Thursday, July 30, 2009

பஷீரின் "உலக புகழ் பெற்ற மூக்கு" - சிறுகதை தொகுப்பு

பஷீர்,மலையாள இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர்.பஷீரின் கதை நாயக நாயகிகள் பேரழகும்,பெருஞ்செல்வமும் கொண்டு சாகசங்கள் புரிபவர்கள் அல்ல.உங்களையும் என்னையும் போல கோபமும்,நகைச்சுவை உணவும் கொண்ட சாதாரண மனிதர்கள்.பஷீரின் நாவல்கள் மட்டுமே இதற்கு முன்பு படித்திருக்கின்றேன்.இவரின் "பாத்திமாவின் ஆடு","பால்ய கால சகி" குறுநாவல்கள் குறித்து ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.சில எழுத்தாளர்களால் மட்டுமே மோசமான ஏழ்மையை கூட துன்பம் கூட்டாமல் வர்ணிக்க முடியும்.வண்ணதாசன் கதைகளை தொடர்ந்து வாசிப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு எளிதாய் புரியும்.பஷீரின் எழுத்துக்கும் அந்த வலிமை உண்டு.மிகுந்த நகைச்சுவை கொண்டு சொல்லப்பட்டுள்ளன இத்தொகுப்பின் கதைகள்.

"ஐசு குட்டி", வாய் விட்டு சிரிக்க வைக்கும சிறுகதை. பஷீர், பெண்களின் மனவோட்டத்தை,பெருமை பீற்றும் பேச்சுக்களை வர்ணிப்பதில் தேர்ந்தவர்.இவரின் "பாத்திமாவின் ஆடு" நாவல் அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.பிரசவ வேதனையிலும் ஐசுக்குட்டி நாட்டு மருத்துவச்சி வேண்டாமென பிடிவாதம் பிடித்து கார் பிடித்து பட்டணத்தில் இருந்து மருத்துவரை கொண்டு வர நடத்தும் நாடகமே இக்கதை.அவள் நடத்தும் அத்தனை நாடகமும் பின்நாட்களில் பெருமை பீற்றவே...பெண்களுக்குள்ள பொதுவான குணத்தை நகைச்சுவை மிகுந்து கதையாக புனைந்துள்ளார் பஷீர்."பூவன் பழம்",கணவன் மனைவிக்கு இடையே இருக்க வேண்டிய அன்னோனியத்தை அழகாய் சொல்லும் கதை. சில கருத்து பேதம் இருப்பினும் இக்கதை ரசிக்க கூடியதாகவே தோன்றியது.
"எட்டு கால் மம்மூது",மம்மூது போன்றவர்கள் கிராமங்களில் அதிகம் தென்படுவர்.கொடுக்கும் கூலியை வாங்கி கொண்டு சொன்ன வேலையை செய்து கொண்டு பார்க்க அரைகிறுக்கன் போல இருக்கும் மம்மூது ஊரில் நடக்கும் சுவாரஸ்யம் மிகுந்த செய்திகளை தருவதில் முதலாமவன்.கிராமத்து டீ கடை வெட்டி அரட்டைகளில் பேச்சு பொருளாய் மம்மூதே இடம்பெற தொடங்கும் பொழுது நிகழும் ஆச்சர்யங்களும்,அதிர்ச்சிகளுமே மீதி கதை."பகவத் கீதையும் சில முலைகளும்", இக்கதையில் தனது சக எழுத்தாளர் நண்பர்கள் குறித்தும்,புத்தக பதிப்பாளர் நண்பர் ஒருவர் குறித்த தனது நினைவுகளை காட்சிகளாய் பகிர்ந்துள்ளார்.

"சிரிக்கும் மரப்பாச்சி",இத்தொகுப்பில் எனக்கு மிக பிடித்த கதை.அழகான காதல் கதை.ஏழை காதலி,பணக்கார காதலன் என திரைபடங்களில் சுழற்றி அடிக்கப்படும் சராசரி காதல் கதை தான்..இருப்பினும் பஷீரின் வார்த்தைகளில் படிக்கும் பொழுது ஏற்படும் நிறைவு அலாதியானது."தங்கம்",முதல் பத்தியில் சொன்னது இக்கதைக்கு பொருந்தும்.துன்பத்தில் உழலும் பிச்சைகாரனான கூனன் நாயகன்,குறைபாடுகள் நிறைந்த தனது மனைவி தங்கத்தை சந்தித்த நாள் தொடங்கி,அவளை கைபிடித்து வரை தனது கதையை,தனது குறைகளை சோகம் கூட்டாமல் எதார்த்தமாய் சொல்லுவதாய் உள்ளது இக்கதை.

இவை தவிர்த்து "அம்மா",'மூடர்களின் சொர்க்கம்","பர்ர்ர்...","புனித ரோமம்" ஆகிய கதைகளும் ரசிக்கும் ரகம்.இத்தொகுப்பை குறித்து குறிப்பிட்டு சொல்ல வேண்டியவை இரண்டு.முதலில்,குளைச்சல். யூசுபின் மொழிபெயர்ப்பு,இடறல் ஏதும் இல்லாத நேர்த்தியான மொழிபெயர்ப்பு.இரண்டாவது ஒவ்வொரு கதைக்கும் வரையபட்டுள்ள கார்டூன் சித்திரங்கள்.பஷீரின் முகம் கார்டூனுக்கு ஏற்றது..கதைகளுக்கேற்றபடி வெகு அழகாய் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன.எதார்த்தம்,பகடி,போலித்தனம் கலைந்த மனித முகங்கள்...இவையே பஷீரின் கதைகளில் பிரதானம்.இந்த தொகுப்பின் கதைகளும் அது போலவே!!

வெளியீடு - காலச்சுவடு
விலை - 240 ரூபாய்

Tuesday, July 21, 2009

சுவார‌ஸிய‌ வ‌லைப்ப‌திவு விருது

வலைத்தளம் குறித்து எந்த அறிமுகமும் இன்றி இலக்கியம் பகிரும் ஒரே ஆவலில் எழுத தொடங்கியது....வேலை காரணமாய் சென்னைக்கு வந்த பிறகு ஒரே ஆறுதல் வாசிப்பு.திரும்ப திரும்ப சென்னை நகரம் எனக்கு நினைவூட்டுவது ஒன்று தான் "If u are not sure about your boundaries tats it".அதன் காரணமாய் முகம் தெரியா நட்புகளை தேடிசெல்வதில் ஆர்வம் இருந்ததில்லை.ஆனால் வலைத்தளம் மூலம் பெற்றிற்றுக்கும் முகம் அறியா நண்பர்கள் பல.வெகு ஆரோக்கியமான சூழலில் இலக்கியம் பகிர்ந்து கொள்ளபடுவதில் எண்ணற்ற மகிழ்ச்சி.

இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த "மழைக்கு ஒதுங்கியவை" செய்யது அவர்களுக்கு நன்றி.எனக்கு மிக பிடித்த,தொடர்ந்து வாசிக்கும் ஆவலை தூண்டும் சில வலைப்பதிவுகள்..தனிமையின் இசை - அய்யனார்

அய்யனார் எனக்கு முதன் முதலில் இட்ட பின்னூட்டம் இவ்வாறு வரும் "சில சொல்லாடல்களை மீள் ஆளுமை செய்வது சமகால புரிதலுக்கு சரியாய் இருக்கலாம்.உதாரணம் வேசியர்: பாலியல் தொழிலாளர்கள் ..."

நான் வெகு கவனமாய் பாலியல் தொழிலாளி என்னும் சொல்லாடலை தவிர்த்திருப்பேன்.பொதுவில் சில வார்த்தைளை உபயோகிக்க கூடாது என்கின்ற கருத்து அப்பொழுது உண்டு.:-))

அய்யனார், வலையுலகில் எனக்கு கிடைத்த முதல் நண்பர்.அப்பாவிற்கு பிறகு அதிகமாய் இலக்கியம் பேசியது அய்யனாரிடம் தான். ஆதவன்,பா.சிங்காரம்,கோபி,ஆதவன் தீட்சண்யா,ஜி.நாகராஜன் என இவர் எனக்கு அறிமுகம் செய்த எழுத்தாளர்கள் அநேகம்.எழுத்தாளர்கள்,புத்தகங்கள்,உலக சினிமா கவிதைகள்,கதைகள்,கட்டுரைகள் என நிறைந்திருக்கும் இவரின் வலைத்தளத்திற்கு அறிமுகம் எதுவும் தேவை இருக்காது என்றே நினைக்கின்றேன்.

கவிதைகளை ரசிக்க தொடங்கியது "தனிமையின் இசையில்" தொடங்கி அங்கு மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கின்றது ..மிக பிடித்த இவரின் கவிதை ஒன்று இங்கே..

முதல் முத்தம்

ஒரு பின்பனிக்கால விடியலில்
பனியில் குளித்த ரோஜாவினையொத்த
உன் இதழ்களில் முத்தமிட்ட தருணமொன்றில்
சில பறவைகள் விழித்தெழுந்தன

தொலைவில் அபூர்வமாய் மலரும் மலரொன்றின் விதை
தனக்கான வெடிப்புகளின் முடிவில் துளிர்க்கலாம்
தன் முதல் துளிரை
காட்டு மர இடுக்குளில் இடப்பட்ட முட்டைகளிலொன்று
ஓடுடைத்து மெல்ல எட்டிப்பார்க்கலாம்
தனக்கான உலகத்தை
பாதைகளற்று அலைந்து திரிந்த சிற்றாறு
இத்தருணங்களில்
நதியின் விரிந்த கரங்களில் தஞ்சமடையலாம்

இன்னும் பிரபஞ்சத்தின் எத்தனையோ
முதல் நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதற்க்கான
சாத்தியக்கூறுகளுமிருக்கிறது

எப்போதும் அதிகாலையிலேயே
விழித்துவிடுகிறார்கள்
குழந்தைகள்


பிச்சைபாத்திரம் - சுரேஷ் கண்ணன்

எஸ்.ராவின் வலைத்தளத்தில் பிச்சைப்பாத்திரம் குறித்த முதல் அறிமுகம் கிடைத்தது.எனது அபிமான வலைத்தளங்களில் ஒன்று.சுஜாதாவின் "கணையாழியின் கடைசி பக்கங்கள்" குறித்த இவரின் நேர்த்தியான விமர்சனம் மிக பிடித்திருந்தது.எழுத்தாளர்கள் "தோப்பில் முகமது மிரான்" மற்றும் "எக்பர்ட் சச்சிதானந்தம்" குறித்த அறிமுகம் இவரின் பதிவுகளின் மூலமே கிடைத்தது.பகடி யாவருக்கும் எளிதாய் அமைந்து விடாது,சுரேஷின் பதிவுகளில் இருக்கும் ஒரு வித ஹாஸ்யம் ரசிக்க கூடியது.உலக சினிமா,ரசித்த புத்தகங்கள்,அரசியல்,சமூகம் என இவர் முன்வைக்கும் கருத்துக்கள் யாவும் முதிர்ச்சியானவை.

குசும்பன்

எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு என்னை குறித்த சீரியஸ் டைப் என்னும் எண்ணம் வருவது இயல்பு.நிஜத்தில் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டு எப்பொழுதும் ஜோக் அடித்து கொண்டிருக்கும் ரகம் நான்.எனவே குசும்பனின் வலைத்தளம் பிரியமானதாய் இருப்பதில் அதிசயம் கொள்ள வேண்டாம்.கொஞ்சம் அயர்வாய் தோன்றினாலும் முதலில் செல்வது இவ்வலை தளத்திற்கே..பதிவுகள் மட்டும் இன்றி இவரின் பின்னூட்டங்களும் ரசிக்க கூடியவை.

ஸ்மைல் பக்கங்கள் - லிவிங் ஸ்மைல் வித்யா

வித்யாவின் "நான் வித்யா" நாவல் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.பொதுவாய் திருநங்கைகள் குறித்து இருந்த கருத்துக்களை முற்றிலுமாய் மாற்றி போட்டது.உறவினர்களுக்கும் பரிந்துரைத்தேன்.நாவலில் இவ்வலைத்தளத்தின் இணைப்பு இருந்தது.ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.திரைத்துறையில் துணை இயக்குனராய் இருக்கும் வித்யாவின் பதிவுகள் அநேக திரைப்படங்கள் குறித்து விவாதிப்பவை.மேலும் திருநங்கைகளுக்கு ஆதரவாய் குரல் தரும் ஆதங்கம் மிகுந்த கட்டுரைகளும் அடக்கம்.அனல் தெறிக்கும் அக்கட்டுரைகள் சமூகத்தின் மீதான கோபத்தை அதிகரிக்க செய்பவை.வித்யா,கல்கி என வலைத்தளத்தில் திருநங்கைகளின் வருகை மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.

Monday, July 13, 2009

லா.ச.ராவின் "அபிதா"

தமிழில் அதிகமாய் எனக்கு பரிந்துரைக்க பட்ட பெயர்களில் ஒன்று லா.ச.ரா.சமீபத்தில் கிழக்கு பதிப்பகம் சென்றிருந்தேன் அம்மாவிற்காக ராஜேந்தரகுமாரின் "வால்கள்" புத்தகம் வாங்கிட.அந்த புத்தகத்தை தேட தொடங்கி கடையையே முழுதாய் புரட்டி போட்டதில் சில(??!!) நல்ல புத்தகங்களும் (அசோகமித்ரனின் "தண்ணீர் தண்ணீர்" ,வண்ணநிலவனின் " கடல்புரத்தில்" ,மற்றும் "அபிதா") கிடைத்தன.ராஜேந்தரகுமாரின் "வால்கள்" குறித்து
சொல்வதிற்கு ஒன்றும் இல்லை.கால இடைவெளி தான் ரசிக்க முடியாமல் செய்கின்றதோ என்னவோ.70 களில் உங்கள் பள்ளி காலம் இருந்திருந்தால் நிச்சயமாய் "வால்கள்" பிடிக்க வாய்ப்புள்ளது.
லா.ச.ரா வின் இந்நாவலை எதிர்பார்ப்புகள் ஏதும் இன்றி படிக்கச் துவங்கினேன்.கசப்பான நிகழ் காலத்தை மறந்திட இனிமையான கடந்த நாட்களின் நினைவுகளுக்குள் மீண்டும் மீண்டும் மூழ்கும் நாயகனின் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களை அதிர்ச்சியோ ஆரவாரமோ இன்றி மெல்லிய நகைச்சுவையோடு சொல்லுகின்றது. லா.ச.ராவின் எழுத்து,தேட கிடைக்காத வார்த்தைகள்.....வர்ணிப்புகள்.. என விரிகின்றது.பொதுவாய் அயர்ச்சி தரும் நீண்ட வர்ணிப்புகள் இருந்தால் அந்த பத்தியை தவிர்த்து விட்டு தாவி செல்லும் வழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும்.லா.ச.ராவின் நடையின் வசீகரம் அதற்கு இடம் தருவதில்லை.மேலும் ஒவ்வொரு பத்தியும் முக்கியத்துவம் கொண்டதாய் உள்ளது.


சிறுவயதில் தனது ஊரான கரடி மலையில் இருந்து ஓடி வந்து பட்டணத்தில் ஒரு முதலாளியிடம் தஞ்சம் புகும் அம்பி வேலையில் சிறந்து அவரின் மகளையே மணம் புரிகின்றான்.செழிப்பான வாழ்கையை அனுபவிக்க இயலாது அவனை துரத்துவது பால்யம் முதல் சிநேகம் கொண்டு விரும்பிய ஏழை காதலி சகுந்தலையின் நினைவுகள்!!நீண்ட நாட்களுக்கு பிறகு தனது ஊருக்கு செல்லும் அம்பி அங்கு சகுந்தலையின் வடிவாய் அவளின் மகள் அபிதாவை சந்திக்கின்றான்.அபிதாவின் மீது அம்பி கொள்ளும் பிரியத்தை வகைபடுத்துவதில் வாசகனுக்கு சிரமம் ஏற்படுகின்றது.அம்பி அபிதாவின் மீது கொள்ளும் காதல்(?),அபிதாவின் முறைமாமனான நவநாகரீக இளைஞன் மீது பொறாமை கொண்டு அம்பி புகையும் காட்சிகள் சற்றே அந்த பாத்திரத்தின் ஸ்திரதன்மையை சிறிது குலைக்கின்றது.

தீவிரமான வாசிப்பிற்கு பிறகு இரண்டு விஷயங்கள் மட்டுமே பளிச்சென புலப்படுகின்றது.அம்பியை ஆட்டுவிக்கும் குற்ற உணர்ச்சி மற்றும் அபிதாவின் மீது கொள்ளும் வகைப்படுத்த இயலா காதல்.மறு வாசிப்பின் பின் வேறு விஷயங்கள் புலப்படலாம்.கரடி மலை,கன்னி குளம் தொடங்கி ஆன்மிகம்,காதல்,அபிதா,மண உறவு என வர்ணனைகளுக்கு சிக்காதவை எதுவுமில்லை.லா.ச.ர எழுத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கின்றது..அதுவே வாசகனை சோர்வின்றி தன் வசப்படுதுவதாய் உள்ளது.லா.ச.ராவின் பிற நூல்கள் குறித்து அறிய ஆவலாய் உள்ளது.நண்பர்கர் பரிந்துரைக்க வேண்டுகின்றேன்.

வெளியீடு - கிழக்கு பதிப்பகம்

Thursday, July 9, 2009

சர்க்கஸ்

சர்க்கஸ் என்றதும் உங்களின் நினைவிற்கு சட்டென வந்து மறைவது எது? எனக்கு எப்பொழுதோ அப்பாவுடன் சென்று மரப்படிகள் போன்ற அமைப்பில் அமர்ந்து பார்த்த சர்க்கஸ் காட்சிகள் இன்றும் நினைவில் உள்ளது.சில விஷயங்கள் குழந்தை பருவத்திற்கே உரியது போல..சர்க்கஸ் காட்சிகளை ரசித்து விட்டு மறு நாள் பள்ளியில் கோமாளியின் சேட்டைகள் முதல் ஒவ்வொன்றாய் பேசி பேசி மாய்ந்த நாட்களின் ஞாபகங்கள் எளிதில் மறக்க இயலாதது.சர்க்கஸ் வருவதற்கு முன்னே அது குறித்த ஒலிபெருக்கி அறிவிப்புகளும்,சுவரொட்டிகளும் நகருக்கு வேறு தோற்றம் தருவித்துவிடுவதுண்டு.திருவிழா போல தான்,எங்கும் அது குறித்த பேச்சுக்கள்,விசாரிப்புகள் என...
மிக சமீபத்தில் ஓசூரில் சர்க்கஸ் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது..ஓசூர்,ஆசிர்வதிக்க பட்ட நகரம் என தோன்றும் எனக்கு.தலை தட்டும் மேகங்கள்,குளிர் காற்று,நகரின் அமைப்பு என...ம்ம்ம்...சென்னையில் இருப்பதால் மற்ற நகரங்கள் எனக்கு அழகாய் தெரிகின்றதோ என்னவோ!!அதிகரித்துள்ள நுழைவு சீட்டு விலை,அதிகப்படியான தின்பண்டங்கள் விற்பனை,விலங்குகள் இல்லா காட்சிகள் இவை தவிர்த்து எதுவும் பெரிதாய் மாற்றங்கள் இல்லை.அரங்கெங்கும் உற்சாகத்தோடு நிறைத்திருந்த குழந்தைகளின் ஆரவாரத்திற்கு இடையே ஒளி வெள்ளத்தில் தொடங்கிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை தன்வசம் ஆக்கி கொண்டன.


சர்க்கஸ் குறித்து எழுத துவங்கியதும் சோபியா லாரன் நடித்த திரைப்படம் ஒன்று குறித்தும் எழுத தோன்றுகின்றது.1960 களில் வெளிவந்த "Boccaccio '70" நான்கு கதைகளின் தொகுப்பாய் ஒவ்வொரு கதையும் ஒரு இயக்குனரால் இயக்கபட்டிருக்கும்.நவீன வாழ்வில் காதல் மனிதர்களை படுத்தும் பாட்டை ஒவ்வொரு கதையும் ஒரு விதமாய் எடுத்தாலும்.இதில் சோபியா லாரன் நடமாடும் சர்க்கஸ் வண்டியில் ஊர் ஊராய் சென்று வித்தை காட்டும் பெண்ணாய் நடித்திருப்பார்.சோபியாவின் அசர வைக்கும் அழகை குறித்து தனி கட்டுரையே எழுதலாம்.கேளிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அந்த சிறு கிராமத்து திடலில் சர்க்கஸ் கூடாரங்கள்,துப்பாக்கி சுடும் போட்டி அரங்கம்,ராட்டினங்கள்..என தத்ரூபமாய் செட்டில் கொண்டு வந்திருப்பர்.


அன்றைய பொழுதுகள் போல இந்த சமயம் சர்க்கஸை ரசித்து பார்க்க முடியவில்லை.ஒவ்வொரு பகுதியையும் ரசிப்பதற்கு பதிலாக அக்கலைஞர்கள் அதற்கு எடுத்து கொண்ட முயற்சிகளும்,வேதனைகளுமே கண் முன்னே வந்து போனது.சர்க்கஸ்,தற்சமயம் சத்தமின்றி அழிந்து வரும் கேளிக்கைகளில் ஒன்று.நம் முகத்தில் சிரிப்பும்,ஆச்சர்யத்தையும் தோற்றுவிக்க அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு பின்னே உள்ள வலி வார்த்தைகளினால் சொல்லி விட முடியாது..நாம் தொடர்ந்து தரும் ஊக்கமும்,ஆதரவுமே இது போன்ற கலைஞர்களுக்கு உற்சாகத்தை தந்து தொடர்ந்து பணி செய்திட வழி செய்யும்!!