Monday, August 11, 2014

மிலேச்சன்களின் உலகம்...Uzak (துருக்கி)


எதார்த்தத்தை மீறிய ஆச்சர்யங்கள் துருக்கி இயக்குனர் சிலானின் (Nuril Bilge Ceylan) படைப்புகள். அதிகமாக இவர் படங்களை பார்க்கப் பார்க்க இன்னும் அதிகமாக சினிமாவை நேசிக்கத் துவங்குகிறேன்.ஆண் மன சலனங்களை இவரைப் போல வேர் வரை ஊடுருவிச் சென்று கதை சொன்னவர் வேறு யாரும் உண்டா எனத் தெரியவில்லை.சிலானின் கதையுலகத்தில் பெண்களும் உண்டு. ஆனால் பிரதானமாக முன்னிறுத்தப்படுவதோ ஆண்களே. துரோகம் என்ற ஒற்றைச் சொல்லை சுற்றி கட்டமைக்கப்படுகின்றன சிலானின் கதையுலகம். அதன் நீட்சியாய் தொடரும் தடுமாற்றங்கள்,குற்ற உணர்வுகள், மன்னிப்புகள் இவற்றையும் காண்பிக்க தவறுவதில்லை இவர்.

Climates,Once Up On A Time In Anatolia வை தொடர்ந்து பார்த்த இவரின் Distant(Uza) மற்றுமொரு காவியம்.

மஹ்மத் - நடுத்தர வயதினன், படித்தவன்,ரசனைக்காரன், விவாகரத்து பெற்றவன்,புகைப்பட கலைஞன்,தனிமை விரும்பி,நாகரீகம் பேணுபவன்,பணக்காரன்,ஸ்த்ரி லோலன்,பந்த பாசங்கள் அற்றவன்;யூசூப் - இளைஞன்,ஏழை,கிராமத்தான்,வேலை தேடுபவன், பொறுமைசாலி, உறவுகளை நேசிப்பவன். இவ்விருவரும் ஒரே வீட்டில் தங்க நேரிடும் நாட்களின் விவரிப்புகள் தான் Distant(Uzak).

இணக்கமாய் தொடரும் நாட்கள்..மெல்ல மெல்ல மஹமெத்தின் அழுக்குக்கான மனநிலையையும்,பாவப்பட்ட யூசுப்பின் பரிதாப நிலையையும் நமக்கு விளக்கிச் செல்பவை.படித்த படிப்பும்,கொண்ட ரசனையும் மெஹ்மத் அந்த ஏழை இளைஞன் மீது காட்டும் வன்மத்தில் அர்த்தமற்று போகின்றன. பெருவாழ்விற்கு சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் குறைந்த பட்ச சிநேகம் போதும் என்பதை உரத்துச் சொல்லும் கதை.இவ்விருவரும் தனிமையை செலவிடும் காட்சிகள் முக்கியமானவை.வேலை ஏதும் கிடைக்காத சூழலில்,பனி போர்த்திய சாலையில் மகிழ்ச்சியாய் சுற்றித் திரியும் ஜோடிகளை யூசூப் பார்த்துக் கொண்டு நிற்பதும்,செய்வதறியாமல் எதிர்படும் பெண்ணொருத்தியை காரணமேயில்லாமல் துரத்துவதும்..பரிதாபம்!





மஹ்மூதும்,யூசுப்பும் அனடோலியா பகுதிக்கு புகைப்படம் எடுக்க செல்லும் காட்சிகள் அவர்கள் இருவரும் பயணிக்கும் திசைகளை நமக்கு அறிவிப்பவை.குறைந்த பட்சம் யூசுபிற்கு அவன் தாய் குறித்த அக்கறை உண்டு.அவளுக்காக அவன் சிரமங்கள் ஏற்க துணிகிறான்.உறவுகளின் பிடிமானம் ஏதுமில்லாமல் ரசனை சார்த்து இயங்கும் மஹ்மத்,யூசுப்பின் முன் தாழ்ந்து போகிறான்.பனிக்காலத்தில் தொடங்கும் கதை வசந்த காலத்தில் முடிவுறுகிறது.பனி உருகி ஆவியாகிப் போனது போல மஹ்மூத்தின் சுற்றி இருந்தவர்கள் விலகிப் போகிறார்கள்.அவன் அது குறித்து அலட்டிக் கொள்பவனும் இல்லை.அவன் அப்படித்தான்.

சிலான் மாபெரும் புகைப்படக்காரர் என்பது காட்சிக்கு காட்சி வெளிப்படும் அழகில் தெரிகிறது.இஸ்தான்புல் நகரை நேரில் சென்று பார்த்துவிட ஆசையை தூண்டும் ஒளிப்பதிவு.ரசனைகளில் மூழ்கித் திளைக்கும் மனிதர்கள் உண்மையில் மனிதர்களை விட்டு விலகியே இருக்கிறார்கள். அவர்களின் உலகத்தில் புதியவர்களின் வரவும்,கடந்த காலத்தின் நினைவுகளும் தொந்தரவிற்குரியவை.மஹ்மூத்தின் உலகத்தைப் போல...

Sunday, August 3, 2014

ரேமண்ட் கார்வர் சிறுகதைகள்...

அமெரிக்க சிறுகதையாசிரியர் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகள், உறவுகளுக்குள் நிகழும் அன்றாட காட்சிகளின் எதார்த்த விவரிப்புகள். பெரும்பாலான கதைகள் கணவன் - மனைவிக்கிடையேயான நிகழ்வுகளின் பதிவு.தினசரி வாழ்வில் சிறியதும் பெரியதுமாய் எத்தனை விதமான சிக்கல்கள்.நாம் நினைத்தே பாராத விஷயங்களை எடுத்தாளுகின்றன ரேமன்ட்டின் கதைகள்.இவர் கதையுலகத்து பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள்,பதற்றம் நிறைந்தவர்கள்,நினைத்தால் உருகி அழுதிட கூடியவர்கள்.ஆண்களோ பொழுதுபோக்குகளில் விருப்பம் உள்ளவர்கள், குடிகாரர்கள்,குழப்பம் நிறைந்தவர்கள்.இருவேறு திசையில் பயணிக்கும் இவர்கள் இணைந்த வாழ்வு உண்மையில் சுவாரஸ்யமானதே. காதலிப்பவர்கள்,திருமணம் ஆனவர்கள்,விவாகரத்து பெற்றவர்கள்,பெறப் போகிறவர்கள் என....

"ஒரு சிறிய நல்ல காரியம்" - இத்தொகுப்பில் மிகப் பிடித்த கதை.ஒரு எதிர்பாராத விபத்தும் அதன் தொடர்ச்சியான மருத்துவமனை நாட்களும் கணவன் மனைவியிடையே உண்டு பண்ணும் உணர்வுகளைத் தாண்டிய நெருக்கம் குறித்தது.நோயுற்றவர் குணமாகும் வரையிலான மருத்துவமனை தங்கலும்,அங்கு செலவிடப்படும் இரவுகளும் அமானுஷ்யம் நிறைந்தவை. தேறி வருவது மகனாக இருக்கும் பட்சத்தில்,அந்த நிலை இன்னும் கொடுமை. நம்பிக்கை வேர் விட்டு படர்ந்திருக்கும் இடம் மருத்துவமனைகள். அவர்கள் இருவருக்கும் இடையே நிகழும் உரையாடல்களில் வெளிப்படும் உண்மை இது.காட்சிகளின் விவரிப்பில் அவர்களின் முக பாவங்களை கூட கற்பனை செய்யமுடிகிறது.மகனை குறித்த சோகத்தில் உள்ள இவர்களுக்கும் ஒரு பேக்கரி கடைக்காரனுக்குமான உரையாடல் சொல்லும்..வாழ்க்கை தத்துவத்தை.


"எங்கிருந்து அழைக்கிறேன் நான்" - குடிமறதி விடுதியில் சந்தித்துக்கொள்ளும் இரு மனிதர்களின் கதை.அவர்களின் உரையாடல் வழி நமக்கு அறிமுகமாகும் பெண்கள்,இவர்களை சகித்துக் கொண்ட காதலிகள்.புகைபோக்கி சுத்தம் செய்யும் பெண்ணை காதலித்து மணந்து கொண்ட கதையொன்று அழகானது. பெரும் சண்டையோடு மோசமாக முடிவுறும் காதலும்,ஒரு சமயம் கவித்துவமாகவே தொடங்கியிருக்க வேண்டும் என்பதற்கோர் உதாரணம் இச்சிறுகதை.


'ஜூரம்' - விட்டோரியோ டிசிகாவின் 'Children are watching Us' திரைப்படத்தை ஒரு நிமிடம் நினைவூட்டிய சிறுகதை.பிள்ளைகளை விட்டுவிட்டு வேறொருவனுடன் செல்லும் தாய்.அவர்களை பராமரிக்க ஆள் கிடைக்காமல் கஷ்டப்படும் தந்தை.அவர்களுக்கு உதவ வரும் மூதாட்டி எனத் தொடரும் கதையில் படித்த நாயகனும் நாயகியும் ஓவிய கலையின் நுட்பத்தை அறிந்த அளவிற்கு வாழ்வின் நுணுக்கங்களை அறியாமல் உள்ளனர்.வீட்டுக்கு வேலைக்கு வரும் மூதாட்டியும் அவள் கணவனும் வாழ்வை திட்டமிட்டு வெகு அழகாக எடுத்துச் செல்கின்றனர். கல்வியறிவு, ரசனை,இவற்றைத் தாண்டி வேறு பல விஷயங்கள் இல்லற வாழ்விற்கு தேவை என்பது எவ்வளவு உண்மை.

கதீட்ரல் - கண் பார்வையற்ற மனைவியின் தோழனோடு ஒருவன் கொள்ளும் நட்பின் தொடக்க பொழுதுகள்.கண்பார்வையற்றவனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதறியாமல் சலித்துக் கொள்ளும் இவன், அவன் வருகைக்கு பிறகு மெல்ல மெல்ல அவன் உலகிற்குள் நுழைகிறான்.அவர்கள் இருவரும் சேர்ந்து வரையும் தேவாலைய படத்தின் நெளிவுசுளிவுகளை போன்றதே அவர்கள் கொள்ளும் நட்பும்.

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு - ஒரு கொடூர கொலை. கொலையான பெண்ணின் பிணத்தை முதலில் கண்டெடுக்கும் மனிதனின் மனநிலை தொடரும் நாட்களில் எவ்வாறிருக்கும்? அவனைக் காட்டிலும் அவன் மனைவி அதிக குற்ற உணர்ச்சி கொள்கிறாள்.பல நேரம் பயணப்பட்டு அந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கு கொள்கிறாள். இறந்தவள் குறித்த சின்ன சின்ன விஷயங்களையும் கேட்டறிகிறாள். இவளுக்கும் அவளுக்குமான பிணைப்பு பெண் என்பதைத் தாண்டி வேறொரு புள்ளியில் இணைகிறது..

சின்னஞ்சிறு வேலை - ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவின் மருத்துவமனை நாட்களோடு,அவரின் இறுதி நிமிடங்களையும் கோர்வையாக நம் முன் வைக்கிறது இக்கதை.நாம் இன்றும் போற்றிக் கொண்டாடும் ஒரு மாபெரும் இலக்கிய ஆளுமையின் மரணத்தை அருகில் இருந்து பார்த்தது போலொரு உணர்வு.செகாவை குறித்த இந்தக் கதையில் டால்ஸ்டாயும்,கார்க்கியும் வருகிறார்கள்.செகாவின் கதைகள் உங்கள் மனதிற்கு நெருக்கமானவை என்றால் இக்கதை நிச்சயம் கண்ணீர் வர வழைக்கும்.

அடுத்த வீட்டுக்காரர்கள்,பெட்டிகள்,அவர்கள் யாரும்உன்னுடைய கணவன் இல்லை என நீளும் பட்டியலில் ஒரு கதையைக் கூட வேண்டாம் என ஒதுக்க முடியாதபடி அத்தனையும் பொக்கிஷங்கள்.மனித மன சலனங்களை ஊடுருவிச் செல்லும் கதைகள் இவை.ஒரு சில கதைகளை தவிர்த்து மொழிபெயர்ப்பும் சரியாகவே அமைந்துள்ளது.

மகத்தான வாசிப்பனுபவம்!


-வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்பரப்பு-
வெளியீடு - காலச்சுவடு