Thursday, May 14, 2015

என் பெயர் சிகப்பு - ஓரான் பாமுக்
"நிறம் என்பது கண்ணின் தொடுகை,செவிடனுக்கு இசை,இருட்டிலிருந்து வெளிப்படும் ஒரு வார்த்தை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளால ஒவ்வொரு புத்தகத்திலும்,ஒவ்வொரு பொருளிலும் ஆன்மாக்கள் - காற்றின் முணுமுணுப்பை போல - கிசுகிசுப்பதை நான் கேட்டிருப்பதால், என் தொடுகை தேவதைகளின் தீண்டலை ஒத்திருக்கிறது என்று சொல்லுவேன். சிவப்பாக இருப்பது என் அதிர்ஷ்டம். நான் மூர்க்கமானவன். நான் வலிமையானவன். எவ்விடத்திலும் மனிதர்கள் என்னை கவனிப்பார்கள் எனத் தெரியும்.நான் கட்டுப்படுத்த முடியாதவன்.."

ஒரு மாபெரும் கலாச்சாரத்தை,அதன் தொன்மச் சுவடுகளின் வழி ஊடுருவிச் சென்று காணும் வாய்ப்பை தன வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் ஓரான் பாமுக்.16ம் நூற்றாண்டு துருக்கியின் ஓட்டான் சாம்ராஜ்யத்தில் நடைபெறும் கதை.ஓவியக் கலையின் மீது ஆர்வம் கொண்டிருந்த மூன்றாம் சுல்தான் மூராத்தின் ஆணையின் கீழ் சித்திர சுவடிகளை வரைய முற்பட்ட நுண்ணோவியர்களின் வாழ்வரசியல் குறித்து விரிவாய் பேசுகிறது. நாவலின் கதாபாத்திரங்கள் வாசகனுடன் நேரடியாக பேசி கதையை விளக்குகின்றன.இங்கு கதாபாத்திரங்கள் என்பது மனிதர்கள் மட்டும் அல்ல..ஓவியங்களும் பிரேதமும் கூட.

எனிஷ்டே,ஓஸ்மான் ஆகிய ஓவியக் ஆசான்கள்,அவர்களின் சீடர்களான (புனைபெயர்களால் அழைக்கப்படும்)வசீகரன்,ஆலிவ்,நாரை, வண்ணத்துப்பூச்சி..மற்றும் எனிஷ்டேவின் மருமகன் கருப்பு,மகள் ஷெஹூரெ அவளது குழந்தைகள் ஓரான்,ஷெவ்கத்,ஷெஹூரெவின் கொழுந்தன் ஹசன் ஆகியோரைச் சுற்றி நகரும் கதையில் சுவாரஸ்யங்களுக்கு குறையில்லை. இவர்களுக்கு தொடர்பில்லாத யூதப் பெண்ணான வாயடி எஸ்தரின் மீது நம்மையும் அறியாமல் ஒரு நெருக்கம் பற்றிக் கொள்கிறது.அவள் கூவி விற்கும் பட்டாடைகள்,கைக்குட்டைகளின் வண்ணங்களைப் போல கலவையான குணம் கொண்ட பெண்ணவள்.பேரழகி என யாவராலும் வர்ணிக்கப்படும் ஷெஹூரெ காதலின் நிமித்தம் ஆண்களிடம் பகடையாட்டம் ஆடும் பெண்களின் குறியீடு.நிலையற்ற மனம் கொண்டு பேதலிக்கும் அவள்,நம்மை வசீகரிப்பது தம் பிள்ளைகள் இருவரோடு கொண்டிருக்கும் தூய அன்பினால் மட்டுமே.

ஓவிய மெருகாளன் வசீகரன், கொலையாகும் காட்சியோடு துவங்கும் நாவல் அவனது கொலையாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்போடு 100 ஆண்டுகால பாரசீக ஓவியக் கலையின் வரலாறையும் பேசிச் செல்கிறது. நுண்ணோவியர்கள் மத்தியில் காலங் காலமாக புகைந்து கொண்டிருக்கும் கேள்விகளுக்கு,பொறாமை குணத்திற்கு,ஓவியனின் தனித்த பாணியின் மீதான விமர்சனங்களுக்கு,மதச் சம்பிரதாயங்களுக்கு விடை தேடும் எண்ணற்ற உரையாடல்கள். விவாதங்களுகிடையே மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் நூல்கள் (பேரரசர்களின் நிகண்டு,ஹூஸ்ராவ் -ஷிரின் ..) மற்றும் ஓவியங்கள் வாசகனுக்கு சாவாலாக அமைபவை.குறிப்பாக காதலர்கள் ஹூஸ்ராவ் - ஷிரின் இருவரின் சந்திப்புக்கள் ஓவியமாக காட்சிப்படுத்தபட்டதை குறித்த விவரணைகள் அவ்வோவியங்களை தேடிப் பார்த்திடும் ஆவலை தூண்டுவது.

ஓட்டோமான் சுல்தானின் கருவூலத்தில் ஓவியர் ஒஸ்மானும் கருப்பும் செலவழிக்கும் அவ்விரு நாட்களில் - உலகின் நான்கு புறங்களில் இருந்தும் வந்து சேர்ந்த மாபெரும் ஓவியங்களை அவர்கள் கண்டு வியந்து விவாதிக்கும் பொழுதுகள் அற்புதமானவை.அவ்வோயியங்களுக்கு மத்தியில் நாமே நடப்பதாய்,மிதப்பதாய் ஒரு மாயை.வசீகரனின் கொலையாளி- நாரை, ஆலிவ்,வண்ணத்துப்பூச்சி இவர்களுள் ஒருவன் தான் என தெளிவாகி தேடல் பயணம் தொடரும் வேளையிலும் கொலைகாரன் தன் அடையாளங்களை மறைத்துக் கொண்டு நம்மோடு உரையாடுகிறான்.நாவலோடு நாம் இணக்கம் கொள்வதற்கு இவ்வகை கதை சொல்லலும் ஒரு காரணி.

பிற தேச ஓவியங்களை நகல் எடுத்தல்,மததுவேஷ் ஓவியங்களை வரைதல் உள்ளிட்ட விஷயங்களே திரும்ப திரும்ப விவாதிக்கப்படுவது சிறிது அயர்ச்சியே.சாத்தானின் வாயிலாக மதவெறியர்களின் மற்றொரு பக்கத்தை சுட்டிக் காட்டுவது ஆசிரியரின் சார்பின்மையின் அடையாளம்.நூற்றாண்டுகள் கடந்து வந்த ஓவியக்கலையின் மகத்துவத்தை,ஓவியங்களை குறித்த விரிவான பார்வையை முன்வைக்கும் அதே வேளையில் ஒரு இலக்கிய வாசகனாய் இந்நாவல் குறித்து யோசித்தால்..ஜெமோவின் இவ்வரிகளே நினைவுக்கு வருகின்றன.

"என் பெயர் சிவப்பு’-ஐ நாம் துருக்கியை அறிந்துகொள்ள, ஐரோப்பியப் பண்பாடு கீழைப்பண்பாட்டுடன் கலந்த ஒரு தருணத்தை அறிந்துகொள்ள, கீழைக்கலைமனம் மேலைக்கலையை சந்திக்கும் நுட்பங்களை அறிந்துகொள்ள வாசிக்கலாம்.ஆனால் பேரிலக்கியங்களை நாம் நம்மைப்பற்றி அறிந்துகொள்ளவே வாசிக்கிறோம்.."
- ஜெயமோகன்

சில எதிர்பார்ப்புகள் பொய்த்திருந்தாலும் நோபல் பரிசு வென்ற இம்மாபெரும் எழுத்தாளனின் பிற படைப்புகளை தேடி வாசிக்கும் ஆவலை தந்து விடுகின்றது 'என் பெயர் சிகப்பு'.ஓரான் பாமுக்கின் வர்ணனனையில் இஸ்தான்புல் நகரின் அழகை வாசிக்கும் விருப்பத்தை வித்திட்டுள்ளது இந்நாவல்.

வெளியீடு - காலச்சுவடு
தமிழில் - ஜி.குப்புசாமி