- ஷைலஜா
மலையாள எழுத்தாளர் மீராவின் பெண்ணிய சிறுகதைகளின் தொகுப்பிது.பெண்ணியம் பேசி புரட்சிகர சிந்தனை கொண்ட பெண்கள் குறித்தான கதைகள் அல்ல இவை.அன்றாட சிக்கல்களில் இருந்து வெளிவர முயன்று தோற்கும் எதார்த்த பெண்கள் குறித்தான பதிவுகள்.பெண்களின் அகவுலகை வெகு நேர்த்தியாய் பகிரும் இக்கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாய் உணர செய்தன.
"செய்திகளின் நாற்றம்",பரவலாய் கவனம் பெற்ற இச்சிறுகதையை ஏற்கனவே படித்த ஞாபகம்.பத்திரிக்கை ஒன்றில் மரண செய்தி பிரிவில் எடிட்டராய் இருப்பவளின் அன்றாடம் அச்செய்திகளை போலவே சோகம் திணிக்கப்பட்டு நகர்வதை சொல்லும் சிறுகதை.எத்தனை அலுப்பு தரும் வேலை அது.இரவும் பகலும் மரண செய்திகளுக்காய் காத்திருக்கும் நாயகி மரணத்தின் நாற்றத்திற்கு தன்னை பழக்கப்படுத்தி கொண்டு முழுதுமாய் அதில் தோய்ந்து போகின்றாள்.மரண செய்திகளின் ஊடாய் கழியும் அவளின் தின பொழுதுகள் கணவனையும்,குழந்தையையும் கூட இரண்டாம் பட்சமாக்கி அவளை ஆட்டுவிக்கின்றது.உயிரற்ற அம்மனிதர்களும்,கல்லறை தோட்டத்து வசனங்களுமே அவளுக்கு நித்ய துணையாகி போகின்றன.அழுத்தம் நிறைந்த அவளின் மன உணர்வுகளுக்கு வெகு அருகில் சென்று வந்தது போன்ற அனுபவம் தேர்ந்த மொழிபெயர்ப்பினால் சாத்தியமாகின்றது.
"இருப்பினும் வேட்டைகாரனும்,பறவையும் ஒரே வலையில் மாட்டி கொள்வதுதான் திருமணம் என்பதை அவர்கள் சீக்கிரமே புரிந்து கொண்டார்கள்"
"அர்த்த ராத்திரிகளின் அலறல்" மற்றும் "இதயம் நம்மை ஆதரிக்கின்றது" ஆகிய சிறுகதைகள் நவீன வாழ்க்கை முறையில் பொருந்தி போக இயலாமல் அலைபாயும் நடுத்தர குடும்பத்து பெண்களை பகடி செய்யும் கதைகள்.குடும்ப பெண்களுக்கே உண்டான பொதுவான சாபங்களை தாண்டி வர இயலாத இயலாமையை நகைச்சுவை சாயம் பூசி பகிர்கின்றன இக்கதைகள்."இறந்தவளின் கல்யாணம்",கைகூடா காதலும்,மறுக்கபடும் வாழ்கையும் ஆதிவாசி பெண்ணொருத்தியை தற்கொலைக்கு இட்டு செல்லும் அவலத்தை,அதன் தொடர்ச்சியாய் நிகழும் ஆதிவாசிகளின் சடங்குகளையும் அவள் விரும்பியவனின் நினைவுகள் கொண்டு பகிர்கின்றது.அவள் தோற்றம் குறித்த விவரிப்புகள் அவளின் இலக்கிய ரசனையின் முன்பு யாதுமற்று போகின்றன. காதலின் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் இக்கதை நாயகி ஒடுக்கப்படும் சமூக பெண்களின் மற்றுமொரு குறியீடு.
இத்தொகுப்பில் மற்றொரு குறிப்பிட தகுந்த கதை "மோக மஞ்சள்".மருத்துவமனையில் சந்திக்க நேரும் திருமணமான நடுத்தர வயது ஆணிற்கும்,விதவை பெண்ணிற்குமான ஒரு நாள் உறவை கற்பு,புனிதம் இத்யாதிகள் கொண்டு பூசி மொழுகாது எதார்த்த நிலை கொண்டு புரிய வைக்கும் கதை.சந்தோஷத்திற்கான எல்லா சாத்தியங்களும் மறுத்தளிக்கபட்ட நிலையில் அவள் கொள்ளும் அந்த நேசமும் மரணத்தின் துணை கொண்டு கரைந்து போவது பெரும் சோகம்.தொடரும் வீழ்ச்சிகளின் இருந்து விடுபட பிரியத்தை எதிர்நோக்கி காத்திருந்து தோற்கும் சராசரி பெண்களை குறித்த கதைகள் இவை.பளிச்சிடும் பல வரிகள்..அத்தனை எளிதாய் கடந்து போகவிடாது செய்கின்றன,நேர்த்தியான மொழிபெயர்ப்பு.முன்னுரையில் பகிரப்படும் இந்த கவிதையில் எல்லாமும் சொல்லபடுகின்றது.
அளவாய் செதுக்கப்பட்ட
கண்ணாடி தொட்டிக்குள்
கம்பீரமாய் நீந்தி விளையாடுகிறேன்
தினம் தினம் அக்கறையோடு
சுத்தம் செய்யபடும் தண்ணீர்.
பதப்படுத்தப்பட்ட செடி கொடிகள்
தேடி அலையாமல் வாய்க்குள்
வந்து விழும் உணவு
தேவையை சரியாய் புரிந்து கொண்டு
அளிக்கப்படும் பொழுதுபோக்குகள்
என் இருத்தல் பார்ப்பவர்களுக்கு
நான் கொடுக்கும் சந்தோசம்
அழகாய் வளைந்து நெளிந்து
பொன்னிறத்தில் மின்னி
வாலசைத்து தலையசைத்து
சந்தோசம் காட்டுவதாய்
எல்லா சுதந்திரங்களோடும்
எவ்வித சுதந்திரமுமின்றி
ஆசிரியர் - கெ.ஆர்.மீரா
தமிழில் - கே.வி.ஷைலஜா
வெளியீடு - வம்சி
விலை - 50 ரூபாய்