Showing posts with label மொழிப்பெயர்ப்பு. Show all posts
Showing posts with label மொழிப்பெயர்ப்பு. Show all posts

Tuesday, April 3, 2018

சோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )

"கதாநாயகன் இல்லை,கதாநாயகி இல்லை,காதல் முக்கோணம் இல்லை!இது சௌராஷ்டிர சமூக வாழ்க்கையின் கதை.சமூகம் முழுதுமே இக்கதையின் நாயகன்.கடந்த இருப்பது ஆண்டு காலத்தைத் தாண்டி போய் சௌராஷ்டிரத்தின் எல்லையில் நின்று கொண்டு நீங்கள் பார்த்தால் எத்தைகைய வாழ்க்கை முறை உங்கள் பார்வையில் படுமோ அந்த வாழ்க்கையோட்டத்தை இந்த நாவலில் காணலாம்" 

- ஜவேர்சந்த் மேகாணீ (ஆசிரியர்)

 ஜவேர்சந்த் மேகாணீயின் இந்நாவல் இலக்கிய உன்னதங்களில் ஒன்று.எழுத்தாளர்,பாடகன்,நாடோடி இலக்கிய ஆய்வாளர் என பன்முகம் கொண்ட ஜவேர்சந்தின் மொழி ஆளுமை வியக்க வைப்பது.ரசிக்கும்படியான வர்ணனைகளும், வியக்க வைக்கும் உவமைகளுமென தொடரும் இந்நாவல் சுதந்திரத்திற்கு முந்தைய இந்திய வரலாற்றின் ஒரு பகுதியை நேர்த்தியாக பதிவுசெய்கிறது.1937ம் ஆண்டு வெளிவந்துள்ள இந்நூலை முக்கிய வரலாற்று ஆவணமாக கருத வேண்டியதின் காரணமும் அதுவே.சௌராஷ்டிர தேசத்தில் (குஜராத்) நிகழும் இக்கதை முழுக்க அம்மக்களின் சமூக அரசியல் வரலாறைப் பேசிக் செல்கிறது.சௌராஷ்டிர நகரங்கள் மற்றும் கிராமங்களில் பயணித்து சேகரித்த ஆசிரியரின் ஒப்பற்ற அனுபவங்களை நாவலின் போக்கில் அறிந்து கொள்ள முடிகிறது.கால சக்கரத்தில் பின்னோக்கி பயணித்து விக்ரம்பூர்,ராஜ்கோட் நகரங்களின் தெருக்களோடும் மனிதர்களோடும் நாம் பரிட்சயம் கொள்வது இயல்பாக சாத்தியப்படுகிறது.

ஒரு சிறந்த நாவல் என்பது துவங்கிய சில பக்கங்களில் இருந்தே வாசகனை தன் பால் ஈர்த்துக் கொள்வது.கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலின் துவக்கத்தில் கோட்டை வீட்டார் நமக்கு அறிமுகமாவது அதற்கோர் உதாரணம்.சோரட்..உனது பெருகும் வெள்ளம் நாவலும் அப்படியான துவக்கத்தை கொண்டே பிரதான கதாபாத்திரங்களான மகீபத்ராமையும்,அவரது பேரன் பான்ஜாவையும் அறிமுகம் செய்கிறது. ஆங்கில ஆட்சியில் பிரபுத்துவ அதிகாரத்தின் கீழ் பணிபுரியும்போலீஸ் ஜமாதார் மகீபத்ராமின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இடையே நிகழும் இக்கதையின் மாந்தர்கள் பெரும்பாலும் சுய ஒழுக்கமும்,போராட்ட குணமும்,தீவிர உழைப்பின் மீது நம்பிக்கையும் கொண்டவர்கள்.

பான்ஜாவின் பார்வையில் நகரும் பெரும்பாலான கதைப் பகுதி ஒரு சிறுவனின் நோக்கில் அன்றைய சமூகம் குறித்த மாற்றுப் பார்வையை முன்வைக்கிறது.உலகயுத்தத்தின் பொருட்டு இங்கிருந்து அனுப்பப்பட்ட சிப்பாய்கள் எவ்விதம் ஏமாற்றப்பட்டார்கள் என்பதன் விவரணைகள் சகிக்க முடியாதவை.1920களில் ஆங்கிலேயருக்கு எதிராக கிளம்பிய சிறு பொறி மக்கள் மனங்களில் எவ்வித மாற்றங்களை தோற்றுவித்தது என்பதை நாவல் கச்சிதமாக பதிவு செய்துள்ளது.காந்தியின் வருகை எழுப்பிய புயல் பரவலாக அங்கீகரிக்கப்பட துவங்கிய பொழுதுகள் அவை. ஆங்கிலேயருக்கு தம் எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்த பிரபுக்களின் வருகை என அந்த சூழல் மாபெரும் போராட்டத்தை எதிர்நோக்கி இருந்துள்ளதை ஒருவித நெகிழ்ச்சியின்றி கடக்க இயலாது.

நாவலில் கவனிக்கப்பட வேண்டியவற்றுள் ஒன்று பெண்களின் அன்றைய நிலை குறித்த விஸ்தரிப்புகள். அழகு பதுமையாக,கணவனுக்கோ குடும்பத்திற்கோ கட்டுப்பட்டு வெளியுலகம் அறிந்திராத அபலைகள்,யுத்தத்திற்கு சென்ற கணவனை எதிர்பார்த்து காத்திருக்கும் பாவப்பட்டவர்கள்,ஆங்கிலேய அதிகாரிகளின் வன்புணர்வுக்கு ஆளானஅப்பாவிகள் என அச்சமூகம் பலதரப்பட்ட பெண்களை கொண்டுள்ளது. இதில் நாம் எதிர்பார்த்திராத சித்தரிப்பு ரூட்கட்டின் விதவையும் மாமி என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவளுமான போராளியினுடையது.அவள் அதிகார அமைப்பை எதிர்த்து நிற்பவள்.பணக்காரர்களிடமிருந்து அபகரித்து ஏழைகளுக்கு உதவுபவள்.ஆண்களை நடுங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவள்.இறுதி வரை தன் சத்தியத்தில் உறுதியாய் இருந்து தனித்துவம் பெற்றவளாக திகழ்பவள். எந்தவொரு பெண்ணும் தன் ஆதர்சமாகக் கொள்ள தகுதி பெற்றவள்.

மகீபத்ராம்,பான்ஜா,தேவுபா,மாமி,தேவேந்திரநாத்,லக்ஷ்மன்பாய்,ரூட்கட் சேட் என இந்நாவலில் எதிர்ப்படும் கதாபாத்திரங்களோடு நாம் கொள்ளும் பிணைப்பு இயல்பாய் உண்டாவது.அது ஜவேர்சந்தின்எழுத்தாளுமையின் சிறப்பு.தன் வாழ்வில் எதிர்கொண்ட சம்பவங்களை இந்நாவலில் வியத்தகு புனைவாக்கியுள்ளார். எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பின் தெளிவும்,நேர்த்தியும் இந்நாவலின் மீதான பிரமிப்பை இரட்டிப்பாக உதவுபவை.முன் வைக்கப்படும் சௌராஷ்டிர சமூகத்தின் நீண்ட நெடிய வரலாற்றை புரிந்து கொண்டு, அதன் அரசியல் சூழலை,மக்களின் நிலைப்பாட்டை ஆராயத் தூண்டும் இந்நாவல் இந்திய இலக்கியத்தின் மதிப்புமிக்க பொக்கிஷம்.

Wednesday, November 9, 2016

எம்.டி.வாசுதேவன் நாயரின் "இறுதி யாத்திரை"


ரகசியங்களோடு புதைந்து போகும் மனிதர்கள் தன் தலைமுறைக்கு விட்டுச் செல்வதென்னவோ நிம்மதியின்மையே

ஒரு மரணத்தை அடியொற்றிய ஆர்ப்பாட்டமில்லாத கதை.இறந்த தந்தையின் எரியூட்டலுக்கு வரும் சகோதரர்களின் மனவோட்டங்கள்  அவர்கள் வாயிலாகவே நமக்கு சொல்லப்படுகிறது.வாழ்வில் பெரிதாய் சந்தோஷங்களை கண்டிராத நடுத்தர குடும்பத்தின் புத்திரர்கள் அவர்கள். எவ்விதத்திலும் தந்தையின் மரணத்தால் பாதிக்கப்படாதவர்கள். உண்மையில்,நகர ஓட்டத்தின் பிடியில் சிக்கித் திணறும் அன்றாட வாழ்வில் இருந்து சற்று விலகி ஆசுவாசம் கொள்ள உதவுகிறது அந்த மரணம்.அக்கிராமத்தில், கடந்து போன பால்ய நாட்களின் சிற்சில நிகழ்வுகளும், கை சேராது போன காதல்களும் அந்த அசாதாரண சூழ்நிலையிலும் அவர்களின் நினைவுகளை ஆக்ரமித்துக் கொள்கின்றன.


யின் மீது அவர்களுக்கு பெரும் மதிப்போ,பயமோ, பிரியமோ ஏதும் இருப்பதாய் சொல்லப்படவில்லை. ஆண்பிள்ளைகளுக்கும் தந்தைகளுக்குமான உறவென்பது வெளிப்படைத்தன்மை அற்றது. பெண்களைப் போல ஏதேனும் ஒரு வழியில் அன்பை விடாது தெரிவித்துக் கொண்டே இருப்பது ஆண்களுக்கு வாய்க்காதது.குட்டேட்டனும்,ராஜனும், அப்புவும், உன்னியும் அவ்விதமே.சிலோனில் தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்துக் கொண்ட தந்தையை குறித்து அவர்களுக்கு தீராத கேள்விகள் இருக்கின்றன.மனக் குமுறல்களை கூட வெளிக்காட்ட தயங்கும் அந்த சகோதரர்களின் குணம் அவர்களின் தாயிடம் இருந்து வந்ததாக இருக்க வேண்டும்.வேலை தேடி சிலோன் சென்று வெறும் கையோடு திரும்பும் ராஜனை எவ்வித சலனமும் இன்றி தூணில் சாய்ந்து நின்று வரவேற்கும் அப்பெண்மணி குறித்து கதையில் அதிகம் சொல்லப்படவில்லை.அதற்கான அவசியமும் இல்லை. பெண்கள் எதிர்பார்ப்புகள் ஏதுமற்று குடும்பத்தை காப்பவர்கள்.

ராஜனின் சிலோன் பயணம்,நாவலில் குறிப்பிடத்தக்க பகுதி.கேள்விகள் கேட்கவும்,ஆதரவு அளிக்கவும் யாருமற்ற அந்த தேசத்தில் அவர் கழித்த சொற்ப நாட்களின் நிகழ்வுகள் பலவும் நெகிழ்ச்சியானவை. அங்கு அவன் சந்திக்கும் தந்தையின் உதவியாளர் குருப்பின் சோகம் அப்பிய சொந்தக் கதை நம்மை அசைத்துப் பார்ப்பது.அனுபவங்களே மனிதர்களை பக்குவப்படுத்துகின்றன என்று கேட்டு சலித்த வாசகம் மீண்டுமொருமுறை நினைவிற்கு வராமலில்லை குருப்பின் கதையை ராஜனோடு சேர்ந்து நாமும் கேட்கையில்.

இறந்த வீட்டின் சடங்குகள்,அதன் பொருட்டு நிகழும் சங்கடங்கள்,சலித்துக் கொண்டாலும் காரியங்களை தலைமை ஏற்று செய்யும் முதியவர் ஒருவர் என காட்சிகளை கண் முன் நிறுத்துவதான விவரிப்பு.காலம் காலமாக பின்பற்றப்படும் சடங்குகளுக்கு இன்றைய தலைமுறையின் பதில் என்னவோ,"சீக்கிரம் முடிந்தால் ஊருக்கு கிளம்பலாம்.." என்பதாகவே இருக்கு.வாழ் நாள் முழுக்க தங்களை தனித்து பயணிக்கச் செய்த ஒரு பொறுப்பற்ற தந்தையின் இறுதி யாத்திரையில், அப்பிள்ளைகள் அவர் குறித்த இனிய நினைவுகளை மீட்டெடுக்க முயன்று தோற்றுப் போவதை சொல்லும் பாசாங்கில்லாத படைப்பு.

இது எம்டிவியின் சொந்தக் கதை என்று ஷைலஜாவின் குறிப்பு கூறுகிறது. பாசாங்குகற்றதன்மைக்கு அதுவே காரணமாக இருக்கக் கூடும்.உரத்த குரல்களும், கசப்பான மனங்களும், பழிவாங்கும் மனிதர்கள் என யாருமற்றது எம்டிவி விஸ்தரித்துள்ள இவ்வுலகம். மெல்லிய மனம் கொண்டு, வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக் கொண்ட மனிதர்களின் எதார்த்த பதிவு. நாவலின் இந்த மேலான இயல்பை நம்மை முற்றிலும் உணர்ந்து கொள்ள செய்வதாக உள்ளது ஷைலஜாவின் சிறப்பான மொழிபெயர்ப்பு.

நாவல் : இறுதி யாத்திரை
ஆசிரியர்: எம் டி வாசுதேவன் நாயர்
தமிழில்: கே.வி.ஷைலஜா
வெளியீடு : வம்சி பதிப்பகம்
விலை: ரூ.140/-

Saturday, September 24, 2016

ஒரு மிகை எதார்த்தவாதியின் சுயசரிதை


"எது எப்படியாகினும் என் உறுதிப்பாடுகளில் சமரசம் செய்தோ,தனிப்பட்ட ஒழுக்க நெறியில் சமரசம் செய்தோ ஒரு காட்சி கூட எடுத்ததில்லை நான் "

 - இயக்குநர் லூயிஸ் புனுவல்

 

மிகை எதார்த்தவாதியாக தன்னை முன்னிறுத்தும் ஸ்பெயின் நாட்டு இயக்குநர் லூயிஸ் புனுவலின் சுயசரிதை "இறுதி சுவாசம்" வாசிக்க கிடைத்தது.முதன் முதலில் பார்த்த புனுவலின் Belle de jour ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது.எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் தெளிவான மணவாழ்க்கை கொண்ட பெண் திடீரென விபச்சார விடுதியின் காரியங்களில் ஈடுபட துணிவதும்,தொடர்ச்சியாய் அவளை துரத்தும் வினோத கனவுகளுமென அத்திரைப்படம் அதுவரை கண்டிராத திரை அனுபவமாக இருந்தது.அதன் தொடர்ச்சியாய் புனுவலின் திரைப்படங்களை தேடிப் பார்க்க துவங்கினேன்.படைப்பாளியின் சுதந்திரம் என்பது எல்லைகளற்று நீண்டு கொண்டே இருப்பதென்பதை மெய்ப்பிக்கும் படியான திரைப்படங்கள் புனுவலுடையவை.

ஒரே கதாபாத்திரத்தை இரு வேறு நாயகிகள் செய்வது,ஒரு காட்சியின் முடிவில் அதற்கு முற்றிலும் தொடர்பில்லாத மற்றொரு கதை துவங்குவது,கண்ணுக்கு புலப்படாத மந்திர கோட்டினால் பீடிக்கப்பட்டு ஒரு அறையில் மாட்டிக் கொள்ளும் மனிதர்கள் என புனுவல் தேர்ந்தெடுக்கும் காட்சிப் பின்னணிகள் ஆச்சர்யம் கொள்ள வைப்பவை.

மத நம்பிக்கைகள் மீதும்,அதிகாரவர்க்கத்தின் மீதும் தனது கறாரான விமர்சனத்தை தெளிவாக முன்வைக்கும் புனுவல் அதன் காரணமாக தொடர்ச்சியாய் சந்தித்த எதிர் விமர்சனங்களும்/மிரட்டல்களும் குறித்து இப்புத்தகத்தில் தனக்கே உரிய பகடியோடு விவரித்துள்ளார்.Un Chien Andalou,Viridiana,Los Olvidados முதலான படங்கள் கடும் எதிர்ப்பை சந்தித்தவை.Virdianaவில் இடம் பெரும் "Last Supper"யை பகடி செய்யும் ஒரு காட்சி பிரசித்தி பெற்றது.தேவகுமாரன் மீண்டும் பூமியில் ஜனித்தால், அவனது பரிசுத்தம் அர்த்தமற்று போகும்படியாகவே உலகம் பீடிக்கப்பட்டிருக்கிறது என்பதை உரத்துச் சொல்லுவதாக இருக்கும் அவரது Nazarin.கடவுளின் இருப்பையும்,மிஷினரிகளின் சேவைகளையும் தொடர்ந்து விமர்சிக்கும் லூயிஸ்,இரக்கமற்ற இவ்வுலகிற்கு புனிதர்கள் தேவையில்லை என்கிறார்.

ஸ்பெயின்-மெக்சிகோ-பாரிஸ் என தொழில் நிமித்தமாய் பயணப்பட்ட அவரது நினைவுப் பாதை முழுக்க நிறைந்திருப்பது நண்பர்களே. சார்லி சாப்ளின்,பிக்காஸோ உடனான புனுவலின் அனுபவ பகிரல்கள் வாசகனுக்கு நிச்சயம் சுவாரஸ்யம் கூட்டுவது.புனுவலின்  கதைகளில் கனவுகளுக்கு முக்கிய இடமுண்டு.அவை அசாதாரணமானவை.ஒரு நாளில் 2 மணி நேரம் தவிர்த்து மீதமுள்ள 22 மணிநேரமும் கனவுகளில் லயித்திருப்பதையே விரும்புவேன் என்கிறார் புனுவல்.திரையில் அவர் இடம்பெறச் செய்த காட்சிகள் மிகக் குறைவே என எண்ணும்படியாக தன் வினோத கனவுகளை குறித்து மட்டுமே நான்கு பக்கங்களுக்கு மேலாக விவரிக்கிறார்.

குடும்பம்,மனைவி,காதலிகள் குறித்து அதிகம் பகிரவில்லை மாறாக விதவிதமான மது வகைகள் குறித்து பக்கம்பக்கமாக விவரிக்கிறார். புனுவலின் படங்களின் விருந்துண்ணும் காட்சிகள் பிரதான இடம் பிடித்திருப்பதற்கு காரணம் புலப்படுகிறது.இயக்குநராய் கால் பாதிக்கும் முன்னர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எதிர் கொண்ட சிரமங்களை குறித்தும்,மனதிற்கு ஒப்பாத ஹாலிவுட் படங்களில் பணியாற்றியது குறித்தும் புனுவல் சொல்பவை இத்தொழிலின் மீது அவர் கொண்டிருந்த தீரா காதலை பறைசாற்றுவது.உலக யுத்தம் உச்சத்தில் இருந்த சமயம் கொண்டிருந்த அரசியல் கொள்கைகள் காரணமாக எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள்,மறைந்து திரிந்த நாட்கள் என உலக யுத்தத்தின் நாட்களையும் பதிவு செய்துள்ளார்.வரலாறுகளால் நிரம்பிய கடந்த காலம் புனுவலுடையது.

தான் இயக்கிய படங்களில் தனக்கு மிகப் பிடித்ததென்ன "Phantom Of Liberty"யை குறிப்பிடுகின்றார்.வாழ்வில் நிகழ்ந்த மறக்கவியலா சம்பவங்களை பிற்காலத்தில் தமது படத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இடம்பெறச் செய்ததாக குறிப்பிடுகின்றார்.ஒளிப்பதிவு அழகியலின் அதிக நாட்டமில்லை அது கதையின் போக்கிலிருந்து பார்வையாளனை நகர்த்தி விடும் எனக் கூறும் புனுவல், தனக்கு பிரியமான இயக்குநர்கள் என பெடரிக்கோ பெலினி,பிரிட்ஸ் லேங்,ஹிட்ச்காக்,விட்டோரியோ டிசிகா,பெர்க்மான் முதலானோரை குறிப்பிடுகின்றார்.

மத நம்பிக்கைகள் மீதும்,அதிகாரவர்க்கத்தின் மீதும் தனது கறாரான விமர்சனத்தை முன்வைத்த புனுவலின் சுயசரிதை அவரை குறித்து மேலும் புரிந்து கொள்ள உதவுகிறது. திரைப்படங்களின் வழி நாம் அறிந்திருந்த புனுவலுக்கும் சுயசரிதையில் காணும் புனுவலுக்கும் அதிக வித்தியாசமில்லை.தன் கருத்துக்களில் பிடிவாதமும் படைப்புகளில் சமரசமும் செய்து கொள்ளாத மாபெரும் மனிதனின் நாட்குறிப்புகள் இவை.

Te amo Luis Bunuel!

புத்தகம்: இறுதி சுவாசம் 
ஆசிரியர்: லூயிஸ் புனுவல் 
தமிழில் சா.தேவதாஸ் 
வெளியீடு: வம்சி 

Monday, September 5, 2016

ராணியுடன் ஒரு தேநீர் விருந்து


காணா தேசங்களின் மனிதர்களை,அவர் தம் வாழ்க்கைச் சூழலை,கடந்து வந்த போராட்டங்களை,மேன்மை பொருந்திய காதலை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் இலக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டல்லவா. உலக இலக்கியங்களின் ருசி என்பது எல்லைகள் கடந்து விரிந்து நிற்கும் விருட்சம் போன்றது. மொழியால்,பண்பாட்டால், பழக்க வழக்கங்களால்,தட்ப வெட்பத்தால் முற்றிலும் நம்மிடம் இருந்து வேறுபட்டு நிற்கும் தேசங்களின் கதைகள் தரும் நிறைவு படித்துணர வேண்டியது.


அரவிந்தனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து" தேர்ந்தெடுத்த வெல்ஷ் மொழிச் சிறுகதைகளின் இத்தொகுப்பு செறிவான படைப்பு.கதைகளின் தேர்வும் அவற்றின் கச்சித மொழிபெயர்ப்பும் சிறப்பு.தனித்தலையும் மனிதர்களின் கதைகள் இத்தொகுதியில் பிரதான இடம் பிடித்துக் கொண்டதாக தோன்றியது.அவர்களின் தனிமையின் காரணங்கள் வேறு பட்டவை.போரின் பொருட்டும், காதலின் பொருட்டும்,பிரியத்திற்கு உரியவர்களை இழந்ததின் பொருட்டும் நினைவுக்கு குழிக்குள் சிக்குண்டு வெளி வர வழியறியாது தவிப்பவர்கள் அவர்கள்.

தொடர்ச்சியாக பிள்ளைகளை இழந்த தம்பதியினரின் கதையை சொல்லும் "தொலைந்து போன குழந்தைகள்" நெகிழ வைப்பது.மாலை மங்கிய பொழுதில் வழி தவறி காட்டினுள் செல்லும் நாயகியின் குழப்பம் மிகுந்த மனநிலை அவளது தினசரி நாட்களின் குறியீடு. "குழந்தைகள் உருவில் நாம் அழியாமல் இருக்கிறோம்" என்னும் வரியை ஞாபகப்படுத்திக் கொள்ளும் அவள் அப்பழுக்கற்ற தாயன்பின் அடையாளம்.மார்ட்டின் தாவிஸ்'ன் "தண்ணீர்" போரின் கோர முகத்தை ஒரு எளியவனின் ஒரு நாள் போராட்டத்தை கொண்டு அழுத்தமாக பதிவு செய்கிறது.தூரத்தில் விடாது ஒலித்துக் கொண்டிருக்கும் வெடிகுண்டு முழக்கத்திற்கு சற்றும் குறைந்ததல்ல பதுங்கு குழியில் அவன் காணும் காட்சிகள்.

தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்ததும் தலைப்பு கதையுமான "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து",வாழ்ந்து கெட்ட ராணியின் நினைவுகள் வழி பயணித்து வரும்படியான கதை.யாருமற்ற அவ்வீதியின் ஆளரவமற்ற வீடுகளை சுட்டிக் காட்டியபடியே அவ்வீட்டு மனிதர்கள் சந்தித்த துயரங்களை பகிர்கிறார். உண்மையில் அக்கதைகள் யாவும் அச்சம் தருபவை. நினைத்து பாராத மோசமான முடிவை சந்தித்த அம்மனிதர்கள் குறித்து கதை சொல்லியின் நேர்த்தியுடன் எடுத்துரைக்கும் ராணி அவ்விடம் தனித்து இருப்பதின் காரணம் பெரும் சோகத்தில் ஆழ்த்துவது. மீண்டெழ முடியா நினைவுகள் மோசமானவை!

"வாட்டிலன் ஒரு திருடன்" - கெட்டவர்கள் தண்டிக்கப்பட்டு இறுதியில் நல்லவர்களே வெற்றி பெறுவார்கள் என்று காலங்காலகமாக கண்டும்/படித்தும் வந்த நமக்கு எதார்த்தத்தை பகடி செய்யும் இச்சிறுகதை குட்டு வைக்கிறது.லோயிட் ஜோன்ஸ்'ன் "தபால் நிலைய சிகப்பு" கதை குறித்து என்ன சொல்ல.கதையின் ஓட்டத்தில் நம்மை மறந்து நாயகனோடு அவன் பார்க்கும் ரகசியம் பொதிந்த வீடுகளை நாமும் கண்காணிக்க துவங்குகிறோம். எதார்த்தத்தில் இது போன்ற நிகழ்வுகள் சாத்தியமே எனினும் அதை கதையாக்கிய இக்கதாசிரியரின் நுட்ப சிந்தனை ஆச்சர்யம் கொள்ள வைத்தது.

"பனிப் புயல்" ,சிறுநகரொன்றில் தாந்தோன்றி இளைஞனான பெர்ரி உடல் நலிவுற்ற தன் தாயுடன் செலவிடும் ஒரு இரவின் நிகழ்வுகளை குறித்தது.ஒழுங்கீனங்களின் மொத்த உறைவிடமான பெர்ரி குடியின் மயக்கத்தில் தன் தாயை இரக்கமின்றி நிராகரிக்கும் காட்சிகள் அப்பனி இரவின் மூர்க்கத்திற்கு இணையானது.பெர்ரியின் மீது பரிதாபமும் கோபமும் ஒன்று சேர தோன்றி மறைவதை தவிர்க்க முடியாது.இருண்மையின் கதைகள் சகித்துக் கொள்ள முடியாதவை,பனிப் புயல் அதிலொன்று.

தமிழில் வெளியாகி உள்ள உலக சிறுகதை தொகுதிகளில் நிச்சயம் "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து" மிக முக்கிய இடம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெல்ஷ் மொழிச் சிறுகதைகள்
தமிழில்: அரவிந்தன்
வெளியீடு: காலச்சுவடு
விலை: 90 ரூபாய்

Tuesday, August 30, 2016

சத்யஜித் ரேயின் ஃபெலூடா கதைகள்


சினிமாவும் இலக்கியமும் அபூர்வமாய் சந்தித்துக் கொள்ளும் தருணங்கள் சில உண்டு.கி ராவின் பிஞ்சுகள் நாவலுக்கும் ரேயின் பதேர் பாஞ்சாலிக்கு ஏதோ ஒரு நெருங்கிய தொடர்புண்டு என்றே எனக்கு தோன்றும்.சிறுவர்களின் பிரத்யேக கனவுகளுக்குள் நம்மை இட்டுச் செல்லும் இவ்விரு கதைகளுமே சிறார்களின் அகவுலகை வார்த்தைகளால்/காட்சிகளால் நமக்கு காட்டிச் செல்லும் இடங்கள் உணர்வுபூர்வமானவை.

தம் கவித்துவ திரைப்படங்களின் வழி இந்தியாவின் பெயரை உலகளவில் உயர்த்திப் பிடித்த சத்யஜித்ரேயின் ஆச்சர்யமிக்க மற்றுமொரு முகம் ஃபெலூடா கதைகளை வாசிக்கையில் புலப்பட்டது.ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளின் பாதிப்பால் ரே உருவாக்கியுள்ள ஃபெலூடா கதைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நம் மனதை கவர்பவை.வயது வித்யாசமின்றி அனைவராலும் விரும்பப்படும் விதமான நேர்த்தி கொண்ட 20 தனித்த கதைகளின் தொகுப்பு.சிறுவர்களுக்கான தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பில் இக்கதைகள் மிக முக்கியமானவை.


துப்பறியும் நிபுணர் ஃபெலூடா,அவருக்கு உதவியாய் தம்பி தொப்ஷே,எழுத்தாளர் லால் மோகன் பாபு என மூவர் கூட்டணியின் சாகசங்கள் சுவாரஸ்யம் நிறைந்தவை. பெலூடாவின் புத்தி சாதுர்யத்தை வியந்தபடியே ஒவ்வொரு கதையும் நாம் கடக்க வேண்டியுள்ளது. அறிவின் துணை கொண்டே அவிழ்க்கப்படும் மர்மங்களின் பின்னணி மிகையின்றி சித்தரிக்கப்படுவதோடு முடிந்த வரை எளிய நடையில் வாசகனுக்கு முன்வைக்கப்படுகின்றன.

புராதான பொருட்கள் திருட்டு,புதையல் வேட்டை துவங்கி பெரும் மாபியாவாக செயல்படும் கொள்ளைக் கூட்டம் வரை ஃபெலூடா விசாரிக்கும் குற்றங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. சிறுவர்களுக்கான கதைகள் தான் என்றாலும் போகிற போக்கில் சமூகத்தின் மீதான கேள்விகளை முன்வைக்கவும் தவறவில்லை ரே.அதே போலவே இந்திய திரைப்படங்கள் குறித்த கேலிகளும். பம்பாயில் கதைகள் தயாரிக்கப் படுகின்றன,கொல்கத்தாவில் கதைகள் ரசிக்கப்படுகின்றன என்கிறார்.எத்தனை உண்மை!

ஃபெலூடா கதைகள் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடப்பதாக உள்ளன.வாரணாசி, டார்ஜிலிங், லக்னோவ், ஜெய்சால்மர்,புவனேஸ்வர், பம்பாய்,சிலிகுரி என ஃபெலூடா பயணிக்கும் நகரங்கள் குறித்த விவரணைகள் குறிப்பிடத்தக்கவை.மேலும் அந்நகரங்களின் தட்ப வெட்பம்,உணவு பழக்கங்கள், சுற்றுலாத் தளங்கள் என முடிந்த வரை விரிவாகச் சொல்லி நம்மை அப்பயணத்தில் ஒருவராக உணர்ச்சி செய்கிறார் ரே.பரந்துப்பட்ட அவரது ஞானமும்,பயணங்கள் மீதான காதலும்,பழம் பொருட்கள் மீதான அக்கறையும் இக்கதைகளின் வழி நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எப்போதும் தீவிர சிந்தனையில் பைப் புகைத்தபடி இருக்கும் ஃபெலூடாவை ரேயாகவே உருவகித்துக் கொண்டேன்.ரேயின் கம்பீரம் அத்தகையது தான் இப்புகைப்படத்தில் உள்ளது போல.

மொத்தம் 30 புத்தகங்களின் தொகுப்பான இதில் 20 புத்தகங்கள் மட்டுமே தமிழில் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன. வீ.பா.கணேசனின் மொழிபெயர்ப்பு தங்கு தடையின்றி எளிதாக புரிந்து கொள்ளும்படி அமைந்துள்ளது மேலும் ஒரு சிறப்பு. இந்தியாவின் ஷெர்லாக் என பெருமையோடு சொல்லிக் கொள்ளும்படியான ஃபெலூடா கதைகள் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அவசியம் பரிந்துரைக்கப்பட்ட வேண்டிய தொகுப்பு.


புத்தக வரிசை: ஃபெலூடா கதைகள்
ஆசிரியர்: சத்யஜித் ரே
மொழிபெயர்ப்பு: வீ.பா.கணேசன்
வெளியீடு : பாரதி புத்தக நிலையம்

Wednesday, February 10, 2016

எருது - உலகச் சிறுகதைகள்


தேர்ந்தெடுத்த உலக சிறுகதைகளின் தொகுப்பு.தேர்ந்தெடுத்த என்பதை அழுத்தமாக குறிப்பிட வேண்டும் என்னும் படியான அற்புத கதைகளின் தேர்வு. உலக நாடுகளின் தலை சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் வெகு நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன.

யாவருக்கும் புதிரான முதியவன் முர்லாக்கின் வாழ்வின் மோசமானதொரு நாளை விவரிக்கும் முதல் கதையான அம்புரோஸ் பியர்ஸின் "சட்டமிடப்பட்ட சாளரம்" ஏற்படுத்தும் அதிர்வில் இருந்து வெளிவரும் முன்னர்,பல்வேறு மனநிலைக்கு இட்டுச் செல்லும் பின்வரும் கதைகள்.நாம் மறந்து போன கடந்த காலம் மீண்டும் நினைவிற்கு கொண்டு வரும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமானதாக இருப்பின் கவலையில்லை,ஆனால் பிரியத்திற்கு உரிய கார்ட்டருக்கு நிகழ்ந்ததென்னவோ துன்பகரமானது.கார்ட்டரின் கதையை சொல்லும் கிரகாம் கிரீனின் "நிலப்படம்" அசலான வாசிப்பனுபவம்.ரைஸ் யூக்ஸின் "கல்லறை சாட்சியம்" சிறுகதை லூயிஸ் புனுயலின் "The Phantom of Liberty" திரைப்படத்தை நினைவூட்டியது.ஒரு கதையின் முடிவே மற்றொரு புதிய கதையின் துவக்கமாய் நீளும் பாணி..எழுத்தில் எதிர்பார்க்காதது.இரானிய எழுத்தாளர் யூசுப் இதிரிஸின் "சதையாலான வீடு" இருண்மை சூழ்ந்த குடும்பத்தின் கதை.யாருமறியா ரகசியம் ஒன்றை உள்ளடக்கி எழுதப்பட்ட கவிதையைப் போல அவ்வீடும் அவ்வீட்டுப் பெண்களும்.

ஒவ்வொரு கதையும் ஒரு விதத்தில் ஈர்க்கும் தன்மையில் இருப்பினும் தொகுப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு கதைகள் உண்டு. மொழிபெயர்ப்பின் சாயல் ஏதுமற்ற துல்லியமான நடை கொண்ட கதைகள் இவை.பிரபல அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசனின் "வசன கவிதை" அதிலொன்று.இனத்தால் வேறுபட்ட (ராபர்ட்டா - ட்வைலா) இரு தோழிகளின் கதை.சிறுவயதில் துவங்கும் அவர்களின் நட்பு குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பிருந்தும் புதுப்பிக்க வழியற்று போகும் அவலத்தை சொல்லுவது.சிறுமிகளாய் இருந்த சமயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாத பலவும் வயது கூட கூட பெருஞ்சுவராய் அவர்களுக்கு நடுவில் எழுகிறது. சிறுவயதில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நிழல் அவர்களை சூனியமாக துரத்துவதும்,அதன் பொருட்டு நிகழும் உரையாடல்களும்.. ராபர்ட்டாவின் மனவெளியை புரிந்து கொள்ள முயன்று தோற்கும் ட்வைலாவின் போராட்டங்கள் நம்மையும் அசைத்துப் பார்ப்பது.

தலைப்புக் கதையான மோ யானின் "எருது" - மான அவமானங்களின் பொருட்டு பிள்ளையின் முன் சிறுமைப்பட்டும் பெருமைப்பட்டும் நிற்கும் தகப்பனின் கதை.மகன் கண்ணெதிரே,எதிரியின் அத்தனை அவமதிப்புகளையும் கண்டு கொள்ளாது அல்லது சகித்துக் கொள்ளும் தகப்பன், இறுதியில் வெடித்துக் குமுறும் இடம் தகப்பன் - பிள்ளை உறவின் புனிதத்தை உரத்துச் சொல்வது."Bicycle Tieves" படத்தின் இறுதிக் காட்சிக்கு ஒப்பான மனநிலையை தந்து செல்லும் படைப்பிது.சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைகளுள் ஆகச் சிறந்த கதையும் இது தான்.

நூலை தொகுத்து மொழி பெயர்த்துள்ள நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு அன்பும் வாழ்த்துகளும்.


எருது
எதிர் வெளியீடு

Thursday, May 14, 2015

என் பெயர் சிகப்பு - ஓரான் பாமுக்




"நிறம் என்பது கண்ணின் தொடுகை,செவிடனுக்கு இசை,இருட்டிலிருந்து வெளிப்படும் ஒரு வார்த்தை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளால ஒவ்வொரு புத்தகத்திலும்,ஒவ்வொரு பொருளிலும் ஆன்மாக்கள் - காற்றின் முணுமுணுப்பை போல - கிசுகிசுப்பதை நான் கேட்டிருப்பதால், என் தொடுகை தேவதைகளின் தீண்டலை ஒத்திருக்கிறது என்று சொல்லுவேன். சிவப்பாக இருப்பது என் அதிர்ஷ்டம். நான் மூர்க்கமானவன். நான் வலிமையானவன். எவ்விடத்திலும் மனிதர்கள் என்னை கவனிப்பார்கள் எனத் தெரியும்.நான் கட்டுப்படுத்த முடியாதவன்.."

ஒரு மாபெரும் கலாச்சாரத்தை,அதன் தொன்மச் சுவடுகளின் வழி ஊடுருவிச் சென்று காணும் வாய்ப்பை தன வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் ஓரான் பாமுக்.16ம் நூற்றாண்டு துருக்கியின் ஓட்டான் சாம்ராஜ்யத்தில் நடைபெறும் கதை.ஓவியக் கலையின் மீது ஆர்வம் கொண்டிருந்த மூன்றாம் சுல்தான் மூராத்தின் ஆணையின் கீழ் சித்திர சுவடிகளை வரைய முற்பட்ட நுண்ணோவியர்களின் வாழ்வரசியல் குறித்து விரிவாய் பேசுகிறது. நாவலின் கதாபாத்திரங்கள் வாசகனுடன் நேரடியாக பேசி கதையை விளக்குகின்றன.இங்கு கதாபாத்திரங்கள் என்பது மனிதர்கள் மட்டும் அல்ல..ஓவியங்களும் பிரேதமும் கூட.

எனிஷ்டே,ஓஸ்மான் ஆகிய ஓவியக் ஆசான்கள்,அவர்களின் சீடர்களான (புனைபெயர்களால் அழைக்கப்படும்)வசீகரன்,ஆலிவ்,நாரை, வண்ணத்துப்பூச்சி..மற்றும் எனிஷ்டேவின் மருமகன் கருப்பு,மகள் ஷெஹூரெ அவளது குழந்தைகள் ஓரான்,ஷெவ்கத்,ஷெஹூரெவின் கொழுந்தன் ஹசன் ஆகியோரைச் சுற்றி நகரும் கதையில் சுவாரஸ்யங்களுக்கு குறையில்லை. இவர்களுக்கு தொடர்பில்லாத யூதப் பெண்ணான வாயடி எஸ்தரின் மீது நம்மையும் அறியாமல் ஒரு நெருக்கம் பற்றிக் கொள்கிறது.அவள் கூவி விற்கும் பட்டாடைகள்,கைக்குட்டைகளின் வண்ணங்களைப் போல கலவையான குணம் கொண்ட பெண்ணவள்.பேரழகி என யாவராலும் வர்ணிக்கப்படும் ஷெஹூரெ காதலின் நிமித்தம் ஆண்களிடம் பகடையாட்டம் ஆடும் பெண்களின் குறியீடு.நிலையற்ற மனம் கொண்டு பேதலிக்கும் அவள்,நம்மை வசீகரிப்பது தம் பிள்ளைகள் இருவரோடு கொண்டிருக்கும் தூய அன்பினால் மட்டுமே.

ஓவிய மெருகாளன் வசீகரன், கொலையாகும் காட்சியோடு துவங்கும் நாவல் அவனது கொலையாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்போடு 100 ஆண்டுகால பாரசீக ஓவியக் கலையின் வரலாறையும் பேசிச் செல்கிறது. நுண்ணோவியர்கள் மத்தியில் காலங் காலமாக புகைந்து கொண்டிருக்கும் கேள்விகளுக்கு,பொறாமை குணத்திற்கு,ஓவியனின் தனித்த பாணியின் மீதான விமர்சனங்களுக்கு,மதச் சம்பிரதாயங்களுக்கு விடை தேடும் எண்ணற்ற உரையாடல்கள். விவாதங்களுகிடையே மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் நூல்கள் (பேரரசர்களின் நிகண்டு,ஹூஸ்ராவ் -ஷிரின் ..) மற்றும் ஓவியங்கள் வாசகனுக்கு சாவாலாக அமைபவை.குறிப்பாக காதலர்கள் ஹூஸ்ராவ் - ஷிரின் இருவரின் சந்திப்புக்கள் ஓவியமாக காட்சிப்படுத்தபட்டதை குறித்த விவரணைகள் அவ்வோவியங்களை தேடிப் பார்த்திடும் ஆவலை தூண்டுவது.

ஓட்டோமான் சுல்தானின் கருவூலத்தில் ஓவியர் ஒஸ்மானும் கருப்பும் செலவழிக்கும் அவ்விரு நாட்களில் - உலகின் நான்கு புறங்களில் இருந்தும் வந்து சேர்ந்த மாபெரும் ஓவியங்களை அவர்கள் கண்டு வியந்து விவாதிக்கும் பொழுதுகள் அற்புதமானவை.அவ்வோயியங்களுக்கு மத்தியில் நாமே நடப்பதாய்,மிதப்பதாய் ஒரு மாயை.வசீகரனின் கொலையாளி- நாரை, ஆலிவ்,வண்ணத்துப்பூச்சி இவர்களுள் ஒருவன் தான் என தெளிவாகி தேடல் பயணம் தொடரும் வேளையிலும் கொலைகாரன் தன் அடையாளங்களை மறைத்துக் கொண்டு நம்மோடு உரையாடுகிறான்.நாவலோடு நாம் இணக்கம் கொள்வதற்கு இவ்வகை கதை சொல்லலும் ஒரு காரணி.

பிற தேச ஓவியங்களை நகல் எடுத்தல்,மததுவேஷ் ஓவியங்களை வரைதல் உள்ளிட்ட விஷயங்களே திரும்ப திரும்ப விவாதிக்கப்படுவது சிறிது அயர்ச்சியே.சாத்தானின் வாயிலாக மதவெறியர்களின் மற்றொரு பக்கத்தை சுட்டிக் காட்டுவது ஆசிரியரின் சார்பின்மையின் அடையாளம்.நூற்றாண்டுகள் கடந்து வந்த ஓவியக்கலையின் மகத்துவத்தை,ஓவியங்களை குறித்த விரிவான பார்வையை முன்வைக்கும் அதே வேளையில் ஒரு இலக்கிய வாசகனாய் இந்நாவல் குறித்து யோசித்தால்..ஜெமோவின் இவ்வரிகளே நினைவுக்கு வருகின்றன.

"என் பெயர் சிவப்பு’-ஐ நாம் துருக்கியை அறிந்துகொள்ள, ஐரோப்பியப் பண்பாடு கீழைப்பண்பாட்டுடன் கலந்த ஒரு தருணத்தை அறிந்துகொள்ள, கீழைக்கலைமனம் மேலைக்கலையை சந்திக்கும் நுட்பங்களை அறிந்துகொள்ள வாசிக்கலாம்.ஆனால் பேரிலக்கியங்களை நாம் நம்மைப்பற்றி அறிந்துகொள்ளவே வாசிக்கிறோம்.."
- ஜெயமோகன்

சில எதிர்பார்ப்புகள் பொய்த்திருந்தாலும் நோபல் பரிசு வென்ற இம்மாபெரும் எழுத்தாளனின் பிற படைப்புகளை தேடி வாசிக்கும் ஆவலை தந்து விடுகின்றது 'என் பெயர் சிகப்பு'.ஓரான் பாமுக்கின் வர்ணனனையில் இஸ்தான்புல் நகரின் அழகை வாசிக்கும் விருப்பத்தை வித்திட்டுள்ளது இந்நாவல்.

வெளியீடு - காலச்சுவடு
தமிழில் - ஜி.குப்புசாமி

Friday, November 14, 2014

சுமித்ரா குறித்து..

என் சேமிப்பிற்காக ஜெமோவின்  தளத்தில் யாழிசையில் வெளியான பதிவைக் குறித்த இக்கட்டுரையை  இங்கு பதிவு செய்கிறேன்..

http://www.jeyamohan.in/?p=54108

Sunday, August 3, 2014

ரேமண்ட் கார்வர் சிறுகதைகள்...

அமெரிக்க சிறுகதையாசிரியர் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள், உறவுகளுக்குள் நிகழும் அன்றாட காட்சிகளின் எதார்த்த விவரிப்புகள். பெரும்பாலான கதைகள் கணவன் - மனைவிக்கிடையேயான நிகழ்வுகளின் பதிவு.தினசரி வாழ்வில் சிறியதும் பெரியதுமாய் எத்தனை விதமான சிக்கல்கள்.நாம் நினைத்தே பாராத விஷயங்களை எடுத்தாளுகின்றன ரேமன்ட்டின் கதைகள்.இவர் கதையுலகத்து பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள்,பதற்றம் நிறைந்தவர்கள்,நினைத்தால் உருகி அழுதிட கூடியவர்கள்.ஆண்களோ பொழுதுபோக்குகளில் விருப்பம் உள்ளவர்கள், குடிகாரர்கள்,குழப்பம் நிறைந்தவர்கள்.இருவேறு திசையில் பயணிக்கும் இவர்கள் இணைந்த வாழ்வு உண்மையில் சுவாரஸ்யமானதே. காதலிப்பவர்கள்,திருமணம் ஆனவர்கள்,விவாகரத்து பெற்றவர்கள்,பெறப் போகிறவர்கள் என....

"ஒரு சிறிய நல்ல காரியம்" - இத்தொகுப்பில் மிகப் பிடித்த கதை.ஒரு எதிர்பாராத விபத்தும் அதன் தொடர்ச்சியான மருத்துவமனை நாட்களும் கணவன் மனைவியிடையே உண்டு பண்ணும் உணர்வுகளைத் தாண்டிய நெருக்கம் குறித்தது.நோயுற்றவர் குணமாகும் வரையிலான மருத்துவமனை தங்கலும்,அங்கு செலவிடப்படும் இரவுகளும் அமானுஷ்யம் நிறைந்தவை. தேறி வருவது மகனாக இருக்கும் பட்சத்தில்,அந்த நிலை இன்னும் கொடுமை. நம்பிக்கை வேர் விட்டு படர்ந்திருக்கும் இடம் மருத்துவமனைகள். அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்களில் வெளிப்படும் உண்மை இது.காட்சிகளின் விவரிப்பில் அவர்களின் முக பாவங்களை கூட கற்பனை செய்யமுடிகிறது.மகனை குறித்த சோகத்தில் உள்ள இவர்களுக்கும் ஒரு பேக்கரி கடைக்காரனுக்குமான உரையாடல் சொல்லும்..வாழ்க்கை தத்துவத்தை.


"எங்கிருந்து அழைக்கிறேன் நான்" - குடிமறதி விடுதியில் சந்தித்துக்கொள்ளும் இரு மனிதர்களின் கதை.அவர்களின் உரையாடல் வழி நமக்கு அறிமுகமாகும் பெண்கள்,இவர்களை சகித்துக் கொண்ட காதலிகள்.புகைபோக்கி சுத்தம் செய்யும் பெண்ணை காதலித்து மணந்து கொண்ட கதையொன்று அழகானது. பெரும் சண்டையோடு மோசமாக முடிவுறும் காதலும்,ஒரு சமயம் கவித்துவமாகவே தொடங்கியிருக்க வேண்டும் என்பதற்கோர் உதாரணம் இச்சிறுகதை.


'ஜூரம்' - விட்டோரியோ டிசிகாவின் 'Children are watching Us' திரைப்படத்தை ஒரு நிமிடம் நினைவூட்டிய சிறுகதை.பிள்ளைகளை விட்டுவிட்டு வேறொருவனுடன் செல்லும் தாய்.அவர்களை பராமரிக்க ஆள் கிடைக்காமல் கஷ்டப்படும் தந்தை.அவர்களுக்கு உதவ வரும் மூதாட்டி எனத் தொடரும் கதையில் படித்த நாயகனும் நாயகியும் ஓவிய கலையின் நுட்பத்தை அறிந்த அளவிற்கு வாழ்வின் நுணுக்கங்களை அறியாமல் உள்ளனர்.வீட்டுக்கு வேலைக்கு வரும் மூதாட்டியும் அவள் கணவனும் வாழ்வை திட்டமிட்டு வெகு அழகாக எடுத்துச் செல்கின்றனர். கல்வியறிவு, ரசனை,இவற்றைத் தாண்டி வேறு பல விஷயங்கள் இல்லற வாழ்விற்கு தேவை என்பது எவ்வளவு உண்மை.

கதீட்ரல் - கண் பார்வையற்ற மனைவியின் தோழனோடு ஒருவன் கொள்ளும் நட்பின் தொடக்க பொழுதுகள்.கண்பார்வையற்றவனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதறியாமல் சலித்துக் கொள்ளும் இவன், அவன் வருகைக்கு பிறகு மெல்ல மெல்ல அவன் உலகிற்குள் நுழைகிறான்.அவர்கள் இருவரும் சேர்ந்து வரையும் தேவாலைய படத்தின் நெளிவுசுளிவுகளை போன்றதே அவர்கள் கொள்ளும் நட்பும்.

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு - ஒரு கொடூர கொலை. கொலையான பெண்ணின் பிணத்தை முதலில் கண்டெடுக்கும் மனிதனின் மனநிலை தொடரும் நாட்களில் எவ்வாறிருக்கும்? அவனைக் காட்டிலும் அவன் மனைவி அதிக குற்ற உணர்ச்சி கொள்கிறாள்.பல நேரம் பயணப்பட்டு அந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கு கொள்கிறாள். இறந்தவள் குறித்த சின்ன சின்ன விஷயங்களையும் கேட்டறிகிறாள். இவளுக்கும் அவளுக்குமான பிணைப்பு பெண் என்பதைத் தாண்டி வேறொரு புள்ளியில் இணைகிறது..

சின்னஞ்சிறு வேலை - ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவின் மருத்துவமனை நாட்களோடு,அவரின் இறுதி நிமிடங்களையும் கோர்வையாக நம் முன் வைக்கிறது இக்கதை.நாம் இன்றும் போற்றிக் கொண்டாடும் ஒரு மாபெரும் இலக்கிய ஆளுமையின் மரணத்தை அருகில் இருந்து பார்த்தது போலொரு உணர்வு.செகாவை குறித்த இந்தக் கதையில் டால்ஸ்டாயும்,கார்க்கியும் வருகிறார்கள்.செகாவின் கதைகள் உங்கள் மனதிற்கு நெருக்கமானவை என்றால் இக்கதை நிச்சயம் கண்ணீர் வர வழைக்கும்.

அடுத்த வீட்டுக்காரர்கள்,பெட்டிகள்,அவர்கள் யாரும்உன்னுடைய கணவன் இல்லை என நீளும் பட்டியலில் ஒரு கதையைக் கூட வேண்டாம் என ஒதுக்க முடியாதபடி அத்தனையும் பொக்கிஷங்கள்.மனித மன சலனங்களை ஊடுருவிச் செல்லும் கதைகள் இவை.ஒரு சில கதைகளை தவிர்த்து மொழிபெயர்ப்பும் சரியாகவே அமைந்துள்ளது.

மகத்தான வாசிப்பனுபவம்!


-வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு-
வெளியீடு - காலச்சுவடு

Wednesday, July 2, 2014

கமலாதாசின் "சந்தன மரங்கள்"

கமலாதாஸ் கதைகளோ,கவிதைகளோ இதற்கு முன் அறிமுகமில்லை. பாலச்சந்திரன் சுள்ளிகாடு தனது சுயசரிதை நூலான சிதம்பர ரகசியத்தில் கமலாதாஸ் உடனான சந்திப்பை குறித்து எழுதி இருப்பார்.அந்தக் கட்டுரை இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் குறித்து இல்லாது கமலாதாசின் பிரியமும்,அக்கறையும் கொண்ட தயாள குணத்தை குறித்து பேசுவது. அதிலிருந்து அவரின் எழுத்துக்களை தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும்.மிகச்சமீபத்தில் எதிர்பாராத காரணங்களினால் நான் வேண்டிய புத்தகத்திற்கு பதில் "சந்தன மரங்கள்" கை வந்து சேர்ந்தது.மகிழ்ச்சியான ஏமாற்றம்!

முன்னுரையில் ஜெமோ குறிப்பிட்டுள்ளதைப் போல கமலாதாசின் உலகத்திற்குள் நுழைய இந்தப் புத்தகம் சிறுவாசல்.நாம் கண் பொத்தி,வாய் மூடி பகிர்ந்து கொள்ளும் ரகசிய மனிதர்கள் அவர் கதை மாந்தர்கள்.முழுக்க முழுக்க பெண் மன உளைச்சல்களை அணுகிப் பேசும் கதைகள்.கமலாதாசின் பெண்கள் சபிக்கப்பட்டவர்கள்,பிரியமானவர்களால் துரத்தியடிக்கப்பட்டவர்கள்,அன்பிற்கு ஏங்குபவர்கள்,மனதளவில் வலிமையற்றவர்கள்,வீட்டை மறந்து வேலையில் மூழ்கி கிடப்பவர்கள் இன்னும் இன்னும்..இதில் ஏதோ ஒன்றில் எந்தப் பெண்ணும் தன்னை சுலபமாக பொருத்திக் கொள்ள இயலும்.



ஒரு நாவலின் நேர்த்தி கொண்டது 'ருக்மணிக்கு ஒரு பொம்மை குழந்தை' கதை."Arappatta kettiya gramathil" என்றொரு பத்மராஜனின் படம்.பரத்தையர் கூடத்தில் மாட்டிக் கொண்டு தப்பிக்க போராடும் பெண்ணிற்கு உதவும் நண்பர்களின் கதை.ஏனோ இந்தக் கதை வாசிக்கையில் அப்படத்தின் ஞாபகம்.அங்கு நிகழும் காதலும்,வன்முறையும்,மரணமும் - மாற்றங்கள் இன்றி தொடர்பவை.ஒரு சிறுமியின் வருகையும், கருகலைப்பினால் நிகழும் மரணமும்,அங்கிருந்து தப்பிப்பிழைத்து பின் மீண்டும் வந்து சேரும் ஒருத்தியின் காதல் கதையும் பதரவைப்பவை.இளையவள்,மூத்தவள் என்கிற பாகுபாடின்றி அங்குள்ள பெண்கள்களின் மனவோட்டத்தை, கனவுகளை, நிராசைகளை நுட்பமாய் விவரிக்கும் கதையிது.அழுதாலும், புரண்டாலும் வாழ்க்கையை அங்கு தான் வாழ்ந்து தீர்க்க வேண்டும்.பத்மராஜனின் படத்தில் வருவது போல காப்பாற்றிச் செல்ல தேவகுமாரன்கள் கிட்டாத புறக்கணிக்கப்பட்ட தேவதைகள் இவர்கள்.

'சந்தன மரங்கள்', இருளும் - வெளிச்சமுமான இரண்டு தோழிகளின் கதை.பெண்ணிய கதைகள் எப்போதும் பெண்களின் சிறப்பை மட்டும் பேசுபவை அல்ல என்பதற்கோர் உதாரணம் இக்கதை.எண்ணங்களில் வன்மமும்,குரோதமும் மிகுந்து வார்த்தைகளில் கத்தியின் கூர்மையை கொண்டவள் கல்யாணிகுட்டி.தாழ்வுமனப்பான்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டவள்.பழிவாங்க காதலை ஆயுதமாக பயன்படுத்தவும் துணிபவள். கல்யாணி குட்டி காதல் கொள்வது தனது தோழி ஷீலாவோடு.ஆம் அவர்கள் காதலர்கள்.லெஸ்பியன் உறவு சார்ந்த கதையொன்றை வாசிப்பது இதுவே முதல் முறை.கதை முழுக்க ஷீலா நமக்கு சொல்வது போல வருகிறது.கல்யாணிகுட்டி மீதான சிநேகமும்,நெருக்கடியான திருமண வாழ்வும்,விலகிய பொழுதும் மீண்டும் மீண்டும் வாட்டும் நினைவுகளும்....
இரண்டு பெண்களுக்கிடையேயான அற்புதமான காதல் கதை.

இவை தவிர்த்து, கூடா காதல் என உலகம் வரையறுக்கும் ஒரு பெண்ணின் நேசத்தை பேசும் 'மாஹிம் வீடு',இரவு பகல் பாராது உழைத்து, தன் தொழிலை நேசிக்கும் பெண் மருத்துவருக்கு நேரும் 'துரோகம்' குறித்தான கதையும் குறிப்பிடத்தக்கவை.தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கொண்டு கமலாதாஸ் புனைந்துள்ள 'பறவையின் வாசனையும்' சிறப்பான கதையே.கண்ணுக்கு புலப்படாத சங்கிலியால் பிணைக்கப்பட்டு உறவுகளை விட்டு வெளியேற முடியாத எல்லாப் பெண்களுக்குமான கதைகள் இவை.கமலாதாசின் படைப்புகளை தேடி வாசிக்க இந்தத் தொகுப்பின் அறிமுகம் போதுமானது.


வெளியீடு - உயிர்மை
தமிழில் - நிர்மால்யா

Tuesday, November 19, 2013

கல்பட்டா நாராயணனின் சுமித்ரா (மலையாள நாவல்)


நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்த படைப்பிது.நாவலின் மனிதர்கள் நமக்கு பரிட்சயமான நபர்களை ஒத்திருந்தால் வரும் மனநிறைவு.நான் அறிந்து வைத்திருக்கும் எத்தனையோ பெண்களின் வாசம் சுமித்ராவிடம்.வயநாட்டின் ஈரத்தை தன்னிடத்தே கொண்ட பெண்ணவள்.

வயநாட்டில் கல்பட்டாவில் தன் கணவன்,மகளோடு வசிக்கும் சுமித்ராவின் உலகம் அவளை சுற்றி உள்ளவர்களால் நமக்கு அறிமுகம் ஆகிறது.கருப்பி, புருஷோத்தமன், தாசன்,அப்பு,கௌடர் என அனைவரும் சுமித்ராவின் அன்பை ருசித்தவர்கள்.கீதாவும்,சுபைதாவும் சுமித்ராவின் இள வயது தோழிகள்.அவர்களின் ரகசியத்தை அவர்களோடு சேர்ந்து கட்டிக் காத்தவள் சுமித்ரா.வயநாட்டின் தன் இருப்பை கடிதத்தின் வழி தூரத்தில் இருக்கும் அவர்களோடு உற்சாகமாய் பகிர்ந்து கொள்கிறாள்.

சுமித்ராவிற்கு மிகப் பிடித்த இடமென அவள் கொள்வது அவ்வீட்டின் பழங்கலம் (நெற் குதிர்கள்,உரல் வைத்திருக்கும் இடம்).தனது பெரும்பாலான நேரத்தை பழங்கலத்தில் கழிப்பதையே சுமித்ரா விரும்புகிறாள். புத்தகங்கள் படிப்பதற்கும்,கருப்பியுடன் ஆற அமர உட்கார்ந்து பேசுவதற்கும் அவள் தேர்ந்தெடுக்கும் இடம் பழங்கலமே.அவ்விடம் அவளுக்கு பிடித்து போனதிற்கான காரணங்கள் அவள் மட்டுமே அறிந்தது.சுமித்ரா தினமும் நான்கைந்து முறை குளிப்பவள்."த்ரா..உன் உடம்புல என்ன சேறு சொரக்குதா.." என அப்பு அவளை செய்கிறான்.பெண்களுக்கும் தண்ணீருக்கும் நெருங்கிய பந்தம் உண்டு இல்லியா.பெண்ணைப் போலவே தண்ணீர் இல்லாது போனால் ஜீவிதம் இல்லை.தண்ணீர்ப் பெண்ணவள்.

கல்பட்டாவிலும் சுமித்ராவிற்கொரு தோழி உண்டு.அவ்வூரில் உள்ள ஆண்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் மாதவியே அது.யாவரும் கண்டு ஒதுங்கும் அவளிடம் சுமித்ராவிற்கு தனித்த பிரியம்.அவளால் மட்டுமே மாதவியை கேலியும்,கிண்டலும் செய்து அரவணைத்துச் செல்ல முடிகின்றது.
போலவே,தேசம் முழுவதும் சுற்றித் திரிந்து ,நிலையான வேலையேதும் இல்லாமல் இருக்கும் தாசனோடான அவளின் நட்பு.அவளிடம் இருந்து அவன் வெகு தூரம் வேறுபட்டு நிற்கிறான் பயணங்களால்,சந்திக்கும் மனிதர்களால், ரசனையால். "கையிலிருக்கும் உலோகம் சொர்ணமாக மாறும் பயணங்கள் தான் எல்லா பயணமும்.." என தாசன் சந்திக்கும் சன்யாசி சொல்கிறார்.வீட்டில் அடைந்து கிடக்கும் சுமித்ரா பயணங்கள் துணை இல்லாமலும் உலோகத்தை தங்கமாக்கும் வித்தை அறிந்தவள்.அதிகம் மனிதர்கள் உடன் ஒட்டுதல் இல்லாமல் தனித்து இருக்கும் எடக்குனி நரசிம்ம கௌடருக்கு சுமித்ராவின் மீது தனி பிரியம் உண்டு.அது அவள் அவருக்கென செய்து தரும் ப்ரத்யேக உப்புமாவின் ருசியால் இருக்கலாம். அவள் அன்பின் மிகுதியாய் அந்த ருசி என்பதை அவர் அறிந்திருந்தார்.



கோழி,நாய் குட்டிகள்,அணில்,பூனைக் குட்டி,கன்றுக்குட்டி என அவள் முகம் அழுத்திக்முத்தமிடாத பிராணிகள் கொஞ்சமே.பூக்களும்,செடிகளும் அவள் விருப்பம்.வயநாட்டில் ஈரத்தில் அவை பூத்து குலுங்கும் நாட்களை திண்ணையில் அமர்ந்து ரசிக்கும் விருப்பமும் உண்டு அவளுக்கு.
சுமித்ராவிற்கு வாழ்வின் மீது குற்றசாட்டுகள் ஏதுமில்லை இல்லை.தான் காணும் மனிதர்களில் தொடங்கும் அவள் உலகம் அவர்களிடமே முற்று பெறுகிறது. 

சராசரி குடும்பப் பெண்ணின் நாட்குறிப்புகள் சுமித்ராவினுடையது."சராசரி" என்பது பொதுப் பார்வையில். உண்மையில் அவள் கவிதையைப் போல வாழ்ந்தவள்.நாவல் தொடக்கமே சுமித்ராவின் மரணத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அதை நான் பொருட்படுத்தவில்லை.அவள் வாழ்ந்த வாழ்கையின் விவரிப்புகள் தந்த நிறைவு அவள் விடை பெற்றதை மறக்கச் செய்துவிட்டது.

சுமித்ரா,மழையைப் போல நதியைப் போல தான் சேரும் இடத்தை குளிர்வித்து விடை பெறுபவள்!

மார்கரெட் அட்வூட்டின் "Penelopiad " நாவலில் வருவதான இவ்வரிகள்
(முத்துலிங்கத்தின் வியத்தலும் இலமே தொகுதியில் வரும் அறிமுகம்)
எனக்கு சுமித்ராவை வாசிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.

"நீ ஒரு தண்ணீர்ப் பெண்.தண்ணீர் எதிர்ப்பதில்லை,உன்னுடைய கைகளை அதற்குள் விட்டால் தழுவிக்கொள்ளும்.அது சுவர் அல்ல,உன்னை தடுக்காது.தடங்கல் ஏற்பட்டால் தாண்டி போகும். தண்ணீர் பொறுமையானது.ஒரு கல்லை கூட துளைத்துவிடும்..."

ஷைலஜாவின் மொழிப்பெயர்ப்பு குறித்து தனியே குறிப்பிட்டாக வேண்டும்.முன்னமே சூர்ப்பனகையும், பாலச்சந்திரன் சுள்ளிகாடின் சுய சரிதையும் ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் வாசித்துள்ளேன்.மொழி பெயர்ப்பு என்று புத்தக அட்டையில் கண்டால் அன்றி நம்ப முடியாது.பெரும்பாலும் மொழிபெயர்ப்புகளில் புரியாத வரிகளை இரண்டு,மூன்று முறை வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.அந்த சிக்கல் இங்கில்லை.நேர்த்தியோடு கூடி நெருக்கமாகவும் உணரச் செய்கிற மொழிபெயர்ப்பு.

வெளியீடு - வம்சி

Tuesday, October 8, 2013

மாணிக்பந்த்யோபாத்யாயின் பொம்மலாட்டம் (வங்காள நாவல்)

கடந்த 50 ஆண்டுகளில் தமிழில் வெளிவந்துள்ள சிறந்த மொழி பெயர்ப்புகள் பட்டியலில் எஸ்.ரா இந்நாவலை குறிப்பிட்டு இருந்தார்.வங்காள இலக்கிய உலகிற்கு புது வேகம் பாய்ச்சிய தொடக்க கால எழுத்தாளர்களுள் மாணிக்பந்த் முக்கியமானவராக அறியப்படுகிறார்.சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள இந்நாவல் 1932ஆம் ஆண்டு எழுதப்பெற்றது.மலிவு விலை புத்தகங்களுக்கு மத்தியில் தள்ளுபடி விலையில் புத்தகச்சந்தையில் வாங்கினேன்.இந்த நாவாலானது அப்படி விற்கப்பட வேண்டிய ஒன்று அல்ல எனபது வாசித்ததும் விளங்கியது.

கொல்கத்தாவில் மருத்துவத்திற்கு படித்து முடித்து தன் கிராமத்திற்கு திரும்பும் சசிபாபு என்னும் இளைஞனை சுற்றி சுழலும் கதை.சசிபாபுவின் தந்தை பெரும் பணக்காரர்,பணம் ஈட்டுவதில் மட்டுமே பிரியம் கொண்டவர்.சசிபாபுவோ அதற்கு நேர் எதிர்.அப்பாவின் செல்வாக்கினால் அன்றி அவன் படித்த படிப்பை அவன் அவர்களுக்காய் செலவிடும் மேலான குணதிற்காய் கிராமத்தில் சசிபாபுவிற்கு ஏக மரியாதை.அவனுக்கு இணக்கமான ஒரு குடும்பம் உண்டு.அவன் பிரியத்திற்குரிய குஸுமாவின் குடும்பமே அது.அவள் திருமணமானவள்.அவளது கணவன் பாரான்.பரானின் தங்கை மதி.மதி காதலித்து திருமணம் செய்யும் குமுதன்.சசியின் தங்கை பிந்து.அவளின் கணவன் நந்தலால். இவர்களுக்கிடையேயான உணர்வுகளில் மிக மெல்லிய நூல் கட்டி பொம்மலாட்டம் ஆட செய்திருக்கிறார் மாணிக்பந்த்.






தொடக்கத்தில் சசிபாபு வெகு புத்திசாலி தோற்றத்தோடு வாசகனுக்கு அறிமுகம் ஆகின்றான்.கிராமத்தின் அநேக வீடுகளில் இவனிடம் யோசனை கேட்டே எதையும் செய்கின்றனர்.அவன் படிப்பின் மீதும்,உலக அறிவும் மீதும் அவர்களுக்கு தீராத பிரமிப்பு.அவனும் அவர்களில் ஒருவனாய் உருமாறி வீடு வீடாய் சென்று மருத்துவம் பார்த்து அறிவுரைகள் வழங்குகின்றான்.இருப்பினும் மதியும்,குஸுமாவும் அவனுக்கு தீராத புதிர்கள்.அந்த ஏழை பெண்கள் ஜாலங்கள் ஏதும் செய்யாது அவனின் பேரன்பை பெறுகிறார்கள்.


மதியின் காதல்..சிறு பெண்ணான மதிக்கு அவளின் கிராமத்தை தாண்டி வேறு உலகம் தெரியாது.அவ்வூருக்கு வரும் நாடக(ஜாத்ரா) குழுவில் இளவரசன் வேடமேற்கும் குமுதனை கண்டதும் காதல் கொள்கிறாள்.குமுதன் சசியின் நண்பன்.ஜிப்சியை போன்றதொரு வாழ்கையை விரும்புபவன்.இவர்களின் காதல் சசிக்கு அத்தனை உவப்பாய் இல்லை.மதியின் பிடிவாதமே வெல்கிறது.குமுதனும்,மதியும் கொல்கத்தா நகரில் கழிக்கும் நாட்களை துல்லியமாய் விவரிக்கப்படுகின்றன.அந்த பேதை பெண்ணின் அகவுலகமானது வாழ்வின் திடீர் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அதன் போக்கில் சத்தமின்றி பயணிக்கின்றது.குமுதனும் மதியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் காதலின் பொருட்டு அத்தனை ஏழ்மையிலும் வாழ்தல் இனிதாகின்றது.


குஸுமாவின் காதல்..சசிபாபுவின் மீது குஸுமா கொண்டிருக்கும் பிரியம் அவள் மட்டுமே அறிந்தது.துடுக்கான பெண்ணாய்,எப்போதும் சிறிது பேசும் குஸுமாவின் பால் ஈர்க்கப்பட்டே சசிபாபு அவள் குடும்பத்துடன் நெருக்கம் கொள்கிறான்.இவர்கள் காதல் சொல்லிகொண்ட நாளே முடிவிற்கும் வருகின்றது.குஸுமாவிடமும் சசி தோற்று போகிறான்.குஸுமாவின் கணவன் பாரானுக்கோ எல்லாமும் சசிபாபுவே.எதிலும் நாட்டம் இல்லாத விவசாயி.அவன் நிலமும்,அவன் வீட்டு பெண்களும் அவன் உலகம்.சசியோ,குஸுமாவோ அவனுக்கு துரோகம் செய்யவில்லை.அழகான தங்கள் காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொள்கின்றனர்.1900களின் தொடக்கத்தில் இது போன்றதொரு காதலை நாவலின் வழி உரக்க சொல்லி இருக்க முடிந்திருக்கே என்பது ஆச்சர்யம்.காதலை வகைப்படுத்துதல் சரியல்ல இல்லியா..

இவர்கள் தவிர்த்து சசிபாபுவை பெரும் பொறுப்புகளுக்கு ஆளாக்கும் யாதவ் என்னும் சாமியாரின் கதையும் உண்டு.

சசிபாபுவை சுற்றி நகரும் கதையாகினும் அவனிடத்து பெண்களே பெரும் விருட்சமென நாவல் முழுவதும் வியாபித்து உள்ளனர்.கணவன் நந்தலாலின் ஒழுங்கற்ற வாழ்கையை பொறுத்துக் கொள்ள இயலாது போராடும் சசியின் தங்கை பிந்து,சந்தேக கணவனின் பிடியில் நோயுற்று கிடக்கும் சசியின் அன்பிற்குரிய ஸேன்திதி என அவன் கண்டு வியக்கும் பெண்கள் யாவும் அக்கிராமத்தை சேர்ந்தவர்களே.படிப்பறிவும்,உலக ஞானமும் வாழ்கையை கொண்டு செலுத்த போதாது அதற்கு மேலான மனதிடமும் வாழ்வின் மீதான பிடிப்பும் அவசியம் என்பதை இவர்கள் வாயிலாய் உணர்கிறான்.மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை தாண்டி நாவலின் புலப்படும் நிதர்சனம் நம்மை வசீகரித்து கொள்கிறது.

75 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட நாவல் இது.நாவலின் சங்கதிகள் இன்றைக்கும் பொருந்திப் போவது தான் பெருவியப்பு.மேலான வாசிப்பனுபவம் தரும் படைப்பிது.கூடவே நிறைய புரிதல்களும்..!

வெளியீடு - சாகித்ய அகாதமி
தமிழாக்கம் - த.நா.குமாரசாமி
விலை - 90/-

Friday, July 26, 2013

குட்டி இளவரசன் (Le Petit Prince)

பேசி பேசித் தீராத நினைவுகள் சிறுவயது புத்தகங்கள் குறித்தவை..சிறுவர் மலரில் தொடங்கி..அம்புலி மாமா,டிங்கிள், இரும்புக்கை மாயாவி,தெனாலி ராமன் கதைகள், சிந்துபாத்தின் சாகசங்கள்,அக்பர் - பீர்பால்,ஈசாப் நீதி கதைகள் என நீளும் பட்டியல் அது.அன்றைய பொழுதுகளின் உற்சாகமும், சுவாரஸ்யமும் சிறிதும் குறையவில்லை மீண்டும் சிறுவர் புத்தகங்களை தேடி வாசிக்கையில்.

சிறுவர் இலக்கியம் விரும்புவோர் தவற விடக் கூடாத நாவல் குட்டி இளவரசன்.


1943 ஆம் ஆண்டு பிரஞ்சு மொழியில் வெளியான இந்நாவல்(Le Petit Prince ) 200 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கதை நாயகனாக சிறுவன் ஒருவன் அறிமுகமாகி தன் ஓவியங்களை குறித்து நம்மிடம் சொல்லி கொண்டே தான் சந்தித்த குட்டி இளவரசனை அறிமுகம் செய்கின்றான்.கதை நாயகன் இனி நமது குட்டி இளவரசன்.எங்கள் உலகம் கேள்விகளால் மட்டுமே நிறைந்தது என்பதை நிறுவும் வண்ணம் அற்புதமான பாத்திரப்படைப்பு.பெரியவர்கள் குறித்த அவனுடைய கருத்துகள் "அவர்கள் விசித்திரமானவர்கள்..", "அவர்கள் அசாதாரணமானவர்கள்......." ,"எண்ணிகையில் நம்பிக்கை கொண்டவர்கள்.." மறுப்பதற்கில்லை!

குட்டி இளவரசனின் பிரியத்திற்குரிய மலர் குறித்த வர்ணனைகள் சிரிப்பை வரவைப்பவை..அன்பை பொழியும் குட்டி இளவரசனிடம் எதற்கெடுத்தாலும் இருமி தன் இருப்பை காட்டி கொள்ளும் அந்த சிறு மலரை,பெண்களின் குறியீடாக கொள்ளலாம்.


பல்வேறு கிரங்களுக்கு பயணம் செய்யும் குட்டி இளவரசன் சந்திக்கும் மனிதர்கள் அவன் கூற்றுபடியே விசித்திரமானவர்கள்.கட்டளை பிறப்பிப்பதையே தன் அடையாளமாக கொண்டிருக்கும் அரசன்,தற்பெருமைக்காரன், குடிகாரன்,நட்சத்திரங்களை எண்ணி வைத்து சொந்தமெனக் கொள்ளும் வியாபாரி,ஓய்வின்றி தெருவிளக்கு ஏற்றுவதை கடமையாக கொண்டவன் என ஒவ்வொருவரையும் தன் கேள்விகளால் சந்தித்து முடித்து பூமிக்கு வருகிறான்.

பாம்பும்,நரியும் நண்பர்கள் ஆகின்றனர்.பூந்தோட்டம் அவனுக்கு ஆச்சர்யம் தருகின்றது.இங்கும் மனிதர்களே அவன் முன் விசித்திர தோற்றம் கொள்கின்றனர்.

"மனிதர்கள் நீர்ப் பிரவாகத்தில் சிக்கிக் கொள்வார்கள்.ஆனால் எதை தேடுகிறோம் என்பது அவர்களுக்கே தெரியாது.அவர்கள் அதற்காக அலை பாய்ந்து சுற்றிச் சுற்றி வருவார்கள்...."


கதை சொல்லி சிறுவனும்,குட்டி இளவரசனும் பரிமாறிக் கொள்ளும் ஓவியங்கள் குறித்து கட்டாயம் சொல்லியாக வேண்டும்.யானை விழுங்கிய மலைப்பாம்பின் வரைபடத்தை கொண்டே கதை சொல்லி சிறுவன் அறிமுகமாகின்றான்..பின்பு குட்டி இளவரசன் கேட்பதற்கு இணங்க இவன் பிவோபாப் மரம்,ஆட்டுக்குட்டி என படங்கள் வரைவதும்,அவன் அதை பரிகசிப்பதும் என தொடர்கின்றது அவர்களின் விளையாட்டு.

குட்டி இளவரசனின் எதார்த்த கேள்விகளுக்கு பதிலளிக்க நிதானம் அற்று பெரியவர்கள் தங்கள் வேலையில் மூழ்கி கிடக்க..அவர்களை வியந்தபடி தன் பயணத்தை தொடர்கின்றான்.

தமிழில் குழந்தைகளுக்கான படைப்புகள் அதிகம் கவனம் பெறாமல் இருப்பது வருத்தமளிக்கும் விஷயம். குழந்தைகளுக்கு கதை சொல்லியாக இருப்பது எத்தனை சௌகர்யமான விஷயம்.நாம் கேட்ட,வாசித்த கதைகளை கற்பனையுடன் சேர்த்து சொல்லிடலாம். கேட்கப்படவிருக்கும் கேள்விகள் நம்மை ஆச்சர்யபடுத்தலாம்..சில சமயம் சிரிப்பில் ஆழ்த்தலாம்.அது வேறு உலகம், அவர்களுக்கேயானது.. கேள்விகளும்,கற்பனைகளும் நிறைந்தது.அதை அழகானதாகவும்,அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிட கதைகளால் மட்டுமே சாத்தியம்!

வெளியீடு - கிரியா பதிப்பகம்

Wednesday, January 12, 2011

ஹீப்ரு மொழிச் சிறுகதைகள்

ஹீப்ரு மொழிச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான "Not Just Milk and Honey " யின் தமிழாக்கம் "பூந்தென்றலோ வாழ்க்கை" என்னும் இத்தொகுப்பு. மொழிபெயர்ப்பு கதைகள் தரும் வினோத மனநிலையை சற்று அதிகமாகவே இச்சிறுகதைகளில் பெற முடிந்தது.அறிமுகமற்ற தேசமும்,அதன் மக்களும் கற்பனையில் இயல்பாய் விரிவது மொழிப் பெயர்ப்பின் வெற்றி.இதில் அது சிக்கலின்றி சாத்தியப்பட்டுள்ளது..புலம் பெயர் வாழ்வின் துயரங்களும்,தொடர்ச்சியான அரசியல் மாற்றங்களால் அலைகழிக்கப்படும் யூதர்களின் சோக நிலையும் இக்கதைகளின் ஊடே முன்வைக்கபடுகின்றன.பெரும்பாலான கதைகள் பிரிவின் வாதையோடும், யுத்த காலத்தின் பதற்றத்தோடும் பிரியமானவர்களுக்காய் காத்திருக்கும் சபிக்கப்பட்ட காதலிகளை குறித்தவை.

"....இனப்படுகொலைகள்,போர்,பெரும் அரசியல் மாற்றங்கள் என்று அல்லல்பட்டு வாழ்ந்த காலங்களில் மாற்றமும் அமைதியும் வேண்டி துடித்த துடிப்புகளையும்,ஏற்பட்டு வந்த மாற்றங்களை பிரதிபலித்து,அவற்றை தன்னுள்ளே ஒரே அங்கமாகக் கொண்டு ஹீப்ரு படைப்பிலக்கியம் உருவாகிற்று....."

- முன்னுரையில்


இத்தொகுப்பில் என்னை கவர்ந்த சில கதைகள்..........

"கிளாரா ஷியாதோவின் அழகிய வாழ்க்கை" - யோராம் கனியுக்

ஒரு பெண்ணின் சிறு வயது தொடங்கி மரணம் வரையிலான சம்பவங்களின் அழகிய கோர்வை இக்கதை.இழப்புகளை மட்டுமே கொண்டு நகரும் கிளாராவின் வாழ்க்கை போர் கால பயங்கரத்தின் ஊடே சொல்லப்படுகின்றது.பிரியத்திற்குரிய தந்தையின் மரணம்..கிறிஸ்துவ பாதரியாய் தூர தேசம் போன மகன்..காதலனின் எதிர்பாரா மரணம் ..என தொடர்ச்சியான வருத்தங்களுக்கிடையே அவளை உயிர்ப்பித்து கொண்டிருப்பது சிறுவயதில் அவள் கண்டிருந்த அந்த பசிய பொன் நிற கண்கள்.அந்த கண்களுக்கு உரிமையானவன் சாமுவேல் அபுமென்..சுழற்றி அடித்த வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை தன் பால்ய சிநேகிதன் அபுமேனோடு கழித்திட தான் கிளாரா அத்தனை துன்பங்களையும் கடந்து வந்திருக்கிறாளோ என்னும் படியான முடிவு.தேர்ந்த நாவலின் குறு வடிவமாகவே இக்கதை தோன்றியது.




"பன்றியை உடைத்தல்" - எட்கர் கீரத்

பொம்மையின் மீது பேரன்பு கொண்ட சிறுவனின் அகவுலகை நேர்த்தியாய் சொல்லும் கதை.வேண்டும் பொம்மைகள் அனைத்தும் எல்லா சிறுவர்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை.கிடைக்கும் பொம்மைகளிடம் அவர்கள் கொள்ளும் பிரியம்,அவற்றோடு வரிந்து கொள்ளும் அவர்களுக்கே உரித்தான ப்ரேத்யேக உலகம் நாம் உணர்ந்து உட் புக முடியாதது.சிம்சன் பொம்மை வேண்டி,அது கிடைக்காது மாற்றாய் பெற்ற பன்றி உண்டியல் பொம்மையோடு சந்தோஷப்பட்டு கொள்ளும் சிறுவன்,அதன் வருகையையும் விலகலையும் நேரடியாய் நம்முடன் பகிர்கின்றான்.சேமித்து வைத்திருக்கும் பணத்திற்காய் உடை பட போகும் பொம்மையை,தந்தையிடம் இருந்து காக்கும் பொருட்டு அதை யாரும் அறியாமல் வயல் வெளியில் விட்டு வீடு திரும்பும் அச்சிறுவனின் மீது இனம் புரியா பற்றுதல் வருவதென்னவோ உண்மை.

"வெள்ளை" - லீஹ் எய்னி

குற்ற உணர்ச்சியில் உழலும் சராசரி மனிதனின் உணர்வுகளை வெகு அருகில் கண்டடைந்த உணர்வை தரும் இக்கதை இத்தொகுப்பில் குறிப்பிட தகுந்த ஒன்று.சோம்பல் நிறைந்த பகல் பொழுதொன்றில், மன சோர்வில் இருந்து முழுதுமாய் விடுபட முயன்று தோற்கும் தனிமையில் சந்திக்க நேரும் சிறுவனுக்காய் உடைகள் தைக்க ஒத்து கொள்ளும் தையல்காரன் - அச்சிறுவனோடு வரும் பெண்ணிடம் பெரும் உபகாரம் - வெகு நாட்களாய் அவ்வுடையை வாங்க வராத அவர்களுக்காய் காத்திருக்கும் தருணங்கள் - சிறுவனின் மரணம் - வெள்ளை நிறம் ஏற்படுத்தும் மரண பீதி என இக்கதை குறியீடுகளை கொண்டு கலவரமானதொரு மனநிலைக்கு இட்டு செல்கின்றது.

"ஒரு நல்ல இடம்" - ரூத் அல்மோக்

இக்கதை இவ்வாறாக தொடங்குகின்றது..

"ஸிலா கஸ்தான் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவளுடைய வாழ்க்கையில் இரண்டே விருப்பங்கள் தான் உண்டு.ஒன்று அவளது மகன் அரிலாஹ் மற்றது அவளுடைய பாலாலைகா.........."

இவ்விரு வரிகளில் இக்கதை முழுதுமாய் அடங்கி விடும்.தன் பிரியத்திற்குரிய இசைக்கருவியை இசைப்பதில் மகனும் வல்லவன் ஆக வேண்டும் என விரும்பும் தாய்.அவ்விருப்பத்தை தனக்குள்ளே வைத்து அவன் போக்கில் விடுகிறாள்.போரில் சில காலம்,தந்தையின் தோல் தொழிற்சாலையில் சில காலம்,இறுதியாய் நிரந்தரமாய் பிரிந்து தூர தேசம் செல்லும் அரிலாஹ், இசைப்பதை அவள் ஒருபோதும் கேட்டாலில்லை.மகனை நினைத்து மலை மேடுகளில் - வெளிச்சமற்ற வீட்டு முற்றத்தில் - நாடோடி பாடல்களை தன் இசைக்கருவியில் இசைத்து கொண்டே இருந்த ஸிலாவின் பாடல்கள் குறித்தான விவரணைகள் - கவிதை.ஸிலாவின் பிராத்தனைகள் ஏற்று கொள்ளப்படுகின்றன இறுதியாய் - திடீரென தொலைந்து போகும் அரிலாஹ்,பல வருட தேடலுக்கு பிறகு நாடோடி இசைக் கலைஞனாய் கடற்கரையோரம் சுற்றி அலைந்ததாய் அறியப்படுகிறான்.அதனினும் நெகிழ்ச்சியான செய்தி ஒன்றும் இக்கதையில் உண்டு.

"தெருவின் குறுக்கே மோர்கானா" - யெகுடித் ஹென்டெல்


" கதவின் இடைவெளிகளில் நுழைந்து வந்த ஒளி கசங்கிக் கிடந்த படுக்கை விரிப்பிலும் தலையணை மீதும் வெளிறிய கோடுகளை வரைந்தது.படுக்கையில் உட்காரவும் அஞ்சினால்.அவள் முகம் குளிர்ந்து போய் இருந்தது.கன்னத்தில் கவனத்தோடு லேசாக தட்டிக் கொண்டால்.யாருடைய கரங்களில் யார் சுருண்டு கிடந்தது என்பதை நினைத்து பார்க்க முயன்றால்.ஒளி வண்ணத்து பூச்சிகள் படுக்கையில் நடனமாடின.அவள் கைகளிலும்,தோளிலும் தங்க வண்ண ஒளிக்குமிழ்கள் மிளிர்ந்தன..........."

இத்தொகுதியில் எனக்கு மிகப்பிடித்த கதை.எப்போதுக்குமான தேவதை கதைகளை ஒத்திருந்தது காரணமாய் இருக்கலாம்.சில நாட்கள் தன்னோடு இருந்து,பின் சொல்லாமல் விட்டு சென்ற காதலனை(?), எதிர் நோக்கி காத்திருக்கும் யுவதியை குறித்த கதை.காத்திருத்தலின் வலிக்கு நினைவுகளே ஒத்தடம்.அவன் பரிசளித்து சென்ற வெள்ளை நிற,பூ வேலைபாடுகள் கொண்ட குடையுடன் வீதியில் தோன்றும் மோர்கானா - அவன் சார்ந்த நினைவுகளை அசை போட்டபடி - பருவ கால மாற்றங்களில் கூட அக்கறை இன்றி, தான் மேகங்களின் மீது நடப்பதாய் சொல்லி திரிகிறாள். அவனோடிருந்த ஒவ்வொரு நாளும் அவளின் நினைவுகள் வழியே வாசகனுக்கு விவரிக்கபடுகின்றது.நினைவுகளில் மட்டுமே மூழ்கி திளைக்கும் அவளுக்கேயான காதல் கணங்கள்...அற்புதமான கதை.

உலகின் மிகத் தொன்மையான மொழி ஒன்றின் இலக்கியம் எவ்வாறிருக்கும் என்னும் ஆவல் மேலிட வாசிக்க தொடங்கினேன். கொஞ்சமும் ஏமாற்றம் அளிக்காத கதைகள்.யூதர்களின் வாழ்க்கைமுறை,பிரதான தொழில்கள்,யுத்த காலத்தில் சாதாரணர்களின் நிலை,இசை மீது அவர்களுக்கிருந்த அதீத பிரியம் குறித்தான செய்திகள் சுவாரஸ்யமானவை. எல்லா கதைகளின் பின்னணியிலும் ஒரு குரல்,மென் சோக பாடல் ஒன்றை தொடர்ந்து இசைத்தபடி வருவதான மாயை.... ஸிலா கஸ்தானின் பாடலைப் போல,மோர்கானாவின் காதலைப் போல!

தொகுப்பாசிரியர் - ஹயா ஹோப்மேன்
தமிழாக்கம் - த.சித்தார்த்தன்
வெளியீடு - நேசனல் புக் ட்ரஸ்ட்
விலை - 60 ரூபாய்

Monday, October 18, 2010

பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்"

சுயசரிதை எழுத்திற்கு ஒளிவு மறைவு இருத்தல் கூடாது என்று அ.முத்துலிங்கம் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருப்பார்.அவ்வாறான எழுத்தே வாசகனுக்கு நம்பதன்மையையும், எழுத்தாளன் கூட்டி செல்லும் உலகத்தினுள் அந்நியோனியமாய் உலவும் ஆற்றல் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.மலையாள கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்" அவ்வாறான சுயசரிதை.புதைந்து போன இசை கருவிகளை தோண்டி எடுக்கும் மனநிலை எவ்வாறிருக்கும்?!மீண்டும் அதன் இசையை கேட்க எழும் ஆர்வம்,கிடைக்காமல் போனால் அடைய நேரிடும் ஏமாற்றம்,ஏற்கனவே அது தந்து போன இசை மயக்கம் என்பது போன்ற கலவையானதொரு மனநிலைக்கு இட்டு செல்லுகின்றது இந்த தொகுப்பு.

வறுமையின் பிடியில் சிக்கி பரதேசியாய் அலைந்த காலம் தொடங்கி நோபல் அரங்கம் சென்றது வரை, வெவ்வேறு சந்தர்பங்களில் தான் சந்தித்த மனிதர்கள் குறித்த ஒரு கவிஞனின் நேர்த்தியான சுயசரிதை இது.வாசிக்க வாசிக்க ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.வாசித்து முடித்ததும், இவர் வாழ்வின் எல்லா சம்பவங்களையும் பார்த்திருப்பாரோ என தோன்றியது.தனது வாழ்வனுபவங்களை கொஞ்சமும் கூட்டாமல், குறைக்காமல் வாசகனுக்கு அப்படியே தந்திருக்கின்றார்.



இந்நூலில் இவர் பகிர்ந்திருக்கும் நினைவுகளில், ஆண்களை விட பெண்களே வசீகரமானவர்கள்.சாஹீனா,சூன்யமாகி போன வாழ்கையின் துரத்தலில் இருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்று தோற்றவள்.தீக்காயங்கள் கொண்டு விகாரமாய் தோற்றம் அளிக்கும் சஹீனாவை எதிர்பாராமல் ரயில் பயணத்தில் சந்திக்கும் பாலசந்திரன்,அவளோடான தனது கடந்த கால காதலை மீட்டெடுத்து பின் மெல்ல நிகழின் அதிர்வில் இருந்து விலகுவது நெகிழ்வான விவரிப்பு.

"கண் ஜாடையாலே பாவக்கடலின் சூழலில் ஆழ்த்தும்
பெண்கள் புழுவால் தின்னப்பட்டு உதிர்ந்துபோவார்கள்"


இவ்வரிகளுக்கு அட்சரமாய் பொருந்தி போகும் லைலா என்னும் பெண்ணோடான பாலாவின் உரையாடல்கள் கோபியின் டேபிள் டென்னிஸின் சிறு பகுதியை வாசித்தது போல இருந்தது.கடற்கரை மணலில் சாந்தம்மா என்னும் வேசியுடன் துயரத்தை பங்கிட்டு, பாடி கழித்த இரவு,சர்வதேச புத்தக சந்தை ஒன்றில் காந்தியின் "சத்திய சோதனை" புத்தகத்தை தேடி அலைந்த தென் ஆப்பிரிக்க மூதாட்டியுடனான உரையாடல்கள்,கண்களில் மின்னலிட்டு சிரிக்கும் ராதிகாவின் மீது மோகித்திருந்த நாட்கள் - தொடர்ச்சியான அவளின் மரணம், மருமகளின் கொடுமை தாளாது தினம் ஒரு வேஷம் கட்டி யாசித்து அலைந்த முதியவள் என எல்லாவிதமான பெண்களும் உலவுகின்றனர்.

சிவாஜியுடனான பாலச்சந்திரனின் சந்திப்பு ஏற்கனவே இலக்கிய இதழ்களில் வெளிவந்து பேசப்பட்ட கட்டுரை.அதி உன்னதமான எழுத்தாளனை கூட சிறு பிள்ளையின் ரசிக மனநிலைக்கு மாற்றிவிடும் மந்திரத்தை சினிமா கொண்டுள்ளது.சிவாஜியை அவர் வீட்டில் சந்தித்தது குறித்து அந்த நேரத்தின் ஆச்சர்யம் விலகாமல் பகிர்ந்துள்ளார்.கமலா தாஸ் உடனான சந்திப்பு கவிதை சார்ந்த உரையாடல்கள் பற்றி அல்லாது, அவரின் பிரியமும்,அக்கறையும் உள்ள தயாள குணத்தை பறைசாற்றுவதானது.

பிரியத்திற்குரிய நண்பன் ஒருவனை நீண்ட நாட்களுக்கு பிறகு பைத்தியகாரனாய் காண நேர்ந்த அவலமும்,பணம்-உறவுகளை துறந்து கடவுளின் சந்நிதியில் முழுதுமாய் தங்களை அர்ப்பணித்து கொண்ட தம்பதியரை கண்டு நெகிழ்ந்த சந்தோஷ தருணமும் பாலச்சந்திரனுக்கு அமைந்திருக்கின்றது.ரத்த வங்கியில் மோசமானதொரு சூழ்நிலையில் நண்பன் ஆகி போன கிருஷ்ணன் குட்டி,தரித்திரத்தின் பிடியில் இருந்து விலக முடியாத அற்புத கவிஞன் ஸ்ரீவத்ஸன் என பாலச்சந்திரன் அறிமுகப்படுத்தி செல்லும் ஒவ்வொரு மனிதரும் நமக்காய் பெருங்கதை ஒன்றை வைத்திருக்கின்றார்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பு - கே.வி.ஷைலஜா
வெளியீடு - காவ்யா (2002 )

Wednesday, August 18, 2010

சூர்ப்பனகை - மலையாள மொழிபெயர்ப்பு

"எந்த கழிவிரக்கத்தையும் கோராமல்,படித்து முடித்த பின் ஒரு பெண் மருத்துவரின் அறைக்குறிப்புகள் போலல்லாமல் நிதர்சனமாக முழுச் சுதந்திரதோடும் மேன்மையாகவும் வாழ ஆசை படும் பெண்களில் இரண்டு சதவிகித பேர் தவிர மீதமிருக்கும் பெண்களின் நிலை தான் மீராவின் கதாபாத்திரங்கள்"

- ஷைலஜா


மலையாள எழுத்தாளர் மீராவின் பெண்ணிய சிறுகதைகளின் தொகுப்பிது.பெண்ணியம் பேசி புரட்சிகர சிந்தனை கொண்ட பெண்கள் குறித்தான கதைகள் அல்ல இவை.அன்றாட சிக்கல்களில் இருந்து வெளிவர முயன்று தோற்கும் எதார்த்த பெண்கள் குறித்தான பதிவுகள்.பெண்களின் அகவுலகை வெகு நேர்த்தியாய் பகிரும் இக்கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாய் உணர செய்தன.



"செய்திகளின் நாற்றம்",பரவலாய் கவனம் பெற்ற இச்சிறுகதையை ஏற்கனவே படித்த ஞாபகம்.பத்திரிக்கை ஒன்றில் மரண செய்தி பிரிவில் எடிட்டராய் இருப்பவளின் அன்றாடம் அச்செய்திகளை போலவே சோகம் திணிக்கப்பட்டு நகர்வதை சொல்லும் சிறுகதை.எத்தனை அலுப்பு தரும் வேலை அது.இரவும் பகலும் மரண செய்திகளுக்காய் காத்திருக்கும் நாயகி மரணத்தின் நாற்றத்திற்கு தன்னை பழக்கப்படுத்தி கொண்டு முழுதுமாய் அதில் தோய்ந்து போகின்றாள்.மரண செய்திகளின் ஊடாய் கழியும் அவளின் தின பொழுதுகள் கணவனையும்,குழந்தையையும் கூட இரண்டாம் பட்சமாக்கி அவளை ஆட்டுவிக்கின்றது.உயிரற்ற அம்மனிதர்களும்,கல்லறை தோட்டத்து வசனங்களுமே அவளுக்கு நித்ய துணையாகி போகின்றன.அழுத்தம் நிறைந்த அவளின் மன உணர்வுகளுக்கு வெகு அருகில் சென்று வந்தது போன்ற அனுபவம் தேர்ந்த மொழிபெயர்ப்பினால் சாத்தியமாகின்றது.


"இருப்பினும் வேட்டைகாரனும்,பறவையும் ஒரே வலையில் மாட்டி கொள்வதுதான் திருமணம் என்பதை அவர்கள் சீக்கிரமே புரிந்து கொண்டார்கள்"

"அர்த்த ராத்திரிகளின் அலறல்" மற்றும் "இதயம் நம்மை ஆதரிக்கின்றது" ஆகிய சிறுகதைகள் நவீன வாழ்க்கை முறையில் பொருந்தி போக இயலாமல் அலைபாயும் நடுத்தர குடும்பத்து பெண்களை பகடி செய்யும் கதைகள்.குடும்ப பெண்களுக்கே உண்டான பொதுவான சாபங்களை தாண்டி வர இயலாத இயலாமையை நகைச்சுவை சாயம் பூசி பகிர்கின்றன இக்கதைகள்."இறந்தவளின் கல்யாணம்",கைகூடா காதலும்,மறுக்கபடும் வாழ்கையும் ஆதிவாசி பெண்ணொருத்தியை தற்கொலைக்கு இட்டு செல்லும் அவலத்தை,அதன் தொடர்ச்சியாய் நிகழும் ஆதிவாசிகளின் சடங்குகளையும் அவள் விரும்பியவனின் நினைவுகள் கொண்டு பகிர்கின்றது.அவள் தோற்றம் குறித்த விவரிப்புகள் அவளின் இலக்கிய ரசனையின் முன்பு யாதுமற்று போகின்றன. காதலின் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் இக்கதை நாயகி ஒடுக்கப்படும் சமூக பெண்களின் மற்றுமொரு குறியீடு.

இத்தொகுப்பில் மற்றொரு குறிப்பிட தகுந்த கதை "மோக மஞ்சள்".மருத்துவமனையில் சந்திக்க நேரும் திருமணமான நடுத்தர வயது ஆணிற்கும்,விதவை பெண்ணிற்குமான ஒரு நாள் உறவை கற்பு,புனிதம் இத்யாதிகள் கொண்டு பூசி மொழுகாது எதார்த்த நிலை கொண்டு புரிய வைக்கும் கதை.சந்தோஷத்திற்கான எல்லா சாத்தியங்களும் மறுத்தளிக்கபட்ட நிலையில் அவள் கொள்ளும் அந்த நேசமும் மரணத்தின் துணை கொண்டு கரைந்து போவது பெரும் சோகம்.தொடரும் வீழ்ச்சிகளின் இருந்து விடுபட பிரியத்தை எதிர்நோக்கி காத்திருந்து தோற்கும் சராசரி பெண்களை குறித்த கதைகள் இவை.பளிச்சிடும் பல வரிகள்..அத்தனை எளிதாய் கடந்து போகவிடாது செய்கின்றன,நேர்த்தியான மொழிபெயர்ப்பு.முன்னுரையில் பகிரப்படும் இந்த கவிதையில் எல்லாமும் சொல்லபடுகின்றது.

அளவாய் செதுக்கப்பட்ட
கண்ணாடி தொட்டிக்குள்
கம்பீரமாய் நீந்தி விளையாடுகிறேன்
தினம் தினம் அக்கறையோடு
சுத்தம் செய்யபடும் தண்ணீர்.
பதப்படுத்தப்பட்ட செடி கொடிகள்
தேடி அலையாமல் வாய்க்குள்
வந்து விழும் உணவு
தேவையை சரியாய் புரிந்து கொண்டு
அளிக்கப்படும் பொழுதுபோக்குகள்
என் இருத்தல் பார்ப்பவர்களுக்கு
நான் கொடுக்கும் சந்தோசம்
அழகாய் வளைந்து நெளிந்து
பொன்னிறத்தில் மின்னி
வாலசைத்து தலையசைத்து
சந்தோசம் காட்டுவதாய்
எல்லா சுதந்திரங்களோடும்
எவ்வித சுதந்திரமுமின்றி


ஆசிரியர் - கெ.ஆர்.மீரா
தமிழில் - கே.வி.ஷைலஜா
வெளியீடு - வம்சி
விலை - 50 ரூபாய்

Tuesday, July 27, 2010

அந்தோன் சேகவ் கதைகள் - ரஷ்ய மொழிபெயர்ப்பு

உலக இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமான பெயர் அந்தோன் சேகவ்.ரஷ்ய எழுத்தாளரான சேகவின் சிறுகதைகளும்,குறுங்கதைகளும் அடங்கிய தொகுப்பிது.சேகவ் விவரிக்கும் கதைகள் ஊடாக தொன்மையான ரஷ்யாவின் அன்றாட காட்சிகள்..குடும்ப சூழல்..சமூக கட்டமைப்பு போன்றவை மிக தெளிவாக புலப்படுகின்றன.அதிகார வர்க்கத்தின் மேட்டிமைத்தனத்தை, மெலிந்தோரின் அடிமை புத்தியை பெரும்பாலான கதைகள் வாசகனுக்கு முன்னிறுத்துகின்றன.எள்ளல் மிகுந்து,சோகம் தோய்ந்து,சலனம் அற்று,காத்திரம் நிறைந்து என கலவையான எழுத்து...தேர்ந்த மொழிபெயர்ப்பினால் நல்லதொரு வாசிப்பனுபவமாய் அமைந்தது.




பச்சோந்தி(1884 ),எல்லா கால கட்டத்திற்கும் பொருந்தும் கதை.கடை வீதியில் ஒருவனை நாய் கடித்துவிட்டதாய் கேள்விப்படும் காவல்துறை அதிகாரி முதலில் நாய்க்கு உரியவனை திட்டி தீர்ப்பதும்,பின்பு அது ஜெனரல் உடையதாக இருக்கக்கூடும் என அறிந்து சட்டென பேச்சை மாற்றுவதும் என சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிறம் மாறும் சராசரி அரசு அதிகாரியின் புத்தியை நகையாடுகிறது.முகமூடி(1884 ),சமூக மன்றம் ஒன்றின் காட்சிகளை எள்ளல் தொனிக்க விவரிக்கும் இக்கதை மோசமானதொரு சமூக சூழலை மறைமுகமாய் வாசகனுக்கு உணர்த்துகின்றது.வருடங்கள் எத்தனை கடந்தாலும் பணபலம் பொருந்திய மேல் வர்க்கத்திற்கு சலாம் போடும் மனநிலை,மனித சமுதாயத்தில் எந்தவித மாற்றமும் இன்றி தொடரும் அவலத்தை மீண்டும் நினைவுறுத்துவதான கதை.


வான்கா(1886 ),இத்தொகுப்பில் என்னை மிக கவர்ந்த கதை.வேலை பயில முதலாளியின் வீட்டில் தங்கி இருக்கும் ஏழை சிறுவன் வான்கா,தூரத்து கிராமத்தில் இருக்கும் தன் தாத்தாவிற்கு எழுதும் கடிதத்தை சிறுவனின் மனநிலையில் இருந்து வாசித்ததால் அதில் விரவி இருக்கும் பிரியத்தை சோகம் தாண்டி ரசிக்க முடிந்தது.முதலாளியின் கொடுமை தாங்காத சிறுவன் வான்கா மீண்டும் வீடு சேர ஆவல் மேலிட,தன் வருத்தங்களை,தாத்தாவிற்கான தனது பிரியங்களை நிறைந்த கனவுகளோடு எழுதும் இக்கடிதம் மனதை கனக்க செய்வது..


"என் அன்பிற்கு உரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை.எனக்கு உயிர் போகின்றது.இங்கிருந்து ஓடி விடலாம்.நடந்தே கிராமத்திற்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன்...நான் பெரியவன் ஆனதும் உன்னை கருத்துடன் கவனித்து கொள்வேன்.உன்னை யாரும் துன்புறுத்த விடமாட்டேன்..."



"கூட்டில் அடைந்த மனிதர்" (1898) ,மனிதருக்கு மனிதர் வேறுபடும் குணாதிசியங்களை நாம் பெரிதும் பொருட்படுத்துவதில்லை அது இயல்பை மீறும் வரை.எதார்த்த வாழ்கையை விட்டு முற்றிலும் தம்மை துண்டித்து கொண்டு உலவுவோர் நம்மிலும் உண்டு.அத்தகைய மனிதர் ஒருவரை பற்றிய சுவாரஸ்ய கதையே இது.பேலிக்கவ்,கிரேக்க மொழி பேராசிரியரான இவரின் அன்றாடங்கள் சராசரி மனிதர்களிடம் இருந்து வேறுபடுவதோடு பெரும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது..எப்போதும் புதைமிதி கால்மிதிகள் அணிந்து,மடித்துவிட்ட முழுக்கை சட்டை மற்றும் குடையுடம் தோன்றும் பேலிக்கவ் கடந்த காலத்தை மட்டுமே புகழ்ந்து பேசி நிகழ்காலந்தின் மீது தீரா வெறுப்பு கொண்டு யாவரும் வெறுக்கும் மனிதராய் இருக்கின்றார்.அவருக்கு ஏற்படும் எதிர்பாரா காதல்,அதன் ஊடாய் கொள்ளும் மாற்றங்களும் தொடர்ச்சியாய் நிகழும் மரணமும் என நேர்த்தியாய் அம்மனிதனின் வாழ்க்கையை விவரிக்கின்றது இக்கதை.


"பள்ளத்து முடுக்கில்"(1900),வாழ்ந்து ஒழிந்த குடும்பத்தை பற்றிய கதை என மேலோட்டமாக கொண்டாலும்..மறைமுகமாய் இக்கதை அக்காலகட்டத்தில் ரஷ்ய அதிகார வர்க்கங்களிடையே பெருகி கிடந்த போலித்தனங்களும்,அதை மூடி மறைக்க மேற்கொண்ட வழிமுறைகளும்.. தெரிந்தும் எதிர்த்து கேட்கவியலா பொதுஜன நிலையையும் கடுமையாகவே சாடுவதாக உள்ளது."தத்துக்கிளி"(1892 ),அசல் மேல்குடி பெண்ணான ஒல்கா இவானவ்னா,கேளிக்கைகளிலும்..இசை,நடனம்,ஓவியம்,இலக்கியம் மீதான ஆர்வத்தினால் கூடா நட்பு கொண்டு தனது இனிய காதல் கணவனை இழந்து நிற்கும் பரிதாப நிலையை விரிவாய் சொல்லும் இக்கதை,இல்லறம் தாண்டும் பெண்களின் முடிவை ஓர் கணவனின் உண்மை காதலோடு சொல்லும் சோக காவியம்!!

சேகவ், சித்தரித்துள்ள ரஷ்யா மறைந்து புது ரஷ்யா தோன்றிவிட்டது...அவர் கதைகளில் சாடிய அதிபர்களும்,வர்த்தகர்களும் கடந்த காலத்திற்கு உரியவர்களாகி போனார்கள்..இருப்பினும் ஒவ்வொரு கதையில் அவர் முன்னிறுத்திய உண்மை மறுக்கவியலாதது.காலம் கடந்து இன்றும் இவ்விலக்கியங்கள் பேசபடுவதற்கும் அதுவே காரணம்.

மொழிபெயர்ப்பாளர் - ரா.கிருஷ்ணையா
வெளியீடு - முன்னேற்ற பதிப்பகம் (1975 )

Wednesday, March 10, 2010

இலத்தீன் அமெரிக்க சிறுகதைகள்

இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்த விரிவான அறிமுகத்தோடு பிரேசில்,அர்ஜென்டினா,சிலி,டொமினிக் குடியரசு,கொலம்பியா தேசத்து முக்கிய இலக்கிய படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பிது.இலத்தீன் அமெரிக்க தேசங்கள் தோன்றிய வரலாற்றையும் அதன் நாகரீக வளர்ச்சியையும் கோடிட்டு காட்டும் அறிமுக கட்டுரை இந்த தொகுப்பை தொடர்ந்து படிக்க பெரும் தூண்டுதல்.ஸ்பானிஷ் - இந்தியர் கலப்பினமான மெஸ்டிஜோ குறித்த தகவல் குறிப்பிடதகுந்த சுவாரஸ்யம் கொண்டது.மொழிபெயர்ப்பு எளிமையாய் இல்லாதது புரிதலில் சிக்கல் ஏற்படுத்தவில்லை மாறாக ஆழ்ந்த வாசிப்பின் அவசியத்தை உணர்த்துவதாய் தோன்றியது.

அர்ஜென்டினா சிறுகதைகள்

இசிதேரோ ப்ளேஸ்டின் பெகுண்டோ மாமா

அழகிய குடும்பம் ஒன்றின் சரிவை,அதில் இருந்து மீள அவர்கள் எடுக்கும் விபரீத முடிவை அதிர்ச்சி தரும் விவரணைகளோடு சொல்லும் இக்கதை உதாரண குடும்பங்கள் சிதையுறுவதை ஆராய்கிறது.எல்லாவிதமான மோசமான ஆசைகளும் கொண்டிருக்கும் பெக்குண்டோ தனது அக்காவின் வீட்டிற்கு வெகு நாட்களுக்கு பின்பு வருகின்றான்.முதலில் அவனை சேர்க்க தயங்கும் அக்குடும்பத்தினர்..அவனின் சாகச பேச்சிலும்,இதற்கு முன் அறிமுகமற்ற உற்சாகம் கூட்டும் புதிய பழக்க வழக்கங்களாலும் அவனோடு சேர்ந்து வாழ்வை கொண்டாடுகின்றனர்..மெல்ல மெல்ல தங்களின் குடும்பம் சரிவை நோக்கி செல்வதை உணர தொடங்கும் தருவாயில்.... கூட்டாய் எடுக்கும் பயங்கர முடிவே அவர்களை மீட்டெடுக்கின்றது.அர்ஜென்டினா நாட்டின் குடும்ப வாழ்க்கை குறித்த சுவாரஸ்ய செய்திகளை கொண்டிருப்பது இக்கதையின் சிறப்பு.

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் "மற்ற மரணம்"

இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளரான போர்ஹேவின் "மற்ற மரணம்" சிறுகதை...சரித்திரத்தோடு மனிதன் கொண்டுள்ள தீராத தேடலை மையமாய் கொண்ட நேர்த்தியான புனைவு.டாமியான் என்னும் போர்வீரனை குறித்த தேடலில் இறங்கும் நாயகனுக்கு டாமியான் என்கின்ற பெயரில் இருவர் இருந்ததும்...தான் அறிய விரும்பிய டாமியான் குறித்த பிம்பங்கள் உருக்குலைந்து போனது தெரிய வரும் பொழுது டாமியானின் செயலை நியாயபடுத்தும் தீர்வை கொள்கின்றான்.பிரபஞ்ச சரித்திரத்தோடு நமக்குள்ள உறவினை பல்வேறு பரிமாணங்களில் விளக்க முயலும் முயற்சி இது!!





பிரேசில் சிறுகதைகள்

ஜோவோ உபால்டோவின் "தாயகத்து அலன்டெலோன்"

நவீன வாழ்வில் செக்ஸ் என்பது விந்து எடுப்பதும் - கொடுப்பதுமான வியாபாரம் ஆகி வருவதை மறைமுக குறியீடாய் சொல்லும் இக்கதை,சமுதாயத்தின் மீதான கவலையை முன்னிறுத்துகின்றது.70 களில் வெளிவந்த இக்கதை தற்பொழுதைய சூழலுக்கும் பொருந்தி வருவது ஆச்சர்யமே.இங்கு "அலன்டெலோன்" என்பது விந்து வங்கியின் குறியீடாய் சொல்லப்படும் காளை மாடு.

ஜோர்ஜ் அமாடோவின் "பறவைகள் நிகழ்த்திய அற்புதம்"

இந்த தொகுதியில் எனக்கு பிடித்த கதை.வாழ்க்கை குறித்த கவலை ஏதும் அற்ற நாடோடி பாடகனை பற்றியது.நகரங்கள் தாண்டி....தேசங்கள் தாண்டி.. செல்லும் இவனின் பயணம் சாகசங்கள் நிறைந்ததல்ல,காதல்கள் நிறைந்தது!!பேரழகு கொண்ட நாடோடி பாடகன் உபால்டோ கவிதைகளாலும்,பெண்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தான் என்னும் வரிகளே போதும் அவனை குறித்து அறிந்து கொள்ள!! ப்ரான்ஹாசை நகரில் சாபோ என்னும் பேரழகியை சந்திக்கும் உபால்டோ.....அவளோடு காதல் கொண்டிருக்கும் வேளையில் சாபோவின் கணவன் வந்துவிடுவதால் தப்பிக்க ஓட்டமெடுப்பதும் ....பின் எதிர்பாரா வண்ணம் பறவைகள் கொத்தி சென்று அவன் உயிரை காப்பாற்றுவதாகவும் முடிகின்றது இக்கதை.

போர்ச்சுகீஸ் சிறுகதை

கிளாரிஸ் லிச்பெக்டாரின் "அன்பு"

சட்டென தோன்றி மறையும் ஏதோ ஒரு காட்சியோ,சம்பவமோ அந்த நாள் முழுதும் நினைவில் அகலாது இருந்து இயல்பை புரட்டி போட்டுவிடுவதுண்டு..பார்வையற்ற யாசகனை காணும் நாயகி அன்னாவின் நிலை மாற்றத்தை நேர்த்தியான காட்சி கோர்வைகளால் சொல்லும் இக்கதை வேறுபடும் வாழ்க்கை சூழல் தோற்றுவிற்கும் மனகுழப்பத்தை ஒரு பெண்ணை முன்னிறுத்தி பகிர்கின்றது.

சிலி தேசத்து சிறுகதை

இசபெல் அலண்டேவின் "நீதிபதியின் மனைவி"

பெரும் புரட்சிகாரனான நிகோலசின் சாவு ஒரு பெண்ணால் தான் என பிறக்கும் பொழுதே குறி சொல்லபடுகின்றது.நீதிபதியின் மனைவி காசில்தா தான் அந்த பெண் என்று துவக்கத்திலேயே முடிவையும் சொல்லி விரிகின்றது இக்கதை.ஒரு நாவலை வாசித்த திருப்தி. நேர்த்தியான திரைக்கதை போல,முடிவு தெரிந்தும் தொடர்ந்து வாசிக்க தூண்டும் கதையாடல்.கதையின் முடிவு நிஜவாழ்க்கையில் அபூர்வமாய் காணக்கிடைப்பது,இருப்பினும் அது நம்பும்படியாக தந்திருப்பதே சாதனை.


கொலம்பியா தேசத்து சிறுகதை

காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் "நீரில் மூழ்கிய நிகரற்ற அழகன்"

நோபெல் பரிசு பெற்றுள்ள மார்க்வெஸின் இக்கதை சிறுவர்களுக்கானது.Fairy Tales கதைகளை போல.......பிரம்மாண்ட உடலமைப்பு கொண்ட பேரழகனின் சடலம் சிறு மீனவ கிராமத்தில் கரை சேர்கின்றது..எதிரி தேசத்து கப்பல் என நினைக்கும் குழந்தைகள் அதை கண்டு மிரள்வதும் பின்பு கிராமத்தினர் அவனை குறித்த சந்தேகங்களையும்..தமக்கு தெரிந்த பழங்கதைகளையும் ஒன்றாய் புனைந்து அவன் நரமாமிசம் தின்பவர்களை கொல்லும் கடல் தேவனான எஸ்தபான் என்கிற முடிவிற்கு வருகின்றனர்.எஸ்தபானின் சடலத்தை அடக்கம் செய்வதிற்கு முன்பு அவனின் சடலத்திற்கு அலங்காரம் செய்ய அப்பெண்கள் செய்யும் அலட்டல்கள் ஆண்களின் பார்வையில் மிகுந்த நகைச்சுவையாய் சொல்லப்பட்டுள்ளது.பூக்களாலும்,பட்டு துணிகளாலும் அலங்கரிக்கபடும் எஸ்தபானின் சடலம் யாரும் நினைத்திடா வண்ணம் அடக்கம் செய்யபடுகின்றது.பெரும் சிரத்தை கொண்டு அந்த புதியவனிற்கு அவர்கள் செய்யும் மரியாதை கிராமத்தினரின் தூய்மையான அன்பினை தெரிவிப்பதாய் உள்ளது.


வெளியீடு - வர்ஷா,மதுரை

Wednesday, January 6, 2010

பஷீரின் "எங்க உப்பப்பாவிற்கொரு ஆனை இருந்தது.."

வைக்கம் முகமது பஷீர்....அறிமுகங்கள் தேவையற்ற இலக்கிய பிதாமகன்.பஷீரின் இந்நாவலை,தலைப்பை கொண்டு வேறு மாதிரியாக எண்ணி இருந்தேன்..என் அவதானிப்பு தவறென குட்டியது போல இருந்தது இந்த அற்புத காதல் கதையை படித்த பொழுது.பெண் மனதின் உணர்வுகளை இவ்வளவு நேர்த்தியோடு வர்ணிப்பது பஷீருக்கு மட்டுமே கைவரும் கலை.காதலோடு சேர்த்து இந்நாவல் பகிரும் சுவாரஸ்யமான விஷயங்கள் குரானின் இருந்து மேற்கோள் காட்டப்படும் கருத்துக்கள் மற்றும் சம்பவங்கள்.படிப்பதிற்கு புது அனுபவமாய் இருந்தது.இக்கதை 40 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நிகழ்வதாய் கொள்ளலாம்..அன்றைய கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் குறித்த நிலைபாடுகள் தீவிரமாய் இருந்ததை மிகவும் அழுத்தமாக பதிவு செய்கின்றது இந்நாவல்

பாத்தும்மா என்னும் கதாபாத்திரத்தை மையமாய் கொண்டு சுழலும் இக்கதையில்,அவளின் பால்ய காலம் தொடங்கி பருவகாலம் வரையிலான காட்சிகள் விரிகின்றன .கடந்த காலத்தின் பெருமைகளை நிகழ் காலத்தில் நிலை பெற செய்ய முயலும் அவளின் தாய்,ஊரில் பிரதானத்துவம் தனக்கே இருக்க வேண்டி சொத்து வழக்கிற்கும்,இதர பஞ்சாயத்துகளுக்கும் பணத்தை செலவழிக்கும் தந்தை,எதிர்காலம் குறித்த குழப்பத்தில் திருமண கனவுகளோடு இருக்கும் பாத்தும்மா என மூன்று முக்கிய பாத்திரங்களின் குணாதிசியங்கள் சில காட்சி விவரிப்புகளில் புலப்படுகின்றன.




குழந்தை பாத்தும்மா செல்வ செழிப்பில் திளைத்தவள்..உடல் கொள்ளா நகையோடு வீற்றிருக்கும் பாத்துமாவை குறித்த பஷீரின் வர்ணிப்புகள் நகைச்சுவையாய் இருப்பினும் உண்மையே."என் உப்பாவிற்கொரு ஆனை உண்டு..கொம்பானை..." என எப்போதும் தன் புகழ் பேசி திரியும் பாத்துமாவின் தாய் மேல்தட்டு பெண்களின் குறியீடு.சொத்து வழக்கில் செல்வம் அனைத்தையும் தொலைக்கும் பாத்துமாவின் குடும்பம் அவளின் 20ஆம் வயதில் ஏழ்மையின் பிடியில் சிக்குகின்றது.இனி முழுதும் சோகமே என நினைத்திருக்கும் வேளையில் நாவல் அழகுற தோன்றுவதே அங்கிருந்து தான்..கைதியாய் வீட்டில் முடங்கி இருந்த பாத்துமாவிற்கு இப்பொழுது அநேக சுதந்திரம்..அவர்களின் குடிசைகருகில் உள்ள அல்லிகுளத்தில் அவள் செலவிடும் நீண்ட பகல்கள்,அந்த குளத்தில் உள்ள மீன்களும்,அட்டை பூச்சிகளும்,மலர்களும் அவளின் தோழிகளாக மாறிப்போவது.. ஏனோ தேவதை கதை ஒன்றை படித்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை தந்தது.

பாத்துமா தன் பிரியத்திற்குரிய நிஸார் அகமதுவை முதன்முதலில் காண முற்படும் சூழல் அழகிய ஹைக்கூ கவிதை...அடிபட்டு விழுந்த சிட்டு குருவியின் மீது அன்பு கொள்ளும் இருவரும் அடுத்தடுத்த சந்திப்புகளில் பிரியம் கொள்வது இயல்பாக உள்ளது.சேலை அணிவதும்,வகுப்பெடுத்து தலை பின்னுவதும்,வேற்று ஆண்களை கண்ணால் பார்ப்பதும் இறைவனுக்கு எதிரான காரியங்கள் என்பதாகவே இருக்கும் பாத்துமாவின் உலகம் மெல்ல மாற்றம் காண்பது கவிஞனான நிஷார் அகமதுவின் வருகைக்கு பிறகே!!பஷீரின் "பால்யகால சகி" நாவலின் கடைசி பக்கங்கள் துயரத்தின் உச்சகட்ட சோகத்தை தாங்கி நிற்பவை.இக்கதையில்,பாத்துமாவின் போலித்தனம் அற்ற மெய்யான காதல் இனிதாய் நிறைவேறுவதில் வாசகனுக்கு இம்முறை மகிழ்ச்சியை தந்துவிட்டார் பஷீர்.இந்த வருடத்தை மிக சிறந்த ஒரு வாசிப்போடு தொடங்கியதில் பெரும் திருப்தி.

வெளியீடு - காலச்சுவடு
தமிழ் மொழி பெயர்ப்பு - குளச்சல் யூசூப்
விலை - ரூபாய் 80

Sunday, January 3, 2010

பாறப்புரத்தின் "அப்பாவின் காதலி"

மலையாள இலக்கிய பரப்பில் குறிப்பிட தகுந்த எழுதாளர்களில் ஒருவர் பாறப்புரத்து.அவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றான "அப்பாவின் காதலி" யை தமிழில் மொழி பெயர்த்துள்ள சு.ரா இவ்வாறு முன்னுரையில் குறிப்பிடுகின்றார்,

"மிக சிறந்த புதினத்தை மொழி பெயர்த்திருக்கின்றேன் என்பதற்காக பெருமைபடுகின்றேன்.வருடங்கள் எவ்வளவு கடந்தோடட்டும் - பாறபுரத்தின் இந்த அழியாப் புகழ் பெற்ற புதினம் எப்போதும் தமிழ் மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும்...."


"அப்பாவின் காதலி",தவிர்த்திட தவறிய உறவு ஏற்படுத்தும் சிக்கல்கள் ஒரு அழகிய குடும்பத்தை எவ்வாறு சிதைக்கின்றது என்பதை அலட்டல் ஏதுமின்றி வெகு எளிமையாய் சொல்லும் கதை.வீதியில் சந்திக்கும் தன் அப்பாவின் காதலியை அடையாளம் கண்டுகொள்ளும் நாயகன் பல வருடங்கள் பின்நோக்கி சென்று நடந்தவற்றை எல்லாம் நினைவு கூறுகின்றான்.மணிகுட்டன்,அந்த கிராமத்தின் பெரிய மனிதரான மூத்த தம்பிரானின் மகன்.நண்பர்கள்,பண்ணை கூலிகள்,பால்காரி ஆகியோர் கூறியும் செம்மண்பறம்புல் கவுரியம்மாவோடு தனது தந்தை கொண்டிருக்கும் உறவை ஏற்க இயலாது சிறுவனான மணிகுட்டன் கொள்ளும் மன உளைச்சல் வெகு இயல்பாய் சொல்லப்பட்டுள்ளது.கவுரியம்மாவோடு கொண்டிருந்த உறவால் குடும்பத்தில் ஏற்படும் தொடர் சண்டைகள்,தந்தையின் திடீர் உடல்நல குறைவு என கொஞ்சமாய் சிதைய தொடங்கும் குடும்பம் பெரிய தம்புரானின் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாய் ஒடிந்து மணிகுட்டனின் பாரத்தை கூட்டுகின்றது.தன் படிப்பால் குடும்ப நிலையை மீண்டும் முன்னேற்றுகின்றான் மணிகுட்டன்.



இந்நாவலில் சிறு சிறு நிகழ்வுகள் கூட வெகு நேர்த்தியாய் சித்தரிக்கபட்டுள்ளன.யாரென்று தெரியாமல் மணிகுட்டன் முதல் முறையாக கவுரியம்மாளின் வீட்டிற்கு செல்லும் காட்சி,தனது தந்தையும்,கவுரியம்மாவும் தனித்து பேசி கொண்டிருப்பதை மணிகுட்டன் காணும் காட்சியென பல உதாரணங்கள்.மணிகுட்டனின் தாய்,அக்கா என அவனின் குடும்பம் குறித்த விவரிப்புகள் அதிகம் இல்லாவிடினும் கிராமத்து பெரிய குடும்பத்தின் இயல்புகள் மாறாதவையே.பின்னொரு நாளில் தன் தந்தையை ஏமாற்றி சொத்தை பிடிங்கிய கவுரியம்மாளை பார்க்கும் மணிகுட்டன் கோபத்திற்கு மாறாக அவளின் ஏழ்மை கண்டு பணம் கொடுத்துவிட்டு செல்கின்றான்.


வெளியில் தெரியாத இம்மாதிரியான உறவுகள் எப்பொழுதும் பேசுவதிற்கும்,கேட்பதிற்கும் சுவாரஸ்யம் நிறைந்தவை அது நம் குடும்பத்திற்குள் நிகழாதவரை.ஒரு மகனின் பார்வையில் தந்தையின் காதலை சொல்ல முயன்றுள்ளார் பாறபுரத்து.கோபக்கார தந்தை,வாய் பேசா தாய்,அன்பான அக்கா என இக்கதை மனிதர்கள் சில சமயம் எனக்கு யுமா வாசுகியின் "ரத்த உறவு" நாவலை ஞாபகபடுத்தினர்.எனினும் பிழியும் சோகம் ஏதும் இன்றி கள்ள உறவின் பொருட்டு ஒரு குடும்பம் சிதைவதை வெகு எளிமையாய் மண்வாசனை மாறாது கூறும் நாவல் இது.


வெளியீடு - சாரு பிரபா பப்ளிகேசன்ஸ்
தமிழ் மொழி பெயர்ப்பு - சு.ரா