Tuesday, November 30, 2010

எஸ்.ராவின் "பேசத்தெரிந்த நிழல்கள்"

நாவலையும்,சினிமாவையும் முறையே வாசகனுக்கும்,பார்வையாளனும் அணுகும்/அணுக வேண்டிய முறை குறித்து இக்கட்டுரையில் வாசித்த வரிகள் சத்தியமானவை.

இலக்கியத்தை வாசிப்பவர்கள் சொற்களின் வழியே ஒரு பிம்பத்தை தாங்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள்.அதில் காட்சிபடுத்துதல் தான் வாசகனின் வேலை.அதே நேரம் சினிமாவோ காட்சிகளை முன்வைக்கிறது.அதை தனது மனதிற்குள் சொற்களாக, நினைவுகளின் பகுதியாக மாற்றிக் கொள்வதை பார்வையாளர்கள் செய்கிறார்கள்"

திரைப்படங்கள்/நடிகர்கள் குறித்த தங்களின் விரிவான பார்வையாய் தமிழில் தொடர்ந்து முன்வைப்பவர்கள் எஸ்.ராவும் சாருவும்.என்னளவில் சாருவின் "தீராக்காதலி"(கே.பி சுந்தராம்பாள்)தொகுப்பு முக்கியமான ஒன்று.ரேயின் "பதேர் பாஞ்சாலி" குறித்த எஸ்.ராவின் 'பதேர் பாஞ்சாலி - நிதர்சன புனைவு" ,ஒரு திரைப்படத்தை மட்டுமே மையமாக கொண்டு தமிழில் வெளிவந்த முதல் நூல் என நினைக்கின்றேன்.நல்ல சினிமாவை,மறக்கடிக்கப்பட்ட நடிகர்களை தம் வாசகர்களுக்கு முன்னெடுத்து செல்லும் இம்முயற்சிகள் இப்பொழுது பரவலாய் காணப்படுவது மகிழ்ச்சிகரமானது.

எஸ்.ராவின் இந்த தொகுப்பு,முழுக்க முழுக்க ஒரு பார்வையாளனின் அவதானிப்பில் தமிழ்,மலையாளம் தொடங்கி உலகளவில் தான் ரசித்த திரைப்படங்கள்,குறும்படங்கள், விருப்பத்திற்குரிய நடிகர்கள்,நேர்காணல்கள் என தகவல்களை பகிர்ந்து கொண்டே செல்கின்றது.




சாவித்திரி,நடிப்பு ராட்சசி.நவராத்திரி திரைப்படத்தில்,மேடை நாடக காட்சியில்..முகத்தை வெட்டி,சிவாஜியிடம்,"அதாகப்பட்டது சுவாமி........." என கூறும் ஒரு காட்சி போதும் அவர் சிறப்பை பகிர.இத்தொகுப்பில் சாவித்திரி குறித்த கட்டுரையை(சாவித்திரி - இரண்டு பிம்பங்கள்) வாசித்து கொண்டிருக்கும் பொழுது,வைகை எக்ஸ்ப்ரஸ்ஸில் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி புத்தகத்தை வாங்கி ஆர்வமாய் அதை மட்டும் படித்துவிட்டு திருப்பி தந்தார்.கூடவே சாவித்திரி குறித்து தனக்கு தெரிந்த செய்திகளை சொல்லி கொண்டே வந்தார் சோகத்துடன்.அந்த நடிகையின் இறுதி நாட்கள் குறித்த உருக்கமான கட்டுரை அது.

"சிரித்தால் மட்டும் போதுமா?",நடிகர் நாகேஷை குறித்த இக்கட்டுரை அந்த மாபெரும் கலைஞன் குறித்த தகவல்களோடு அவருக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரம் குறித்தும் பேசுகின்றது. விருதுகளுக்கும் மேலான சிறப்பு ரசிகனின் வரவேற்பே.தருமியும்,செல்லப்பாவும் எளிதில் மறக்க கூடியவர்கள் அல்லவே!மொழி கடந்து சில நடிகர்கள் எளிதில் கவர்ந்து விடுவார்கள்.மலையாள நகைச்சுவை நடிகர்கள் ஜெகதி, ஜகதீஷ்,இன்னொசன்ட் எப்போதும் என் விருப்பதிற்குரியவர்கள்.ஜெகதியும்,இன்னொசென்ட்டும் இல்லாத படங்களே இல்லையா என்று கூட தோன்றும்.இத்தொகுப்பில் "நகைச்சுவை நாயகன்" கட்டுரை ஜெகதி குறித்தானது.

ராஜாவின் திருவாசகம்,முதன்முதலில் கேட்டது ஒரு இரவில்.ராஜாவை அதிகமாய் பிடித்து போன தருணங்களில் அதுவும் ஒன்று."எத்தனை கோபுரங்கள் இருந்தாலும்,தஞ்சை கோபுரம் தனித்துவமானது,ராஜாவும் அது போலவே" என்ற இயக்குனர் பாசிலின் வரிகள் நினைவிற்கு வருகின்றது.திருவாசக இசையில் கரைந்து உருகிய தருணங்களை பதிவு செய்கின்றது "திருவாசகம் கேட்ட பொழுது" கட்டுரை.(ராஜாவின் பாடல்கள் குறித்து விரிவாக எழுத வேண்டும்..எப்பொழுதிற்குமான இசை).

"Wind Migration " மற்றும் "The Forgotten Woman " ஆகிய இரு ஆவணப் படங்கள் குறித்த தகவல்கள் பார்க்கும் ஆவலை தூண்டுபவை.Wind Migration ஆவணப்படத்தின் பல பகுதிகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.பறவைகளின் தீரா பயணத்தில் கொஞ்சம் நாமும் உடன் பயணிக்கும் சுவாரஸ்ய அனுபவம்."The Forgotten Woman ",மதுரா நகரில் தனித்து விடப்பட்ட விதவைகளை குறித்தது.உணவிற்கும்,இருப்பிடத்திற்கும் வழியின்றி எஞ்சிய நாட்களை விதியின் வசம்விட்டு தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்களின் நிலை குறித்த இப்படத்தை இயக்கியிருப்பவர் திலீப் மேத்தா(தீபா மேத்தாவின் சகோதரர்).

மதுரை இருந்த நாட்களில் உலக சினிமா பார்ப்பதென்பது ஏழு கடல்,ஏழு மலை தாண்டி அடைய வேண்டிய காரியம் என்றிருக்கும்.ஹாலிவுட் படங்கள் குறித்து மட்டுமே அறிந்திருந்த காலம் அது.இணைய அறிமுகத்திற்கு பிறகு அதிகமாய் உலக சினிமா குறித்து அறிமுகம் கிடைத்தது எஸ்.ரா மற்றும் சுரேஷ் கண்ணனின் "பிச்சைபாத்திரம்" வலைத்தளங்களின் வழியே.தேசத்திற்கு தேசம் வேறுபடும் கலாசாரத்தையும்,வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள திரைப்படங்களை தவிர்த்து வேறு எளிமையான வழியிராது.அவ்வகையில் இத்தொகுப்பில் கோடிட்டு காட்டப்படும் ஆசிய/பௌத்த/வியட்நாமிய திரைப்படங்கள் எண்ணற்றவை.

ஹாலிவுட் திரைப்படங்களில் இருந்து பிற தேச திரைப்படங்கள் வேறுபடம் விதம் குறித்தும்,திரைப்பட வகைகள் குறித்தும் விரிவாய் அலசும் "ஆசிய - சினிமாவின் குவிமையம்'கட்டுரை முக்கியமான ஒன்று.மேலும் ஒரு குறிப்பிடதக்க பதிவு,அகிராவுடன் இரானிய இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியின் உரையாடல்.தொழில்முறை நடிகர்கள்,சர்வதேச விருதுகள்,மிகை நடிப்பு,தற்கால சினிமா குறித்தான அகிராவின் பார்வையை முன்வைக்கும் கட்டுரை.

இத்தொகுப்பின் கட்டுரைகள் சினிமாவை அணுகும் முறை குறித்தோ,அதன் நுணுக்கங்கள் குறித்தோ நமக்கு பாடம் சொல்லுபவை அல்ல.மாறாக அனுபவ வாயிலாக அறிமுகங்களை தந்து, நம் நினைவுகளையும் மீட்டெடுக்கும் முயற்சி.சினிமாவின் மீது தீராக்காதல் கொண்டவர்கள் தவறவிடக் கூடா வாசிப்பு!

வெளியீடு - உயிர்மை

Monday, November 8, 2010

The Day I Became A Woman (2000)

ஒரே நாளில் நிகழும் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு.ஒரு சிறுமி,ஒரு நடுத்தரவயது பெண்,ஒரு மூதாட்டி - தங்களை அடையாளம் கண்டு கொள்ள நேரிடும் ஒரு நாளை குறித்த மூன்று தனிக்கதைகள்.முதல் முறை சுதந்திரம் முடக்கப்படும் பொழுது எழும் கேள்விகள்,விருப்பங்களுக்கு தடை ஏற்படும் பொழுது அதை மீறி வென்றிட நடத்தும் போராட்டம்,பிடிதமானதொரு வாழ்வை இறுதி நாட்களில் கண்டெடுத்து அடையும் மகிழ்ச்சி,இவற்றை இப்பெண்களின் வாழ்வில் ஒரு நாள் நிகழ்வின் மூலம் பார்வையாளனுக்கு சிறப்பாய் கொண்டு சேர்ந்திருக்கிறார் இரானிய பெண் இயக்குனர் மர்சீ மெஷ்கினி.




முதல் கதை, ஹவா என்னும் சிறுமி தனது ஒன்பதாவது பிறந்த நாளின் பொழுது அம்மாவாலும்,பாட்டியாலும் இனி நீ ஒரு பெண் என போதிக்கப்படுகிறாள். சதோர் எனப்படும் கருப்பு அங்கியை அணிந்து கொள்ள அதுவே சரியான நாள் என தீர்மானம் ஆகின்றது.ஆண் நண்பர்களோடு விளையாடவும்,வெளியே செல்லவும் தடை விதிக்கப்படுகின்றது."நேற்று வரை விளையாடி கொண்டுதானே இருந்தேன்" என அவள் கேட்கும் இடம்...சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நீண்ட போராட்டத்திற்கு பிறகு பகல் 12 மணிவரை விளையாட அனுமதி பெற்று நேரத்தை கணிக்க குச்சியை எடுத்து கொண்டு வெளியேறுகிறாள்.வெகு இயல்பாக வந்து விழும் கேள்விகளும்,நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியாத சிறுமியின் மனநிலையை அழகாய் பிரதிபலிக்கும் பகுதி இது.

இரண்டாவது கதை - கணவனின் எதிர்ப்பை மீறி சைக்கிள் பந்தயத்தில் பங்கு கொள்ளும் ஆஹு என்னும் பெண்ணை குறித்து.இக்கதை முழுதும் பந்தைய களத்திலேயே நடிக்கிறது.எத்தனையோ பெண்களோடு பந்தயத்தில் பங்கு கொண்டிருக்கும் ஆஹூவிடம் அவளது கணவன் அதை விடுத்து வீடு வருமாறு வற்புறுத்துகிறான்.விவாகரத்து செய்து விடுவேன் எனவும் மிரட்டுகிறான்...மத குருவை அழைத்து வந்து விவாகரத்தும் செய்கின்றான்..எதையும் கண்டுகொள்ளாமல் இறுக்கமான மனநிலையில் போட்டியில் வெற்றி பெற தொடர்ந்து சைக்கிள் ஒட்டி செல்லும் ஆஹு தனது சகோதரர்களால் பாதி வழியில் சைக்கிள் பிடுங்கப்பெற்று தனித்து விடப்படுவதோடு முடிகின்றது இக்கதை.மத ரீதியான கட்டுபாடுகள் நியாயமான விருப்பங்களுக்கு இடையூறாய் வந்தால் அதை துணிந்து எதிர்கொள்ளும் மனநிலை கொண்டிருப்பவர்கள் பெண்கள் என்பதை சொல்லுவதான கதை.மூன்று கதைகளில் அழுத்தம் மிகுந்தது இதுவே.



மூன்றாவது கதை - தான் அனுபவித்து அறியாத சொகுசான வாழ்கையை இறுதி நாட்களில் சாத்தியப்படுத்திட நினைக்கும் மூதாட்டி ஹூரா,வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் அத்தனையையும் கூலிக்கு சிறுவர்களை வைத்து கொண்டு வாங்கி தன் நகரம் நோக்கி பயணிக்கின்றால். அத்தனை சுவாரஸ்யமான பகுதி இல்லை இது..இருப்பினும் ஹூரா கிளம்பும் முன்னர் அவள் சந்திக்கும் இரண்டு பெண்கள்,ஆஹூவை குறித்து அவளிடம் சொல்லுகின்றனர்,அத்தனை எதிர்ப்பை மீறி அவள் சைக்கிள் பந்தயத்தில் பங்கு கொண்டதும்,சகோதரர்களால் சைக்கிள் பிடுங்கப்பட்டு பந்தய களத்தில் தனித்து விடபட்டாலும் அவள் வாடகைக்கும் சைக்கிள் பெற்று அதில் வெற்றி அடைந்துவிட்டாள் என அவர்கள் பேசி கொள்வது பெருத்த நிம்மதி அளிக்கும் செய்தி.இரண்டாம் கதையின் வெற்றியும் அதுவே.

தான் வாங்கிய பொருட்களை படகில் ஏற்றி கொண்டு செல்லும் ஹூராவை பார்த்தபடி சிறுமி ஹவா நிற்பதோடு முடிகின்றது இத்திரைப்படம்.ஆஹூவை போல போராட்ட குணமும்,ஹூராவிற்கு இறுதி நாட்களில் கிடைத்த மகிழ்ச்சியும் நிறைவும் இனி வாழ்க்கையை தொடங்க போகும் சிறுமி ஹவாவிற்கு சாத்தியம் ஆகுமா என்கிற கேள்விகள் தொக்கி நிற்பதென்னவோ உண்மை.தீவிரமான பெண்ணிய கருத்துக்களை வெளிப்படையாக பேசும் இத்திரைப்படம் இரானில் சிறிது காலம் தடை செய்யப்பட்டுள்ளது.மத ரீதியான கட்டுபாடுகளை விலக்கி பார்த்தால் இத்திரைப்படம் எல்லா தேசத்து பெண்களும் பொருந்தி வருவதே.

Monday, November 1, 2010

அ.முத்துலிங்கத்தின் "வியத்தலும் இலமே"

"வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்"

- அ.முத்துலிங்கம்


இத்தொகுப்பை வாசிக்க தொடங்கிய சில நிமிடங்களில், தமிழின் அபூர்வ நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணம் தோன்றியது.உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் உடனான நேர்காணல்களின் தொகுப்பிது.சமகால உலக இலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டே செல்கின்றன ஒவ்வொரு கட்டுரையும்.மொழிபெயர்ப்பல்லாமல் உரையாடல்களின் நேரடி தமிழ் பதிவு. வாசகனாய் மட்டுமே தன்னை முன்னிறுத்தி எழுத்தாளர்களோடு கொண்ட உரையாடல்களை தொகுத்திருக்கும் அ.முவின் இம்முயற்சி ஆச்சர்யம் அளிப்பது.வாசிப்பின் மீதான தீராக்காதல் மட்டுமே காரணமாய் இருக்கவேண்டும்....நிச்சயமாய் அது மட்டுமே!

சிறுகதை - நாவல் வடிவம்,வாசிக்க விரும்பும் நூல்கள்,எழுதும் முறை,பதிப்பாளர்களுடனான உறவு குறித்தான கேள்விகள் பொதுவாக எல்லா நேர்காணலிலும் கேட்கபடுபவையாக இருக்கின்றன.பதில்களில் தான் நமக்கு ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

"The Devil that danced on the water" நாவலின் அசிரியர் அமினாட்டா போர்னோ தமக்கு பிடித்த நூல் என அகராதியை கூறுகின்றார்."கொலம்பஸ் ஒரு நாட்டை கண்டுபிடித்தது போல ஒவ்வொரு புது வார்த்தையும் எனக்கு பெரிய கண்டுபிடிப்பு தான்" என்கிறார்.இத்தொகுப்பில் பல எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்படும் புத்தகம் "An Obidient Father",இதன் ஆசிரியர் புலம் பெயர்ந்த இந்தியர் அகில் ஷர்மா.இந்திய அரசியல் பின்னணியில் நிகழும் இந்நாவல் கொண்டாடப்படுவதற்கு, அதிர்ச்சி மதிப்பீட்டிற்கு மீறிய காரணங்கள் உள்ளன என உணர நாவல் குறித்த சிறு அறிமுகம் உதவுகின்றது. பல்லாயிரம் டாலர் சம்பள வேலையை விடுத்து முழு நேர எழுத்தாளராய் இருப்பவர் இவர்.


இத்தொகுப்பில் எழுத்தாளர்கள் அல்லாத வேறு சில சுவாரஸ்ய மனிதர்களும் உண்டு.பறவையியல் விஞ்ஞானி கிரிஸ் பிலார்டி உடனான சந்திப்பை சொல்லலாம்,அபூர்வ பறவைகள் குறித்தும்,முற்றிலும் அழிந்து போன பறவை இனங்கள் குறித்தும் தொடரும் உரையாடல்கள் ஒரு நிமிடம் நாமும் அவர்களோடு அந்த பறவை கூடத்தில் நின்று கொண்டிருப்பதான பிரம்மிப்பை தருகின்றது.



"ஒரு விஞ்ஞானக் கதை உங்கள் அறிவை தூண்ட முடியும் அல்லது எதிர்பாராத ஒரு மூளை அதிர்ச்சியை தர முடியும்.ஆனால் இலக்கியம் என்று நீங்கள் அழைக்க வேண்டுமானால் அது உணர்வுபூர்வமாக உங்களை தொட வேண்டும்"

-- டேவிட் பெஸ்மொஸ்கிஸ்


திருக்குறளோடு ஆரம்பமாகும் அத்தியாயங்கள் கொண்ட ஆங்கில நூல் இருக்குமென நாம் நினைத்திருக்க சாத்தியங்கள் இல்லை."Cinnamon Gardens" என்னும் அந்நூலை எழுதி இருக்கும் ஷியாம் சுந்தர் சிங்கள எழுத்தாளர். தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாத இவர் திருக்குறளை தேர்ந்தெடுத்ததற்கு சொல்லும் காரணங்கள் சுவாரஸ்யமானவை.அனிதா தேசாயின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு எழுத தொடங்கியதாய் கூறுகின்றார்.அனிதா தேசாயின் "கடற்புரத்து கிராமம்"மட்டுமே வாசித்திருக்கிறேன்,வருடங்கள் பல கடந்தும் இன்னும் அந்நாவலின் மனிதர்கள் ஹரியும்,பேலாவும்,கமலாவும் மனதில் இருக்கிறார்கள்.

கடிகாரம் அமைதியாய் எண்ணி கொண்டிருக்கின்றது தொகுப்பில் படித்ததில் பிடித்தது என அ.மு பகிர்ந்திருக்கும் நூல் "Teacher Man". ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்ற ப்ரான்க் மக்கொர்டின் சுயசரிதை நூல் இது.நகைச்சுவையும்,ஒளிமறைவு அற்ற இவரின் எழுத்து குறித்தும் அந்த கட்டுரையில் வாசித்திருந்தது நினைவில் இருந்தது.வாசித்தே தீரவேண்டிய பட்டியலில் "Teacher man " நூலை சேர்க்க கூடுதலான தகவல்கள் இக்கட்டுரையில் உள்ளது.எழுத்தில் இருக்கும் வசீகரமும்,நகைச்சுவையும் எழுத்தாளனிடம் எதிர்பார்ப்பது தவறு என்பதை சொல்லும் விதமாய் இக்கட்டுரை இவ்வாறாக முடிகின்றது.

"ஒரு எழுத்தை படைத்தவரை சந்திக்காமல் இருப்பதே உத்தமம் என பல சமயங்களில் தோன்றும்.இனிமேல் மக்கோர்டை எங்கு சந்தித்தாலும் அவர் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் செல்வேன்.அவர் புத்தகங்கள் எங்கு கண்டாலும் வாங்குவேன்"

காம இலக்கியம் படைக்கும் மேரி ஆன் ஜான் புலம் பெயர்ந்த சிங்களத்தவர்.தனது டைரி குறிப்புகளை இணையத்தில் தொடர்ந்து பகிர்ந்து வரும் இவரின் நாவல் "Bodies in Motion ", மிக நுணுக்கமான விஷயங்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்கின்றார். குழந்தையின் உற்சாகத்தோடு இவர் பேசி இருப்பதாய் தோன்றியது.யாழ்ப்பான அப்பம் குறித்து இருவரும் பேசி கொள்ளும் இடம் அதை உறுதி செய்தது.

கிரேக்க புராணம் ஒன்றை (ஓடிசி) மீள் ஆராய்ச்சி செய்யும் மார்கரெட் அட்வூட்டின் "Penelopiad " நாவல் குறித்த விஸ்தாரமான அறிமுகம் பெனிலோப்பே என்னும் கிரேக்க இலக்கிய பாத்திரத்தின் மீதான மதிப்பை கூட்டுவது.புராணம் ஓடிசியசை பிரதானப்படுத்தி இருந்தாலும்,அவன் மனைவி பெனிலோப்பேவை முன்னிறுத்தி எழுதபட்டிருக்கும் இப்பெண்ணிய நாவலில் வருவதான இவ்வரிகள் என்னை கவர்ந்தன.


"நீ ஒரு தண்ணீர் பெண்.தண்ணீர் எதிர்ப்பதில்லை ,உன்னுடைய கைகளை அதற்குள் விட்டால் தழுவிக்கொள்ளும்.அது சுவர் அல்ல,உன்னை தடுக்காது.தடங்கல் ஏற்பட்டால் தாண்டி போகும். தண்ணீர் பொறுமையானது.ஒரு கல்லை கூட துளைத்துவிடும்"


வெகு சில எழுத்தாளர்கள் குறித்து மட்டுமே பகிர்ந்துள்ளேன்.தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் உடனான நேர்காணல் குறித்து தனி கட்டுரையே எழுதலாம்.முதல் ஆச்சர்யம் தமிழ் மீதான இவருக்கு உண்டான ஆர்வம்..சங்க இலக்கியம் தொடங்கி சமகால தமிழ் இலக்கிய சூழல் வரை தோய்வின்றி பேசுகின்றார்.செம்மொழி மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தியது இவர் தான்.

உலக இலக்கியங்கள் குறித்த பேச்சின் ஊடே புதுமைப்பித்தனும், எஸ்.ராவும்,ஜெமோவும் அதை ஒத்த படைப்புகளுக்காய் கோடிட்டு காட்டப்படுவது நிறைவு.ஒவ்வொரு எழுத்தாளரையும் சந்திக்க எடுத்து கொண்ட முயற்சிகள்,எதிர் கொண்ட இடர்பாடுகள்,குறித்து வாசிக்க வாசிக்க வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது!!அவரவர் படைப்பு சார்ந்த கருத்தாளமிக்க உரையாடல்கள்,எத்தனை தீவிர வாசிப்பு தேவைப்பட்டிருக்கும் இது சாத்தியமாக. குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் வாசிப்பதற்கு போதுமான நூல்கள் இத்தொகுப்பில் பரிந்துரைக்கபடுகின்றன.தமிழில் ஆக சிறந்த முயற்சி.தவிர்க்க கூடா வாசிப்பும் கூட.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 125 ரூபாய்