Friday, November 14, 2014

சுமித்ரா குறித்து..

என் சேமிப்பிற்காக ஜெமோவின்  தளத்தில் யாழிசையில் வெளியான பதிவைக் குறித்த இக்கட்டுரையை  இங்கு பதிவு செய்கிறேன்..

http://www.jeyamohan.in/?p=54108

Thursday, November 6, 2014

Fandry - யுகமாற்றதிற்கான கதை (மராத்தி)


கீழ்க்கண்ட சுகிர்தராணியின் கவிதையை முதல் முறை வாசித்த பொழுது எனக்கு கன்னட எழுத்தாளர் மொகள்ளி கணேஷின் 'காளி' சிறுகதையின் ஞாபகம் வந்தது.சுகிர்தாவின் கவிதை, இளவயதில் தலித் அடையாளத்தினால் அனுபவித்த மன வேதனையை உள்ளபடியே நமக்குச் சொல்வது.

கிட்டத்தட்ட இதே போன்றதொரு தலித் சிறுவனின் மனநிலையை படம் பிடித்து காட்டும் கதை கணேஷனுடையது.இவ்விரு இலக்கியங்களும் பகிரும் யுகம் யுகமாக தீராத ரணத்தை நாகராஜ் மஞ்சுளேவின் FANDRY திரைப்படமும் பேசுகிறது.

"செத்துப்போன மாட்டை
தோலுரிக்கும் போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர் சோற்றைத்தின்று விட்டு
சுடு சோறென பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் முறைத்து கடந்து விடுவேன்
அப்பாவின் தொழிலில்ஆண்டு வருமானம்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசயிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்றுசொல்லி விடுகிறேன்
பறச்சி என்று"
-சுகிர்தராணி


விடலை பருவத்திற்கே உரிய ஆசைகளும்,கனவுகளும் கொண்ட தலித் இளைஞன், தீண்டாமைக் கொடுமையால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் மனவேதனை அடைவதை முடிந்த வரை எதார்த்த மொழியில் பேசுகிறது இப்படம்.நாயகன் ஜாப்யா பன்றி மேய்க்கும் குடும்பத்தைச் சேர்ந்தவன்.பள்ளி மாணவன்,பகுதி நேரமாக சைக்கிளில் சென்று ஐஸ் விற்கிறான்.ஏழ்மையின் கோர முகம் ஒரு புறமென்றால் அதை விழுங்கிடும் தாழ்ந்த ஜாதி என்கிற வேற்றுமை மறுபுறம்.அவ்வூரின் பிற இளைஞர்களைப் போல அவனால் இயல்பாக நடமாட முடியவில்லை.ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஜாதி குறுக்கே புகுந்து அவனை கூனி குறுகிப் போகச் செய்கிறது.ஆதிக்க ஜாதி இளைஞர்களின் கேலி,கிண்டல்,மிரட்டல்களுக்கு மத்தியில் பயந்தே அவன் தன காரியங்களை தொடர வேண்டியிருக்கு.பள்ளியில் மட்டுமே அவன் சற்று ஆசுவாசம் கொள்கிறான்.தீண்டாமை வேர் விடாத இடம் அது மட்டுமே.சாணக்யாவாக நடித்துள்ள இயக்குனர் நாக்ராஜின் கதாபாத்திரம் முக்கியமானது.சாணக்யாவின் சைக்கிள் கடையில் ஜாதி வேற்றுமைகளுக்கு இடமில்லை.மேலும் அவன் ஜாப்யாவிடம் மிகுந்த அன்போடு பழகுகிறான்.தயக்கங்கள் ஏதுமில்லாமல ஜாப்யா கால் வைக்கும் இடம் சாணக்யாவின் கடை மட்டுமே.

ஜாப்யாவிற்கு உடன் படிக்கும் ஷாலுவின் மீதொரு காதல் அல்லது அந்த வயதிற்கே உரிய ஈர்ப்பு.முடிந்தவரை தன அடையாளங்களை அவள் முன்னே மறைத்துக் கொள்ளவே விரும்புகிறான்.அவ்வூரின் திருவிழா கொண்டாட்ட காட்சிகள்,நிதர்சனத்தை விளக்கிட போதுமானவை.புது ஆடை அணிந்து நண்பனோடு உற்சாகமாக வளம் வரும் ஜாப்யா,சாமி ஊர்வலத்தில் மேள தாளத்திற்கு சாணக்யாவோடு சேர்ந்து துள்ளாட்டம் போடுகிறான். சாணக்யாவின் தோள் மீதமர்ந்து உற்சாக கொண்டாட்டத்தோடு தூரத்தில் நிற்கும் ஷாலுவை இவன் பெருமிதத்தோடு பார்க்கும் நிமிடங்கள் மிகச் சில நொடிகளில் கரைந்து போவது ..வேதனை.படத்தில் வரும் அக்காட்சியை நேரில் கண்ட வகையில் சகித்துக் கொள்ள இயலாதஅவ்வலியின் தீவிரம் புரிந்தது.


திருவிழா காட்சியைப் போலவே இறுதிக் காட்சியும் நீளமானது,மேலும் அர்த்தம் மிகுந்தது. இதுவரையிலான அவனது வேதனைகள் அத்தனைக்கும் சிகரம் வைத்தது போலொரு நிகழ்வு.உண்மையில் ஜாப்யாவும்,அவன் குடும்பமும் அக்காட்சியில் துரத்துவது பன்றிகளை அல்ல,தலைமுறை தலைமுறையாய் அவர்களை அடக்கி வைத்திருக்கும் ஆதிக்க ஜாதியின் அசிங்கங்களை.இறுதிக் காட்சியில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த அம்பேத்கர் உட்பட பல தலைவர்களின் புகைப்படங்களை கடந்து ஜாப்யாவின் குடும்பம் செல்கிறது.பேருண்மையை உரத்துச் சொல்லும் காட்சியது.

ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் நமக்கொரு விஷயம் சொல்லுகிறார்.அது ஏழை குடும்பத்தின் கல்யாண ஏற்பாடுகள்,வசதியற்ற சிறுவர்களின் பொழுதுபோக்குகள்,சின்ன சின்ன காரியங்களின் மீதான அவர்களின் ஆச்சர்யங்கள் என நீள்கிறது.இந்தத் திரைப்படம் குறியீடுகள் அதிகமின்றி பட்டவர்த்தனமாக ஜாதிய ஒடுக்குமுறையை பேசுகிறது.

சிறுவர் துவங்கி பெரியவர் வரை அவர்கள் அனுபவிக்கும் அவமானம் எவருக்கும் நிகழக் கூடாதது.ஒடுக்கப்படும் சமூகத்திற்கான எழுச்சிக் குரல் இத்திரைக்காவியம். உண்மையில் இப்படம் அடுத்த தலைமுறையினருக்கானது.இந்த அசாதாரணமான திரைப்படத்தை சாத்தியமாக்கிய இயக்குனர் நாக்ராஜின் கரங்களை பற்றி வாழ்த்து சொல்லிட விருப்பம்...!

சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்ல,அதிலிருந்து நாம் பெற்றுக் கொள்ள, நம்மை பக்குவபடுத்திக் கொள்ள எத்தனையோ விஷயங்கள் உண்டு என்பதற்கு Fandry ஆகச் சிறந்த உதாரணம்.முடிந்தவரை நண்பர்களுக்கு இந்தப் படத்தை பரிந்துரையுங்கள்.இப்படத்தை புரிந்து கொள்ள மொழி ஒரு தடையில்லை.

{மொகள்ளி கணேஷின் சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு : பாறைகள் -இந்தியச் சிறுகதைகள் (சந்தியா வெளியீடு) }