Wednesday, March 10, 2010

இலத்தீன் அமெரிக்க சிறுகதைகள்

இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்த விரிவான அறிமுகத்தோடு பிரேசில்,அர்ஜென்டினா,சிலி,டொமினிக் குடியரசு,கொலம்பியா தேசத்து முக்கிய இலக்கிய படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பிது.இலத்தீன் அமெரிக்க தேசங்கள் தோன்றிய வரலாற்றையும் அதன் நாகரீக வளர்ச்சியையும் கோடிட்டு காட்டும் அறிமுக கட்டுரை இந்த தொகுப்பை தொடர்ந்து படிக்க பெரும் தூண்டுதல்.ஸ்பானிஷ் - இந்தியர் கலப்பினமான மெஸ்டிஜோ குறித்த தகவல் குறிப்பிடதகுந்த சுவாரஸ்யம் கொண்டது.மொழிபெயர்ப்பு எளிமையாய் இல்லாதது புரிதலில் சிக்கல் ஏற்படுத்தவில்லை மாறாக ஆழ்ந்த வாசிப்பின் அவசியத்தை உணர்த்துவதாய் தோன்றியது.

அர்ஜென்டினா சிறுகதைகள்

இசிதேரோ ப்ளேஸ்டின் பெகுண்டோ மாமா

அழகிய குடும்பம் ஒன்றின் சரிவை,அதில் இருந்து மீள அவர்கள் எடுக்கும் விபரீத முடிவை அதிர்ச்சி தரும் விவரணைகளோடு சொல்லும் இக்கதை உதாரண குடும்பங்கள் சிதையுறுவதை ஆராய்கிறது.எல்லாவிதமான மோசமான ஆசைகளும் கொண்டிருக்கும் பெக்குண்டோ தனது அக்காவின் வீட்டிற்கு வெகு நாட்களுக்கு பின்பு வருகின்றான்.முதலில் அவனை சேர்க்க தயங்கும் அக்குடும்பத்தினர்..அவனின் சாகச பேச்சிலும்,இதற்கு முன் அறிமுகமற்ற உற்சாகம் கூட்டும் புதிய பழக்க வழக்கங்களாலும் அவனோடு சேர்ந்து வாழ்வை கொண்டாடுகின்றனர்..மெல்ல மெல்ல தங்களின் குடும்பம் சரிவை நோக்கி செல்வதை உணர தொடங்கும் தருவாயில்.... கூட்டாய் எடுக்கும் பயங்கர முடிவே அவர்களை மீட்டெடுக்கின்றது.அர்ஜென்டினா நாட்டின் குடும்ப வாழ்க்கை குறித்த சுவாரஸ்ய செய்திகளை கொண்டிருப்பது இக்கதையின் சிறப்பு.

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் "மற்ற மரணம்"

இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளரான போர்ஹேவின் "மற்ற மரணம்" சிறுகதை...சரித்திரத்தோடு மனிதன் கொண்டுள்ள தீராத தேடலை மையமாய் கொண்ட நேர்த்தியான புனைவு.டாமியான் என்னும் போர்வீரனை குறித்த தேடலில் இறங்கும் நாயகனுக்கு டாமியான் என்கின்ற பெயரில் இருவர் இருந்ததும்...தான் அறிய விரும்பிய டாமியான் குறித்த பிம்பங்கள் உருக்குலைந்து போனது தெரிய வரும் பொழுது டாமியானின் செயலை நியாயபடுத்தும் தீர்வை கொள்கின்றான்.பிரபஞ்ச சரித்திரத்தோடு நமக்குள்ள உறவினை பல்வேறு பரிமாணங்களில் விளக்க முயலும் முயற்சி இது!!

பிரேசில் சிறுகதைகள்

ஜோவோ உபால்டோவின் "தாயகத்து அலன்டெலோன்"

நவீன வாழ்வில் செக்ஸ் என்பது விந்து எடுப்பதும் - கொடுப்பதுமான வியாபாரம் ஆகி வருவதை மறைமுக குறியீடாய் சொல்லும் இக்கதை,சமுதாயத்தின் மீதான கவலையை முன்னிறுத்துகின்றது.70 களில் வெளிவந்த இக்கதை தற்பொழுதைய சூழலுக்கும் பொருந்தி வருவது ஆச்சர்யமே.இங்கு "அலன்டெலோன்" என்பது விந்து வங்கியின் குறியீடாய் சொல்லப்படும் காளை மாடு.

ஜோர்ஜ் அமாடோவின் "பறவைகள் நிகழ்த்திய அற்புதம்"

இந்த தொகுதியில் எனக்கு பிடித்த கதை.வாழ்க்கை குறித்த கவலை ஏதும் அற்ற நாடோடி பாடகனை பற்றியது.நகரங்கள் தாண்டி....தேசங்கள் தாண்டி.. செல்லும் இவனின் பயணம் சாகசங்கள் நிறைந்ததல்ல,காதல்கள் நிறைந்தது!!பேரழகு கொண்ட நாடோடி பாடகன் உபால்டோ கவிதைகளாலும்,பெண்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தான் என்னும் வரிகளே போதும் அவனை குறித்து அறிந்து கொள்ள!! ப்ரான்ஹாசை நகரில் சாபோ என்னும் பேரழகியை சந்திக்கும் உபால்டோ.....அவளோடு காதல் கொண்டிருக்கும் வேளையில் சாபோவின் கணவன் வந்துவிடுவதால் தப்பிக்க ஓட்டமெடுப்பதும் ....பின் எதிர்பாரா வண்ணம் பறவைகள் கொத்தி சென்று அவன் உயிரை காப்பாற்றுவதாகவும் முடிகின்றது இக்கதை.

போர்ச்சுகீஸ் சிறுகதை

கிளாரிஸ் லிச்பெக்டாரின் "அன்பு"

சட்டென தோன்றி மறையும் ஏதோ ஒரு காட்சியோ,சம்பவமோ அந்த நாள் முழுதும் நினைவில் அகலாது இருந்து இயல்பை புரட்டி போட்டுவிடுவதுண்டு..பார்வையற்ற யாசகனை காணும் நாயகி அன்னாவின் நிலை மாற்றத்தை நேர்த்தியான காட்சி கோர்வைகளால் சொல்லும் இக்கதை வேறுபடும் வாழ்க்கை சூழல் தோற்றுவிற்கும் மனகுழப்பத்தை ஒரு பெண்ணை முன்னிறுத்தி பகிர்கின்றது.

சிலி தேசத்து சிறுகதை

இசபெல் அலண்டேவின் "நீதிபதியின் மனைவி"

பெரும் புரட்சிகாரனான நிகோலசின் சாவு ஒரு பெண்ணால் தான் என பிறக்கும் பொழுதே குறி சொல்லபடுகின்றது.நீதிபதியின் மனைவி காசில்தா தான் அந்த பெண் என்று துவக்கத்திலேயே முடிவையும் சொல்லி விரிகின்றது இக்கதை.ஒரு நாவலை வாசித்த திருப்தி. நேர்த்தியான திரைக்கதை போல,முடிவு தெரிந்தும் தொடர்ந்து வாசிக்க தூண்டும் கதையாடல்.கதையின் முடிவு நிஜவாழ்க்கையில் அபூர்வமாய் காணக்கிடைப்பது,இருப்பினும் அது நம்பும்படியாக தந்திருப்பதே சாதனை.


கொலம்பியா தேசத்து சிறுகதை

காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் "நீரில் மூழ்கிய நிகரற்ற அழகன்"

நோபெல் பரிசு பெற்றுள்ள மார்க்வெஸின் இக்கதை சிறுவர்களுக்கானது.Fairy Tales கதைகளை போல.......பிரம்மாண்ட உடலமைப்பு கொண்ட பேரழகனின் சடலம் சிறு மீனவ கிராமத்தில் கரை சேர்கின்றது..எதிரி தேசத்து கப்பல் என நினைக்கும் குழந்தைகள் அதை கண்டு மிரள்வதும் பின்பு கிராமத்தினர் அவனை குறித்த சந்தேகங்களையும்..தமக்கு தெரிந்த பழங்கதைகளையும் ஒன்றாய் புனைந்து அவன் நரமாமிசம் தின்பவர்களை கொல்லும் கடல் தேவனான எஸ்தபான் என்கிற முடிவிற்கு வருகின்றனர்.எஸ்தபானின் சடலத்தை அடக்கம் செய்வதிற்கு முன்பு அவனின் சடலத்திற்கு அலங்காரம் செய்ய அப்பெண்கள் செய்யும் அலட்டல்கள் ஆண்களின் பார்வையில் மிகுந்த நகைச்சுவையாய் சொல்லப்பட்டுள்ளது.பூக்களாலும்,பட்டு துணிகளாலும் அலங்கரிக்கபடும் எஸ்தபானின் சடலம் யாரும் நினைத்திடா வண்ணம் அடக்கம் செய்யபடுகின்றது.பெரும் சிரத்தை கொண்டு அந்த புதியவனிற்கு அவர்கள் செய்யும் மரியாதை கிராமத்தினரின் தூய்மையான அன்பினை தெரிவிப்பதாய் உள்ளது.


வெளியீடு - வர்ஷா,மதுரை

17 comments:

Anonymous said...

Any stories by Juan Rulfo in the collection?

Ajay

லேகா said...

hi Ajay..i dont think so..will double chk n let u know.

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள் பல லேகா.

ஒவ்வொரு முறை உங்கள் பதிவை பார்க்கும் பொழுது மனதில் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றுகிறது. வாசிக்காமல் பொழுதை இணைய மேய்தலில் செலவழித்து கொண்டிருக்கிறேனே என்று.

உங்களின் பதிவு எப்போதும் போல மிக அருமை.

Joe said...

I haven't read any books by Latin American authors so far, gotta start soon!

லேகா said...

நன்றி ராம்ஜி..
குற்ற உணர்ச்சி தேவையற்றது :-)

லேகா said...

ஜோ,

இப்பொழுதுதான் உலக இலக்கியம் வாசிக்க துவங்கி இருக்கேன்..வாசிக்க வாசிக்க இன்னும் நிறைய பகிர்ந்து கொள்கின்றேன்.

தற்சமயம் இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என தெரியவில்லை.

முஹம்மது ,ஹாரிஸ் said...

நல்ல நூலை பற்றி நல்ல ஒரு அறிமுக உரை.
ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் சிறுகதைகள் ஆங்கிலத்தில் படித்துக்கொண்டிருக்கிறேன். அவருடைய கதைகளை தமிழில் படிக்கவேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தேன் இந்த நூல் அதை பூர்த்திசெய்யும்.
எஸ்.ராமகிரிஷ்ணனுடைய என்ற போர்ஹே படித்து இருக்கிறீகளா . அதில் போர்ஹே எழுதிய பெரும்பாலான
நூல்களை பற்றிய அறிமுகமும். சில நூல்களின் சில பக்க மொழிபெயர்ப்பும் உண்டு. அந்த நூல்தான் போர்ஹேவை தேடவைத்தது. சாருவின் வரம்பு மீறிய பிரதிகள்,தப்பு தாளகங்கள், ஊரின் மிக அழகான பெண்.
இந்த மூன்றையும் படித்தீர்கள் என்றால் அணைத்து கண்டகளிலும் உள்ள
முக்கிய எழுத்தாளர்களை வாசித்ததை போன்ற அனுபவம் ஏற்படும். அந்த எழுத்தாளர்கள் பற்றி மிக அழகான அறிமுகமும் கிடைக்கும். அதைவைத்து உலக இலக்கிய வாசிப்பு தாளத்தை விரிவு படுத்தாலாம்.
காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் One Hundred Years of Solitude

Haripandi Rengasamy said...

உங்களுடைய எழுது நடையும், நீங்கள் சொல்லும் பாங்கும் மிக நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் பல .

Haripandi Rengasamy said...

உங்களுடைய எழுத்து நடையும் , நீங்கள் சொல்லும் பாங்கும் மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் பல .

லேகா said...

ஹாரிஸ்,

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

// சாருவின் வரம்பு மீறிய பிரதிகள்,தப்பு தாளகங்கள், ஊரின் மிக அழகான பெண்.
இந்த மூன்றையும் படித்தீர்கள் என்றால் அணைத்து கண்டகளிலும் உள்ள
முக்கிய எழுத்தாளர்களை வாசித்ததை போன்ற அனுபவம் ஏற்படும்//

இநூல்களை படித்திருக்கின்றேன். இதில் ஊரின் மிக அழகான பெண் சிறந்த தொகுப்பு.

எஸ்.ராவின் என்றார் போர்ஹே வாசிக்க வேண்டிய நூல்கள் பட்டியலில் உண்டு.

மிக்க நன்றி.

லேகா said...

நன்றி ஹரி

த.அரவிந்தன் said...

இந்நூல் யாருடைய மொழிபெயர்ப்பு? வெளியிட்ட பதிப்பகம்? முகவரி? விலை?
நிழல் பதிப்பகம் - ராஜகோபால் மொழிபெயர்ப்பில் இலத்தீன் அமெரிக்க சிறுகதைகள் தொகுப்பு ஒன்று வெளியிட்டிருக்கிறது. அந்நூலைக் குறிப்பீடுகிறீர்களா?

லேகா said...

அரவிந்தன்,

இந்த புத்தகம் 90களின் மத்தியில் வாங்கியது.இத்தொகுதியில் உள்ள கதைகளை வெங்கடேஷ்,லோக சுந்தரி,சுரேஷ்குமார் இந்திரஜித் ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர்.

வர்ஷா பதிப்பகத்தின் வெளியீடு இது.தற்சமயம் கிடைப்பது அரிது என்றே நினைக்கின்றேன்.

த.அரவிந்தன் said...

நன்றி

முஹம்மது ,ஹாரிஸ் said...

இலத்தீன் அமெரிக்க சிறுகதைகள் என்ற தலைப்பின் கீழ் கடைசியாக இட்ட பின்னுட்டத்தை எடுத்து விடுங்கள். அதில் என் மின்னஞ்சல் முகவரி இருக்கிறது SPAM மின்னஞ்சல் வரும். உங்களுடைய மின்னஞ்சல் முகவரி தெரியாது அதனால் தான் இதில் இட்டேன்.

கப்பியாம்புலியூரன் said...

நல்லா இருக்கு.

உங்களால் பல நல்ல நூல்களின் அறிமுகம் கிடைக்கிறது.

வாழ்த்துகள்

கப்பியாம்புலியூரன்

லேகா said...

நன்றி கந்தவேலன்