Showing posts with label பகிர்வு. Show all posts
Showing posts with label பகிர்வு. Show all posts

Monday, August 9, 2010

வண்ணதாசனின் "கடைசியாய் தெரிந்தவர்" - சிறுகதை

"அவரது படைப்புலகம் கருணையும் சௌந்தர்யமும் கலந்தது"

- வண்ணநிலவன்

அன்பென்னும் ஒற்றை புள்ளியை சுற்றி கட்டமைக்கபட்டதாகவே இருக்கின்றது வண்ணதாசனின் கதையுலகம்.தொடர்ந்து அவ்வெழுத்தின் மீதான பிரியம் அதிகரித்து வரவும் அது ஒன்றே காரணம்."கடைசியாய் தெரிந்தவர்",மருத்துவமனையில் நண்பனின் குழந்தைக்காக உடன் இருக்கும் நாயகனின் பார்வையில்,அந்நாட்கள் பகிரப்படுவதான கதை.மருத்துவமனையில் இரவு தங்கலும்,அந்த அசாதாரண சூழ்நிலை தரும் தயக்கங்களும், அச்சமும்,நோயாளி சமநிலை வரும்வரை கொள்ளும் மன உளைச்சலும் வார்த்தைகளில் அடக்கிட முடியாதவை.பிரியத்திற்குரிய உறவுகளுக்காக மருத்துவமனையில் செலவிட்ட நாட்கள்,நினைவேட்டில் நிரந்தரமாய் மறைத்து வைக்க வேண்டியவை.அதிலும் முக்கியமாய் மருத்துவமனை இரவு தங்கள்,அமானுஷ்ய உணர்வை தந்து இம்சிக்கும் அனுபவம் அது.ஏதோ ஒரு நம்பிக்கை அந்த கணங்களை கடக்க அவசியம் ஆகின்றது.

"இந்த தைரியம் தான் மறுபடி மறுபடி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆஸ்பத்திரியை நோக்கி யாருடனாவது என்னை செலுத்தி கொண்டிருக்கின்றது"





குறுகலான அந்த பாலி கிளினிக்கின் காட்சிகளை விவரிப்பதோடு தொடங்கும் சிறுகதை.மெல்ல மெல்ல மருத்துவமனையின் அன்றாட காட்சிகளை விரிவாய் பகிர்கின்றது.நோயுற்று இருப்பவரின் உடன் இருப்பவர்கள் நோயாளி தேறியவுடன் கொள்ளும் மனநிலையை கீழ் உள்ள வரிகள் சிறப்பாய் விவரிக்கின்றன,

"பக்கத்துக்கு அரைப் படுக்கைகாரரிடம் வழிய போய் பேசுவார்கள்.அனுதாபம் கொள்வார்கள்.."டூட்டி முடிந்து விட்டதா சிஸ்டர்?" என நர்சிடம் விசாபார்கள்"............"நாம் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் கவனித்திருந்த நோயாளியின் உடல்நலம் தேறிவிட்டது என்று"

நண்பனின் குழந்தைக்காய் இரவும் பகலும் அத்தம்பதியினருடன் உடனிருக்கும் நாயகன்,குழந்தையின் உடல் நிலை தேறியதும் நண்பனின் மனைவி கொள்ளும் மாற்றத்தை உணர்ந்து கொள்ளும் தருணம் நெகிழ்ச்சியானது.நண்பன் மற்றும் அவனது மனைவியின் அசாதாரண சூழலுக்குள் தன்னையும் பொருத்தி கொண்டு மருத்துவமனையில் உலாவரும் நாயகனின் பார்வையில் விரியும் இச்சிறுகதை ஒழுங்கற்ற அந்நாட்களை நுட்பமாய் பகிர்கின்றது.

இச்சிறுகதையின் கடைசி பகுதி இன்னும் அழுத்தமானது.முன்பின் அறிமுகம் அற்ற நபர்களிடம் வேறு ஒரு பெயர் கொண்டு நிற்பது சுவாரஸ்யத்தை மீறிய ஒரு சங்கடம்.பக்கத்துக்கு அறையில் இருக்கும் கபீர் என்னும் நோயாளி தன்னை வேறொரு சங்கரலிங்கம் என கருதி நலம் விசாரித்து யாரோ ஒரு பெண்ணை குறித்து "வசந்தா இப்போ எங்கே இருக்கா?" என ஆர்வமாய் கேட்கின்றான்,அந்த கேள்வியின் துரத்தலின் பொருட்டே அவன் தன்னை அணுகி இருக்கின்றான் என அறிந்து "ஜபல்பூரிலே.." சொல்லி வெளியேறுகிறான் நாயகன்.

"எனக்கு ஜபல்பூர் தெரியாது.வாய்க்காலடி வீட்டுச் சங்கரலிங்கம் தெரியாது.......சில மனுஷர்களோடு இப்போது கடைசியாய் இந்த கபீரையும் தெரியும்" என முடிகின்றது இச்சிறுகதை.

திடிரென யாவும் கலைந்து போனதாய் மாறிவிடும் சூழலில்,அன்றாடங்களை ஒதுக்கி விட்டு மொத்தமாய் நோயாளியின் மீது கவனத்தை குவித்து..இரவும் பகலும் அலுக்காமல் உடன் இருந்து கவனிக்க செய்வது எது?அன்பு ஆச்சர்யங்கள் நிறைந்தது,இயல்புலகம் மாறி போகும் தருணத்தில் அது அதிகமாய் உணரப்படுகின்றது.மனித உறவுகள் அற்புதமானவை என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் எழுத்து வண்ணதாசனுடையது.

இவ்வேளையில் எஸ்.ராவின் "பி.விஜயலக்ஷ்மியின் சிகிச்சை குறிப்புகள்" சிறுகதையை குறிப்பிட வேண்டும்.வண்ணதாசனின் சிறுகதை எத்தனை மென்மையாய் மருத்துவமனை நாட்களை பகிர்கின்றதோ அதற்கு நேரெதிராய் எஸ்.ரா தன சிறுகதையில் உறவுகளால் கைவிட பட்ட ஒரு பெண்ணின் மோசமான மருத்துவமனை நாட்கள் குறித்து பகிர்கின்றார்.மனநடுக்கம் கொள்ள செய்யும் விஜயலக்ஷ்மியின் கடந்த கால குறிப்புக்கள் தரும் அதிர்ச்சியில் இருந்து எளிதில் மீள முடியாது.இவ்விரு கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் என்னை வெகுவாய் பாதித்தவை,பிரியமானவர்களுக்காய் மருத்துவமனை நாட்களை கடந்து வந்த எவர்க்கும்.

வண்ணதாசன் கதைகள்
வெளியீடு - புதுமைப்பித்தன் பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

Saturday, August 7, 2010

கவிஞர் மீரா நினைவஞ்சலி கவிதை கண்காட்சி

Wednesday, May 5, 2010

ரைநீஸ் ஐயர் தெருவில்.......!!

வாசிப்பின் இடையே இடர்படும் ஏதேனும் இடம் குறித்த சிறுகுறிப்பும் ஈர்த்திடும்.. முடிந்தால் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் சட்டென தோன்றி மறையும்.பள்ளி நாட்களில் படித்த சரோஜினி நாய்டுவின் "Bazaars Of Hydrabad " கவிதை அப்பெரு நகரின் ஜன நடமாட்டம் நிறைந்த சந்தை காட்சிகளை வெகு அழகாய் விவரிக்கும்.அந்த நகரம் குறித்த அழகிய பிம்பத்தை தோற்றுவித்த அவ்வர்ணிப்புகள் இன்றும் நினைவில் உண்டு.



மதுரைக்கு அடுத்தபடியாய் மனதிற்கு நெருக்கமாய் உணரும் நகரம் நெல்லை.நேரில் சென்று பார்க்கும் முன்னரே அத்தகைய உணர்வை தோற்றுவித்தவை வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவனின் கதைகள்.வேனிற் காலத்து நீண்ட பகல்கள்......ராஜாவின் இசை..வண்ணதாசன் சிறுகதைகள் - மூன்றும் சேர்ந்த பொழுதுகள் ஊடே,அந்நகரம் சார்ந்த வாசிப்பு கூட என் ஆர்வத்தை கூட்டிட காரணமாய் இருக்கலாம்.இவர்களின் கதைகளில் வரும் நெல்லை குறித்த வர்ணிப்புகளை பெரும்பாலும் மதுரையோடு குழப்பி கொள்வேன்.வண்ணதாசனின் "ஆறு" சிறுகதையில் சுலோச்சன முதலியார் பாலம் - அரவிந்த் கண் மருத்துவமனை குறித்து வாசித்துவிட்டு மதுரையில் அந்த பாலம் எங்குள்ளது என அப்பாவிடம் விசாரித்தது நினைவில் உள்ளது.

வண்ணநிலவனின் "கம்பா நதி" குறித்த பதிவில்....

"தாமிரபரணி நதியோடு அம்மக்கள் கொண்டுள்ள நெருக்கம் சற்றே பொறாமைக்குரியது.நதிகளை காண்பதே அறிதான இந்நாட்களில் நதியோடு குளித்து,துவைத்து நதி கரையிலும்,கல் மண்டபங்களிலும் நண்பர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்த அன்றைய பொழுதுகளின் விவரிப்பு வாசிப்பதற்கே மகிழ்வாய் உள்ளது...."


கதைகளில் வாசித்து,காட்சிபடுத்தியிருந்த இடங்களை நேரில் தேடி சென்றது இதுவே முதல் முறை..வாசிப்புதேடல் ஒரு வகை சுவாரஸ்யம் என்றால் இது ஒருவகை,சொல்ல தெரியவில்லை.அதிகப்படியான கிறுக்காய் கூட தோன்றலாம்..மதுரையில் இருந்து சாத்தூர்,கோவில்பட்டி,இடைச்செவல், கயத்தாறு வழி சென்ற மரங்கள் அற்ற நெடுஞ்சாலை பயணம் தந்த அயர்ச்சி நெல்லையை அடைந்ததும் சட்டென மறைந்துவிட்டது.மல்டி ப்ளெக்ஸ்,காபி டேக்களின் பிடியில் சிக்காது அதன் இயல்போடு மிளிரும் சிறு நகரம்!!வார்த்தைகளின் கண்டிருந்த சுலோச்சன முதலியார் பாலம்,தாமிரபரணி ஆறு,ரத்னா டாக்கீஸ் தொடங்கி கோவில் ரத வீதிகள்,தெப்பம்,சென்ட்ரல் டாக்கீஸ் என பல இடங்களை பார்த்து வந்தது இனம் புரியா மகிழ்ச்சி!!



வண்ணநிலவனின் "ரைநீஸ் ஐயர் தெரு"- டாரத்தி,அன்னமேரி,இருதயம்,தியோடர்,சாம்சன், பிலோமி,ஆசிர்வாதம் பிள்ளை,எபன் என வண்ணநிலவன் அந்நாவலில் உலவ விட்ட கதை மாந்தர்களை எளிதில் மறப்பதற்கில்லை.எப்போதும் மழை நனைத்த தெருவாகவே அதை உருவகப்படுத்தி வைத்திருப்பேன்.மழைக்கும் அத்தெருவிற்குமான உறவு நாவலில் வெகு நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கும்.பாளையங்கோட்டையில் சிறு தேடலுக்கு பிறகு ரைநீஸ் ஐயர் தெருவை கண்டுகொண்டதும் சிறு பிள்ளைக்கான உற்சாகம் தோன்றி மறைந்தது!!


நகரின் எளிமை,நெல்லையப்பர் கோவிலின் அழகிய சிற்பங்கள்(சாமி சன்னதிக்கு முன்பான தூண்கள் ஏற்படுத்திய பிரமிப்பு),நேர்த்தியான தேர் வீதிகள்,அழகு தமிழ்,தெப்பக்குளம்,தாமிரபரணி..அதன் கரையோர கல் மண்டபங்கள்,பரபரப்பான கடை வீதிகள்,எந்திரதனம் அற்ற மனிதர்கள்...என அச்சிறு நகரத்தை பிடித்து போனதிற்கு காரணங்கள் பலவுண்டு!!பெருமழை காலத்தில் மீண்டும் நெல்லை சென்று வர வேண்டும் தாமிரபரணியில் வெள்ளம் பார்க்கவேணும் !!

Thursday, April 22, 2010

தென்னக பண்பாட்டு மையம் - இயல் இசை நாடக மன்றம் :கவிதைப் பட்டறை

தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.

மற்றும்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

இணைந்து நடத்தும்

POETRY WORKSHOP

கவிதைப் பட்டறை



நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).

இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com

இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.


மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

------------------------------------------------------------------------------------

அன்புடையீர்,

வணக்கம். தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை (Poetry Workshop) நடத்தவிருக்கிறார்கள். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் அமையும் இந்நிகழ்வைப் பற்றிய அறிவிப்பினை இத்துடன் இணைத்துள்ளோம். உங்களின் வலைப்பக்கத்தில் இதனை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மிக்க நன்றி

தமிழ்ச்சங்கமம் குழுவினர்

Tuesday, January 5, 2010

சென்னை புத்தக கண்காட்சி 2010

மதுரையில் இருந்த காலங்கள், சென்னை புத்தக கண்காட்சி என்னும் பிரமாண்ட திருவிழாவில் கலந்து கொள்ள இயலாத ஏக்கத்தை தொடர்ந்து தந்து கொண்டே இருந்தன.2008 ஆண்டு முதல் முறையாக புத்தக கண்காட்சி சென்றது மறக்க முடியாத நிகழ்வு..எழுத்தாளர்கள் யாரையும் சந்திக்காவிடினும் அத்தனை புத்தகங்களை ஒரு சேர பார்த்த பிரமிப்பில் இருந்து மீள நாட்கள் பிடித்தது.சென்ற ஆண்டு புத்தக சந்தையில் கி.ரா வை பார்த்திட விரும்பி நிறைவேறாது போனது.எஸ்.ராவை பார்த்தும் பேச தயங்கி வந்துவிட்டேன்.புத்தக பெயர்,ஆசிரியர்,வெளியிடும் பதிப்பகம் என சின்ன பட்டியல் தயாரித்து கொண்டு தான் புத்தககண்காட்சிக்கு செல்வேன்.தேவையானவற்றை மட்டும் வாங்கி வந்துவிடலாம்.

இந்தாண்டு புத்தக கண்காட்சி தந்த அனுபவம் அலாதியானது.எழுத்தாளர்கள்,நண்பர்கள் உடன் உரையாடியது நிறைவாய் இருந்தது.பதிவுலக அறிமுகம் இல்லையென்றால் இவை யாவும் சாத்தியம் இல்லை.இந்தாண்டு புத்தக சந்தையில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இதோ..

உயிர்மை

எஸ்.ராவின் சமீபத்திய நூல்கள் - 4
சாருவின் தீராக்காதலி

காலச்சுவடு

பஷீரின் "எங்க உப்பப்பாவிற்கு ஒரு ஆனை இருந்தது"   
கு.பா.ரா மொத்த தொகுப்பு
கிருத்திகாவின் "வாசவேஸ்வரம்"

தமிழினி

ஏழாம் உலகம்   ஜெமோ
ராஜேந்திர சோழன் கதைகள்

அன்னம்

கி.ரா அந்தமான் நாயக்கர்
கி.ரா சிறுவர் நாடோடி கதைகள்

பிற

எஸ்.ராவின் ஆலீஸின் அற்புத உலகம் - விகடன்
அசோகமித்திரனின் ஒரு பார்வையில் சென்னை நகரம் -கவிதா
ரகோத்தமனின் 'ராஜீவ் கொலை வழக்கு'
கன்னட மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்புகள்- நேஷனல் புக் டிரஸ்ட்

இவை தவிர்த்து வம்சி வெளியீடுகளான ஜெயந்தன் சிறுகதைகள் முழு தொகுப்பு, அய்யனாரின் மூன்று நூல்கள்,வேலு சரவணனின் "தங்க ராணி' மற்றும் "ஒற்றை கதவு" மலையாள மொழிபெயர்ப்பு நாவல் ஆகிவை இந்த வார இறுதியில் வாங்க வேண்டியவை.

Sunday, November 15, 2009

மழை... இசை..ஒரு தூர பயணம்!!

மழை..!!!எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு மழை குறித்து அதிகமாய் நண்பர்களிடம் பேசுகின்றேன்..மழையை வெறுக்க போதுமான காரணங்கள் சென்னையில் இருப்பினும் அது தரும் மகிழ்ச்சியும் நிறைவும் தவிர்க்க முடியாதது.மழையை சில இடங்களோடு பொருத்தி பார்க்க மிகவும் பிடிக்கும்.மதுரையில் பரந்து விரிந்து இருக்கும், 100 ஆண்டுகள் பழமையான எனது பள்ளி, மழை நாட்களில் இன்னும் அழகாய் இருப்பதாய் தோன்றும்..பெருமழை பொழுதில் மந்தையில் இருந்து அடித்து வரும் மழைநீரானது எங்கள் கிராமத்தின் ஆள் அரவம் அற்ற நடுவீதியில் செல்லும் காட்சி,அழகர் மலை காற்றோடு அடிக்கும் சாரல்,மழை..சாரல் என்றதும் நினைவிற்கு வரும் குற்றாலம்,சாரல் பொழுதில் செல்லும் மின்சார ரயில் பயணம்..மஞ்சள் வெயிலோடு பெய்யும் மழை...வேனிற்கால தூரல்கள் எழுப்பும் மண்வாசனை.....என.




கடந்த வாரத்தில் ஒரு மழை நாளில் மதுரைக்கு அருகில் இருக்கும் அணைப்பட்டிக்கு செல்வதென திடீரென முடிவு செய்து மூவரும் புறப்பட்டோம்.பெருமழையின் பொழுது வயல்வெளிகளில் பயணம் செய்வது அதுவே முதல் முறை.சோழவந்தான்,வாடிப்பட்டி வழியே மட்டபாறை,கரட்டுப்பட்டி கிராமங்களை கடந்து, இன்னும் இன்னும் என மழையை ரசித்த படி சென்றது மறக்கமுடியாதது.அணைபட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அப்பகுதியில் பிரசித்தம்..அம்மாவிற்கு விருப்பமானது.வைகையில் நீரை எதிர்பார்த்து சென்றது மட்டும் வீணானது..இருப்பினும் மழை காட்சிகள் அந்த குறையை மறக்கடித்துவிட்டன.


கொட்டும் மழையில் செம்மண் காட்டிற்கு நடுவே பார்த்த கிடை மாடுகள் கூட்டம்!!ம்ம்.....அப்பாவிற்கு பிடித்தமான காட்சி அது.அரிதான காட்சியும் கூட..இனிமையான மணியோசையோடு கூட்டமாய் வயல்வெளிகளில் திரியும் கிடை மாடுகள் குறித்த தனது பள்ளி கால நினைவுகளை அப்பா சொல்லி கேட்டதுண்டு..அடுத்த தலைமுறைக்கு செய்தியாய் மட்டுமே சென்றடைய போகும் விஷயங்களில் இதுவும் ஒன்று.கரட்டு காட்டில் பெய்த மழை நீரானது ..வழியெங்கும் ஓடையில்..வாய்காலில்....ஏன் வழியெங்கும் குண்டும் குழியுமான சாலைகளில் கூட வழிந்தோடியது அழகாய்!!"இன்னும் என்னை
வெகு தூரம் கூட்டி செல்லடி........" என ராஜாவின் இசையில் மயங்கியபடி சென்று வந்த இந்த பயணம் சில மணி நேரமே என்றாலும் அது தந்த உற்சாகம் சொல்லில் அடங்காதது.





சமீபத்தில் எங்கோ கண்ட மழை குறித்தான இந்த வாசகம் "If someone tells sunshine brings happiness,then they might not hav danced in the rain" எவ்வளவு உண்மை என தோன்றியது.மீண்டும் சென்னை வந்து எந்திர சுழற்சியில் உள்புகுந்தாகிவிட்டது!! "ஆதவன் பார்த்தாச்சா","Q3 ரிசல்ட் நல்லா இருக்காமே " வகையறா உரையாடல்களுக்கு மத்தியில்..மீண்டும் மீண்டும் அணைபட்டியில் எடுத்த புகைப்படங்களை புரட்டி கொண்டிருக்கின்றேன்..மழையின் ஈரம் அதில் கொஞ்சமேனும் மிச்சமிருக்கும் என்கிற நம்பிக்கையில்!!

Tuesday, November 10, 2009

உயிர்மை

தமிழில் இலக்கிய இதழ்கள் வெகுஜன பத்திரிக்கைகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாய் வந்து கொண்டுதான் இருக்கின்றன.எப்போதும் அப்பாவின் கேஸ் கட்டுக்களின் ஊடாக இருக்கும் இலக்கிய இதழ்கள் பள்ளி காலங்களில் ஏதோ படிக்கவே முடியாத தமிழில் உள்ள நூல்கள் என உணர்வை தரும்.கணையாழி,சுபமங்களா,புதிய பார்வை என தொடங்கி..கொஞ்ச கொஞ்சமாய் இலக்கிய புத்தகங்கள் அறிமுகம் ஆயின. தி.ஜா வின் "மோகமுள்" தொடராய் வந்த பழைய கணையாழி இதழ்களை கிராமத்து வீட்டில் வாசித்த அனுபவம் அலாதியானது."தீபம்" 80களில் குறிப்பிட தக்க இலக்கிய இதழ் என அப்பா சொல்லி அறிந்துள்ளேன்.

தீராநதி,உயிர்மை,காலச்சுவடு,தீம்தரிகிட,வார்த்தை ஆகிய இலக்கிய இதழ்களை தொடர்ந்து வாசித்து வந்தாலும் கட்டுரைகளை தேர்ந்தெடுத்து மட்டுமே படிக்கும் பழக்கம் என்னிடம்.இதற்கு முற்றிலும் மாறாய் உயிர்மையின் 75 ஆவது இதழ்..தேர்ந்தெடுத்த கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள் என முழுதாய் வசப்படுத்தி கொண்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு வண்ணதாசனின் சிறுகதை படிக்க கிடைத்தது.வண்ணதாசனின் கதை தலைப்புகளே கவிதை போல தான்.."அவனுடைய நதி அவளுடைய ஓடை" ,"பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக","ஒரு வாதாம் இல்லை ஒரு நீலச்சிறகு" என் அவரின் கதை தலைப்புகள் நான் வெகுவாய் ரசித்தவை.உயிர்மையின் 75 வது இதழில் வெளி வந்துள்ள வண்ணதாசனின் கதை "சுலோச்சனா அத்தை,ஜெகதா மற்றும் ஒரு சுடுமந் காமதேனு".மனித உறவுகளுக்கிடையேயான சிடுக்குகளை வெகு இயல்பாய் எடுத்தாள்வதில் வண்ணதாசனுக்கு நிகர் அவர் தான்.இவர் விவரிக்கும் எதார்த்த உலகின் மனிதர்கள் சௌந்தர்யம் மிக்கவர்கள்.

சாருவின் " தமிழ் சினிமா பாடல்கள் - ஒரு பண்பாட்டு வீழ்ச்சியின் அடையாளம்" கட்டுரை தமிழ் சினிமாவின் பாடல் வரிகளின் ஆளுமை குறித்து அலசுகிறது..தற்பொழுதைய பாடல் வரிகள் குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை..சாரு பாணி விளாசல் கட்டுரை."துறவிகளின் தனிமைக்குரல்" - எஸ்.ரா வின் இந்த கட்டுரை உலக சினிமாவில் பௌத்தம் குறித்து அலசுகின்றது."தமிழ் சினிமாவின் புதிய அலை" என்னும் அம்ஷன் குமாரின் கட்டுரை நம்பிக்கை தரும் தமிழின் புதிய திரை முயற்சிகளின் குறித்தது.




ஞானகூத்தன் மற்றும் மனுஷ்யபுத்ரனின் கவிதைகள் மழை நாளின் பின்னிரவில் வாசித்து மகிழ வேண்டியவை. "சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்" என்னும் மனுஷ்ய புத்ரனின் கவிதை இவ்வாறாக வருகின்றது..

"புனிதர்களோ கடவுள்களோ சட்டென மண்டியிடும்படி நம்மை கட்டாயபடுதுவதில்லை......

...."சக்கர நாற்காலிகள் பூமியின் எந்த மையத்தோடும் பிணைக்கபடுவதே இல்லை"..

இவை தவிர்த்து..அ.முத்துலிங்கத்தின் "இருளில்" கட்டுரை பார்வையற்றவர்கள் குறித்தது.அவர்களின் உலகம் நமக்கு விசித்திரம் நிறைந்ததாய் தோன்றினாலும்..வெகு இயல்பாய் அதை வழி நடத்தி செல்லும் தமது நண்பர் ஒருவர் குறித்து இக்கட்டுரையில் சொல்லுகின்றார்.எஸ்.வி.ராமகிருஷ்ணனின் "என் அக்காவின் காது குத்து கல்யாணம்" கட்டுரை சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் இந்து சடங்கு ஒன்றினை பற்றியது.முன்னவர்கள் குறித்து அடிக்கடி நினைவு கொள்வேன் நான்..கால சுழற்சியில் எத்தைனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும்..அவர்கள் தூக்கி எறிந்த மிச்சத்தை கொஞ்சமேனும் பயன்படுத்தி கொண்டுதான் இருக்கின்றோம் ஏதோ ஒரு செயலில்.

அழகிய மழை நாளில் நல்ல இலக்கியம் வாசித்த திருப்தி..மனுஷ்யபுத்ரனுக்கு நன்றி.

Thursday, July 9, 2009

சர்க்கஸ்

சர்க்கஸ் என்றதும் உங்களின் நினைவிற்கு சட்டென வந்து மறைவது எது? எனக்கு எப்பொழுதோ அப்பாவுடன் சென்று மரப்படிகள் போன்ற அமைப்பில் அமர்ந்து பார்த்த சர்க்கஸ் காட்சிகள் இன்றும் நினைவில் உள்ளது.சில விஷயங்கள் குழந்தை பருவத்திற்கே உரியது போல..சர்க்கஸ் காட்சிகளை ரசித்து விட்டு மறு நாள் பள்ளியில் கோமாளியின் சேட்டைகள் முதல் ஒவ்வொன்றாய் பேசி பேசி மாய்ந்த நாட்களின் ஞாபகங்கள் எளிதில் மறக்க இயலாதது.சர்க்கஸ் வருவதற்கு முன்னே அது குறித்த ஒலிபெருக்கி அறிவிப்புகளும்,சுவரொட்டிகளும் நகருக்கு வேறு தோற்றம் தருவித்துவிடுவதுண்டு.திருவிழா போல தான்,எங்கும் அது குறித்த பேச்சுக்கள்,விசாரிப்புகள் என...




மிக சமீபத்தில் ஓசூரில் சர்க்கஸ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது..ஓசூர்,ஆசிர்வதிக்க பட்ட நகரம் என தோன்றும் எனக்கு.தலை தட்டும் மேகங்கள்,குளிர் காற்று,நகரின் அமைப்பு என...ம்ம்ம்...சென்னையில் இருப்பதால் மற்ற நகரங்கள் எனக்கு அழகாய் தெரிகின்றதோ என்னவோ!!அதிகரித்துள்ள நுழைவு சீட்டு விலை,அதிகப்படியான தின்பண்டங்கள் விற்பனை,விலங்குகள் இல்லா காட்சிகள் இவை தவிர்த்து எதுவும் பெரிதாய் மாற்றங்கள் இல்லை.அரங்கெங்கும் உற்சாகத்தோடு நிறைத்திருந்த குழந்தைகளின் ஆரவாரத்திற்கு இடையே ஒளி வெள்ளத்தில் தொடங்கிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை தன்வசம் ஆக்கி கொண்டன.


சர்க்கஸ் குறித்து எழுத துவங்கியதும் சோபியா லாரன் நடித்த திரைப்படம் ஒன்று குறித்தும் எழுத தோன்றுகின்றது.1960 களில் வெளிவந்த "Boccaccio '70" நான்கு கதைகளின் தொகுப்பாய் ஒவ்வொரு கதையும் ஒரு இயக்குனரால் இயக்கபட்டிருக்கும்.நவீன வாழ்வில் காதல் மனிதர்களை படுத்தும் பாட்டை ஒவ்வொரு கதையும் ஒரு விதமாய் எடுத்தாலும்.இதில் சோபியா லாரன் நடமாடும் சர்க்கஸ் வண்டியில் ஊர் ஊராய் சென்று வித்தை காட்டும் பெண்ணாய் நடித்திருப்பார்.சோபியாவின் அசர வைக்கும் அழகை குறித்து தனி கட்டுரையே எழுதலாம்.கேளிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அந்த சிறு கிராமத்து திடலில் சர்க்கஸ் கூடாரங்கள்,துப்பாக்கி சுடும் போட்டி அரங்கம்,ராட்டினங்கள்..என தத்ரூபமாய் செட்டில் கொண்டு வந்திருப்பர்.


அன்றைய பொழுதுகள் போல இந்த சமயம் சர்க்கஸை ரசித்து பார்க்க முடியவில்லை.ஒவ்வொரு பகுதியையும் ரசிப்பதற்கு பதிலாக அக்கலைஞர்கள் அதற்கு எடுத்து கொண்ட முயற்சிகளும்,வேதனைகளுமே கண் முன்னே வந்து போனது.சர்க்கஸ்,தற்சமயம் சத்தமின்றி அழிந்து வரும் கேளிக்கைகளில் ஒன்று.நம் முகத்தில் சிரிப்பும்,ஆச்சர்யத்தையும் தோற்றுவிக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு பின்னே உள்ள வலி வார்த்தைகளினால் சொல்லி விட முடியாது..நாம் தொடர்ந்து தரும் ஊக்கமும்,ஆதரவுமே இது போன்ற கலைஞர்களுக்கு உற்சாகத்தை தந்து தொடர்ந்து பணி செய்திட வழி செய்யும்!!

Tuesday, June 23, 2009

குற்றால சாரல்....

சமீபத்திய அலுவலக பயிற்சி வகுப்பொன்றில் "DRIVE" என்கிற வார்த்தையை கேட்டதும் தோணும் ஐந்து விஷயங்களை பட்டியலிட சொன்னார்கள்.சட்டென எனக்கு தோன்றியது "மழை நாள்".மழையோடு செய்யும் எந்த காரியமும் அழகு தானே!!சமீபத்தில் மழையோடு கூடிய நெருக்கத்தை அதிகரிக்க செய்வதாய் அமைந்தது குற்றால பயணம்.மதுரைக்கு அப்பால் ஒரு நாலு மணிநேர பயணத்தில் ஒரு சொர்க்கபுரி இருக்கின்றது என்பதே பெரிய சமாதானம் தான்.




பள்ளி,கல்லூரி நாட்களில் குற்றாலம் சென்று திரும்புவது ஏதோ ஒரு வருடாந்திர கடமை போல இருக்கும்.சென்னை வந்த பிறகு மெல்ல குற்றால ஆசை தூர கனவாய் போனது.இந்த வருடம் சீசன் துவக்கதிலேயே செல்லும் வாய்ப்பு..குற்றாலதிற்கே உரிய சாரல்,குளிர் காற்று,ஈரம் ஒட்டிய நீண்ட சாலைகள்,முன்பின் அறிமுகம் இல்லாத பொழுதும் அருவியின் பொருட்டு நட்பாய் சிரித்த பெண்கள்,சாரலோடு கூடிய பயணத்தில் கேட்ட ராஜாவின் பாடல்கள்,இரவில் வெள்ளி கம்பியென தூரத்தில் காட்சியளித்த மெயின் அருவி என மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ பல காட்சிகளை எனக்காய் பத்திரபடுத்தி வைத்துள்ளேன்.



வாசுதேவநல்லூரை கடந்ததும் வைக்கோல் போருக்கும் பாழடைந்த ஒரு மண்டபத்தின் பின்னணியிலும் கண்ட வானவில் காட்சி..பிரம்மாண்ட காற்றாலைகள்...சின்ன சின்ன பழைமை மாறாத கிராமங்கள்..நெல்லை தமிழ் என முற்றிலுமாய் என்னை உள்ளிழுத்து கொண்டது இந்த பயணம்.தலையை தட்டும் மேகங்கள் உங்களுக்கு பிடிக்குமா?? பெரு மழைக்கு முன் திரண்டு இருக்கும் மேகங்கள் அச்சத்தை மீறிய சிலிர்ப்பை தருவதை மறுக்க முடியாது.குற்றாலத்தில் மேக கூட்டங்களுக்கு பஞ்சமில்லை.நிற்பதாய்..நடனமிடுவதாய். அசைந்து நடப்பதாய் உருவம் தரித்து மலைகளை வலம் வருகின்றன.குற்றாலம், அருவிகளின் இரைச்சலும்,மனதை வருடும் சாரலும்,குளிர் தென்றலோடு எண்ணெய் பிசுபிசுப்பு மணமும்,தீரா மர்மங்கள் பொதிந்த மலைகளும் என ஒருவித சௌதர்யத்தை ஏந்தி நிற்கும் ஊர்...வேறென்ன சொல்ல?!!!

Tuesday, February 24, 2009

காவல் கோட்டம்,சாருவின் "நான் கடவுள்",கல்கி மற்றும்...

* * * எஸ்.ரா தனது சமீபத்திய பதிவான "காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்" இல் காவல் கோட்டம் நூலை துவைத்து,கிழித்து காயபோட்டிருந்தார்.இதுவரை இப்படி ஒரு கடுமையான விமர்சனத்தை எஸ்.ரா எழுதி படித்ததில்லை.இவ்வலைத்தளத்தில் எனக்கு பிடித்த நூல்களை,பரிந்துரைக்க ஏற்ற நூல்களை குறித்து மட்டுமே எழுதி வருகின்றேன்.எஸ்.ரா வின் அந்த காட்டுரை வெகுவாய் யோசிக்க செய்தது.விகடன் விருதுகள் -2008 இல் காவல் கோட்டம் பரிந்துரைக்கபட்டதை குறித்து எஸ்.ரா வருத்தபட்டுளார்.விகடன் விருதுகளை நம்பி வா.மு கோமுவின் "தவளைகள் குதிக்கும் வயிறு" சிறுகதை தொகுப்பை வாங்கி ஏமாற்றம் அடைந்தது நினைவிற்கு வந்தது.

* * * திருநங்கை கல்கியின் வலைபூ குறித்து செந்தழல் ரவியின் பதிவின் மூலம் முதலில் தெரியவந்தது.பொங்கலின் பொழுது வசந்த் தொலைகாட்சியில் கல்கியின் விரிவான பேட்டி காண நேர்ந்தது.வெகு நேர்த்தியாய் தனது குடும்பம்,குழந்தை பருவம்,நண்பர்கள்,காதல், அலுவலக சூழல்,மேடை நாடக ஈடுபாடு குறித்து விவரித்தார்.வித்யாவை தொடர்ந்து கல்கியின் வருகை மகிழ்ச்சி கூட்டுவதாய் உள்ளது.

சகோதரி கல்கியின் வலைத்தளம்


* * * நான் கடவுள் திரைப்படம் குறித்த சாருவின் வெளியிடபடா விமர்சனம் குறித்து சாரு ஆன்லைன் இல் தரப்படும் அறிவுப்புகள்,கேள்விகள்,விளக்கங்கள்....... ஆர்வத்தை விட அயர்ச்சி தருவதாய் உள்ளது.முன்னமே இவை எதிர்பார்த்த ஒன்று தான் எனினும் இந்த அளவு எதிர்பார்கவில்லை :-)

* * * கடந்த ஞாயிறு அன்று பெருத்த எதிர்பார்போடு Slumdog Millionare திரைப்படம் பார்க்க சென்றேன், சுமாரான பாலிவுட் திரைபடத்தை பார்த்து முடித்த ஏமாற்றமே மிஞ்சியது. ஆஸ்கரில் இதனை விருதுகள் வாங்கி குவித்து இருப்பதும்,உலக அரங்கில் இந்தியாவின் பெயர் திரைத்துறை சார்ந்து முன்னிறுத்தபடுவது மகிழ்ச்சியே.திரைப்படம் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபடாமல் தமிழனுக்கு ஆஸ்கர் கிடைத்ததில் தாராளமாய் மகிழ்ச்சி கொள்ளலாம்.

Wednesday, December 10, 2008

எஸ்.ராவின் 'பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்" மற்றும் விசித்ரி

எஸ்.ராவின் சமீபத்திய சிறுகதை விசித்ரி ,ஏதோ ஒரு சம்பவத்தால் மன சிதைவு கண்ட பெண்ணை பற்றிய குறிப்புகளை அடுக்குவது.இந்த சிறுகதை சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்மெய்யில் படித்த எஸ்.ரா வின் "பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்" சிறுகதையை நினைவூட்டியது.முதல் வாசிப்பின் பொழுது பெருத்த சோகத்தையும்,கனத்த மௌனத்தையும் தந்த அச்சிறுகதையை மீண்டும் தேடி படித்தேன்.



மழை கொட்டும் ஒரு இரவில் விஜயலட்சுமி மனநல மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோடு கதை தொடங்குகின்றது.கரிய இருளும்,பெரு மழையும் ஒரு குறியீடே. தோற்றம் சிதைந்து,நடக்க இயலாத நிலையில் மருத்துவ பெண்மணி விஜயலட்சுமியை அழைத்து செல்ல....அவளின் நோய் கூறுகள்,வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் விவரிக்கப்படுகின்றன. இக்குறிப்புகள் மூலம் திருமண வாழ்வில் கண்ட கசப்பான நிகழ்வுகளால் உளவியல் ரீதியான மாற்றங்கள் கண்டு மன சிதைவிற்கு ஆளான காரணங்கள் மறைமுகமாய் தெரிவிக்கப்படுகின்றன.

தனது மாமனார்,மாமியாரால் மருத்துவமனையில் சேர்க்க படும் விஜயலட்சுமியை தேடி வரும் வயதான அவளின் தந்தை உருக்குலைந்து இருக்கும் தன் மகளின் நிலையை காண சகியாது அவளை அவ்விடத்தை விட்டு அழைத்து செல்கிறார்..இச்சிறுகதையின் கடைசி வரிகள் இவ்வாறாக வருகின்றது,

"உங்கள் பயணங்களில் தலைமயிர் கழிந்த, வெறித்த பார்வை கொண்ட ஒரு பெண்ணையும் அப்பாவையும் நீங்கள் சந்திக்க கூடுமாயின் தயவு செய்து அவர்களை கடந்து போய்விடுங்கள். அவர்கள் யாவரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். அல்லது சாவைத் தேடி நடந்து கொண்டிருக்கிறார்கள்"

பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்

எஸ்.ரா வின் சமீபத்திய சிறுகதையான விசித்ரியும் இதுபோலவே சிறு வயதில் மனநிலை பாதிக்க பெற்ற பெண்ணை சுற்றி நகர்கிறது.இதில் உளவியல் காரணங்களை ஒதுக்கி,சமூகமும், அப்பெண்ணின் குடும்பமும் தனது நிர்வாணத்தை மறைக்க எப்பொழுதும் 20 திற்கும் மேற்பட்ட துணிகளை சுற்றி கொண்டு திரியும் சித்ரலேகாவின் நிலைக்கு காரணம் அறிய முயன்று தோற்று போவதை மெல்லிய மர்ம முடிச்சோடு சொல்லி நகர்கிறது கதை.

விசித்ரி

மதுரை புத்தகக கண்காட்சி

பள்ளி,கல்லூரி காலங்களில் மதுரையில் புத்தகம் வாங்க வேண்டும் என்றால் செல்லும் ஒரே இடம் ரயில் நிலையம் அருகில் இருக்கும் மீனாட்சி புத்தக நிலையத்திற்கே.அங்கும் குறிப்பிட்ட எழுத்தாளர்களை தவிர்த்து வேறு நூல்கள் கிடைக்காது.ஆகா பெரும்பாலான நூல்கள் புத்தக கண்காட்சிகளில் அப்பா வாங்கியதாகவே இருக்கும்.சென்றமாதம் மதுரை சென்ற பொழுது ஒரு ஞாயிறு மாலை புத்தக கண்காட்சி(??!!) என்ற பெயரில் நகரில் நடைபெற்ற நாலைந்து இடங்களுக்கு சென்று ஏமாற்றம் அடைந்தது மறக்க முடியாது.

எனவே பெரும் எதிர்பார்ப்பு ஏதும் இன்றியே தமுக்கம் திடலில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு(நவம்பர் 27 - டிசம்பர் 08) சென்றிருந்தேன்.என் எண்ணத்திற்கு மாறாக பெரும்பாலான தமிழ் பதிப்பகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.கிழக்கு பதிப்பகம், காலச்சுவடு,உயிர்மெய்,தமிழினி,மீனாட்சி,நேசனல் புக் டிரஸ்ட் அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை.வாங்க வேண்டிய புத்தகங்கள்,அதன் ஆசிரியர் மற்றும் பதிப்பகத்தின் பெயர்கள் என சின்னதொரு பட்டியலை தயார் செய்து எடுத்து சென்றது சுலுவாய் போனது.




ஏற்கனவே படித்திருந்த ஜே.பி.சாணக்கியாவின் "என் வீட்டின் வரைப்படம்" விளிம்பு நிலை வாழ்கை குறித்த நிதர்சன பதிவு,அய்யனார் பதிவிட்டிருந்த சாணக்கியாவின் சிறுகதை தொகுப்பான "கனவு புத்தகம்" (காலச்சுவடு) மற்றும் வேட்டி தொகுப்பில் கி.ரா ஸ்லாகித்து எழுதி இருந்த சு.ராவின் "அக்கரை சீமையிலே" (காலச்சுவடு) சிறுகதை தொகுப்பையும் வாங்கினேன்.சாருவின் சீடர் என அறியப்பட்ட வா.மு.கோ.மு வின் "கள்ளி" (உயிர்மெய்) மற்றும் ஆதவனின் "இரவுக்கு முன் வருவது மாலை" (கிழக்கு பதிப்பகம்) ஆகிய இரு நூல்களும் பெரும் தேடலுக்கு பின் கிடைத்தவை.

மிக சமீபத்தில் எட்வர்ட் சச்சிதானந்தத்தின் எழுத்துலகம் குறித்து எஸ்.ராவின் தளத்திலும்,சுரேஷ் கண்ணனின் பதிவிலும் படித்ததும் அவரின் எழுத்துக்களை படிக்கும் ஆர்வம் கூடியது.அவரின் "நுகம்" (தமிழினி) மற்றும் கோபி கிருஷ்ணனின் "இடாகினி பேய்களும்" (தமிழினி) தொகுப்புகள் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.கோபியின் "டேபிள் டென்னிஸ்" தொகுப்பு எங்கு கிடைக்கும் என யாரேனும் கூறினால் நலம்.

மனுஷ்யபுத்திரன்,காலச்சுவடு கண்ணன் தவிர்த்து இலக்கிய முகங்கள் எதுவும் தென்படவில்லை.காவ்யா மற்றும் அன்னம் பதிப்பகங்கள் இல்லாதிருந்தது ஏமாற்றமே.இருப்பினும் உருப்படியாய் ஒரு மாலையை செலவிட்ட திருப்தியோடு வெளியேறினேன்.என்னளவில் பெரும் நிறைவை தருவதாய் அமைந்தது மதுரை புத்தக சந்தை.

நன்றி அய்யனார் & சுரேஷ் கண்ணன்

Wednesday, October 29, 2008

ரயில் பயணங்கள்,வாசிப்பு மற்றும் சுதாவின் 'அனல் மேலே பனித்துளி.....'



எனது பால்ய கால ஏக்கங்களில் முக்கியமான ஒன்று ரயில் பயணம்..கல்லூரி முடித்து சென்னையில் பணியில் சேர்ந்த பிறகு ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி போனதோடு சுவாரசியம் கூட்டும் அனுபவமாய் மாறிப்போனது.மிக விருப்பத்திற்குரியது வாசிப்பிற்கு அனுகூலமான நீண்ட பகல் பொழுது பயணங்கள்.ஜன்னல் காட்சிகள் துண்டிக்கப்படும் குளிர்வசதி கொண்ட ரயில் பெட்டி பயணம் தண்டனை அனுபவிப்பது போன்ற நிலையில் தள்ளும்..எல்லாவற்றிற்கும் மேலாக அரிதாய் புன்னகைக்கும் சக பயணிகள்,தொடர் சேட்டைகளால் கவனம் பெரும் சிறுவர்கள்,இரவில் ஒளிரும் நதிகள்,உடன் நகரும் வயல்வெளிகள்,மரங்கள், நாகை,நெல்லை,மதுரை என சரளாமாய் புரளும் வட்டார மொழிகள் என சுவாரசியத்திற்கு குறைவில்லாத ரயில் பயணங்கள் சலிப்பற்று தொடர்கின்றது!!

*************************************

வாசிப்பு..புத்தக வாசிப்பு தொடர் ஆட்டத்தில் பங்கு கொண்டு கேள்விகளுக்கான பதில் எழுதும் பொழுது வாசிப்பு மீது கொண்டிருக்கும் ஆர்வமும்,முற்று புள்ளி அற்று தொடரும் அதன் சுழற்சியில் சுகமாய் பயணிப்பது குறித்து யோசிக்க செய்தது.வாசிப்பு என்றைக்குமே திணிக்கபட்டு வருவதில்லை,தேடல் மிகுதியின் தொடர்ச்சியாய் வருவது!!சமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டி ஒன்றில் வாசிப்பு குறித்த வைரமுத்துவின் "வாசிப்பு மனிதனை விசாலபடுத்துவது.வாசிப்பு உலகம் வாசகன் வாழாத உலகத்தை அவன் வாசலுக்கு கொண்டு வருவது " என்கின்றன வரிகள் வெகு உண்மையாய் தோன்றியது.நெருக்கடி மிகுந்த தினசரி வாழ்வில் காண கிடைக்காத உலகம் குறித்த தேடல் மிக அவசியமே!!சமீபத்திய பண்டிகை விடுமுறையில் தொடர்ந்து மூன்று நாட்கள் வாசிக்காமல் இருந்தது வெறுமையாய் உணர செய்தது..சென்னை பட்டணம் நெருங்க நெருங்க அந்த வெறுமை தேவை ஆகா உருமாறி ரயிலிலேயே வாசிப்பை தொடங்கி விட்டேன்...

**********************************************




முன் எப்போதும் இல்லாத அளவு ஒரு பாடலின் மீது பைத்தியம் கொண்டு, எத்தனை முறை கேட்டிருப்பேன் என கணக்கில் கொள்ளாது தொடர்ந்து ரசித்து கொண்டிருகின்றேன் சுதா ரகுநாதனின் குரலில் வரும் வாரண ஆயிரம் படப்பாடல் "அனல் மேலே பனித்துளி....." யை.சுதாவின் முந்தைய இரு திரை பாடல்கள் அதிக கவனம் பெறவில்லை..ராஜாவின் இசையில் இவன் படப்பாடல் "எனை என்ன செய்தாய்.." அற்புதமான தொடக்கமாய் இருந்த போதிலும் ஏனோ வெகுஜன ரசிப்போடு ஒன்றவில்லை.

கர்நாடக இசையை பொறுத்த மட்டில் எனது அறிவும்,ரசனையும் பூஜ்யம்.நேர் எதிராய் கர்நாடக சங்கீதத்தில் அப்பாவிற்கு உள்ள ஈடுபாடும்,சுதாவின் பாடல்களுக்கு மீது கொண்ட தீவிர ரசனையாலும் இப்பாடலை கேட்க முடிந்தது.மெல்ல இப்பாட்டின் வசீகரத்தில் மூழ்கி போகும்படியும் ஆனது..

"எந்த காற்றின் அளாவலில் மலர்
இதழ்கள் விரிந்தனவோ ..........."

"சந்தித்தோமே கனாக்களில் சில முறைய பலமுறையா
அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா........"

தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கொண்டு முழுமை அடைவது தாமரையின் வரிகள் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புதுவித அனுபவம் தந்தபடி தொடர்கின்றது!!

Tuesday, May 13, 2008

Times Now - இலக்கிய சிறப்பிதழ்

Tmesnow இதழ் தங்களின் ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் பொருட்டு சுஜாதாவை தலைமைஆசிரியராய் கொண்டு இலக்கிய சிறப்பிதழ் ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கதை,கட்டுரை,கவிதைகளின் தொகுப்பாய் வெளிவந்துள்ள இப்புத்தகம் இலக்கிய வாசிப்பாளனுக்கு சிறந்த விருந்து.



சுஜாதாவின் NRI திருமண ஏற்பாடு என்கிற சிறுகதையோடு தொடங்கும் இதழ்,வைரமுத்து,மனுஷ்யபுத்திரன்,கனிமொழி,நா.முத்துக்குமார் ஆகியோரின் கவிதைகள் ஆங்காங்கே மிளிர இயல்பாய் பயணிக்கிறது.
வண்ணதாசனின் சிதம்பரத்தில் சில ரகசியங்கள்-உள்ளடங்கிய ரகசியங்கள் கொண்ட பால்ய கால நண்பனோடு நாயகனின் உறவை சொல்லும் கதை , நாஞ்சில் நாடனின் கோம்பை -கோம்பை என்னும் ஊரின் பதிவுகளை அந்த வட்டார வழக்கில் பதிவு செய்துள்ளார். ,சுரேஷ்குமார் இந்த்ரஜிதின் புதிர் வழி பயணம் -விதியின் விளைவால் நிகழும் ஆச்சர்யமூட்டும் நிகழ்வுகளின் பதிவு, எஸ்.ராமகிருஷ்ணனின் ஆண்கள் இல்லாத தெரு - ஒரு விதவை தாய் மற்றும் மகளின் இடையே நடம் உணர்வுகளின் போராட்டம்...ஆகிய சிறுகதைகள் என் மனம் கவர்ந்த சிறுகதைகள்..மேலும் ,பிரபஞ்சன்,சுகுமாரன், ஆதவன் ஆகியோரின் சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.
கட்டுரை பகுதியில் சாருநிவேதிதா- மேலை நாட்டு சுகாதாரம்,சாலை விதி ஒழுக்கம் குறித்த விழிப்புணர்ச்சி,குமார்- இளையராஜாவின் இசை பயணம் குறித்த ஒர் முழு பதிவு,செழியன்-தமிழ் சினிமா தற்போதைய வளர்ச்சி நிலை,ஜெயமோகன்-இலக்கியம் குறித்த கட்டுரை..என சிறந்த சிந்தனையை தூண்டும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

Times Now இதழின் இம்முயற்சி வரவேற்கப்படவேண்டியது..A book that worth million.வாசிபிற்கான தேடல் குறைந்துள்ள இன்றைய சூழலில் ஊடகங்கள் இதுபோல இலக்கிய சிறப்பிதழ்கள் வெளியிடுவது உவகை தரக்கூடிய ஒன்று.