
தான் சேர்ந்த இயக்கத்தின் போராட்டத்தில் குடும்பத்தையும்,காதலனையும் இழக்கும் மல்லி அரசியல் தலைவர் ஒருவரை தற்கொலை தாக்குதலினால் கொலை செய்ய பொறுப்பேற்று அழகிய கிராமம் ஒன்றில் ஊரின் பெரிய மனிதர் வீட்டில் தங்குகின்றாள். இயக்க நண்பர்கள் இருவர் அவ்வப்பொழுது வந்து திட்டங்களை விளக்கி கொண்டு செல்ல அவளின் நீண்ட பகல்கள் அவ்வீட்டின் பெரியவரோடு கழிகின்றது.மகனின் பிரிவால் கோமா நிலையில் உள்ள மனைவியோடு வசிக்கும் அப்பெரியவர் மல்லி மீது மிகுந்த அன்பு கொண்டு வாழ்வின் மீதான பிடிமானங்களை மெல்ல மெல்ல உணர்த்துகிறார்.
முழுதுமாய் வாழ்வை வெறுத்து,சமூகத்தின் மீதும்,சக உறவுகள் மீதும் நம்பிக்கை இழந்து இயக்கத்திற்காக முழு மனதுடன் சாவை ஏற்கும் மனநிலை கொண்டு இருக்கும் மல்லியின் மனநிலையில் தடுமாற்றம் நிகழ்வது அவள் தான் கர்ப்பமுற்று இருப்பதை உணரும் நேரம் முதல்.வெடிகுண்டு பொருத்திய பெல்டை இடுப்பில் அணித்து கொண்டு தலைவரை கொல்ல பயிற்சி அளிக்கப்படும் மல்லி திட்டத்தை நிறைவேற்றினாலா இல்லையா என்பதே முடிவு.உணர்ச்சிகள் மரத்து இறுக்கத்தோடு வளைய வரும் மல்லியிடம் கிராமத்து பெரியவர் நடத்தும் உரையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.செடியின் விதையை கொண்டு பூமிக்கும் வானுக்கும் உள்ள உறவை சொல்லும் இடமும்,மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் மனைவியை அன்போடு அணுகும் இடமும் இதில் குறிப்பிடத்தக்கவை .
இதில் மல்லியாய் நடித்துள்ள ஆயிஷா நல்ல தேர்வு. இறுக்கம், வன்மம்,கனவுகள்,ஆச்சர்யம்,ஆச்சர்யம்,பயம் என மாறி மாறி காட்டும் முகபாவனைகள் அற்புதம்.சந்தோஷ் சிவனின் காமிரா,அழகிய அச்சிறுகிராமத்தை வெயிலோடும்,மழையோடும் கவித்துவமாய் படம்பிடித்துள்ளது.தற்கொலைபடையை சேர்ந்த பெண்ணொருத்தியின் நிச்சயிக்கப்பட்ட மரண நாளின் முந்தைய நாட்கள் குறித்த இப்படம் ஆவணபடங்களுக்கே உள்ள சில குறைபாடுகளை கொண்டிருப்பினும் காணப்படவேண்டிய ஒன்று.