Wednesday, May 20, 2009

ஆர்.கே.நாராயணனின் "மால்குடி டேய்ஸ்"

மால்குடி டேய்ஸ் - பலருக்கும் பரிட்சயமான பெயர் இது.முன்பு தொலைகாட்சியில் தொடராய் வந்த ஆர்.கே நாராயணனின் சிறுகதை தொகுப்பு.தமிழ் அளவிற்கு ஆங்கில இலக்கியம் படிக்க ஆர்வம் இருப்பதில்லை.முதல் முயற்சியாய் இந்த சிறுவர் இலக்கியத்தை படித்து முடித்தேன்."மால் குடி" நாராயணனின் கற்பனை கிராமம்,அதன் சூழல்,அதன் மனிதர்கள் இவற்றை மையப்படுத்தி வெகு எளிமையாய் சொல்லபட்டுள்ள கதைகளின் தொகுப்பு.மால்குடி டேய்ஸ் படிக்க துவங்கியதும் சட்டென நினைவில் வந்து போனது பள்ளியில் பாடத்தில் வாசித்திருந்த சரோஜினி நாயுடுவின் "Bazaar's Of Hydrebad' கவிதை.மிக சில வரிகளில் ஐதராபாத்தின் ஜன நெருக்கடி மிகுந்த கடை வீதி ஒன்றை நுட்பமாய் வர்ணித்திருப்பார்.



மால்குடி டேய்சின் கதை நாயகர்களை தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர் எந்த சிரமமும் மேற்கொள்ளவில்லை. தபால்காரர்,ரோட்டோர ஜோசியக்காரர்,அலுவலக காவலர்,மருத்துவர்,ரோட்டோர பலகார கடை வைத்திருப்பவர் என நாம் அன்றாட காண நேரிடும் நபர்களையே மையப்படுத்தி,சிறு கருத்தை வலுயுறுத்துவதாய் உள்ளன இச்சிறுகதைகள்.இத்தொகுப்பை குழந்தைகளுக்கு மட்டும் என ஒதுக்கி விட முடியாது,கற்பனைக்கு மீறிய சாகசங்களோ,மாயஜாலங்களோ ஏதும் இல்லாவிடினும் வாழ்க்கைக்கு தேவையான பாடங்களை தாங்கி உலவுகின்றன இக்கதைகள்.

முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பில் இருந்து மிக பிடித்த சில கதைகளை பகிர்ந்து கொள்கின்றேன்."An Astrologer's day",ஊரை விட்டு ஓடி வந்து பிழைக்க வழி இல்லாது ஜோசியகாரனாய் வேடம் தரித்து நடைபாதையில் கடை விரித்திருக்கும் நாயகனின் ஒரு நாள் பொழுதினை விவரிக்கும் கதை.ஜோசியம் கேட்கவந்தவனை கவர அவன் சொல்லும் ஒரே மாதிரியான குறிப்புகள்,அலுப்பில்லாமல் சொல்லும் பொய்கள் நகைப்பிற்குரியதாய் இருப்பினும் அவனின் தினக்கூலி அவன் நடிப்பின் சிறப்பை பொறுத்தே!!"Tiger's Claw",புலியுடன் தான் நிகழ்த்திய சாகச நிகழ்வை கிராமத்து சிறார்களுக்கு விளக்கும் ஒரு வீரனின் கதை."Leela's Friend", திருடனாய் இருந்து திருந்திய ஒருவனோடான ஒரு குழந்தையின் உறவை/நட்பை விளக்கும் கதை.

"Missing Mail", வெயிலும்,மழையும் பாராது சைக்கிளில் அலைந்து தபால் பட்டுவாடா செய்யும் தபால்காரர்களிடம் உற்சாகாதையோ,சீரான நட்பையோ எளிதில் கண்டு பெற்றுவிட முடியாது.பொதுவான இந்த குணத்திற்கு மாறாக இக்கதையின் நாயகன் எல்லோரிடத்திலும் பேரன்போடு, பொதுவான காரியங்களை பகிர்ந்துகொள்வதோடு துன்ப பொழுதில் உதவும் உற்ற நண்பனாகவும் சித்தரிக்கபட்டுள்ளார்.மேலும் "Mother and a Son","Shadow","Ishwaran","Wife's Holiday" ஆகிய கதைகளும் சிறந்தவையே.மால்குடி கற்பனை கிராமமாய் இருந்தாலும்,அதன் சூழலும்,மனிதர்களும் எல்லா இந்திய கிராமங்களுக்கும் பொதுவானவையே..

வெளியீடு - Indian Thoughts Publications

விலை - 110 ரூபாய்

21 comments:

Anonymous said...

இன்னும் படிச்சதில்லே....
படிக்கனும்...

M.Rishan Shareef said...

'மால்குடி டேய்ஸ்' எனது சிறிய வயதில் தொலைக்காட்சியில் தொடராகப் பார்த்த ஞாபகம் இடறுகிறது. மீண்டும் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டது உங்கள் வரிகள். புத்தகம் கிடைப்பின் நிச்சயம் பார்க்கிறேன். நன்றி லேகா !

குப்பன்.யாஹூ said...

லேகா அருமை,

ஆர கே நாராயணன் நான் மிகவும் நேசிக்கும் ஒரு எழுத்தாளர், நான் அவரின் வெறியன் என்றே சொல்லலாம்.

அவர் நாவலை படித்த பிறகே மைசூர் சென்று அந்த இடங்களில் எல்லாம் அலைந்து திரிந்தேன்.

The Guide - படியுங்கள், ஹிந்தி திரைப்படமாகவும் வந்தது. ஆங்கில பதிவர் மாமி இன எழுத்து ஆர கே நாராயணன் நடையில் இருக்கும்.

ஆர கே பற்றிய பதிவிற்கு நன்றிகள் பல.



Rasipuram Krishnaswamy Ayyar Narayanan's other famous books are, The vendor of sweets, swami & his frds, the world of Nagraj, The englihs teacher, Talktaive Man, Bachelor of Arts


kuppan_yahoo

அருண்மொழிவர்மன் said...

எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளர். முதன் முதலில் இவரது Swamy and friends, ம் பின்னர் Waiting for Mahatma" ம் வாசித்தேன். அதற்குப்பிறாகு இவரது Malgudi Days வாசித்தேன். அண்மையில் ஒரு தொகுப்பாக இவரது கதைகள் the word of Malgudi என்ற பெயடில் வாசித்தேன். கனேடிய பொது நூலகங்களில் எல்லாம் கிடைக்கின்றது.

எனக்கு இவரது எழுத்துக்களை படிக்கின்றபோது சுஜாதாவின் ஸ்ரீ ரங்கத்துத் தேவதைகள் நினைவு வரும். அண்மையில் அ.முத்துலிங்கத்தில் உண்மை கலந்த நாட்குறிப்புகள் படிக்கும் போது இதே உணர்வேற்பட்டது. அனேகமாக அங்கதம் கலந்த எழுத்துக்கள் இருவருக்கும் பொது என்பதால் இருக்கலாம்.....

லேகா said...

வருகைக்கு நன்றி அனானி.

லேகா said...

பகிர்விற்கு நன்றி ரிஷான்.

கட்டாயம் வாங்கி படியுங்கள்.

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி ராம்ஜி.

நாராயணின் பிற நூல்களை குறித்த தகவலுக்கு மிக்க நன்றி.

Guide - திரைப்படம் பார்த்துள்ளேன்.

லேகா said...

வருகைக்கு நன்றி அருண்.

முத்துலிங்கத்தின் நூல் அறிமுகத்திற்கு நன்றி.நிச்சயம் படிக்க முயல்கின்றேன்.

Venkatesh Kumaravel said...

இதே கதைகள் தூர்தர்ஷனில் தொடராக வந்தது குறித்து சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்னார். அவர் குறிப்பிட்டது ஒரு பிச்சைக்காரனையும் நாயையும் பற்றிய ஒரு காட்சி. அவர் விவரிக்கையிலேயே மனச்சித்திரங்கள் வரையலாயினேன். கூடிய விரைவில் படிக்கலாமென்றிருக்கிறேன். நல்ல பயனுள்ள தளமாக இருக்கிறது உங்கள் வலைப்பூ. நன்றிகள். :)

சந்தனமுல்லை said...

நல்ல பகிர்வு! சின்ன வயசிலே படிச்சிருக்கேன் இந்தக் கதைகளையும், ஸ்வாமி அண்ட் ஹிஸ் ஃபெரெண்ட்ஸ் கதைகளையும்! இப்போவும், போரடிக்கும்போது, சுவையான ஒரு வாசிப்புக்காக படிப்பதுண்டு. நீங்கள் குறிப்பிட்டக் கதைகள் என்னையும் கவர்ந்ததுண்டு! கதையினூடாக இழைந்துச் செல்லும் மெல்லிய நகைச்சுவைத் தொனி அதன் சுவாரசியம்!

கே.என்.சிவராமன் said...

லேகா,

இதுவரை வாய்ப்பு கிடைத்தும் ஆர்.கே. நாராயணனை வாசித்ததில்லை. அப்படி சில காரணங்களால் வாசிக்காமல் விட்ட பல பிரதிகளை இப்போது படிக்க வேண்டும் என முடிவுக்கு வந்திருக்கிறேன். அந்தநேரத்தில் இந்தப் பதிவை வாசிக்க நேரிட்டது.

உங்களுக்குப் பிடித்த சில சிறுகதைகள் குறித்து சுருக்கமாக, அதேநேரம் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள், அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் என்று மட்டும் இப்போதைக்கு சொல்ல முடியும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Ragztar said...

மால்குடி என்ற பெயரே ஒரு nostalgic.

கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்த நினைவுகள் பசுமையாய்.
பதிவுக்கு நன்றி

Anonymous said...

I loved the music given by
L. Vaidyanathan for Malgudi days in DD.

The stories evoke a bygone era when things were simple and laidback. However I wonder if the stories would have received so much recognition if Graham Greene had not endorsed them.

Guide had excellent music by S.D Burman. There was an english version of this film directed by the writer Pearl.S. Buck(If I am not mistaken).

Ajay

லேகா said...

வருகைக்கு நன்றி வெங்கி ராஜா.

நீங்கள் குறிப்பிடும் அக்கதை "shadow".நிழல் போல ஒரு பிச்சைக்காரனை தொடரும் நாயை குறித்த கதை.எத்தனையோ துன்பம் விளைவித்தாலும் எஜமானனை விடு விலகாது அவனுடன் பொழுதை கழிக்கும் நாயை குறித்த கதை.

லேகா said...

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி சந்தன முல்லை.உங்க பெயர் அருமை.

சாமி அண்ட் ப்ரெண்ட்ஸ் - கிளாசிக் வகை!!

லேகா said...

நன்றி பைத்தியக்காரன்

நன்றி ஓவியன்

லேகா said...

நல்ல இலக்கியம் திரையில் உயிர் பெறும்பொழுது அது மேலும் சிறக்க இசையின் துணை அவசியம்.அவ்வகையில் நீங்கள் குறிப்பிட்டது போல எல்.வைத்தியநாதனின் இசை அமைந்து இருந்தது.

வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி

அ.மு.செய்யது said...

மால்குடி டேய்ஸ் தொலைக்காட்சி தொடரில் பார்த்திருக்கிறேன்.ஆனால் வாசித்ததில்லை.

// Bazaars of hyderabad //

எப்படி ஞாபகம் வெச்சிருக்கீங்க.,,பள்ளியில் எந்த வகுப்பு என்று எனக்கு நினைவு இல்லை.
ஆனால் ஆங்கில புத்தகத்தில் ஒரு பாடமாக வந்தது.

லேகா said...

வருகைக்கு நன்றி செய்யது

சரோஜினி நாயுடுவின் வர்ணிப்பு அவ்வளவு சிறப்பாய் இருக்கும்.மனித சந்தடி மிகுந்த பகல் பொழுதொன்றில் ஓயாது கூவி கொண்டிருக்கும் வியாபாரிகளையும்,அவர்களின் கடைகளையு வர்ணித்த படியே செல்லும் கவிதை அது!!

சாணக்கியன் said...

நானும் இப்புத்தகத்தை 5 ஆண்டுகள் முன்பு வாங்கி பாதி படித்திருக்கிறேன். சின்னச் சின்னக் கதைகள் என்பதால் இடையிடையே time filler ஆக படிக்கலாம். டி.வி.யில் வெளிவந்த தொடர் இப்போது CD-ல் கிடைக்கிறது...

deesuresh said...

மால்குடி டேய்ஸ் பற்றிய ஒரு மலரும் நினைவுகளை உங்கள் பதிவு உருவாக்கி விட்டது. சுவாமியும் சிநேகிதர்களும் (swamy & friends ) கதையை விகடன் பதிப்பகம் தமிழில் தந்தது ஜீவன் மாறாமல். ஆர்.கே.என் அவர்களின் சிறப்பே எளிமையான நடை தான்.

நன்றி லேகா