Monday, October 18, 2010

பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்"

சுயசரிதை எழுத்திற்கு ஒளிவு மறைவு இருத்தல் கூடாது என்று அ.முத்துலிங்கம் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருப்பார்.அவ்வாறான எழுத்தே வாசகனுக்கு நம்பதன்மையையும், எழுத்தாளன் கூட்டி செல்லும் உலகத்தினுள் அந்நியோனியமாய் உலவும் ஆற்றல் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.மலையாள கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்" அவ்வாறான சுயசரிதை.புதைந்து போன இசை கருவிகளை தோண்டி எடுக்கும் மனநிலை எவ்வாறிருக்கும்?!மீண்டும் அதன் இசையை கேட்க எழும் ஆர்வம்,கிடைக்காமல் போனால் அடைய நேரிடும் ஏமாற்றம்,ஏற்கனவே அது தந்து போன இசை மயக்கம் என்பது போன்ற கலவையானதொரு மனநிலைக்கு இட்டு செல்லுகின்றது இந்த தொகுப்பு.

வறுமையின் பிடியில் சிக்கி பரதேசியாய் அலைந்த காலம் தொடங்கி நோபல் அரங்கம் சென்றது வரை, வெவ்வேறு சந்தர்பங்களில் தான் சந்தித்த மனிதர்கள் குறித்த ஒரு கவிஞனின் நேர்த்தியான சுயசரிதை இது.வாசிக்க வாசிக்க ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.வாசித்து முடித்ததும், இவர் வாழ்வின் எல்லா சம்பவங்களையும் பார்த்திருப்பாரோ என தோன்றியது.தனது வாழ்வனுபவங்களை கொஞ்சமும் கூட்டாமல், குறைக்காமல் வாசகனுக்கு அப்படியே தந்திருக்கின்றார்.இந்நூலில் இவர் பகிர்ந்திருக்கும் நினைவுகளில், ஆண்களை விட பெண்களே வசீகரமானவர்கள்.சாஹீனா,சூன்யமாகி போன வாழ்கையின் துரத்தலில் இருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்று தோற்றவள்.தீக்காயங்கள் கொண்டு விகாரமாய் தோற்றம் அளிக்கும் சஹீனாவை எதிர்பாராமல் ரயில் பயணத்தில் சந்திக்கும் பாலசந்திரன்,அவளோடான தனது கடந்த கால காதலை மீட்டெடுத்து பின் மெல்ல நிகழின் அதிர்வில் இருந்து விலகுவது நெகிழ்வான விவரிப்பு.

"கண் ஜாடையாலே பாவக்கடலின் சூழலில் ஆழ்த்தும்
பெண்கள் புழுவால் தின்னப்பட்டு உதிர்ந்துபோவார்கள்"


இவ்வரிகளுக்கு அட்சரமாய் பொருந்தி போகும் லைலா என்னும் பெண்ணோடான பாலாவின் உரையாடல்கள் கோபியின் டேபிள் டென்னிஸின் சிறு பகுதியை வாசித்தது போல இருந்தது.கடற்கரை மணலில் சாந்தம்மா என்னும் வேசியுடன் துயரத்தை பங்கிட்டு, பாடி கழித்த இரவு,சர்வதேச புத்தக சந்தை ஒன்றில் காந்தியின் "சத்திய சோதனை" புத்தகத்தை தேடி அலைந்த தென் ஆப்பிரிக்க மூதாட்டியுடனான உரையாடல்கள்,கண்களில் மின்னலிட்டு சிரிக்கும் ராதிகாவின் மீது மோகித்திருந்த நாட்கள் - தொடர்ச்சியான அவளின் மரணம், மருமகளின் கொடுமை தாளாது தினம் ஒரு வேஷம் கட்டி யாசித்து அலைந்த முதியவள் என எல்லாவிதமான பெண்களும் உலவுகின்றனர்.

சிவாஜியுடனான பாலச்சந்திரனின் சந்திப்பு ஏற்கனவே இலக்கிய இதழ்களில் வெளிவந்து பேசப்பட்ட கட்டுரை.அதி உன்னதமான எழுத்தாளனை கூட சிறு பிள்ளையின் ரசிக மனநிலைக்கு மாற்றிவிடும் மந்திரத்தை சினிமா கொண்டுள்ளது.சிவாஜியை அவர் வீட்டில் சந்தித்தது குறித்து அந்த நேரத்தின் ஆச்சர்யம் விலகாமல் பகிர்ந்துள்ளார்.கமலா தாஸ் உடனான சந்திப்பு கவிதை சார்ந்த உரையாடல்கள் பற்றி அல்லாது, அவரின் பிரியமும்,அக்கறையும் உள்ள தயாள குணத்தை பறைசாற்றுவதானது.

பிரியத்திற்குரிய நண்பன் ஒருவனை நீண்ட நாட்களுக்கு பிறகு பைத்தியகாரனாய் காண நேர்ந்த அவலமும்,பணம்-உறவுகளை துறந்து கடவுளின் சந்நிதியில் முழுதுமாய் தங்களை அர்ப்பணித்து கொண்ட தம்பதியரை கண்டு நெகிழ்ந்த சந்தோஷ தருணமும் பாலச்சந்திரனுக்கு அமைந்திருக்கின்றது.ரத்த வங்கியில் மோசமானதொரு சூழ்நிலையில் நண்பன் ஆகி போன கிருஷ்ணன் குட்டி,தரித்திரத்தின் பிடியில் இருந்து விலக முடியாத அற்புத கவிஞன் ஸ்ரீவத்ஸன் என பாலச்சந்திரன் அறிமுகப்படுத்தி செல்லும் ஒவ்வொரு மனிதரும் நமக்காய் பெருங்கதை ஒன்றை வைத்திருக்கின்றார்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பு - கே.வி.ஷைலஜா
வெளியீடு - காவ்யா (2002 )

12 comments:

நர்சிம் said...

பகிர்விற்கு நன்றி லேகா.

எஸ்.கே said...

சிறப்பான கட்டுரை!

Radhakrishnan said...

நன்றி லேகா.

ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றிகள் லேகா.
பகிர்வு வெளியிட கால இடைவெளி இருந்தாலும் தரமான சுவையான பதிவுகள் பகிர்தலுக்கு கூடுதல் நன்றிகள்.

மாதவராஜ் said...

ஐயோ, இந்த புத்தகத்தை எத்தனை தடவை வாசித்திருப்பேன் எனச் சொல்ல முடியாது. மாண்ட்டோவுக்குப் பிறகு, சுய வெளிச்சத்தில் வாசகனை உலுக்கிய எழுத்தாளனின் அனுபவங்கள்.

அவசியமான பகிர்வு, லேகா. உங்கள் அறிமுகங்கள் இன்னமும் ஆழமும் அடர்த்தியும் கொண்டவையாக இருக்கலாமே!

இனியாள் said...

அது ஒரு நல்ல புத்தகம் லேகா, நானும் வாசித்திருக்கிறேன் எனினும் மீள் வாசிப்பு தேவை ப்படும் போல.பள்ளி நாட்களில் வாசித்த புத்தகம்.

அன்பேசிவம் said...

நானும் இந்த புத்தகத்தைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். வண்ணதாசன் என்ற பேரை எங்கு பார்த்தாலும் அவர்களின் பதிவிற்குள் நுழைந்துவிடுவேன். அதுபோல சமீபமாய் பாலசந்திரன். அதுவும் லேகாவின் பதிவில் என்றதும் ஆர்வமாய் வந்தேன்.நல்ல அறிமுகம் நல்ல பகிர்வு.

இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன் உங்களிடம். :-)

நர்சிம் said...

//இனியாள் said...

அது ஒரு நல்ல புத்தகம் லேகா, நானும் வாசித்திருக்கிறேன் எனினும் மீள் வாசிப்பு தேவை ப்படும் போல.பள்ளி நாட்களில் வாசித்த புத்தகம்//

2002ல தாங்க இந்த புஸ்தகமே வந்துச்சு.;)

லேகா said...

நன்றி நர்சிம் :-)

நன்றி எஸ்.கே

நன்றி ராதாகிருஷ்ணன்

நன்றி ராம்ஜி

லேகா said...

நன்றி மாதவராஜ்.

நன்றி இனியாள்

நன்றி முரளி.இந்த புத்தகம் குறித்த உங்க விரிவான பதிவு அருமை.

KARTHIK said...

நானும் வாசித்தேன் நல்ல புத்தகம்
மொழிபெயர்ப்பே இப்படி இருக்குன்னா
இதன் அசல் இன்னும் இன்னும் எப்படி இருக்கும் :-))

குறவஞ்சி said...

தமிழில் கலாப்பிரியாரின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’என்று சமீபமாய் படித்தேன்.நீங்கள் படித்திருக்கிறீர்களா