Tuesday, December 16, 2008

ஆதவனின் "இரவுக்கு முன் வருவது மாலை" - குறுநாவல் தொகுப்பு

ஆதவனின் படைப்புகள் ஆச்சர்யம் கூட்டுபவை.இவரின் "என் பெயர் ராமசேஷன்" மற்றும் "காகித மலர்கள்" தந்த அனுபவம் அலாதியானது,பல விஷயங்கள் குறித்த மாற்று பார்வையை தந்தவை. புதுமைபித்தனின் எழுத்துக்களை போலவே இவரின் எழுத்துகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தி வருது.1977 வெளிவந்த இத்தொகுப்பின் கதைகள் யாவும் கால இடைவெளியை நினைவுறுத்தாது இன்றைய தலைமுறைக்கென சொல்லப்பட்டது போல உள்ளது.ஆதவனின் கதை உலகம் பெரும்பாலும் நவநாகரீக இளைஞர்கள்,யுவதிகள், மேல்தட்டு வர்க்கத்தினர்,அரசு அலுவலகர்கள் - இவர்களின் அக,புற வாழ்வின் நிஜம் மற்றும் போலித்தனங்களை அலசுபவை."இரவுக்கு முன் வருவது மாலை" -அசல் ஆதவன் பாணி கதை.நெருக்கடி மிகுந்த மாலை வேளையில் சாலையில் முதன் முதலாய் சந்தித்து கொள்ளும் நாயகனும்,நாயகியும் தயக்கங்கள் ஏதும் இன்றி தங்களை அறிமுகம் செய்து கொண்டு அம்மாலை பொழுதை தில்லி வீதிகளில் பேசிக்கொண்டே கழிக்கின்றனர்.அஸ்தமிக்கும் சூரியனின் அழகை நம்மில் எத்தனை பேர் தினமும் ரசிக்கின்றோம்?வானத்தை நிமிர்ந்து பார்க்க நேரம் இன்றி ஓடிக்கொண்டே இருக்கும் இயந்திர வாழ்கையின் சோகம் முதற்கொண்டு இவர்கள் விவாதிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் சமூக அமைப்பின் மீது எழுத்தாளன் கொண்டிருக்கும் கோபத்தை எடுத்துரைப்பவை.


"சிறகுகள்",கல்லூரி படிப்பு முடிந்து திருமணம் ஆகும் வரை ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் கோர்வை.இத்தொகுப்பில் மிகுந்த ஹாசியம் நிறைந்த கதை இது. படிப்பு முடிந்ததும் வேலைக்கு செல்லாதிருந்தால் ஏற்படும் குற்ற உணர்ச்சி,வேலை,ஆண்களின் சிநேகம் பொருட்டு சக தோழிகள் மீது ஏற்படும் பொறாமை,எதிர் காலம் குறித்து இயல்பாய் எழும் கேள்விகள் என சராசரி நிகழ்வுகள் யாவும் மிக நேர்த்தியாய் விவரிக்கப்பட்டுள்ளது.நாயகி தனது முந்தைய தலைமுறையோடு தன் காலத்து நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பார்த்து அதில் உள்ள பெருவாரியான முரனை எண்ணி வியப்பது நமக்கும் நேர்வதே.

"கணபதி ஒரு கீழ் மட்டத்து ஊழியன்" - தில்லி தலைமைசெயலக அலுவலகத்தில் பணிபுரியும் கணபதியின் ஒரு நாள் அலுவலக குறிப்பு.அரசு அலுவலங்களின் தினப்படி காட்சிகளை பகடி கலந்து விளாசுகிறது.அதிகாரம்,பதவி,போலித்தனம் நிறைந்த உயர்மட்டம்,சமயத்திற்கு ஏற்ப முகமூடி மாற்றும் சக ஊழியர்கள் இவர்களுக்கு இடையே சிக்கி தவிக்கும் கணபதி,வாழ்க்கை சலித்து சொந்த கிராமம் திரும்பி சென்றிடுவோம் என்னும் இனிய நினைவோடு ஒவ்வொரு நாளையும் தொடர்கின்றான்."மலையும் நதியும்" -முற்றிலும் தி.ஜா பாணி கதையாடல்.மனைவியை இழந்த இசக்கியா பிள்ளை கணவனால் வஞ்சிக்கபட்ட தனது இளம் பருவத்து காதலியை ஆண்டுகள் பல கடந்தும் பிரிய மிகுதியால் அரவணைத்து கொள்வதை சொல்லும் கதை.

வெளியீடு - கிழக்கு பதிப்பகம்
விலை - 120 ரூபாய்

11 comments:

Anonymous said...

ஏற்கனவே வாசித்திருந்தாலும் ஒரு மறுவாசிப்புக்கான அச்சாரமிடுகிறது உங்கள் பதிவு. நன்றி.

Krishnan said...

"அஸ்தமிக்கும் சூரியனின் அழகை நம்மில் எத்தனை பேர் தினமும் ரசிக்கின்றோம்?வானத்தை நிமிர்ந்து பார்க்க நேரம் இன்றி ஓடிக்கொண்டே இருக்கும் இயந்திர வாழ்கையின் சோகம்" 100% உண்மை. மிக்க நன்றி லேகா.

லேகா said...

நன்றி வடகரை வேலன் :-)

லேகா said...

நன்றி கிருஷ்ணன்,

ஆதவனின் எழுத்துக்களில் எப்பொழுதும் ஒரு கோபம்,அயர்ச்சி வெளிப்படும்.செயற்கையாய் சிறிது பேசி போலி வேடம் ஏற்று நடமாடும் மனிதர்கள், சமூக கட்டுபாடுகள்,இளைஞர்களுக்கு வகுக்க பட்ட கட்டுபாடுகள்,வேலை நிமித்த சங்கடங்கள் என நீளும் விஷயங்கள் நமக்கும் அயர்ச்சி தருபவையே..இருப்பினும் வாழ்க்கையை தடையின்றி கொண்டு செல்ல இவற்றோடு சமரசம் செய்து கொள்கின்றோம்.

ரமேஷ் வைத்யா said...

நல்லாப் படிக்கிறீங்களே...

லேகா said...

நன்றி ரமேஷ் :-)

குப்பன்.யாஹூ said...

நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வதற்கு நன்றிகள்.

வர இருக்கும் புத்தக கண்காட்சியில் உங்களின் பட்டியல் எவை.. அது குறித்து வெளியிட்டால் (பதிவு எழுதினால்) நண்பர்களும் உதவு வார்கள், உதவி பெறுவார்கள்.

குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி குப்பன்_யாஹூ

butterfly Surya said...

பர்ஸ் ரொம்ப வீங்க வைக்கிறீர்கள் ..

தங்கமணி கிட்ட நல்லா வாங்க போறேன்.

லேகா said...

நன்றி வண்ணத்துபூச்சியார் :-))

ஆதவனின் மற்றும் ஒரு சிறந்த நாவல்.

ஊர்சுற்றி said...

இரவுக்கு முன் வருவது மாலை - கூகிளிட்டபோது உங்கள் இடுகை வந்தது.
ஆதவனின் எழுத்துக்கள் என்னைக் கட்டிப்போட்டுவிட்டன!