Monday, June 30, 2008

கோபல்ல கிராமம் - கீ.ராஜநாராயணன்




கி.ரா வின் கதைகளோடு எப்போதும் எனக்கு ஒரு தனிய பிரியம் உண்டு....என் தந்தை எனக்கு அறிமுகபடுத்திய முதல் தமிழ் இலக்கிய நாவல் கி.ரா வின் பிஞ்சுகள்..குழந்தைகளுக்கான அக்குறுநாவல் வழக்கில் இருந்து மறைந்த பல்வேறு தமிழ் சொற்கள்,நாம் அறிந்திரா பறவை இனங்கள்,கிராமத்து சிறுவன் கொண்டிருக்கும் கற்பனைகள்,பறவைகள் குறித்து யாவும் அறிந்த வேதி நாயக்கர் .........என தன்னுள்ளே கொண்டிருக்கும் சேதிகள் எண்ணில் அடங்கா....நிச்சயம் அந்நாவல் குறித்து இவ்வலைத்தளத்தில் பதிவு செய்வேன்..

கி.ராவின் கோபல்ல கிராமம் நாவலை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் படித்தேன்..கரிசல் இலக்கியம் பகட்டில்லா,எளிய சொற்கள் கொண்டு,வட்டார மொழி வழக்கில்,கிராமிய மனம் கொண்டு அம்மக்களின் வாழ்வியல் கதை சொல்லும் இலக்கியம்..கரிசல் இலக்கிய முன்னோடி எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் கி.ரா.அவரது "கோபல்ல கிராமம்","கோபல்ல கிராமத்து மக்கள்" ஆகிய இரு நூல்களும் பெரும் வரவேற்பை பெற்றவை..இதில் "கோபல்ல கிராமத்து மக்கள்" நாவல் சாகித்திய அகாடமி விருது பெற்றது.

கோபல்ல கிராமம் உருவான கதை,அவ்வூரின் மக்கள்,அவர்கள் தொழில்கள்,பழக்க வழக்கங்கள்,ஊரில் மதிப்பு கொண்ட கோட்டையார் குடும்பம் என கதை முழுதும் கோபல்ல கிராமத்து மக்களோடு ஒருங்கே செல்கிறது..கதை நிகழ்வது சுந்தந்திரம் பெறுவதற்கு வெகு முன்னே..கோபல்ல கிராமம் உருவான கதை,அவ்வூரின் மக்கள்,அவர்கள் தொழில்கள்,பழக்க வழக்கங்கள்,ஊரில் மதிப்பு கொண்ட கோட்டையார் குடும்பம் என கதை முழுதும் கோபல்ல கிராமத்து மக்களோடு ஒருங்கே செல்கிறது.. கோபல்ல கிராமத்தின் ஒரு அழகிய காலை விடியலை அறிமுகபடுத்துவதோடு தொடங்கும் கதை..பின் கோட்டையார் வீட்டின் சகோதரர்களை அறிமுகம் செய்து..வழிபறி கொள்ளையனால் கொலை செய்யப்படும் கர்ப்பிணி பெண்ணின் வழக்கினை கோபல்ல கிராம மக்கள் எதிர் கொள்ளும் சம்பவத்தோடு ஆரம்பித்து இடை இடையே அக்கிரமத்தின் நீண்ட நெடிய வரலாறோடு சொல்லபடுகின்றது..

கோட்டையார் வீட்டு மூத்த கிழவி மங்கையதாயாருஅம்மாள் வழியாக சொல்லப்படும் கதைகள்,கிளை கதைகள் யாவும் சற்று மிகையாக தோன்றினாலும் கற்பனை செய்து ரசிக்க கூடியவை..துலுக்க ராஜாகளுக்கு பயந்து நாயக்கர் இன மக்கள் ஆந்திராவில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகத்தில் ஓர் இடத்தில் குடியேறும் நிகழ்வை கி.ரா விவரித்துள்ளது கோபல்ல கிராமத்திற்கு மட்டும் அல்ல எல்லா சமூகத்திற்கும் பொருந்தும்..ஒற்றுமையாய் மக்கள் காடுகளை அழித்து விளைநிலம் ஆக்கி,பசு,கன்றுகள் வைத்து விவசாயம் புரிந்து தமக்கான சாம்ராஜியத்தை உருவாக்கி தமக்கு பின் வரும் சந்ததியினருக்கு வாழ வழி செய்வது எளிய காரியம் அல்ல..முன்னோர்கள் மீது பெரும் மதிப்பை வரச்செய்யும் பகுதியாய் அக்காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன..

பெண்களை வர்ணிக்கும் இடங்கள் மிகையான கற்பனையாக தோன்றினாலும் அவை நடந்து இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது..நீண்ட தலை முடி கொண்ட பெண்ணை வர்ணிக்கும் பொழுதும்,சமையலில் சிறந்த ஒருத்தியின் கை பக்குவத்தை விளக்குவதிலும்,பெரும் அழகியான சென்னா தேவியை கடவுளின் அருள் கொண்ட அழகு பெற்றவள் என்றும் கொள்ளையர்களும் அவள் அழகாள் மனம் திருந்தியதாகவும் மங்கையதாயாரு அம்மாள் கூறுவது மெல்லிய புன்னகையோடு ஏற்று கொள்ள வேண்டியது...

கோபல்ல கிராமத்தில் வசிக்கும் பலருள் நம்மை மிகவும் கவர்வது அக்கையா,கோட்டையார் வீட்டில் பணிசெய்யும் இவரது கதாபாத்திரம் ஹாசியம் மிகுந்தது..மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டு யாவரையும் இவர் செய்யும் பகடி கிராமத்து மனிதர்களுக்கே உள்ள குணம்.ஓர் நீண்ட அத்தியாயத்தில் அக்கிரமத்தின் மருத்துவர்,ஜோசியர்,கயறு திரிப்பவர்,தீவனம் விற்கும் வியாபாரி,இடையன்,கோவில் பூசாரி என எல்லா நாயக்கரையும் சிறு குறிப்போடு கி.ரா அறிமுகம் செய்துஇருப்பது அருமை.அம்மக்களுக்குள் நிலவும் ஒற்றுமையை பல காட்சிகள் விளக்கினாலும் கோபல்ல கிராமமே சேர்ந்து தீவட்டி கொள்ளையர்களை ஊரை விட்டு விரட்டும் காட்சி ஓர் சிறந்த சான்று.

பொழுது சாய்ந்தால் உப்பை "ருசிகள்" என அழைப்பது,திருமணமானவர்கள் மட்டுமே வெற்றிலை போட அனுமதிக்கப்படுவது ,கர்ப்பிணி பெண்கள் இறந்தால் அவர்கள் நினைவாக கிராம எல்லையில் சுமைதாங்கி கல் அமைப்பது..என இன்றும் கிராமங்களில் வழக்கில் இருக்கும் பழக்க வழக்கங்கள் நாவல் முழுதும் விரவி வருகின்றது.ஆங்கிலேய ஆளுமை இந்தியாவில் பரவ தொடங்கும் பொழுது கோபல்ல கிராமம் கண்ட சிறு சிறு எதிர் வினைகளோடு கதை முடிகிறது."கோபல்ல கிராம மக்கள்" நாவலில் கி.ரா ஆங்கில ஆட்சியில் இருந்து விடு பட்டு நாடு சுதந்திரம் அடைந்ததை கோபல்ல கிராம மக்களின் ஆச்சர்யங்களோடு விளக்குகின்றார்.

பொழுது சாய்ந்தால் உப்பை "ருசிகள்" என அழைப்பது,திருமணமானவர்கள் மட்டுமே வெற்றிலை போட அனுமதிக்கப்படுவது ,கர்ப்பிணி பெண்கள் இறந்தால் அவர்கள் நினைவாக கிராம எல்லையில் சுமைதாங்கி கல் அமைப்பது..என இன்றும் கிராமங்களில் வழக்கில் இருக்கும் பழக்க வழக்கங்கள் நாவல் முழுதும் விரவி வருகின்றது.ஆங்கிலேய ஆளுமை இந்தியாவில் பரவ தொடங்கும் பொழுது கோபல்ல கிராமம் கண்ட சிறு சிறு எதிர் வினைகளோடு கதை முடிகிறது.இதன் தொடர்ச்சியான "கோபல்ல கிராம மக்கள்" நாவலில் கி.ரா ஆங்கில ஆட்சியில் இருந்து விடு பட்டு நாடு சுதந்திரம் அடைந்ததை கோபல்ல கிராம மக்களின் ஆச்சர்யங்களோடு விளக்குகின்றார்.ஓர் எளிய அழகிய கரிசல் கிராமத்தின் வரலாறை படித்த மிகுந்த திருப்தியை தரவல்லது இந்நாவல்.

Thursday, June 19, 2008

கணையாழியின் கடைசிப்பக்கங்கள்(1968-1998) - சுஜாதா



கணையாழி இலக்கிய இதழில் சுஜாதா ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்கிற புனைப்பெயரில் 1968 முதல் 1998 வரை எழுதிய பகுதி மற்றும் பெட்டி என்கிற தலைப்பின் கீழ் எழுதியவை யாவும் தொகுக்கப்பட்டு உயிர்மெய் பதிபகத்தால் வெளிவந்துள்ளது.தொகுத்தவர் தேசிகன்...ஒரு கமர்ஷியல் எழுத்தாளராக/விஞ்ஞானியாக/வசனகர்த்தாவாக மட்டுமே அறிய பட்ட சுஜாதா இந்நூலின் மூலமாக சிறந்த விமர்சகராக நமக்கு வெளிபடுகிறார்.A pefect critic.இந்நூலின் தொகுப்புக்களை சினிமா,தமிழ் இலக்கியம்-கவிதை,அறிவியல் என மூன்று வகையாய் சுலபமாய் பிரிக்கலாம்..

சினிமா:

சுஜாதா 1960களில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களை அவருக்கே உரிய பாணியில் பகடி செய்திருப்பது அருமை...சிவாஜி,எம்.ஜி.ஆர் படங்களையும்,பீம்சிங்க்தின் பா வரிசை படங்களையும்,எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையையும் சமகாலத்தில் விமர்சித்து இருப்பது தற்போது சாத்தியமா என்றால் நிச்சியமாய் இல்லை.சிறந்த திரைப்படங்களை அழகாய் பதம் பிரித்து சுஜாதா செய்துள்ள விமர்சனங்கள் காலத்தை கடந்து நிற்கும் அத்த்திரைப்படன்களே அத்தாட்சி..குறிப்பிட்டு சொல்லவேண்டியவை -ரேயின் பதேர் பாஞ்சாலி,மீரா நாயரின் சலாம் பாம்பே ,கிரீஸ் காசர்கோட்டின் கடஸ்ரேதா,ஷ்யாம் பெனகலின் திரைப்படங்கள்..


கமலஹாசனுடன் தாம் கொண்டிருந்த நட்பினை மெய்பிக்கும் வண்ணம் தொடர்ந்து கமலோடு தான் செலவழித்த கனங்களை நினைவு கூறுகிறார்.. 1980 களில் வெளிவந்த திரை இசைப்பாடல்கள் பெரும்பாலும் கொண்டிருக்கும் பாடல் வரிகளின் ஒத்த வார்த்தைகள் என சுஜாதா கூறும் பட்டியல் சிரிக்க வைக்கும் உண்மை .. அன்றைய காலகட்ட இளைஞர்களை அக்னிநட்சத்திர வாலிபர்கள் என கோடிட்டு காட்டி இருப்பது சினிமா மோகம் கொண்டும் திரியும் இளைஞர்களுக்கு என்றும் பொருந்தும்..1990 இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற அஞ்சலி திரைப்படத்தின் ஒளிப்பதிவு மிக்க இருள் சார்ந்து எடுக்க பட்டதை கண்டித்து இருக்கும் சுஜாதா அரண்மனை கிளி திரைபடத்தை அறை பக்கத்திற்கு விமர்சனம் செய்திருப்பது வேதனை.

இலக்கியம் - தமிழ் - கவிதை :

சங்க இலக்கியம் மீது சுஜாதா கொண்டிருந்த ஆர்வம்,தேடல்,ஆராய்ச்சி நான் சற்றும் எதிர்பாராதது.சமீபத்திய சுஜாதா இரங்கல் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தது "அவர் கொண்டிருந்த தீவிரம் அவர் எழுத்தில் இல்லை " நினைவில் வந்தது..குறுந்தொகை,சிலப்பதிகாரம்,ஆழ்வார் பாடல்கள்,கம்பராமாயணம்,ஆண்டாள் பாசுரம் என சங்க இலக்கியத்தோடு அழகிய தேடலில் ஈடுபட்டதோடு சிறந்த சங்க இலக்கிய விளக்க உரை நூல்களை பகிர்ந்துள்ளார்..சங்க இலக்கியத்தை அடுத்து கவிதை மீது அவர் கொண்டிருந்த காதல் அலாதி..அதிலும் முக்கியமாய் ஹைக்கூ கவிதைகளை அறிமுகம் செய்து அதை எழுதுவதற்கான விதிகளை விளக்கி தான் ரசித்த,படித்த சிறந்த கவிதைகளை கூறி இருப்பது கவிதையில் ஆர்வம் இல்லாதவர்களையும் ஈர்க்கும் சுஜாதாவின் வார்த்தை வசியம்.

தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதாவிற்கு மிக விருப்பமாய் இருந்தவர்கள் வண்ணதாசன்,சுந்தர ராமசாமி,அசோகமித்திரன்,ஜானகிராமன்,கி.ராஜநாராயணன் என பட்டியல் நீக்கிறது..சுந்தர ராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை" யையும்,கி.ரா வின் "கோபல்ல கிராமத்தையும்" விரிவாய் விமர்சித்துள்ளார்..தனது நாவல்கள்,கதைகள் குறித்த வாசகர்களின் எதிர்வினைகளை எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி குறிப்பிட்டுள்ளார்.இலக்கிய கூட்டம் ஒன்றில் "நீ என்ன எழுதி சாதிச்சனு இங்க வந்து இருக்க" என ஒருவர் கேட்டதை எழுதி தனக்கே உரிய பகடி யோடு பதில் அளித்ததை கூறிஉள்ளார்.உலக தமிழ் மாநாட்டில் சுஜாதாவின் உரை நிறைவேற்றப்படவேண்டிய அறிய பல நிதர்சன கருத்துக்கள் கொண்டது..தமிழை ஆக்சிஜென் குடுத்து காப்பற்றும் நிலை வராது இருக்க அவர் கூறும் வழிமுறைகள் பரிசீலிக்கபடவேண்டியவை.

அறிவியல்:

இந்நூலை படிக்க தொடங்கும் முன் எனக்கு தோன்றியது சுஜாதாவின் அறிய பல அறிவியல் கருத்துக்கள் நிறைந்து இருக்கும் என்பதே..சற்றும் எதிர்பாராமல் சங்க இலக்கியம் குறித்தும்,கவிதை எழுதும் விதிகளை விளக்கியும் தனது மற்றுமொரு முகத்தை வெளிகாட்டி அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார்.மிக சிறிய அளவிலான அறிவியல் கட்டுரைகளே இதில் உள்ளது.மின் ஒட்டு பதிவு இயந்திரம் கொண்டுவந்ததில் தனக்குள்ள பங்கினை எளிமையாய் விளக்கி உள்ளார்.ஓசோன் மண்டலம் சிதைந்து வருவதை தடுக்க "Green House effect" - குறித்த எளிய விளக்கம் ஒன்றினை பாமரனும் புரிந்து கொள்ளும் வண்ணம் அளித்து இருப்பது நன்று.தமிழில் கணினியில் தட்டச்சு செய்யும் முறை குறித்தும்,அது நடைமுறை படுத்த அணுகவேண்டிய சாப்ட்வேர் நிறுவனகள் குறித்த கட்டுரை பயன்தரக்கூடியது.மாணவர்களோடு நடந்த நேரடி உரையாடல் ஒன்றில் 2000 தில் நடக்க சாத்தியமானவை என சுஜாதா பட்டியலிட்டுள்ளது யாவும் தற்போது நடைமுறையில் உள்ளது..

இப்புத்தகத்தை முழுதும் படித்து முடித்ததும் நிறைந்த திருப்திக்கு மாறாக விடை தெரியா கேள்விகள் சில மனதில் வந்து மறைந்தது,அவை...


- சங்க இலக்கியம் முதல் தற்கால ஹைக்கூ முதல் வியந்து விவரித்து எழுதி உள்ள சுஜாதா சிறந்த கவிதைகளை தராது ஏனோ??தி.ஜா,சு.ரா,கி.ரா என தமிழ் இலக்கிய வாசிப்பை விஸ்தாரமாய் அலசி விமர்சித்தவர் அவர்கள் போல இன்றும் பேச கூடிய ஒரு நல்ல நாவலை தராதது வருத்தமே..

- ரே,மீரா நாயர்,ஷ்யம்பெனகள் என சிறந்த இயக்குனர்களின் திரைப்படங்களை சிறப்பாய் மதிப்பிட்டு விமர்சனம் செய்து அன்றைய கால தமிழ் திரை உலகம் உருபடாது என கடுமையாய் சாடி எழுதி விட்டு..பின்னாளில் தானும் அந்நியன்,சிவாஜி என கமர்ஷியல் குப்பையில் விழுந்தது unacceptable compromise!!

- அனேகமாக உலகின் சிறந்த புத்தகங்கள் யாவும் சுஜாதா படித்து இருப்பார்..அறிவியலில் சிறந்தவர்..இருந்தும் தன் ஜாதியின் மீது கொண்ட ஒரு வித பெருமை அவர் எழுத்துக்களில் ஆங்காங்கே தெரிவதை மறுப்பதற்கில்லை..

எது எப்படியோ..மறுக்க முடியாத உண்மை..He is an inborn Genius!!

Tuesday, June 17, 2008

உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்




மரணமும்,அதை சார்ந்த நிகழ்வுகளும் எப்போதும் அச்சம் தருபவையே.... சம்பத்தின் மரணத்தை அடுத்து அவனூடான நினைவுகளோடு காலத்தை பின்னோக்கி பார்க்கும் அவனின் மூன்று நண்பர்களின் பார்வையில் செல்லும் இக்கதை எஸ்.ரா வின் சமீபத்திய குறுநாவல்.சம்பத் நிலையான எண்ணம்,சிந்தனை,செயல்,தொழில் இல்லாது அந்தந்த பொழுதினை போக்க பல வேடம் தரித்து யாருக்கும் நன்மை இன்றி வாழ்ந்து இறக்கிறான்.சில பொழுதுகளில் பெரும் சிந்தனையாளனாக,பேச்சாளனாக இருக்கும் அவன் சில பொழுதுகளில் தன் வசம் மறந்து சினம் கொண்டு மூர்க்கனாய் வெளிபடுகின்றான்..
சம்பத்தின் பால்ய காலம்,கல்லூரி வாழ்க்கை,காதல்,திருமணம்,அவன் மேற்கொண்ட தொழில்கள்,தந்தையுடன் அவன் கொண்ட மோசமான சண்டை,பிழைக்க கனவுகளோடு மட்டுமே சென்னை வந்தது.....என யாவும் அவனது நண்பர்கள் மூலமாகவே நமக்கு தெரியபடுதுகிறார் ஆசிரியர்.

சம்பத்தின் வாழ்கையை கல்லூரிக்கு முன்,கல்லூரிக்கு பின் என பிரித்து அறியலாம்..தமிழ் மீது கொண்ட பேரன்பினால் கல்லூரியில் தமிழ் பயில்கிறான்,உடன் பயிலும் சக மாணவியான யாழினியின் மீது கொண்ட பிரியத்தால் கடவுள் எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து அவளோடு பல கூட்டங்களுக்கு சென்று உரையாற்றி நண்பர்கள் மத்தியில் நாயகனாய் வலம் வருகிறான். சென்னையில் ஒரு கூட்டத்தில் பகவத்கீதையை எரித்து சிறை செல்கிறான்..இவ்வாறாக ஒரு புரட்சியாளனாக,சிறந்த பேச்சாளனாக வாழ்வை எதிர்நோக்கி செல்கையில் குடி போதையால் மதி இழந்து இயக்கத்தினால் புறக்கணிக்கபடுகிறான்..

பின்பு லாட்டரி மோகம் கொண்டு தனி அறை எடுத்து தங்கி லாட்டரி சீட்டுக்கள் வாங்கியே மதுவோது நாட்களை களிகின்றான்.அவன் தங்கி இருக்கும் லொட்ஜ் அருகே தொலைபேசி பூத்தில் பணிபுரியும் ஜெயந்தியுடன் நட்புடன் காதல் கொண்டு அவளை மணக்கிறான்..பின்பு லாட்டரி தொழிலை விட்டு அச்சகம் ஒன்றில் பணியில் சேர்ந்து அங்கு பணத்தை கையாடல் செய்து மனைவியுடன் தப்பி சென்னை செல்கிறான்..இக்கதையில் சம்பத் மற்றும் அவன் சார்ந்த நிகழ்வுகள் யாவுமே மாயை என நினைக்க தோன்றுகிறது..அவான் அனுபவங்கள் யாவும் அடர்ந்த கட்டின் இரவு பொழுதை போல இருள் கவ்வி செல்கிறது ..

சென்னையில் அழகரை சந்திக்கும் சம்பத் மனைவியோடு பொருட்கள் வாங்கி கொண்டு புதிய வாழ்வை தொடங்கும் தெளிர்ச்சியில் உரையாடுவது அவன் மீது பரிதாபத்தை கூடுகின்றது..சம்பத்தின் கடைசி காலங்களில் அவனோடிருந்து அவன் சுக துக்கங்களில் பங்கு கொள்ளவது ராமதுரை.. அதனால் தான் எனவோ சம்பத்தின் மரணம் தாளாமல் தொடர்ந்து சிந்தனை செய்து கொண்டே மற்றவர்களிடம் அவனை குறித்த நிகழ்வுகளை பகிர்க்கிறான்.சம்பத் இறந்த பின் அவனது நண்பர்கள் மூவரும், மனைவியும்,கல்லூரி தோழி யாழினியும் மட்டுமே இருந்து இறுதி சடங்குகளை முடிக்கின்றனர்...

பொதுவாய் சிறப்பாய் வாழ்ந்து இறந்தவர்களின் கடந்த காலங்கள் மட்டுமே பேசுவதற்கும்,நினைப்பதற்கும் விருப்பமாய் இருக்கும்..கசப்பான நிகழ்வுகளை கொண்ட சம்பத்தின் வாழ்வை அவன் நண்பர்கள் நினைவோடையில் பின்னோக்கி சென்று பார்பதை நிறைந்த வெறுமை கொண்டு எஸ்.ரா விவரித்துள்ளது மரணத்தின் மீதான பயத்தை அதிகரிக்க செய்கின்றது..திட்டமிடாத வாழ்கையின் சோகத்தை எடுத்துரைக்கின்றது..மதுவின் தீமையை சொல்லுகிறது..வாழ்விற்கான தேடல் நிலையானதாக இருக்க வேண்டுமென சொல்லுகிறது....இக்கதை முழுதும் நிலவும் கனத்த மௌனம் சொல்லுபவை இன்னும் எத்தைனையோ..

Thursday, June 12, 2008

புதுமைப்பித்தன் சிறுகதைகள்



விருத்தாசலம் என்னும் இயற் பெயர் கொண்ட புதுமைபித்தன் (1906-1948) தமிழ் இலக்கிய உலகில் ஒரு தவிர்க்க முடியாத முன்னோடி எழுத்தாளர்.பத்திரிக்கை நிருபராய் பணியாற்றிய இவர் 200கும் மேற்பட்ட சிறுகதைகள்/கவிதைகள் எழுதி உள்ளார்,மேலும் கிழகத்திய நூல்கள் சிலவற்றை மொழி பெயர்த்துள்ளார். தினமணி,மணிக்கொடி,தினகரி ஆகியவை இவர் பணிபுரிந்த பத்திரிக்கைகள்.புதுமைபித்தன் கதைகள் பெரும்பாலும் அடிமட்ட மக்களின் வேதனைகளை நகைச்சுவையோடு விளக்குவதாகவே இருக்கும்..புதுமை பித்தனின் கதைகளின் சிறப்பு அவை எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தி வருவது.தமிழில் முதல் அறிவியல் சிறுகதை(கடவுளும் கந்தசாமி பிள்ளையும்) இவருடையதே..நான் படித்து ரசித்த புதுமைபித்தனின் சிறுகதைகள் சில இங்கே..


ஒரு நாள் கழிந்தது:


ஒரு ஏழை எழுத்தாளனின் ஒரு நாள் பொழுதினை வர்ணிக்கும் இக்கதை மிகுந்த வலியுடன் செல்லும் வாழ்வின் ஒரு பொழுது நகைச்சுவை சேர்ந்து கூறப்பட்டுள்ளது.முருகதாசர் தினமும் மளிகை கடையில் கடன் சொல்லி பொருட்கள் பெற்று தின பொழுதை களிக்கும் சராசரி பிரஜை.விளையாட சென்ற அவரது குழந்தை அலமு ரிக்க்ஷா வண்டியில் செல்ல ஆசை பட அதற்கு பணம் இன்றி அவளை அழைத்து வர பின் மளிகை கடைக்காரரிடம் திங்கள் வரை கடன் சொல்லி சிரித்து மழுப்பி வீடு வந்து நண்பர்களிடம் பணம் பெற்று அன்றைய பொழுது கழிந்த முருகதாசரின் மகிழ்வோடு கதை நிறைவடைகிறது..


முருகதாசரின் ஏழ்மையை விவரிக்கும் ஒவ்வொரு இடத்திலும் புதுமை பித்தன் காட்டி இருக்கும் உவமைகள் நகைச்சுவையோடு தீவிர தன்மை கொண்டவை. முருகதாசரின் வீட்டு அமைப்பை விவரிக்கும் முன் புதுமை பித்தன் கூறுவது "சென்னையில் 'ஒட்டுக் குடித்தனம்' என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க வருகிறவர்கள் எல்லாரும் 'திருக்கழுக்குன்றத்துக் கழுகு' என்று நினைத்துக் கொள்ளுவானோ என்னமோ! "- இக்கதை எழுதபெற்றது 1937, இன்றைய நிலையும் இதுவே...முருகதாசரின் நண்பர் சுப்ரமணிய பிள்ளையை அலமு பல்லு மாமா என்ன கூறுவதை வரும் பகுதி வாய் விட்டு சிரிக்க செய்யும் ஹாசியம்.புதுமை பித்தன் கதைகளில் முகியம்மாக இடம்பெறுபவை இரண்டு,ஏழ்மை மற்றும் நகைச்சுவை..இரண்டிற்கும் நிஜ வாழ்வில் ஏழாம் பொருத்தம் இருப்பினும் அவரது கதையாடலின் சிறப்பு இரண்டையும் இணைப்பது.

பொன்னகரம் :

உயர்ந்த கட்டடங்கள் பெருகிய அதே விகிதத்தில் இன்று சேரிகளும் பெருகி விட்டன..புதுமை பித்தனின் இக்கதை சேரி பகுதி மக்களின் வாழ்வை படம் பிடித்து காட்டுகிறது.மனிதனின் அடிப்படை தேவைகள் உணவு,ஆடை,உறைவிடம்..இவை மூன்றும் சேரி மக்களுக்கு இருந்தும் இல்லாதது போலதான்..

ரயில் தண்டவாளம் ஓரமாய் அமைந்து இருக்கும் பொன்னகரம் என்னும் சேரியை விவரிக்கும் புதுமைபித்தன்
- "தண்ணீர்க் குழாய்கள்? இருக்கின்றன. மின்சார விளக்கு? ஞாபகமில்லை"
- "பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு 'மீன் பிடித்து' விளையாடுவதில் வெகு பிரியம். அந்த முனிசிபல் தீர்த்தத்தில்"
- "ரயில்வே தண்டவாளத்தின் நின்று "குட்மார்னிங் சார்!" என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி"
என வெகு சில வரிகளில் ஏழை குழந்தைகளின் விதியை விளக்குகிறார்.

அம்மாளு பொன்னகரத்து குடிசைவாசி,கூலி தொழிலாளி,ஜட்கா வண்டிகாரனின் மனைவி... குடித்து விடு வண்டியோட்டி பலந்த காயம் கண்ட கணவனை மருத்துவம் செய்ய பணம் இல்லாததால் தன்னை விற்று வைத்தியம் பார்க்கிறாள்..
இக்கதையின் கடைசி வரி("என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!") ஒரு எழுத்தாளனால் 1930களில் சொல்ல பட்டு இருப்பது..ஆச்சர்யம் கூடிய உண்மை..


கடவுளும் கந்தசாமி பிள்ளையும் :



புதுமைபித்தனின் மிகச்சிறந்த கதைகளுள் ஒன்று..எல்லை அற்ற கற்பனை கொண்டு இவர் எழுதிய இக்கதை தமிழில் முதல் அறிவியல் தொலைநோக்கு சிறுகதை.பூமிக்கு வரும் கடவுள்(சிவன்) வைத்தியர் கந்தசாமி பிள்ளையை கண்டு அவரோடு நகர வாழ்வை அனுபவித்து பிழைக்க வழி இன்றி திரும்பி செல்வதே கதை.50 வருடங்களுக்கு முந்தைய இக்கதை இன்றைக்கும் பொருந்தி வருகின்றது..ஏழை தகப்பன் ஆனா கந்த சாமியிடம் அவரது மகள் அப்பா வாங்கி வந்து இருக்க என கேட்க என்னையே வாங்கி வந்து இருக்கேன் என அவர் பதில் கூறுவது ஏழ்மையின் மறைமுக வெளிப்பாடு.நடனம் ஆடி பிழைக்க கடவுளையும்,தேவியையும் கந்த சாமி சபா நடத்தும் திவானிடம் கொண்டு செல்ல அங்கு அவர்கள் நடனம் விரும்ப படாமல் விரட்டி அடிக்கபடுவதாக உள்ளது..ஆகா சிவன் கூத்து போன்ற நடனங்கள் அப்போது இருந்தே அழிவை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளன..கடவுளோடு கந்தசாம்யின் உரையாடல்கள் இன்னும் விரிவாய் அமைந்து இருக்கலாம்..இருப்பினும் புதுமைபித்தனின் இம்முயற்சி பெரும் ஆச்சர்யம் தருவதே..

செல்லம்மாள்

புதுமைப்பித்தனின் கதைகளிலே மிகுந்த சோகம் நிறைந்த இச்சிறுகதை கணவன் மனைவியிடையே நிகழும் பாசாங்கற்ற அன்பின் வெளிபாட்டை கூறுவதை உள்ளது.
தீராத நோயினால் அவதியுறும் செல்லம்மாள் தன் சாவை எதிர்நோக்கும் ஒரு நாளில் தன் கணவர் பிரம்மநாயகம் பிள்ளையுடன் செலவிடும் பொழுதே இக்கதை.பிறந்த ஊரில் பிழைக்க வழியின்றி சென்னை பட்டணம் வந்து வறுமையில் வாடும் இத்தம்பதியினர் செள்ளமாளின் நோயின் கொடுமையால் மேலும் அல்லல் உற்று நாட்களை கடத்துகின்றனர்...துணி கடை ஒன்றில் பணிபுரியும் பிரம்மநாயகம் பிள்ளை நோயால் வாடும் தன் மனைவிக்கு கடன் பெற்று புடவை வாங்கி வந்து நிறைவு காண்பது,எப்போதும் சோர்த்து இருக்கும் அவளை உற்சாகம் ஊட்ட அவளுக்கு விருப்பம் மிகுந்த இறந்த அவளின் தாயை தன்னுள் கொண்டு பேசுவது,அவளுக்கான உணவை தானே சமித்து தருவது என..நிகரற்ற கணவனை வாழ்ந்து செல்லமாளின் இரைபையும் இளைபாய் ஏற்று கொள்கிறார்..கதை முழுதும் ஒரு கனத்த மௌனம் நிலவுகிறது..அதை நிகழ போகும் மரணத்தின் குறியீடாய் சொல்லலாம்...

Tuesday, June 3, 2008

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி



மரங்களுக்கும் நம் போலே உயிர் உண்டு,சுவாசிக்கும் திறன் உண்டு என்பதை ஆறாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியை சொல்ல வகுப்பில் அனைவரும் வகுப்போரம் நின்ற மரத்தினை ஆச்சர்யத்துடன் பார்த்தது இன்றும் என் நினைவில் உண்டு.மரங்களுக்கும் நமக்குமான உறவு நீரோடு கொண்ட உறவு போல,வாழ்விற்கு இன்றியமையாதது அதே போல அதிக நெருக்கமும் கொண்டாடலும் கொண்டது அல்ல.கிராமங்களில் மரங்களுக்கு இருக்கு மதிப்பு பட்டணத்தில் இல்லை..ஆலமரதிற்கும்,அரசமரதிற்கும் அங்கு ஒவ்வொரு கதை வைத்து இருப்பார்கள்..அக்கதைகள் யாவும் சுவாரசியமான நிதர்சனமே!!!

சமீபத்தில் சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை படித்தேன்..இது நாள் வரை அவர் எழுத்துக்களை படிக்காமல் இருந்தது வருத்தம் அளித்து.முற்றிலும் புதிய கதை சொல்லும் பாணி,மிகுந்த நகைச்சுவை,அழகிய வட்டார பேச்சு வழக்கு என இந்நூல் ஒரு புதிய வாசிப்பு அனுபவம்.ஒரு மரத்தை மையமாய் வைத்து நாவல் படைப்பது எழுத்தாளனுக்கு சவாலான விஷயமே..அதை எந்த சிரமமும் இன்றி கதை சொல்லும் பாணியில் ஒர் அழகிய வரலாறை கூறி இருப்பது இனிமை.

கிராமங்களில் கதை சொல்லிகளுக்கு எப்போதும் கிராக்கி உண்டு..கற்பனை கலந்து நேரில் கண்டது போல அவர்கள் கூறும் சற்றே மிகை படுத்தி அவர்கள் கூறும் உண்மை நிகழ்ச்சிகள் கேட்பதற்கும்,கற்பனை செய்வதற்கும் திரும்ப திரும்ப சொல்ல கேட்டு மகிழ்வதற்கும் உரித்தானவை.இக்கதையிலும் ஆசான் என்னும் கதை கூறும் முதியவர் மூலம் அவ்வூரில் இருக்கும் புளியமரத்தின் ஆரம்ப கால வரலாறை கூறி இருப்பது வெகு அருமை.ஆசானின் கதை சொல்லும் அழகு அவரிடம் மேலும் பல கதைகளை கேட்டறிய நம்மை தூண்டுகிறது..புளியமரம் அமைந்துள்ள குளத்தில் பெண்கள் விளையாடி மகிழ்ந்ததையும், வேற்று ஆடவன் ஒருவனால் புத்தி பேதலித்து புளிய மரத்தில் தற்கொலை செய்து கொண்ட யுவதியின் கதையை ஆசான் விவரிக்கும் பாங்கு மர்ம நாவலின் கடைசி பகுதி போல் கேள்விகள் நிறைந்தது.மேலும் குளத்தின் துர் நாற்றத்தால் திருவிதாங்கூர் மன்னன் பவனி பாதியில் நின்றதை கூறும் இடம் சிறந்த நகைச்சுவை.ஆசான் கூறும் கதைகள் யாவும் சுதந்திரத்திற்கு முன்பு நடப்பதாய் உள்ளது.

இதன் பின் வரும் புளியமரம் குறித்த நிகழ்வுகள் யாவும் சுந்தந்திரம் பெற்ற பின் நிகழ்வது.மரத்தை ஏலம் விடுவதில் மக்களுக்கும்,அதிகாரிகளுக்கும் நிகழும் பனிப்போர் இன்றும் நிகழும் நிஜமே.மரம் அமைந்த குளம் வற்றி,அங்கு பெரிய அங்காடி தெரு அமைவதை இயல்பாய் சு.ரா விவரித்துள்ளார்.சற்று மரத்தின் கதையை விடு அங்கு கடை நடத்தும் வியாபாரிகள் பற்றி கதை செல்கிறது. காதர் மற்றும் தாமு இவர்களை சுற்றியே கதையின் பிற்பகுதி சுழல்கிறது.இருவரின் குடும்பம்,தொடக்க கால வாழ்க்கை,வியாபார நேர்த்தி பின் இருவருக்குள்ளும் நிகழும் வன்மம்..அதனால் ஒருவரை ஒருவர் பழி வாங்க புளியமரத்தை பகடையாய் ஆக்குவது என கதை அம்மரத்தின் அழிவை சமுதாயத்தின் மாற்றங்களோடு சொல்லி செல்கிறது.

இக்கதையில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது நாவல் முழுதும் விரவி உள்ள உயர்தரமான நகைச்சுவை.."திருவிதாங்கூர் தேசிகன்" பத்திரிக்கை நிருபர் இசக்கியின் பாத்திரத்தை சு.ரா செய்துள்ள பகடி ,சிரிப்பின் உச்ச கட்டம்...ஆபாசம் அற்ற இவ்வகை நகைச்சுவை ஹாஸியம் மிகுந்தது.வாழ்ந்து மறைந்த ஒரு மனிதனின் வாழ்கை அனுபவத்தை படித்த திருப்தி புளிய மரத்தின் கதையில் உணரலாம்.சு.ரா வின் பிற படைப்புக்களை தேடி படிக்கும் ஆர்வத்தை தருவதே இந்நூலின் வெற்றி..