Showing posts with label சிறுகதை தொகுப்பு. Show all posts
Showing posts with label சிறுகதை தொகுப்பு. Show all posts

Sunday, November 27, 2016

சாதத் ஹசன் மண்டோவின் இரண்டு சிறுகதைகள்

மண்டோவின் எழுத்து இதற்கு முன் அறிமுகமில்லை.உரையாடல்களில் நண்பர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு சிலாகிக்கும் பெயர். காலச்சுவடு வெளியீடான "மௌனப் பனி ரகசியப் பனி " மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுதியில் மண்டோவின் இரண்டு சிறுகதைகள் வாசிக்கக் கிடைத்தன. மண்டோவின் மீது பெருமதிப்பை ஏற்படுத்திய கதைகள் இவை. இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக் கால நிகழ்வுகளை மையப்படுத்திய இவ்விரண்டு கதைகளும் நிகழும் சூழலும்,இடமும் ஒன்றே. சுற்றி வளைத்து கொண்டிருக்காமல், இப்படியான போராட்ட சூழ்நிலையில் அப்பாவி குடும்பங்கள் சிதைவுறுவது இவ்விதமே என மாண்டோ சொல்லியிருக்கும் விதம் நம்மை அதிர்விற்குள்ளாக்குகிறது.

"மீளல்",கண்ணெதிரே மனைவி கொல்லப்பட்டதை கண்டவன் மிஞ்சியிருக்கும் மகளை போராட்ட பூமியில் தொலைத்து பின் கண்டடையும் இக்கதை நம்பிக்கை துரோகத்தின் மோசமான முகத்தை குறித்தது. வன்புணர்வுக்கு ஆளாகும் அச்சிறு பெண் சந்தித்தவை எதுவும் நமக்கு நேரடியாய் சொல்லப்படவில்லை.இருப்பினும் அந்த அசாதாரண சூழ்நிலையின் பதற்றமும்,இருண்மையும் நம்மை முழுவதுமாக ஆக்ரமித்துக் கொண்டு அவளுக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் வீரியத்தை உணரச்செய்கின்றன."உங்களின் மகளை எப்படியும் கண்டுபிடித்து தந்துவிடுவோம்.." என அந்த அப்பாவி தகப்பனுக்கு உறுதி அளித்த போராட்டகாரர்கள் அவனுக்கு இழைத்த துரோகம்,மலிந்த மனித மனங்களை அம்பலப்படுவதோடு பிரிவினையின் போது இத்தகைய கீழ் நிலைக்கு நம் மக்களை இட்டுச் சென்றது எதுவென்கிற கேள்வியையும் முன் வைக்கிறது.

"கடமை",ஹிந்து-இஸ்லாமியர் இடையேயான போராட்டம் அதன் உச்சத்தை எட்டி நகரே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில்,மரணத் தருவாயிலிருக்கும் வயதான நீதிபதி தன் பிள்ளைகளோடு,தான் முன்பு உதவிய ஒரு குடும்பத்தின் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கும் கதை.மத பூசல்கள் ஏதுமற்ற பிரிவினைக்கு முந்தைய நாட்களின் இனிமை இதில் நம் கற்பனைக்கு விடப்படுகிறது.சகோதரத்துவம் கொண்டு பழகி வந்த அம்மனிதர்கள் மதவெறி என்னும் சுழலில் சிக்கி அழிவை நோக்கி நகர்வதை பேசும் இக்கதையும் நம்பிக்கை துரோகத்தை குறித்ததே.

மண்டோவின் கதைகள் பிரிவினை கால கொலை,கொள்ளை,கற்பழிப்பு போன்ற நிகழ்வுகளுக்கு காரணியாய் அமைந்தவற்றையும் ஆராய தூண்டுகின்றன.வன்முறை மிகுந்த இரக்கமற்ற இந்தியாவின் சரித்திர பக்கங்களை நேர்மையான முன்வைக்கும் அதே சமயம் நிலையற்ற மனித இயல்பின் மீதான நம் பார்வையை விரிவுபடுத்துபவை.கையறு நிலையின் காரணமாக சக மனிதர்களை அழிக்க துணிந்தவர்கள் குறித்த இக்கதைகளை எங்கோ எவருக்கோ நேர்த்தவை என ஒதுக்கிவிட முடியாது.இக்கதைகள் நமக்கானவை.நாம் யாரென்று நமக்கு எடுத்துரைப்பவை.


நூல் : மௌனப் பனி ரகசியப் பனி
தொகுப்பாசிரியர்: கண்ணன்
பதிப்பகம் : காலச்சுவடு

Monday, September 5, 2016

ராணியுடன் ஒரு தேநீர் விருந்து


காணா தேசங்களின் மனிதர்களை,அவர் தம் வாழ்க்கைச் சூழலை,கடந்து வந்த போராட்டங்களை,மேன்மை பொருந்திய காதலை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் இலக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டல்லவா. உலக இலக்கியங்களின் ருசி என்பது எல்லைகள் கடந்து விரிந்து நிற்கும் விருட்சம் போன்றது. மொழியால்,பண்பாட்டால், பழக்க வழக்கங்களால்,தட்ப வெட்பத்தால் முற்றிலும் நம்மிடம் இருந்து வேறுபட்டு நிற்கும் தேசங்களின் கதைகள் தரும் நிறைவு படித்துணர வேண்டியது.


அரவிந்தனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து" தேர்ந்தெடுத்த வெல்ஷ் மொழிச் சிறுகதைகளின் இத்தொகுப்பு செறிவான படைப்பு.கதைகளின் தேர்வும் அவற்றின் கச்சித மொழிபெயர்ப்பும் சிறப்பு.தனித்தலையும் மனிதர்களின் கதைகள் இத்தொகுதியில் பிரதான இடம் பிடித்துக் கொண்டதாக தோன்றியது.அவர்களின் தனிமையின் காரணங்கள் வேறு பட்டவை.போரின் பொருட்டும், காதலின் பொருட்டும்,பிரியத்திற்கு உரியவர்களை இழந்ததின் பொருட்டும் நினைவுக்கு குழிக்குள் சிக்குண்டு வெளி வர வழியறியாது தவிப்பவர்கள் அவர்கள்.

தொடர்ச்சியாக பிள்ளைகளை இழந்த தம்பதியினரின் கதையை சொல்லும் "தொலைந்து போன குழந்தைகள்" நெகிழ வைப்பது.மாலை மங்கிய பொழுதில் வழி தவறி காட்டினுள் செல்லும் நாயகியின் குழப்பம் மிகுந்த மனநிலை அவளது தினசரி நாட்களின் குறியீடு. "குழந்தைகள் உருவில் நாம் அழியாமல் இருக்கிறோம்" என்னும் வரியை ஞாபகப்படுத்திக் கொள்ளும் அவள் அப்பழுக்கற்ற தாயன்பின் அடையாளம்.மார்ட்டின் தாவிஸ்'ன் "தண்ணீர்" போரின் கோர முகத்தை ஒரு எளியவனின் ஒரு நாள் போராட்டத்தை கொண்டு அழுத்தமாக பதிவு செய்கிறது.தூரத்தில் விடாது ஒலித்துக் கொண்டிருக்கும் வெடிகுண்டு முழக்கத்திற்கு சற்றும் குறைந்ததல்ல பதுங்கு குழியில் அவன் காணும் காட்சிகள்.

தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்ததும் தலைப்பு கதையுமான "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து",வாழ்ந்து கெட்ட ராணியின் நினைவுகள் வழி பயணித்து வரும்படியான கதை.யாருமற்ற அவ்வீதியின் ஆளரவமற்ற வீடுகளை சுட்டிக் காட்டியபடியே அவ்வீட்டு மனிதர்கள் சந்தித்த துயரங்களை பகிர்கிறார். உண்மையில் அக்கதைகள் யாவும் அச்சம் தருபவை. நினைத்து பாராத மோசமான முடிவை சந்தித்த அம்மனிதர்கள் குறித்து கதை சொல்லியின் நேர்த்தியுடன் எடுத்துரைக்கும் ராணி அவ்விடம் தனித்து இருப்பதின் காரணம் பெரும் சோகத்தில் ஆழ்த்துவது. மீண்டெழ முடியா நினைவுகள் மோசமானவை!

"வாட்டிலன் ஒரு திருடன்" - கெட்டவர்கள் தண்டிக்கப்பட்டு இறுதியில் நல்லவர்களே வெற்றி பெறுவார்கள் என்று காலங்காலகமாக கண்டும்/படித்தும் வந்த நமக்கு எதார்த்தத்தை பகடி செய்யும் இச்சிறுகதை குட்டு வைக்கிறது.லோயிட் ஜோன்ஸ்'ன் "தபால் நிலைய சிகப்பு" கதை குறித்து என்ன சொல்ல.கதையின் ஓட்டத்தில் நம்மை மறந்து நாயகனோடு அவன் பார்க்கும் ரகசியம் பொதிந்த வீடுகளை நாமும் கண்காணிக்க துவங்குகிறோம். எதார்த்தத்தில் இது போன்ற நிகழ்வுகள் சாத்தியமே எனினும் அதை கதையாக்கிய இக்கதாசிரியரின் நுட்ப சிந்தனை ஆச்சர்யம் கொள்ள வைத்தது.

"பனிப் புயல்" ,சிறுநகரொன்றில் தாந்தோன்றி இளைஞனான பெர்ரி உடல் நலிவுற்ற தன் தாயுடன் செலவிடும் ஒரு இரவின் நிகழ்வுகளை குறித்தது.ஒழுங்கீனங்களின் மொத்த உறைவிடமான பெர்ரி குடியின் மயக்கத்தில் தன் தாயை இரக்கமின்றி நிராகரிக்கும் காட்சிகள் அப்பனி இரவின் மூர்க்கத்திற்கு இணையானது.பெர்ரியின் மீது பரிதாபமும் கோபமும் ஒன்று சேர தோன்றி மறைவதை தவிர்க்க முடியாது.இருண்மையின் கதைகள் சகித்துக் கொள்ள முடியாதவை,பனிப் புயல் அதிலொன்று.

தமிழில் வெளியாகி உள்ள உலக சிறுகதை தொகுதிகளில் நிச்சயம் "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து" மிக முக்கிய இடம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெல்ஷ் மொழிச் சிறுகதைகள்
தமிழில்: அரவிந்தன்
வெளியீடு: காலச்சுவடு
விலை: 90 ரூபாய்

Wednesday, February 10, 2016

எருது - உலகச் சிறுகதைகள்


தேர்ந்தெடுத்த உலக சிறுகதைகளின் தொகுப்பு.தேர்ந்தெடுத்த என்பதை அழுத்தமாக குறிப்பிட வேண்டும் என்னும் படியான அற்புத கதைகளின் தேர்வு. உலக நாடுகளின் தலை சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் வெகு நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன.

யாவருக்கும் புதிரான முதியவன் முர்லாக்கின் வாழ்வின் மோசமானதொரு நாளை விவரிக்கும் முதல் கதையான அம்புரோஸ் பியர்ஸின் "சட்டமிடப்பட்ட சாளரம்" ஏற்படுத்தும் அதிர்வில் இருந்து வெளிவரும் முன்னர்,பல்வேறு மனநிலைக்கு இட்டுச் செல்லும் பின்வரும் கதைகள்.நாம் மறந்து போன கடந்த காலம் மீண்டும் நினைவிற்கு கொண்டு வரும் விஷயங்கள் மகிழ்ச்சிகரமானதாக இருப்பின் கவலையில்லை,ஆனால் பிரியத்திற்கு உரிய கார்ட்டருக்கு நிகழ்ந்ததென்னவோ துன்பகரமானது.கார்ட்டரின் கதையை சொல்லும் கிரகாம் கிரீனின் "நிலப்படம்" அசலான வாசிப்பனுபவம்.ரைஸ் யூக்ஸின் "கல்லறை சாட்சியம்" சிறுகதை லூயிஸ் புனுயலின் "The Phantom of Liberty" திரைப்படத்தை நினைவூட்டியது.ஒரு கதையின் முடிவே மற்றொரு புதிய கதையின் துவக்கமாய் நீளும் பாணி..எழுத்தில் எதிர்பார்க்காதது.இரானிய எழுத்தாளர் யூசுப் இதிரிஸின் "சதையாலான வீடு" இருண்மை சூழ்ந்த குடும்பத்தின் கதை.யாருமறியா ரகசியம் ஒன்றை உள்ளடக்கி எழுதப்பட்ட கவிதையைப் போல அவ்வீடும் அவ்வீட்டுப் பெண்களும்.

ஒவ்வொரு கதையும் ஒரு விதத்தில் ஈர்க்கும் தன்மையில் இருப்பினும் தொகுப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரு கதைகள் உண்டு. மொழிபெயர்ப்பின் சாயல் ஏதுமற்ற துல்லியமான நடை கொண்ட கதைகள் இவை.பிரபல அமெரிக்க எழுத்தாளர் டோனி மாரிசனின் "வசன கவிதை" அதிலொன்று.இனத்தால் வேறுபட்ட (ராபர்ட்டா - ட்வைலா) இரு தோழிகளின் கதை.சிறுவயதில் துவங்கும் அவர்களின் நட்பு குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பிருந்தும் புதுப்பிக்க வழியற்று போகும் அவலத்தை சொல்லுவது.சிறுமிகளாய் இருந்த சமயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாத பலவும் வயது கூட கூட பெருஞ்சுவராய் அவர்களுக்கு நடுவில் எழுகிறது. சிறுவயதில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நிழல் அவர்களை சூனியமாக துரத்துவதும்,அதன் பொருட்டு நிகழும் உரையாடல்களும்.. ராபர்ட்டாவின் மனவெளியை புரிந்து கொள்ள முயன்று தோற்கும் ட்வைலாவின் போராட்டங்கள் நம்மையும் அசைத்துப் பார்ப்பது.

தலைப்புக் கதையான மோ யானின் "எருது" - மான அவமானங்களின் பொருட்டு பிள்ளையின் முன் சிறுமைப்பட்டும் பெருமைப்பட்டும் நிற்கும் தகப்பனின் கதை.மகன் கண்ணெதிரே,எதிரியின் அத்தனை அவமதிப்புகளையும் கண்டு கொள்ளாது அல்லது சகித்துக் கொள்ளும் தகப்பன், இறுதியில் வெடித்துக் குமுறும் இடம் தகப்பன் - பிள்ளை உறவின் புனிதத்தை உரத்துச் சொல்வது."Bicycle Tieves" படத்தின் இறுதிக் காட்சிக்கு ஒப்பான மனநிலையை தந்து செல்லும் படைப்பிது.சமீபத்தில் நான் வாசித்த சிறுகதைகளுள் ஆகச் சிறந்த கதையும் இது தான்.

நூலை தொகுத்து மொழி பெயர்த்துள்ள நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு அன்பும் வாழ்த்துகளும்.


எருது
எதிர் வெளியீடு

Sunday, August 3, 2014

ரேமண்ட் கார்வர் சிறுகதைகள்...

அமெரிக்க சிறுகதையாசிரியர் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள், உறவுகளுக்குள் நிகழும் அன்றாட காட்சிகளின் எதார்த்த விவரிப்புகள். பெரும்பாலான கதைகள் கணவன் - மனைவிக்கிடையேயான நிகழ்வுகளின் பதிவு.தினசரி வாழ்வில் சிறியதும் பெரியதுமாய் எத்தனை விதமான சிக்கல்கள்.நாம் நினைத்தே பாராத விஷயங்களை எடுத்தாளுகின்றன ரேமன்ட்டின் கதைகள்.இவர் கதையுலகத்து பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள்,பதற்றம் நிறைந்தவர்கள்,நினைத்தால் உருகி அழுதிட கூடியவர்கள்.ஆண்களோ பொழுதுபோக்குகளில் விருப்பம் உள்ளவர்கள், குடிகாரர்கள்,குழப்பம் நிறைந்தவர்கள்.இருவேறு திசையில் பயணிக்கும் இவர்கள் இணைந்த வாழ்வு உண்மையில் சுவாரஸ்யமானதே. காதலிப்பவர்கள்,திருமணம் ஆனவர்கள்,விவாகரத்து பெற்றவர்கள்,பெறப் போகிறவர்கள் என....

"ஒரு சிறிய நல்ல காரியம்" - இத்தொகுப்பில் மிகப் பிடித்த கதை.ஒரு எதிர்பாராத விபத்தும் அதன் தொடர்ச்சியான மருத்துவமனை நாட்களும் கணவன் மனைவியிடையே உண்டு பண்ணும் உணர்வுகளைத் தாண்டிய நெருக்கம் குறித்தது.நோயுற்றவர் குணமாகும் வரையிலான மருத்துவமனை தங்கலும்,அங்கு செலவிடப்படும் இரவுகளும் அமானுஷ்யம் நிறைந்தவை. தேறி வருவது மகனாக இருக்கும் பட்சத்தில்,அந்த நிலை இன்னும் கொடுமை. நம்பிக்கை வேர் விட்டு படர்ந்திருக்கும் இடம் மருத்துவமனைகள். அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்களில் வெளிப்படும் உண்மை இது.காட்சிகளின் விவரிப்பில் அவர்களின் முக பாவங்களை கூட கற்பனை செய்யமுடிகிறது.மகனை குறித்த சோகத்தில் உள்ள இவர்களுக்கும் ஒரு பேக்கரி கடைக்காரனுக்குமான உரையாடல் சொல்லும்..வாழ்க்கை தத்துவத்தை.


"எங்கிருந்து அழைக்கிறேன் நான்" - குடிமறதி விடுதியில் சந்தித்துக்கொள்ளும் இரு மனிதர்களின் கதை.அவர்களின் உரையாடல் வழி நமக்கு அறிமுகமாகும் பெண்கள்,இவர்களை சகித்துக் கொண்ட காதலிகள்.புகைபோக்கி சுத்தம் செய்யும் பெண்ணை காதலித்து மணந்து கொண்ட கதையொன்று அழகானது. பெரும் சண்டையோடு மோசமாக முடிவுறும் காதலும்,ஒரு சமயம் கவித்துவமாகவே தொடங்கியிருக்க வேண்டும் என்பதற்கோர் உதாரணம் இச்சிறுகதை.


'ஜூரம்' - விட்டோரியோ டிசிகாவின் 'Children are watching Us' திரைப்படத்தை ஒரு நிமிடம் நினைவூட்டிய சிறுகதை.பிள்ளைகளை விட்டுவிட்டு வேறொருவனுடன் செல்லும் தாய்.அவர்களை பராமரிக்க ஆள் கிடைக்காமல் கஷ்டப்படும் தந்தை.அவர்களுக்கு உதவ வரும் மூதாட்டி எனத் தொடரும் கதையில் படித்த நாயகனும் நாயகியும் ஓவிய கலையின் நுட்பத்தை அறிந்த அளவிற்கு வாழ்வின் நுணுக்கங்களை அறியாமல் உள்ளனர்.வீட்டுக்கு வேலைக்கு வரும் மூதாட்டியும் அவள் கணவனும் வாழ்வை திட்டமிட்டு வெகு அழகாக எடுத்துச் செல்கின்றனர். கல்வியறிவு, ரசனை,இவற்றைத் தாண்டி வேறு பல விஷயங்கள் இல்லற வாழ்விற்கு தேவை என்பது எவ்வளவு உண்மை.

கதீட்ரல் - கண் பார்வையற்ற மனைவியின் தோழனோடு ஒருவன் கொள்ளும் நட்பின் தொடக்க பொழுதுகள்.கண்பார்வையற்றவனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதறியாமல் சலித்துக் கொள்ளும் இவன், அவன் வருகைக்கு பிறகு மெல்ல மெல்ல அவன் உலகிற்குள் நுழைகிறான்.அவர்கள் இருவரும் சேர்ந்து வரையும் தேவாலைய படத்தின் நெளிவுசுளிவுகளை போன்றதே அவர்கள் கொள்ளும் நட்பும்.

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு - ஒரு கொடூர கொலை. கொலையான பெண்ணின் பிணத்தை முதலில் கண்டெடுக்கும் மனிதனின் மனநிலை தொடரும் நாட்களில் எவ்வாறிருக்கும்? அவனைக் காட்டிலும் அவன் மனைவி அதிக குற்ற உணர்ச்சி கொள்கிறாள்.பல நேரம் பயணப்பட்டு அந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கு கொள்கிறாள். இறந்தவள் குறித்த சின்ன சின்ன விஷயங்களையும் கேட்டறிகிறாள். இவளுக்கும் அவளுக்குமான பிணைப்பு பெண் என்பதைத் தாண்டி வேறொரு புள்ளியில் இணைகிறது..

சின்னஞ்சிறு வேலை - ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவின் மருத்துவமனை நாட்களோடு,அவரின் இறுதி நிமிடங்களையும் கோர்வையாக நம் முன் வைக்கிறது இக்கதை.நாம் இன்றும் போற்றிக் கொண்டாடும் ஒரு மாபெரும் இலக்கிய ஆளுமையின் மரணத்தை அருகில் இருந்து பார்த்தது போலொரு உணர்வு.செகாவை குறித்த இந்தக் கதையில் டால்ஸ்டாயும்,கார்க்கியும் வருகிறார்கள்.செகாவின் கதைகள் உங்கள் மனதிற்கு நெருக்கமானவை என்றால் இக்கதை நிச்சயம் கண்ணீர் வர வழைக்கும்.

அடுத்த வீட்டுக்காரர்கள்,பெட்டிகள்,அவர்கள் யாரும்உன்னுடைய கணவன் இல்லை என நீளும் பட்டியலில் ஒரு கதையைக் கூட வேண்டாம் என ஒதுக்க முடியாதபடி அத்தனையும் பொக்கிஷங்கள்.மனித மன சலனங்களை ஊடுருவிச் செல்லும் கதைகள் இவை.ஒரு சில கதைகளை தவிர்த்து மொழிபெயர்ப்பும் சரியாகவே அமைந்துள்ளது.

மகத்தான வாசிப்பனுபவம்!


-வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு-
வெளியீடு - காலச்சுவடு

Wednesday, July 2, 2014

கமலாதாசின் "சந்தன மரங்கள்"

கமலாதாஸ் கதைகளோ,கவிதைகளோ இதற்கு முன் அறிமுகமில்லை. பாலச்சந்திரன் சுள்ளிகாடு தனது சுயசரிதை நூலான சிதம்பர ரகசியத்தில் கமலாதாஸ் உடனான சந்திப்பை குறித்து எழுதி இருப்பார்.அந்தக் கட்டுரை இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் குறித்து இல்லாது கமலாதாசின் பிரியமும்,அக்கறையும் கொண்ட தயாள குணத்தை குறித்து பேசுவது. அதிலிருந்து அவரின் எழுத்துக்களை தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் இருக்கும்.மிகச்சமீபத்தில் எதிர்பாராத காரணங்களினால் நான் வேண்டிய புத்தகத்திற்கு பதில் "சந்தன மரங்கள்" கை வந்து சேர்ந்தது.மகிழ்ச்சியான ஏமாற்றம்!

முன்னுரையில் ஜெமோ குறிப்பிட்டுள்ளதைப் போல கமலாதாசின் உலகத்திற்குள் நுழைய இந்தப் புத்தகம் சிறுவாசல்.நாம் கண் பொத்தி,வாய் மூடி பகிர்ந்து கொள்ளும் ரகசிய மனிதர்கள் அவர் கதை மாந்தர்கள்.முழுக்க முழுக்க பெண் மன உளைச்சல்களை அணுகிப் பேசும் கதைகள்.கமலாதாசின் பெண்கள் சபிக்கப்பட்டவர்கள்,பிரியமானவர்களால் துரத்தியடிக்கப்பட்டவர்கள்,அன்பிற்கு ஏங்குபவர்கள்,மனதளவில் வலிமையற்றவர்கள்,வீட்டை மறந்து வேலையில் மூழ்கி கிடப்பவர்கள் இன்னும் இன்னும்..இதில் ஏதோ ஒன்றில் எந்தப் பெண்ணும் தன்னை சுலபமாக பொருத்திக் கொள்ள இயலும்.



ஒரு நாவலின் நேர்த்தி கொண்டது 'ருக்மணிக்கு ஒரு பொம்மை குழந்தை' கதை."Arappatta kettiya gramathil" என்றொரு பத்மராஜனின் படம்.பரத்தையர் கூடத்தில் மாட்டிக் கொண்டு தப்பிக்க போராடும் பெண்ணிற்கு உதவும் நண்பர்களின் கதை.ஏனோ இந்தக் கதை வாசிக்கையில் அப்படத்தின் ஞாபகம்.அங்கு நிகழும் காதலும்,வன்முறையும்,மரணமும் - மாற்றங்கள் இன்றி தொடர்பவை.ஒரு சிறுமியின் வருகையும், கருகலைப்பினால் நிகழும் மரணமும்,அங்கிருந்து தப்பிப்பிழைத்து பின் மீண்டும் வந்து சேரும் ஒருத்தியின் காதல் கதையும் பதரவைப்பவை.இளையவள்,மூத்தவள் என்கிற பாகுபாடின்றி அங்குள்ள பெண்கள்களின் மனவோட்டத்தை, கனவுகளை, நிராசைகளை நுட்பமாய் விவரிக்கும் கதையிது.அழுதாலும், புரண்டாலும் வாழ்க்கையை அங்கு தான் வாழ்ந்து தீர்க்க வேண்டும்.பத்மராஜனின் படத்தில் வருவது போல காப்பாற்றிச் செல்ல தேவகுமாரன்கள் கிட்டாத புறக்கணிக்கப்பட்ட தேவதைகள் இவர்கள்.

'சந்தன மரங்கள்', இருளும் - வெளிச்சமுமான இரண்டு தோழிகளின் கதை.பெண்ணிய கதைகள் எப்போதும் பெண்களின் சிறப்பை மட்டும் பேசுபவை அல்ல என்பதற்கோர் உதாரணம் இக்கதை.எண்ணங்களில் வன்மமும்,குரோதமும் மிகுந்து வார்த்தைகளில் கத்தியின் கூர்மையை கொண்டவள் கல்யாணிகுட்டி.தாழ்வுமனப்பான்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டவள்.பழிவாங்க காதலை ஆயுதமாக பயன்படுத்தவும் துணிபவள். கல்யாணி குட்டி காதல் கொள்வது தனது தோழி ஷீலாவோடு.ஆம் அவர்கள் காதலர்கள்.லெஸ்பியன் உறவு சார்ந்த கதையொன்றை வாசிப்பது இதுவே முதல் முறை.கதை முழுக்க ஷீலா நமக்கு சொல்வது போல வருகிறது.கல்யாணிகுட்டி மீதான சிநேகமும்,நெருக்கடியான திருமண வாழ்வும்,விலகிய பொழுதும் மீண்டும் மீண்டும் வாட்டும் நினைவுகளும்....
இரண்டு பெண்களுக்கிடையேயான அற்புதமான காதல் கதை.

இவை தவிர்த்து, கூடா காதல் என உலகம் வரையறுக்கும் ஒரு பெண்ணின் நேசத்தை பேசும் 'மாஹிம் வீடு',இரவு பகல் பாராது உழைத்து, தன் தொழிலை நேசிக்கும் பெண் மருத்துவருக்கு நேரும் 'துரோகம்' குறித்தான கதையும் குறிப்பிடத்தக்கவை.தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கொண்டு கமலாதாஸ் புனைந்துள்ள 'பறவையின் வாசனையும்' சிறப்பான கதையே.கண்ணுக்கு புலப்படாத சங்கிலியால் பிணைக்கப்பட்டு உறவுகளை விட்டு வெளியேற முடியாத எல்லாப் பெண்களுக்குமான கதைகள் இவை.கமலாதாசின் படைப்புகளை தேடி வாசிக்க இந்தத் தொகுப்பின் அறிமுகம் போதுமானது.


வெளியீடு - உயிர்மை
தமிழில் - நிர்மால்யா

Wednesday, January 12, 2011

ஹீப்ரு மொழிச் சிறுகதைகள்

ஹீப்ரு மொழிச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான "Not Just Milk and Honey " யின் தமிழாக்கம் "பூந்தென்றலோ வாழ்க்கை" என்னும் இத்தொகுப்பு. மொழிபெயர்ப்பு கதைகள் தரும் வினோத மனநிலையை சற்று அதிகமாகவே இச்சிறுகதைகளில் பெற முடிந்தது.அறிமுகமற்ற தேசமும்,அதன் மக்களும் கற்பனையில் இயல்பாய் விரிவது மொழிப் பெயர்ப்பின் வெற்றி.இதில் அது சிக்கலின்றி சாத்தியப்பட்டுள்ளது..புலம் பெயர் வாழ்வின் துயரங்களும்,தொடர்ச்சியான அரசியல் மாற்றங்களால் அலைகழிக்கப்படும் யூதர்களின் சோக நிலையும் இக்கதைகளின் ஊடே முன்வைக்கபடுகின்றன.பெரும்பாலான கதைகள் பிரிவின் வாதையோடும், யுத்த காலத்தின் பதற்றத்தோடும் பிரியமானவர்களுக்காய் காத்திருக்கும் சபிக்கப்பட்ட காதலிகளை குறித்தவை.

"....இனப்படுகொலைகள்,போர்,பெரும் அரசியல் மாற்றங்கள் என்று அல்லல்பட்டு வாழ்ந்த காலங்களில் மாற்றமும் அமைதியும் வேண்டி துடித்த துடிப்புகளையும்,ஏற்பட்டு வந்த மாற்றங்களை பிரதிபலித்து,அவற்றை தன்னுள்ளே ஒரே அங்கமாகக் கொண்டு ஹீப்ரு படைப்பிலக்கியம் உருவாகிற்று....."

- முன்னுரையில்


இத்தொகுப்பில் என்னை கவர்ந்த சில கதைகள்..........

"கிளாரா ஷியாதோவின் அழகிய வாழ்க்கை" - யோராம் கனியுக்

ஒரு பெண்ணின் சிறு வயது தொடங்கி மரணம் வரையிலான சம்பவங்களின் அழகிய கோர்வை இக்கதை.இழப்புகளை மட்டுமே கொண்டு நகரும் கிளாராவின் வாழ்க்கை போர் கால பயங்கரத்தின் ஊடே சொல்லப்படுகின்றது.பிரியத்திற்குரிய தந்தையின் மரணம்..கிறிஸ்துவ பாதரியாய் தூர தேசம் போன மகன்..காதலனின் எதிர்பாரா மரணம் ..என தொடர்ச்சியான வருத்தங்களுக்கிடையே அவளை உயிர்ப்பித்து கொண்டிருப்பது சிறுவயதில் அவள் கண்டிருந்த அந்த பசிய பொன் நிற கண்கள்.அந்த கண்களுக்கு உரிமையானவன் சாமுவேல் அபுமென்..சுழற்றி அடித்த வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை தன் பால்ய சிநேகிதன் அபுமேனோடு கழித்திட தான் கிளாரா அத்தனை துன்பங்களையும் கடந்து வந்திருக்கிறாளோ என்னும் படியான முடிவு.தேர்ந்த நாவலின் குறு வடிவமாகவே இக்கதை தோன்றியது.




"பன்றியை உடைத்தல்" - எட்கர் கீரத்

பொம்மையின் மீது பேரன்பு கொண்ட சிறுவனின் அகவுலகை நேர்த்தியாய் சொல்லும் கதை.வேண்டும் பொம்மைகள் அனைத்தும் எல்லா சிறுவர்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை.கிடைக்கும் பொம்மைகளிடம் அவர்கள் கொள்ளும் பிரியம்,அவற்றோடு வரிந்து கொள்ளும் அவர்களுக்கே உரித்தான ப்ரேத்யேக உலகம் நாம் உணர்ந்து உட் புக முடியாதது.சிம்சன் பொம்மை வேண்டி,அது கிடைக்காது மாற்றாய் பெற்ற பன்றி உண்டியல் பொம்மையோடு சந்தோஷப்பட்டு கொள்ளும் சிறுவன்,அதன் வருகையையும் விலகலையும் நேரடியாய் நம்முடன் பகிர்கின்றான்.சேமித்து வைத்திருக்கும் பணத்திற்காய் உடை பட போகும் பொம்மையை,தந்தையிடம் இருந்து காக்கும் பொருட்டு அதை யாரும் அறியாமல் வயல் வெளியில் விட்டு வீடு திரும்பும் அச்சிறுவனின் மீது இனம் புரியா பற்றுதல் வருவதென்னவோ உண்மை.

"வெள்ளை" - லீஹ் எய்னி

குற்ற உணர்ச்சியில் உழலும் சராசரி மனிதனின் உணர்வுகளை வெகு அருகில் கண்டடைந்த உணர்வை தரும் இக்கதை இத்தொகுப்பில் குறிப்பிட தகுந்த ஒன்று.சோம்பல் நிறைந்த பகல் பொழுதொன்றில், மன சோர்வில் இருந்து முழுதுமாய் விடுபட முயன்று தோற்கும் தனிமையில் சந்திக்க நேரும் சிறுவனுக்காய் உடைகள் தைக்க ஒத்து கொள்ளும் தையல்காரன் - அச்சிறுவனோடு வரும் பெண்ணிடம் பெரும் உபகாரம் - வெகு நாட்களாய் அவ்வுடையை வாங்க வராத அவர்களுக்காய் காத்திருக்கும் தருணங்கள் - சிறுவனின் மரணம் - வெள்ளை நிறம் ஏற்படுத்தும் மரண பீதி என இக்கதை குறியீடுகளை கொண்டு கலவரமானதொரு மனநிலைக்கு இட்டு செல்கின்றது.

"ஒரு நல்ல இடம்" - ரூத் அல்மோக்

இக்கதை இவ்வாறாக தொடங்குகின்றது..

"ஸிலா கஸ்தான் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவளுடைய வாழ்க்கையில் இரண்டே விருப்பங்கள் தான் உண்டு.ஒன்று அவளது மகன் அரிலாஹ் மற்றது அவளுடைய பாலாலைகா.........."

இவ்விரு வரிகளில் இக்கதை முழுதுமாய் அடங்கி விடும்.தன் பிரியத்திற்குரிய இசைக்கருவியை இசைப்பதில் மகனும் வல்லவன் ஆக வேண்டும் என விரும்பும் தாய்.அவ்விருப்பத்தை தனக்குள்ளே வைத்து அவன் போக்கில் விடுகிறாள்.போரில் சில காலம்,தந்தையின் தோல் தொழிற்சாலையில் சில காலம்,இறுதியாய் நிரந்தரமாய் பிரிந்து தூர தேசம் செல்லும் அரிலாஹ், இசைப்பதை அவள் ஒருபோதும் கேட்டாலில்லை.மகனை நினைத்து மலை மேடுகளில் - வெளிச்சமற்ற வீட்டு முற்றத்தில் - நாடோடி பாடல்களை தன் இசைக்கருவியில் இசைத்து கொண்டே இருந்த ஸிலாவின் பாடல்கள் குறித்தான விவரணைகள் - கவிதை.ஸிலாவின் பிராத்தனைகள் ஏற்று கொள்ளப்படுகின்றன இறுதியாய் - திடீரென தொலைந்து போகும் அரிலாஹ்,பல வருட தேடலுக்கு பிறகு நாடோடி இசைக் கலைஞனாய் கடற்கரையோரம் சுற்றி அலைந்ததாய் அறியப்படுகிறான்.அதனினும் நெகிழ்ச்சியான செய்தி ஒன்றும் இக்கதையில் உண்டு.

"தெருவின் குறுக்கே மோர்கானா" - யெகுடித் ஹென்டெல்


" கதவின் இடைவெளிகளில் நுழைந்து வந்த ஒளி கசங்கிக் கிடந்த படுக்கை விரிப்பிலும் தலையணை மீதும் வெளிறிய கோடுகளை வரைந்தது.படுக்கையில் உட்காரவும் அஞ்சினால்.அவள் முகம் குளிர்ந்து போய் இருந்தது.கன்னத்தில் கவனத்தோடு லேசாக தட்டிக் கொண்டால்.யாருடைய கரங்களில் யார் சுருண்டு கிடந்தது என்பதை நினைத்து பார்க்க முயன்றால்.ஒளி வண்ணத்து பூச்சிகள் படுக்கையில் நடனமாடின.அவள் கைகளிலும்,தோளிலும் தங்க வண்ண ஒளிக்குமிழ்கள் மிளிர்ந்தன..........."

இத்தொகுதியில் எனக்கு மிகப்பிடித்த கதை.எப்போதுக்குமான தேவதை கதைகளை ஒத்திருந்தது காரணமாய் இருக்கலாம்.சில நாட்கள் தன்னோடு இருந்து,பின் சொல்லாமல் விட்டு சென்ற காதலனை(?), எதிர் நோக்கி காத்திருக்கும் யுவதியை குறித்த கதை.காத்திருத்தலின் வலிக்கு நினைவுகளே ஒத்தடம்.அவன் பரிசளித்து சென்ற வெள்ளை நிற,பூ வேலைபாடுகள் கொண்ட குடையுடன் வீதியில் தோன்றும் மோர்கானா - அவன் சார்ந்த நினைவுகளை அசை போட்டபடி - பருவ கால மாற்றங்களில் கூட அக்கறை இன்றி, தான் மேகங்களின் மீது நடப்பதாய் சொல்லி திரிகிறாள். அவனோடிருந்த ஒவ்வொரு நாளும் அவளின் நினைவுகள் வழியே வாசகனுக்கு விவரிக்கபடுகின்றது.நினைவுகளில் மட்டுமே மூழ்கி திளைக்கும் அவளுக்கேயான காதல் கணங்கள்...அற்புதமான கதை.

உலகின் மிகத் தொன்மையான மொழி ஒன்றின் இலக்கியம் எவ்வாறிருக்கும் என்னும் ஆவல் மேலிட வாசிக்க தொடங்கினேன். கொஞ்சமும் ஏமாற்றம் அளிக்காத கதைகள்.யூதர்களின் வாழ்க்கைமுறை,பிரதான தொழில்கள்,யுத்த காலத்தில் சாதாரணர்களின் நிலை,இசை மீது அவர்களுக்கிருந்த அதீத பிரியம் குறித்தான செய்திகள் சுவாரஸ்யமானவை. எல்லா கதைகளின் பின்னணியிலும் ஒரு குரல்,மென் சோக பாடல் ஒன்றை தொடர்ந்து இசைத்தபடி வருவதான மாயை.... ஸிலா கஸ்தானின் பாடலைப் போல,மோர்கானாவின் காதலைப் போல!

தொகுப்பாசிரியர் - ஹயா ஹோப்மேன்
தமிழாக்கம் - த.சித்தார்த்தன்
வெளியீடு - நேசனல் புக் ட்ரஸ்ட்
விலை - 60 ரூபாய்

Sunday, December 12, 2010

நிராயுதபாணியின் ஆயுதங்கள் - ஜெயந்தன் கதைகள்

ஜெயந்தனின் அறிமுகம் கிடைத்தது அசோகமித்ரனின் "தேர்ந்தெடுத்த சிறுகதைகள்" (நேசனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு)தொகுப்பில்.ஜெயந்தனின் "பகல் உறவுகள்" சிறுகதை அதில் இடம்பெற்றிருந்தது.அத்தனை எளிதில் கடந்து விட முடியாத கதை அது.வெளியுலகத்திற்கு ஆதர்சமாய் தெரியும் தம்பதிகளின் நிஜ உலகம் பழிவாங்கலும்,வன்மமும் பீடித்து அலங்கோலமாய் இருப்பதைச் சொல்லும் கதை.புரிதலின் இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க ஏற்படும் விபரீதங்கள் அழுத்தமாய் முன்வைக்கப்படுகின்றன இக்கதையில்.எதிரியின் பலவீனம் அறிந்து வீழ்த்துவது புத்திசாலித்தனம்,இதுவே கணவன் மனைவிக்கிடையே நிகழுமாயின்?!அவர்கள் படித்தவர்கள். நாகரிகம் கற்றவர்கள்.காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது இங்கே கவனிக்க படவேண்டியவை.தமிழில் முக்கியமான சிறுகதை இது.

அதற்கு பிறகு ஜெயந்தனின் கதைகள் எங்கும் வாசிக்க கிடைக்கவில்லை.தொடர்ந்து அந்த எழுத்தாளனை நினைவில் நிறுத்திக்கொள்ள இச்சிறுகதையே போதுமானதாய் இருந்தது.தமிழில் கவனம் பெறாமல் போன எழுத்தாளர்களுள் ஜெயந்தனும் ஒருவர்.வம்சி வெளியிட்டுள்ள ஜெயந்தனின் மொத்த சிறுகதைகளின் இத்தொகுப்பு நீண்ட தேடலுக்கு பிறகு வாசிக்க கிடைத்தது.நிதானமாய் வாசித்து,ரசிக்கப்பட வேண்டியவர்கள் ஜெயந்தனின் கதை மாந்தர்கள்.தன் இயல்போடு இருந்து நம்மை பதற்றம் கொள்ள செய்பவர்கள்.மேலும் சமூகத்தின் மீதான கோபத்தை தன் கதைகளில் வெளிக்காட்ட கொஞ்சமும் தயங்கவில்லை இவர்.




இத்தொகுப்பில் மிகப்பிடித்த சில கதைகள் குறித்து இங்கே..

"வெள்ளம்",பெரு மழை நாளொன்றில் தன் வயலில் தனித்திருக்கும் நாயகன் , மழைக்கு ஒதுங்கும் அக்கிராமத்து பெண்களால் அலைக்கழிக்கபடும் கதை.பெண்கள் தான் எத்தனை வசீகரமானவர்கள்..ரகசியங்களின் குடுவை...விடை அறிந்து கொள்ள முடியாத புதிர் விளையாட்டில் எப்போதும் வெற்றி பெறுபவர்கள்.சிறுமி,பேரிளம்பெண்,புதிதாய் திருமணம் ஆனவள் என அவ்விடம் இருக்கும் ஒவ்வொருத்தியும் மாறி மாறி தேவதை கோலம் பூணுகின்றனர்,அவன் தனிமை புலம்பல்களுக்கும்,சிந்தனைகளுக்கும் உரம் போட்டபடி.மழை விட்டதும் பெண்கள் யாவரும் சென்று விட,சட்டென தோன்றிய வெறுமையை அவன் மேகத்தின் துணை கொண்டு வரவேற்பதோடு முடிகின்றது கதை.ஆணின் அகவுலகை - தனிமை துயரை இத்தனை நெருக்கமாய் வாசகனுக்கு வேறெந்த கதையும் முன்வைத்தாய் நினைவில்லை.

"துப்பாக்கி நாயக்கர்",தன் மனைவியை பெண்டாள முயன்ற வேலையாளின் துரோகத்தை,ஊரார் முன் ஏற்பட்ட அவமானத்தை கடக்க நிதானிக்கும் முன் நிகழும் அவனின் தற்கொலை - என சுழற்றி அடிக்கும் சூழலில்,இயல்பிற்கு மாறாய் நடந்து கொள்ளும் துப்பாக்கி நாயக்கரின் நிதான புத்தி அவ்வூராரோடு நம்மையும் ஆச்சர்யம் கொள்ள செய்வதே.பேச்சை காட்டிலும் மௌனத்திற்கு வீரியம் அதிகம்.சமயங்களில் எல்லா உணர்ச்சிகளும் அதில் அடங்கி விடுவதுண்டு. சகித்து கொள்ள இயலாத துரோகத்தை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதை நேரடி உரையாடல் அதிகம் இன்றி காட்சிகளின் விவரிப்பில் நமக்கு உணர்த்துபவை ஏராளம்.

"உலகம் தன்னை அதட்ட தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான் அடி பணிகிறது.அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது.நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது"

- ஜெயந்தனின் 'சம்மதங்கள்' சிறுகதையில்


"வாழ்க்கை ஓடும்",ராஜேந்திர சோழனின் சிறுகதை ஒன்றை நினைவூட்டிய கதை இது.பகல் முழுக்க அடித்து கொள்ளும் மருமகள் - மாமியார்,தொடர்ச்சியான வசைகளில் அக்கம்பக்கத்தாரை குளிர்வித்துவிட்டு,வீடு வந்து சேரும் ஆணிடமும் தங்கள் நியாயத்தை சொல்லி மேலும் கொஞ்சம் களேபரம் செய்து முடங்கி போகின்றனர்.மறுநாள் வெளியூருக்கு நாட்கணக்கில் கூலி வேலை செய்ய அவன் புறப்பட...முன்னிரவில் நடந்த கலவரத்தின் சுவடே தெரியாது மகிழ்ச்சியாய் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர்.அவர்கள் அப்படிதான், அவர்களின் அன்றாடம் அது..அடித்து கொள்வதும்,சேர்ந்து கொள்வதும்..எனக்கும்,உனக்கும், எல்லோருக்குமான வாழ்க்கை அப்படிதான் என்பதை போல!

"மீண்டும் கடவுளும் கந்தசாமியும்",புதுமைபித்தனின் ஓவியத்திற்கு நவீன வண்ணம் பூசும் முயற்சி.கந்தசாமிபிள்ளையை சினிமா தயாரிப்பாளராக்கி/குடிசை வீட்டை கோபுரமாக்கி....கடவுளுக்கு தொடர்ச்சியான ஆச்சர்யங்கள் இம்முறை."ஊமை ரணங்கள்", திருமண சடங்குகளுக்காய் மகளிடமே கையேந்த நேரிடும் ஏழை தந்தையின் கதை.சில அவமானங்களை வலிந்து ஏற்று கொள்வது கொடுமை.கதை.மோசமானதொரு சமூக சூழலை/மாற்றம் காணாது தொடரும் திருமண கொடுக்கல் வாங்கல்களை சாடும் இக்கதை எந்த காலகட்டத்திற்கும் பொருந்திப் போவது.

"நாலாவது பரிமாணம்",இக்கதையின் முடிவில் உடன்பாடில்லை.கொஞ்சம் சினிமாத்தனமாய் தோன்றியது.இருப்பினும் பள்ளி ஆசிரியர்களான நாயகன் மற்றும் நாயகிக்கு இடையே தோன்றி,படரும் காதல்,வெகு இயல்பான உரையாடல்களோடு சொல்லப்பட்டிருக்கும் பாணி அருமை. தொடர்ச்சியான அவர்களின் உரையாடல்கள் இட்டு செல்லபோகும் இடம் எதுவென வாசகன் அறிந்திருந்தும், உடன் சேர்ந்து பயணிக்கும் சுவாரஸ்யம் குறையவில்லை.

"பைத்தியம்","மாரம்மா",எழுதியவனும் படித்தவளும்",ஜாதி மான்" ஆகியவையும் குறிப்பிட தக்கவையே.நம்மை குறித்த,நமக்கான கதைகள் இவை.அலங்காரமற்ற வர்ணிப்புகள்.வாசகனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் எதார்த்தங்களின் சித்தரிப்பு.கொஞ்சம் காத்திரமான குரலில் சமூகத்தை சாடும் கதைகளில் தெரிவது எழுத்தாளனின் கோபமும் அக்கறையும்.தொடர்ச்சியாய் முன்வைக்கப்படும் மாற்று கருத்துக்களில் நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள தூண்டும் கதைகள் இவை.

"நிராயுதபாணியின் ஆயுதங்கள்",தமிழ் சிறுகதை தொகுதிகளில் மிக முக்கியமானதொன்று.

வெளியீடு - வம்சி
விலை - 400 ரூபாய்

Sunday, October 10, 2010

இயல்பின் அழகை மீட்டெடுக்கும் வண்ணதாசனின் கதையுலகம்....



"ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் பிடித்த பட்டுப்பூச்சியை,அதை பிடித்த நேரத்தின் சந்தோஷத்தோடு உங்கள் கையில் அல்லது என் மிக அருகில் எதிர்படுகிற மனிதனின் உள்ளங்கைக்கு மாற்றிவிட்டால் போதும்."

-- வண்ணதாசன்



தேர்ந்த ஓவியனின் சித்திரங்களை போலவே வண்ணதாசனின் கதை மாந்தர்களும். இவ்வோவியங்கள் கால ஓட்டத்தில் தொலைத்த உறவுகளை/நினைவுகளை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் சந்தேகமில்லை.ஓவியத்தில் ஒளிந்திருப்பது தொலைத்த நட்பாகவோ.. மறக்கவியலா காதலியாகவோ....கண்டதும் கைபிடித்து கொள்ளும்,எங்கோ தூரத்து சிறுநகரில் வசிக்கும் சித்தப்பாவாகவோ,மதினியாகவோ இருக்கலாம். நினைவில் புதைந்து கிடந்த சில முகங்களை மீண்டும் காண வேண்டும் என்கிற ஆவலை கிளறிவிட்ட எதார்த்த ஓவியங்கள் தனுவும், சின்னுவும்,லீலாக்காவும்,சிறு மலரும்....கடல் மணலில் கால் புதைத்து சிப்பிகளை தேடி அலையும் சிறுமியின் மனநிலையில் வந்து விடுகின்றது வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் பொழுது.


வண்ணதாசனின் சமீபத்திய தொகுப்பான "பெய்தலும் ஓய்தலும்" வாசித்து முடித்ததும்,"சின்னு முதல் சின்னு வரை" வாசிக்க வேண்டும் போல இருந்தது.மிகப்பிடித்த குறுநாவல் அது.சின்னு குறித்து மிகவும் குறைவாகவே தெரிவிக்கபட்டிருக்கும்,முற்று பெறாத கவிதையை தந்து இஷ்ட சொற்கள் கொண்டு முழுமைபடுத்திக்கொள் என விட்டுவிடுவது போல.இந்நாவல் பேசுவதெல்லாம் குறுகி வரும் மனித மனப்பான்மைகள் குறித்து!கணவனை இழந்த சின்னு,அவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டிருப்பதை,சகிக்க முடியாத குற்றமென கொள்ளும் பொதுப்பார்வையை முன்வைத்து பின்னபட்டிருக்கும் கதை.நெற்றியில் விழும் சுருள் முடியை ஒதுக்கியபடி சின்னு அழகாய் சிரித்து கொண்டிருந்தாள் என்பதான முதல் வர்ணனையே இப்போதும் சின்னு குறித்து யோசித்தால் நினைவிற்கு வருகின்றது...!

இந்நாவலை முதல்முதல் வாசித்தது ஒரு வேனிற்கால பகலில்.பொதுவான கற்பிதங்களுக்கு பழகி போய்விட்ட மனிதமனங்கள் அத்தகைய பொழுதொன்றின் புழுக்கத்திற்கு ஒப்பானவையே.

'நகரத்திற்கு வெளியே கொஞ்சம் சொர்க்கம்' சிறுகதையின் நாயகன் தாஸ்,அலுவலகத்தில் மின்விசிறி கொஞ்ச நேரம் இயங்காவிட்டாலும் கூப்பாடு போடும் தாஸ் குறித்த தொடர் விவரிப்புகள் சுவாரஸ்யத்தை மீறிய எதார்த்தங்கள்...நைந்து போன விசிறியோடு இரவு வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் தாஸ் போன்றவர்களை நிச்சயம் ஒருமுறையேனும் சந்தித்திராமல் இருந்திருக்க முடியாது.வீட்டில் நிலைமை தலைகீழாய் இருக்க,பொது இடங்களில் வேறுவிதமாய் வெளிக்காட்டி கொள்ளும் இவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல மாறாக இயல்பே அதுவென சிறு புன்னகையோடு கடந்து செல்ல வேண்டியவர்கள்.

தனுவை குறித்து இன்னும் என்ன பேச?!!மௌனியாய் இருந்து கொண்டே அவனுள் காதல் வளர்க்கும் அந்த சிறுபெண்ணை குறித்து யோசித்தால்..மழை நனைத்த சாலையும்..வாதாம் மரங்களுமே முன்வருகின்றன."தனியாகி..தனுவாகி.." என அவனோடு சேர்ந்து கரைந்து போக செய்பவள்.நடுகையில் வரும் அந்த கிழவர்,விசித்திர கதைகள் சொல்லும் கதைசொல்லியை போன்றதொரு பாத்திர படைப்பு.அவரின் தர்க்கங்கள்.. செடிகள் மீதான தீராக்காதல்..."ஒண்ணை பிடிங்கினால் ஒண்ணை நடணும் .." என கூறும் இடத்தில் பிடுங்கி எறியப்பட்ட துளசி வாசனை.


"கூடு விட்டு" கதையில் வரும் லீலாக்கா, "அதெப்படி மறக்கும்,நீங்க சொன்னதை ஒரு சொட்டு விடாமல் உரை ஊற்றியில்லா வச்சிருக்கேன்" என்கிறாள் ஒரு இடத்தில்.."கையில் கோலப்பொடி இருக்கு,இல்லாட்டி உன் வண்டி ஹார்ன் சத்தத்தை பந்தை பிடிப்பது போல ரெண்டு கையிலயும் பிடித்து இருப்பேன்" என்கிறாள் வேறொரு சந்தர்ப்பத்தில்."கோபம்னா அப்படி ஒரு கோபம் எனக்கு..சில்லு சில்லா தெரிச்சு பட்டாசலைல கிடக்கு.நீ வந்திருந்தா உன் காலில் பூந்திருக்கும்" என்பவளை எதனோடு ஒப்பிடுவது..


"இந்த சாதாரண வாழ்வின் மத்தியில் காதல் தான் சில
தேவதை கதைகளை சொல்லி செல்கிறது"


"ஒரு முயல் குட்டி இரண்டு தேநீர் கோப்பைகள்" கதையில் வரும் சிறுமலர் அப்படி ஒரு தேவதையே.நட்பின் எல்லை எதுவென தீர்மானிக்க முடியாத நிலையில் நிகழும் சங்கடங்களை மெலிதாக அணுகி இருக்கும் இக்கதை கோபியின் சிறுகதை ஒன்றை நினைவூட்டியது.'உப்பு கரிக்கிற சிறகுகள்' கதையில் வரும் செல்வி,எல்லா கடல் மீதும் பறந்து விட்டு உப்பு கரிக்கும் சிறகோடு ஓய்வெடுக்க வரும் பறவையோடு தன்னை ஒப்பிட்டு கொள்கின்றாள்.சபிக்கப்பட்ட காதலி தேவதையாய் உருமாறும் கதை.

வண்ணதாசன் கைமாற்றி விட்டிருக்கும் பட்டுப்பூச்சிகள் இன்னும் எத்தனையோ..பொலிவற்ற நகர ஓட்டத்தின்,பதற்றம் நிரம்பிய முகங்களுக்கு மத்தியில் இந்த பட்டுபூச்சிகளின் தேவை அவசியமானது என்பதில் சந்தேகமில்லை..


சின்னு முதல் சின்னு வரை - விமலன் புக்ஸ் வெளியீடு(1991 )
வண்ணதாசன் கதைகள் - புதுமைப்பித்தன் பதிப்பகம்
பெய்தலும் ஓய்தலும் - சந்தியா பதிப்பகம்

Wednesday, August 18, 2010

சூர்ப்பனகை - மலையாள மொழிபெயர்ப்பு

"எந்த கழிவிரக்கத்தையும் கோராமல்,படித்து முடித்த பின் ஒரு பெண் மருத்துவரின் அறைக்குறிப்புகள் போலல்லாமல் நிதர்சனமாக முழுச் சுதந்திரதோடும் மேன்மையாகவும் வாழ ஆசை படும் பெண்களில் இரண்டு சதவிகித பேர் தவிர மீதமிருக்கும் பெண்களின் நிலை தான் மீராவின் கதாபாத்திரங்கள்"

- ஷைலஜா


மலையாள எழுத்தாளர் மீராவின் பெண்ணிய சிறுகதைகளின் தொகுப்பிது.பெண்ணியம் பேசி புரட்சிகர சிந்தனை கொண்ட பெண்கள் குறித்தான கதைகள் அல்ல இவை.அன்றாட சிக்கல்களில் இருந்து வெளிவர முயன்று தோற்கும் எதார்த்த பெண்கள் குறித்தான பதிவுகள்.பெண்களின் அகவுலகை வெகு நேர்த்தியாய் பகிரும் இக்கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாய் உணர செய்தன.



"செய்திகளின் நாற்றம்",பரவலாய் கவனம் பெற்ற இச்சிறுகதையை ஏற்கனவே படித்த ஞாபகம்.பத்திரிக்கை ஒன்றில் மரண செய்தி பிரிவில் எடிட்டராய் இருப்பவளின் அன்றாடம் அச்செய்திகளை போலவே சோகம் திணிக்கப்பட்டு நகர்வதை சொல்லும் சிறுகதை.எத்தனை அலுப்பு தரும் வேலை அது.இரவும் பகலும் மரண செய்திகளுக்காய் காத்திருக்கும் நாயகி மரணத்தின் நாற்றத்திற்கு தன்னை பழக்கப்படுத்தி கொண்டு முழுதுமாய் அதில் தோய்ந்து போகின்றாள்.மரண செய்திகளின் ஊடாய் கழியும் அவளின் தின பொழுதுகள் கணவனையும்,குழந்தையையும் கூட இரண்டாம் பட்சமாக்கி அவளை ஆட்டுவிக்கின்றது.உயிரற்ற அம்மனிதர்களும்,கல்லறை தோட்டத்து வசனங்களுமே அவளுக்கு நித்ய துணையாகி போகின்றன.அழுத்தம் நிறைந்த அவளின் மன உணர்வுகளுக்கு வெகு அருகில் சென்று வந்தது போன்ற அனுபவம் தேர்ந்த மொழிபெயர்ப்பினால் சாத்தியமாகின்றது.


"இருப்பினும் வேட்டைகாரனும்,பறவையும் ஒரே வலையில் மாட்டி கொள்வதுதான் திருமணம் என்பதை அவர்கள் சீக்கிரமே புரிந்து கொண்டார்கள்"

"அர்த்த ராத்திரிகளின் அலறல்" மற்றும் "இதயம் நம்மை ஆதரிக்கின்றது" ஆகிய சிறுகதைகள் நவீன வாழ்க்கை முறையில் பொருந்தி போக இயலாமல் அலைபாயும் நடுத்தர குடும்பத்து பெண்களை பகடி செய்யும் கதைகள்.குடும்ப பெண்களுக்கே உண்டான பொதுவான சாபங்களை தாண்டி வர இயலாத இயலாமையை நகைச்சுவை சாயம் பூசி பகிர்கின்றன இக்கதைகள்."இறந்தவளின் கல்யாணம்",கைகூடா காதலும்,மறுக்கபடும் வாழ்கையும் ஆதிவாசி பெண்ணொருத்தியை தற்கொலைக்கு இட்டு செல்லும் அவலத்தை,அதன் தொடர்ச்சியாய் நிகழும் ஆதிவாசிகளின் சடங்குகளையும் அவள் விரும்பியவனின் நினைவுகள் கொண்டு பகிர்கின்றது.அவள் தோற்றம் குறித்த விவரிப்புகள் அவளின் இலக்கிய ரசனையின் முன்பு யாதுமற்று போகின்றன. காதலின் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் இக்கதை நாயகி ஒடுக்கப்படும் சமூக பெண்களின் மற்றுமொரு குறியீடு.

இத்தொகுப்பில் மற்றொரு குறிப்பிட தகுந்த கதை "மோக மஞ்சள்".மருத்துவமனையில் சந்திக்க நேரும் திருமணமான நடுத்தர வயது ஆணிற்கும்,விதவை பெண்ணிற்குமான ஒரு நாள் உறவை கற்பு,புனிதம் இத்யாதிகள் கொண்டு பூசி மொழுகாது எதார்த்த நிலை கொண்டு புரிய வைக்கும் கதை.சந்தோஷத்திற்கான எல்லா சாத்தியங்களும் மறுத்தளிக்கபட்ட நிலையில் அவள் கொள்ளும் அந்த நேசமும் மரணத்தின் துணை கொண்டு கரைந்து போவது பெரும் சோகம்.தொடரும் வீழ்ச்சிகளின் இருந்து விடுபட பிரியத்தை எதிர்நோக்கி காத்திருந்து தோற்கும் சராசரி பெண்களை குறித்த கதைகள் இவை.பளிச்சிடும் பல வரிகள்..அத்தனை எளிதாய் கடந்து போகவிடாது செய்கின்றன,நேர்த்தியான மொழிபெயர்ப்பு.முன்னுரையில் பகிரப்படும் இந்த கவிதையில் எல்லாமும் சொல்லபடுகின்றது.

அளவாய் செதுக்கப்பட்ட
கண்ணாடி தொட்டிக்குள்
கம்பீரமாய் நீந்தி விளையாடுகிறேன்
தினம் தினம் அக்கறையோடு
சுத்தம் செய்யபடும் தண்ணீர்.
பதப்படுத்தப்பட்ட செடி கொடிகள்
தேடி அலையாமல் வாய்க்குள்
வந்து விழும் உணவு
தேவையை சரியாய் புரிந்து கொண்டு
அளிக்கப்படும் பொழுதுபோக்குகள்
என் இருத்தல் பார்ப்பவர்களுக்கு
நான் கொடுக்கும் சந்தோசம்
அழகாய் வளைந்து நெளிந்து
பொன்னிறத்தில் மின்னி
வாலசைத்து தலையசைத்து
சந்தோசம் காட்டுவதாய்
எல்லா சுதந்திரங்களோடும்
எவ்வித சுதந்திரமுமின்றி


ஆசிரியர் - கெ.ஆர்.மீரா
தமிழில் - கே.வி.ஷைலஜா
வெளியீடு - வம்சி
விலை - 50 ரூபாய்

Monday, August 9, 2010

வண்ணதாசனின் "கடைசியாய் தெரிந்தவர்" - சிறுகதை

"அவரது படைப்புலகம் கருணையும் சௌந்தர்யமும் கலந்தது"

- வண்ணநிலவன்

அன்பென்னும் ஒற்றை புள்ளியை சுற்றி கட்டமைக்கபட்டதாகவே இருக்கின்றது வண்ணதாசனின் கதையுலகம்.தொடர்ந்து அவ்வெழுத்தின் மீதான பிரியம் அதிகரித்து வரவும் அது ஒன்றே காரணம்."கடைசியாய் தெரிந்தவர்",மருத்துவமனையில் நண்பனின் குழந்தைக்காக உடன் இருக்கும் நாயகனின் பார்வையில்,அந்நாட்கள் பகிரப்படுவதான கதை.மருத்துவமனையில் இரவு தங்கலும்,அந்த அசாதாரண சூழ்நிலை தரும் தயக்கங்களும், அச்சமும்,நோயாளி சமநிலை வரும்வரை கொள்ளும் மன உளைச்சலும் வார்த்தைகளில் அடக்கிட முடியாதவை.பிரியத்திற்குரிய உறவுகளுக்காக மருத்துவமனையில் செலவிட்ட நாட்கள்,நினைவேட்டில் நிரந்தரமாய் மறைத்து வைக்க வேண்டியவை.அதிலும் முக்கியமாய் மருத்துவமனை இரவு தங்கள்,அமானுஷ்ய உணர்வை தந்து இம்சிக்கும் அனுபவம் அது.ஏதோ ஒரு நம்பிக்கை அந்த கணங்களை கடக்க அவசியம் ஆகின்றது.

"இந்த தைரியம் தான் மறுபடி மறுபடி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆஸ்பத்திரியை நோக்கி யாருடனாவது என்னை செலுத்தி கொண்டிருக்கின்றது"





குறுகலான அந்த பாலி கிளினிக்கின் காட்சிகளை விவரிப்பதோடு தொடங்கும் சிறுகதை.மெல்ல மெல்ல மருத்துவமனையின் அன்றாட காட்சிகளை விரிவாய் பகிர்கின்றது.நோயுற்று இருப்பவரின் உடன் இருப்பவர்கள் நோயாளி தேறியவுடன் கொள்ளும் மனநிலையை கீழ் உள்ள வரிகள் சிறப்பாய் விவரிக்கின்றன,

"பக்கத்துக்கு அரைப் படுக்கைகாரரிடம் வழிய போய் பேசுவார்கள்.அனுதாபம் கொள்வார்கள்.."டூட்டி முடிந்து விட்டதா சிஸ்டர்?" என நர்சிடம் விசாபார்கள்"............"நாம் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் கவனித்திருந்த நோயாளியின் உடல்நலம் தேறிவிட்டது என்று"

நண்பனின் குழந்தைக்காய் இரவும் பகலும் அத்தம்பதியினருடன் உடனிருக்கும் நாயகன்,குழந்தையின் உடல் நிலை தேறியதும் நண்பனின் மனைவி கொள்ளும் மாற்றத்தை உணர்ந்து கொள்ளும் தருணம் நெகிழ்ச்சியானது.நண்பன் மற்றும் அவனது மனைவியின் அசாதாரண சூழலுக்குள் தன்னையும் பொருத்தி கொண்டு மருத்துவமனையில் உலாவரும் நாயகனின் பார்வையில் விரியும் இச்சிறுகதை ஒழுங்கற்ற அந்நாட்களை நுட்பமாய் பகிர்கின்றது.

இச்சிறுகதையின் கடைசி பகுதி இன்னும் அழுத்தமானது.முன்பின் அறிமுகம் அற்ற நபர்களிடம் வேறு ஒரு பெயர் கொண்டு நிற்பது சுவாரஸ்யத்தை மீறிய ஒரு சங்கடம்.பக்கத்துக்கு அறையில் இருக்கும் கபீர் என்னும் நோயாளி தன்னை வேறொரு சங்கரலிங்கம் என கருதி நலம் விசாரித்து யாரோ ஒரு பெண்ணை குறித்து "வசந்தா இப்போ எங்கே இருக்கா?" என ஆர்வமாய் கேட்கின்றான்,அந்த கேள்வியின் துரத்தலின் பொருட்டே அவன் தன்னை அணுகி இருக்கின்றான் என அறிந்து "ஜபல்பூரிலே.." சொல்லி வெளியேறுகிறான் நாயகன்.

"எனக்கு ஜபல்பூர் தெரியாது.வாய்க்காலடி வீட்டுச் சங்கரலிங்கம் தெரியாது.......சில மனுஷர்களோடு இப்போது கடைசியாய் இந்த கபீரையும் தெரியும்" என முடிகின்றது இச்சிறுகதை.

திடிரென யாவும் கலைந்து போனதாய் மாறிவிடும் சூழலில்,அன்றாடங்களை ஒதுக்கி விட்டு மொத்தமாய் நோயாளியின் மீது கவனத்தை குவித்து..இரவும் பகலும் அலுக்காமல் உடன் இருந்து கவனிக்க செய்வது எது?அன்பு ஆச்சர்யங்கள் நிறைந்தது,இயல்புலகம் மாறி போகும் தருணத்தில் அது அதிகமாய் உணரப்படுகின்றது.மனித உறவுகள் அற்புதமானவை என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் எழுத்து வண்ணதாசனுடையது.

இவ்வேளையில் எஸ்.ராவின் "பி.விஜயலக்ஷ்மியின் சிகிச்சை குறிப்புகள்" சிறுகதையை குறிப்பிட வேண்டும்.வண்ணதாசனின் சிறுகதை எத்தனை மென்மையாய் மருத்துவமனை நாட்களை பகிர்கின்றதோ அதற்கு நேரெதிராய் எஸ்.ரா தன சிறுகதையில் உறவுகளால் கைவிட பட்ட ஒரு பெண்ணின் மோசமான மருத்துவமனை நாட்கள் குறித்து பகிர்கின்றார்.மனநடுக்கம் கொள்ள செய்யும் விஜயலக்ஷ்மியின் கடந்த கால குறிப்புக்கள் தரும் அதிர்ச்சியில் இருந்து எளிதில் மீள முடியாது.இவ்விரு கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் என்னை வெகுவாய் பாதித்தவை,பிரியமானவர்களுக்காய் மருத்துவமனை நாட்களை கடந்து வந்த எவர்க்கும்.

வண்ணதாசன் கதைகள்
வெளியீடு - புதுமைப்பித்தன் பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

Monday, April 5, 2010

ராஜேந்திரசோழன் கதைகள்

இதுவரை வாசித்திடாமல் போனதற்கு வருத்தம் அடைய செய்த தொகுப்பிது.மனித மனங்களின் சலனங்களை எதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை கொண்டு விவரிக்கின்றன இக்கதைகள்.எல்லா கதைகளிலும் ஒரு பேரமைதி..அது கதைமாந்தர்களின் மன குமுறல்களின் சத்தத்திற்கு மீறி வாசகனை கட்டி போடுகின்றது.அமுங்கிய குரலில் இத்தனை காத்திரமான கதைகளை மிக நேர்த்தியாய் புனைந்துள்ளார் ராஜேந்திரசோழன்.இங்கு கதைமாந்தர்களே பிரதானம்.....வர்ணனைகள்,பூச்சு வேலைகள் யாதும் அற்ற வாழ்வின் நுட்பமான தருணங்களின் சாட்சியமாய் இக்கதைகள்.

இல்லறம் தாண்டிய உறவுகள் தேடும் ஆண் பெண் இருவருக்குமான புத்தியின் எதார்த்த விவரிப்பாய் "கோணல் வடிவங்கள்" மற்றும் "புற்றிலுறையும் பாம்புகள்" கதைகள்."புற்றிலுறையும் பாம்புகள்",இக்கதையில் எதிர் வீட்டு இளைஞன் குறித்து பகல் முழுதும் சடசடத்து திரியும் மனைவியின் அலட்டல்களுக்கு...பொறுமை காத்து விட்டு கடைசியாய் அவன் "சும்மா பொண பொணன்னிக்னு........இப்பதான் ஒரேடியா காட்டிக்கறா என்னுமோ பெரிய பத்தினியாட்டம்" என கூறும் ஒற்றை வரியில் எத்தனை அர்த்தம்!!கோணல் வடிவங்கள் சிறுகதை வெளிவந்த சமயம் எதிர்கொண்ட இலக்கிய விமர்சனங்களை தனது பின்னுரையில் விரிவாய் எழுதி உள்ளார் ராஜேந்திரசோழன்.ஆண் பெண் உறவின் பொருட்டு தொடரும் பகடை ஆட்டங்கள் தான் எத்தனை வகை என எண்ணும் படியான கதைகள் இத்தொகுப்பில் அதிகம்.



வண்ணதாசன் சிறுகதை ஒன்று,காதலிக்கு கொலுசு வாங்க சென்ற கடையில் தனது பரிசு கோப்பையை விற்று பணம் பெற கெஞ்சி கொண்டிருக்கும் சிறுவனை கண்ட நாயகன் கொள்ளும் மனநிலை..சங்கடம்,மாறு படும் தேவைகளின் பொருட்டு தனது காரியம் அற்பம் என உணரும் தருணம்.இங்கும் அதே போன்றதொரு மனநிலைக்கு தள்ளபடும் நாயகன்,"ரோமியோ ஜூலியட்"திரைப்படம் காண கால் கடுக்க திரைஅரங்கின் முன் பகல் பொழுதொன்றில் நின்றிருக்கும் நாயகனை,சாலையில் வித்தை காட்டும் சிறுமிகள் இருவர்,அம்மை தழும்பு முதியவர் ஆகிய மூவரின் உணர்ச்சியற்ற யாசகம் "ரோமியோவாது ஜூலியட்டாவது..." என அவ்விடம் இருந்து வெளியேற்றுகின்றது.

தொழில் செய்யும் இடத்தில தனதிடத்தை வேறொருவன் ஆக்கிரமித்து கொள்ளும் சமயம் ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏமாற்றமும்,பொறாமையுமாய் "எதிரி" சிறுகதை வெகு இயல்பாய் சொல்லி செல்கின்றது.நினைவுகளின் நீட்சியாய் கனவுகள் தொடர்வதை காரிருள் தரும் இறுக்கமான மனநிலையை போல விரியும் கதை "இச்சை". "எதிர்பார்ப்புகள்" மற்றும் "சிதைவுகள்" இரண்டுமே ஒரே வகையான கதை களங்கள்.அடலசன்ட் பருவத்தில் ஏற்படும் ஈர்ப்புகள்..இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் இடையில் சிக்கி திணறும் வாலிப மனங்கள் குறித்தான இக்கதைகள் மிக மிக நுட்பமாய் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை தாமே வகை பிரித்துள்ளார் ராஜேந்திரசோழன்.இவ்வளவு வெளிப்படையாக தமது படைப்புகள் குறித்த விமர்சனங்களை ஒரு எழுத்தாளர் முன்வைப்பது ஆச்சர்யமாய் உள்ளது.இலக்கியம் குறித்து பின்வருமாறு தனது உரையில் குறிப்பிடுகின்றார்,


"இலக்கியம் என்பது இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு அனுபவ வெளியீடாகவே இருக்கிறது.ஒரு படைப்பின் வாசகன் தன சொந்த அனுபவத்திற்கும் படைப்பாளனின் வெளிப்பாட்டு அனுபவத்திற்கும் ஊடேயே படைப்பினால் விளையும் அல்லது படைப்பை உற்பத்தி செய்யும் அனுபவத்தை அடைகின்றான்".



இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஆகசிறந்தவையே!!"டெய்லர் கந்தசாமி",கடன்","கைக்கிளை" ஆகியவை குறிபிடத்தக்கவை.கொஞ்சம் மிகுதியாய் போய் இருந்தால் கூட வக்கிர தொனியிலான கதைகளாக மாறி இருக்க கூடியிருக்கும்..மாறாக முழுக்க முழுக்க கதை மாந்தர்களின் நேரடி உரையாடல்களில் வாசகனுக்கு யாவும் நேர்த்தியாய் தெரிவிக்கபட்டுள்ளது.தவிர்க்க கூடா வாசிப்பு!!


வெளியீடு - தமிழினி
விலை - 250ரூபாய்

Wednesday, March 10, 2010

இலத்தீன் அமெரிக்க சிறுகதைகள்

இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்த விரிவான அறிமுகத்தோடு பிரேசில்,அர்ஜென்டினா,சிலி,டொமினிக் குடியரசு,கொலம்பியா தேசத்து முக்கிய இலக்கிய படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பிது.இலத்தீன் அமெரிக்க தேசங்கள் தோன்றிய வரலாற்றையும் அதன் நாகரீக வளர்ச்சியையும் கோடிட்டு காட்டும் அறிமுக கட்டுரை இந்த தொகுப்பை தொடர்ந்து படிக்க பெரும் தூண்டுதல்.ஸ்பானிஷ் - இந்தியர் கலப்பினமான மெஸ்டிஜோ குறித்த தகவல் குறிப்பிடதகுந்த சுவாரஸ்யம் கொண்டது.மொழிபெயர்ப்பு எளிமையாய் இல்லாதது புரிதலில் சிக்கல் ஏற்படுத்தவில்லை மாறாக ஆழ்ந்த வாசிப்பின் அவசியத்தை உணர்த்துவதாய் தோன்றியது.

அர்ஜென்டினா சிறுகதைகள்

இசிதேரோ ப்ளேஸ்டின் பெகுண்டோ மாமா

அழகிய குடும்பம் ஒன்றின் சரிவை,அதில் இருந்து மீள அவர்கள் எடுக்கும் விபரீத முடிவை அதிர்ச்சி தரும் விவரணைகளோடு சொல்லும் இக்கதை உதாரண குடும்பங்கள் சிதையுறுவதை ஆராய்கிறது.எல்லாவிதமான மோசமான ஆசைகளும் கொண்டிருக்கும் பெக்குண்டோ தனது அக்காவின் வீட்டிற்கு வெகு நாட்களுக்கு பின்பு வருகின்றான்.முதலில் அவனை சேர்க்க தயங்கும் அக்குடும்பத்தினர்..அவனின் சாகச பேச்சிலும்,இதற்கு முன் அறிமுகமற்ற உற்சாகம் கூட்டும் புதிய பழக்க வழக்கங்களாலும் அவனோடு சேர்ந்து வாழ்வை கொண்டாடுகின்றனர்..மெல்ல மெல்ல தங்களின் குடும்பம் சரிவை நோக்கி செல்வதை உணர தொடங்கும் தருவாயில்.... கூட்டாய் எடுக்கும் பயங்கர முடிவே அவர்களை மீட்டெடுக்கின்றது.அர்ஜென்டினா நாட்டின் குடும்ப வாழ்க்கை குறித்த சுவாரஸ்ய செய்திகளை கொண்டிருப்பது இக்கதையின் சிறப்பு.

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் "மற்ற மரணம்"

இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளரான போர்ஹேவின் "மற்ற மரணம்" சிறுகதை...சரித்திரத்தோடு மனிதன் கொண்டுள்ள தீராத தேடலை மையமாய் கொண்ட நேர்த்தியான புனைவு.டாமியான் என்னும் போர்வீரனை குறித்த தேடலில் இறங்கும் நாயகனுக்கு டாமியான் என்கின்ற பெயரில் இருவர் இருந்ததும்...தான் அறிய விரும்பிய டாமியான் குறித்த பிம்பங்கள் உருக்குலைந்து போனது தெரிய வரும் பொழுது டாமியானின் செயலை நியாயபடுத்தும் தீர்வை கொள்கின்றான்.பிரபஞ்ச சரித்திரத்தோடு நமக்குள்ள உறவினை பல்வேறு பரிமாணங்களில் விளக்க முயலும் முயற்சி இது!!





பிரேசில் சிறுகதைகள்

ஜோவோ உபால்டோவின் "தாயகத்து அலன்டெலோன்"

நவீன வாழ்வில் செக்ஸ் என்பது விந்து எடுப்பதும் - கொடுப்பதுமான வியாபாரம் ஆகி வருவதை மறைமுக குறியீடாய் சொல்லும் இக்கதை,சமுதாயத்தின் மீதான கவலையை முன்னிறுத்துகின்றது.70 களில் வெளிவந்த இக்கதை தற்பொழுதைய சூழலுக்கும் பொருந்தி வருவது ஆச்சர்யமே.இங்கு "அலன்டெலோன்" என்பது விந்து வங்கியின் குறியீடாய் சொல்லப்படும் காளை மாடு.

ஜோர்ஜ் அமாடோவின் "பறவைகள் நிகழ்த்திய அற்புதம்"

இந்த தொகுதியில் எனக்கு பிடித்த கதை.வாழ்க்கை குறித்த கவலை ஏதும் அற்ற நாடோடி பாடகனை பற்றியது.நகரங்கள் தாண்டி....தேசங்கள் தாண்டி.. செல்லும் இவனின் பயணம் சாகசங்கள் நிறைந்ததல்ல,காதல்கள் நிறைந்தது!!பேரழகு கொண்ட நாடோடி பாடகன் உபால்டோ கவிதைகளாலும்,பெண்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தான் என்னும் வரிகளே போதும் அவனை குறித்து அறிந்து கொள்ள!! ப்ரான்ஹாசை நகரில் சாபோ என்னும் பேரழகியை சந்திக்கும் உபால்டோ.....அவளோடு காதல் கொண்டிருக்கும் வேளையில் சாபோவின் கணவன் வந்துவிடுவதால் தப்பிக்க ஓட்டமெடுப்பதும் ....பின் எதிர்பாரா வண்ணம் பறவைகள் கொத்தி சென்று அவன் உயிரை காப்பாற்றுவதாகவும் முடிகின்றது இக்கதை.

போர்ச்சுகீஸ் சிறுகதை

கிளாரிஸ் லிச்பெக்டாரின் "அன்பு"

சட்டென தோன்றி மறையும் ஏதோ ஒரு காட்சியோ,சம்பவமோ அந்த நாள் முழுதும் நினைவில் அகலாது இருந்து இயல்பை புரட்டி போட்டுவிடுவதுண்டு..பார்வையற்ற யாசகனை காணும் நாயகி அன்னாவின் நிலை மாற்றத்தை நேர்த்தியான காட்சி கோர்வைகளால் சொல்லும் இக்கதை வேறுபடும் வாழ்க்கை சூழல் தோற்றுவிற்கும் மனகுழப்பத்தை ஒரு பெண்ணை முன்னிறுத்தி பகிர்கின்றது.

சிலி தேசத்து சிறுகதை

இசபெல் அலண்டேவின் "நீதிபதியின் மனைவி"

பெரும் புரட்சிகாரனான நிகோலசின் சாவு ஒரு பெண்ணால் தான் என பிறக்கும் பொழுதே குறி சொல்லபடுகின்றது.நீதிபதியின் மனைவி காசில்தா தான் அந்த பெண் என்று துவக்கத்திலேயே முடிவையும் சொல்லி விரிகின்றது இக்கதை.ஒரு நாவலை வாசித்த திருப்தி. நேர்த்தியான திரைக்கதை போல,முடிவு தெரிந்தும் தொடர்ந்து வாசிக்க தூண்டும் கதையாடல்.கதையின் முடிவு நிஜவாழ்க்கையில் அபூர்வமாய் காணக்கிடைப்பது,இருப்பினும் அது நம்பும்படியாக தந்திருப்பதே சாதனை.


கொலம்பியா தேசத்து சிறுகதை

காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் "நீரில் மூழ்கிய நிகரற்ற அழகன்"

நோபெல் பரிசு பெற்றுள்ள மார்க்வெஸின் இக்கதை சிறுவர்களுக்கானது.Fairy Tales கதைகளை போல.......பிரம்மாண்ட உடலமைப்பு கொண்ட பேரழகனின் சடலம் சிறு மீனவ கிராமத்தில் கரை சேர்கின்றது..எதிரி தேசத்து கப்பல் என நினைக்கும் குழந்தைகள் அதை கண்டு மிரள்வதும் பின்பு கிராமத்தினர் அவனை குறித்த சந்தேகங்களையும்..தமக்கு தெரிந்த பழங்கதைகளையும் ஒன்றாய் புனைந்து அவன் நரமாமிசம் தின்பவர்களை கொல்லும் கடல் தேவனான எஸ்தபான் என்கிற முடிவிற்கு வருகின்றனர்.எஸ்தபானின் சடலத்தை அடக்கம் செய்வதிற்கு முன்பு அவனின் சடலத்திற்கு அலங்காரம் செய்ய அப்பெண்கள் செய்யும் அலட்டல்கள் ஆண்களின் பார்வையில் மிகுந்த நகைச்சுவையாய் சொல்லப்பட்டுள்ளது.பூக்களாலும்,பட்டு துணிகளாலும் அலங்கரிக்கபடும் எஸ்தபானின் சடலம் யாரும் நினைத்திடா வண்ணம் அடக்கம் செய்யபடுகின்றது.பெரும் சிரத்தை கொண்டு அந்த புதியவனிற்கு அவர்கள் செய்யும் மரியாதை கிராமத்தினரின் தூய்மையான அன்பினை தெரிவிப்பதாய் உள்ளது.


வெளியீடு - வர்ஷா,மதுரை

Sunday, March 7, 2010

இந்தியச் சிறுகதைகள் - "பாறைகள்"

நம் தேசத்தின் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள சிறுகதைகளின் இத்தொகுப்பு சமகால இந்திய இலக்கியம் குறித்த தெளிவான பார்வை பெற உதவாவிடினும் இந்திய மொழிகளின் சில காத்திரமான படைப்புகளை தெரிந்து கொள்ள உதவுகின்றது.மேலும் தமிழ் இலக்கியம் குறித்த ஒருவித திருப்தியும்,மகிழ்ச்சியும் உண்டாகின்றது.எதன் பொருட்டும் நமது படைப்புகள் குறைந்தவை அல்ல என்பதும் தெளிவாய் புலப்படுகின்றது.இத்தொகுதியின் பெரும்பால கதைகள் விளிம்பு நிலையின் அவலங்களை சொல்லுபவை.தேசம் முழுதும் பொதுவாய் பரவி கிடக்கும் ஏழ்மை இக்கதைகளை ஒரு புள்ளியில் இணைக்க போதுமானதாய் இருப்பது வருத்தமே.இத்தொகுதியில் உள்ள பிறமொழி எழுத்தாளர்கள் குறித்த சிறு குறிப்புகள் அவர்கள் குறித்து அறிய எளிதாய் உதவுகின்றது.


மொகள்ளி கணேஷின் "காளி" (கன்னடம்)- தமிழில் பாவண்ணன்

கன்னட இலக்கியத்தில் குறிப்பிடதக்க தலித் எழுத்தாளர் மொகள்ளி கணேஷ்.தலித் சேரி ஒன்றில் வாழ்ந்து மறைந்த காளி என்னும் பெண்ணொருத்தியின் நினைவுகளை நாயகன் மீட்டெடுக்கும் இக்கதை,தலித் சிறுவர்கள் ஒரு வேலை உணவிற்காக எடுத்துகொள்ளும் பிரயத்தனங்களை,நல்ல உணவின் பொருட்டும்,உடையின் பொருட்டும் கொண்டிருக்கும் கனவுகள்,அது நிறைவேற பண்ணை கூலிகளாய் தொடர்ந்திட கூட தயங்காத மனநிலைக்கு தள்ளபட்டிருப்பதையும் விவரிக்கும் வரிகளில் பதற்றம் கொள்ள செய்கின்றன.பெருமாள் முருகனின் "கூள மாதாரி" மற்றும் இமயத்தின் "கோவேறு கழுதைகள்" நாவல்கள் விரிவாய் சொல்லியதை சிறுகதை வடிவில் படிப்பதாய் இருந்தது.

குஷ்வந்த் சிங்கின் "ஒரு பெண்மணியின் சித்திரம்" (பஞ்சாபி) - தமிழில் முத்துமோகன்

வெகு அழகானதொரு கதை.தனது பாட்டி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் இக்கதையில் கால சுழற்சியில் சிறுவர்கள் படிப்பு,வேலை என திசை மாறி கொஞ்ச கொஞ்சமாய் பாட்டி,தாத்தாவிடம் இருந்து அந்நியபட்டு போவதை தனக்கேயான பகடி கலந்து கூறி உள்ளார்.

பிரிஜ் மோகனின் "வால்" (சிந்தி)- தமிழில் சுந்தர்ஜி

விசுவாசத்தின் பெயரில் எதையும் செய்ய தயங்காத இன்றைய அலுவலக சூழலை பகடி செய்யும் இக்கதை,அதீத நன்றி உணர்ச்சியின் காரணமாய் நாயகனுக்கு வால் முளைப்பதும்,அதன் தொடர்ச்சியாய் அவன் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளும் என நகைச்சுவையாய் நீள்கின்றது.ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் நன்றி மிக்கவர்களாகி..கண்ணுக்கு புலப்படா வால் கொண்டு திரிவதாய் மாயையை தோற்றுவிக்கின்றது இக்கதை.



ஆர்.எஸ்.சுதர்சனத்தின் "சாம்பலின் சுமை" (தெலுங்கு)- தமிழில் சா.தேவதாஸ்

புகை பிடித்தலை முன்வைத்து நாயகன் தனக்குள் எழுப்பி கொள்ளும் கேள்விகளும் அது குறித்தான கடந்த கால நினைவுகளுமான இக்கதை,சிகரட் பழக்கம் குறித்தான ஒருவனின் பார்வையை விரிவாய் முன்வைக்கின்றது.தனிமையின் குறியீடாய் அதை கொள்ளும் நாயகனின் நினைவில் நீங்காது இருக்கும் நிகழ்ச்சி ஒன்றே அதற்கு காரணம் என விளக்குகின்றது இக்கதை.

அமிதாப்பின் "சபிக்கபட்ட வாழ்க்கை" (மராத்தி) - தமிழில் சா.தேவதாஸ்

வறுமையின் குரூரத்தை இது போல எவரும் விளக்கி இருக்க முடியாது..அடித்து வீழ்த்தப்படும் பசுவின் இறைச்சிக்கு ஒரு சேரியின் மக்கள் அடித்து கொள்வதும் அவர்களுக்கு மத்தியில் சிறுவன் ஒருவன் தனக்கான இறைச்சியை பெற தடுமாறுவதும்..கடைசியாய் பெற்றதை கழுகளின் பிடியில் இருந்து பாதுகாத்து வீடு சேர்ப்பதும் என மேலோட்டமாய் கதை சொல்லி சென்றாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தங்கள் மனதை பிசைபவை.இத்தொகுதியின் மிகச்சிறந்த கதை இதுவென்பேன்.

பகவதி சரணின் "வெகுமதி" (ஒரியா) - தமிழில் தேவகி குருநாத்

இந்திய சட்டத்தின் ஓட்டைகளை சாடும் இக்கதை,குற்றங்களின் கிடங்காய் திரியும் பணக்காரனை கொலை செய்யும் அப்பாவி வேடுவனான கினுவாவை பற்றியது.மிருகங்களை வேட்டையாடுவதை போலவே இதுவும் என்று எண்ணி தன் காரியத்திற்காக பரிசை எதிர் நோக்கும் கினுவாவின் பாத்திரபடைப்பு படிப்பறிவில்லாத பாமரனின் வெகுளி மனநிலையின் குறியீடு.

கிரேசியின் "பாறைகள்" (மலையாளம்) - தமிழில் ரவி இளங்கோவன்

ஏழ்மையின் பொருட்டு தொடர்ந்து வரும் குடும்ப சிக்கல்களும் தவிர்க்க முடியா அலுவலக சங்கடங்களும்,குழப்பங்களும் ஒரு பெண்ணின் மனதை பாறையென இறுக செய்வதை தெளிவான காட்சி கோர்வைகளால் உணர்த்துகின்றது இக்கதை.வறுமையினால் கன்னியாஸ்திரி ஆக கட்டாயபடுத்தபடும் சூழலின் அபாயத்தையும் இக்கதை தெளிவுபடுத்துகின்றது.மலையாள இலக்கிய உலகிற்கு புதியவரான கிரேசியின் இக்கதை முக்கியமான சிறுகதைகள் வரிசையில் இடம் பெற்று இருப்பதில் ஆச்சர்யமில்லை.

ந.முத்துசாமியின் "செம்பனார் கோவில் போவது எப்படி?" (தமிழ்)

ந.முத்துசாமியின் கதைகள் இதற்கு முன் அறிமுகம் இல்லை.திரைப்படம் பார்க்க செம்பனார் கோவிலுக்கு மாட்டு வண்டி கட்டி புறப்பட யத்தனிக்கும் பெரிய வீட்டு இளைஞன் ஒருவனின் முழு சோம்பேறித்தனத்தை சொல்லும் இக்கதை ஏனோ புழுக்கம் நிறைந்த வேனிற்கால பகல் பொழுதுகளை நினைவூட்டியது!!

வெளியீடு - சந்தியா பதிப்பகம்
தொகுப்பாசிரியர் - தளவாய் சுந்தரம்

Wednesday, February 24, 2010

எஸ்.ராவின் "நகுலன் வீட்டில் யாருமில்லை"


நவீன பாணி குறுங்கதைகளின் தொகுப்பு இந்த ஆண்டு வெளிவந்துள்ள எஸ்.ரா வின் "நகுலன் வீட்டில் யாருமில்லை".Fables and parables எனப்படும் குறுங்கதை வடிவங்கள் ஏற்கனவே நமக்கு பரிச்சயமானவையே.முல்லா நீதி கதைகள்,ஜென் கதைகள் அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.அவ்வகையில் எஸ்.ரா வின் இந்நூல் தமிழில் மிக முக்கியமான பதிவு.புனைவின் உச்சத்தை தொட்டு செல்லுகின்றன பல கதைகள்.முட்கரண்டிகளும்,மது கிண்ணங்களும்,தீக்குச்சியும்,சிகரெட்டும் உயிர் பெற்று உலவுகின்றன....பேசும் தாவரங்கள்,தவளைகள்,விந்தையான சிறுவர்கள்,நகரும் தீவு என ஒவ்வொரு கதையும் ஒரு மாய உலகினுக்குள் இட்டு செல்கின்றது.இத்தொகுப்பின் கதைகள் யாவும் சிறுவர்களுக்கானது அல்ல.மிகப்பெரிய தத்துவங்களை வெகு சில வரிகளில் உணர்த்தும் கதைகளும் ஏராளம்.

ஸ்பூன் மற்றும் முட்கரண்டியின் காதலை அவைகளின் உரையாடலோடு நகைச்சுவையாய் சொல்லும் கதை "காதல் மேஜை".நகரமயமாக்கல் பறவைகளை காணாமல் போக செய்து விட்டது போலவே தவளைகளையும்...அச்சிறு உயிரினம் குறித்து நாம் நினைத்து கூட பார்ப்பதில்லை.பெருநகரம் ஒன்றில் மிஞ்சும் கடைசி இரு தவளைகள் குறித்த "பெருநகர தவளைகள்",அழிந்துவரும் உயிரினங்கள் குறித்த அபாய எச்சரிக்கையை முன்வைக்கின்றது.குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பிப்பதில் தொடங்கி ஒவ்வொரு காரியத்திற்கு வசதியாய் நாம் அணித்து கொள்ளும் முகமூடிகள் ஏராளம்..இதை உணர்ந்தும் குறுங்கதை "வீட்டிற்குள் ஓடும் ஆறு".




கண்ணீரும் சிரிப்பும் பெருநகர வாழ்க்கையை சிக்கல் இன்றி தொடர அவசியபடுகின்றன என்பதை "கண்ணீர்பூட்டு" கதை உணர்த்துகின்றது.குழந்தையுடன் உரையாடும் மாயவித்தைகாரனின் கதையான "கைமூடி திறந்து", சிறுவர் உலகமானது விசித்திரங்களை விரும்புவதோடு கேள்விகள் நிறைந்ததென்பதை நினைவூட்டுகின்றது.ரயில் பூச்சி மீதேறி தொடங்கும் மீசை முளைத்த சிறுவன் ஒருவனின் சாகச பயணத்தில் அவன் எதிர் கொள்ளும் யாவுமே விசித்திரங்கள்!பேசும் மீன்கள்,மூன்று கண் திருடன்,தும்பிக்கை இல்லா யானைகள் என கற்பனை உலகினுக்குள் முழுதாய் நம்மை இட்டு செல்லும் கதை "எப்படி என்று மட்டும் கேட்காதீர்கள்".

இரு வேறு கதைகளில் வரும் சம்பத்தின் தினகரன் மற்றும் நகுலன் உடனான உரையாடல்கள் வாசித்து கொண்டாடப்பட வேண்டிய புனைவின் உச்சங்கள்!இத்தொகுதியில் வாய் விட்டு சிரிக்க வைத்த கதை "சிறகுள்ள பொறியாளன்".கார்பரேட் வாழ்க்கை தேவதூதனை கூட காதல்,கடன்...என ஆசை கொண்டவனாய் மாற்றி விடும் அவலத்தை நிறைந்த பகடியோடு சொல்லுகின்றது.வாசிப்பு மனிதனை மட்டும் இன்றி தவளையை கூட ஆட்கொண்டு விடும் என்பதை "படிக்க தெரிந்த தவளை" கதை சொல்லுகின்றது."மழையின் எறும்பு" மற்றும் "பகலின் முதுகு" கதைகள் மனிதனின் தேடலுக்கு புத்த பிக்குகளின் தத்துவார்த்த விளக்கங்களை சொல்லுகின்றன.

கொட்டி கிடக்கும் இத்தொகுப்பின் குறுங்கதைகளுள் வெகு சிலவற்றை மட்டுமே பகிர்ந்துள்ளேன்.கதைகளுக்கு சிறகுகள் உண்டு!!தேசங்கள் பல கடந்து தொடர்ந்து உலாவி வரும் பல கதைகள் இப்படியாய் நினைக்க செய்கின்றன.சிறுமி ஒருத்தியை மடியில் வைத்து கொண்டு சில கதைகளை உடனே வாசித்து காட்ட வேண்டும் என தோன்றியது..நவீன வாழ்வின் சிக்கல்கள்,சிறுவர்களின் மாய உலகம்,துறவிகளின் தத்துவார்த்தம்,மிகு காமம்,தொடர்ந்து வரும் நம்பிக்கைகள்.........என இக்குறுங்கதைகள் தொட்டு செல்லாத களங்களே இல்லை எனலாம்!!

வெளியீடு - உயிர்மை
விலை - 80 ரூபாய்

Thursday, January 7, 2010

கி.ராவின் "அந்தமான் நாயக்கர்" மற்றும் "சிறுவர் நாடோடி கதைகள்"

கி.ராஜநாராயணன்,இலக்கிய வாசிப்பை தொடர்ந்து கொண்டிருக்க காரணமான பிரதான எழுத்தாளர்களில் ஒருவர்.எப்பொழுதும் எனது "default buy list" இருக்கும் பெயர் கி.ரா.கி.ராவின் "அந்தமான் நாயக்கர்" நாவல் நீண்ட தேடலுக்கு பிறகு இந்தாண்டு புத்தக சந்தையில் கிடைத்தது.இவரின் "கோபல்ல கிராமம்" மற்றும் "கோபல்ல கிராம மக்கள்" நாவல்களின் தொடர்ச்சியாய் இந்நாவலை கொள்ளலாம்.அவ்விரு நாவல்களை படித்திராதவர்களுக்கு புரிதலில் சிக்கல் ஏதும் இராது.இந்நாவல் முன் வைக்கும் முக்கிய செய்தி நம்பிக்கை துரோகத்தின் வலி.இது பல்வேறு நிகழ்ச்சிகளால் ,கிளைக்கதைக்களால் அழுத்தமாக சொல்லபடுகின்றது.சோகத்தை எடுத்து சொல்வதாக இருப்பினும் கி.ரா வின் வழக்கமான பகடிக்கும்,கிளை கதைகளுக்கும் பஞ்சமில்லை.


சுதந்திரம் பெருவதிற்கு முன்பு வெள்ளையனும்,சுதந்திரம் பெற்ற பின்பு அரசு அதிகாரிகளும் ஏதும் அறியா அப்பாவி முதியவருக்கு இளைத்த நம்பிக்கை துரோகத்தை பற்றியது இக்கதை.அழகிரி நாயக்கர்,ஆங்கிலேய இந்தியாவில் விளையாட்டாய் தேசிய கொடியை கட்டியதிற்காய் அந்தமான் சிறை சென்று வாழ்கையின் பெரும் பகுதியை கழிக்கின்றார்.அவர் சிறையில் இருந்து திரும்பி வரும் பொழுது சுதந்திர இந்தியாவின் மாற்றங்கள் யாவும் நகரத்தாற்கு மட்டுமே சாதகமாவும்,விவசாயிகளின் நிலையில் மாற்றம் ஏதும் இல்லாதிருப்பதும் மெல்ல மெல்ல புலப்படுகின்றது.விவசாய புரட்சி தீவிரம் அடைந்து எங்கும் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்ட சமயத்தில் இந்திய காவல்துறையால் அடித்து கொல்லபடுகின்றார் அழகிரி என்கின்ற அந்தமான் நாயக்கர்.



அந்தமான் நாயகரின் கதையின் ஊடே..சின்ன சின்ன கிளை கதைகள் சொல்லபடுகின்றன.நம்பிக்கை துரோகத்தின் விளைவை சொல்லும் விரலக்கா கதை அதில் முக்கியமானது..எல்லாவற்றின் மையமும் நம்பிக்கை துரோகம்!!!நாவல் ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் நிகழ்காலமும் ,கடந்த காலமும்,கிளை கதைகளும் மாறி மாறி சொல்லப்பட்டு இருப்பது அலுப்பை தரவில்லை.அந்தமான் நாயக்கர் நாவலில் கி.ரா வின் பின்னுரை முக்கியமாய் கவனிக்க பட வேண்டியது.நாவலில் சொல்லபட்டதை காட்டிலும் வெகு அழுத்தமாய் விவசாயிகளின் நிலை குறித்த தமது கருத்துக்களை முன்வைக்கின்றார்.


சிறுவர் நாடோடி கதைகள்,தலைமுறை தலைமுறையாய் சொல்லபட்டு வரும் கதைகள் எத்தனையோ.."பணியார மழை","செக்கு குட்டி போடுமா" ஆகிய கதைகள் தவிர்த்து இத்தொகுப்பில் மற்றவை யாவும் கேள்விபடாத கதைகளே..!!காரண கதைகள் படிப்பதிற்கு சுவாரஸ்யமானவை.அதீத கற்பனையின் வெளிப்பாடான இக்கதைகள் நம்பிக்கைகளின் கதை வடிவம்.காரண கதைகள் படிப்பதிற்கு சுவாரஸ்யமானவை.அதீத கற்பனையின் வெளிப்பாடே இக்கதைகள்.இதொகுப்பிலும் பெரும்பாலானவை காரண கதைகளே..மொச்சை பயரின் நடுவில் இருக்கும் வெள்ளை நிற தோலுக்கும்,நிலவின் கரையாய் புலப்படும் கிழவிக்கும் சொல்லப்படும் கதைகள்,சனிக்கிழமை விடுமுறை என மாறியது எப்படி என பல காரண கதைகள்.கற்பனை நிறைந்த குழந்தைகள் உலகம் அற்புதமானது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக்குகின்றன இது போன்ற கதைகள்.

வெளியீடு - அன்னம்

Tuesday, December 29, 2009

ஆர்மேனியா தேசத்து சிறுகதைகள்

ஆர்மேனியா....சோவியத் யூனியன் குடியரசுகளில் ஒன்றான இந்த தேசத்தின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பிது.இந்த நூலிற்கு அசோகமித்திரன் எழுதியுள்ள விரிவான முன்னுரை ஆர்மேனியா தேசம் குறித்தும்,ஆர்மேனியாவிற்கும் இந்தியாவிற்குமான வர்த்தக மற்றும் காலாச்சார தொடர்பினை குறித்தும் சொல்லும் செய்திகள் ஏராளம்.ஆர்மேனியர்கள் வர்த்தகம் தொடர்பாய் இந்தியாவிற்கு வரும் முன்னரே உலக யுத்த காலத்தில் அகதிகளாய் கொல்கத்தாவிலும்,சென்னையிலும்,கேரளத்திலும் குடியேறி உள்ளனர் என்னும் செய்தி ஆச்சர்யம் தருவதாய் இருந்தது.மேலும் சென்னையில் ஆர்மேனியா வீதியில் மிகப்பழமையான கிறிஸ்துவ தேவாலயம் இன்றும் அவர்களின் சுவடினை நினைவூட்டுவதாய் உள்ளதாம்.இச்செய்திகள் யாவும் படிக்க படிக்க ஆர்மேனியா தேசம் குறித்து அறிய ஆர்வம் மேலிட,இணையத்தில் தேடியதில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்களில் ஒருநாள் முழுதும் மூழ்கி போனேன்.

அடர்ந்த மலைகளும்,பூக்கள் விரிந்த சோலைகளும்,புராதான கட்டிடங்களும் நிறைந்த அழகிய ஆர்மேனியா தேசத்தின் இலக்கிய சூழல் 1990 களில் தொடக்கத்தில் வெகு சிறப்பாய் இருந்துள்ளது.இத்தொகுதியின் சிறுகதைகள் யாவும் 1880-1930களில் எழுத பெற்றவை. "என் நண்பன் நெசோ",சிறு பருவத்து நண்பன் நேசொவை பின்னாட்களில் பரம ஏழையாய் சந்திக்கும் பணக்கார வாலிபனின் கதை.மங்கிய நிலவொளியில் வட்டமாய் அமர்ந்து பேசும் சிறுவர்களுக்கு மத்தியில் விசித்திர கதைகளை சொல்லுவதில் நெசோ ஒரு நாயகன்....ஏற்ற தாழ்வுகள் அற்ற சிறுவர் பிராயம் மெல்ல மெல்ல மறைந்து அவர் அவர் பெற்றோரின் பொருளாதார நிலைக்கேற்ப மாறுபடுவதை அழகாய் சொல்லி இருகின்றார் இக்கதை ஆசிரியர் ஹோவன்னஸ்."வயிறு",பெரும் பசி கொண்ட தச்சன் ஒருவனின் கதை.வருமானம் ஏதும் அற்ற நிலையில் தன் பசியின் பொருட்டு கிடைக்காத உணவு வகைகளை,பார்க்காத பதார்த்தங்களை கனவில் உண்டு மகிழும் விசித்திர பிறவியான தச்சனின் கதையை எழுதி இருப்பவர் தெரனிக்.



"ஆட்டு குட்டி",தனித்து வாழும் ஒரு ஏழை தந்தை தூர நகரத்தில் பெரும் பதவியில் இருக்கும் தம் மகன் குறித்தான நினைவுகளில் மூழ்கி, அவன் வரவை எதிர்நோக்கும் ஒரு நாளின் குறிப்புகள். மலிந்து வரும் உறவுகளுக்கிடையேயான பிணைப்பு குறித்து 1915 இல் எழுத பட்ட இக்கதை கூறுவது ஆச்சர்யம் ஏற்படுத்துகின்றது. "ஒரு சிறுவனும் பெரிய லாரி டிரைவரும் ",உலகத்தை சுற்றி வர ஆர்வம் கொண்டிருக்கும் சிறுவனுக்கும் அந்த ஆவலை தன கற்பனையால் பூர்த்தி செய்யும் ஆர்மேனிய எல்லையை தாண்டிடாத ஏழை லாரி டிரைவருக்குமான நடப்பை சொல்லுகின்றது இக்கதை.உலக வரைபடத்தை மனப்பாடமாய் வைத்திருக்கும் சிறுவனின் கேள்விகளுக்கு,தன் கற்பனையை கொண்டு ஆப்பிரிக்க யானைகளையும்,காட்டேருமைகளையும்,அவர்களின் வேட்டை திறமைகளையும் வர்ணிக்கும் உரையாடல் அழகானது.


"ஆட்டு குட்டி" ,சிறுகதையை ஒத்திருந்த கதை "அம்மாவின் வீடு",கிராமத்தில் தனித்திருக்கும் தாயை சந்திக்க வரும் மகனின் கதை.இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் இரண்டு,"துரோகி" மற்றும் "பெண்களே,நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்" ."துரோகி",பாம்பிற்கும் மனிதனுக்குமான நட்பு சாத்தியமா என்கிற கேள்விக்கு கொஞ்சம் கற்பனை கலந்து பதில் அளிக்கும் கதை இது.வேட்டையின் பொழுது குழியில் விழுந்துவிடும் நாயகன் அங்கு வசித்திருக்கும் பாம்பிடம் நட்பு கொண்டு அதன் உதவியால் மீண்டு வருகின்றான்.சிறப்பு பொருந்திய அப்பாம்பினை சில வருடங்கள் கழித்து அவனே சிறு தொகைக்காக பாம்புகளை வைத்து வித்தை காட்டுபவர்களிடம் காட்டி கொடுத்து விடுகின்றான்.துரோகத்தை தாங்காத அப்பாம்பு கக்கிய விஷமானது அவன் முகத்தை அகோரமாக்கிவிடுகின்றது.நட்பின் துரோகத்தை விசித்திர உறவுகள் மூலம் சொல்ல முயலும் கதை.

"பெண்களே,நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்",1800 மற்றும் 1900இல் நிகழ்வதான இரு வேறு காதல் கதைகள்.இரு கதைகளும் ஏழை - பணக்கார - ஜாதி - எதிர்ப்பு என பார்த்து சலித்த திரைகாதல் போல இருப்பினும் ஆசிரியரின் விவரிப்பு ஏரவான் நகரத்தின் அழகினை அற்புதமாய் வர்ணிப்பதோடு காலங்களுக்கு ஏற்ப மாறும் காதலின் தீவிரத்தை அழகாய் சொல்லி செல்கின்றன.காதல்,துரோகம்,உறவுகளின் பிரிவு என இந்த கதைகள் ஒவ்வொன்றும் ஒரு களத்தை மையபடுத்தியே உள்ளன.வயலட் பூக்களின் தேசமான ஆர்மேனியா குறித்து அறியும் ஆவலை தூண்ட போதுமான செய்திகள் இந்த தொகுப்பில் உள்ளன.ஆர்மேனியா மொழியில் இருந்து ஆங்கிலத்திலும் பின்பு ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.சென்ற பதிவில் குறிபிட்டது போல நேசனல் புக் டிரஸ்ட் தொடர்ந்து இம்மாதிரியான மொழிபெயர்ப்புகளை வெளியிடாமல் போனது வருத்தம் தரும் விஷயமே.

வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட்
தமிழில் முதல் பதிப்பு - 1991
தமிழில் மொழிபெயர்ப்பு - வல்லிகண்ணன்

Saturday, September 5, 2009

கண்மணி குணசேகரனின் "ஆதண்டார் கோவில் குதிரை"

"இந்த மண்ணை,மக்களை,மொழியை,முந்திரிகளை விட்டு விட்டு எங்கேயோ ஒரு நகர காட்டுக்குள் அடைபட்டு,உயிரற்றவர்களை எழுத நேர்த்திடாதவாறு ஓர் எதிர்காலம் எனக்கு வாய்க்குமானால்,அது போதும் எனக்கு."

-- கண்மணி குணசேகரன்

முந்திரி காடுகளும் அதன் புழுதியில் தோய்ந்த மனிதர்களுமே கண்மணி குணசேகரனின் கதைகளில் பிரதானம்.சமீபத்தில் வாசித்த மிக சிறந்த புத்தகம் இது.மண்ணோடு கலந்த கதைகள் நெருக்கமானதொரு உணர்வை தரவல்லவை.ஒவ்வொரு கதையிலும் ஒரு கதாபாத்திரம் நம் மனதை தொட்டு செல்வதாய் உள்ளது..பெண்கள்,காதல்,தொழில் நிர்பந்தங்கள்,தலைமுறை இடைவெளி,கடவுள் நம்பிக்கை என பொதுவான விஷயங்களை முற்றிலும் புதிதாய் சொல்லி செல்கின்றன இக்கதைகள்.முந்திரி காடுகள் குறித்து அறிமுகம் எனக்கு இருந்ததில்லை,சேலம் - தருமபுரி இடையே உள்ள கிராமங்கள் பல இந்த முந்திரி காடுகளை கொண்டே பிழைக்கின்றன என அப்பா சொல்லி அறிந்தேன்.

"பால் நரம்பு",குழந்தை பேறில்லாத சோலைச்சி பைத்தியம் ஆனா கதையை கனமான சோகத்தோடு விவரிக்கும் கதை.மனநிலை பாதிக்க பெற்றவர்கள் காணும் பொழுது மனம் இனம் புரியாத ஒரு கனத்தை கொண்டுவிடும்..கோபியின் 'உள்ளே இருந்து சில குரல்கள்" படித்த பின் இவர்களின் மீதான பார்வை முற்றிலும் மாறி போனது."நினைப்பும் பிழைப்பும்",அடுத்த வீட்டு நிகழ்வுகளில் மூக்கை நுழைக்கும் வழக்கம் அநேகருக்கு அதிலும் முக்கியமாய் பெண்களுக்கு.



"ராசபாட்டை",கூத்து கலைஞர்கள் குறித்த பதிவுகள் மிக குறைவு.இந்த சிறுகதை எனக்கு எஸ்.ராவின் "கர்ண மோட்சம்" குறும்படத்தை நினைவூட்டியது.கூத்து நடத்திட கிராமம் ஒன்றிற்கு செல்லும் கூத்து கோஷ்டியினரின் சோக அனுபவங்களே இக்கதை."முறிவு",எலும்பு முறிவிற்கு நாட்டு வைத்தியம் செய்யும் முதியவர்,தலைமுறை இடைவெளியின் காரணமாய் உழலுவதை சொல்லும் கதை.

கூத்து,நாட்டு வைத்தியம் வரிசையில் இந்த தலைமுறையினர் அறியாத மற்றொரு தொழில் பாத்திரங்களுக்கு ஈயம் பூசுவது.ஒடுக்கு எடுக்க,ஈயம் பூச ஊர் ஊராய் திரியும் ஒரு தொழிலாளி நிரந்தரமாய் தங்கிட வீடு இன்றி தவிப்பதை வெகு இயல்பாய் சொல்லும் கதை 'தாய் வீடுகள்".சொந்த வீடு குறித்த ஏக்கத்தை அழகாய் பதிவு செய்கின்றது இக்கதை.மருதாணி வாசம் விரும்பாதவர்கள் யாரும் இல்லை.மருதாணி வாசம் முகர்ந்திட துடிக்கும் பண்ணை கூலி சிறுவன் ஒருவனின் ஏக்கத்தை சொல்லுவது "வாசம்".

கண்மணி குணசேகரனின் கதைகளில் அழிந்து வரும் கலைகள்,தொழில்கள் குறித்த கவலை அதிகம் தெரிகின்றது.அழிந்து வருவது கலைகள் மட்டும் அல்ல அந்த கலைஞர்களின் வாழ்கையும் தான்.தலைமுறை தலைமுறையாய் கூத்து கட்டியவர்கள் இன்று சினிமா பாட்டுக்கு நடனம் ஆடும் நிலைக்கு ஆளானது சமூகத்தின் அக்கறையின்மையாலேயே..எதையும் ஒதுக்கி விடமுடியாதபடி இத்தொகுப்பில் எல்லா சிறுகதைகளும் அர்த்தம் மிகுந்து ஏதோ ஒரு செய்தியை சொல்லுவதாகவே உள்ளது .

வெளியீடு - தமிழினி
விலை - 50 ரூபாய்

Sunday, August 23, 2009

கந்தர்வனின் "கொம்பன்" - சிறுகதை தொகுப்பு

எழுத்தாளர் கந்தர்வன் குறித்த அறிமுகம் இதுவரை எனக்கில்லை.இவரின் இந்த சிறுகதை தொகுப்பு இவரின் பிற நூல்கள் குறித்து அறியும் ஆவலை அதிகரிக்க செய்வதாய் அமைந்துவிட்டது.இந்த தொகுப்பின் கதைகள் அனைத்தும் ஒரே வகை என சொல்லிவிட முடியாது.கிராமம்,நகரம் என கதைதளங்கள் மாறுகின்றன.இதில் "தண்ணீர்" சிறுகதையை படித்ததும் ஆகா இந்த கதை இவருடையதா என எப்பொழுதோ படித்து,நெகிழ்ந்ததை மீட்டு தந்தது.பல நடைமுறைகள்/விஷயங்கள் சென்ற தலைமுறையோடு அழிந்துவிட்டது..அதில் சில செவி வழி செய்தியாய் மட்டுமே இந்த தலைமுறைக்கு மிஞ்சி இருக்க..அடுத்த தலைமுறைக்கு அதுவும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே...கந்தர்வனின் கதைகள் முழுதும் இந்த ஆதங்கமே மேலோங்கி உள்ளது..

"கொம்பன்",மந்தை மாடுகள் ரெண்டு,உளவு மாடுகளாக ஆக்கபடுவதை வெகு அழகாய் சித்தரிக்கும் கதை.அந்திப்பொழுதில்,மேய்ச்சல் முடித்து ஊர் திரும்பும் மந்தை மாடுகள் கழுத்தின் மணியோசை தூரத்தில் ஒலிப்பதை, கேட்பதற்கு அற்புதமாய் இருக்குமென அப்பா சொல்லி கேட்ட பொழுது அந்த ஓசையை கற்பனை செய்து பார்க்கவே சுகமாய் இருந்தது.விருமாண்டி திரைப்படத்தில் ஒரு பாடலில் அழகாய் அவ்வோசையை இணைத்திருப்பர்.மந்தையில் கம்பீரமாய்,சுதந்திரமாய் திரிந்த மாடுகள் உழுவதற்கு ஏற்ப தயார் செய்யபடுவதை விரிவாய் பதிவு செய்கின்றது இக்கதை.


"கதை தேசம்",இந்த கதையை படிக்க தொடங்கிய பொழுது,என்ன ஒரு சம்பந்தம் அற்ற தலைப்பு என தோன்றியது..வாசிக்க வாசிக்க இதை விட வேறு தலைப்பேதும் பொருத்தமில்லை என தோன்றியதில் வியப்பில்லை.ராமேஸ்வரத்திற்கு நீங்கள் சென்றவர் என்றால் நன்கு புரியும்.வேண்டுதல்களை நிறைவேற்ற வரும் வடகத்தியர்களும்,அவர்களை மொய்க்கும் கைடுகளும்,ஊர் சுற்றி காட்டி உண்மையும் பொய்யுமாய் கதைகள் பலவற்றை தருவித்து பணம் சம்பாதிக்கும் அவர்களின் ஒரு நாள் பொழுதினை உடன் இருந்து பார்ப்பது போல இருக்கின்றது இக்கதையை வாசிக்கும் பொழுது.நான் இதுவரை படித்த சிறுகதைகளில் இக்கதை குறிப்பிடத்தக்கது.



"தண்ணீர்",முதல் பத்தியில் குறிப்பிட்டது போல வெகுவாய் கவர்ந்த கதை இது.தமிழக கிராமங்கள் பல குடிநீருக்கு படும்பாட்டை தினமும் ஊடகங்களில் படித்தும்,பார்த்தும் வருகின்றோம்.அப்படிப்பட்ட கிராமம் ஒன்றில் குடிநீருக்காக பெண்கள் பயணிகள் ரயிலில் ஏறி அடித்து பிடித்து தண்ணீர் பிடிப்பதை சோகமும் சிரிப்புமாய் சொல்லும் கதை."தெரியாமலே",அரசு அலுவலகம் ஒன்றின் தினசரி காட்சிகளை விவரிக்கும் இக்கதைகளம் எல்லா அலுவலகங்களுக்கும் பொருந்தும்.அலுவலக ஓய்வு நேரங்களில் கூடி கூடி சினிமா தொடங்கி அரசியல்,விளையாட்டு என பேசும் நண்பர்கள் கூட்டம் ஒன்று கிராமத்து கிழவர் ஒருவரிடம் சிறுமை பட்டுபோகும் காரியம் ஒன்றை நேர்த்தியாய் சொல்லும் கதை.

"அதிசயம்",விழுதூன்றி வளர்ந்த பனை மரம் ஒன்றை தன உடல் பலத்தால் சாய்க்கும் வீரன் ஒருவனின் கதை.பெரும் மரியாதையோடு கிராமத்தினரால் வரவேற்கபட்டு சாகச வீரனாய் தோன்றும் அவ்வீரன் பனை மரத்தை வேரோடு விழுதாட்டிய பிறகு அதற்கு தட்சணம் வேண்டி ஊரார் முன் கையேந்தும் காட்சி பல செய்திகள மறைமுகமாய் சொல்லி செல்கின்றது."மணியாடர்",பணத்தின் பொருட்டு ஏற்படும் பிரிவுகள் தவிர்க்க முடியாதவை.வெளியூருக்கு தம் குழந்தைகளை பணிக்கு அனுப்பும் பெற்றோர்களின் மனவோட்டத்தை,பிள்ளைகள் அதை இயல்பாய் எடுத்து கொள்ளுவதையும் கிராமத்து பின்னணியில் சொல்லி உள்ளார்.

இவை தவிர்த்து "அவுரி","தலைவர்","யாரோ ஒருவர்","காளிப்புள்ளே" ஆகிய சிறுகதைகளும் இத்தொகுப்பில் உண்டு.நடைமுறையில் நாம் கவனிக்க தவறிய,கவனிக்க வேண்டிய சின்ன சின்ன காரியங்களை வெகு அழுத்தமாய் பதிவு செய்துள்ளார் கந்தர்வன்.அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பிது.

வெளியீடு - அகரம்(முதல் பதிப்பு)
விலை - 30 ரூபாய்

Tuesday, August 11, 2009

கி.ரா வின் "கொத்தை பருத்தி"...சிறுகதை தொகுப்பு

கி.ராவை வாசிக்கும் பொழுதெல்லாம் எங்கள் கிராமத்தின் நினைவுகள் வந்து போகும்..சம்சாரிகளின் வாழ்வை நகைச்சுவை கலந்து மிகையின்றி சொல்வதில் கி.ராவிற்கு நிகர் எவருமில்லை.1985 இல் வெளிவந்துள்ள இத்தொகுதியின் பெரும்பான்மையான கதைகள் கால சுழற்சி ஏற்படுத்தும் மாற்றங்களால் சம்சாரிகள் சந்திக்கும் இன்ப துன்பங்களை குறித்து சொல்பவை.மாற்றங்கள் வரவேற்க படவேண்டியபவையே நம்மை பாதிக்காதவரை..விவசாயம் அழிந்து வருவது குறித்த ஏக்கமும் அக்கறையும் கி.ராவின் எழுத்துக்களில் எப்போதும் காணலாம்..

"கொத்தை பருத்தி", விவசாய நிலம் இல்லாத காரணத்தால் பில்லா கலெக்டருக்கு பெண் கொடுக்காத செங்கன்னா நாயக்கர் பின்னாளில் விவசாயம் பார்க்கும் தனது பேரனுக்கு பெண் தேடி அலையும் கதை.இந்த கதையில் பெண் பார்க்க பில்லா கலெக்டரின் தந்தை செங்கன்னா வீட்டிற்கு வரும் காட்சியை கி.ரா நகைச்சுவையோடு விவரித்திருக்கும் அழகு..திரும்ப திரும்ப படிக்க தூண்டும்."அங்கணம்",குளிப்பதற்கும்,பாத்திரங்கள் கழுவவும் வீட்டின் பின் பகுதியில் இருக்கும் அங்கணம் குறித்த ஒரு வீட்டின் நினைவுகளை அதிக நகைச்சுவை கொண்டு விவரித்துள்ளார் இக்கதையில்..கி.ராவின் "நாற்காலி" சிறுகதையும் இது போலவே..சில பொருட்கள்,இடங்கள்,காரியங்கள் மீது ஏனோ மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுவதுண்டு,அவை குறித்த நினைவுகளில் மூழ்கி போவதில் ஒரு அலாதி சுகமுண்டு.




"ஒரு செய்தி", பகல் பொழுதுகளில் வயல்களில் ஓடி திரிந்தும்,மாலையில் ஊர் மந்தையில் கூட்டமாய் விளையாடி திரிந்த குழந்தைகள் தீப்பெட்டி தொழில் சாலைக்கு வேளைக்கு செல்வதை சோக செய்தியாய் தெரிவிக்கும் கதை.பரத்வாஜம்,ஆக்காட்டி குருவி,அக்காகுருவி என வித விதமான் பட்சிகளின் குரல் கேட்டு விடியும் கிராமத்து காலைகள், இப்பொழுதெல்லாம் நகரத்திற்கு குழந்தைகளை அழைத்து செல்ல வரும் பேருந்துகளின் ஹாரன் சத்தத்தில் திடுக்கிட்டு விழிப்பதை கொஞ்சம் கோபமாகவே பதிவு செய்துள்ளார்.இந்த சிறுகதை தொகுதியை பல வருடங்களுக்கு முன்பே படித்துள்ளேன்...மீண்டும் வாசித்த பொழுது இந்த சிறுகதை அப்பொழுது ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடிந்தது.கிராமம் ஒன்றில் கழிப்பிடம் அமைத்து அதை உபயோகிக்க அந்த மக்களை பயிற்றுவிக்கும் ஒரு சுகாதார அதிகாரியின் ஓயாத உழைப்பும்,முயற்சிகளும் பயனற்று போவதை தன் பாணியில் சொல்லி இருப்பார் கி.ரா.கழிப்பிட கட்டடத்தை சுகாதார கேடென கருதி முள் வேலியிட்டு அடைத்து வைத்திருக்கும் கிராமங்கள் இன்றும் இருக்கின்றன தானே??!!....


"இவர்களை பிரித்தது"...ஒற்றுமையாய் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த அண்ணன் தம்பிகள்..கால போக்கில் திருமணம்,பிள்ளைகளின் சம்பாத்தியம் என வாழ்கை சூழல் மாற தனியே தனியே பிரிந்து,பேச்சு வார்த்தை முறிந்து வீதியில் சண்டையிட்டு கொள்ளும் நிலைக்கு ஆளாவதை காரணங்கள் ஆராயாமல் சொல்லும் இக்கதை கூட்டு குடும்பங்கள் மலிந்து வரும் தற்பொழுதைய சூழலில் அதற்கான காரணங்களை யோசிக்க வைப்பதாய் இருக்கின்றது.இவை தவிர்த்து "குரு பூசை","சுப்பண்ணா","நிலை நிறுத்தல்.","உண்மை","விடுமுறையில்"..ஆகிய சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவையே.


இரவின் ஆழ்ந்த நிசப்தத்தில் இத்தொகுதியை படித்து முடிந்தேன்....என் கிராமம் குறித்த நினைவுகளை அதிகமாய் கிளறிவிட்டது இந்த வாசிப்பு.. .நகரத்தின் போலி நாகரிகமும்,சினிமாத்தனங்களும்,இயந்திர நடைமுறைகளுக்கு சிக்காமல் என் கிராமம் அதன் போக்கில் தொடர்ந்து கொண்டிருப்பதில் ஒரு நிம்மதி. மேலும் கி.ரா வை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற ஆவலும் அதிகரித்தது.அவரின் தற்பொழுதைய புதுச்சேரி முகவரி அறிந்த நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன்.

வெளியீடு - அன்னம்

Thursday, July 30, 2009

பஷீரின் "உலக புகழ் பெற்ற மூக்கு" - சிறுகதை தொகுப்பு

பஷீர்,மலையாள இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர்.பஷீரின் கதை நாயக நாயகிகள் பேரழகும்,பெருஞ்செல்வமும் கொண்டு சாகசங்கள் புரிபவர்கள் அல்ல.உங்களையும் என்னையும் போல கோபமும்,நகைச்சுவை உணவும் கொண்ட சாதாரண மனிதர்கள்.பஷீரின் நாவல்கள் மட்டுமே இதற்கு முன்பு படித்திருக்கின்றேன்.இவரின் "பாத்திமாவின் ஆடு","பால்ய கால சகி" குறுநாவல்கள் குறித்து ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.சில எழுத்தாளர்களால் மட்டுமே மோசமான ஏழ்மையை கூட துன்பம் கூட்டாமல் வர்ணிக்க முடியும்.வண்ணதாசன் கதைகளை தொடர்ந்து வாசிப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு எளிதாய் புரியும்.பஷீரின் எழுத்துக்கும் அந்த வலிமை உண்டு.மிகுந்த நகைச்சுவை கொண்டு சொல்லப்பட்டுள்ளன இத்தொகுப்பின் கதைகள்.

"ஐசு குட்டி", வாய் விட்டு சிரிக்க வைக்கும சிறுகதை. பஷீர், பெண்களின் மனவோட்டத்தை,பெருமை பீற்றும் பேச்சுக்களை வர்ணிப்பதில் தேர்ந்தவர்.இவரின் "பாத்திமாவின் ஆடு" நாவல் அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.பிரசவ வேதனையிலும் ஐசுக்குட்டி நாட்டு மருத்துவச்சி வேண்டாமென பிடிவாதம் பிடித்து கார் பிடித்து பட்டணத்தில் இருந்து மருத்துவரை கொண்டு வர நடத்தும் நாடகமே இக்கதை.அவள் நடத்தும் அத்தனை நாடகமும் பின்நாட்களில் பெருமை பீற்றவே...பெண்களுக்குள்ள பொதுவான குணத்தை நகைச்சுவை மிகுந்து கதையாக புனைந்துள்ளார் பஷீர்."பூவன் பழம்",கணவன் மனைவிக்கு இடையே இருக்க வேண்டிய அன்னோனியத்தை அழகாய் சொல்லும் கதை. சில கருத்து பேதம் இருப்பினும் இக்கதை ரசிக்க கூடியதாகவே தோன்றியது.




"எட்டு கால் மம்மூது",மம்மூது போன்றவர்கள் கிராமங்களில் அதிகம் தென்படுவர்.கொடுக்கும் கூலியை வாங்கி கொண்டு சொன்ன வேலையை செய்து கொண்டு பார்க்க அரைகிறுக்கன் போல இருக்கும் மம்மூது ஊரில் நடக்கும் சுவாரஸ்யம் மிகுந்த செய்திகளை தருவதில் முதலாமவன்.கிராமத்து டீ கடை வெட்டி அரட்டைகளில் பேச்சு பொருளாய் மம்மூதே இடம்பெற தொடங்கும் பொழுது நிகழும் ஆச்சர்யங்களும்,அதிர்ச்சிகளுமே மீதி கதை."பகவத் கீதையும் சில முலைகளும்", இக்கதையில் தனது சக எழுத்தாளர் நண்பர்கள் குறித்தும்,புத்தக பதிப்பாளர் நண்பர் ஒருவர் குறித்த தனது நினைவுகளை காட்சிகளாய் பகிர்ந்துள்ளார்.

"சிரிக்கும் மரப்பாச்சி",இத்தொகுப்பில் எனக்கு மிக பிடித்த கதை.அழகான காதல் கதை.ஏழை காதலி,பணக்கார காதலன் என திரைபடங்களில் சுழற்றி அடிக்கப்படும் சராசரி காதல் கதை தான்..இருப்பினும் பஷீரின் வார்த்தைகளில் படிக்கும் பொழுது ஏற்படும் நிறைவு அலாதியானது."தங்கம்",முதல் பத்தியில் சொன்னது இக்கதைக்கு பொருந்தும்.துன்பத்தில் உழலும் பிச்சைகாரனான கூனன் நாயகன்,குறைபாடுகள் நிறைந்த தனது மனைவி தங்கத்தை சந்தித்த நாள் தொடங்கி,அவளை கைபிடித்து வரை தனது கதையை,தனது குறைகளை சோகம் கூட்டாமல் எதார்த்தமாய் சொல்லுவதாய் உள்ளது இக்கதை.

இவை தவிர்த்து "அம்மா",'மூடர்களின் சொர்க்கம்","பர்ர்ர்...","புனித ரோமம்" ஆகிய கதைகளும் ரசிக்கும் ரகம்.இத்தொகுப்பை குறித்து குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை இரண்டு.முதலில்,குளைச்சல். யூசுபின் மொழிபெயர்ப்பு,இடறல் ஏதும் இல்லாத நேர்த்தியான மொழிபெயர்ப்பு.இரண்டாவது ஒவ்வொரு கதைக்கும் வரையபட்டுள்ள கார்டூன் சித்திரங்கள்.பஷீரின் முகம் கார்டூனுக்கு ஏற்றது..கதைகளுக்கேற்றபடி வெகு அழகாய் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன.எதார்த்தம்,பகடி,போலித்தனம் கலைந்த மனித முகங்கள்...இவையே பஷீரின் கதைகளில் பிரதானம்.இந்த தொகுப்பின் கதைகளும் அது போலவே!!

வெளியீடு - காலச்சுவடு
விலை - 240 ரூபாய்