Friday, November 14, 2014

சுமித்ரா குறித்து..

என் சேமிப்பிற்காக ஜெமோவின்  தளத்தில் யாழிசையில் வெளியான பதிவைக் குறித்த இக்கட்டுரையை  இங்கு பதிவு செய்கிறேன்..

http://www.jeyamohan.in/?p=54108

Thursday, November 6, 2014

Fandry - யுகமாற்றதிற்கான கதை (மராத்தி)


கீழ்க்கண்ட சுகிர்தராணியின் கவிதையை முதல் முறை வாசித்த பொழுது எனக்கு கன்னட எழுத்தாளர் மொகள்ளி கணேஷின் 'காளி' சிறுகதையின் ஞாபகம் வந்தது.சுகிர்தாவின் கவிதை, இளவயதில் தலித் அடையாளத்தினால் அனுபவித்த மன வேதனையை உள்ளபடியே நமக்குச் சொல்வது.

கிட்டத்தட்ட இதே போன்றதொரு தலித் சிறுவனின் மனநிலையை படம் பிடித்து காட்டும் கதை கணேஷனுடையது.இவ்விரு இலக்கியங்களும் பகிரும் யுகம் யுகமாக தீராத ரணத்தை நாகராஜ் மஞ்சுளேவின் FANDRY திரைப்படமும் பேசுகிறது.

"செத்துப்போன மாட்டை
தோலுரிக்கும் போது
காகம் விரட்டுவேன்
வெகு நேரம் நின்று வாங்கிய
ஊர் சோற்றைத்தின்று விட்டு
சுடு சோறென பெருமை பேசுவேன்
தப்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் முறைத்து கடந்து விடுவேன்
அப்பாவின் தொழிலில்ஆண்டு வருமானம்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்
தோழிகளற்ற
பின் வரிசயிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்
இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்றுசொல்லி விடுகிறேன்
பறச்சி என்று"
-சுகிர்தராணி


விடலை பருவத்திற்கே உரிய ஆசைகளும்,கனவுகளும் கொண்ட தலித் இளைஞன், தீண்டாமைக் கொடுமையால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் மனவேதனை அடைவதை முடிந்த வரை எதார்த்த மொழியில் பேசுகிறது இப்படம்.நாயகன் ஜாப்யா பன்றி மேய்க்கும் குடும்பத்தைச் சேர்ந்தவன்.பள்ளி மாணவன்,பகுதி நேரமாக சைக்கிளில் சென்று ஐஸ் விற்கிறான்.ஏழ்மையின் கோர முகம் ஒரு புறமென்றால் அதை விழுங்கிடும் தாழ்ந்த ஜாதி என்கிற வேற்றுமை மறுபுறம்.அவ்வூரின் பிற இளைஞர்களைப் போல அவனால் இயல்பாக நடமாட முடியவில்லை.ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஜாதி குறுக்கே புகுந்து அவனை கூனி குறுகிப் போகச் செய்கிறது.ஆதிக்க ஜாதி இளைஞர்களின் கேலி,கிண்டல்,மிரட்டல்களுக்கு மத்தியில் பயந்தே அவன் தன காரியங்களை தொடர வேண்டியிருக்கு.பள்ளியில் மட்டுமே அவன் சற்று ஆசுவாசம் கொள்கிறான்.தீண்டாமை வேர் விடாத இடம் அது மட்டுமே.சாணக்யாவாக நடித்துள்ள இயக்குனர் நாக்ராஜின் கதாபாத்திரம் முக்கியமானது.சாணக்யாவின் சைக்கிள் கடையில் ஜாதி வேற்றுமைகளுக்கு இடமில்லை.மேலும் அவன் ஜாப்யாவிடம் மிகுந்த அன்போடு பழகுகிறான்.தயக்கங்கள் ஏதுமில்லாமல ஜாப்யா கால் வைக்கும் இடம் சாணக்யாவின் கடை மட்டுமே.

ஜாப்யாவிற்கு உடன் படிக்கும் ஷாலுவின் மீதொரு காதல் அல்லது அந்த வயதிற்கே உரிய ஈர்ப்பு.முடிந்தவரை தன அடையாளங்களை அவள் முன்னே மறைத்துக் கொள்ளவே விரும்புகிறான்.அவ்வூரின் திருவிழா கொண்டாட்ட காட்சிகள்,நிதர்சனத்தை விளக்கிட போதுமானவை.புது ஆடை அணிந்து நண்பனோடு உற்சாகமாக வளம் வரும் ஜாப்யா,சாமி ஊர்வலத்தில் மேள தாளத்திற்கு சாணக்யாவோடு சேர்ந்து துள்ளாட்டம் போடுகிறான். சாணக்யாவின் தோள் மீதமர்ந்து உற்சாக கொண்டாட்டத்தோடு தூரத்தில் நிற்கும் ஷாலுவை இவன் பெருமிதத்தோடு பார்க்கும் நிமிடங்கள் மிகச் சில நொடிகளில் கரைந்து போவது ..வேதனை.படத்தில் வரும் அக்காட்சியை நேரில் கண்ட வகையில் சகித்துக் கொள்ள இயலாதஅவ்வலியின் தீவிரம் புரிந்தது.


திருவிழா காட்சியைப் போலவே இறுதிக் காட்சியும் நீளமானது,மேலும் அர்த்தம் மிகுந்தது. இதுவரையிலான அவனது வேதனைகள் அத்தனைக்கும் சிகரம் வைத்தது போலொரு நிகழ்வு.உண்மையில் ஜாப்யாவும்,அவன் குடும்பமும் அக்காட்சியில் துரத்துவது பன்றிகளை அல்ல,தலைமுறை தலைமுறையாய் அவர்களை அடக்கி வைத்திருக்கும் ஆதிக்க ஜாதியின் அசிங்கங்களை.இறுதிக் காட்சியில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்த அம்பேத்கர் உட்பட பல தலைவர்களின் புகைப்படங்களை கடந்து ஜாப்யாவின் குடும்பம் செல்கிறது.பேருண்மையை உரத்துச் சொல்லும் காட்சியது.

ஒவ்வொரு காட்சியிலும் இயக்குனர் நமக்கொரு விஷயம் சொல்லுகிறார்.அது ஏழை குடும்பத்தின் கல்யாண ஏற்பாடுகள்,வசதியற்ற சிறுவர்களின் பொழுதுபோக்குகள்,சின்ன சின்ன காரியங்களின் மீதான அவர்களின் ஆச்சர்யங்கள் என நீள்கிறது.இந்தத் திரைப்படம் குறியீடுகள் அதிகமின்றி பட்டவர்த்தனமாக ஜாதிய ஒடுக்குமுறையை பேசுகிறது.

சிறுவர் துவங்கி பெரியவர் வரை அவர்கள் அனுபவிக்கும் அவமானம் எவருக்கும் நிகழக் கூடாதது.ஒடுக்கப்படும் சமூகத்திற்கான எழுச்சிக் குரல் இத்திரைக்காவியம். உண்மையில் இப்படம் அடுத்த தலைமுறையினருக்கானது.இந்த அசாதாரணமான திரைப்படத்தை சாத்தியமாக்கிய இயக்குனர் நாக்ராஜின் கரங்களை பற்றி வாழ்த்து சொல்லிட விருப்பம்...!

சினிமா என்பது பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்ல,அதிலிருந்து நாம் பெற்றுக் கொள்ள, நம்மை பக்குவபடுத்திக் கொள்ள எத்தனையோ விஷயங்கள் உண்டு என்பதற்கு Fandry ஆகச் சிறந்த உதாரணம்.முடிந்தவரை நண்பர்களுக்கு இந்தப் படத்தை பரிந்துரையுங்கள்.இப்படத்தை புரிந்து கொள்ள மொழி ஒரு தடையில்லை.

{மொகள்ளி கணேஷின் சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு : பாறைகள் -இந்தியச் சிறுகதைகள் (சந்தியா வெளியீடு) }

Monday, August 11, 2014

மிலேச்சன்களின் உலகம்...Uzak (துருக்கி)


எதார்த்தத்தை மீறிய ஆச்சர்யங்கள் துருக்கி இயக்குனர் சிலானின் (Nuril Bilge Ceylan) படைப்புகள். அதிகமாக இவர் படங்களை பார்க்கப் பார்க்க இன்னும் அதிகமாக சினிமாவை நேசிக்கத் துவங்குகிறேன்.ஆண் மன சலனங்களை இவரைப் போல வேர் வரை ஊடுருவிச் சென்று கதை சொன்னவர் வேறு யாரும் உண்டா எனத் தெரியவில்லை.சிலானின் கதையுலகத்தில் பெண்களும் உண்டு. ஆனால் பிரதானமாக முன்னிறுத்தப்படுவதோ ஆண்களே. துரோகம் என்ற ஒற்றைச் சொல்லை சுற்றி கட்டமைக்கப்படுகின்றன சிலானின் கதையுலகம். அதன் நீட்சியாய் தொடரும் தடுமாற்றங்கள்,குற்ற உணர்வுகள், மன்னிப்புகள் இவற்றையும் காண்பிக்க தவறுவதில்லை இவர்.

Climates,Once Up On A Time In Anatolia வை தொடர்ந்து பார்த்த இவரின் Distant(Uza) மற்றுமொரு காவியம்.

மஹ்மத் - நடுத்தர வயதினன், படித்தவன்,ரசனைக்காரன், விவாகரத்து பெற்றவன்,புகைப்பட கலைஞன்,தனிமை விரும்பி,நாகரீகம் பேணுபவன்,பணக்காரன்,ஸ்த்ரி லோலன்,பந்த பாசங்கள் அற்றவன்;யூசூப் - இளைஞன்,ஏழை,கிராமத்தான்,வேலை தேடுபவன், பொறுமைசாலி, உறவுகளை நேசிப்பவன். இவ்விருவரும் ஒரே வீட்டில் தங்க நேரிடும் நாட்களின் விவரிப்புகள் தான் Distant(Uzak).

இணக்கமாய் தொடரும் நாட்கள்..மெல்ல மெல்ல மஹமெத்தின் அழுக்குக்கான மனநிலையையும்,பாவப்பட்ட யூசுப்பின் பரிதாப நிலையையும் நமக்கு விளக்கிச் செல்பவை.படித்த படிப்பும்,கொண்ட ரசனையும் மெஹ்மத் அந்த ஏழை இளைஞன் மீது காட்டும் வன்மத்தில் அர்த்தமற்று போகின்றன. பெருவாழ்விற்கு சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் குறைந்த பட்ச சிநேகம் போதும் என்பதை உரத்துச் சொல்லும் கதை.இவ்விருவரும் தனிமையை செலவிடும் காட்சிகள் முக்கியமானவை.வேலை ஏதும் கிடைக்காத சூழலில்,பனி போர்த்திய சாலையில் மகிழ்ச்சியாய் சுற்றித் திரியும் ஜோடிகளை யூசூப் பார்த்துக் கொண்டு நிற்பதும்,செய்வதறியாமல் எதிர்படும் பெண்ணொருத்தியை காரணமேயில்லாமல் துரத்துவதும்..பரிதாபம்!

மஹ்மூதும்,யூசுப்பும் அனடோலியா பகுதிக்கு புகைப்படம் எடுக்க செல்லும் காட்சிகள் அவர்கள் இருவரும் பயணிக்கும் திசைகளை நமக்கு அறிவிப்பவை.குறைந்த பட்சம் யூசுபிற்கு அவன் தாய் குறித்த அக்கறை உண்டு.அவளுக்காக அவன் சிரமங்கள் ஏற்க துணிகிறான்.உறவுகளின் பிடிமானம் ஏதுமில்லாமல் ரசனை சார்த்து இயங்கும் மஹ்மத்,யூசுப்பின் முன் தாழ்ந்து போகிறான்.பனிக்காலத்தில் தொடங்கும் கதை வசந்த காலத்தில் முடிவுறுகிறது.பனி உருகி ஆவியாகிப் போனது போல மஹ்மூத்தின் சுற்றி இருந்தவர்கள் விலகிப் போகிறார்கள்.அவன் அது குறித்து அலட்டிக் கொள்பவனும் இல்லை.அவன் அப்படித்தான்.

சிலான் மாபெரும் புகைப்படக்காரர் என்பது காட்சிக்கு காட்சி வெளிப்படும் அழகில் தெரிகிறது.இஸ்தான்புல் நகரை நேரில் சென்று பார்த்துவிட ஆசையை தூண்டும் ஒளிப்பதிவு.ரசனைகளில் மூழ்கித் திளைக்கும் மனிதர்கள் உண்மையில் மனிதர்களை விட்டு விலகியே இருக்கிறார்கள். அவர்களின் உலகத்தில் புதியவர்களின் வரவும்,கடந்த காலத்தின் நினைவுகளும் தொந்தரவிற்குரியவை.மஹ்மூத்தின் உலகத்தைப் போல...

Sunday, August 3, 2014

ரேமண்ட் கார்வர் சிறுகதைகள்...

அமெரிக்க சிறுகதையாசிரியர் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள், உறவுகளுக்குள் நிகழும் அன்றாட காட்சிகளின் எதார்த்த விவரிப்புகள். பெரும்பாலான கதைகள் கணவன் - மனைவிக்கிடையேயான நிகழ்வுகளின் பதிவு.தினசரி வாழ்வில் சிறியதும் பெரியதுமாய் எத்தனை விதமான சிக்கல்கள்.நாம் நினைத்தே பாராத விஷயங்களை எடுத்தாளுகின்றன ரேமன்ட்டின் கதைகள்.இவர் கதையுலகத்து பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள்,பதற்றம் நிறைந்தவர்கள்,நினைத்தால் உருகி அழுதிட கூடியவர்கள்.ஆண்களோ பொழுதுபோக்குகளில் விருப்பம் உள்ளவர்கள், குடிகாரர்கள்,குழப்பம் நிறைந்தவர்கள்.இருவேறு திசையில் பயணிக்கும் இவர்கள் இணைந்த வாழ்வு உண்மையில் சுவாரஸ்யமானதே. காதலிப்பவர்கள்,திருமணம் ஆனவர்கள்,விவாகரத்து பெற்றவர்கள்,பெறப் போகிறவர்கள் என....

"ஒரு சிறிய நல்ல காரியம்" - இத்தொகுப்பில் மிகப் பிடித்த கதை.ஒரு எதிர்பாராத விபத்தும் அதன் தொடர்ச்சியான மருத்துவமனை நாட்களும் கணவன் மனைவியிடையே உண்டு பண்ணும் உணர்வுகளைத் தாண்டிய நெருக்கம் குறித்தது.நோயுற்றவர் குணமாகும் வரையிலான மருத்துவமனை தங்கலும்,அங்கு செலவிடப்படும் இரவுகளும் அமானுஷ்யம் நிறைந்தவை. தேறி வருவது மகனாக இருக்கும் பட்சத்தில்,அந்த நிலை இன்னும் கொடுமை. நம்பிக்கை வேர் விட்டு படர்ந்திருக்கும் இடம் மருத்துவமனைகள். அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்களில் வெளிப்படும் உண்மை இது.காட்சிகளின் விவரிப்பில் அவர்களின் முக பாவங்களை கூட கற்பனை செய்யமுடிகிறது.மகனை குறித்த சோகத்தில் உள்ள இவர்களுக்கும் ஒரு பேக்கரி கடைக்காரனுக்குமான உரையாடல் சொல்லும்..வாழ்க்கை தத்துவத்தை.


"எங்கிருந்து அழைக்கிறேன் நான்" - குடிமறதி விடுதியில் சந்தித்துக்கொள்ளும் இரு மனிதர்களின் கதை.அவர்களின் உரையாடல் வழி நமக்கு அறிமுகமாகும் பெண்கள்,இவர்களை சகித்துக் கொண்ட காதலிகள்.புகைபோக்கி சுத்தம் செய்யும் பெண்ணை காதலித்து மணந்து கொண்ட கதையொன்று அழகானது. பெரும் சண்டையோடு மோசமாக முடிவுறும் காதலும்,ஒரு சமயம் கவித்துவமாகவே தொடங்கியிருக்க வேண்டும் என்பதற்கோர் உதாரணம் இச்சிறுகதை.


'ஜூரம்' - விட்டோரியோ டிசிகாவின் 'Children are watching Us' திரைப்படத்தை ஒரு நிமிடம் நினைவூட்டிய சிறுகதை.பிள்ளைகளை விட்டுவிட்டு வேறொருவனுடன் செல்லும் தாய்.அவர்களை பராமரிக்க ஆள் கிடைக்காமல் கஷ்டப்படும் தந்தை.அவர்களுக்கு உதவ வரும் மூதாட்டி எனத் தொடரும் கதையில் படித்த நாயகனும் நாயகியும் ஓவிய கலையின் நுட்பத்தை அறிந்த அளவிற்கு வாழ்வின் நுணுக்கங்களை அறியாமல் உள்ளனர்.வீட்டுக்கு வேலைக்கு வரும் மூதாட்டியும் அவள் கணவனும் வாழ்வை திட்டமிட்டு வெகு அழகாக எடுத்துச் செல்கின்றனர். கல்வியறிவு, ரசனை,இவற்றைத் தாண்டி வேறு பல விஷயங்கள் இல்லற வாழ்விற்கு தேவை என்பது எவ்வளவு உண்மை.

கதீட்ரல் - கண் பார்வையற்ற மனைவியின் தோழனோடு ஒருவன் கொள்ளும் நட்பின் தொடக்க பொழுதுகள்.கண்பார்வையற்றவனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதறியாமல் சலித்துக் கொள்ளும் இவன், அவன் வருகைக்கு பிறகு மெல்ல மெல்ல அவன் உலகிற்குள் நுழைகிறான்.அவர்கள் இருவரும் சேர்ந்து வரையும் தேவாலைய படத்தின் நெளிவுசுளிவுகளை போன்றதே அவர்கள் கொள்ளும் நட்பும்.

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு - ஒரு கொடூர கொலை. கொலையான பெண்ணின் பிணத்தை முதலில் கண்டெடுக்கும் மனிதனின் மனநிலை தொடரும் நாட்களில் எவ்வாறிருக்கும்? அவனைக் காட்டிலும் அவன் மனைவி அதிக குற்ற உணர்ச்சி கொள்கிறாள்.பல நேரம் பயணப்பட்டு அந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கு கொள்கிறாள். இறந்தவள் குறித்த சின்ன சின்ன விஷயங்களையும் கேட்டறிகிறாள். இவளுக்கும் அவளுக்குமான பிணைப்பு பெண் என்பதைத் தாண்டி வேறொரு புள்ளியில் இணைகிறது..

சின்னஞ்சிறு வேலை - ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவின் மருத்துவமனை நாட்களோடு,அவரின் இறுதி நிமிடங்களையும் கோர்வையாக நம் முன் வைக்கிறது இக்கதை.நாம் இன்றும் போற்றிக் கொண்டாடும் ஒரு மாபெரும் இலக்கிய ஆளுமையின் மரணத்தை அருகில் இருந்து பார்த்தது போலொரு உணர்வு.செகாவை குறித்த இந்தக் கதையில் டால்ஸ்டாயும்,கார்க்கியும் வருகிறார்கள்.செகாவின் கதைகள் உங்கள் மனதிற்கு நெருக்கமானவை என்றால் இக்கதை நிச்சயம் கண்ணீர் வர வழைக்கும்.

அடுத்த வீட்டுக்காரர்கள்,பெட்டிகள்,அவர்கள் யாரும்உன்னுடைய கணவன் இல்லை என நீளும் பட்டியலில் ஒரு கதையைக் கூட வேண்டாம் என ஒதுக்க முடியாதபடி அத்தனையும் பொக்கிஷங்கள்.மனித மன சலனங்களை ஊடுருவிச் செல்லும் கதைகள் இவை.ஒரு சில கதைகளை தவிர்த்து மொழிபெயர்ப்பும் சரியாகவே அமைந்துள்ளது.

மகத்தான வாசிப்பனுபவம்!


-வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு-
வெளியீடு - காலச்சுவடு

Wednesday, July 2, 2014

கமலாதாசின் "சந்தன மரங்கள்"

கமலாதாஸ் கதைகளோ,கவிதைகளோ இதற்கு முன் அறிமுகமில்லை. பாலச்சந்திரன் சுள்ளிகாடு தனது சுயசரிதை நூலான சிதம்பர ரகசியத்தில் கமலாதாஸ் உடனான சந்திப்பை குறித்து எழுதி இருப்பார்.அந்தக் கட்டுரை இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் குறித்து இல்லாது கமலாதாசின் பிரியமும்,அக்கறையும் கொண்ட தயாள குணத்தை குறித்து பேசுவது. அதிலிருந்து அவரின் எழுத்துக்களை தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும்.மிகச்சமீபத்தில் எதிர்பாராத காரணங்களினால் நான் வேண்டிய புத்தகத்திற்கு பதில் "சந்தன மரங்கள்" கை வந்து சேர்ந்தது.மகிழ்ச்சியான ஏமாற்றம்!

முன்னுரையில் ஜெமோ குறிப்பிட்டுள்ளதைப் போல கமலாதாசின் உலகத்திற்குள் நுழைய இந்தப் புத்தகம் சிறுவாசல்.நாம் கண் பொத்தி,வாய் மூடி பகிர்ந்து கொள்ளும் ரகசிய மனிதர்கள் அவர் கதை மாந்தர்கள்.முழுக்க முழுக்க பெண் மன உளைச்சல்களை அணுகிப் பேசும் கதைகள்.கமலாதாசின் பெண்கள் சபிக்கப்பட்டவர்கள்,பிரியமானவர்களால் துரத்தியடிக்கப்பட்டவர்கள்,அன்பிற்கு ஏங்குபவர்கள்,மனதளவில் வலிமையற்றவர்கள்,வீட்டை மறந்து வேலையில் மூழ்கி கிடப்பவர்கள் இன்னும் இன்னும்..இதில் ஏதோ ஒன்றில் எந்தப் பெண்ணும் தன்னை சுலபமாக பொருத்திக் கொள்ள இயலும்.ஒரு நாவலின் நேர்த்தி கொண்டது 'ருக்மணிக்கு ஒரு பொம்மை குழந்தை' கதை."Arappatta kettiya gramathil" என்றொரு பத்மராஜனின் படம்.பரத்தையர் கூடத்தில் மாட்டிக் கொண்டு தப்பிக்க போராடும் பெண்ணிற்கு உதவும் நண்பர்களின் கதை.ஏனோ இந்தக் கதை வாசிக்கையில் அப்படத்தின் ஞாபகம்.அங்கு நிகழும் காதலும்,வன்முறையும்,மரணமும் - மாற்றங்கள் இன்றி தொடர்பவை.ஒரு சிறுமியின் வருகையும், கருகலைப்பினால் நிகழும் மரணமும்,அங்கிருந்து தப்பிப்பிழைத்து பின் மீண்டும் வந்து சேரும் ஒருத்தியின் காதல் கதையும் பதரவைப்பவை.இளையவள்,மூத்தவள் என்கிற பாகுபாடின்றி அங்குள்ள பெண்கள்களின் மனவோட்டத்தை, கனவுகளை, நிராசைகளை நுட்பமாய் விவரிக்கும் கதையிது.அழுதாலும், புரண்டாலும் வாழ்க்கையை அங்கு தான் வாழ்ந்து தீர்க்க வேண்டும்.பத்மராஜனின் படத்தில் வருவது போல காப்பாற்றிச் செல்ல தேவகுமாரன்கள் கிட்டாத புறக்கணிக்கப்பட்ட தேவதைகள் இவர்கள்.

'சந்தன மரங்கள்', இருளும் - வெளிச்சமுமான இரண்டு தோழிகளின் கதை.பெண்ணிய கதைகள் எப்போதும் பெண்களின் சிறப்பை மட்டும் பேசுபவை அல்ல என்பதற்கோர் உதாரணம் இக்கதை.எண்ணங்களில் வன்மமும்,குரோதமும் மிகுந்து வார்த்தைகளில் கத்தியின் கூர்மையை கொண்டவள் கல்யாணிகுட்டி.தாழ்வுமனப்பான்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டவள்.பழிவாங்க காதலை ஆயுதமாக பயன்படுத்தவும் துணிபவள். கல்யாணி குட்டி காதல் கொள்வது தனது தோழி ஷீலாவோடு.ஆம் அவர்கள் காதலர்கள்.லெஸ்பியன் உறவு சார்ந்த கதையொன்றை வாசிப்பது இதுவே முதல் முறை.கதை முழுக்க ஷீலா நமக்கு சொல்வது போல வருகிறது.கல்யாணிகுட்டி மீதான சிநேகமும்,நெருக்கடியான திருமண வாழ்வும்,விலகிய பொழுதும் மீண்டும் மீண்டும் வாட்டும் நினைவுகளும்....
இரண்டு பெண்களுக்கிடையேயான அற்புதமான காதல் கதை.

இவை தவிர்த்து, கூடா காதல் என உலகம் வரையறுக்கும் ஒரு பெண்ணின் நேசத்தை பேசும் 'மாஹிம் வீடு',இரவு பகல் பாராது உழைத்து, தன் தொழிலை நேசிக்கும் பெண் மருத்துவருக்கு நேரும் 'துரோகம்' குறித்தான கதையும் குறிப்பிடத்தக்கவை.தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கொண்டு கமலாதாஸ் புனைந்துள்ள 'பறவையின் வாசனையும்' சிறப்பான கதையே.கண்ணுக்கு புலப்படாத சங்கிலியால் பிணைக்கப்பட்டு உறவுகளை விட்டு வெளியேற முடியாத எல்லாப் பெண்களுக்குமான கதைகள் இவை.கமலாதாசின் படைப்புகளை தேடி வாசிக்க இந்தத் தொகுப்பின் அறிமுகம் போதுமானது.


வெளியீடு - உயிர்மை
தமிழில் - நிர்மால்யா

Tuesday, June 3, 2014

KG ஜார்ஜ் மற்றும் பத்மராஜனின் கதையுலகம்

மிகச் சமீபத்தில் இவ்விரு மலையாள இயக்குனர்களின் படங்கள் அறிமுகம் ஆகின.இது வரை தவறவிட்டதற்கு வருந்தும்படியான படங்கள் இவை.

கே ஜி ஜார்ஜின் யவனிகா (1982) திரைப்படம் நேர்த்தியான த்ரில்லர்.இவரின் மற்றொரு படமான லேகேயுட மரணம் ஒரு ப்ளாஷ் பேக் (1983) தந்த அனுபவத்தில் இருந்து மீண்டு வருவதற்கும் இந்தப் படம்.

எளிய மனிதர்கள்,அவர்களை சுற்றிய உலகம்,தினசரி வாழ்வின் சிடுக்குகள் இவற்றை முடிந்த வரை விஸ்தாரமாய் பேசிச் செல்கின்றன இப்படங்கள். யவனிகா,நாடக கம்பெனி பின்னணியில் நிகழும் கதை.நாம் அறிந்திராத உலகம் இப்படித் தான் இருக்கும் என நம்பும்படியான காட்சியமைப்புகள். மேலும் திலகன்,பரத்கோபி, மம்மூட்டி, ஜகபதி,நெடுமுடி வேணு என மொத்த ராட்சச கூடமும் ஓரிடத்தில்.முரடன் - குடிகாரன் - யாருக்கும் கட்டுப்படாத ஐயப்பன் என்னும் கதாபாத்திரத்தில் பரத் கோபி.இவரின் அறிமுக காட்சி ஒன்று போதும் அசாத்திய நடிகன் எனக் கூற.கொலையை துப்பறியும் சாதாரணக் கதை அல்ல இது,ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவர்கள் சார்ந்த நிகழ்வுகளையும் நுட்பமாய் விளக்கிச் செல்லும் திரைக்கதை முக்கியமானது.போலவே பின்னணி இசையும்.ஜார்ஜின் மற்றொரு படமான லேகேயுட மரணம் ஒரு ப்ளாஷ்பேக் (1983),ஒரு நடிகையின் கதை.உண்மையில் இப்படம் ஒரு ஆவணம்.இதற்கு பின்னணியாய் அமைந்த கதை குறித்து பேச விருப்பமில்லை. அவசியமுமில்லை.ஏனெனில் இக்கதை முழுக்க முழுக்க ஒரு நடிகையின் தொடக்க நாட்கள் தொடங்கி விரிவாய் பேசிச் செல்கிறது.ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நிகழ்வும் பதிவு செய்யப்பட்டது போல.நளினியின் நடிப்பு பெரிய ஆச்சர்யம்.இந்தளவு அவரை இதற்கு முன் ரசித்ததில்லை.கிராமத்து வெகுளிப் பெண்,நகர சாக்கடையில் மெல்ல மெல்ல அமிழ்ந்து போவதை கச்சிதமாய் தம் உடல்மொழியாலும், முகபாவனைகளாலும் வெளிக்கொணர்ந்துள்ளார்.நடிகைகள் குறித்து நமது நாளிதழ்கள் எழுதித் தீர்த்த கதைகளில் ஒன்றை மிக அருகில் சென்று பார்த்த உணர்வு.

குடிகாரர்கள்/ ஸ்த்ரீலோலர்களிடம் காதல் வேண்டி நிற்கும் பெண்கள். உறவுகளை விட்டு தப்பியோட முயலும் மனிதர்களென...பத்மராஜனின் கதையுலகம் தனித்துவமானதாய் இருக்கிறது.ரசித்து பார்த்த இவரின் படங்கள் இரண்டும் காதல் கதைகள்.காதல் என்றால் திஜாவின் கதைகளில் வரும் காதல்.அவர்கள் மட்டுமே உணர்ந்தறிந்த தெய்வீகம்.

பத்மராஜனின் தூவானதும்பிகள்(1987) லால்,பார்வதி,சுமலதா நடித்திருக்கும் முக்கோண காதல் கதை.கிளாரா என்னும் தேவதையாக சுமலதா. ஆரவாரமில்லாத அந்த அழகும்,நடிப்பும் அட்டகாசம்.இத்திரைப்படத்தில் மழையும் ஒரு கதாபாத்திரம்.கிளாராவின் வருகையை அறிவிக்கும் பெருமழைக் காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை!மீண்டும் மீண்டும் கேட்டு மயங்கிடச் செய்யும் "ஒன்னாம் ராகம் பாடி.." என்ற பாடலில் முகத்தில் கை வைத்து ஆச்சர்யமாய் பார்வதியைப் பார்த்துச் சிரிக்கும் லால்....அசல் நடிகன்!மீண்டும் கிடைக்க வாய்ப்பே இல்லாத காதல் கணங்கள்..நினைவின் ரணங்கள் என்பதைச முடிந்த வரை கவிதை மொழியில் சொல்லும் கதை.பத்மராஜனின் கதைகளை தேடி வாசிக்கவேண்டும் என்கிற ஆவலைத் தந்த படம் நமக்கு பார்க்காம் முந்திரி தோப்புகள்(1986).நினைவுகளை கிளறி விட்டு நம்மை மொத்தமாய் உள்ளிழுத்துக் கொள்ளும் படமிது.காதலர்களின் தேசம்..தேவதைகளின் தேசம்!சாலமன் என்னும் பெயர் கொண்ட நாயகர்கள் அன்பைத் தாங்கி வரும் தேவகுமாரர்கள் போல.ஆமெனில் பஹத்..இதில் லால்.வேதாகமத்தில் இருந்து மேற்கோள் காட்டப்படும் இவ்வரிகள். காதல்..காதல்..திகட்டச் செய்யும் காதல்.

Song Of Solomon 7:12 : "Let us rise early and go to the vineyards; Let us see whether the vine has budded And its blossoms have opened.And whether the pomegranates have bloomed. There I will give you my love"

இவ்வரிகளை மெய்ப்பிக்க அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் தான் கதை.கதையின் முடிவில் ஒரு திருப்பம் உண்டு,நிச்சயமாய் அது அதிர்ச்சி வைத்தியதிற்காய் வைக்கப்பட்டதில்லை.அவர்கள் காதலின் வலிமையை மீண்டுமொருமுறை அங்குள்ளவர்களுக்கு எடுத்துச்சொல்ல..

இரண்டு படங்களிலும் மிகப் பிடித்த பொதுவான விஷயங்கள் இரண்டு.ஒன்று காதல் மற்றொன்று லாலின் அசத்தல் நடிப்பு..One Devil Of An Actor!

--மேலே குறிப்பிட்டுள்ள படங்கள் யாவும்Youtube'ல் இருக்கின்றன--

Wednesday, February 26, 2014

INTO THE WILD (2007)

"I read somewhere... how important it is in life not necessarily to be strong, but to feel strong... to measure yourself at least once.” - Jon Krakauer, Into the WildI wish I were a Gypsy எனக் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அது சாத்தியமற்ற பெருங்கனவு என்பதையும் நன்கு அறிவேன்.

குடும்பம்,அலுவல்,தினசரி கடமைகள் என யாவற்றையும் துறந்து தேடல்,தேடல் என ஒரு இளைஞன் மேற்கொள்ளும் பயணங்களின் தொகுப்பு இத்திரைப்படம்.பயணங்கள் வழி அவன் சந்திக்கும் மனிதர்கள்,அவர்களோடு கூடிய உரையாடல்கள்,அவர்கள் அன்பில் தேங்கி நின்று விடாமல், விடைபெற்று தொடரும் அவனின் சாகச வாழ்க்கை...என் கனவை எவனோ வாழ்ந்து தீர்த்துள்ளான் என்கிற திருப்தி.இது உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு உருவாக்கப் பட்ட திரைப்படம்.இதுவே காட்சிகளுக்கு இன்னும் அழுத்தம் கூட்டுகின்றது.

வேரோடு முற்றிலும் தன்னை உறவுகளிடம் இருந்து துண்டித்துக் கொண்டு தேசாந்திரியாக அவன் மேற்கொள்ளும் பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்கள் யாவரும் அன்பைப் பற்றிக் கொண்டவர்கள்.அவர்களிடம் கேட்கவும்,பெறவும் ஏராள கதைகள் இருந்தன..மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் அவர்களிடமிருந்து புதுப்புது தொழில்களை கற்றுக் கொள்கிறான்."Career is the Invention of 20th Century' என்னும் அவனின் நிலைப்பாடு எத்தனை உண்மையானது. நிகழும் எல்லா சம்பவங்களுக்கும் தான் வாசித்த புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டிட அவனால் முடியும் என்கிறாள் அவன் சகோதரி.புத்தகப்பித்துகளுக்கு தெரியும் இதன் முழு அர்த்தம்.

மேலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவொன்று,அழுத்தமான வசனங்கள்.வாசிக்கும் புத்தகத்தில் மிகப் பிடித்த வரிகளை பென்சிலில் அடிக்கோடிட்டு கொண்டே வருவதை போல.. இப்படத்தின் வசனங்களை கவனமாய் குறித்துக் கொண்டேன். அத்தனையும் வாழ்க்கைப் பாடங்கள். பெற்றோர்களின் பொறுப்பு,மெய் வாழ்வின் தேடல்,Survival of the fittest என ஒன்றிற்கும் மேற்பட்ட படங்களில் தனித் தனியே சொல்லக் கூடிய விஷயங்களை திகட்டாமல்,நேர்த்தியாய் சொன்ன விதத்தில் இந்தப் படம் தனித்து தெரிகிறது.

பயணங்களும்,புத்தகங்களும் உங்களுக்கு பிடிக்குமாயின் இந்தத் திரைப்படம் உங்களுக்கானது..#MustWatch

Wednesday, February 12, 2014

அடூரின் எலிப்பத்தாயம் (1981)

கேளிக்கைகளும்,கொண்டாட்டங்களும் கொண்ட வாழ்க்கையை கனவிலும் கண்டிராத ஒரு குடும்பத்து மனிதர்களை குறித்த பதிவு.அதன் பொருட்டு அழுது,அரற்றி சோகத்தை பிழியும் திரைப்படம் இல்லை இது.மாறாக சூழ்நிலை கைதியாகிப் போன பெண்ணொருத்தியை மையமாகக் கொண்டு ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளை நுட்பமாய் விவரிக்கின்றது.

குடும்பத்தின் வீழ்ச்சியை சட்டை செய்யாத,தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள இயலாத உன்னி,கல்லூரி காலத்திற்கே உரிய கனவுகளோடு கற்பனை உலகில் மயங்கிக் கிடக்கும் ஸ்ரீதேவி, வீட்டுச் சுமையோடு,எந்நேரமும் அடுப்பங்கரையில் உழன்று கொண்டிருந்தாலும் மாறாத அன்போடு மற்ற இருவரையும் கவனித்துக் கொள்ளும் முதிர்கன்னி ராஜம்மா - இவர்களை சுற்றி நடக்கும் கதை.ராஜம்மாவாக வரும் சாரதாவின் நடிப்பு அசாத்தியம்.நேர்த்தியாக விவரிக்கப்படும் ராஜம்மாவின் பொழுதுகள் அவள் குறித்து அறிந்து கொள்ள போதுமானவை.நாலு பெண்ணுகள் திரைப்படத்தில் வரும் நந்திதாவின் கதாப்பாத்திரம் ராஜம்மாவின் சாயலை கொண்டதே.தன் திருமணத்தை தட்டிக் கழிக்கும் அண்ணன் உன்னியின் மீது அவளுக்கு எந்த வருத்தங்களும் இல்லை,வீட்டு வேலைகளில் உதவாது,அலங்கார மோகம் கொண்டு திரியும் ஸ்ரீதேவியின் மீதும் அவளுக்கு பிரியமே.

தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள மட்டுமே உன்னி தன் உறவுகளை பயன்படுத்திக் கொள்கின்றான். அவனிடமிருந்து பெறுவதற்கு எதுவுமில்லை.பிறர் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே ராஜம்மாவின் வேலை,பரஸ்பர அன்பை பகிர்ந்து கொள்ள அவளுக்கு எவருமில்லை.ஊரில் இருந்து தனித்துவிடப்பட்ட அப்பெரிய வீட்டில்,ஒட்டுதல் இல்லாது இயங்கும் மூவர்.

எந்தவித மாற்றங்களும் காணாமல் தொடரும் அவர்களின் நாட்கள் எதிர்பாராத நாளொன்றில் அஸ்தமிக்கத் தொடங்குகின்றது.அவர்கள் வீட்டிலேயே ஒரு பெரிய எலிப்பத்தாயம் உண்டு.ஒவ்வொரு முறை அதில் சிக்கும் எலியை ஸ்ரீதேவி தூரத்தில் உள்ள குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரில் விடுகிறாள்.உன்னிக்கும்,ராஜம்மாவிற்கும் தெரியாத பிணியில் இருந்து தப்பிக்கும் கலையை அவள் நன்கு அறிந்து வைத்திருக்கிறாள், பின்னாளில் அதுவே அவளை அவ்வீட்டை விட்டு தூரம் போக செய்கின்றது.தீராத நோயின் காரணமாய் ராஜம்மாவும் உருகுலைந்துபோக நேரிடுகிறது.ஸ்ரீ தேவியும்,ராஜம்மாவும் இல்லாது போன வீட்டில் உன்னி எலிப்பத்தாயதிற்குள் சிக்கிய எலியைப் போல செய்வதறியாது திகைந்து வீட்டிற்குள் ஓடி ஒழிவதாக படம் முடிகின்றது.

மழை எந்தவொரு சூழ்நிலைக்கும் கணம் கூட்ட கூடியது. இப்படத்தின் இறுதிக் காட்சிகள் யாவும் மழையின் பின்னணியில் நிகழ்கின்றன.இப்பட கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வண்ணத்தில் உடை அமைத்ததில் உள்ள குறியீட்டை அடூர் தன் நேர்காணல் ஒன்றில் விளக்கியுள்ளார்(நன்றி விக்கி).ராஜம்மாவின் நீல நிற ஆடைகள் அவளின் தனிமையை,உன்னதத் தன்மையை விளக்குவதாக சொல்லியுள்ளார்,Blue Is The Warmest Color அல்லவா

கொஞ்சம் பொறுமையை சோதித்தாலும் அடூரின் திரைப்படங்கள் தரும் நிறைவு அலாதியானது.தொடர்ந்து அவர் திரைப்படங்களை தேடிப் பார்க்க காரணமும் அதுவே.