Monday, September 14, 2009

புனைவுகளே வரலாறாய் ஆனது அல்லது வரலாறு புனைவுகளால் ஆனது

பதிவுலகம் குறித்த இந்த தொடர் பதிவிற்கு அழைத்த அய்யனாருக்கு நன்றி..

இலக்கியம்...இங்கே தொடர்ந்து இயங்கி கொண்டிருக்க எனக்கான ஒரே காரணம்.பள்ளி,கல்லூரி காலங்களில் வாசித்ததை பகிர்ந்து கொள்ள ஆள் இருக்காது..சினிமா காரியங்கள் தவிர்த்து சக தோழர்கள் ஆர்வமாய் பேசிக்கொள்ளும் விஷயங்கள் மிகக்குறைவு.வாசிப்பவைகளை பகிர்ந்து கொண்டது முதலில் ஆர்குட் தளத்தில்..அங்கே உலக தமிழ் மக்கள் இயக்கம் என்னும் குழுமத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும்.இணையத்தில் தமிழ் விவாதம் நடைபெறுவதை கண்ட பொழுது கொண்ட மகிழ்ச்சியை சொல்லிமீளாது.

அக்குழும நண்பர்களே "தமிழ் இலக்கிய அரங்கம்" என ஒன்றை துவக்கி அங்கே இலக்கியம்,உலக சினிமா குறித்த விவாதங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.ஆர்குட் நண்பர் ஒருவர் தந்த அறிமுகத்திற்கு பின் பதிவுலகம் குறித்து எதுவும் அறியாமல் விளையாட்டாய் எழுத துவங்கினேன்.உலக வாசகர்களை இது சென்றடையும் என்கின்றன விவரங்கள் எல்லாம் தெரியாது ஏனோதானோவென இருக்கும் எனது ஆரம்ப கால கட்டுரைகளை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாய் உள்ளது.எனினும் அக்கட்டுரைகளை நீக்கிவிட மனமில்லை.

வாசித்த புத்தகங்களை குறித்து மட்டுமே எழுத வேண்டும் என்கிற நோக்கம் ஏதுமில்லை.என் பொழுதுகள் அதிகமாய் வாசிப்பிலேயே செல்வதால் அதை தவிர்த்து வேறேதும் எழுத தோன்றவுமில்லை.எழுத்தாளனுக்கும்,வாசகனுக்குமாய் உள்ள தொடர்பு கடிதத்தோடு முடிந்து விடுவதாய் இருந்த காலங்கள் மாறி,இணையத்தின் அறிமுகம் மூலம்..தொடர்ந்து விவாதிக்கவும்,இலக்கிய கூட்டங்களில் சந்தித்து உரையாடவும் பதிவுலகம் பெரும் பங்கு வகிக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.சுஜாதா,எஸ்.ரா,சாரு என விரும்பி வாசித்த எழுத்தாளர்களை எளிதில் சென்றடைய உதவியது இப்பதிவுலகம் தான்.




இங்கு ஆண்,பெண் பேதங்கள் ஏதுமில்லை,சாதி சண்டைகள் இல்லை,தொழில் முறை வேறுபாடுகள் இல்லை,தமிழ் என்னும் ஒற்றை வார்த்தையால் நண்பர்களோடு இணைத்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.பதிவுலகில் எழுத தொடங்கி ஓராண்டுக்கு மேலாகின்றது...கசப்பான அனுபவம் ஏதுமின்றி தெளிந்த நீரோடையாய் போய்கொண்டிருக்கின்றது.நல்லவேளை பதிவெழுத வந்தேன்.ஏதோ ஒரு நிறைவு..இல்லாவிட்டால் சென்னை வாழ்க்கை அலுவலகம் - விடுதி - வாசிப்பு என இயந்திரத்தனமாய் தான் இருந்திருக்கும்.

பதிவுலகம் தந்த நண்பர்களை குறித்து அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.அய்யனார்,நர்சிம்,ஜக்ஸ் என சந்தித்து பேசிய நண்பர்கள் தவிர்த்து,சிவராமன்,அஜய்,ராம்ஜி,கிருஷ்ணன்,கார்த்திக்,வடகரை வேலன்,செய்யது என முகம் அறியா நண்பர்கள் பலர்..ஆரோக்கியமான சூழலில் உரையாடல்கள்,விவாதங்கள், புதிய காரியங்கள் குறித்த அறிமுகங்கள் என யாவற்றிலும் நேரடி பங்களிப்பு செய்ய முடிவதால் வெகுஜன பத்திரிக்கைகளில் மீது இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது என்பது உண்மை.

பதிவுலகம் அதிசய குகை போல...எத்தைனையோ வேர்கள் விட்டு படர்ந்திருக்கும் அதனுள் ஒருமுறை புகுந்து விட்டால் வெளிவருது அவ்வளவு சுலபம் இல்லை..வெளி வரவேண்டிய ஆவசியமும் இல்லை..இனிதாய் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க காரணங்கள் பல இங்குண்டு....கனவாய் இருந்த பலவும் சாத்தியப்பட்டு கொண்டிருப்பது இங்கே தான்.

22 comments:

chandru / RVC said...

ம், அய்யனார் கூப்பிட்டுருக்காரா? :-)
//பதிவுலகம் அதிசய குகை போல...// புதுசா வர்றவங்க படிச்சான்ங்கன்னா பயந்துடப்போறாங்க :-)
வாழ்த்துகள்- தொடர்ந்து இணையத்தில் இயங்க.

கிருஷ்ண மூர்த்தி S said...

உண்மைதான் அம்மா!

வாசிக்கத் தெரிந்தவனுக்கு அதைவிட அருமையான அனுபவம் வேறு இருக்க முடியாது. மழலைச் சொல் கேளாதவரை எப்படி வள்ளுவர், மற்ற விஷயங்கள் எல்லாம் இனிமையாக இருக்கிறதென்று சொல்கிறாரோ,அதே மாதிரி, நல்ல எழுத்தைத் தேடித் படிக்கத் தெரியாதைவரைப் பற்றியுமே சொல்லலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

பாந்த இந்த மின்வெளியில்,மின்னெழுத்துக்களில், முகம் தெரியாதவர்தான் என்றாலும் கூட, தன்னைப்போலவே ஒத்த ரசனை, வாசிப்பு அனுபவம் இருப்பவர்களைக் கண்டுகொள்வதில், அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்,
ஒரு சுகானுபவமே இருக்கிறது என்பதை அனுபவித்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்க!

குப்பன்.யாஹூ said...

நன்றிகள் பல லேகா. இந்த பதிவிற்கு.

ஆம் பதிவுலகம் குகை பயணம் போன்றதே.

உங்களுக்கு வாசிப்பில் , திரைப்படம் பார்த்தலில், பயண அனுபவத்தில் கிடைத்த இன்பங்களை, சுக அனுபவங்களை ஒரு சித்தர் ஞானி போல எங்களுடன் பகிர்ந்து கொள்வதால் இது ஒரு குகை பயணம் தான்.

அ.மு.செய்யது said...

த‌மிழ் இல‌க்கிய‌ வாசிப்பு என்ற‌வுட‌ன‌யே என‌க்கு உங்க‌ள் பெய‌ர் தான் நினைவுக்கு வ‌ரும் லேகா.

உங்க‌ள் வ‌லையில் நீங்க‌ள் த‌ரும் நாவ‌ல் அறிமுக‌த்திற்கு பிற‌கு நான் வாங்கிய‌ புத்த‌க‌ங்க‌ள் ஏராள‌ம்.

இப்போது கூட‌ கொத்தை ப‌ருத்திக்காக‌வும் 'க‌ட‌ல்புர‌த்தில்' காக‌வும் போராடி வ‌ருகிறேன்.

thiyaa said...

//
பதிவுலகம் அதிசய குகை போல...எத்தைனையோ வேர்கள் விட்டு படர்ந்திருக்கும் அதனுள் ஒருமுறை புகுந்து விட்டால் வெளிவருது அவ்வளவு சுலபம் இல்லை..வெளி வரவேண்டிய ஆவசியமும் இல்லை..இனிதாய் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க காரணங்கள் பல இங்குண்டு....கனவாய்
//

உண்மைதான்

ராகவன் said...

அன்பு லேகா அவர்களுக்கு,

உங்களின் பதிவுலகம் தான் எனக்கு கலாப்ரியாவிற்கு பிறகு அறிமுகமான பதிவுலகம். ஒர்குட்டில் உங்களுடைய சில தலைப்புகளின் வழியாக ஈர்க்கப்பட்டு, உங்கள் பதிவுலகின் அறிமுகம் கிடைத்தது. நான் முதலாய் படித்தது, குற்றால சாரல் அனுபவத்தை நீங்கள் எழுதியது தான், அதற்கு பதிலாய் என் அனுபவத்தையும் எழுதியிருந்தேன் முதலில், உங்களிடம் இருந்து ஒரு acknowledgement கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். பதிவுலகத்தில் உலவும் எல்லோருமே பகிர்வுக்கு இனை கிடைக்காமல், உள் நுழைந்தவர்கள் தான் என்று நினைக்கிறேன். எனக்கும் நேரில் பேசவோ பகரவோ, ஆட்கள் போதுமான ஆட்கள் இருக்கும் பட்சத்தில், பதிவுலகத்திற்குள் வந்திருப்பேனா என்பது சந்தேகமே..
எனக்கு ஒரு கேள்வி உண்டு, பதிவுலகத்தின் பயனால் எழுத்தாளர்களைச் சென்றடைய முடிகிறது என்பது நம்மை ஒரு வட்டத்துக்குள் சிக்க வைத்து விடுகிறது, எல்லா படைப்புகளையும் படைப்பாளியுடன் பொருத்தி பார்க்கும் ஒரு மனோநிலை வந்து விடுகிறது எனக்கு. வாசிப்பதற்குண்டான தகுதிகள் படைப்பை விட படைப்பாளியை சார்ந்ததாய் மாறி விடுகிறது எனக்கு.
இது எல்லா கலை வடிவங்களுக்கும் பொருந்தி விடுகிறதாக தோன்றுகிறது. படைப்பாளிக்கும், படிப்பவனுக்கும் உண்டான தொடர்பு நிலை படைப்பு மாத்திரமே என்பது என்னுடைய எண்ணம் மாத்திரமே..
உங்களுடைய புக்ககபகிர்வுகளைப் படிக்கும் போது எல்லாவற்றிலுமே ஒரு பாராட்டு அங்கம் மட்டுமே இருப்பதாகப் படுகிறது, இன்னும் கொஞ்சம் திறனாய்வாய் இருந்தால் சிலாக்கியம்.

வாழ்த்துக்கள்.

ராகவன்

லேகா said...

@ RVC

பின்னூட்டத்திற்கு நன்றி.

இதில் பயம் கொள்ள எதுவும் இல்லை..:-))

வாழ்த்துக்களுக்கு நன்றி.

லேகா said...

@ கிருஷ்ணமூர்த்தி

அம்மா வா??!! சார்,நான் ரொம்ப சின்ன பொண்ணு ;-)

//இந்த மின்வெளியில்,மின்னெழுத்துக்களில், முகம் தெரியாதவர்தான் என்றாலும் கூட, தன்னைப்போலவே ஒத்த ரசனை, வாசிப்பு அனுபவம் இருப்பவர்களைக் கண்டுகொள்வதில், அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்,
ஒரு சுகானுபவமே இருக்கிறது //

அதே தான்!!

பகிர்தலுக்கு நன்றி.

லேகா said...

நன்றி ராம்ஜி..

லேகா said...

நன்றி தியா

லேகா said...

@ராகவன்,

மன்னிக்கவும் ராகவன்."குற்றால சாரல்" கட்டுரைக்கு உங்களின் பின்னூட்டத்திற்கு பதில் அளித்து விட்டேன்.

//பதிவுலகத்தில் உலவும் எல்லோருமே பகிர்வுக்கு இனை கிடைக்காமல், உள் நுழைந்தவர்கள் தான் என்று நினைக்கிறேன்//

உண்மை தான்.இன்றும் என் அலுவலக நண்பர்களிடத்தில் இவ்வலைத்தளம் குறித்து பகிர்ந்ததில்லை..ஏதோ வேற்று கிரகவாசி போல பார்ப்பார்கள் என்னை.:-))
ஹா..ஹா..ஜஸ்ட் இக்னோர்.பேசவும்,விவாதிக்கவும் என்னாகான நண்பர்கள் இங்கே உண்டு..

மேலும் நீங்கள் குறிப்பிட்டு உள்ளது போல புத்தகங்கள் குறித்த எனது பதிவுகள் யாவும் பாராட்டு அங்கமாகவே உள்ளது என்பது உண்மை தான்.உங்களுக்கு ஒன்று தெரியுமா?..இங்கே நான் பதிவு செய்துள்ள புத்தகங்களை காட்டிலும் பதிவு செய்யாதவை அதிகம்.எதை படிக்கலாம் என்பதை மட்டுமே கூறுகிறேன்,எதிர் கருத்துக்கள் கூறி யார் மனதையும் புண்படுத்த விருப்பம் இல்லை.

சில புத்தகங்கள் உச்சகட்ட எரிச்சல் மூட்டுவதாய் இருக்கும்..அதை குறித்து நண்பர்களோடு தனி மடலில் உரையாடுவதொடு சரி..

KARTHIK said...

தொடர்ந்து கலக்குங்க.
வாழ்துக்கள்.

சரி நீங்க ஏன் யாரையும் கூப்பிடல :-))

லேகா said...

நன்றி செய்யது..

என்னிடம் உள்ள கொத்தை பருத்தி மற்றும் கடல் புறத்தில் பதிப்புகள் இரண்டுமே 80களில் அப்பா வாங்கியது.தற்சமயம் யார் மறு பதிப்பை வெளியிட்டுள்ளார்கள் என தெரியவில்லை.

வண்ணநிலவனின் "கடல் புறத்தில்" நாவலை,கிழக்கு பதிப்பகத்தில் பார்த்த ஞாபகம்.

குப்பன்.யாஹூ said...

KIAZAKKU PADHIPPAKAGM HAS KADAL PURAA.

லேகா said...

கார்த்திக்,

நன்றி.

ம்ம்.....நீங்களே எழுதுங்களேன் பதிவுலக அறிமுகம் மற்றும் அனுபவங்கள் குறித்து :-))

லேகா said...

@ ராம்ஜி

சாண்டில்யனின் "கடல் புறா" வா நீங்கள் குறிப்பிடுவது.

சில மாதங்களுக்கு முன் கிழக்கு பதிப்பகம் அலுவலகம் கீழ் உள்ள அவர்களின் புத்தக கடையில் வண்ணநிலவனின் "கடல் புறத்தில்" பார்த்த ஞாபகம்.

Bee'morgan said...

ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க..

பதிவுலகில் தொடர்ந்து இயங்க வாழ்த்துகள்.. :)

லேகா said...

@Bee'morgan

வாழ்த்துக்களுக்கு நன்றி

அ.மு.செய்யது said...

லேகா..

கடல்புரத்தில் இன்று என் கைக்கு வந்து விட்டது.

கிழக்கு பதிப்பக வெளியீடு தான்.நான் பைத்தியக்காரன் அவர்கள் சொன்ன நியூ புக் லேண்ட் மூலமாக சொல்லியிருந்தேன்.

நியூ புக் லேண்டில் அனைத்து பதிப்பக வெளியீடுகளும் கிடைக்கின்றன.கி.ரா வின் கதைகளும் கிடைத்து விட்டது.
கொத்தைப் பருத்தி கிடைக்க வில்லை.

Unknown said...

Hi Leka, This is the first time im reading your blog, intrsting ... The first thing is, i wasnt aware of this blog for these many years (i didnt mean i knew all the blogs in net, bt still im your college mate.. it makes me wried)... im nt sure wen u strtd this .. Bt hats off to you .. may be you dont want to share this to us .. bt i wud like to do ... CONGRATZ LEKA.. Thanks Joe

butterfly Surya said...

வாழ்த்துகள். வலையுலகிற்கே திருஷ்டி பட்டது போல் இந்த வாரம் சில நிக்ழ்வுகள் (ஜ்யோ தாக்குதல்)

ஆனாலும் வலையுலகம் அலாதியான நட்பு பாலம். மீண்டும் கல்லூரி வாழ்க்கை போலவும் ஆனால் முகம் தெரியாத அதை விட ஆழமான நட்பு உள்ளங்கள். உடனடி உதவி.

நிறைய எழுதுங்கள்.

நட்பையும் அன்பையும் மட்டுமே பெருக்குவோம். வாசித்து மகிழ்வோம்.

வால்பையன் said...

// கார்த்திக் said...
தொடர்ந்து கலக்குங்க.
வாழ்துக்கள்.
சரி நீங்க ஏன் யாரையும் கூப்பிடல //

கூப்பிட்டா எழுதிட்டு தான் மறுவேலை பாப்பிங்களாக்கும்!

லேகா, இதுக்காகவே இந்த தொடருல எங்க பாஸை மாட்டிவிடுங்க!