Monday, December 22, 2008

அ.எக்பர்ட் சச்சிதானந்தத்தின் "நுகம்" - சிறுகதை தொகுப்பு

அ.எக்பர்ட் சச்சிதானந்தம் குறித்த எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை இவரின் படைப்புகளை படிக்கும் ஆவலை தூண்டியது. இச்சிறுகதை தொகுப்பை மதுரை புத்தக சந்தையில் தேடி வாங்கினேன்.அனேகமாக எல்லா கதைகளும் விளிம்பு நிலை கிறித்துவ மக்களை பற்றியது.கடவுள் பக்தி,பிராத்தனைகள்,நம்பிக்கை இவைதாண்டி கிறிஸ்துவ தேவாலய மடங்களில் நிலவும் அதிகாரம்,போலித்தனம்,சுயநலம்,கருணையின்மை போன்றவற்றை தம் கதைகளின் மூலம் மிகக்கடுமையாய் சாடி உள்ளார்.

பெரும்பாலான கதைகள் நாயகனின் பார்வையில் சொல்லப்பட்டவை."பார்வை" சிறுகதை பள்ளி ஒன்றின் கடைநிலை ஊழியனான நேசபாண்டியனின் மனைவி தற்கொலை செய்து கொண்ட பின்,அந்த மரணத்தை குறித்த சமூகத்தின் பார்வையை சொல்லும் கதை."பிலிப்பு" மருத்துவமனை பணியாளர் பிலிப்பு மரணத்தின் தருவாயில் இருக்கும் வேளையில் அவரது கடந்த காலத்திற்கு அழைத்து செல்கிறார் ஆசிரியர்.எல்லோருக்கும் பிரியமானவனாய்,குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவனாய்,நேர்மை தவறாது வாழ்ந்த பிலிப்பு கணவனால் கைவிட பட்ட பெண்ணொருத்தியை மணந்து
அவளின் இரு குழந்தைகளை பட்ட படிப்பு படிக்க வைக்கின்றான்.மரண படுக்கையில் கவனிப்பாரற்று இருக்கும் பிலிப்பின் மனைவி வேறொருவனுடன் சைக்கிளில் இறங்கும் காட்சியோடு கதை முடிகின்றது.




இத்தொகுப்பில் எனக்கு பிடித்த இரு சிறுகதைகள் "மரணத்தின் கூர்' மற்றும் "நுகம்"."மரணத்தின் கூர்" - கல்லறை திட்டது தொழிலாளியின் மகன் இறந்த வீட்டில் நடக்கும் சம்பவங்களே இச்சிறுகதை.மகன் இறந்த சோகத்தை வெளிக்காட்டாது காலை முதல் அவன் உடலை அடக்கம் செய்யும் வேலைகளில்
முனைதிருக்கும் நாயகன்,சவபெட்டிக்கு பணம் வேண்டி ஆலய நிர்வாகத்தினரிடம் செல்ல,பணம் இல்லை என கூறி அவனை வெளியேற்றி பிஷம்பின் பொன் விழா கொண்டாட்டத்திற்கு பெரும்தொகை தருவது பற்றி பேசிகொள்கின்றனர்,கடன்சொல்லி உடலை அடக்கம்செய்து விட்டு தனியே அமர்ந்து அவன் கதறி அழுவதை கதை முடிகின்றது.ஆறுதல்,நம்பிக்கை,வேண்டுதல் என யாவும் வாய் வழியே சொல்லி விட்டு நலிந்த மக்களுக்கு செயலில் எதுவும் செய்ய முன்வராத மடத்தின் நிர்வாகம் குறித்த கண்டனங்கள் இத்தொகுப்பு முழுவதும் விரவி உள்ளது.


நுகம் - தேவாலைய தோட்டத்து ஊழியன் படித்த தம் மகளை ஆசிரியை பணியில் சேர்க்க நிர்வாகத்தினருக்கு விருந்து படைத்தது,ஒவ்வொருவராய் தேடி சென்று கெஞ்சி பார்த்து தோல்வியுறும் சோகத்தை சொல்லும் கதை.தலித் எழுத்தாளர் பாமாவின் "கருக்கு" நாவல் இவ்விடத்தில் நினைவிற்கு வந்தது.பாமா மேலோட்டமாய் குறிப்பிட்டு இருந்த கிறிஸ்துவ மடங்களில் பிற்படுத்தபட்டோருக்கு நடக்கும் சில அட்டூழியங்கள் இத்தொகுப்பில் விரிவாய் சொல்லப்பட்டுள்ளது.

இக்கதைகள் தவிர்த்து "கடன்" ,"இருகடித நகல்களும் ஒரு கடிதமும்","மலம்","பேரன்"சிறுகதைகளும் வித்யாசமானவை.கடன் மற்றும் பேரன் சிறுகதைகள் வண்ணதாசனின் எழுத்து சூழலை ஒத்திருந்தது.அதிகம் அறிய படாத இந்த எழுத்தாளர் குறித்து அறிமுகம் செய்த எஸ்.ரா விற்கு நன்றிகள்.எஸ்.ரா தொடர்ந்து சிறந்த புத்தகங்கள்,உலக சினிமா,எழுத்தாளர்கள் குறித்த அனுபவ கட்டுரைகள்(இதற்கு முன்னர் வண்ணநிலவன்,கோபி கிருஷ்ணன்..) என அறிமுகம் செய்து வருவது பெரிதும் உவகை தரக்கூடியது.மேலும் வலைப்பதிவாளர் சுரேஷ் கண்ணனின் (பிச்சை பாத்திரம்) சமீபத்திய கட்டுரை ஒன்றில் சச்சிதானந்தனின் கதையுலகம் குறித்து எழுதி உள்ளார்.



எக்பர்ட் சச்சிதானந்தம் குறித்த எஸ்.ரா வின் கட்டுரை


எக்பர்ட் சச்சிதானந்தம் கதையுலகம் குறித்த சுரேஷ் கண்ணனின் பதிவு

வெளியீடு - தமிழினி பதிப்பகம்
விலை - 60 ரூபாய்

8 comments:

அருண்மொழிவர்மன் said...

வெளிநாடுகளில் இப்படியான தீவிர இலக்கியம் சார்ந்த புத்தகங்களை வாங்குவது சற்று கடினம். பொதுவாக இணையம் மூலமாக பணம் செலுத்தி தான் வாங்குவது வழக்கம். அப்படியான எமக்கு உங்கள் அறிமுகங்கள் பெரும் உதவியாக உள்ளன. தொடருட்டும் உங்கள் பணி

Krishnan said...

மிக்க நன்றி லேகா. கட்டாயம் வாங்கவேண்டிய புத்தகம். கோபிகிருஷ்ணனின் இடாகினி பேய்கள் படித்து விட்டீர்களா ? நான் படித்து கொண்டிருக்கிறேன். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

குப்பன்.யாஹூ said...

அருமை லேகா, உங்களின் வாசிக்கும் தீவிரம் அதிசயிக்க வைக்கிறது, வாழ்த்துக்கள்.

குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி அருண்

லேகா said...

நன்றி குப்பன்_யாஹூ.
புத்தக கண்காட்சிக்கு வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல் தயார் பண்ணிடிங்களா??

லேகா said...

நன்றி கிருஷ்ணன்.

இடாகினி பேய்கள் படித்துவிட்டேன்.கோபி கிருஷ்ணன் பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள உதவும் குறிப்பேடு என கொள்ளலாம் அக்குறுநாவலை.

Krishnan said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

லேகா said...

Tnx Krishnan.Wish you a happy new year!! :-)