வயநாட்டில் கல்பட்டாவில் தன் கணவன்,மகளோடு வசிக்கும் சுமித்ராவின் உலகம் அவளை சுற்றி உள்ளவர்களால் நமக்கு அறிமுகம் ஆகிறது.கருப்பி, புருஷோத்தமன், தாசன்,அப்பு,கௌடர் என அனைவரும் சுமித்ராவின் அன்பை ருசித்தவர்கள்.கீதாவும்,சுபைதாவும் சுமித்ராவின் இள வயது தோழிகள்.அவர்களின் ரகசியத்தை அவர்களோடு சேர்ந்து கட்டிக் காத்தவள் சுமித்ரா.வயநாட்டின் தன் இருப்பை கடிதத்தின் வழி தூரத்தில் இருக்கும் அவர்களோடு உற்சாகமாய் பகிர்ந்து கொள்கிறாள்.
சுமித்ராவிற்கு மிகப் பிடித்த இடமென அவள் கொள்வது அவ்வீட்டின் பழங்கலம் (நெற் குதிர்கள்,உரல் வைத்திருக்கும் இடம்).தனது பெரும்பாலான நேரத்தை பழங்கலத்தில் கழிப்பதையே சுமித்ரா விரும்புகிறாள். புத்தகங்கள் படிப்பதற்கும்,கருப்பியுடன் ஆற அமர உட்கார்ந்து பேசுவதற்கும் அவள் தேர்ந்தெடுக்கும் இடம் பழங்கலமே.அவ்விடம் அவளுக்கு பிடித்து போனதிற்கான காரணங்கள் அவள் மட்டுமே அறிந்தது.சுமித்ரா தினமும் நான்கைந்து முறை குளிப்பவள்."த்ரா..உன் உடம்புல என்ன சேறு சொரக்குதா.." என அப்பு அவளை செய்கிறான்.பெண்களுக்கும் தண்ணீருக்கும் நெருங்கிய பந்தம் உண்டு இல்லியா.பெண்ணைப் போலவே தண்ணீர் இல்லாது போனால் ஜீவிதம் இல்லை.தண்ணீர்ப் பெண்ணவள்.
கல்பட்டாவிலும் சுமித்ராவிற்கொரு தோழி உண்டு.அவ்வூரில் உள்ள ஆண்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் மாதவியே அது.யாவரும் கண்டு ஒதுங்கும் அவளிடம் சுமித்ராவிற்கு தனித்த பிரியம்.அவளால் மட்டுமே மாதவியை கேலியும்,கிண்டலும் செய்து அரவணைத்துச் செல்ல முடிகின்றது.
போலவே,தேசம் முழுவதும் சுற்றித் திரிந்து ,நிலையான வேலையேதும் இல்லாமல் இருக்கும் தாசனோடான அவளின் நட்பு.அவளிடம் இருந்து அவன் வெகு தூரம் வேறுபட்டு நிற்கிறான் பயணங்களால்,சந்திக்கும் மனிதர்களால், ரசனையால். "கையிலிருக்கும் உலோகம் சொர்ணமாக மாறும் பயணங்கள் தான் எல்லா பயணமும்.." என தாசன் சந்திக்கும் சன்யாசி சொல்கிறார்.வீட்டில் அடைந்து கிடக்கும் சுமித்ரா பயணங்கள் துணை இல்லாமலும் உலோகத்தை தங்கமாக்கும் வித்தை அறிந்தவள்.அதிகம் மனிதர்கள் உடன் ஒட்டுதல் இல்லாமல் தனித்து இருக்கும் எடக்குனி நரசிம்ம கௌடருக்கு சுமித்ராவின் மீது தனி பிரியம் உண்டு.அது அவள் அவருக்கென செய்து தரும் ப்ரத்யேக உப்புமாவின் ருசியால் இருக்கலாம். அவள் அன்பின் மிகுதியாய் அந்த ருசி என்பதை அவர் அறிந்திருந்தார்.
கோழி,நாய் குட்டிகள்,அணில்,பூனைக் குட்டி,கன்றுக்குட்டி என அவள் முகம் அழுத்திக்முத்தமிடாத பிராணிகள் கொஞ்சமே.பூக்களும்,செடிகளும் அவள் விருப்பம்.வயநாட்டில் ஈரத்தில் அவை பூத்து குலுங்கும் நாட்களை திண்ணையில் அமர்ந்து ரசிக்கும் விருப்பமும் உண்டு அவளுக்கு.
சுமித்ராவிற்கு வாழ்வின் மீது குற்றசாட்டுகள் ஏதுமில்லை இல்லை.தான் காணும் மனிதர்களில் தொடங்கும் அவள் உலகம் அவர்களிடமே முற்று பெறுகிறது.
சராசரி குடும்பப் பெண்ணின் நாட்குறிப்புகள் சுமித்ராவினுடையது."சராசரி" என்பது பொதுப் பார்வையில். உண்மையில் அவள் கவிதையைப் போல வாழ்ந்தவள்.நாவல் தொடக்கமே சுமித்ராவின் மரணத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அதை நான் பொருட்படுத்தவில்லை.அவள் வாழ்ந்த வாழ்கையின் விவரிப்புகள் தந்த நிறைவு அவள் விடை பெற்றதை மறக்கச் செய்துவிட்டது.
சுமித்ரா,மழையைப் போல நதியைப் போல தான் சேரும் இடத்தை குளிர்வித்து விடை பெறுபவள்!
மார்கரெட் அட்வூட்டின் "Penelopiad " நாவலில் வருவதான இவ்வரிகள்
(முத்துலிங்கத்தின் வியத்தலும் இலமே தொகுதியில் வரும் அறிமுகம்)
எனக்கு சுமித்ராவை வாசிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது.
"நீ ஒரு தண்ணீர்ப் பெண்.தண்ணீர் எதிர்ப்பதில்லை,உன்னுடைய கைகளை அதற்குள் விட்டால் தழுவிக்கொள்ளும்.அது சுவர் அல்ல,உன்னை தடுக்காது.தடங்கல் ஏற்பட்டால் தாண்டி போகும். தண்ணீர் பொறுமையானது.ஒரு கல்லை கூட துளைத்துவிடும்..."
ஷைலஜாவின் மொழிப்பெயர்ப்பு குறித்து தனியே குறிப்பிட்டாக வேண்டும்.முன்னமே சூர்ப்பனகையும், பாலச்சந்திரன் சுள்ளிகாடின் சுய சரிதையும் ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் வாசித்துள்ளேன்.மொழி பெயர்ப்பு என்று புத்தக அட்டையில் கண்டால் அன்றி நம்ப முடியாது.பெரும்பாலும் மொழிபெயர்ப்புகளில் புரியாத வரிகளை இரண்டு,மூன்று முறை வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.அந்த சிக்கல் இங்கில்லை.நேர்த்தியோடு கூடி நெருக்கமாகவும் உணரச் செய்கிற மொழிபெயர்ப்பு.
வெளியீடு - வம்சி
ஷைலஜாவின் மொழிப்பெயர்ப்பு குறித்து தனியே குறிப்பிட்டாக வேண்டும்.முன்னமே சூர்ப்பனகையும், பாலச்சந்திரன் சுள்ளிகாடின் சுய சரிதையும் ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் வாசித்துள்ளேன்.மொழி பெயர்ப்பு என்று புத்தக அட்டையில் கண்டால் அன்றி நம்ப முடியாது.பெரும்பாலும் மொழிபெயர்ப்புகளில் புரியாத வரிகளை இரண்டு,மூன்று முறை வாசித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்.அந்த சிக்கல் இங்கில்லை.நேர்த்தியோடு கூடி நெருக்கமாகவும் உணரச் செய்கிற மொழிபெயர்ப்பு.
வெளியீடு - வம்சி
2 comments:
எனக்கும் பிடித்திருந்தது நாவல்! நான் வாசித்து நாட்களாகிவிட்டன, ஆனாலும் ஒரு கேரள வீட்டின் உள்ளடுக்கில் ஈரத்தலையுடன் தூணில் சாய்ந்து நின்று சிறுவனுடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் நினைவு மட்டும் மேலே மிதந்து வருகிறது நாவலின் பெயரைக்கேட்டவுடன். ஷைலஜாவின் மொழிபெயர்ப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது!
ஆரம்பத்தில் பிளாக்குகள் பிரபலமாகயிருந்த போது வாசித்தது உங்கள் தளம்.வெகு நாட்களுக்கு பிறகு உங்களின் ஒரு டிவிட்டைக் கண்டு இங்கு வந்தேன்..”சுமித்ரா” இந்தப் பதிவை படிக்கும்போது எனக்கு நான் பார்த்த ”இத்ர மாத்ரம்” மலையாளப்படம் ஞாபகத்திற்கு வந்தது..படம் என்னை வெகுவாக கவர்ந்தது.நிறைய தொந்தரவு செய்தது..ஆனால் உங்களின் பதிவை வைத்துப் பார்க்கையில் நாவலுக்கும் / படத்திற்கும் சில மாறுபாடுகள் இருப்பதாக உணர்கிறேன்..ஏற்கனவே இப்பட்டத்தை பார்த்திருந்தால் மகிழ்ச்சி..இன்னும் பார்க்கவில்லையானால் ஒரு முறை கட்டாயம் பார்த்துவிடுங்கள்.
Post a Comment