உலக இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமான பெயர் அந்தோன் சேகவ்.ரஷ்ய எழுத்தாளரான சேகவின் சிறுகதைகளும்,குறுங்கதைகளும் அடங்கிய தொகுப்பிது.சேகவ் விவரிக்கும் கதைகள் ஊடாக தொன்மையான ரஷ்யாவின் அன்றாட காட்சிகள்..குடும்ப சூழல்..சமூக கட்டமைப்பு போன்றவை மிக தெளிவாக புலப்படுகின்றன.அதிகார வர்க்கத்தின் மேட்டிமைத்தனத்தை, மெலிந்தோரின் அடிமை புத்தியை பெரும்பாலான கதைகள் வாசகனுக்கு முன்னிறுத்துகின்றன.எள்ளல் மிகுந்து,சோகம் தோய்ந்து,சலனம் அற்று,காத்திரம் நிறைந்து என கலவையான எழுத்து...தேர்ந்த மொழிபெயர்ப்பினால் நல்லதொரு வாசிப்பனுபவமாய் அமைந்தது.
பச்சோந்தி(1884 ),எல்லா கால கட்டத்திற்கும் பொருந்தும் கதை.கடை வீதியில் ஒருவனை நாய் கடித்துவிட்டதாய் கேள்விப்படும் காவல்துறை அதிகாரி முதலில் நாய்க்கு உரியவனை திட்டி தீர்ப்பதும்,பின்பு அது ஜெனரல் உடையதாக இருக்கக்கூடும் என அறிந்து சட்டென பேச்சை மாற்றுவதும் என சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிறம் மாறும் சராசரி அரசு அதிகாரியின் புத்தியை நகையாடுகிறது.முகமூடி(1884 ),சமூக மன்றம் ஒன்றின் காட்சிகளை எள்ளல் தொனிக்க விவரிக்கும் இக்கதை மோசமானதொரு சமூக சூழலை மறைமுகமாய் வாசகனுக்கு உணர்த்துகின்றது.வருடங்கள் எத்தனை கடந்தாலும் பணபலம் பொருந்திய மேல் வர்க்கத்திற்கு சலாம் போடும் மனநிலை,மனித சமுதாயத்தில் எந்தவித மாற்றமும் இன்றி தொடரும் அவலத்தை மீண்டும் நினைவுறுத்துவதான கதை.
வான்கா(1886 ),இத்தொகுப்பில் என்னை மிக கவர்ந்த கதை.வேலை பயில முதலாளியின் வீட்டில் தங்கி இருக்கும் ஏழை சிறுவன் வான்கா,தூரத்து கிராமத்தில் இருக்கும் தன் தாத்தாவிற்கு எழுதும் கடிதத்தை சிறுவனின் மனநிலையில் இருந்து வாசித்ததால் அதில் விரவி இருக்கும் பிரியத்தை சோகம் தாண்டி ரசிக்க முடிந்தது.முதலாளியின் கொடுமை தாங்காத சிறுவன் வான்கா மீண்டும் வீடு சேர ஆவல் மேலிட,தன் வருத்தங்களை,தாத்தாவிற்கான தனது பிரியங்களை நிறைந்த கனவுகளோடு எழுதும் இக்கடிதம் மனதை கனக்க செய்வது..
"என் அன்பிற்கு உரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை.எனக்கு உயிர் போகின்றது.இங்கிருந்து ஓடி விடலாம்.நடந்தே கிராமத்திற்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன்...நான் பெரியவன் ஆனதும் உன்னை கருத்துடன் கவனித்து கொள்வேன்.உன்னை யாரும் துன்புறுத்த விடமாட்டேன்..."
"கூட்டில் அடைந்த மனிதர்" (1898) ,மனிதருக்கு மனிதர் வேறுபடும் குணாதிசியங்களை நாம் பெரிதும் பொருட்படுத்துவதில்லை அது இயல்பை மீறும் வரை.எதார்த்த வாழ்கையை விட்டு முற்றிலும் தம்மை துண்டித்து கொண்டு உலவுவோர் நம்மிலும் உண்டு.அத்தகைய மனிதர் ஒருவரை பற்றிய சுவாரஸ்ய கதையே இது.பேலிக்கவ்,கிரேக்க மொழி பேராசிரியரான இவரின் அன்றாடங்கள் சராசரி மனிதர்களிடம் இருந்து வேறுபடுவதோடு பெரும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது..எப்போதும் புதைமிதி கால்மிதிகள் அணிந்து,மடித்துவிட்ட முழுக்கை சட்டை மற்றும் குடையுடம் தோன்றும் பேலிக்கவ் கடந்த காலத்தை மட்டுமே புகழ்ந்து பேசி நிகழ்காலந்தின் மீது தீரா வெறுப்பு கொண்டு யாவரும் வெறுக்கும் மனிதராய் இருக்கின்றார்.அவருக்கு ஏற்படும் எதிர்பாரா காதல்,அதன் ஊடாய் கொள்ளும் மாற்றங்களும் தொடர்ச்சியாய் நிகழும் மரணமும் என நேர்த்தியாய் அம்மனிதனின் வாழ்க்கையை விவரிக்கின்றது இக்கதை.
"பள்ளத்து முடுக்கில்"(1900),வாழ்ந்து ஒழிந்த குடும்பத்தை பற்றிய கதை என மேலோட்டமாக கொண்டாலும்..மறைமுகமாய் இக்கதை அக்காலகட்டத்தில் ரஷ்ய அதிகார வர்க்கங்களிடையே பெருகி கிடந்த போலித்தனங்களும்,அதை மூடி மறைக்க மேற்கொண்ட வழிமுறைகளும்.. தெரிந்தும் எதிர்த்து கேட்கவியலா பொதுஜன நிலையையும் கடுமையாகவே சாடுவதாக உள்ளது."தத்துக்கிளி"(1892 ),அசல் மேல்குடி பெண்ணான ஒல்கா இவானவ்னா,கேளிக்கைகளிலும்..இசை,நடனம்,ஓவியம்,இலக்கியம் மீதான ஆர்வத்தினால் கூடா நட்பு கொண்டு தனது இனிய காதல் கணவனை இழந்து நிற்கும் பரிதாப நிலையை விரிவாய் சொல்லும் இக்கதை,இல்லறம் தாண்டும் பெண்களின் முடிவை ஓர் கணவனின் உண்மை காதலோடு சொல்லும் சோக காவியம்!!
சேகவ், சித்தரித்துள்ள ரஷ்யா மறைந்து புது ரஷ்யா தோன்றிவிட்டது...அவர் கதைகளில் சாடிய அதிபர்களும்,வர்த்தகர்களும் கடந்த காலத்திற்கு உரியவர்களாகி போனார்கள்..இருப்பினும் ஒவ்வொரு கதையில் அவர் முன்னிறுத்திய உண்மை மறுக்கவியலாதது.காலம் கடந்து இன்றும் இவ்விலக்கியங்கள் பேசபடுவதற்கும் அதுவே காரணம்.
மொழிபெயர்ப்பாளர் - ரா.கிருஷ்ணையா
வெளியீடு - முன்னேற்ற பதிப்பகம் (1975 )
Tuesday, July 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
welcome back after a long time
after a very long time a post from you ... great post .. welcome back ..
welcome back mam :-))
i have a collection of his short stories. am reading 'em online. finished the chorus girl. chekov expresses the simplicity and sincerity of common man i suppose.
செகாவ் கதைகள் மனித மனங்களை ஊடுருவி வந்த வெளிச்சம் போல இருக்கும். உளவியல் கூறுகளை மிக நுட்பமாக சித்தரித்திருப்பார்.
அவரது 6வது வார்டு, சிறுகதை உலகில் அதிகம் பேசப்படும் கதை.
பச்சோந்தி கதையை வீதி நாடகமாக்கி, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் நடித்த்தைப் பார்த்த் நினைவுகள் வருகின்றன.
பகிர்வுக்கு நன்றி லேகா.
கோடை கால இடைவெளி முடிந்து மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள், நன்றிகள்.. இன்னொரு மதுரை கார்ரரும் இப்போதான் திரும்ப வந்தார்.
பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இடைவெளி விடாமல் எழுதுங்கள், பகிருங்கள்.
பதிப்பகத்தின் பெயர் பிடித்து இருக்கிறது
//செகாவ் சித்தரித்துள்ள ரஷ்யா மறைந்து புது ரஷ்யா தோன்றிவிட்டது...அவர் கதைகளில் சாடிய அதிபர்களும்,வர்த்தகர்களும் கடந்த காலத்திற்கு உரியவர்களாகி போனார்கள்//
அப்படி ஒன்றும் பிரமாதமான வரவேற்கத்தக்க மாற்றம் ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை என்பதைக் கொஞ்சம் பெருமூச்சுடன் தான் சொல்ல முடியும்! ஆண்டன் செகாவ் சென்ற நாட்களின் ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழ்ந்த சமூகச் சூழலைப் படம் பிடித்துக் காட்டிய எழுத்தாளன் என்பதில் சந்தேகம் இல்லை.
http://chekhov2.tripod.com/
இந்த லிங்கில் ஆண்டன் செகாவ் எழுதிய 201 கதைகளைப் படிக்க முடியும்
நன்றி ஜெகதீஷ்குமார்.செகாவ்வை வாசிப்பது இதுவே முதல் முறை.எதார்த்த நடையில் விரியும் அவரின் கதையுலகம் வசீகரமானது.தேடி படிக்க வேண்டிய எழுத்து..
நன்றி மாதவராஜ்
இணையத்தில் வாசித்து தெரிந்து கொண்ட செகாவ் குறித்த செய்திகள் சுவாரஸ்யமானவை.சமுதாயத்தின் மீதான அதீதமான அக்கறையும்,தீரா கோபமும் வெளிப்படும் இவரின் எழுத்துக்கள் தவிர்க்க கூடியது அல்ல.
நன்றி கார்த்திக்
நன்றி ஹரிபாண்டி
நன்றி ராம்ஜி
கிருஷ்ணமூர்த்தி,
//ஆண்டன் செகாவ் சென்ற நாட்களின் ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழ்ந்த சமூகச் சூழலைப் படம் பிடித்துக் காட்டிய எழுத்தாளன் என்பதில் சந்தேகம் இல்லை//
உண்மை.
வருகைக்கும் நன்றி.
செகாவ் சிறுகதைகள் வாசிக்க கிடைக்கும் தளம் குறித்த பகிர்தலுக்கு மிக்க நன்றி.
நான் சமீபத்தில் ரசித்த ஒரு நற்பதிவு இது..
"Chameleon" என்ற ஆங்கில மொழிபெயர்ப்பில் "பச்சோந்தி" படித்திருக்கிறேன். "இவான் துர்கேனிவ்" மற்றும் "னிகோலோய் கோகோல்" பற்றியும் உங்கள் பானியில் படிக்க பேரவா எழும்புகிறது... வாழ்த்தும் அளவு வயதும் அறிவில்லாதலால் வணங்குகிறேன் ;-)
உங்கள் வலைத் தளம் சென்று பார்த்தேன்.அருமையான பதிவுகள்.
தமிழில் தரமான இலக்கியச் சிந்தனைகளைத் தருகின்றகின் தங்கள்
முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
நன்றி.
லேகா.... ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த புத்தகம்.வெளியீட்டாளரின் முழு முகவரி வேண்டும்.தயவு செய்து மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.
sppbhaskaran@yahoo.co.in
Post a Comment