Wednesday, May 19, 2010

பதின் வயது நினைவுகள்...

பதின் வயது நினைவுகளை மீட்டெடுக்கும் இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தோழர் ஜெயமார்த்தாண்டனுக்கு நன்றி.

பதின் வயது என்றெண்ணும் பொழுது....... அம்மாச்சி வீட்டில் கழித்த விடுமுறை நாட்கள்,பள்ளி நட்புகள்,சந்திரகாந்தா /மோக்லியுடனான ஞாயிறு காலைகள்,பல்லாங்குழி/ஆட்டம்,கல்லா-மண்ணா/தாயம்/கொக்கோ,அம்புலிமாமா-ராணி மிக்ஸ்,ஒலியும் ஒளியும்,பள்ளிக்கு தினமும் சென்று வந்த ரிக்சா பயணம்,பங்கு கொண்ட பேச்சு - கட்டுரை போட்டிகள்,பரிட்சைக்கு பயந்து தூங்காது கழித்த இரவுகள்,பிரியத்திற்குரிய ஆசிரியைகள்,ஏக்கமாய் இருந்த ரயில்பயணம்,கடலை காணும் பேராவல்,கிராமத்தில் கமலை கிணற்று குளியல்கள்,பட்டாசலை வாசலில் அமர்ந்து தாத்தாவிடம் பழங்கதைகள் பேசிய பொழுதுகள் என கலவையாக பலவும் நினைவிற்கு வந்து போகின்றன...மீண்டும் மீண்டும் பேசினாலும்/நினைத்தாலும் தீராத நாட்கள் அவை!!

படித்த பள்ளி..அம்மையும்,அம்மாச்சியும் படித்ததும் அங்கே தான்..முதல் நாளில் அதன் பிரம்மாண்ட தோற்றம் தந்த ஆச்சர்யம் விலக பல நாட்கள் பிடித்தது.ஆங்கிலேய காலத்து கட்டிடங்கள்,ஓங்கி வளர்ந்த மரங்கள்,பரந்த மைதானங்கள்,கிறிஸ்துமஸ் கால கொண்டாட்டங்கள்,சேல்ஸ் டே என வீட்டு பாடம்,கண்டிப்பான ஆசிரியைகள் தாண்டி பள்ளி நாட்கள் பிடித்து போக அனேக காரணங்கள் இருந்தன.பள்ளி தந்த நட்புகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன....மழை ஓய்ந்த ஒரு மாலையில் கூடை பந்து மைதானத்தில் சைக்கிளில் வட்டமடித்தபடி பிரிவை குறித்து பேசிகொண்டிருந்தேன் தோழிகள் இருவரோடு ....ஆச்சர்யமாய் இப்போது மூவருமே ஒரே பணியிடத்தில்.இப்பொழுதும் மழை நாட்களில் என் பள்ளியை நினைத்து கொள்வேன்,சில இடங்களை மழையோடு பொருத்தி பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை!!

மனோகரன் அண்ணா,தல்லாகுள வீதிகளில் எங்கே இடர்பட்டாலும் பெரிதாய் புன்னகைப்பார்..சட்டென,ரிக்சா 8:௦௦ மணிக்கு என பரபரத்த காலை பொழுதுகள் நினைவிற்கு வந்து மறையும்.ஒவ்வொரு வருடமும் நோட்டு/புத்தகங்களுக்கு அட்டை போட்டு லேபிளில் எழுதும் பொழுது, அப்பா "ம்ம்ம்..சார் பெரிய கிளாஸ் போறிங்களா" என சொல்லி கொண்டே தன் அழகிய கையெழுத்தில் பெயர்,வகுப்பு எழுதி தந்தது நேற்றைய நிகழ்வு போல உள்ளது...





விடுமுறை நாட்களை கழிக்க எப்போதும் எனக்கு இரண்டு சாய்ஸ் உண்டு.அம்மாச்சி வீடு அல்லது அப்பாவின் கிராமம்...அம்மாச்சி.பெரியம்மாக்கள் எல்லாரும் ஆசிரியர்கள் என்பதாலோ ஒரு வித மிலிட்டரி தனமான ஒழுங்கு முறை விடுமுறை நாட்களிலும்...நேரத்திற்கு சாப்பாடு,குளியல்,நிழலில் மட்டுமே விளையாட வேண்டும் என்று..இதற்கு தலைகீழாய் எங்கள் கிராமத்தில் தாத்தா பாட்டி உடன் கழித்த பொழுதுகள்,பேருந்து வசதியற்ற அன்றைய நாட்களில் பக்கத்துக்கு கிராமத்தில் இருந்து நடந்தே எங்கள் ஊருக்கு செல்வோம்..வீட்டை சென்றடைய எந்நேரம் ஆனாலும் பாட்டியை தேடி வயற்காட்டிற்கு ஓடி விடுவேன்..வாழை தோட்டத்திலோ,கடலை காட்டிலோ,தென்னந்தோப்பிலோ.....தேடி சென்று கட்டிக்கொள்வதில் ஒரு அலாதி பிரியம்!!

அங்கு தங்குதடைகள் எதுவும் இல்லை..புழுதி காட்டில் ஆடி திரியலாம்..பம்ப் செட்டில் குளித்து மகிழலாம்..மாலையானால் மந்தையில் பிள்ளைகளோடு விளையாடலாம்..... வளையல் வியாபாரிகள்,குச்சிஐஸ் வண்டிக்காரர்,பருத்திப்பால் வியாபாரிகள் என சில்லறை செலவு செய்ய காரணமானவர்கள் நிறைய..!!மாலை நேரங்களில் ஆட்கள் நிரம்பி சலசலவென இருக்கும் பட்டாசலையில்,அமைதியான பகல் பொழுதுகளில் அமர்ந்து தெருவை..அரிதாய் வரும் இரண்டொரு வியாபாரிகளை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் கூட அன்றைய பொழுதுகளில் சுவாரஸ்யமே!!

தொலைகாட்சியின் ஆதிக்கம் இப்போது போல 90களில் இல்லாத காரணத்தினால் இயல்பாய் கவனம் வாசிப்பின் பக்கம் சென்றதில் வியப்பில்லை.சிறுவர்மலர்,அம்புலி மாமா,ராணி காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி,சிந்துபாத் கதைகள்,அரேபியன் நைட்ஸ்,ஈசாப் நீதி கதைகள்,தெனாலி ராமன்,பீர்பால் என விடுமுறை நேர பகல் பொழுதுகள் கற்பனைகள் நிறைந்ததாகவே கழிந்தன.வெள்ளி இரவு ஒலியும் ஒளியும்,ஞாயிறு காலை மோக்லி,சந்திரகாந்தா ..மற்றும் இரவு தந்தூரி நைட்ஸ்,ஓஷின்(வெகுவாய் ரசித்த தொடர் இது..),ஸ்ட்ரீட் ஹாக் என குழப்பிக்கொள்ள அதிகம் இல்லாது தொலைகாட்சியோடு கழிந்த பொழுதுகள்..தீவிர வாசிப்பும்,ராஜாவின் இசை மீதான கிறுக்கும் தொற்றிகொண்டது பதின்மங்களில் இறுதியில்.

பதின்மன் காலம் குறித்து யோசிக்க யோசிக்க மீண்டும் அதனுள் புகுந்து விடமுடியாதா என ஏக்கமே மிஞ்சுகின்றது..சுழட்டி அடிக்கும் எந்திர வாழ்க்கைக்குள் புகுந்தாகி விட்டது. இப்பெருநகர சிடுக்கில் தொடர்ந்து இயங்க நினைவுகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன.அவ்வகையில் கீழ் உள்ள வண்ணதாசனின் வரிகள் அர்த்தம் மிகுந்ததாய் படுகின்றன.

"இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது"

-- வண்ணதாசன்


பதின்மன் கால நினைவுகளை தொடர நர்சிம்மை அழைக்கின்றேன்

Wednesday, May 5, 2010

ரைநீஸ் ஐயர் தெருவில்.......!!

வாசிப்பின் இடையே இடர்படும் ஏதேனும் இடம் குறித்த சிறுகுறிப்பும் ஈர்த்திடும்.. முடிந்தால் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் சட்டென தோன்றி மறையும்.பள்ளி நாட்களில் படித்த சரோஜினி நாய்டுவின் "Bazaars Of Hydrabad " கவிதை அப்பெரு நகரின் ஜன நடமாட்டம் நிறைந்த சந்தை காட்சிகளை வெகு அழகாய் விவரிக்கும்.அந்த நகரம் குறித்த அழகிய பிம்பத்தை தோற்றுவித்த அவ்வர்ணிப்புகள் இன்றும் நினைவில் உண்டு.



மதுரைக்கு அடுத்தபடியாய் மனதிற்கு நெருக்கமாய் உணரும் நகரம் நெல்லை.நேரில் சென்று பார்க்கும் முன்னரே அத்தகைய உணர்வை தோற்றுவித்தவை வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவனின் கதைகள்.வேனிற் காலத்து நீண்ட பகல்கள்......ராஜாவின் இசை..வண்ணதாசன் சிறுகதைகள் - மூன்றும் சேர்ந்த பொழுதுகள் ஊடே,அந்நகரம் சார்ந்த வாசிப்பு கூட என் ஆர்வத்தை கூட்டிட காரணமாய் இருக்கலாம்.இவர்களின் கதைகளில் வரும் நெல்லை குறித்த வர்ணிப்புகளை பெரும்பாலும் மதுரையோடு குழப்பி கொள்வேன்.வண்ணதாசனின் "ஆறு" சிறுகதையில் சுலோச்சன முதலியார் பாலம் - அரவிந்த் கண் மருத்துவமனை குறித்து வாசித்துவிட்டு மதுரையில் அந்த பாலம் எங்குள்ளது என அப்பாவிடம் விசாரித்தது நினைவில் உள்ளது.

வண்ணநிலவனின் "கம்பா நதி" குறித்த பதிவில்....

"தாமிரபரணி நதியோடு அம்மக்கள் கொண்டுள்ள நெருக்கம் சற்றே பொறாமைக்குரியது.நதிகளை காண்பதே அறிதான இந்நாட்களில் நதியோடு குளித்து,துவைத்து நதி கரையிலும்,கல் மண்டபங்களிலும் நண்பர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்த அன்றைய பொழுதுகளின் விவரிப்பு வாசிப்பதற்கே மகிழ்வாய் உள்ளது...."


கதைகளில் வாசித்து,காட்சிபடுத்தியிருந்த இடங்களை நேரில் தேடி சென்றது இதுவே முதல் முறை..வாசிப்புதேடல் ஒரு வகை சுவாரஸ்யம் என்றால் இது ஒருவகை,சொல்ல தெரியவில்லை.அதிகப்படியான கிறுக்காய் கூட தோன்றலாம்..மதுரையில் இருந்து சாத்தூர்,கோவில்பட்டி,இடைச்செவல், கயத்தாறு வழி சென்ற மரங்கள் அற்ற நெடுஞ்சாலை பயணம் தந்த அயர்ச்சி நெல்லையை அடைந்ததும் சட்டென மறைந்துவிட்டது.மல்டி ப்ளெக்ஸ்,காபி டேக்களின் பிடியில் சிக்காது அதன் இயல்போடு மிளிரும் சிறு நகரம்!!வார்த்தைகளின் கண்டிருந்த சுலோச்சன முதலியார் பாலம்,தாமிரபரணி ஆறு,ரத்னா டாக்கீஸ் தொடங்கி கோவில் ரத வீதிகள்,தெப்பம்,சென்ட்ரல் டாக்கீஸ் என பல இடங்களை பார்த்து வந்தது இனம் புரியா மகிழ்ச்சி!!



வண்ணநிலவனின் "ரைநீஸ் ஐயர் தெரு"- டாரத்தி,அன்னமேரி,இருதயம்,தியோடர்,சாம்சன், பிலோமி,ஆசிர்வாதம் பிள்ளை,எபன் என வண்ணநிலவன் அந்நாவலில் உலவ விட்ட கதை மாந்தர்களை எளிதில் மறப்பதற்கில்லை.எப்போதும் மழை நனைத்த தெருவாகவே அதை உருவகப்படுத்தி வைத்திருப்பேன்.மழைக்கும் அத்தெருவிற்குமான உறவு நாவலில் வெகு நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கும்.பாளையங்கோட்டையில் சிறு தேடலுக்கு பிறகு ரைநீஸ் ஐயர் தெருவை கண்டுகொண்டதும் சிறு பிள்ளைக்கான உற்சாகம் தோன்றி மறைந்தது!!


நகரின் எளிமை,நெல்லையப்பர் கோவிலின் அழகிய சிற்பங்கள்(சாமி சன்னதிக்கு முன்பான தூண்கள் ஏற்படுத்திய பிரமிப்பு),நேர்த்தியான தேர் வீதிகள்,அழகு தமிழ்,தெப்பக்குளம்,தாமிரபரணி..அதன் கரையோர கல் மண்டபங்கள்,பரபரப்பான கடை வீதிகள்,எந்திரதனம் அற்ற மனிதர்கள்...என அச்சிறு நகரத்தை பிடித்து போனதிற்கு காரணங்கள் பலவுண்டு!!பெருமழை காலத்தில் மீண்டும் நெல்லை சென்று வர வேண்டும் தாமிரபரணியில் வெள்ளம் பார்க்கவேணும் !!