Monday, December 1, 2008

இமயத்தின் "கோவேறு கழுதைகள்" மற்றும் பாமாவின் "கருக்கு"

சமீபத்தில் படித்த இவ்விரண்டு தலித் நாவல்களும் என்னை மிகவும் பாதித்தன.சில எழுத்துக்களின் மீது இதுவரை கொண்டிருந்த அபிமானம் நொடி பொழுதில் மறைந்தது.தமிழில் வெளிவந்த மிக சிறந்த தலித் இலக்கியமாக இவ்விரு நாவல்களும் கருதப்படுகின்றன.பொதுவாக எந்த நாவல் படித்தாலும் அதன் குறைகளை நீக்கி,பெற்று கொண்டதை எண்ணி நிறைவாய் உணர்வேன்.புனைவாய் சொல்லப்பட்ட சோக கதைகள் கூட அதிக ரணம் தந்ததில்லை.ஆனால் இந்நாவல்களை படித்த பொழுது முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு குற்ற உணர்ச்சியே தோன்றியது.

இன்று எங்கள் கிராமத்தில் கூட சக்கிலியர்,பறையர்,வண்ணார் இன மக்கள் தனித்து ஒதுக்கப்பட்டு இருந்த நிலை வெகுவாய் மாறிவருகின்றது,இருப்பினும் கடந்த காலங்களில் இருந்த கட்டுபாடுகள் கொடுமையானவை.தலித் மக்களுக்கு நிகழ்ந்து வரும் கொடுமைகளை கிராமத்து சம்பவங்களோடு மட்டும் சுருக்கி விட முடியாது, நேரில் கண்ட காட்சிகளை எழுத்துக்களாய் வாசித்த பொழுது இவ்விரு நாவல்களோடு மிக நெருக்கமாய் உணர்ந்தேன். தமிழில் வெளிவந்துள்ள மிக சிறந்த தலித் இலக்கியங்களுள் இவ்விரு நூல்களுக்கும் கட்டாயம் இடம் உண்டு.

இமயத்தின் "கோவேறு கழுதைகள்"பற வண்ணார்களான ஆரோக்கியம் - சவுரி தம்பதியினரின் வாழ்கை குறிப்பே "கோவேறு கழுதைகள்".கதையின் பிரதான பாத்திரம் ஆரோக்கியம்,அவளின் வாயிலாக வண்ணார் இன மக்களின் துன்பங்களை பகிர்ந்துள்ளார் இமயம்.காலையும் மாலையும் மூட்டை மூட்டையாய் துணிகளை வெளுப்பதொடு இவர்களின் பணி முடிவதில்லை,ஊரில் நடைபெறும் திருமணம்,சடங்கு,இழவு என எல்லா நிகழ்ச்சிகளிலும் ஓயாது வேலை - எதிர்பார்ப்புகள் அதிகம் இன்றி.தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து வரும் அடிமை வாழ்கையை ஆரோக்கியமும் சவுரியும் ஏற்று கொண்டது போல அவர்களின் குழந்தைகள் ஏற்கவில்லை.

மாறி வரும் சமூக சூழ்நிலையில் தற்பொழுதைய தலைமுறையினர் படித்து முன்னேறவோ,சுயமாக வேறு தொழில் செய்து பிழைக்கவே விருப்பம் கொள்வது பெரிதும் ஆறுதல் தரும் செய்தி.வீடு வீடாக சென்று இரவு பொழுதுகளில் ராச்சோறு வாங்க தன் மகன் பீட்டரை ஆரோக்கியம் அழைக்கும் பொழுது,அச்சிறுவனுக்கும் அவளுக்குமான உரையாடல் உருக்கமானது.எதிர்காலம் குறித்த திட்டமிடுதலும்,குழந்தைகள் மீதான பிரியமும்,கடந்த கால நினைவுகளோடும் நாட்களை கடத்தும் ஆரோக்கியத்தின் நாட்கள் அவர் நினைத்ததை போல அன்றி மாற்றம் காணாமல் சோகத்தின் நீட்டிப்பாய் தொடர்கின்றது. சமூக அவலத்தின் நிதர்சன புனைவான இந்நாவல் தமிழில் மிக முக்கியமான பதிவு.

நூல் வெளியீடு - க்ரியா பதிப்பகம்

பாமாவின் "கருக்கு"தலித் எழுத்தாளரான பாமாவின் முதல் நாவல் இது.தலித் மீதான சமூகத்தின் பார்வையை தனது சொந்த அனுபவங்கள் பகிர்கிறார்.மாற்ற சாதியினரிடம் இருக்கும் தீண்டாமை மனோபாவம்,கிராம நிகழ்ச்சிகளிலும்,ஊர் திருவிழாக்களிலும் பங்கு கொள்ள முடியாது தனித்து விட பட்ட சோகங்கள்,அக்காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் தலித் மாணவர்கள் எதிர் நோக்கிய அவமானங்கள் என ரணங்களின் வேதனையாய் நீள்கிறது இப்பதிவு.

ஜாதியை முன்வைத்து எதிர்நோக்கிய தடைகளையும் அவமானங்களையும் தாண்டி பள்ளி மற்றும் கல்லூரியில் தேர்ச்சி பெற்று தன் சமூகத்து குழந்தைகளுக்கு சேவை செய்யும் பொருட்டு கிறிஸ்தவ மடத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை கூறும் இடங்கள் முக்கியமானவை.பிற்படுதபட்டோருக்கென செயல் படும் கிறிஸ்துவ மடங்களிலும் தீண்டாமை கொடுமை நிகழ்வதை பாமா தனது நேரடி அனுபவங்களால் விவரிக்கும் பொழுது சிற்சில நம்பிக்கைகளும் தகர்கின்றன.

தற்சமயம் சிறிய கிராமம் ஒன்றில் ஆசிரியராய் பணிபுரியும் பாமா தன்னை ஒரு எழுத்தாளராய் அங்கு அடையாளம் காட்டி கொள்ளாது வெகு எளிமையாய் உரையாடியது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் புகைப்பட கலைஞர் புதுவை.இளவேனில் கூறி இருந்தது நாவல் படிக்கும் பொழுது நினைவிற்கு வந்தது."கருக்கு" என்னளவில் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்திய பதிவு.

வெளியீடு - நர்மதா பதிப்பகம்

14 comments:

ச.முத்துவேல் said...

/இயந்திர வாழ்கை நம்மை அல்லும் பகலும் ஆட்டி படைக்க ஒரே விடிவு என நான் கருதியது தமிழ் இலக்கிய வாசிப்பு...இது ஓர் இனிய இலக்கிய அனுபவ பயணம்.வாழ்வின் தேடல் குறித்து உணர செய்ய வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்/

சரியாகவும்,அழகாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.மிகவும் பயனுள்ள வலைப்பூ உங்களுடையது.
புத்தகங்களைப் படிக்கமுடிகிறதோ இல்லையோ.. அவை பற்றி தெரிந்துகொள்வதே ஆனந்தம்தான்.
பயனுள்ள பதிவுகள்.

Krishnan said...

உன்னதமான படைப்புக்கள் ..அருமையான விமர்சனம். நன்றிகள் பல லேகா.

குப்பன்.யாஹூ said...

நல்ல விமர்சனத்திற்கு நன்றி லேகா.

விரைவில் வாங்கி படிக்கிறேன்.

நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களுடன்

குப்பன்_யாஹூ

லேகா said...

வருகைக்கு நன்றி முத்துவேல் :-)

லேகா said...

நன்றி குப்பன்_யாஹூ
நன்றி கிருஷ்ணன்

Krishnan said...

"இந்த வருடத்தில் மிரட்டிய, ரசித்த, வியந்து போக வைத்த தமிழ்ப் பதிவு: யாழிசை ஓர் இலக்கிய பயணம் :: லேகா" - பாஸ்டன் பாலா http://snapjudge.com/

வாழ்த்துக்கள் லேகா, தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம்.

லேகா said...

நன்றி கிருஷ்ணன்

anujanya said...

கருக்கு வாங்கியும், இன்னும் படிக்கவில்லை. பாமா பற்றி அண்மையில் படித்தபோது மிக வியப்பாக இருந்தது-இப்படி ஒருவரா என்று!

'கோவேறு கழுதைகள்' நல்ல அறிமுகம். பெண்டிங் லிஸ்ட் அதிகமாகிறது.

அனுஜன்யா

கிருஷ்ணன் தற்போது தமிழிலும் பின்னூட்டம் போடுவது பிடித்திருந்தால், நன்றி எனக்கு சொல்லுங்கள்.

anujanya said...

லேகா, சொல்ல மறந்தது, பாபாவின் பாராட்டுக்கு முற்றிலும் உரித்தானவர்தான் நீங்கள். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

Sateesh said...

ஏதாவது மன்னர் கால புத்தகம், நாவல் பரிந்துரையுங்களேன்...

JAGANNATHAN CS said...

சராசரி மனிதர்களைப்போல் நாவலைப் படித்துவிட்டு என்னை மிகவும் பாதித்தது என்று விமர்சனம் எழுதியிருக்கும் நீங்கள் ........ உங்கள் வாழ்க்கையில் உங்கள் கண்முன் நடந்த ஒதுக்கப்பட்ட மனிதர்களை அ ரவணைத்ததுண்டா......? இல்லை பாதிப்புகள் எழுத்துகளுக்காக மட்டுமா......?

என்றும் அன்புடன்
ஜெகன் சுசி
jaganchitra.blogspot.com

லேகா said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அனுஜன்யா :-)

லேகா said...

இத்யாதி மன்னர் கால நாவல்கள் எனக்கு அறிமுகம் இல்லை.வீட்டில் சாண்டில்யன்,கல்கி நாவல்களை பார்த்ததோடு சரி,படித்தது இல்லை.
சாண்டில்யனின் "கடல் புறா" நல்ல நாவல்(??) என கேள்வி பட்டுள்ளேன்.

லேகா said...

@ஜெகன்நாதன் சித்ரா

பாதிப்புக்கள் எழுத்துக்காக மட்டும் இல்லை ஜகன்,அதை என்னால் உறுதியாக கூற முடியும்.ஏனெனில் நடைமுறையை வார்த்தைகளாய் படிப்பதற்கு முன்னரே என் கிராமத்தில் நேரில் கண்டுள்ளேன்,கோவேறு கழுதைகள் நாவல் படித்த பொழுது மிக நெருக்கமாய் உணர்த்தாய் சொல்லியதிர்க்கு காரணமும் அதுவே.

ஜாதி பாகுபாடுகள் களைந்து பழகவும்,விளிம்பு நிலை மனிதர்களை அரவணைக்கவும் எனக்கு சொல்லி தந்ததும் என் தந்தையே.என்னளவில் வாசிப்பு என்பது பெருமைக்காக அல்ல. ஒவ்வொரு வாசிப்பும் ஒவ்வொரு வகையில் என்னை பக்குவபடுத்துகின்றது.என் நிலை குறித்து தெளிவுபடுத்த உதவிய உங்கள் கேள்விக்கு நன்றி.