Tuesday, November 19, 2013

கல்பட்டா நாராயணனின் சுமித்ரா (மலையாள நாவல்)


நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்த படைப்பிது.நாவலின் மனிதர்கள் நமக்கு பரிட்சயமான நபர்களை ஒத்திருந்தால் வரும் மனநிறைவு.நான் அறிந்து வைத்திருக்கும் எத்தனையோ பெண்களின் வாசம் சுமித்ராவிடம்.வயநாட்டின் ஈரத்தை தன்னிடத்தே கொண்ட பெண்ணவள்.

வயநாட்டில் கல்பட்டாவில் தன் கணவன்,மகளோடு வசிக்கும் சுமித்ராவின் உலகம் அவளை சுற்றி உள்ளவர்களால் நமக்கு அறிமுகம் ஆகிறது.கருப்பி, புருஷோத்தமன், தாசன்,அப்பு,கௌடர் என அனைவரும் சுமித்ராவின் அன்பை ருசித்தவர்கள்.கீதாவும்,சுபைதாவும் சுமித்ராவின் இள வயது தோழிகள்.அவர்களின் ரகசியத்தை அவர்களோடு சேர்ந்து கட்டிக் காத்தவள் சுமித்ரா.வயநாட்டின் தன் இருப்பை கடிதத்தின் வழி தூரத்தில் இருக்கும் அவர்களோடு உற்சாகமாய் பகிர்ந்து கொள்கிறாள்.

சுமித்ராவிற்கு மிகப் பிடித்த இடமென அவள் கொள்வது அவ்வீட்டின் பழங்கலம் (நெற் குதிர்கள்,உரல் வைத்திருக்கும் இடம்).தனது பெரும்பாலான நேரத்தை பழங்கலத்தில் கழிப்பதையே சுமித்ரா விரும்புகிறாள். புத்தகங்கள் படிப்பதற்கும்,கருப்பியுடன் ஆற அமர உட்கார்ந்து பேசுவதற்கும் அவள் தேர்ந்தெடுக்கும் இடம் பழங்கலமே.அவ்விடம் அவளுக்கு பிடித்து போனதிற்கான காரணங்கள் அவள் மட்டுமே அறிந்தது.சுமித்ரா தினமும் நான்கைந்து முறை குளிப்பவள்."த்ரா..உன் உடம்புல என்ன சேறு சொரக்குதா.." என அப்பு அவளை செய்கிறான்.பெண்களுக்கும் தண்ணீருக்கும் நெருங்கிய பந்தம் உண்டு இல்லியா.பெண்ணைப் போலவே தண்ணீர் இல்லாது போனால் ஜீவிதம் இல்லை.தண்ணீர்ப் பெண்ணவள்.

கல்பட்டாவிலும் சுமித்ராவிற்கொரு தோழி உண்டு.அவ்வூரில் உள்ள ஆண்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் மாதவியே அது.யாவரும் கண்டு ஒதுங்கும் அவளிடம் சுமித்ராவிற்கு தனித்த பிரியம்.அவளால் மட்டுமே மாதவியை கேலியும்,கிண்டலும் செய்து அரவணைத்துச் செல்ல முடிகின்றது.
போலவே,தேசம் முழுவதும் சுற்றித் திரிந்து ,நிலையான வேலையேதும் இல்லாமல் இருக்கும் தாசனோடான அவளின் நட்பு.அவளிடம் இருந்து அவன் வெகு தூரம் வேறுபட்டு நிற்கிறான் பயணங்களால்,சந்திக்கும் மனிதர்களால், ரசனையால். "கையிலிருக்கும் உலோகம் சொர்ணமாக மாறும் பயணங்கள் தான் எல்லா பயணமும்.." என தாசன் சந்திக்கும் சன்யாசி சொல்கிறார்.வீட்டில் அடைந்து கிடக்கும் சுமித்ரா பயணங்கள் துணை இல்லாமலும் உலோகத்தை தங்கமாக்கும் வித்தை அறிந்தவள்.அதிகம் மனிதர்கள் உடன் ஒட்டுதல் இல்லாமல் தனித்து இருக்கும் எடக்குனி நரசிம்ம கௌடருக்கு சுமித்ராவின் மீது தனி பிரியம் உண்டு.அது அவள் அவருக்கென செய்து தரும் ப்ரத்யேக உப்புமாவின் ருசியால் இருக்கலாம். அவள் அன்பின் மிகுதியாய் அந்த ருசி என்பதை அவர் அறிந்திருந்தார்.கோழி,நாய் குட்டிகள்,அணில்,பூனைக் குட்டி,கன்றுக்குட்டி என அவள் முகம் அழுத்திக்முத்தமிடாத பிராணிகள் கொஞ்சமே.பூக்களும்,செடிகளும் அவள் விருப்பம்.வயநாட்டில் ஈரத்தில் அவை பூத்து குலுங்கும் நாட்களை திண்ணையில் அமர்ந்து ரசிக்கும் விருப்பமும் உண்டு அவளுக்கு.
சுமித்ராவிற்கு வாழ்வின் மீது குற்றசாட்டுகள் ஏதுமில்லை இல்லை.தான் காணும் மனிதர்களில் தொடங்கும் அவள் உலகம் அவர்களிடமே முற்று பெறுகிறது. 

சராசரி குடும்பப் பெண்ணின் நாட்குறிப்புகள் சுமித்ராவினுடையது."சராசரி" என்பது பொதுப் பார்வையில். உண்மையில் அவள் கவிதையைப் போல வாழ்ந்தவள்.நாவல் தொடக்கமே சுமித்ராவின் மரணத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அதை நான் பொருட்படுத்தவில்லை.அவள் வாழ்ந்த வாழ்கையின் விவரிப்புகள் தந்த நிறைவு அவள் விடை பெற்றதை மறக்கச் செய்துவிட்டது.

சுமித்ரா,மழையைப் போல நதியைப் போல தான் சேரும் இடத்தை குளிர்வித்து விடை பெறுபவள்!

மார்கரெட் அட்வூட்டின் "Penelopiad " நாவலில் வருவதான இவ்வரிகள்
(முத்துலிங்கத்தின் வியத்தலும் இலமே தொகுதியில் வரும் அறிமுகம்)
எனக்கு சுமித்ராவை வாசிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.

"நீ ஒரு தண்ணீர்ப் பெண்.தண்ணீர் எதிர்ப்பதில்லை,உன்னுடைய கைகளை அதற்குள் விட்டால் தழுவிக்கொள்ளும்.அது சுவர் அல்ல,உன்னை தடுக்காது.தடங்கல் ஏற்பட்டால் தாண்டி போகும். தண்ணீர் பொறுமையானது.ஒரு கல்லை கூட துளைத்துவிடும்..."

ஷைலஜாவின் மொழிப்பெயர்ப்பு குறித்து தனியே குறிப்பிட்டாக வேண்டும்.முன்னமே சூர்ப்பனகையும், பாலச்சந்திரன் சுள்ளிகாடின் சுய சரிதையும் ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் வாசித்துள்ளேன்.மொழி பெயர்ப்பு என்று புத்தக அட்டையில் கண்டால் அன்றி நம்ப முடியாது.பெரும்பாலும் மொழிபெயர்ப்புகளில் புரியாத வரிகளை இரண்டு,மூன்று முறை வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.அந்த சிக்கல் இங்கில்லை.நேர்த்தியோடு கூடி நெருக்கமாகவும் உணரச் செய்கிற மொழிபெயர்ப்பு.

வெளியீடு - வம்சி

Tuesday, October 8, 2013

மாணிக்பந்த்யோபாத்யாயின் பொம்மலாட்டம் (வங்காள நாவல்)

கடந்த 50 ஆண்டுகளில் தமிழில் வெளிவந்துள்ள சிறந்த மொழி பெயர்ப்புகள் பட்டியலில் எஸ்.ரா இந்நாவலை குறிப்பிட்டு இருந்தார்.வங்காள இலக்கிய உலகிற்கு புது வேகம் பாய்ச்சிய தொடக்க கால எழுத்தாளர்களுள் மாணிக்பந்த் முக்கியமானவராக அறியப்படுகிறார்.சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள இந்நாவல் 1932ஆம் ஆண்டு எழுதப்பெற்றது.மலிவு விலை புத்தகங்களுக்கு மத்தியில் தள்ளுபடி விலையில் புத்தகச்சந்தையில் வாங்கினேன்.இந்த நாவாலானது அப்படி விற்கப்பட வேண்டிய ஒன்று அல்ல எனபது வாசித்ததும் விளங்கியது.

கொல்கத்தாவில் மருத்துவத்திற்கு படித்து முடித்து தன் கிராமத்திற்கு திரும்பும் சசிபாபு என்னும் இளைஞனை சுற்றி சுழலும் கதை.சசிபாபுவின் தந்தை பெரும் பணக்காரர்,பணம் ஈட்டுவதில் மட்டுமே பிரியம் கொண்டவர்.சசிபாபுவோ அதற்கு நேர் எதிர்.அப்பாவின் செல்வாக்கினால் அன்றி அவன் படித்த படிப்பை அவன் அவர்களுக்காய் செலவிடும் மேலான குணதிற்காய் கிராமத்தில் சசிபாபுவிற்கு ஏக மரியாதை.அவனுக்கு இணக்கமான ஒரு குடும்பம் உண்டு.அவன் பிரியத்திற்குரிய குஸுமாவின் குடும்பமே அது.அவள் திருமணமானவள்.அவளது கணவன் பாரான்.பரானின் தங்கை மதி.மதி காதலித்து திருமணம் செய்யும் குமுதன்.சசியின் தங்கை பிந்து.அவளின் கணவன் நந்தலால். இவர்களுக்கிடையேயான உணர்வுகளில் மிக மெல்லிய நூல் கட்டி பொம்மலாட்டம் ஆட செய்திருக்கிறார் மாணிக்பந்த்.


தொடக்கத்தில் சசிபாபு வெகு புத்திசாலி தோற்றத்தோடு வாசகனுக்கு அறிமுகம் ஆகின்றான்.கிராமத்தின் அநேக வீடுகளில் இவனிடம் யோசனை கேட்டே எதையும் செய்கின்றனர்.அவன் படிப்பின் மீதும்,உலக அறிவும் மீதும் அவர்களுக்கு தீராத பிரமிப்பு.அவனும் அவர்களில் ஒருவனாய் உருமாறி வீடு வீடாய் சென்று மருத்துவம் பார்த்து அறிவுரைகள் வழங்குகின்றான்.இருப்பினும் மதியும்,குஸுமாவும் அவனுக்கு தீராத புதிர்கள்.அந்த ஏழை பெண்கள் ஜாலங்கள் ஏதும் செய்யாது அவனின் பேரன்பை பெறுகிறார்கள்.


மதியின் காதல்..சிறு பெண்ணான மதிக்கு அவளின் கிராமத்தை தாண்டி வேறு உலகம் தெரியாது.அவ்வூருக்கு வரும் நாடக(ஜாத்ரா) குழுவில் இளவரசன் வேடமேற்கும் குமுதனை கண்டதும் காதல் கொள்கிறாள்.குமுதன் சசியின் நண்பன்.ஜிப்சியை போன்றதொரு வாழ்கையை விரும்புபவன்.இவர்களின் காதல் சசிக்கு அத்தனை உவப்பாய் இல்லை.மதியின் பிடிவாதமே வெல்கிறது.குமுதனும்,மதியும் கொல்கத்தா நகரில் கழிக்கும் நாட்களை துல்லியமாய் விவரிக்கப்படுகின்றன.அந்த பேதை பெண்ணின் அகவுலகமானது வாழ்வின் திடீர் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அதன் போக்கில் சத்தமின்றி பயணிக்கின்றது.குமுதனும் மதியும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் காதலின் பொருட்டு அத்தனை ஏழ்மையிலும் வாழ்தல் இனிதாகின்றது.


குஸுமாவின் காதல்..சசிபாபுவின் மீது குஸுமா கொண்டிருக்கும் பிரியம் அவள் மட்டுமே அறிந்தது.துடுக்கான பெண்ணாய்,எப்போதும் சிறிது பேசும் குஸுமாவின் பால் ஈர்க்கப்பட்டே சசிபாபு அவள் குடும்பத்துடன் நெருக்கம் கொள்கிறான்.இவர்கள் காதல் சொல்லிகொண்ட நாளே முடிவிற்கும் வருகின்றது.குஸுமாவிடமும் சசி தோற்று போகிறான்.குஸுமாவின் கணவன் பாரானுக்கோ எல்லாமும் சசிபாபுவே.எதிலும் நாட்டம் இல்லாத விவசாயி.அவன் நிலமும்,அவன் வீட்டு பெண்களும் அவன் உலகம்.சசியோ,குஸுமாவோ அவனுக்கு துரோகம் செய்யவில்லை.அழகான தங்கள் காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொள்கின்றனர்.1900களின் தொடக்கத்தில் இது போன்றதொரு காதலை நாவலின் வழி உரக்க சொல்லி இருக்க முடிந்திருக்கே என்பது ஆச்சர்யம்.காதலை வகைப்படுத்துதல் சரியல்ல இல்லியா..

இவர்கள் தவிர்த்து சசிபாபுவை பெரும் பொறுப்புகளுக்கு ஆளாக்கும் யாதவ் என்னும் சாமியாரின் கதையும் உண்டு.

சசிபாபுவை சுற்றி நகரும் கதையாகினும் அவனிடத்து பெண்களே பெரும் விருட்சமென நாவல் முழுவதும் வியாபித்து உள்ளனர்.கணவன் நந்தலாலின் ஒழுங்கற்ற வாழ்கையை பொறுத்துக் கொள்ள இயலாது போராடும் சசியின் தங்கை பிந்து,சந்தேக கணவனின் பிடியில் நோயுற்று கிடக்கும் சசியின் அன்பிற்குரிய ஸேன்திதி என அவன் கண்டு வியக்கும் பெண்கள் யாவும் அக்கிராமத்தை சேர்ந்தவர்களே.படிப்பறிவும்,உலக ஞானமும் வாழ்கையை கொண்டு செலுத்த போதாது அதற்கு மேலான மனதிடமும் வாழ்வின் மீதான பிடிப்பும் அவசியம் என்பதை இவர்கள் வாயிலாய் உணர்கிறான்.மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை தாண்டி நாவலின் புலப்படும் நிதர்சனம் நம்மை வசீகரித்து கொள்கிறது.

75 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட நாவல் இது.நாவலின் சங்கதிகள் இன்றைக்கும் பொருந்திப் போவது தான் பெருவியப்பு.மேலான வாசிப்பனுபவம் தரும் படைப்பிது.கூடவே நிறைய புரிதல்களும்..!

வெளியீடு - சாகித்ய அகாதமி
தமிழாக்கம் - த.நா.குமாரசாமி
விலை - 90/-

Friday, July 26, 2013

குட்டி இளவரசன் (Le Petit Prince)

பேசி பேசித் தீராத நினைவுகள் சிறுவயது புத்தகங்கள் குறித்தவை..சிறுவர் மலரில் தொடங்கி..அம்புலி மாமா,டிங்கிள், இரும்புக்கை மாயாவி,தெனாலி ராமன் கதைகள், சிந்துபாத்தின் சாகசங்கள்,அக்பர் - பீர்பால்,ஈசாப் நீதி கதைகள் என நீளும் பட்டியல் அது.அன்றைய பொழுதுகளின் உற்சாகமும், சுவாரஸ்யமும் சிறிதும் குறையவில்லை மீண்டும் சிறுவர் புத்தகங்களை தேடி வாசிக்கையில்.

சிறுவர் இலக்கியம் விரும்புவோர் தவற விடக் கூடாத நாவல் குட்டி இளவரசன்.


1943 ஆம் ஆண்டு பிரஞ்சு மொழியில் வெளியான இந்நாவல்(Le Petit Prince ) 200 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கதை நாயகனாக சிறுவன் ஒருவன் அறிமுகமாகி தன் ஓவியங்களை குறித்து நம்மிடம் சொல்லி கொண்டே தான் சந்தித்த குட்டி இளவரசனை அறிமுகம் செய்கின்றான்.கதை நாயகன் இனி நமது குட்டி இளவரசன்.எங்கள் உலகம் கேள்விகளால் மட்டுமே நிறைந்தது என்பதை நிறுவும் வண்ணம் அற்புதமான பாத்திரப்படைப்பு.பெரியவர்கள் குறித்த அவனுடைய கருத்துகள் "அவர்கள் விசித்திரமானவர்கள்..", "அவர்கள் அசாதாரணமானவர்கள்......." ,"எண்ணிகையில் நம்பிக்கை கொண்டவர்கள்.." மறுப்பதற்கில்லை!

குட்டி இளவரசனின் பிரியத்திற்குரிய மலர் குறித்த வர்ணனைகள் சிரிப்பை வரவைப்பவை..அன்பை பொழியும் குட்டி இளவரசனிடம் எதற்கெடுத்தாலும் இருமி தன் இருப்பை காட்டி கொள்ளும் அந்த சிறு மலரை,பெண்களின் குறியீடாக கொள்ளலாம்.


பல்வேறு கிரங்களுக்கு பயணம் செய்யும் குட்டி இளவரசன் சந்திக்கும் மனிதர்கள் அவன் கூற்றுபடியே விசித்திரமானவர்கள்.கட்டளை பிறப்பிப்பதையே தன் அடையாளமாக கொண்டிருக்கும் அரசன்,தற்பெருமைக்காரன், குடிகாரன்,நட்சத்திரங்களை எண்ணி வைத்து சொந்தமெனக் கொள்ளும் வியாபாரி,ஓய்வின்றி தெருவிளக்கு ஏற்றுவதை கடமையாக கொண்டவன் என ஒவ்வொருவரையும் தன் கேள்விகளால் சந்தித்து முடித்து பூமிக்கு வருகிறான்.

பாம்பும்,நரியும் நண்பர்கள் ஆகின்றனர்.பூந்தோட்டம் அவனுக்கு ஆச்சர்யம் தருகின்றது.இங்கும் மனிதர்களே அவன் முன் விசித்திர தோற்றம் கொள்கின்றனர்.

"மனிதர்கள் நீர்ப் பிரவாகத்தில் சிக்கிக் கொள்வார்கள்.ஆனால் எதை தேடுகிறோம் என்பது அவர்களுக்கே தெரியாது.அவர்கள் அதற்காக அலை பாய்ந்து சுற்றிச் சுற்றி வருவார்கள்...."


கதை சொல்லி சிறுவனும்,குட்டி இளவரசனும் பரிமாறிக் கொள்ளும் ஓவியங்கள் குறித்து கட்டாயம் சொல்லியாக வேண்டும்.யானை விழுங்கிய மலைப்பாம்பின் வரைபடத்தை கொண்டே கதை சொல்லி சிறுவன் அறிமுகமாகின்றான்..பின்பு குட்டி இளவரசன் கேட்பதற்கு இணங்க இவன் பிவோபாப் மரம்,ஆட்டுக்குட்டி என படங்கள் வரைவதும்,அவன் அதை பரிகசிப்பதும் என தொடர்கின்றது அவர்களின் விளையாட்டு.

குட்டி இளவரசனின் எதார்த்த கேள்விகளுக்கு பதிலளிக்க நிதானம் அற்று பெரியவர்கள் தங்கள் வேலையில் மூழ்கி கிடக்க..அவர்களை வியந்தபடி தன் பயணத்தை தொடர்கின்றான்.

தமிழில் குழந்தைகளுக்கான படைப்புகள் அதிகம் கவனம் பெறாமல் இருப்பது வருத்தமளிக்கும் விஷயம். குழந்தைகளுக்கு கதை சொல்லியாக இருப்பது எத்தனை சௌகர்யமான விஷயம்.நாம் கேட்ட,வாசித்த கதைகளை கற்பனையுடன் சேர்த்து சொல்லிடலாம். கேட்கப்படவிருக்கும் கேள்விகள் நம்மை ஆச்சர்யபடுத்தலாம்..சில சமயம் சிரிப்பில் ஆழ்த்தலாம்.அது வேறு உலகம், அவர்களுக்கேயானது.. கேள்விகளும்,கற்பனைகளும் நிறைந்தது.அதை அழகானதாகவும்,அர்த்தமுள்ளதாகவும் ஆக்கிட கதைகளால் மட்டுமே சாத்தியம்!

வெளியீடு - கிரியா பதிப்பகம்

Friday, March 1, 2013

The Children Are Watching Us (1944)

சின்னஞ்சிறு சிறுவனின் உலகம் தாயின் போக்கினால் சிதைவுறுவதை சொல்லும் திரைப்படம் The Children Are Watching Us (1944).கதைகளாலும் கற்பனைகளாலும்,கற்று தரும் நல்லொழுக்கங்கள் ஆரம்ப நிலைய தொட்டுத் தொடங்குவதாகவும் இருக்க வேண்டிய அப்பருவம் சிறுவன் பிரிகோவிற்கோ வேறு மாதிரி அமைந்து விடுகின்றது.Bicycle Thieves திரைப்படத்தில் தகப்பனிற்கும் மகனிற்குமான நெருக்கத்தை நெகிழ்ச்சியுடன் முன்னிறுத்திய விட்டோரியோ டி சிகாவின் இக்காவியம் தாயும்/தந்தையும் பிள்ளைக்கு அமைத்து தர வேண்டிய உலகம் குறித்து பேசுகிறது.அவ்வுலகம் ஆடம்பர பொருட்களாலும் பொம்மைகளாலும் அமைய வேண்டிய ஒன்று இல்லை என்பது இங்கு கவனிக்க பட வேண்டியது .....!


ப்ரிகோவின் தாய் நீனா ராபர்டோ உடன் கொண்டிருக்கும் உறவு முதல் காட்சியிலேயே தெரிவிக்கப்படுகின்றது.பூங்காவில்,அவர்கள் இருவரின் உரையாடலை அமைதியாய் பார்கிறான் ப்ரிகோ..அன்றிரவே நீனா ராபர்டோ உடன் சென்று விட,இருளாய் விடிகிறது ப்ரிகோவின் அன்றைய தினம்.காலை தொடங்கி இரவு உறங்க போகும் வரை உடன் இருந்து கவனித்து கொண்ட தாயின் இடத்தை அவன் சித்தியோ,பாட்டியோ ஈடு செய்யவில்லை.மாறாக அவர்கள் இருப்பும் அவர்கள் சார்ந்த உலகமும் அவனிற்கு அச்சம் தருபவை. சித்தியின் அலங்கார உடைகள் தயாராகும் கடையில் அவன் செலவிடும் பொழுதுகள் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை.அங்குள்ள பெண்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள் அவன் உலகிற்கு அப்பாற்பட்டவை..அகவுலகின் குழந்தை நிலை,குழப்பம் அடைய தொடங்கும் இடம் அது.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....!

கடும் காய்ச்சலில் அவதிபடும் ப்ரிகோவை குறித்து கேள்விபட்டு நீனா சில தினங்களில் திரும்பி வருகிறாள்.நீனாவை ஏற்க மறுக்கும் ப்ரிகோவின் தந்தை அவளை விடாது,தேம்பி அழுகும் ப்ரிகோவிற்காய் அவளை அனுமதிக்கின்றார்.சின்ன சின்ன நிகழ்வுகளின் இனிமையால் மெல்ல அவர்களின் குடும்பம் பழைய சந்தோஷத்தை அடைகின்றது.இதன் இடையே ராபர்டோ மீண்டும் நீனாவை தேடி வீடு வருகின்றான்.அவர்களுக்கு இடையே நிகழும் வாக்குவாதம் ப்ரிகோவின் முன்னே நிகழ்கின்றது.இம்முறை நீனா அவனை கடுமையாக பேசி வெளியேற செய்கிறாள்.ராபர்டோவின் வருகையையும்,நீனாவோடு அவனுடைய வாக்குவாதத்தையும் ப்ரிகோ அவன் தந்தையிடம் சொல்லுவதில்லை.அத்தகைய சூழ்நிலைகளுக்கு அவனை பழக்கப்படுத்தி கொள்கின்றான்.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....!

ப்ரிகோவின் தந்தை குறித்து எந்த எதிர்மறை கருத்துகளும் இல்லை. மனைவி மீதும் மகன் மீதும் பேரன்பு வைத்திருக்கும் சராசரி குடும்ப தலைவனாகவே இருக்கின்றார்.இனி குறை ஒன்றும் இல்லை என அவர்கள் குடும்பத்தோடு கடற்கரை நகரம் ஒன்றிற்கு சுற்றுலா செல்லுகின்றனர்.தாயுடனும் தந்தையுடனும் ப்ரிகோவின் பொழுதுகள் இனிதாய் கழிகின்றது.வேலை நிமித்தம் ப்ரிகோவின் தந்தை அவர்கள் இருவரையும் அங்கு விட்டுவிட்டு கிளம்புகிறார்.மீண்டும் அங்கு வரும் ராபர்டோவை நீனா இம்முறை எதிர்க்கவில்லை மாறாக அவனுடன் நெருக்கம் கொள்கிறாள்.இதை காணும் ப்ரிகோ பைத்திய நிலைக்கு செல்கிறான்.அவ்விடம் விட்டு தந்தையை அடைய அலைந்து திரியும் ப்ரிகோவை போலீசார் மீட்டு தந்தையிடம் கொண்டு சேர்கின்றனர்.நீனா மீண்டும் ராபர்டோவுடன் சென்று விடுகிறாள்...தந்தையிடம் நீனாவை குறித்து இப்பொழுதும் ஒரு வார்த்தை கூட பேசிட அக்குழந்தை துணியவில்லை அவரின் பெருங்கருணை உள்ளம் தாங்கி கொள்ளாது என எண்ணி இருக்கலாம்.அவர்கள் நம்மை கவனிக்கிறார்கள்.....!

அதன் பின் நிகழ்வது யாவும் துயரம்...!அவமானம் தாளாத தந்தையின் தற்கொலை,அநாதை விடுதி வாசம் என ப்ரிகோவின் வாழ்க்கை தடம் புரள்கிறது.சிதைக்கபட்ட அவன் அகவுலகை நெஞ்சை உருக்கும் அந்த கடைசி காட்சியின் வழியே உணரலாம்.இத்திரைப்படத்தில் ஒரு காட்சி கூட தேவை அற்றது என ஒதுக்கி விட முடியாது.காட்சிகளில் அத்தனை நுணுக்கம்.நம் பேச்சும்,செயல்பாடுகளும்,பழக்க வழக்கங்களும் எல்லா விதங்களிலும் அவர்களில் பாதிப்பை உண்டாக்குகின்றது.அவர்களை சுற்றி உலவும் மனிதர்களில் இருந்தே அவர்கள் கற்றுகொள்கின்றார்கள்.ப்ரிகோவாக நடித்துள்ள சிறுவனின் நடிப்பு இங்கு சொல்லி ஆக வேண்டியது,ஐந்து வயது சிறுவனிடம் இத்தனை அபாரமான உணர்ச்சி வெளிப்பாடா என்றிருக்கிறது.படம் பார்த்து பல மணிநேரம் ப்ரிகோவின் முகம் நினைவில வருவதை தவிர்க்க இயலாது.அவர்கள் நம்மை கவனிக்கின்றார்கள் என்ற உணர்வு நம்மில் எப்பொழுதும் இருந்தாலே குழந்தைகள் குழந்தைகளாக தொடர்வார்கள்...1944 இல் வெளிவந்துள்ள படம் இது..இன்றைக்குமான நிதர்சனத்தின் பதிவு என்றே சொல்ல வேண்டும்.!