Tuesday, August 30, 2016

சத்யஜித் ரேயின் ஃபெலூடா கதைகள்


சினிமாவும் இலக்கியமும் அபூர்வமாய் சந்தித்துக் கொள்ளும் தருணங்கள் சில உண்டு.கி ராவின் பிஞ்சுகள் நாவலுக்கும் ரேயின் பதேர் பாஞ்சாலிக்கு ஏதோ ஒரு நெருங்கிய தொடர்புண்டு என்றே எனக்கு தோன்றும்.சிறுவர்களின் பிரத்யேக கனவுகளுக்குள் நம்மை இட்டுச் செல்லும் இவ்விரு கதைகளுமே சிறார்களின் அகவுலகை வார்த்தைகளால்/காட்சிகளால் நமக்கு காட்டிச் செல்லும் இடங்கள் உணர்வுபூர்வமானவை.

தம் கவித்துவ திரைப்படங்களின் வழி இந்தியாவின் பெயரை உலகளவில் உயர்த்திப் பிடித்த சத்யஜித்ரேயின் ஆச்சர்யமிக்க மற்றுமொரு முகம் ஃபெலூடா கதைகளை வாசிக்கையில் புலப்பட்டது.ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளின் பாதிப்பால் ரே உருவாக்கியுள்ள ஃபெலூடா கதைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நம் மனதை கவர்பவை.வயது வித்யாசமின்றி அனைவராலும் விரும்பப்படும் விதமான நேர்த்தி கொண்ட 20 தனித்த கதைகளின் தொகுப்பு.சிறுவர்களுக்கான தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பில் இக்கதைகள் மிக முக்கியமானவை.


துப்பறியும் நிபுணர் ஃபெலூடா,அவருக்கு உதவியாய் தம்பி தொப்ஷே,எழுத்தாளர் லால் மோகன் பாபு என மூவர் கூட்டணியின் சாகசங்கள் சுவாரஸ்யம் நிறைந்தவை. பெலூடாவின் புத்தி சாதுர்யத்தை வியந்தபடியே ஒவ்வொரு கதையும் நாம் கடக்க வேண்டியுள்ளது. அறிவின் துணை கொண்டே அவிழ்க்கப்படும் மர்மங்களின் பின்னணி மிகையின்றி சித்தரிக்கப்படுவதோடு முடிந்த வரை எளிய நடையில் வாசகனுக்கு முன்வைக்கப்படுகின்றன.

புராதான பொருட்கள் திருட்டு,புதையல் வேட்டை துவங்கி பெரும் மாபியாவாக செயல்படும் கொள்ளைக் கூட்டம் வரை ஃபெலூடா விசாரிக்கும் குற்றங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. சிறுவர்களுக்கான கதைகள் தான் என்றாலும் போகிற போக்கில் சமூகத்தின் மீதான கேள்விகளை முன்வைக்கவும் தவறவில்லை ரே.அதே போலவே இந்திய திரைப்படங்கள் குறித்த கேலிகளும். பம்பாயில் கதைகள் தயாரிக்கப் படுகின்றன,கொல்கத்தாவில் கதைகள் ரசிக்கப்படுகின்றன என்கிறார்.எத்தனை உண்மை!

ஃபெலூடா கதைகள் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் நடப்பதாக உள்ளன.வாரணாசி, டார்ஜிலிங், லக்னோவ், ஜெய்சால்மர்,புவனேஸ்வர், பம்பாய்,சிலிகுரி என ஃபெலூடா பயணிக்கும் நகரங்கள் குறித்த விவரணைகள் குறிப்பிடத்தக்கவை.மேலும் அந்நகரங்களின் தட்ப வெட்பம்,உணவு பழக்கங்கள், சுற்றுலாத் தளங்கள் என முடிந்த வரை விரிவாகச் சொல்லி நம்மை அப்பயணத்தில் ஒருவராக உணர்ச்சி செய்கிறார் ரே.பரந்துப்பட்ட அவரது ஞானமும்,பயணங்கள் மீதான காதலும்,பழம் பொருட்கள் மீதான அக்கறையும் இக்கதைகளின் வழி நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

எப்போதும் தீவிர சிந்தனையில் பைப் புகைத்தபடி இருக்கும் ஃபெலூடாவை ரேயாகவே உருவகித்துக் கொண்டேன்.ரேயின் கம்பீரம் அத்தகையது தான் இப்புகைப்படத்தில் உள்ளது போல.

மொத்தம் 30 புத்தகங்களின் தொகுப்பான இதில் 20 புத்தகங்கள் மட்டுமே தமிழில் மொழிபெயர்ப்பாகி வெளியாகி உள்ளன. வீ.பா.கணேசனின் மொழிபெயர்ப்பு தங்கு தடையின்றி எளிதாக புரிந்து கொள்ளும்படி அமைந்துள்ளது மேலும் ஒரு சிறப்பு. இந்தியாவின் ஷெர்லாக் என பெருமையோடு சொல்லிக் கொள்ளும்படியான ஃபெலூடா கதைகள் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அவசியம் பரிந்துரைக்கப்பட்ட வேண்டிய தொகுப்பு.


புத்தக வரிசை: ஃபெலூடா கதைகள்
ஆசிரியர்: சத்யஜித் ரே
மொழிபெயர்ப்பு: வீ.பா.கணேசன்
வெளியீடு : பாரதி புத்தக நிலையம்