Friday, May 23, 2008

கர்ண மோட்சம் - குறும்படம் (இயக்கம் - முரளி மனோகர்)தென்மாவட்ட கிராமங்களில் இன்றும் ஊர் திருவிழா என்றால் நாடகம்,கரகாட்டம்,ஆடல் பாடல் என கிராமமே விழாக்கோலம் கொண்டு அழகுரும்.எங்கள் கிராம சாமி கும்பிடும் அப்படியே ,திருவிழா என்றால் நாடகம்,கரகாட்டம்,ராஜாராணி ஆட்டம் என மொத்தமாய் ஒரு வாரம் கோலாகலமாய் இருக்கும்.திருவிழாவிற்கு நாள் குறிந்த அன்றே நாடகம் குறித்த ஆவலும்,ஆயத்தமும்,ஏற்பாடுகளும் தொடங்கிவிடும்.அதிலும் வருடம் தோறும் ஒரே கதையான வள்ளி திருமணம் நாடகத்தை சலிக்காமல் மக்கள் பார்த்து ரசிப்பர்.இது முதலில் எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது..பின்பு வருடம் முழுதும் ஓயாது உழைக்கும் அவர்களுக்கு பெரும் உற்சாகத்தை குடுக்கும் இக்கலைகள் மீது தீரா விருப்பம் வருவது இயல்பே என புரிந்தது.இரவு 9 மணி வாக்கில் தொடங்கும் நாடகம் காலை 6 மணிக்கு முடிவு பெரும்.விடிய விடிய நடைபெறும் நாடகத்தை காண பெரிசுகள்,பெண்கள்,சிறுவர்கள் என திடலில் அமர்ந்து போன வருட நாடகத்தை பற்றியும்,வள்ளியாய் நடித்த நடிகை குறித்தும்,பப்பூன் செய்த ஆபாச சேட்டைகள் குறித்தும் பேசி பேசி ஓய்ந்து இந்த வருட நாடகத்தை காண ஆவலோடு ஆயத்தமாவர்.கிராமப்புறங்களில் கொண்டாடப்படும் கலைகளான தெரு கூத்து,பாவை கூத்து,கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை தற்பொழுது அழிவை நோக்கி செல்லுகின்றன.அழிந்து வரும் கிராமிய கலைகளுள் முக்கியமான ஒன்று தெரு கூத்து..ஒரு தெரு கூத்து கலைஞனின் ஒரு நாள் பொழுதினை படம் பிடித்து அக்கலையின் இன்றைய அவல நிலையை அழுத்தமாய் பதிவு செய்துள்ளார் கர்ண மோட்சம் இயக்குனர் முரளி.

பள்ளி ஒன்றில் கூத்தாட அழைத்ததை கொண்டு தன் மகனுடன் கர்ணன் வேடமிட்டு நகரத்திற்கு வருகிறான் நாயகன்.யாரோ இறந்ததின் காரணமாய் பள்ளி அன்று விடுமுறை என அறிந்து தலைமை ஆசிரியர் வீடு தேடி செல்ல அவர்களும் அங்கு இல்லாது போகவே மிகுந்த பசி கொண்டு டீ கடை ஒன்றில் தன் மகனோடு நிற்கிறார்.அங்கு கடைக்காரனிடம் ஏச்சும் பேச்சும் வாங்கி பணி செய்யும் சிறுமி ஒருத்தி உணவு தர அவளுக்காக மட்டும் கூத்தாடுகிறார்.... அதே திருப்தியோடு தனது ஊருக்கு செல்கிறார்..இதனிடையில் கூத்தாடியின் மகன் கிரிகெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டு அவரிடம் மட்டையும் பந்தும் வாங்கி தர தொடர்ந்து நச்சரிகிறான்...தற்போதைய சிறுவர்களின் ஆர்வம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லும் அக்காட்சி அருமை.பதினைந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்திற்கு ஓடும் இக்குறும்படம் ஓர் அற்புத முயற்சி.கர்ணனாய் வேடம் தரித்து கூத்தாடியாய் வலம் வரும் நாயகன் மிக எளிமையாய் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்.பின்னணி இசை பெரும் பலம்..மிகை இன்றி கதையோடு ஒன்றி பொருந்துகின்றது..அழிந்து வரும் கலைகளினால் கலைஞர்கள் கட்டாய வறுமைக்கு தள்ளபடும் நிலையை மிகையின்றி எளிமையாய் அதே நேரம் அழுத்தமாக பதிவு செய்துள்ள இக்குறும்படம் பல பாராட்டுகளையும்,பரிசுகளையும் பெற்றுள்ளது...இயக்குனர் முரளியின் இம்முயற்சி வரவேற்க படவேண்டிய ஒன்று.

கர்ண மோட்சம் குறும்படத்தினை காண கீழ் உள்ள இணைப்பை நகல் எடுத்து இணையதள முகவரி தளத்தில் ஒட்டவும்

http://video.google.com/videoplay?docid=5284960075003286933&q=karna+motcham&total=1&start=0&num=10&so=0&type=search&plindex=0

Wednesday, May 21, 2008

நேநோ- சாரு நிவேதிதா (சிறுகதை தொகுப்பு)

நாவலை காட்டிலும் சிறுகதை தொகுப்புகள் படிப்பதற்கு இலகுவாய் இருப்பவை.நீண்ட நேர பிரயத்தனம் இன்றி சிறு சிறு நிகழ்வுகளின் முடிவுடன் வாசிப்பை தொடரலாம்.எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை தொகுப்புகள்..

வேட்டி - கி.ராஜநாராயணன்.
அக்பர் சாஸ்த்ரி/ சிகப்பு ரிகஷா - தி.ஜானகிராமன்
குரு பீடம் - ஜெயகாந்தன்
தாமிரபரணி கதைகள் - வண்ணநிலவன்
கனிவு - வண்ணதாசன்

இந்த வரிசையில் நான் சேர்க்க விரும்புவது சாருவின் நேநோ சிறுகதை தொகுப்பு.இதுவரை வாசித்திராத வகை கதையாடல்கள்.சராசரி சிறுகதைகளை போலே அல்லாமல் இயல்பாய் அமைந்த கதை சொல்லும் போக்கு அருமை.பெரும்பாலான கதைகள் சாருவின் நேரடி அனுபவங்களே...நெருக்கடி மிகுந்த டெல்லி வாழ்கை,நாடக அனுபவம் என தொகுப்பு முழுதும் தான் கண்டு ரசித்த,வெறுத்த,மகிழ்ந்த நிகழ்வுகளை பதிவு செய்துள்ளார்.the joker was here...முற்றிலும் மாறுபட்ட சிறுகதை..கதையின் போக்கு வாசகனை கட்டிபோடுகின்றது .ரங்கையன் கோட்டை ஒரு அமானிஷ்ய அனுபவத்தை தருகின்ற கதை..இது புதுமை பித்தனின் காஞ்சனை கதையை ஒத்தது.ப்ளாக் நம்பர்: 27திர்லோக்புரி நெருக்கடி மிகுந்த நடுத்தர வர்க்கத்தினரின் நிலையை அப்படியே படம் பிடித்து காட்டும் உண்மை அனுபவம்.என் முதல் ஆங்கில கடிதம்...சாருவின் நாடக வேட்கையையும் மதுரையில் பெற்ற கசப்பான அனுபவங்களையும் விவரிக்கின்றது.மயக்கம்..சிறுகதை சுஜாதா பாணி கதையாடல்..tragedic ending story..இவ்வாறு ஓவ்வொரு கதையும் நிஜங்களின் பதிவாய் இயல்பாய் அமைந்துள்ளது..

Tuesday, May 13, 2008

Times Now - இலக்கிய சிறப்பிதழ்

Tmesnow இதழ் தங்களின் ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் பொருட்டு சுஜாதாவை தலைமைஆசிரியராய் கொண்டு இலக்கிய சிறப்பிதழ் ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கதை,கட்டுரை,கவிதைகளின் தொகுப்பாய் வெளிவந்துள்ள இப்புத்தகம் இலக்கிய வாசிப்பாளனுக்கு சிறந்த விருந்து.சுஜாதாவின் NRI திருமண ஏற்பாடு என்கிற சிறுகதையோடு தொடங்கும் இதழ்,வைரமுத்து,மனுஷ்யபுத்திரன்,கனிமொழி,நா.முத்துக்குமார் ஆகியோரின் கவிதைகள் ஆங்காங்கே மிளிர இயல்பாய் பயணிக்கிறது.
வண்ணதாசனின் சிதம்பரத்தில் சில ரகசியங்கள்-உள்ளடங்கிய ரகசியங்கள் கொண்ட பால்ய கால நண்பனோடு நாயகனின் உறவை சொல்லும் கதை , நாஞ்சில் நாடனின் கோம்பை -கோம்பை என்னும் ஊரின் பதிவுகளை அந்த வட்டார வழக்கில் பதிவு செய்துள்ளார். ,சுரேஷ்குமார் இந்த்ரஜிதின் புதிர் வழி பயணம் -விதியின் விளைவால் நிகழும் ஆச்சர்யமூட்டும் நிகழ்வுகளின் பதிவு, எஸ்.ராமகிருஷ்ணனின் ஆண்கள் இல்லாத தெரு - ஒரு விதவை தாய் மற்றும் மகளின் இடையே நடம் உணர்வுகளின் போராட்டம்...ஆகிய சிறுகதைகள் என் மனம் கவர்ந்த சிறுகதைகள்..மேலும் ,பிரபஞ்சன்,சுகுமாரன், ஆதவன் ஆகியோரின் சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.
கட்டுரை பகுதியில் சாருநிவேதிதா- மேலை நாட்டு சுகாதாரம்,சாலை விதி ஒழுக்கம் குறித்த விழிப்புணர்ச்சி,குமார்- இளையராஜாவின் இசை பயணம் குறித்த ஒர் முழு பதிவு,செழியன்-தமிழ் சினிமா தற்போதைய வளர்ச்சி நிலை,ஜெயமோகன்-இலக்கியம் குறித்த கட்டுரை..என சிறந்த சிந்தனையை தூண்டும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

Times Now இதழின் இம்முயற்சி வரவேற்கப்படவேண்டியது..A book that worth million.வாசிபிற்கான தேடல் குறைந்துள்ள இன்றைய சூழலில் ஊடகங்கள் இதுபோல இலக்கிய சிறப்பிதழ்கள் வெளியிடுவது உவகை தரக்கூடிய ஒன்று.

Thursday, May 1, 2008

நான் வித்யா - ஒரு திருநங்கையின் வலி மிகுந்த வாழ்கை பயணம்


நான் வித்யா, சரவணனாய் இருந்து வித்யாவாக மாறி தனக்கென ஒரு அடையாளத்தை பெற போராடும் ஒரு திருநங்கையின் சுயசரிதம்..தன் குழந்தை பருவத்து நிகழ்வுகளில் இருந்து,குடும்பத்து சூழ்நிலை,சென்னை வருகை,பால்மாற்று சிகிச்சை,மும்பையில் பெற்ற வேதனையான அனுபவங்கள்,நாடகத்துறை ஈடுபாடு,மேற்படிப்பு,மதுரையில் வேலை,தற்போதைய சென்னை வாசம் என நாவல் முழுதும் தன்னோடு நம்மையும் அழைத்து செல்கிறார் தான் கண்ட,பெற்ற வலி மிகுந்த அனுபவங்களை விவரித்து கொண்டே.....
திருநங்கைகளை பார்த்தால் எனக்கு கேலி,கிண்டல்,அருவருப்பு அன்றி ஒருவித பயமே மேலிடும்.நான் பீச்சிலும்,மின்சார ரயில்களிலும் மிகையான மேக்கப் உடனும் செயற்கை பாவனையுடனும் பணம் கேட்டு வரும் திருநங்கைகளை விசித்திர பிம்பங்களாய் பார்ப்பேன்..சமுதாயத்தில் தங்களுக்கென ஒரு அடையாளம் அற்று,செய்து பிழைக்க தொழில் அன்றி,குடும்பத்தின் ஆதரவு அன்றி,கேலி பேச்சுக்கும்,கிண்டலுக்கும் ஆளாகும் அவர்களின் நிலையை நின்று யோசிக்க நமக்கு இந்த இயந்திர வாழ்வில் நேரமும் இல்லை,விருப்பமும் இல்லை.இவையாவும் நான் வித்யா நாவலை படித்த பின்பு முற்றிலும் மாறியது.வாழ்கை முழுதும் வேதனையை சுமந்து செல்லும் அவர்களின் நிலை மாற்றம் பெறாமல் தொடரும் அவலம்.நான் வித்யா ஒரு விழிப்புணர்வு நாவல்.திருநங்கைகள் குறித்த சமுதாயத்தின் பார்வையை மாற்றக்கூடிய ஒரு முயற்சி.வித்யா படித்து,சமுதாயத்தில் ஒரு மதிப்பிற்குரிய வேலையில் இன்று தன்னை நிலைநிறுத்திகொண்டுள்ளார்.இலக்கிய வாசிப்பின் மீதும்,உலக சினிமா மீதும் அவர் கொண்டுள்ள ஆர்வத்தினை அவரது லிவிங் ஸ்மைல் blog இல் காணலாம்.
வித்யா போலவே ஆஷா பாரதி,பிரிய பாபு,ரேவதி என பல திருநங்கைகள் பல சுய உதவி குழுக்களில் தங்களை ஈடுபடுத்தி உதாரண மங்கைகளாய் இருக்கின்றனர்.நர்த்தகி நடராஜ் யாவரும் அறிந்த நடன மங்கை,இவரும் ஒரு திருநங்கை.அவர்களுக்கான வாழ்கையை தீர்மானிப்பதில் திடமாய்,தீவிரமாய்,தெளிவாய் உள்ளனர்..குழப்பத்துடன் குற்றம் விளைவிப்பது இந்த சமுதாயமே.