Saturday, November 14, 2009

ரஸ்டியின் வீரதீரங்கள் - ரஸ்கின் பாண்ட்

மீண்டும் ஒரு சிறுவர் நாவல்.ரஸ்கின் பாண்ட் எழுதியுள்ள இந்த சிறுவர் இலக்கியம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.ரஸ்கின் பாண்ட் குறித்து பல சுவையான செய்திகள் இணையத்தில் கிடைத்தன.ஆங்கிலோ இந்தியரான இவர் சிறுவர்களுக்காக பல நூல்கள் எழுதியுள்ளார்.பெரும்பாலான இவரின் நாவல்கள் குழந்தைகள் பார்வையில் உலகம் என்கிற போக்கில் உள்ளது.சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் நிகழ்வதாய் வரும் இக்கதை கூட ரஸ்டி என்னும் சிறுவன் பள்ளி வாழ்கையை வெறுத்து உலகத்தை சுற்றி பார்க்க ஆர்வம் கொண்டு மேற்கொள்ளும் பயணத்தை பற்றியது.


தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டு பாகங்களாக உள்ளது "கென் மாமா" & "ஓடி போதல்" என.கோடைகால விடுமுறைகள் பள்ளிபருவத்தின் போது மிகுந்த விருப்பத்திற்குரிய ஒன்றாய் இருக்கும்.பாட்டி தாத்தாவுடன் செலவிட எங்கள் கிராமத்திற்கு சென்று விடுவேன்!!!பேசுவதற்கு அவர்களிடம் அதிக செய்திகள் உண்டு..கேட்பதற்கு தான் நாம் தயாராக இல்லை."கென் மாமா" பகுதி ரஸ்டியின் கோடைகால விடுமுறைகள் குறித்தது.அருமையாக சமையல் செய்வதில் வல்லவலான தனது பாட்டியின் வீட்டிற்கு செல்லும் ரஸ்டி,தனது தூரத்து உறவினரான கென் மாமாவோடு டெகராடூன் நகரில் கழித்த காலங்களை கூறுவதாய் உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் மலைகளை,பள்ளத்தாக்குகளை..அழகாய் வர்ணித்துள்ளார்.நாவலின் இரண்டாம் பகுதி சுவாரஸ்யமானது.ஜாம் நகருக்கு வரபோகும் கப்பல் காப்டனான தனது மாமா கென்னை சந்தித்து அவரோடு உலக பயணம் மேற்கொள்ள முடிவு செய்து பள்ளியை விட்டு அந்நகருக்கு மேற்கொள்ளும் பயணம் குறித்தது. பயணங்கள் எப்போதும் உற்சாகம் தரக்கூடியவை.புதிய இடங்கள்..புதிய மனிதர்கள்..புதிய உணவு பழக்கங்கள்..மொழிவேற்றுமை என முற்றிலுமாய் புதிய உலகத்திற்குள் பயணிப்பது சுவாரசியமானது தானே!!டெகராடூன்இல் இருந்து ஜாம் நகருக்கு ரஸ்டியும் அவனின் நண்பன் தல்ஜித்தும் ஆர்வமும்,பயமும் கொண்டு மேற்கொள்ளும் பயணம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானாதாய் இல்லை..இருப்பினும் அச்சிறுவர்களின் மன உறுதி அவர்களின் இலக்கை சுலுவாய் சென்றடைய துணை நிற்கின்றது.

தேகராடூனில் தொடங்கும் இச்சிறுவர்களின் பயணம்..டெல்லி..ராஜஸ்தான் வழியாக ஜாம் நகர் சென்றடையும் வரை இடறல்களை மட்டுமே தருகின்றது.இவர்கள் சந்திக்கும் நபர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகை.அன்பாய் வரவேற்கும் டீ கடைகாரர்,பணம் எதுவும் வேண்டாமல் ராஜஸ்தான் அழைத்து செல்லும் லாரி ஓட்டுனர்..இவரின் சத்தம் மிகுந்த ஹாரன் குறித்த ரஸ்டியின் கருத்துக்கள் சிரிப்பை வரவைப்பவை,இடிந்த மண்டபம் ஒன்றில் சந்திக்கும் கொள்ளையர் கூடம்,ஜாம் நகரின் துறைமுகத்திற்கு செல்ல உதவும் ஜட்கா வண்டிக்காரன் என.கஷ்டங்கள் பல கடந்து ஜாம் நகரை வந்தடையும் ரஸ்டியின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பது சின்ன சோகத்தோடு சொல்லப்படுகின்றது.

ரஸ்கின் பாண்ட் நாவல்கள் தவிர்த்து கவிதைகள்,கட்டுரைகள்,சுயசரிதைகள் பல எழுதியுள்ளார்.சாகித்திய அகாதமி மற்றும் பத்மஸ்ரீ விருதுகளும் பெற்றுள்ளார்.நேஷனல் புக் டிரஸ்ட் பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளன தமிழில்.எளிய தமிழில் உள்ள இந்நாவல்கள் சிறுவர்களின் உலகினுக்குள் சென்று வந்த திருப்தியை தருகின்றன.

5 comments:

கே.என்.சிவராமன் said...

இன்னும் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

யாந்தரீக வகை கதைகளை தமிழில் எழுதிப் பார்க்கும் அனைவருமே ரஸ்டினை நிச்சயம் ஒரு கட்டத்தில் சுவாசித்திருப்பார்கள்.

விஷால் பரத்வாஜ் இயக்கிய, 'தி ப்ளு அம்ப்ரல்லா' திரைப்படம் ரஸ்கினின் கதையை தழுவியதுதான்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

லேகா said...

சிவராமன்,

பகிர்விற்கு நன்றி.

ஆர்.கே.நாராயணன், அனிதா தேசாய் வரிசையில் சிறுவர்களுக்கான இலக்கியம் படைப்பதில் முக்கியமான எழுத்தார்களில் ஒருவராய் ரஸ்கின் இருகின்றார்.இருப்பினும் தமிழில் இந்நாவல் சிறப்பாய் மொழிபெயர்க்கபட்டுள்ளது என சொல்ல முடியாது.

விஷால் பரத்வாஜ் இயக்கிய, 'தி ப்ளு அம்ப்ரல்லா' குறித்த அறிமுகத்திற்கு நன்றி.பார்க்க வேண்டிய திரைப்படங்களின் எண்ணிக்கை கூடி கொண்டே போகின்றது!!

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு லேகா.

குப்பன்.யாஹூ said...

வழக்கம் போலவே அருமையான பயனுள்ள பதிவு லேகா.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன்.

as sivaraman said you could have written more about ruskin.

லேகா said...

நன்றி ராம்ஜி.

நன்றி சரவணகுமார்.