ஜெசின்கோ - நாட்கள் செல்ல செல்ல இவ்விருவருக்கு மத்தியில் வாழும் வாழ்க்கை வெறுப்பை தர மெய்யான அன்பை எதிர் நோக்கி காத்திருக்கும் வேளையில் கரும்பாலையில் வேலை செய்யும் அழகிய இளைஞனான சிரோவின் உறவை பெறுகிறாள்.

மேலோட்டமாக பார்க்கும் பொழுது இக்கதை பெரும் நகைப்பிற்குரியதாய் தோன்றலாம்.தேர்ந்த இயக்கமும்,வெகு இயல்பான நடிப்பும் நம் பார்வையை மாற்றி அமைக்கின்றன.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு விஷயங்கள் படம் நிகழும் இடம் மற்றும் பின்னணி இசை.வடகிழக்கு பிரேசிலில் அமைந்த புழுதி பறக்கும்,வறண்ட கிராமம் ஒன்றில் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மஞ்சள்,ஆரஞ்சு,பிரவுன் என மாறி மாறி காட்சிக்கு தகுந்தாற்போல ஒளி அமைப்பு சிறப்பாய் கையாளப்பட்டுள்ளது.மழை காணாது வறண்ட நிலங்களும்,ஆலிவ் மரங்களும் காமிராவில் பதிவு செய்துள்ள விதம் அருமை. மனதை வருடும் பின்னணி இசை நெருடலின்றி படம் முழுதும் தொடர்கின்றது.வசனம் ஏதும் இன்றி பத்து நிமிடங்களுக்கு மேலாக நீளும் இறுதி காட்சிக்கு பின்னணி இசை பெரும் பலம்.

தனக்கான தேவைகள் எதையுமே டர்லீன் திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ளவில்லை.வாழ்கை அதன் போக்கில் ஏற்று நடத்தும் பெண்ணாய் இருக்கின்றாள். டர்லீனின் கணவர்கள் அவளின் விபரீத முடிவுகளை கண்டு அவளிடம் எதிர்ப்பு காட்டாது அவள் வாழ்கையை அவள் முடிவில் விட்டுவிட்டு தாமும் அவளை பிரிய மனம் இன்றி ஒன்றாய் வாழ்வை தொடர்கிறார்கள். 2000 ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் கேன்ஸ்/டோக்யோ/டொராண்டோ திரை விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.

Thursday, November 20, 2008

வாசிப்பு..தனிமையின் தேடல்!!

சில விஷயங்கள் எத்தனை முறை பேசினாலும் அலுப்பு தருவதில்லை.இலக்கியம்,இசை,சினிமா இவை குறித்து ஒவ்வொரு காலகட்டத்திலும்,வெவ்வேறு பார்வைகள்,ரசனைகள்,விமர்சனங்கள்,எதிர்ப்புகள்..எது எப்படியாயினும் கால சுழற்சியில் நம்மை விட்டு நீங்காது சில காரியங்கள் தொடர்ந்து கொண்டே வருபவை..வாசிப்பும் அதில் ஒன்று.வாசிப்பு அனுபவம் குறித்த தொடர் பதிவிற்கு அழைத்த நர்சிமிற்கு நன்றி..இப்பதிவில் எனது தனிப்பட்ட வாசிப்பு அனுபவத்தை சம்பவங்கள் கோர்வையோடு சொல்லாமல்,முடிந்த வரை படித்த நூல்களை மேற்கோள் காட்டியே எழுத முயன்றிருகின்றேன்.

எங்கள் வீட்டில் சிறிய புத்தக அலமாரி உண்டு,சிறிதும் பெரிதுமாய் நூற்றிற்கும் மேலான புத்தகங்கள் இருக்கும்.இசையும்,இலக்கியமும் ரசிக்க கற்று தந்தது அப்பா.எதை படிப்பது,படித்தால் புரிந்து கொள்ள முடியும் என புத்தகங்களை தரம் பிரித்து எனக்கு பரிந்துரைத்தும் அப்பா.இலக்கியம் குறித்தும்,ராஜாவின் இசை குறித்தும் அப்பாவோடு உரையாடும் பிரிய தருணங்கள் விருப்பதிற்குரிய ஒன்று.


முதல் வாசிப்பு என்றதும் நினைவில் வந்தது சிறுவர்மலர் - கேலி சித்திரங்கள்,நீதி கதைகள்,வினா விடை,புதிர்,தொடர் கதைகள் என குழந்தைகளுக்காகவே வடிவமைக்க பெற்ற அந்த இதழில் படித்த பல கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றது.ராணி காமிக்ஸ்/இரும்புக்கை மாயாவி/அம்புலி மாமா கதைகள் என கழித்த விடுமுறை நாட்கள் மறக்க முடியாதவை.வாசிப்பு கற்பனை திறனை வளர்க்க பெரும் உந்துதல்..ஆங்கில திரைப்படங்களை ஒத்த சாகச காட்சிகள் நிறைந்த மாயாவி கதைகள்,ஓங்கி வளர்ந்த பெண்களும்,குடுமியிட்ட புஷ்டியான ஆண்களும் சித்திரங்களாய் நிரம்பிய அம்புலி மாமாவின் நீதி கதைகள் என குழந்தை பருவத்து புத்தகங்கள் குறித்து சமீபத்தில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த பொழுது திரும்ப அப்புத்தகங்களை படிக்க ஆவல் மிகுந்தது.

>


பேரதிசியமாய் வியந்து படித்த நாவல்கள் "சிந்துபாத்" மற்றும் "அலாவுதீனும் அற்புத விளக்கும்".மாமா வீட்டு புத்தக அலமாரியில் சுஜாதா,பாலகுமாரன் நாவல்களுக்கு மத்தியில் இருந்த சிறுவர் நாவல்களான "தெனாலி ராமன் கதைகள்","அக்பர்- பீர்பால்","சிந்துபாத் சாகசங்கள்","ட்விங்கிள்" மற்றும் அப்பா பிறந்த நாளுக்கு பரிசளித்த "எறும்பும் புறாவும்" , "ஈசாப் நீதி கதைகள்" ஆகியவை இன்றும் என் புத்தக அலமாரியில் உள்ளவை.ஆரம்ப கால வாசிப்பை குறித்து இவ்வளவு விரிவாய் எழுத எழுத எனக்கே ஆச்சர்யம் உண்டாகின்றது. தொலைக்காட்சியும்,கணினியும் குழந்தைகளின் நேரத்தை ஆக்ரமித்து கொண்டுள்ள தற்பொழுதைய சூழலில் நம் காலத்தில் வாசிப்புக்கள் சாத்தியமானத்தில் வியப்பில்லை.

இலக்கியம் என தரம் பிரித்து வாசித்த முதல் நாவல் கி.ரா வின் "பிஞ்சுகள்",அகாதமி விருது பெற்ற சிறுவர்களுக்கான இந்நாவலை படிக்க சொல்லி அப்பா கொடுத்த கணம் இன்றும் நினைவில் உள்ளது.அந்நாவலில் வரும் வேதி நாயக்கர் கதாபாத்திரம் எனக்கு மிக பிடித்த கதை மாந்தர்களுள் ஒன்று.பள்ளி இறுதி ஆண்டுகளில் சாருவின் "கோணல் பக்கங்கள்" படித்த பின் அவரின் எழுத்தின் வசியம் மிகுந்த விருப்பத்திற்குரிய ஒன்றாய் ஆனது, பின் படிக்க தொடங்கியது வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவனின் எழுத்துக்கள்,எதார்த்த நடுத்தர வாழ்வை இயல்பு மாறாமல்,கவித்துவம் கலந்து கூறிய இருவரின் நடையும்,எளிமையும் இவர்களின் எல்லா படைப்புகளையும் தேடி தேடி படிக்க செய்தது.

கி.ரா வின் "கோபல்ல கிராமம்" ,எழுவது அவ்வளவு கடினம் அல்ல என உணர்த்திய நாவல்,கதை சொல்லியிடம் கதை கேட்பது போன்ற உணர்வை தந்த இந்நாவலின் பல காட்சிகளை என் கிராமத்து நிகழ்வுகளோடு சுளுவாய் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது.இன்று நடைமுறையில் இல்லாத கரிசல் பழக்க வழக்கங்கள் பலவற்றை விரிவாய் எடுத்துரைக்கும் இந்நாவல் ஒரு அறிய பொக்கிஷம்.

கல்லூரி நாட்களில் வெளிவந்த எஸ்.ராவின் விகடன் தொடர் கட்டுரைகள் என்னையும் ஈர்த்ததில் வியப்பில்லை.தனது பயண அனுபவங்களை,சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மிக நுட்பமாய் எழுத்தில் வடிக்கும் எஸ்.ரா வின் எழுத்துக்கள் அந்த நேரத்தில் பெரும் ஆறுதலாய் இருந்தது.அழிந்து வரும் நாட்டுபுற கலைகளை தனது பயண அனுபவத்தோடு விவரித்துள்ள அவரின் "இலைகளை வியக்கும் மரம்" தொகுப்பிற்கு எனது விருப்ப பட்டியலில் எப்பொழுதும் இடம் உண்டு.இவை தவிர்த்து என்னை மிகவும் ஈர்த்த நூல்கள் தகழியின் "தோட்டி மகன்",யு.ஆர்.அனந்த மூர்த்தியின் "சம்ஸ்கார",ஜெயகாந்தனின் "ஒரு வீடு,ஒரு மனிதன் ஒரு உலகம்" மற்றும் "என்னை போல் ஒருவன்",பஷீர் மற்றும் வைக்கம் முஹமது மீரானின் படைப்புகள்.

கி.ரா,தி.ஜா,வண்ணதாசன்,வண்ணநிலவன்,சாரு,சுஜாதா என சிறு வட்டத்திற்குள் பயணித்த எனது வாசிப்பு விஸ்தாரம் பெற்றது சென்னை வந்த பின்னரே.பெரும்பாலான நாவல்கள் இலக்கிய நண்பர்கள் பரிந்துரைத்ததே!அதில் முக்கிய நாவல்களாய் நான் கருதுபவை பா.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி",கோபி கிருஷ்ணனின் "உள்ளே இருந்து சில குரல்கள்",ஜி.நாகராஜனின் "நாளை மற்றும் ஒரு நாளே" ,ஆதவனின் "ஏன் பெயர் ராமசேஷன்",கந்தசாமியின் "சாயா வனம்" மற்றும் ஜே.பி.சாணக்யாவின் படைப்புகள்.
விளிம்பு நிலை மனிதர்கள் குறித்த ஜி.நாகராஜன் மற்றும் சாணக்யாவின் பதிவுகள் அது வரை படித்திராத எவரும் எழுத தயங்கும் உண்மை நிலையை விவரிப்பவை.

காண கிடைக்காத உலகை காண்பித்தும்,அன்றாட சந்திக்கும் மனிதர்களை வேறு சூழ்நிலைக்கு பொருத்தி உலாவவிட்டும்,இடத்திற்கு இடம் வேறுபடும் வாழ்கை சூழலை,வாழ்வின் அவலங்களை எடுத்துரைக்கும் ஒவ்வொரு வாசிப்பும் ஒரு புது அனுபவம் தந்தபடி தொடர்கின்றது.வாசிப்பு கட்டாயப்படுத்தி வருவதில்லை, இயல்பாய் சுய ஆர்வத்தின் பேரில் வருவது, எனினும் ஏதேனும் ஒரு உந்துதல் அவசியம்.வாசிக்கும் பழக்கத்தை நம்மோடு நிறுத்தி விடாது மற்றவர்களுக்கு முடிந்தவரை பரிந்துரைக்க வேண்டும்,அதிலும் முக்கியமாய் குழந்தைகளுக்கு.தமிழ் வாசிப்பு என்பது கொடிய விஷத்தை விட மோசமாக தோன்றுகிறது தற்பொழுதைய கணினி யுக குழந்தைகளுக்கு,வாசிப்பின் அவசியமும்,தேவையும் இவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது நமது கடமை.

இத்தனை நீண்டதொரு பதிவை நான் எழுவது இதுவே முதல் முறை.வாசிப்பு குறித்து எழுத இன்னும் இருக்கின்றது படித்து,ரசித்த நூல்களை நினைவில் உள்ள மட்டும் பகிர்துள்ளேன்.தொடர்ந்து வாசிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள நான் அழைப்பது

மாதவராஜ்
உஷா
குப்பன்_யாஹூ
அனுஜன்யா

Thursday, November 13, 2008

நீல.பத்மநாபனின் "பள்ளிகொண்டபுரம்"

மிக சமீபத்தில் வலைப்பதிவு ஒன்றில் கணவனையும்,தம் குழந்தைகளையும் விட்டு வேறொரு ஆணுடன் சென்று விட்ட நண்பனின் மனைவி,இதை எதிர்பார்க்காத நண்பனின் நிலை குறித்த பதிவை படித்த பொழுது மாறிவரும் சமூக சூழலில் பெற்ற பிள்ளைகளை விட்டு வேறு இடம் செல்லும் பெண்களின் மனநிலை குறித்து நினைக்கவே அருவருப்பாய் இருந்தது.குடும்பத்தை விட்டு பிரிய தனிப்பட்ட காரணங்கள் பல இருப்பினும் அதற்கு பலியாகும் ஒன்றும் அறியா குழந்தைகள் பாதிக்கப்படுவது சகித்து கொள்ள முடியாதது.
இது போலவே இந்நாவலும் தன்னையும்,தன் இரு குழந்தைகளையும் விட்டு வேறு ஆணை மணந்த மனைவியின் துரோகத்தை மறக்க முடியாது துன்புறும் அனந்த நாயரின் மனவோட்டத்தை,அவர் பார்வையில் சொல்லுகின்றது.



இரண்டே நாட்களில் நடக்கும் சம்பவங்களோடு,அனந்த நாயரின் மறக்க நினைக்கும் துர் நினைவுகளோடும் கதை மிக எளிமையாய்,நேர்த்தியாய் சொல்லபட்டிருக்கின்றது.
தம் மனைவி கார்த்திகாயினியை பெண்பார்க்க சென்ற பொழுதின் நினைவுகள்,திருமணத்திற்கு பிறகு நகரின் விழா கால கொண்டாட்டங்கள்,மனைவியோடு சந்தோஷித்து இருந்த தருணங்கள்,பின் டி.பி நோய் தாக்கி தான் மருத்துவமனையில் கழித்த நாட்கள்,தன் உயர் அதிகாரி சிதம்பரம் தம்பி கார்த்திகாயினி மீது விருப்பம் கொண்டு அவளை மணக்க செய்த மறைமுக காரியங்கள் என ஒவ்வொரு நிகழ்வையும் அந்த பொழுதின் தம் கொண்டிருந்த மனநிலையோடு எண்ணி பார்க்கிறார் அனந்த நாயர்.

ஒரு மனிதனின் துன்பம் நிறைந்த கடந்த கால வாழ்கையை மட்டும் சொல்லும் நாவலாய் இதை எடுத்து கொள்ள முடியாது.காரணம் மிக அழகாய் வர்ணிக்கபட்டுள்ள பத்மநாபபுர நகரம்.நகரங்கள் குறித்த செழுமையான வர்ணனைகள் மிக கொஞ்ச நாவல்களில் மட்டுமே கிட்டும்.இந்நாவல் அவ்வகையில் மிகச்சிறந்த பொக்கிஷம்.இருபது வருடத்திற்கு முன்பும்,தற்பொழுதும் என மாறி மாறி நகரின் தெருக்கள் ,விழா கால கொண்டாட்டங்கள் ,அரண்மனை காரியங்கள் ,பத்மநாப கோவிலின் மெருகேறி வரும் அழகு ,சங்கு கடற்கரை ஆகியவை குறித்த விவரிப்புகள் யாவும் நிஜ காட்சிகளாய் நம் மனகண்ணில் விரிகின்றது.

இந்நாவலின் ஆசிரியர் நீலபத்மநாபன் தமிழிலும்,மலையாளத்திலும் பல நாவல்கள் எழுதியுள்ளார்.சாகித்திய அகாதமி விருது பெற்ற நீலபத்மநாபனின் வலைத்தளம் அவரின் படைப்புகள்,பேட்டி,பெற்ற விருதுகள் குறித்த தகவல்கள் கொண்டுள்ளது.

நூல் வெளியீடு : மாணிக்கவாசகர் பதிப்பகம்

Thursday, November 6, 2008

பெருமாள் முருகனின் "ஏறுவெயில்"

கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் இழப்புகளை
மிக விரிவாய் நாயகனின் பார்வையில் சொல்லும் நாவல் "ஏறு வயல்".சமுதாய மாற்றங்களினால் கிராமங்கள் மறைகின்றன,விலை நிலங்கள் அழிகின்றன,குடும்ப உறவுகளுக்குள்ளான பிரியங்கள் பின் தள்ளப்பட்டு பணம் முதன்மை பெறுகின்றது இவை யாவையும் ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளோடு சொல்லி இருக்கின்றார் பெருமாள் முருகன்.எந்த வித சமரசமும் செய்து கொள்ளாது கையாண்டுள்ள எழுத்து நடை,கோவை வட்டார பேச்சு மொழி நாவலின் எதார்த்த தன்மையை கூட்டுபவை.

காலனி வீடுகள் கட்ட அரசாங்கத்திற்கு தம் வீட்டையும்,விளை நிலங்களையும் விற்றுவிட்டு பிழைக்க வழி தேடி பிரிகின்றனர் பொன்னையனின் உறவினர்கள்.அந்த சோகத்தின் நீட்டிப்பாய் தொடர்கின்றன பின் வரும் நாட்கள்.தினமும் பணத்தை முன்வைத்து தாய் தந்தைக்கு இடையே நடக்கும் சண்டைகள்,பிள்ளைகளால் தவிர்க்க படும் பொன்னையனின் தாத்தா - பாட்டி,தீய பழக்கங்களுக்கு ஆளாகும் அண்ணன்,சுயநலம் மிகுந்து அறுபடும் உறவுகள் என தன்னை சுற்றி நடப்பவைகளை மௌனியாக கவனிக்கும் பொன்னையனின் பார்வையில் கதை நகர்கின்றது.



1980 களில் கதை நிகழ்வதாய் உள்ளது.அந்த கால கட்ட அரசியல்,சினிமா குறித்த கிராமத்து மக்களின் ரசனை/ பார்வை,திருவிழா நேர கலாட்டாக்கள்,கிராமத்தில் இருந்து புதிதாய் கல்லூரிக்கு செல்லும் மாணவனின் அனுபவங்கள் என கதோயோட்டதொடு சேராமல் துண்டு துண்டாய் பல காட்சிகள் வர்ணனை செழிப்போடு வருகின்றது.இருப்பினும் அக்காலகட்ட விவரிப்புகள் சுவாரஸ்யம் கூட்டுபவையே.

இந்நாவலின் மனிதர்களை சுலபமாய் இருவகையாய் பிரிக்கலாம்.வாழ்வும்,சூழலும் மாறினாலும் மண்ணின் மீதும்,சக உறவுகள் மீதும் கொண்டிருக்கும் பிரியம் குறையாது இருப்பவர்கள்.பொன்னையன்,பொன்னையனின் அப்பா,தாத்தா,பாட்டி இவ்வகையினர்.சூழ்நிலைகேற்ப தம்மை வளைத்து கொண்டு பணத்தை பிரதானமாய் கொண்டு அந்தந்த நேர பொழுதை கழித்தால் போதும் என்னும் மனநிலை கொண்ட பொன்னையனின் தாய்,அக்கா,தி.மு.க வின் மொண்டி ராமு ஆகியோர்.இரு வகையினருக்கும் பொதுவாய் அமைந்து இருப்பது ஜாதிதிமிர் மட்டுமே.

நாவல் குறித்த தம்முடைய உரையில் எழுத்தாளர் விக்ரமாதித்யன் தமிழின் இதுவரை வெளிவந்துள்ள சிறந்த நாவல்களான "புயலிலே ஒரு தோணி","நித்ய கன்னி","நாளை மற்றும் ஒரு நாளே" ,"ஒரு புளிய மரத்தின் கதை" வரிசையில் இந்நாவலும் சேர்த்தி என குறிப்பிட்டுள்ளார்.அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

நூல் வெளியீடு - மருதா பதிப்பகம்