Sunday, March 22, 2009

தகழியின் "இரண்டு படி" மலையாள மொழிபெயர்ப்பு

எழுத்தாளர் தகழிக்கு அறிமுகம் தேவை இல்லை.மலையாள இலக்கிய உலகில் மிக சிறந்த படைப்புகளை வரிசைப்படுத்தினால் தகழியின் படைப்புகளுள் முதல் பத்து இடத்தில இடம் உண்டு.விளிம்பின் குரலாய் ஒலிப்பது இவரின் படைப்புகள்.செம்மீன்,தோட்டியின் மகனை தொடர்ந்து இவரின் "இரண்டு படி" நாவல் சமீபத்தில் படிக்க கிடைத்தது.குட்ட நாடு என அழைக்கப்படும் கேரள தேசத்தின் சோறு பகுதியின் விவசாய பண்ணை கூலிகளை பற்றிய கதை.தகழியின் எழுத்தில் மிகபிடித்தது பட்டவர்த்தனம்.இந்நாவலும் அது போலவே விவசாய கூலிகளின் சுதந்திரத்திற்கு முந்தைய நிலையின் கொடூரங்களை,பண்ணையார்களின் அதிகார மேம்போக்குதனத்தை விரிவாய் விவரித்து செல்கின்றது.
வயல் வேலையில் கெட்டிக்காரியான சிருதையை பெண் பார்க்கும் படலத்தை விவரித்து தொடங்கும் கதை,நாட்டுபுறங்களின் அழகும்,அறிவும் கடந்து உடல் உழைப்பில் ஆண்களுக்கு சலிக்காத பெண்களுக்கு உள்ள பெருமையை மறைமுகமாய் சொல்லுகின்றது.சிறுத்தையை மணக்கும் பொருட்டு அவளின் தந்தை கேட்கும் பணமும் நெல்லும் தரும் பொருட்டு பண்ணை கூலியாய் பணி சேர்கிறான்.அப்பகுதியின் விவசாயமுறை படிப்பதிற்கே அதிர்ச்சியாய் உள்ளது.நீர் நிறைந்த ஏரிகளில் வரப்பு கட்டி உள்ளுள்ள நீரை வெளியேற்றி விவசாயம் செய்ய தயார் செய்து பின் நெற்பயிர் விளைவிக்க பறை கூலிகள் மெனக்கிடும் காட்சிகளின் விவரிப்புகள் கற்பனையிலும் நினைத்து பார்க்க இயலாதது.

கோரன் தனது பண்ணையாரின் நிலத்தில் இரவு பகல் பாராது உழைத்தும் இறுதியில் கிடைக்கும் கூலியை கண்டி அதிர்ச்சி அடைகின்றான்.எதிர்த்து கேட்க வழியின்றி மருகும் கோரன் முடிவாக விவசாய கூலிகளின் நலன் காக்கும் சங்கத்தில் இணைத்து புரட்சி இயக்கத்தில் பங்கு கொள்கின்றான்.நாவலின் பின்பகுதி பெரும்பாலும் அக்காலகட்டத்தின் விவசாய புரட்சி,அரசியல் நிலைப்பாடு,அரசின் ஒடுக்குமுறை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

பறை பல்ல கூலிகளின் வாழ்கை நிலையை துணிகரமாய் சொல்லுவதோடு மட்டும் இல்லாது இந்நாவல் அழுத்தமாய் பதிவு செய்யும் மற்றொன்று கோரன்-சிருதை இவர்களின் மெய் காதல்.துன்பத்தின் பிடியில் இருக்கும் கணங்களிலும் இருவரின் அன்பும்,பிரியமும் குறையாது எதிர்காலம் குறித்த கனவுகள் சுமந்து தொடர்கின்றது இவர்களின் நாட்கள்.டி.ராமலிங்கத்தின் நேர்த்தியான மொழிபெயர்ப்பில் சாகித்திய அகாதமியால் வெளியிடபட்டுள்ள இந்நாவல் வாசிக்க பட வேண்டிய ஒன்று.

வெளியீடு - சாகித்திய அகாதமி

12 comments:

ராஜ நடராஜன் said...

தகழி செம்மீன் கதைக்கு சொந்தக்காரர் தானே?

VIKNESHWARAN ADAKKALAM said...

//இந்நாவல் வாசிக்க படிக்க வேண்டிய ஒன்று.//

ரெண்டுக்கும் என்னங்க வித்தியாசம்? புதசெவி :)

லேகா said...

//வாசிக்க பட வேண்டிய ஒன்று// என வாந்திருக்க வேண்டியது!!

மாற்றிவிட்டேன்.நன்றி விக்னேஷ்வரன்.

லேகா said...

வருகைக்கு நன்றி ராஜ நடராசன்.

செம்மீன் எழுதிய தகழியே தான்.

குப்பன்.யாஹூ said...

பகிர்தலுக்கு உளம் நிறைந்த நன்றி லேகா.

தங்களின் வாசிக்கும் வீச்சு கண்டு அதிசயிக்கிறேன், சந்தோசமாக உள்ளது.

keep going, all the very best. Brilliant work.

குப்பன்_யாஹூ

யாத்ரா said...

நல்லதொரு அறிமுகம்,

மலையாள இலக்கிய உலகம் பொக்கிஷங்கள் நிரம்பியது பஷீர், தகழி, பொற்றெகாட், கமலாதாஸ், சக்கரியா,,,,,,

சுரா மொழிபெயர்த்த தோட்டியின் மகன் வாசித்திருக்கிறேன், விளிம்பின் குரல், பட்டவர்த்தனம்
மிக உண்மை

செம்மீண் வாசிக்க அலமாரியில் காத்திருக்கிறது
மற்றுமொரு நல்ல அறிமுகத்தைச் செய்திருக்கிறீர்கள்
நன்றி

லேகா said...

மிக்க நன்றி ராம்ஜி :-)

லேகா said...

நன்றி யாத்ரா.

//பொற்றெகாட், கமலாதாஸ், சக்கரியா//

இவர்களின் படைப்புக்களை குறிபிடுங்களேன்,படிக்க ஆவலாய் உள்ளது!!

யாத்ரா said...

வெகுநாட்களுக்கு முன் நூலகத்தில்
சுரா ( சுந்தர ராமசாமி அல்ல ) என்பவர் தொடர்ச்சியாக பல மலையாள எழுத்தாளர்களை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்த புத்தகங்களை வாசித்திருந்தேன்,

புத்தகங்களின் பெயர்கள் வீட்டில் நாட்குறிப்பிலிருக்கிறது, நாளை வழங்குகிறேன்

பொற்றேகாட் ஞானபீடம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்

கமலாதாஸ் பெண் எழுத்தாளர், சக்கரியா இவர்களும் விளிம்பின் குரலில் எழுதியவர்கள் தான்

யாத்ரா said...

மொழிபெயர்ப்பு - சுரா ( சுந்தர ராமசாமி அல்ல )

1, ஏழாவது பூ - பொற்றோகாட் உள்ளிட்ட மற்ற முதன்மை மலையாள எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு

2, முதல் முத்தம், சிங்கடி முங்கன் -வைக்கம் முகம்மது பஷீர்

3, இது தான் என் பெயர் - சக்கரியா

4, சந்தன மரங்கள் - கமலாதாஸ் (மாதவிக்குட்டி)

நூலகத்தில் இருந்து எடுத்து எப்போதோ வாசித்தவை என்பதால் பதிப்பகங்கள் சரியாக நினைவிலில்லை. ( சந்தியா, புதுமைப்பித்தன் பதிப்பக வெளியீடாக இருக்கலாம்.)

லேகா said...

வருகைக்கு நன்றி சுரேஷ் :-)

லேகா said...

மிக்க நன்றி யாத்ரா.

கமலா தாஸ்,சக்கரியா குறித்து கேள்விபட்டுள்ளேன்,இவர்களின் நூல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.