Friday, December 12, 2008

ஜே.பி.சாணக்யாவின் "கனவு புத்தகம்" - சிறுகதை தொகுப்பு

விளிம்பு நிலை மனிதர்களின் தின பொழுதை மிகை இன்றி விவரித்த சாணக்யாவின் முந்தைய சிறுகதை தொகுப்பான "என் வீட்டின் வரைபடம்" மிக பிடித்தமானதாய் போனதில் ஆச்சர்யம் இல்லை.இவரின் சமீபத்திய தொகுப்பான "கனவு புத்தகம்" சிறுகதை தொகுப்பும் கொண்டிருந்த எதிர்பார்ப்பை பொய்க்கவில்லை.

உடலை முதலீடாய் வைத்து வாழ்வை நகர்த்தும் விதவை தாயையும் ,தாயின் போக்கால் உள்ளுக்குள் மருகும் மகளையும் பற்றிய கதை "ஆண்களின் படித்துறை".இக்கதையின் சில விவரிப்புகள் நிஜத்தில் சாத்தியமா என கருதும்படி அதிர்ச்சி தருவதாய் உள்ளது.வேலையற்ற ஒருவனின் இயலாமையின் உச்சத்தை சொல்லும் கதை "கோடை வெயில்".திருமணமாகி வேலை இன்றி கஷ்டப்படும் நாயகன் வேலை நிமித்தமாய் உதவ வரும் தெரிந்த நபருடன் தன் மனைவி இருந்ததை அறிந்தும் அவனால் ஏதும் செய்ய இயலாது போகும் நிலையை சிறு வலியோடு சொல்லும் கதை.



இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகள் "கறுப்பு குதிரைகள்" மற்றும் "பதியம்". கோவில் திருவிழாக்களில் மேளம் வாசித்து விட்டு பின் வறுமையின் கொடுமையால் சாவுக்கு வாசிப்பவனாக மாறும் ஒரு கலைஞனின் கதை. இன்னயகனை போன்றவர்களை எங்கேனும் நாம் சந்தித்திருப்போம்,ஊருக்கு சேவை செய்து கொண்டு,குடும்பம் குழந்தைகளை வெறுத்து,தனக்கென தேவைகள் எதுவும் இன்றி அந்த நாளின் பொழுதை கழித்தால் போதும் என எண்ணமுடையவர்கள்.சிறுவயதில் தன் தந்தை செய்து அளித்த கறுப்பு குதிரைகளை தன் கற்பனைகளில் சுமந்தபடி நீளும் அவன் நாட்கள் நேர்த்தியாக சொல்லபட்டிருக்கின்றது. மற்றொரு சிறுகதையான 'பதியம்",ஒரு கிராமத்து பெண்ணின் மென்மையான காதலை,அதில் ஏற்படும் அதிர்வுகளை சொல்லுவது.இவை தவிர்த்து குறிப்பிட்டு சொல்லவேண்டிய சிறுகதைகள் "கடவுளின் நூலகம்",கண்ணாமூச்சி மற்றும் "கனவு புத்தகம்".

சாணக்யாவின் எழுத்துக்கள் சமூகத்தின் மீதான மாற்று பார்வையை தோற்றுவிர்ப்பவை,சில அடிப்படை நம்பிக்கைகளை தகர்ப்பவை. மேலும் இவர் கதைகளில் எடுத்தாலும் சில கசப்பான உண்மைகளை மறுப்பதற்கில்லை.நாம் காணாத மனிதர்கள்,சந்தித்திடா நிகழ்வுகள்,முரண் நிறைந்த வாழ்க்கை முறை என சாணக்யா பயணிக்கும் எழுத்துலகம் அவசியம் கவனிக்கபடவேண்டியது.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 90 ரூபாய்

15 comments:

butterfly Surya said...

வரும் டிசம்பர் சென்னையில் புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டிய பட்டியலில் சேர்ந்து விட்டது.

தகவலுக்கு நன்றி..

பர்ஸ் எவ்வளவு வீங்க போவுதோ.??)

அவ்வ்வ்வ்வ்

Anonymous said...

நல்ல சிறுகதைத் தொகுப்பு இது. அதிர்ச்சியளிக்கும் எழுத்து அவரோடது எனினும் அதுதான் பெரும்பாலானவைகளில் நிதர்சனம் என்பதால் மறுக்கவியலாத ஒன்று.

anujanya said...

அய்ஸ் மூலம் ஏற்கனெவே அறிமுகம் ஆகிய தொகுப்பு. அய்ஸ் 'கோடை வெய்யில்' பற்றி எழுதியிருந்ததே மிகுந்த மன உளைச்சலைத் தந்தது. படிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆயினும் படிக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது.

அனுஜன்யா

லேகா said...

@வடகரை வேலன்

//அதிர்ச்சியளிக்கும் எழுத்து அவரோடது எனினும் அதுதான் பெரும்பாலானவைகளில் நிதர்சனம் என்பதால் மறுக்கவியலாத ஒன்று.//

ரொம்ப சரி.

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

லேகா said...

நன்றி வண்ணத்துபூச்சியார்.

லேகா said...

அனுஜன்யா,

"கோடை வெயில்" சிறுகதை மிக சில வர்ணனைகள் மூலம் நாயகனின் வலியை விவரிப்பது."ஆண்களின் படித்துறை" மற்றும் "கண்ணாமூச்சி" சிறுகதைகள் அசல் சாணக்ய பாணி கதைகள்.விளிம்பு நிலை பெண்கள் குறித்த நிதர்சன புனைவுகள்.

Krishnan said...

ஜே.பி.சாணக்யாவின் "கனவு புத்தகம்" புத்தகத்தை அறிமுக செய்ததற்கு மிக்க நன்றி லேகா. வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் ஹனுமான் வால் போல் நீண்டு கொண்டே போகிறது :-)

லேகா said...

நன்றி கிருஷ்ணன் :-))))

KARTHIK said...

ஜே.பி.சாணக்யா:-இவரது புத்தகம் ஒன்னுகோட வாசித்தது இல்லை.
ஆனா அடுத்தது இவர்ருதுதான் வாங்கனும் அதுலையும் சிறுகதை தொகுப்புங்கரதால வாசிக்கவும் எழிமையாதான் இருக்கும்.

வழக்கம் போல் image அருமை.(போன சாணக்கியா பற்றிய பதிவில் வந்தது போல)

லேகா said...

வருகைக்கு நன்றி கார்த்திக்.கட்டாயம் காலச்சுவடின் சாணக்யாவின் இரு சிறுகதை தொகுப்பையும் படியுங்க.

சாணக்யாவின் பெரும்பாலான கதைகள் பெண் உடலை முன்வைத்தே உள்ளது,எனவே இப்புகைப்படம் பொருத்தமானதாய் இருக்குமென தேர்ந்தெடுத்தேன்.

குப்பன்.யாஹூ said...

வாசித்தல் என்னும் நல்ல பழ்க்கம் இந்த தலை முறை உடன் நின்று விடுமோ என்ற ஐயம் இருந்தது.

தங்களை போன்ற பதிவர்கள் இருக்கும் வரை அந்த ஐயம் வேண்டாம் என் இப்போது உணர்ந்தேன். மிகவும் மகிழ்ச்சி.

அருமையான அரிதான புத்தகங்களை அறிமுகம் செய்வதற்கு நன்றிகள், பாராட்டுக்கள்.

வாழ்த்துக்களுடன்

குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி குப்பன்_யாஹூ

Unknown said...

நண்பர் சாணக்யாவின் 'கனவுப் புத்தகத்தை' உங்கள் ப்ளாக்கில் அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி லேகா. உங்கள் வாசிப்புத் திறனும் வேகமும் வியக்க வைக்கிறது

Unknown said...

நண்பர் சாணக்யாவின் 'கனவுப் புத்தகத்தை' உங்கள் ப்ளாக்கில் அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி லேகா. உங்கள் வாசிப்புத் திறனும் வேகமும் வியக்க வைக்கிறது

லேகா said...

நன்றி உமா