Monday, September 5, 2016

ராணியுடன் ஒரு தேநீர் விருந்து


காணா தேசங்களின் மனிதர்களை,அவர் தம் வாழ்க்கைச் சூழலை,கடந்து வந்த போராட்டங்களை,மேன்மை பொருந்திய காதலை நமக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் இலக்கியத்திற்கு பெரும் பங்கு உண்டல்லவா. உலக இலக்கியங்களின் ருசி என்பது எல்லைகள் கடந்து விரிந்து நிற்கும் விருட்சம் போன்றது. மொழியால்,பண்பாட்டால், பழக்க வழக்கங்களால்,தட்ப வெட்பத்தால் முற்றிலும் நம்மிடம் இருந்து வேறுபட்டு நிற்கும் தேசங்களின் கதைகள் தரும் நிறைவு படித்துணர வேண்டியது.


அரவிந்தனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து" தேர்ந்தெடுத்த வெல்ஷ் மொழிச் சிறுகதைகளின் இத்தொகுப்பு செறிவான படைப்பு.கதைகளின் தேர்வும் அவற்றின் கச்சித மொழிபெயர்ப்பும் சிறப்பு.தனித்தலையும் மனிதர்களின் கதைகள் இத்தொகுதியில் பிரதான இடம் பிடித்துக் கொண்டதாக தோன்றியது.அவர்களின் தனிமையின் காரணங்கள் வேறு பட்டவை.போரின் பொருட்டும், காதலின் பொருட்டும்,பிரியத்திற்கு உரியவர்களை இழந்ததின் பொருட்டும் நினைவுக்கு குழிக்குள் சிக்குண்டு வெளி வர வழியறியாது தவிப்பவர்கள் அவர்கள்.

தொடர்ச்சியாக பிள்ளைகளை இழந்த தம்பதியினரின் கதையை சொல்லும் "தொலைந்து போன குழந்தைகள்" நெகிழ வைப்பது.மாலை மங்கிய பொழுதில் வழி தவறி காட்டினுள் செல்லும் நாயகியின் குழப்பம் மிகுந்த மனநிலை அவளது தினசரி நாட்களின் குறியீடு. "குழந்தைகள் உருவில் நாம் அழியாமல் இருக்கிறோம்" என்னும் வரியை ஞாபகப்படுத்திக் கொள்ளும் அவள் அப்பழுக்கற்ற தாயன்பின் அடையாளம்.மார்ட்டின் தாவிஸ்'ன் "தண்ணீர்" போரின் கோர முகத்தை ஒரு எளியவனின் ஒரு நாள் போராட்டத்தை கொண்டு அழுத்தமாக பதிவு செய்கிறது.தூரத்தில் விடாது ஒலித்துக் கொண்டிருக்கும் வெடிகுண்டு முழக்கத்திற்கு சற்றும் குறைந்ததல்ல பதுங்கு குழியில் அவன் காணும் காட்சிகள்.

தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்ததும் தலைப்பு கதையுமான "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து",வாழ்ந்து கெட்ட ராணியின் நினைவுகள் வழி பயணித்து வரும்படியான கதை.யாருமற்ற அவ்வீதியின் ஆளரவமற்ற வீடுகளை சுட்டிக் காட்டியபடியே அவ்வீட்டு மனிதர்கள் சந்தித்த துயரங்களை பகிர்கிறார். உண்மையில் அக்கதைகள் யாவும் அச்சம் தருபவை. நினைத்து பாராத மோசமான முடிவை சந்தித்த அம்மனிதர்கள் குறித்து கதை சொல்லியின் நேர்த்தியுடன் எடுத்துரைக்கும் ராணி அவ்விடம் தனித்து இருப்பதின் காரணம் பெரும் சோகத்தில் ஆழ்த்துவது. மீண்டெழ முடியா நினைவுகள் மோசமானவை!

"வாட்டிலன் ஒரு திருடன்" - கெட்டவர்கள் தண்டிக்கப்பட்டு இறுதியில் நல்லவர்களே வெற்றி பெறுவார்கள் என்று காலங்காலகமாக கண்டும்/படித்தும் வந்த நமக்கு எதார்த்தத்தை பகடி செய்யும் இச்சிறுகதை குட்டு வைக்கிறது.லோயிட் ஜோன்ஸ்'ன் "தபால் நிலைய சிகப்பு" கதை குறித்து என்ன சொல்ல.கதையின் ஓட்டத்தில் நம்மை மறந்து நாயகனோடு அவன் பார்க்கும் ரகசியம் பொதிந்த வீடுகளை நாமும் கண்காணிக்க துவங்குகிறோம். எதார்த்தத்தில் இது போன்ற நிகழ்வுகள் சாத்தியமே எனினும் அதை கதையாக்கிய இக்கதாசிரியரின் நுட்ப சிந்தனை ஆச்சர்யம் கொள்ள வைத்தது.

"பனிப் புயல்" ,சிறுநகரொன்றில் தாந்தோன்றி இளைஞனான பெர்ரி உடல் நலிவுற்ற தன் தாயுடன் செலவிடும் ஒரு இரவின் நிகழ்வுகளை குறித்தது.ஒழுங்கீனங்களின் மொத்த உறைவிடமான பெர்ரி குடியின் மயக்கத்தில் தன் தாயை இரக்கமின்றி நிராகரிக்கும் காட்சிகள் அப்பனி இரவின் மூர்க்கத்திற்கு இணையானது.பெர்ரியின் மீது பரிதாபமும் கோபமும் ஒன்று சேர தோன்றி மறைவதை தவிர்க்க முடியாது.இருண்மையின் கதைகள் சகித்துக் கொள்ள முடியாதவை,பனிப் புயல் அதிலொன்று.

தமிழில் வெளியாகி உள்ள உலக சிறுகதை தொகுதிகளில் நிச்சயம் "ராணியுடன் ஒரு தேநீர் விருந்து" மிக முக்கிய இடம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெல்ஷ் மொழிச் சிறுகதைகள்
தமிழில்: அரவிந்தன்
வெளியீடு: காலச்சுவடு
விலை: 90 ரூபாய்

No comments: