Sunday, August 31, 2008

தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு "சிலிர்ப்பு"

தி,ஜானகிராமனின் "மோகமுள்" "அம்மா வந்தால்" "மரபசு" "கமலம்""நளபாகம்" நாவல்களை போல அவரது சிறுகதைகள் பிரபலமடையவில்லை.தி.ஜாவின் சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து காலச்சுவடு வெளியிட்டுள்ள "சிலிர்ப்பு" சிறுகதை தொகுதி படிக்க கிடைத்தது. ஜானகிராமனின் பிரபல சிறுகதைகள் "அக்பர் சாஸ்திரி" , "சிகப்பு ரிக்சா","சிலிர்ப்பு","கடன் தீர்ந்தது" ஆகிய சிறுகதைகள் அடங்கிய இத்தொகுதி சுவாரசியமானது.ஜானகிராமன் கதைகளில் வர்ணனைகளுக்கும்,விவரிப்புகளுக்கும் முக்கியத்துவம் இன்றி கதா பாத்திரங்களின் உரையாடல் மூலம் அவர் மனநிலையும்,இயல்பும் வெளிப்படும்.இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள் யாவும் அவ்வண்ணமே சொல்லப்பட்டுள்ளது.

அக்பர் சாஸ்திரி:நோயும் பிணியும் மனிதனை துரத்தும் அழையா விருந்தாளிகள்.ஒரு ரயில் பயணித்தின் பொழுது நோயால் அல்லால் படும் சக பயணிகளிடம் கை வைத்யம் கூறி உற்சாகமாய் பேசி வரும் சாஸ்திரி ஒருவரின் பேச்சால் யாவரும் பேரு ஆவல் கொண்டு அவரிடம் தங்களின் நோய் கூறுகளை கூறி,வைத்தியருக்கு செலவு செய்யும் வேதனையை பகிர்கின்றனர்.உடன் வரும் ஒரு குடுபத்தின் தாய்,குழந்தைகள்,தந்தை என யாவருக்கும் வீட்டு வைத்திய முறைகளை சொல்லி இதுவரை வைத்தியர் வீட்டு செல்லாத தன் நிலை குறித்து பெருமையாய் பேசி கொண்டே இருக்க,சட்டென மார்வலி வந்து உயிர் நீக்கிறார்.இறுதிவரை மருத்துவரை நாடி செல்லாது தன் பெருமையை இளைனாடிய அவரை கண்டு அங்குள்ளோர் யாவரும் வியக்கின்றனர். மேலோட்டமாக பார்த்தால் இது சராசரிக்கும் கீழான கதையாக தோன்றும்,சற்றே ஆழ்ந்து வாசித்தால் அதன் உள்ளார்ந்த அர்த்தம் புரியும்.


சிகப்பு ரிக்சாஇச்சிறுகதை வெளிவந்தது 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும். அன்று ட்ராம்(சாலை வலி தண்டவாளத்தில் செல்லும் ரயில்) எனபடுவதை இன்றைய மின்சார ரயிலாக எடுத்து கொள்ளலாம்.நெருக்கடி மிகுந்த ட்ராம் பயணத்தில் பெண்கள் படும் உளைச்சலே இக்கதை கரு.பத்திரிக்கை ஆசிரியர் பார்வையில் பயணிக்கும் இக்கதை. தன் உடன் தினமும் ட்ராமில் பயணம் செய்யும் கெட்டிகார யுவதியின் ஒருத்தியின் அன்றாட அவஸ்தைகளை கவனித்து வருகிறார். எல்லா சந்தர்ப்பங்களிலும் துடுக்காய் பேசி புத்திசாலியாய் வெளிப்படும் அப்பெனின் தைரியத்தை எண்ணி வியக்கிறார்.அப்படி பட்ட பெண்ணே ஒரு நாள் கூட்ட நெரிசலாலும்,உடன் வரும் ஆடவர்களின் தொல்லையாலும் ட்ராம் பயணத்தை விடுத்து தனக்கென தனியானதொரு சிகப்பு நிற ரிக்சாவை அமர்த்தி கொள்கிறாள்.இக்கதை எல்லா காலகட்டத்திற்கும் பொருந்திவருவது.


சிலிர்ப்பு :
குழந்தை தொழிலாளர்கள் நிலையை விவரிக்கும் இக்கதை நிகழும் இடமும் ரயிலே..
தன் மகனோடான ரயில் பயணத்தில் தூர நகரம் ஒன்றிற்கு வீட்டு வேலை செய்ய அழைத்து போகும் சிறுமியை காண்கிறான் நாயகன்.தன் மகனை காட்டிலும் இரண்டு மூன்று வயதே பெரியவளான அச்சிறுமி ஏழ்மையின் காரணமாய் வீட்டுவேலைக்கு அழைத்து செல்லப்படும் கொடுமையை எண்ணி வருந்தும் நாயகன் தன் நடுத்தர வர்க்க சுமையை கருதாது அச்சிறுமி கையில் சிறுது பணம் தந்து வலி அனுப்புகிறான்.நம்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறை முற்றிலுமாய் ஒழிக்கபடவில்லை.உணவகங்களிலும்,ஜவுளி கடைகளிலும்,லாட்ஜ்களிலும் இன்றும் சிறுவகள் பணியில் உள்ளனர்.அதிலும் ஏழை சிறுமிகள் வீட்டு வேலை செய்து பிழைக்க வெளிநாடிகளுக்கும்,வேறு மொழி அறிய ஊர்களுக்கும் அழைத்து செல்லப்படும் கொடும் இன்றளவும் உள்ளது!!வண்ணதாசனின் "நிலை" சிறுகதை போல இதுவும் ஏக்கம் மிகுந்த சிறுமியின் உள்ள வெளிப்பாடே.

கடன் தீர்ந்ததுநம்பிக்கை துரோகத்தின் விலை மரணம் என்பதை சொல்லும் இக்கதை கிராமத்து பின்னனிகொண்டது.யாவராலும் மதிக்கப்படும் ஊரின் பெரியவர் தன் சொத்துக்கள் அனைத்தையும் விலை நிலம் வாங்க ஏமாற்றுக்காரன் ஒருவனிடம் கொடுத்து விட்டு துன்புறுகிறார்,இறுதியில் போலீசின் வசம் சிக்கும் அவன் அவரிடம் பணம் பெறவில்லை என கூறி தப்பிக்க,சிறிது நாட்களில் பெரு நோய் கண்டு படுத்த படுக்கை ஆகிறான்.அந்நிலையில் அவனை காணசெல்லும் பெரியவர் அவனிடம் ஒரு ரூபாய் பெற்று கொண்டு கடன் தீர்ந்தது என கூறி விடைபெறுகிறார்.அந்த குற்ற உணர்ச்சி அவனை மேலும் வியாதிகுள்ளாக்குகிறது.கதையின் ஒரு இடத்தில் அக்கிராமத்தின் காலை பொழுதினை விவரிக்கும் இடம் அழகு,படித்ததும் சட்டென நினைவிற்கு வந்தது மோகமுள் திரைப்பட பாடல் வரிகள்..

"ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்
காகங்கள் கரிந்து புலர்கின்ற பொழுதில்
நெல் மூட்டை சுமந்து வில்வண்டி இழுக்கும்
மாட்டின் மணியோசை மயக்கும் இதமான
இளங்காலை இசை வந்து மனதோடு மயக்க..."


வெளியீட்டார் - காலச்சுவடு பதிப்பகத்தார்
விலை - 150 ரூபாய்

Thursday, August 28, 2008

புதுமைபித்தனின் "காஞ்சனை"- வேற்று வெளி அனுபவங்கள்!!

நாம் அறியா,அறிய விழைந்திடாத நிகழ்வுகள்/சம்பவங்கள் குறித்த சம்பாஷனைகள் எப்பொழுதும் சுவாரஸ்யம் கொண்டவை.ஆவி,பேய்,பிசாசு குறித்த நம்பிக்கையும்,செய்திகளும் நகர வாழ்வில் மிகக்குறைவு,அதுவே கிராமபுறங்களில் நாள் ஒரு ஆவியும் பொழுதொரு பேயுமாக மக்கள் பேசுவதற்கு குறைவின்றி பொழுதுகள் செல்லும்.ஒவ்வொரு முறை கிராமத்திற்கு செல்லும் பொழுது ஏதேனும் ஒரு கதை கேட்க கிடைக்கும்,நகரத்தில் ஆவி பேய்களின் தாக்கம் இல்லாதது ஏன் என்பது எப்போதும் எழும் கேள்வி!

கடந்த ஒருவாரமாக,எங்கள் அறையில் இரவு எதோ கொலுசொலி கேட்பதாகவும்,இரவில் யாரோ புலம்புவதாகவும் தெரிவதாக உணர்ந்து(??!!) அது குறித்து பேசி கொண்டிருக்கையில்..எங்கோ எப்போதோ கேட்ட கதைகள்,அமானிஷிய உலகம் குறித்த திரைப்படங்கள்,நம்பிக்கைகள் என விவாதம் எங்கெங்கோ சென்றது.இறுதியில் அப்பெண் யாராக இருப்பினும் பார்த்தால் பேசி கேட்டுக்கொள்ளலாம் என முடிவாகிற்று...எங்கள் அதிக பட்ச கிண்டல் தாளாமல் அப்பெண் கோபித்து கொண்டால் போலும், அதன் பின்னான இரவுகள் அமைதியாக செல்கிறது.
அவ்விவாததிற்கு பிறகு எனக்கு புதுமைபித்தனின் "காஞ்சனை" சிறுகதை மீண்டும் படிக்க வேண்டுமென தோன்றியது.அவரின் மற்றுமொரு அற்புத படைப்பு.வார்த்தைகளால் பயம் உண்டு பண்ண முடியும் என்பதிற்கொரு உதாரணம்.எழுத்தாளனான நாயகனுக்கு ஓர்
இரவில் உணரும் பிண வாடையும்,ஊதுபத்தி வாசனையும் பயம் தர,அப்பயம் மறையும் முன்னர் வேலைகாரியாக காஞ்சனை என்னும் பேய் ஒருத்தி வீட்டிற்க்கு வந்து சேர்கிறாள்.அவளின் விசித்திர குணாதிசயங்களும்,நித்திய மர்ம புன்னகையும்,பயம் காட்டும் உருவங்களும் எழுத்தாளனை தொடர்ந்து வர,ஒரு இரவு பொழுது மாயமாய் மறைந்து போகிறாள் காஞ்சனை..புதுமைபித்தனின் படைப்புகள் பல்வேலு தளங்களில் பயணிப்பவை.
அவரது "பொன்னகரம்" "செல்லம்மாள்" "ஒரு நாள் நாள் கழிந்தது" வரிசையில் எனக்கு பிடித்த மற்றொரு கதை "காஞ்சனை".

ஆவி உலகம் குறித்த தமிழ் திரை வர்ணனைகளும் காட்சிகளும் பயத்திற்கு பதில் சிரிப்பு மூட்டுவதாகவே இருக்கும்,எதார்த்தம் என்பது துளியும் இல்லாது வெள்ளை சேலை மங்கைகளின் உலா வெளியாக சித்தரிக்கபற்றிருகின்றது இதுவரை!!அந்தவிதத்தில் ஆங்கில திரைப்படங்கள் பல எதார்த்த வகை திகில் அனுபவங்கள் தரவல்லவை.சில உதாரணங்கள் "Halloween" "Emilie Rose" "The Grudge" "The village""Sixth sense" "Ring",Rosemary's baby,"Exorcist".

புதுமைபித்தனின் "பொன்னகரம்" "செல்லம்மாள்" "ஒரு நாள் நாள் கழிந்தது" வரிசையில் மற்றொமொரு அற்புத முயற்சி "காஞ்சனை". "காஞ்சனை" போன்றதொரு அனுபவத்தை தரவல்லது சாருவின் "ரங்கையன் கோட்டை",அவரின் நேநோ சிறுகதை தொகுதியில் படித்த நியாபகம்.இவ்வகை தமிழ் படைப்புகள் வேறு இருப்பின் பரிந்துரைக்கவும்.

Monday, August 25, 2008

அசோகமித்ரனின் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள் தொகுப்பு

சமீபத்தில்,தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் தமக்கு பிடித்த சிறுகதைகளை தொகுத்து அசோகமித்திரன் வெளியிட்டுள்ள தொகுதி படிக்க கிடைத்தது.1980'களில் வெளிவந்த இத்தொகுப்பு மிகச சிறந்தவை என வகைப்படுத்த படும் தமிழ் சிறுகதைகளை கொண்டது.வண்ணநிலவன்,வண்ணதாசன்,ஜெயகாந்தன்,ராஜநாராயணன்,சுஜாதா,ஆதவன்,நீலபத்மநாபன்,அழகிரிசாமி,கிருஷ்ணன் நம்பி ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் இதில் அடங்கும்.சக எழுத்தாளர்களின் சிறந்த படைப்பை ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருப்பதால் அச்சிறுகதைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.
வண்ணநிலவனின் "எஸ்தர்"

வண்ணநிலவன் சிறுகதைகளுள் பெரும் வரவேற்பை பெற்ற சிறுகதை "எஸ்தர்" - மழை பொய்த்தால் விவசாயம் கேட்டு உணவின்றி வாழ்வே கேள்விக்குறியாகி போன குடும்பம்பதை பற்றிய கதை.அவ்வீட்டின் மூத்தவளான விதவை எஸ்தர்,பெரும்பஞ்ச காலத்தில் யாவரையும் அரவணைத்து குடும்பத்தை வழி நடத்தி செல்வதே இச்சிறுகதை.ஆரவாரமின்றி நகரும் இக்கதையில் நிலவும் ஒரு அமானிஷ்ய அமைதியானது பஞ்ச காலத்தில் விவசாயிகளின் நிலையை சொல்லுகின்றது.மேலும் பெரும்பாலான நிகழ்வுகள் சிம்மினி வெளிச்சத்தில் இரவின் துணையோடு நகர்வது மேலும் வேதனை மூட்டுவதாய் உள்ளது.துயர பிடியில் சிக்கிய ஒரு குடும்பத்தின் வழி மிகுந்த கதை..

வண்ணதாசனின் "தனுமை"வண்ணதாசன் சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று தனுமை.அழகிய காதல் கதை.நாயகன் நாயகியோடு பேசாமலே.. பார்வையால்,எண்ணகளால்,உணர்வால் பிரியம் கொள்வதை அமைந்துள்ளது.மழை பெய்து ஓய்ந்த ஒரு நாளில் நாயகி தாணு சாலையில் நடத்து வருவதாய் வண்ணதாசன் அமைத்துள்ள காட்சி அழகிய கவிதை. நாயகன் தனுவின் நினைவாக தனிமையில் அமர்த்து இருக்கும் ஒரு காட்சியை"தனியாகி…தனுவாகி.." என வர்ணிக்கும் பொழுது கல்யாண்ஜி வெளிபடுகிறார்.கதைக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் பின்பாதி கதை மழையோடு பயணிக்கிறது.எழுத்தாளர் பாவண்ணன் பல்வேறு எழுத்தாளர்களில் சிறந்த கதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்..அதில் வண்ணதாசன் சிறுகதைகளில் அவர் தேர்ந்து எடுத்தது தனுமையே ..

கி.ராஜநாராயணனின் "நாற்காலி"கி.ராஜநாராயணனின் "வெட்டி" சிறுகதை தொகுப்பில் முன்பொருமுறை இக்கதை படித்து இருக்கின்றேன்.பொதுவாகவே கிராமத்து மக்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.கரிசல் இலக்கியத்தில் நகைச்சுவை புகுத்தி எழுதுவதில் வல்ல கி.ராவின் மற்றுமொரு நகைச்சுவை புனைவு இது.முக்காலிக்கு விடை கொடுத்து நாற்காலி பயன்படுத்த ஆசைப்பட்டு தேர்ந்த மரத்தினால் நாற்காலி ஒன்றினை செய்து வீட்டில் வைக்கின்றனர்.அந்த நாற்காலியோ ஊரில் எழவு வீடுகளில் சவத்தினை சார்த்தி வைக்க பயன்பட தொடங்குகிறது...மிகுந்த ஹாசியம் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கதை கிராமத்து பேச்சு வழக்கு,மாமன் மச்சான் உறவுகளில் நிலவும் கேலி,கிண்டல் என இயல்பாய் சொல்லப்பட்டுள்ளது.


ஜெயந்தனின் "பகல் உறவுகள்"

ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு தம்பதியினர் வெளி உலகுக்கு ஆதர்ச தம்பதியினராகவும்,யாவரும் வியந்து பார்ப்பவர்களாகவும் தெரிந்தாலும் வீட்டினுள் இருவருக்குள்ளும் நிகழும் சண்டை,வார்த்தை போர், விருப்பமின்மை என தினமும் நகரும் நாட்களோடு பகலில் அலுவலகத்திலும்,வெளியிலும் கொண்டிருக்கும் உறவினை பற்றிய இறுக்கம் மிகுந்த கதை.எஸ்.ராவின் எழுது நடையை போன்றதொரு உணர்வை குடுக்கின்றது..வெகு வித்தியாச நடை.

நாஞ்சில் நாடனின் "ஒரு "இந்நாட்டு மன்னர்"

நான் படிக்கும் முதல் நாஞ்சில் நாடனின் கதை.முற்றிலும் வட்டார பேச்சு நடையுடன் படிக்க சுவாரசியமாய் உள்ளது.சு.ரா வின் ஒரு புளிய மரத்தின் கதை நாவலில்,தேர்தலின் பொழுது ஏழை கிழவருக்கு புத்தாடை குடுத்து காரில் அழைத்து சென்று ஓட்டு போட வைப்பார். அது நாவலின் ஒரு சிறு பகுதி. ஒரு இந்நாட்டு மன்னர் சிறுகதை அப்படி அலைந்து செல்லபடும் வைத்தியன் என்னும் கிழவரின் தேர்தல் சமய அனுபவங்களே..சற்றே நகைச்சுவை கலந்து தேர்ந்தால் கால நிகழ்வுகளை கூறி இருக்கும் விதம் நன்று.

"கிருஷ்ணன் நம்பியின் "மருமகள் வாக்கு"1960 களில் வெளிவந்துள்ள இச்சிறுகதை மாமியார் மருமகளுகுள்ளான உறவினை பற்றியது.ஆதிக்க மனநிலை கொண்ட மாமியார்,எதையும் எதிர்த்து கேட்க துணியாத மருமகள் என இக்காலத்திற்கு சிறிதும் பொருந்தாத கதை நடை படிக்க வியப்பாக உள்ளது.தனிச்சையான முடிவு எடுக்க தைரியமில்லாத பெண்கள் இன்றும் உண்டு என்ற போதிலும் சார்பு நிலை அக்காலதினை போல இன்றில்லை.மாமியாரின் மீது கொண்ட பயமோ,பக்தியோ,சொல்ல முடியாத அன்போ எதுவோ ஒன்று தனக்கு பிடித்த கட்சிக்கு கூட வாக்களிக்க முடியாமல் செய்து விடுகிறது அவளை..திடமான மனநிலையும்,தைரியமும் பெண்களுக்கு மிகுந்த தேவை என சொல்லாமல் சொல்லும் கதை.

இந்திரா பார்த்தசாரதியின் "தொலைவு"

டெல்லியில் நடைபெறுவதாய் வரும் இக்கதை நடுதரமக்களின் பொருளாதார சிக்கலை முன்னிறுத்தி சொல்லப்பட்டது.ஒரு தந்தையும் மகளும் மாலை பொழுதில் வீட்டிற்கு செல்ல ஆட்டோ பிடிக்க அலைவதே கதை..ஜன நெருக்கடி மிகுந்த மாலை பொழுதுகளில் பேருந்துகளும்,ஆட்டோக்களும் தன் இருப்பை பெருமை படித்தி கொள்ளும் வண்ணம் ஆட்களை திணித்து கொண்டு செல்லும் காட்சிகள் நாம் தினமும் காண்பதே.டாக்சியில் செல்வதை தவிர்த்து மகளுடன் நடந்தே பல தூரம் சென்று ஆட்டோவை தேடி அலையும் சராசரி அரசு ஊழியனான நாயகன் புலம்பும் இடங்கள் எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தி வருவதே!!

அசோகமித்ரனின் "காலமும் ஐந்து குழந்தைகளும்"நேர்முக தேர்விற்கு செல்ல ரயிலை பிடிக்க ஓடும் ஒரு இளைஞனின் சில நிமிட மனோட்டமே இச்சிறுகதை.நவீன இலக்கிய வகையை சேர்ந்த இக்கதை, இயந்திர ஓட்டத்தில் யாருக்காகவும் காத்திராத ரயிலினை கனவுகளோடும்,கடந்த காலங்களின் வேதனையோடும்,பெரும் நம்பிக்கையோடும் நெருங்கும் வேலை இல்லா இளைஞனின் அந்நேர மனவோட்டங்களை இயல்பாய் கூறி இருக்கும் விதம் நன்று.யாரையும் பொருட்படுத்தாது வேகமாய் செல்லும் அவன் கண்ணில் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் ஐந்து குழந்தைகள் தென்பட அவர்கள் குறித்த சிந்தனையும் வந்து மறைகிறது..நம்மில் பலருக்கு இந்த அனுபவம் உண்டு,அடித்து செல்லும் இயந்திர வாழ்வில் நின்று நிதானித்து பிற மனிதர்களின் துக்கங்களில் பங்கு கொள்ள யாருக்கும் விருப்பமும் இல்லை நேரமும் இல்லை.


நூல் வெளியீட்டார் -நேஷனல் புக் டிரஸ்ட்
விலை - 18 ரூபாய்

Thursday, August 21, 2008

வண்ணநிலவனின் "கம்பா நதி"

எப்பொழுதும் எனக்கு எண்பதுகளின் மீது ஒரு பிரியம் உண்டு,இளையராஜாவின் இசையை தவிர்த்து மற்றும் ஒரு காரணம் வண்ணதாசன்,வண்ணநிலவனின் கதைகளும் அதன் மாந்தர்களும் அக்காலகட்டதினரே..இக்கதைகளில் விவரிக்கப்படும் புன்னை,வாதாம்,நாகலிங்க மரங்கள் ,மலை,அருவி,சாலை,தெருக்கள்,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லாவற்றோடும் மிக நெருக்கமாய் உணர்வேன்.வண்ணநிலவனின்/வண்ணதாசன் கதை மாந்தர்கள் மிக இயல்பானவர்கள்,பகட்டான பெண்களோ,சாகசம் புரியும் ஆண்களோ அல்லாமல் நம்மில் ஒருவராய் நுண்ணறிவு கொண்டவர்களாய் நடமாடுபவர்கள்.வண்ணநிலவன் படைப்புகளில் குறிப்பிடதக்கவை "எஸ்தர்" ,"ரைநீஸ் ஐயர் தெரு" ,"தாமிரபரணி கதைகள்"(சிறுகதை தொகுப்பு) மற்றும் "கம்பா நதி". திருநெல்வேலி வட்டார மொழியாடளோடு தாமிரபரணி நதி சார்ந்த பகுதிகளின் நிகழ்வாய் இக்கதைகள் சொல்லபட்டிருக்கும்.கம்பா நதி ஒரு நடுத்தர குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகளோடு அவர்களுக்குள்ளான விருப்பங்கள்,தேவைகள்,சிக்கல்கள்,பிரியம்,காதல்,ஏக்கம் என சகல உணர்வுகளின் பிரதிபலிப்பு.

வேலை தேடும் பாப்பையாவின் தந்தைக்கு இரு மனைவிகள்,அக்கா சிவகாமி,விருப்பம் கொண்ட காதலி கோமதி - இவர்களுக்குள்ளான பிரியம்,உறவு,சம்பாஷனைகள் என நாவல் முழுவதும் உறவுகளின் ஊடே பயணிக்கிறது.நெருக்கடி மிகுந்த நடுத்தர குடும்ப வாழ்கையின் அன்றாட நிகழ்வுகளை மிகுந்த கற்பனை இன்றி அதன் போக்கில் வெகு இயல்பாய் விவரித்துள்ள பாங்கு நன்று.
நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இடம் படித்து முடித்து வேலை தேடும் படலத்தில் ஈடுபடும் காலங்கள்,அப்போதைய நமது மனநிலை.ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்தித்த பிறகும் வெற்றிக்கான தேடல் நீங்காது தொடரும் அந்நாட்கள் எளிதில் மறக்கக்கூடியது அல்ல.பாப்பையா வேலை தேடும் நாட்களில் கொள்ளும் கசப்பான மனநிலை,வேலை பெற்று வெளி ஊரில் இருக்கும் நண்பர்கள் குறித்த ஏக்கம்,பிரியத்திற்குரிய பெண்ணிடம் பழக அஞ்சி ஒதுங்கும் நிலை ஆகியவை சொல்லப்பட்டுள்ள விதம் நன்று.

தாமிரபரணி நதியோடு அம்மக்கள் கொண்டுள்ள நெருக்கம் சற்றே பொறாமைக்குரியது.நதிகளை காண்பதே அறிதான இந்நாட்களில் நதியோடு குளித்து,துவைத்து நதி கரையிலும்,கல் மண்டபங்களிலும் நண்பர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்த அன்றைய பொழுதுகளின் விவரிப்பு வாசிப்பதற்கே மகிழ்வாய் உள்ளது.கம்ப நதி நாவலிலும் ரைநீஸ் ஐயர் தெரு குறித்து வருகிறது.எப்பொழுதும் மழை நனைத்த சுவடோடு தோன்றுவதாய் அத்தெருவை குறிப்பிட்டு இருப்பது மிகசரியே!!அத்தெருவும்,அதன் மனிதர்களும் அதுபோலவே.

வண்ணநிலவனின் ஆரம்பகால எழுத்துக்கள் வாசிப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை தரவல்லவை,மழையோடு கொண்ட நெருக்கத்தை போல!! கம்பா நதியும் அது போலவே..

நாவல் வெளியீடு - அன்னம் பதிப்பகம்
விலை - 22 ரூபாய்

கீழ் கண்ட இணையத்தளத்தில் இந்நூலை பெறலாம்

http://www.anyindian.com/index.php?cPath=1_40&osCsid=2d94af152a0d96cf0bf5456e76fc1dc4

Tuesday, August 19, 2008

சுஜாதாவின் "எதையும் ஒரு முறை" -மாறுபட்ட கணேஷ் வசந்த த்ரில்லர்!!

தீவிரமான வாசிபிற்கு பிறகு வேகத்தடை வேண்டுமென நினைத்தால் சட்டென என் நினைவிற்கு வருவது சுஜாதாவின் படைப்புகள்!!தீவிரமான மனவோட்டம் தேவை இன்றி அதன் கதை செல்லும் போக்கில் உடன் சென்று படித்து ரசிக்கலாம்.
இம்முறை "புயலிலே ஒரு தோணி" மற்றும் "கடலுக்கு அப்பால்" என்கிற இரு பெரும் நாவல்களை படித்த பிறகு சுஜாதாவின் கணேஷ்-வசந்த் படிக்க வேண்டும் என தோன்றியது.சட்டென நினைவிற்கு வந்த நாவல் "எதையும் ஒருமுறை".கணேஷ் - வசந்த் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது "எதையும் ஒரு முறை".மற்றும் ஒரு சுஜாதாவின் கணேஷ் - வசந்த நாவல் என எளிதாய் ஒதுக்கி விடலாம் இதனை,இருப்பினும் சுஜாதா எடுத்துக்கொண்ட கதைக்கரு சற்று சிந்திக்க வைக்க கூடியது.பணம் படைத்தவர்களின் உலகமாய் தற்போதைய சமூக நிலை மாறி வருவதும்,விளிம்புநிலை மக்கள் அதற்கு இரையாவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருவதை ஒரு கொலையின் மூலமாய் எடுத்துரைக்கின்றது இந்நாவல்.

கூவம் நதிக்கரையோரம் ஒதுங்கிய பெண் பிணம் ஒன்றை தாங்கள் போகும் வழியில் காணும் கணேஷ் - வசந்த உடன் இருக்கும் சட்டகல்லூரி மாணவி ஒருத்தியின் நச்சரிப்பால் அம்மரணத்தை குறித்து துப்பறிய ஒத்துகொள்கின்றனர்.ஆர்வமும்,ஈடுபாடும் இல்லாமல் தொடங்கும் அவர்களின் தேடல் கொஞ்சம் கொஞ்சமாய் விறுவிறுப்பு அடைவது அப்பெண்ணின் வீட்டை கண்டுபிடித்து அதனுள் இருந்த "பறவைகள் உலகம்" என்னும் புத்தகத்தை கண்டெடுக்கும் பொழுது தான்.

இறந்த அப்பெண் விளிம்பு நிலை வேசி,படிப்பறிவு இல்லாதவள் என கணக்கிட்டு அந்நூலின் உரிமையாளரை தேடி இவர்கள் பயணம் தொடர்கிறது!!அவர்கள் கண்டு பிடிக்கும் ஆள் பெரும் பணக்காரனாய்,விசித்திர பழக்கங்கள் கொண்டவனாய் தெரிகிறான்.எதையும் ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும் என்னும் அவனின் ஆர்வத்தை கொண்டு அவனே கொலையாளி என அறிந்திருந்தும் தண்டனை வாங்கி தர இயலாது திரும்புகின்றனர்.

இந்நாவலின் கிளைமாக்ஸ் வாசிப்பவர் போக்கிற்கு விடப்படுகின்றது.இது போல நிஜ நிகழ்வுகள் இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை என்னும் படியாக தற்போதைய
சூழல் உள்ளது!!முடிவை குறித்த ஆர்வம் மேலிட விறுவிறுப்பாய் செல்லும் இந்நாவல் கணேஷ் - வசந்த் நாவல்களில் குறிப்பிடத்தக்கது.

Monday, August 18, 2008

ஹிட்ச்காக்கின் "பிரான்சி" (Frenzy) - A Shocking Masterpiece

ஹிட்ச்காக் மேனியா என கூறும் படியாக அவரின் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன்!! இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது எல்லா திரைப்படங்களையும் ஹிட்ச்காக் இயக்கியது என தெரியாமல் பார்க்க தொடங்கி இடைவேளையின் பொழுது மட்டுமே அறிகிறேன்.அடுத்து என்ன என்பதை அறிய ஆர்வம் தூண்டும் அவரின் இயக்கம்,தேர்ந்த நடிகர்கள்,காட்சியமைப்பு,நம்பும் படியான நிகழ்வுகள், அழகிய ப்ளாக் அண்ட் வைட் ஒளிப்பதிவு,காமரா ஜாலங்கள் என பார்வையாளனை ஈர்க்கும் எல்லா வித்தைகளும் அறிந்தவர் அவர்.
ஹிட்ச்காக் தனது இறுதி காலங்களில் இயக்கிய சிறந்த படங்களுள் "Frenzy" திரைப்படம் முக்கியமானது.இத்திரைபடன் இயக்கம் பொழுது ஹிட்ச்காக்கின் வயது 73,பெரும்பாலான திரை விமர்சகர்களால் ஹிட்சாக்கின் கடைசி சிறந்த படம் என "Frenzy" கருதப்படுகின்றது!!1972ல் வெளிவந்த இத்திரைப்படம் ஹிட்ச்காக்கின் சொந்த ஊரான லண்டனில் படம்பிடிக்க பட்டது,மேலும் A - சர்டிபிகட் வாங்கிய ஹிட்ச்காக்கின் முதல் திரைப்படமும் இதுவே!!

லண்டன் நகரில் இளம்பெண்கள் வரிசையாய் கொலை செய்யபடுகின்றனர்.கொலை செய்தவன் தனது கழுத்து டையால் ( Neck Tie) அப்பெண்களின் கழுதை இறுக்கி கொலை செய்துவிட்டு டையினை அப்படியே விட்டு செல்கிறான். டை கில்லர் என அப்பகுதி முழுதும் அறிய பட்டு போலீசாரால் வேறு தடயங்கள் அறிய முடியா வண்ணம் தப்பித்து வருகிறான். இந்நிலையில் கதைநாயகன் ஒவ்வொரு கொலையின் பொழுதும் தானறியாமல் அவ்விடங்களில் காணப்பட்டு போலீசாரால் கைது செய்யபடுகிறான்.தான் நிரபராதி என நிரூபிக்க தப்பித்து வெளிவரும் நாயகன் அப்பகுதியில் பெரும் பெயர் பெற்ற தன் நண்பனே கொலையாளி என்பதை உணர்ந்து அவனை தொடர்கிறான். இக்கொலைகளை முதல் இருந்து ஆராய்ந்து வரும் மூத்த போலீஸ் அதிகாரியும் உண்மை கொலைகாரனை கண்டு பிடித்து கைது செய்து நாயகனை விடுவிப்பதோடு கதை முடிகிறது.
அவரின் முந்தைய படங்களான சைக்கோ,பேர்ட்ஸ் திரைப்படங்களை போல கிளைமாக்ஸ் காட்சியை யூகிக்க முடியாத வகை த்ரில்லர் இல்லை இத்திரைப்படம்.கொலைகாரன் யாரென முதலிலேயே தெரிந்துவிட்டாலும் விறுவிறுப்பிற்கு குறைவின்றி படம் நகர்கிறது.எல்லாராலும் பெரிதும் வியந்து பேசப்பட்ட இரண்டு காட்சிகள் உண்டு இத்திரைப்படத்தில்- ஒன்று காமரா கோணங்களில் செய்த புதுமை,மற்றொண்டு ஒளிப்பதிவு மற்றும் காட்சி அமைப்பில் செய்த புதுமை.அக்காட்சிகள் பின் வருமாறு..

இளம் பெண் ஒருத்தியை கொலைகாரன் தன் அறைக்கு அழைத்து செல்ல,மெல்ல காமரா அறைக்கதவில் இருந்து பின் வந்து படிக்கட்டுகளில் பயணித்து தெருவோடு வந்து மனித நடமாட்டத்தில் கலப்பதாய் அமைந்த காட்சி,மிகச்சிறந்த காமரா கையாடலுக்கு சான்று.இறந்த பெண் ஒருத்தியின் கைகளில் தனது ப்ரோச்சை மறந்து விட்ட கொலைகாரன்,மூடையில் கட்டி தக்காளி சரக்கு வண்டியில் தூக்கி எறியப்பட்ட அவளின் பிணத்தை தேடி அந்த ப்ரோச்சை திரும்ப பெரும் காட்சி ஓடுகின்ற வண்டியில் இயல்பாய் அமைந்த வெளிச்சத்தை கொண்டு திகில் நிறைந்து படமாக்கபட்டுள்ளது!!

மற்றும் ஒரு திகில் படம் என ஒதிக்க விட முடியாதபடி சிறந்த காமரா கோணங்கள் கொண்டு இயக்கப்பட்ட இத்திரைப்படம் வெளிவந்த நாட்களில் ""From the Master of Shock! A shocking masterpiece!" என்னும் உபதலைப்போடு வந்ததாக சொல்லப்படுகின்றது!! அது முற்றிலும் சரியே.

Friday, August 15, 2008

புயலிலே ஒரு தோணி...கடல் கடந்த தமிழர்களின் பயணம்!!இலக்கிய நண்பர்கள் யாவரும் என்னிடம் கேட்கும் கேள்வி புயலிலே ஒரு தோணி படித்து இருக்கீங்களா என்பது தான்.அந்நூல் குறித்து நூல் ஆசிரியர் குறித்தும் கேள்விப்பட்டதில்லை முன்பு!!சாருவிடம் பேசிய பொழுது தனக்கு மிக விருப்பமான எழுத்தாளர் ப.சிங்காரம் எனவும் அவரின் புயலிலே ஒரு தோணி நாவல் கட்டாயம் படிக்க படவேண்டிய நாவல் என்ன அழுத்தமாக கூறினார்.நாவல் படித்தாகிவிட்டது!வலி மிகுந்த கடல் கடந்த தமிழர்களின் பயணம்,நடக்கும் காலம் சுதந்திரம் பெறுவதற்கு முன்.அது குறித்து இனி.............

ப.சிங்காரம் அவர்களின் பேட்டி என்பதை விட தமிழ் இலக்கியம் குறித்தும் அவரின் படைப்புகள் குறித்துமான அலட்டல் இல்லாத மிக இயல்பான சந்திப்போடு நாவல் தொடங்குகிறது.தமிழின் தற்கால படைப்புகள் குறித்து அறிந்திராத, இலக்கிய சூழலில் இருந்து முற்றிலும் விலகிய அவரின் தனிமை குறித்து கேட்கப்படும் கேள்விக்கு "எல்லாரும் ஒரு வகையில் தனிமையில் தான் இருக்கோம்" என சொல்லி அடுத்த கேள்விக்கு தயாராகிறார்..வாழ்ந்த காலத்தில் பெரிதும் அறியப்படாத பா.சிங்காரம் மதுரை நகரில் தனது பெரும் பகுதி வாழ்வை கழித்து 1997 இல் மரணம் அடைந்துள்ளார்.

புயலிலே ஒரு தோணிபர்மாவிலும்,இந்தோனேஷியாவிலும்,மலேயாவிலும்,சுமத்திரா தீவுகளிலும் வாழ்ந்த தமிழர்களின் சுதந்திரத்திற்கு முன்பான நிலையை உலக யுத்த போராட்டங்களோடு கற்பனை கலந்து சொல்லப்பட்ட சுவாரசியமான தகவல் களஞ்சியம்!! சுபாஷ்சந்திர போசின் ஐ.என்.ஏ படையில் பங்கு கொண்டு தீவிர போராட்டத்தில் பங்கு பெரும் நாயகன் பாண்டியனை சுற்றியே கதைக்களம் சுழல்கிறது!! வேற்று நாட்டில் பிழைக்க சென்ற மக்களின் நினைவுகள் யாவும் தாம் பிறந்த,வளர்ந்த நகரங்களையும்,அதன் மனிதர்களையும் எப்பொழுதும் சுற்றி வருவதை அவர் அவர் நினைவோடையின் வழி அறிய செய்திருப்பது அருமை!!பினாங் நோக்கிய நீண்டதொரு கடல் பயணத்தில் ஒவ்வொரு பயணியும் தான் தாய் மண்ணில் கழித்த கடந்த கால நினைவுகளை விவரிக்கும் இடம் இதற்கோர் சிறந்த உதாரணம்.

சொந்த மண்ணில் வாழ்பவர்களை காட்டிலும் அகதிகளுக்கே தாய் மண்ணின் மீதான ஏக்கமும் பிரியமும் அதிகமாய் சுரக்கும் என்பதில் ஐயமில்லை.மலேயா நாட்டின் பினாங்கு (செட்டி) தெரு மக்கள் மதுரை மற்றும் மதுரை சுற்றியுள்ள தத்தம் ஊர்களுக்கு செல்லும் நாளை குறித்த பேச்சை எப்பொழுதும் விவாதத்திற்கு எடுத்து கொள்வது இயல்பானதே.ஐ.என்.ஏ((இந்தியன் நேஷனல் ஆர்மி)படையில் பாண்டியனும் அவனது நண்பர்களும் பங்கு கொண்டு சீன மட்டும் சப்பான் எதிரிகளை சாதுர்யமாய் வீழ்த்தும் காட்சிகள் கற்பனை மிகாமல் எளிமையாய் விளக்கபட்டுள்ளது சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களை பெருமிதத்தோடு பார்க்க செய்வதோடு எளிதாய் கிடைத்ததில்லை இந்த வசதி வாய்புகள் என்பதையும் உணர செய்கின்றது.

எதிர்காலம் குறித்த பெரு வேட்கை கொண்ட இளைஞர்களாய் பாண்டியனும் அவனது நண்பர்களும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்குள்ளான விவாதங்கள் தீவிரமானைவை,தொலைநோக்கு பார்வை கொண்டவை..ஜாதி அமைப்புகள் தோன்றிய காரணங்களை விவரிக்கும் இடமும்,கலப்பு திருமணம் குறித்த நீண்ட தொரு விவாதமும் நாமே அதில் பங்கு கொள்ள ஆவலை தூண்டும் இடங்கள்!!மிகப்பெரும் கருத்துக்களை ஆசிரியர் போகிற போக்கில் சொல்லி செல்வது வியப்பை தருகின்றது.உலக யுத்தம் குறித்த இவ்வளவு விரிவாய் தமிழில் எந்த ஒரு நாவலும் வந்ததில்லை என்று முன்னுரையில் கூறப்பட்டுள்ளது மிக சரியே.சுதந்திரம் போராட்டம் என்றதும் நமக்கு நினைவிற்கு பாரதியின் பாடல்களும்,காந்தியும் நேருவுமே,அதை தாண்டி கடல் கடந்து சென்று தமிழர்கள் பங்கு கொண்டு புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வரலாற்றை விளக்கும் இந்நாவல் யுத்த காலத்தின் பல்வேறு கோர முகங்களை படம்பிடித்து காட்டுகின்றது.ஹிட்லர் முசோலினியின் மரணங்கள்,பேள் ஹார்பர் யுத்தம் ஆகியவை சமகால நிகழ்வுகளாய் சொல்லபடுகின்றன.நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொன்று சங்க தமிழ் பாடல்களின் மேற்கோள்,சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை குறித்த சம்பாஷனைகள்...நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொன்று சங்க தமிழ் பாடல்களின் மேற்கோள்,சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை குறித்த சம்பாஷனைகள்...மீண்டும் மீண்டும் விவரிக்கபடும் அழகிய மதுரை !!

முற்றிலும் புதிய வாசிப்பு அனுபவம்.கதை சொல்லும் பாங்கு,அதன் மாந்தர்கள், அவர்களுக்குள்ளான ஆரோக்கியமான விவாதங்கள்,ஐ.என்.ஏ போராட்ட வியூகங்கள், சங்க தமிழ் மேற்கோள்கள்,இந்தோனேஷியா & மலேயா தெருக்கள்,ஆங்காங்கே இழையோடும் ஹாஸியம், .........என நாவலின் கதைக்களமும் மாந்தர்களும் மிகுந்த நெருக்கதிற்குறியதாய் மாறி நினைவை விட்டு நீங்க மறுக்கிறது!! சிறந்த வாசிப்பு அனுபவத்தோடு அறிந்திராத சுவாரசியமான அனுபவ பயணத்தை படித்த பெரும் திருப்தியை தரவல்லது இந்நாவல்.

நூல் வெளியீடு - தமிழினி பதிப்பகம்
விலை : 180 ரூபாய்.

Thursday, August 14, 2008

வண்ணதாசன் சிறுகதைகள் …நிதர்சன புனைவுகள்!!

கல்யாணசுந்தரம் , கதை உலகில் வண்ணதாசன் எனவும் கவிதை உலகில் கல்யாண்ஜி எனவும் அறியப்படும் எழுத்தாளர்.வண்ணதாசனின் கதைகள் யாவும் நம்மை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும் பலம் கொண்டது.வண்ணதாசன் கதைகள் அமைதியானவை,அழகானவை,ஆளமானவை!! மனித உறவுகளின் பல்வேறு நிகழ்வுகளை இயல்பாய் எடுத்துரைப்பவை..வண்ணதாசனின் சிறுகதைகள் அனைத்தும் சேர்த்து முழு தொகுப்பை வெளிவந்துள்ளது.திரும்ப திரும்ப படித்தாலும் சலிக்காத அவரின் எழுத்துக்கள் நிஜ உலகின் நிதர்சன புனைவுகள்.. மிக சமீபத்தில் விகடனில் வெளிவந்த அவரின் அகமும் புறமும் யாவரும் படித்து மகிழ்ந்த பெரும் வரவேற்ப்பை பெற்ற தொடர்!!

கடைசியாய் தெரிந்தவர்கள்

வண்ணதாசன் சிறுகதைகளில் என்னை கவர்ந்த பலவற்றுள் முக்கியமானது இச்சிறுகதை.மருத்துவமனையில் இருக்கும் தன் தோழனின் குழந்தையை கவனித்து கொள்ளும் நாயகனின் மன ஓட்டமே இந்த கதை..நண்பர் மற்றும் அவர் தம் துணைவியாருடன் சேர்ந்து தாமும் அவர்கள் மனநிலையை பகிர்ந்து கொள்ளும் நாயகன் அக்குழந்தை இருக்கும் பக்கத்து அறையில் ஒரு நோயாளியை சந்திக்கிறான்.வேறு ஒரு நண்பன் என்ன நாயகனை புரிந்து கொள்ளும் அவன் நலம் விசாரிக்க அவன் மனம் கோனா வண்ணம் நாயகன் அவனிடம் தானே அந்த நண்பன் என கூறி விடை பெறுகிறான்.மருத்துவமனைகள் எப்போதும் ஒரு சோகம் கவ்வி கிடக்கும் ..மனம் பாரமாய் உணரும் இடம்….அதற்கென்று தனி வாசனை உண்டு..எப்போது வெளிவருவோம் என்று வெறுமை கொள்ள செய்யும் இடம்..மனித உணர்வுகள் பிரியத்தை வெளிப்படுத்தும் விதத்தை அத்தகைய இடத்தில் நடைபெறுவதாய் அழகாய் அமைத்துள்ளார் வண்ணதாசன் ..

நிலை:வீட்டு வேலை செய்து பிழைக்கும் கோமு என்ற சிறுமியை சுற்றி செல்லும் கதை..திருவிழா தேர் பார்க்க வீட்டில் அனைவரும் சென்று விட தேர் குறித்த நினைவுகளுடனும்,ஆசைகளுடனும் இருக்கும் கோமுவின் மனத்திரையை நம் கண்முன் நிறுத்துகிறார் வண்ணதாசன்..சிறு வயதில் பள்ளி செல்ல இயலாது,தன் வயதி ஒத்த சிறுவர்களுடன் விளையாட முடியாது வீட்டு வேலை செய்து பிழைக்கும் எண்ணற்ற குலைந்தைக்ல் நம் சமூகத்தில் உண்டு.வருமையிம் கோர முகத்தின் ஒரு வெளிப்பாடு அது.கோமுவும் அதுபோலவே…. சிறுவர்கள் குறித்து எழுத பட்ட கதைகளில் கீ.ராவின் கதவு,ஜெ.கே யின் உன்னைப்போல் ஒருவன் வரிசையில் இந்த கதையும் சேரும்

தனுமை

வண்ணதாசன் சிறுகதைகளில் பெரும் வரவேற்பை பெற்றது தனுமை.அழகிய காதல் கதை.நாயகன் நாயகியோடு பேசாமலே.. பார்வையால்,எண்ணகளால்,உணர்வால் பிரியம் கொள்வதை அமைந்துள்ளது.மழை பெய்து ஓய்ந்த ஒரு நாளில் நாயகி தாணு சாலையில் நடத்து வருவதாய் வண்ணதாசன் அமைத்துள்ள காட்சி அழகிய கவிதை. நாயகன் தனுவின் நினைவாக தனிமையில் அமர்த்து இருக்கும் ஒரு காட்சியை"தனியாகி…தனுவாகி.." என வர்ணிக்கும் பொழுது கல்யாண்ஜி வெளிபடுகிறார்.கதைக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் பின்பாதி கதை மழையோடு பயணிக்கிறது.எழுத்தாளர் பாவண்ணன் பல்வேறு எழுத்தாளர்களில் சிறந்த கதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டார்..அதில் வண்ணதாசன் சிறுகதைகளில் அவர் தேர்ந்து எடுத்தது தனுமை..

வெள்ளம்மழையும்,நதியும்,கடலும்.. அழகானவையே..நமக்கு தீங்கு விளைவிக்காதவரை.ஒரு பெரு மழைகாலத்தில்,வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நாளில் நிகழும் இந்த கதை புனையபட்டதல்ல.வண்ணதாசன் தம் அனுபவங்களையே கதையாய் தருவார் பெரும்பாலும்.வெள்ளம் அதுபோலவே..மதுரையில் அவர் வங்கி பணியில் இருந்த போது எழுத பட்டது இக்கதை.தம் மகளுடன் வைகை நதியை கடந்து செல்லும் அவர் பணி செல்லும் அவசரத்தில் அந்த நதியின் அழகை ரசிக்க முடியாததை..கூறும் விதம்,நாம் அனைவரும் மேற்கொண்டுள்ள இயந்திர வாழ்வின் அவலத்தை கூறுபவை.பணி முடிந்து வந்து தம் மனைவியை அழைத்து வந்து வெள்ளத்தை காட்ட எண்ணி கொண்டி செல்வார்..அங்கு வேலை முடிந்து இரவு வீடு மழையும்,நதியும்,கடலும்.. அழகானவையே..நமக்கு தீங்கு விளைவிக்காதவரை.ஒரு பெரு மழைகாலத்தில்,வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நாளில் நிகழும் இந்த கதை புனையபட்டதல்ல.வண்ணதாசன் தம் அனுபவங்களையே கதையாய் தருவார் பெரும்பாலும்.வெள்ளம் அதுபோலவே..மதுரையில் அவர் வங்கி பணியில் இருந்த போது எழுத பட்டது இக்கதை.தம் மகளுடன் வைகை நதியை கடந்து செல்லும் அவர் பணி செல்லும் அவசரத்தில் அந்த நதியின் அழகை ரசிக்க முடியாததை..கூறும் விதம்,நாம் அனைவரும் மேற்கொண்டுள்ள இயந்திர வாழ்வின் அவலத்தை கூறுபவை.பணி முடிந்து வந்து தம் மனைவியை அழைத்து வந்து வெள்ளைத்தை காட்ட எண்ணி கொண்டு செல்வார்..அங்கு வேலை முடிந்து இரவு வீடு வரும் பொழுது,மழையால் வீடு இழந்தவர்களை அவர் மனைவி வீட்டில் அமர வைத்து பேசி,ஆறுதல் கூறி கொண்டிருப்பார்…ஒரே நிகழ்ச்சி சிலருக்கு மகிழ்ச்சியையும்,சிலருக்கு துன்பத்தையும் அளிக்கும் விதத்தை அழகாய் கூறி இருப்பார்..இப்பொழுதும் எனக்கு வைகையை கடக்கும் ஒவ்வொரு பொழுதும் ..வண்ணதாசனின் வெள்ளம் மன ஓட்டத்தில் வந்து மறையும்.


யாளிகள்வண்ணதாசனின் இந்த சிறுகதை..தனிமையில் உழலும் முதியவர்களை பற்றியது.தான் முதியோர் இல்லத்தில் சந்தித்த ஒருவரை கதை நாயகனாகி இக்கதை எழுதி உள்ளார்.இளமை காலங்களில் உழைத்து களைத்து,முதுமையில் ஓய்வு மற்றுமே பெறவேண்டிய முதியோர்கள் பலர் இன்று பிள்ளைகளால், சொந்தங்களால் ஒதுக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் உள்ளனர்..அப்படி அமைந்த ஒருவருடன் தன் பெற்ற அனுபவத்தை அழகாய் கூறியுள்ளார் அவருக்கே உரிய மென்மையான பாணியில்

இளமையில் கொடுமை வறுமை..
முதுமையில் கொடுமை தனிமை..


ஆறு

தாமிரபரணி நதியை குறிப்பிடும் இந்த கதையின் தலைப்பு.வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சேர்ந்த குஞ்சம்மா என்கிற இளம் பெண்ணின் ஒரு நாளின் எண்ணங்கள்,காரியங்களை சுற்றி புனைய பட்ட கதை இது.வாழ்வின் தேடல் தவிர்க்க முடியாதது.,வாசிப்பு குறித்து,இயற்கை குறித்து,உணவு குறித்து,,முகம் அறியா மனிதர்கள் குறித்து,பணம் குறித்து,நிரந்தர பணி குறித்து,உடை குறித்து..என தேடல் எல்லாவற்றிலும் இன்றியமையாது இருக்கும்.குஞ்சமாவின் தேடல் வாழ்கை சிறப்பாய் அமைக்க நிரந்தர பணி பெறுவது குறித்தது..ஏழை பெண்ணின் எண்ணங்களை அழகாய் வண்ணதாசன் கூறியுள்ளார்.கதையின் கடைசி வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை…தனக்கு நல்ல வேலை கிடைத்து விடும் என்று எண்ணி கொண்டே குஞ்சம்மா தாமிரபரணி நதியை நோக்கி பார்க்க..

அதோ பாலம் தெரிகிறது…
பாலம் தெரிந்தால் ஆறு தெரிந்தது போல தான்…

என அவள் ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்ன சொல்லாமல் சொல்லி முடிக்கிறார்..


மிச்சம்


வாழ்வின் மென்மையான/அழுக்கற்ற பக்கங்கள் குறித்தே எழுதும் வண்ணதாசன் இந்த சிறுகதையில் விலைமாது ஒருத்தியின் ஒரு அதிகாலை பொழுதை விவரித்து உள்ளார்.பொதுவாக எந்த கதை படிக்க தொடங்கினாலும் அந்த கதை நிகழும் இடம்,கதை மாந்தர்கள் குறித்து கற்பனை செய்து கொள்வேன்..இக்கதை நிகழும் இடம் குறித்து வண்ணதாசன் தெளிவாய் சொல்லாவிடினும் எனக்கு மதுரை டவுன் ஹால் ரோடு பகுதியே நினைவில் வந்தது..எல்லோரையும் போல காலை அழகாய் ரசிக்கும் மனம் இன்றி அந்த நாளை எதிர்நோக்கும் ஒரு வெறுப்புடன் தான் முன்னிரவு இருந்த விடுதியை விட்டு வெளி வருகிறாள்.அங்கு தெருக்களை கூட்டி பெருக்கும் தன் தோழியை கண்டு வயதான காலத்தில் தன் நிலைமையும் அதே தான் என எண்ணி வருந்துகிறாள்..தோழியின் மகனான சிட்டி இவளுக்கு காபி வாங்கி வரும் வேளையில் அங்கு இருக்கும் குளிர்பான கடையில் மீதம் இருக்கும் எச்சில் பானத்தை குடிக்க அதை காண சகியாமல் அவனை அடிக்கிறாள்..( கதையில் எனக்கு மிகவும் பிடித்த இடம்) தன் வாழ்வை போன்றதொரு எச்சில் பணி அவனையும் வந்து சேரும் என்கிற ஆத்திரம் தாளாமல் அவள் அச்சிறுவனை அடிக்கும் அந்த காட்சி உணர்வுபூர்வமானது .மெல்ல சூரியன் வெளி வர நகரத்தின் அன்றாட பணி தொடங்குகிறது..ஏனோ அவளுள் இருள் சூழுவதாய் கதையை முடிகிறது….

Monday, August 11, 2008

தி.ஜானகிராமனின் "அன்பே ஆரமுதே" உணர்வுகளின் உண்மை புனைவு

தி.ஜானகிராமனின் நாவல்கள் வாசிப்போரை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும் வலிமை கொண்டவை.தி.ஜாவின் பெண்ணிய பாத்திரங்கள் யாவருக்கும் விருப்பமான கவிதைகள்.மோகமுள் நாயகி "யமுனா","கமலம்",அன்பே ஆரமுதே "ருக்கு",மரப்பசு "அம்மணி" என இயல்பு மாறா தனி தன்மை கொண்ட அவரின் பெண் பாத்திர படைப்புகள் நிஜ வாழ்வில் மிகுந்த தேவைகுள்ளானவர்கள்.சமீபத்தில் தி.ஜாவின் அன்பே ஆரமுதே மற்றும் கமலம்(சிறுகதை தொகுப்பு) நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் படித்தேன்.ஏனோ அன்பே ஆரமுதே நாவலை ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.இந்த ஒப்பீடு பலருக்கு விசித்திரமாய் தோன்றலாம்,இருப்பினும் கதை மாந்தர்கள்,கதை நிகழும் காலம்,இடம்,சொல்லப்பட்ட விதம் என யாவும் வேறுபட்டாலும் இவ்விரு கதைகளுக்கும் நிறைய தொடர்பு உண்டு கதையின் மைய கருத்தில்.இரு கதைகளிலும் நாயகி நாயகனால் தன் இளம் பருவத்தில் ஏமாற்ற படுகிறாள்,அந்நிகழ்ச்சிக்கு பிறகு அவள் வாழ்கை வேறு பாதை நோக்கி செல்கிறது.படித்து முடித்து சமுதாயத்தில் ஒரு நல்ல பதவியில் இருக்கும் இரு கதை நாயகிகளும் தன் நடுத்தர வயதில் நாயகனை மீண்டும் சந்திக்கிறாள்.நீண்ட உரையாடலோடு கூடிய பொழுதுகளால் அவனோடு நட்பு கொண்டு நண்பர்களாய் வாழ்வை தொடர முடிவு செய்கிறாள்.
தி.ஜா,அன்பே ஆரமுதே நாயகி ருக்கு பாத்திரத்தை வெளிகொண்டுவந்திருக்கும் விதம் அருமை. படித்த,சிந்தனைகளில் தெளிவும் முதிர்ச்சியும் கொண்டவளாய் ருக்கு இருக்கிறாள். ருக்குவை மணக்க மறுத்து காசி செல்லும் அனந்தசாமி அங்கு மருத்துவம் கற்று பண்டிதராய் சென்னை திரும்புகிறார். அனந்தசாமி துறவியாய்,மருத்துவராய்,அன்பின் உறைவிடமாய்,யாவரும் விரும்பும் மனிதராய் சித்தரிக்கபட்டுள்ளார்.கதை மாந்தர்கள் யாவரும் அவர் அவர் போக்கில் நல்லவர்களே!எந்த வித கட்டாயதிற்கும் உட்படாமல் தன் போக்கில் கதை அழகாய் செல்கிறது.அக்காலகட்டத்தில் திரைப்படம் மீது மக்கள் கொண்டிருந்த கண்மூடித்தனமான மோகம்,திரை நாயகன்/நாயகி என தன்னை நினைத்து ஆடல்,பாடல்,மேக் அப் பூச்சு ஆகியவற்றில் மோகம் கொண்டு வாழ்வின் நோக்கத்தை தெளிவாய் வகுக்காமல் சீரழியும் இளைஞர்களுக்கு படிப்பினையாய் சில கருத்துக்கள் இந்நாவலில் உண்டு.ருக்குமணி,அனந்தசாமி இவர்களோடு கதையில் காந்திமதி,ரெங்கன்,அருண்குமார் என பல பாத்திரங்கள் உண்டு.தி.ஜா கதையில் உறுதியாய் வலியுறுத்துவது பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பதே..

Thursday, August 7, 2008

பாலமுருகனின் " சோளகர் தொட்டி" அறியப்படாத சோகம்

நீண்ட தேடலுக்கு பிறகு படிக்க கிடைத்த நாவல் "சோளகர் தொட்டி.".அதிகாரத்தின் கோரமுகத்தையும்,வேதனையின் உச்சத்தையும் கூறி இருக்கும் இந்நாவல் நிஜங்களின் கோர்வை.மலைகளின் ஓடை போல தெளிவாய்,அழகாய் சென்று கொண்டிருந்த சோளகர் இனத்தாரின் வாழ்க்கை சீனம் கொண்ட வெள்ளம் போல அலைகழிப்புக்கு ஆளாவதை மிகுந்த சிடுக்குகள் இன்றி எளிமையாய் கூறயுள்ளார் பாலமுருகன்.

இக்குறுநாவலின் முதல் பாதி தமிழக கர்நாடக எல்லை பகுதியில் அமைந்த சோளகர் என்னும் மலை வாழ் மக்களின் அன்றாட வாழ்கையை சொல்லுகிறது.இயற்கையோடு இயந்தி வாழ்கை வாழ பெற்றவர்கள் அவர்கள்..குளிரின் பிடியின் இருந்து தப்பிக்க குழியில் அமைத்து அதில் தீ மூட்டி குளிர் காய்வது,இரவில் மிருகங்கள் இருந்து தம் தானியங்களை பாதுகாக்க மூங்கில் வெளி அமைப்பது,ஊரின் எல்லா காரியங்களிலும் பெரியவரான கொத்தல்லியிடம் கலந்தாலோசிப்பது,அவர்களின் உணவு,திருமண சடங்குகள்,சாமி கும்பிடு என ஆசிரியர் விளக்குவது தொட்டியின் நடுவில் அமர்ந்து யாவையும் காண்பது போல உள்ளது.
தொட்டி இனத்தாரின் தீவிரமான நம்பிக்கைகள்,சடங்குகள்,மருத்துவ முறைகள்,காட்டோடு கொண்டுள்ள தீரா பிரியம் ஆச்சர்யமூட்டும் உண்மைகள்.மூதாதையர் மீது கொண்டுள்ள பக்தியும்,மரியாதையும் அவர்களை என்றும் தங்கள் நினைவுகளை விட்டு அகல செய்யாது இருப்பதுமான குணம் நமக்கு பாடமே...மற்றொன்று அவர்களுக்கான ஒற்றுமை...மொத்தத்தில் இயந்திர வாழ்வில் கிடைப்பதை உட்கொண்டு,பருகி,தொலைக்காட்சி,கணினி என வேற்று கிரக வாசி போல நம்மை நாமே மாற்றி கொண்டு வரும் இந்நாட்களில் இயற்கையோடான இம்மக்களின் வாழ்கை முறை சற்றே பொறாமை தருவதாய் உள்ளது.

நாவலின் பிற்பகுதி மிகுந்த சோகம் நிறைந்தது..எய்தவன் இருக்க அம்பை நோவதேன் என்பது போல வீரப்பன்தேடுதல் வேட்டையில் ஈடு பட்ட போலீசாரின் பிடியில் சிக்கி பெருத்த அவமானங்களும்,வேதனையும்,வலியையும் அனுபவித்த தொட்டி மக்களின் சோகம் வார்த்தைகளால் விளக்க முடியாது.ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என வேறுபாடு இன்றி அம்மக்கள் அனுபவித்த சித்திரவதைகள் வாசிப்போரை சில நிமிடங்கள் வெற்றிடம் நோக்க செய்யும்..நாவலில் குறிபிட்டுள்ளது சிறு பகுதியே.,சொல்லப்படாத சோகம் இதனினும் வலி மிகுந்தது.கனத்த மௌனத்தோடு வாசித்து முடித்தேன்..

இந்நூலை அறிமுகம் செய்த வலைதள நண்பர்கள் கார்த்திக் மற்றும் அய்யனாரிற்கு எனது நன்றிகள்.

Tuesday, August 5, 2008

சுஜாதாவின் சரித்திர நாவல் "ரத்தம் ஒரே நிறம்"

சமீபத்தில் விகடனில் படித்தது : சுஜாதாவிடம் ஏன் சரித்திர நாவல்கள் எழுதுவதில்லை என்று கேட்டதற்கு பள்ளியில் சரித்திர பாடத்தில் குறைந்த மதிப்பெண்களே எடுப்பேன் அதனால் தான் என நகைச்சுவையாக குறிப்பிட்டு உள்ளார்.

சுஜாதாவின் ஒரே சரித்திர நாவல் (நான் அறிந்த வரையிலும்) "ரத்தம் ஒரே நிறம்".சுதந்திர போராட்ட காலத்தில் நிகழும் கதையை காதல்,வீரம்,துரோகம்,ஏமாற்றம்,வெற்றி,தோல்வி,நம்பிக்கை தாங்கி உலவும் கதை மாந்தர்கள் சகிதம் சிறிது புனைவு செய்து கூறி உள்ளார்.இந்நாவல் முதலில் படித்தது ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்.சமீபத்தில் இணையதள விவாதம் ஒன்றில் இந்நாவல் தழுவியே பாரதி ராஜாவின் "நாடோடி தென்றல்" திரைப்படம் வெளிவந்ததாய் பேச்சு வர,நிச்சயமாய் இல்லை என்பதை உறுதி செய்ய மீண்டும் படித்தேன்..நாவலின் ஒரே ஒரு காட்சி நாயகன் வெள்ளைகார துறையுடன் சிலம்பு சண்டை இடுவதை தவிர அத்திரைபடதிற்கும் நாவலுக்கும் தொடர்பில்லை.சுஜாதாவின் மாற்ற நாவல்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டது.கதை நிகழும் காலம் 1900 முன்னர்,இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் நடப்பதாய் கதைகளம் அமையபெற்றுள்ளது.மெக்கின்சி என்னும் ஆங்கிலேய அதிகாரியால் தன் தந்தையை இழந்த நாயகன் முத்து குமரன்,அந்த அதிகாரியை பழி வாங்க அவனை தேடிசெல்லுவதே கதை.அதற்கு அவனுக்கு உறுதுணையாய் இருப்பது தற்காப்பு கலைகளில் சிறந்த பைராகியும்,புத்திசாலியான நாயகி பூஞ்சோலையும்.உண்மை சம்பவங்கள் மிகுந்த இந்த கதையில் தமது அழகிய கற்பனையை கலந்து ஒரு வீரனின் போராட்டத்தை இந்திய சுதந்திர போராட்ட சம்பவங்களோடு கூறியுள்ளார் சுஜாதா .கதையில் முக்கிய பங்கு வகிப்பது கான்பூர் போராட்டமே.கதை பெரும் பகுதி வட இந்தியாவில் தொடங்கிய சிப்பாய் கலகத்தை மையமாய் கொண்டுள்ளது.மங்கள் பாண்டே பற்றிய குறிப்பை தனக்கே உரிய பாணியில் எளிமையாய் விளக்கி உள்ளார் சுஜாதா.சுஜாதாவின் வழக்கமான நக்கல்,இழையோடும் நகைச்சுவை இதிலும் உண்டு நாயகி பூஞ்சோலை மற்றும் பைராகி பாத்திரங்களின் வழியாக.கான்பூர் கலகத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளை லட்சங்களுக்கும் மேலே..சுதந்திரம் பெற நடைபெற்ற இப்போராட்டங்களை எண்ணும் பொழுது பெரும் வியப்பும்,வருத்தமும் உண்டாகிறது. இறுதியில் நாயகன் அந்த ஆங்கில அதிகாரியை கொன்று தானும் அப்போராட்டத்தில் உயிர் இழக்கிறான்.ஒரு அழகிய வீரம் மிகுந்த மண்ணின் சரித்திர நாவலை படித்த நிறைவு இந்நாவலில் உண்டு. மாறுபட்ட எழுத்தாளரான சுஜாதாவிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட நாவல் - ரத்தம் ஒரே நிறம்.

Monday, August 4, 2008

ஹிட்ச்காக்கின் "பேர்ட்ஸ்" -திகில் தரும் பறவைகளின் எதிர்பாரா தாக்குதல்

மற்றுமொரு ஹிட்ச்காக் திரைப்படம்...காட்சிகளில் திகில்,நடிகர்கள் தேர்வு,தேர்ந்த திரைகதை இவை மட்டும் அன்றி ஹிட்ச்காக் திரைபடங்களில் என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்துவது ஒலிப்பதிவு மற்றும் கேமரா கோணங்கள் அதுவும் நவீன எந்திரங்கள் அறிமுகம் ஆகாத அந்த காலகட்டத்தில்..இவரின் சிறந்த திரைப்படங்கள் வரிசையில் இடம் பெரும் மற்றும் ஒரு திரைபடம் "பேர்ட்ஸ்"
THE BIRDS - Alfred Hitchcock இயக்கத்தில் 1963 இல் பறவைகளை மையமாய் கொண்டு வெளிவந்த த்ரில்லேர்.கதை நாயகி மேலனியா(Tippi Hedren) பறவைகள் விற்பனை நிலையத்தில் நாயகன் மிட்ச்யை(Rod Taylor) சந்திக்கிறாள்.தன் தங்கையின் பிறந்த நாளுக்கு லவ் பேர்ட்ஸ் வாங்க வந்த நாயகன் நாயகியை கடை பணிப்பெண் என தவறாக கருதி அவளிடம் அப்பறவைகள் வேண்டும் என கூறி செல்கிறான்.
நாயகனின் முகவரி தேடி அப்பரவைகளை கொண்டு புறபடுகிறாள்.அவனது வீடு அழகிய கிராமம் ஒன்றில் நகரத்தை விடு வெகு தொலைவில் உள்ளது.சிறு படகு மூலம் அவன் வீட்டை அடைந்து அப்பறவைகள் சிறு குறிப்போடு வைத்து விடு படகில் திரும்பும்பொழுது கழுகு கூட்டத்தினால் தாக்கபடுகின்றாள்..இதுவே பறவைகளால் ஏற்படும் முதல் விபத்து.

ரத்தகாயம் அடைந்த நாயகி மிலனியாவை மிட்ச் தன் வீட்டில் தங்கி செல்லும் படி வற்புறுத்தவே,அன்று அவன் வீட்டில் சிறிது நேரம் தங்குகிறாள்..மிட்சுடன் அவன் தாய் மற்றும் தங்கை உள்ளனர்.பின் தனக்கு தெரிந்த தோழியான பள்ளி ஆசிரியை ஆன்னியுடன் தங்குகிறாள்,கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு மிலனியாவும்,ஆன்னியும் கதவை திறக்க அங்கு ஒரு கழுகு இறந்து கிடக்கிறது. மறுநாள் மிட்சின் தங்கை பிறந்தநாள் விழாவில் சிறுவர்கள் தோட்டத்தில் விளையாடி கொண்டிருக்க,மிலனியா மிட்சுடன் பேசிக்கொண்டு இருக்கிறாள். அபொழுது கழுகுகள் கூட்டமாய் வந்து குழந்தைகளை தாக்குகின்றது.அது மட்டும் இன்றி மிட்சின் வீட்டினுள் புகுந்து அனைத்தையும் நாசம் செய்கின்றன..இக்காட்சி படமாகப்பட்டவிதம் அற்புதம்.காவல்துறையில் புகார் செய்த பின் மிட்ச் தன் தாயாரை சமாதானம் செய்கிறான்,அவள் மிகவும் பயந்து மிலனியாவை தன்னுடன் இருக்கும் படி சொல்கிறாள்.மறுநாள் மிட்சின் தங்கையை பள்ளியில் இருந்து அழைத்து வர மிலனியா செல்கிறாள்.வகுப்புகள் முடியாததால் பள்ளியின் வாசலில் அமர்கிறாள்.எதோ தோன்ற திரும்பும் அவளுக்கு பெரும் அதிர்ச்சி.அங்கு கழுகுகள் மொத்த கூட்டமாய் அமர்த்து இருக்கின்றன.செய்வது அறியாமல் திகைந்து மிலனியா மெதுவாய் வகுப்பறைக்குள் சென்று குழந்தைகள் அனைவரையும்,தன் தோழி ஆன்னியையும் சத்தம் இன்றி வெளியேவர வலியுறுதுகிறாள். குழந்தைகளோடு மிலனியாவும்,ஆன்னியும் வெளிவர பறவைகள் அவர்களை துரத்துகின்றன.. படத்தில் மிகச்சிறந்த காட்சி இது.கிராபிக்ஸ் தலை எடுக்காத அக்காலத்திலேயே மிக சிறந்த முறையில் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.பறவைகளின் கொடூர தாக்குதல் கிராமம் முழுவதும் பயத்தை உண்டு பண்ணுகிறது.அங்கு உள்ள ஹோட்டல் ஒன்றில் போது மக்கள் பேசுவதாய் அமைந்த காட்சி பொது மக்களின் மனதில் இருக்கும் பறவைகள் குறித்த பீதியை வெளிக்காட்டுவதாய் உள்ளது.பெரும் விபத்து நேரப்போவது அறியாமல் கிராமம் தன் நிலையில் இயங்கி கொண்டு இருக்க..பறவைகள் திடீர் தாக்குதலை தொடங்குகின்றன..அப்பொழுது அங்கு ஏற்படும் பெரும் தீ விபத்து,தொலைபேசி பூத்தினுள் மாட்டி கொண்ட நாயகி,பறவைகளோடு போரிடும் நாயகன் மிட்ச்..என ஒரே காட்சியில் அனைத்தையும் பெரும் பிரம்மாண்டத்தோடு hitcock இயக்கிய விதம் அருமை. பறவைகளின் தாக்குதலில் இருந்து தப்பித்து மிலனியா,மிட்ச்,அவனது தாய் மற்றும் தங்கை கிராமத்தை விடு வெளியேறுவதொடு படம் முடிகிறது.
இப்படத்தை நான் காண தொடங்கும் பொழுது Hitchcock இயக்கிய படம் என தெரியாது.படம் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு அமானுஷ்யம் நிலவுகிறது.I could feel that it is a master piece. பறவைகள் ஏன் நகரத்தை தாக்குகின்றன என்கிற கேள்விக்கு விடை இல்லை..ஒரு மறைமுக குறியீடுடனே இக்கேள்வி படம் முழுதும் நம்மை தொடருகின்றது .படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய மற்றொன்று நாயகி மிலனியாய் நடித்துள்ள Tippi Hedren இன் நடிப்பு.இவர் ஹித்கோச்கின் ஆதர்ச நடிகை,நிறைவான அழகும் நடிப்பும் சேர பெற்ற நடிகை.த்ரில்லர் படங்கள் விரும்புவோருக்கு இத்திரைப்படம் ஒரு வித்யாச அனுபவமே....

Friday, August 1, 2008

தகழியின் செம்மீன் காலம் கடந்து நிற்கும் காவியம்

நாவல்களும் நிஜ நிகழ்வுகளும் திரை வடிவம் பெரும்பொழுது உண்மைக்கு முழு வடிவம் தர இயலாது தோற்று போவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.தி.ஜா வின் "மோகமுள்" ஞான ராஜசேகரனால் திரை வடிவம் பெற்று வெளிவந்த பொழுது பலத்த எதிர்மறை விமர்சனம் பெற்றது. ஜெயகாந்தனின் "சில நேரங்களில் சில மனிதர்கள்",சுஜாதாவின் "கரை எல்லாம் செண்பக பூ","பாரதி" என மக்களின் கற்பனையோடு ஒத்து வர காரணத்தினால் தோல்வி அடைந்த படங்களின் பட்டியால் நீளம்.

இதில் இருந்து பெரிதும் விலகி நாவலே திரைப்படமாக திரைப்படமே நாவலாக காணப்படும் படைப்புகளுள் மிக முக்கியமானது "செம்மீன்". சுந்தரராமசாமியின் மொழியாக்கத்தில் வெளிவந்த தகழியின் இந்நாவல் ஏற்படுத்திய பாதிப்பிற்கு சிறிதும் பங்கம் இன்றி வெளிவந்தது இத்திரைகாவியம்.என் மட்டிலும் நல்ல திரைப்படம் ஒரு தேர்ந்த நாவல் படித்த திருப்தியை தரக்கூடியதாய் இருக்க வேண்டும்."Amelie""Cider House Rules""Gadashredha" போன்ற திரைப்படங்கள் அந்த அனுபவத்தை தரவல்லது..இவ்வரிசையில் செம்மீனுக்கு முக்கிய இடம் உண்டு.
தகழி சிவசங்கரன்பிள்ளை மலையாளத்தில் எழுதி பெரும் வெற்றி பெற்ற நாவல் செம்மீன்.கடலோர கிராமத்தின் காதல் கதை.அழகாய் ஆர்பாட்டம் இல்லாமல்,எளிய நடையில் எழுத பட்ட இந்நாவல் தமிழில் மொழிபெயர்கப்பட்டுள்ளது.ஏழை மீனவ குடும்பத்தில் பிறந்த கதை நாயகி விரிந்த ஆசைகள் இன்றி வாழ்க்கையை கொண்டு செல்ல பழகிகொள்கிறாள்.அவ்வூரின் சாயபு வீட்டு இளைஞனுடன் அவளுக்கு உண்டாகும் காதல் ஆனது.இரவு கடற்கரையோரம் கேட்கப்படும் இசையினுடே அழகாய் மலர்கிறது. நாட்கள் செல்ல அவளது ஏழை தந்தை மிக சிறந்த மீனவன் என அறிய படுகின்ற ஒருவனை அவளுக்கு மணம்முடித்து வைக்கின்றான்.வாழ்க்கையின் சூழலுக்கு தன்னை மாற்றி கொள்பவளாய் நாயகி எதிர்ப்பு எது கூறாமல் அழுகையுடன் புது வாழ்வை ஏற்று கொள்கிறாள்.கணவனுடன் புது இடத்திற்கு சென்று தன் வாழ்வை தொடங்குகிறாள்.மகிழ்ச்சியாய் செல்லும் அவள் நாட்கள் நிலையற்ற தன் காதலலின் நிலையை கண்டு தாளாமல் அவளை வெறுமை கொள்ள செய்கிறது..யாரும் அறியாத ஒரு இரவில் நாயகியும்,அவள் காதலனும் கடலில் ஆரம்பித்த தம் காதலை கடலிலே முடித்துகொள்கின்றனர்...தகழி அவர்கள் இக்கதையை கொண்டு செல்லும் விதம் அருமை.மீனவ குடும்பங்களின் திருமண சடங்குகளை அழகாய் விவரித்து இருப்பார்.நாயகிக்கும்,அவள் தாயருகுமா உறவு எல்லைகள் அற்று விவரிக்க பட்டுள்ளது.அம்மக்களின் ஆசைகள்,பேராசைகள்,பொறாமை,வாழ்கை முறை,உணவு பழக்கம்,நட்பு,வீரம்,ஏமாற்றம் என அனைத்தையும் எளிமையாய் விவரித்துள்ளார் தகழி..இந்நூல் படித்து 7 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்..ஆதலினால் கதை மாந்தர்களின் பெயர் நியாபகம் இல்லை...