Thursday, August 21, 2008

வண்ணநிலவனின் "கம்பா நதி"

எப்பொழுதும் எனக்கு எண்பதுகளின் மீது ஒரு பிரியம் உண்டு,இளையராஜாவின் இசையை தவிர்த்து மற்றும் ஒரு காரணம் வண்ணதாசன்,வண்ணநிலவனின் கதைகளும் அதன் மாந்தர்களும் அக்காலகட்டதினரே..இக்கதைகளில் விவரிக்கப்படும் புன்னை,வாதாம்,நாகலிங்க மரங்கள் ,மலை,அருவி,சாலை,தெருக்கள்,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லாவற்றோடும் மிக நெருக்கமாய் உணர்வேன்.வண்ணநிலவனின்/வண்ணதாசன் கதை மாந்தர்கள் மிக இயல்பானவர்கள்,பகட்டான பெண்களோ,சாகசம் புரியும் ஆண்களோ அல்லாமல் நம்மில் ஒருவராய் நுண்ணறிவு கொண்டவர்களாய் நடமாடுபவர்கள்.வண்ணநிலவன் படைப்புகளில் குறிப்பிடதக்கவை "எஸ்தர்" ,"ரைநீஸ் ஐயர் தெரு" ,"தாமிரபரணி கதைகள்"(சிறுகதை தொகுப்பு) மற்றும் "கம்பா நதி". திருநெல்வேலி வட்டார மொழியாடளோடு தாமிரபரணி நதி சார்ந்த பகுதிகளின் நிகழ்வாய் இக்கதைகள் சொல்லபட்டிருக்கும்.கம்பா நதி ஒரு நடுத்தர குடும்பத்தின் அன்றாட நிகழ்வுகளோடு அவர்களுக்குள்ளான விருப்பங்கள்,தேவைகள்,சிக்கல்கள்,பிரியம்,காதல்,ஏக்கம் என சகல உணர்வுகளின் பிரதிபலிப்பு.

வேலை தேடும் பாப்பையாவின் தந்தைக்கு இரு மனைவிகள்,அக்கா சிவகாமி,விருப்பம் கொண்ட காதலி கோமதி - இவர்களுக்குள்ளான பிரியம்,உறவு,சம்பாஷனைகள் என நாவல் முழுவதும் உறவுகளின் ஊடே பயணிக்கிறது.நெருக்கடி மிகுந்த நடுத்தர குடும்ப வாழ்கையின் அன்றாட நிகழ்வுகளை மிகுந்த கற்பனை இன்றி அதன் போக்கில் வெகு இயல்பாய் விவரித்துள்ள பாங்கு நன்று.
நாவலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இடம் படித்து முடித்து வேலை தேடும் படலத்தில் ஈடுபடும் காலங்கள்,அப்போதைய நமது மனநிலை.ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்தித்த பிறகும் வெற்றிக்கான தேடல் நீங்காது தொடரும் அந்நாட்கள் எளிதில் மறக்கக்கூடியது அல்ல.பாப்பையா வேலை தேடும் நாட்களில் கொள்ளும் கசப்பான மனநிலை,வேலை பெற்று வெளி ஊரில் இருக்கும் நண்பர்கள் குறித்த ஏக்கம்,பிரியத்திற்குரிய பெண்ணிடம் பழக அஞ்சி ஒதுங்கும் நிலை ஆகியவை சொல்லப்பட்டுள்ள விதம் நன்று.

தாமிரபரணி நதியோடு அம்மக்கள் கொண்டுள்ள நெருக்கம் சற்றே பொறாமைக்குரியது.நதிகளை காண்பதே அறிதான இந்நாட்களில் நதியோடு குளித்து,துவைத்து நதி கரையிலும்,கல் மண்டபங்களிலும் நண்பர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்த அன்றைய பொழுதுகளின் விவரிப்பு வாசிப்பதற்கே மகிழ்வாய் உள்ளது.கம்ப நதி நாவலிலும் ரைநீஸ் ஐயர் தெரு குறித்து வருகிறது.எப்பொழுதும் மழை நனைத்த சுவடோடு தோன்றுவதாய் அத்தெருவை குறிப்பிட்டு இருப்பது மிகசரியே!!அத்தெருவும்,அதன் மனிதர்களும் அதுபோலவே.

வண்ணநிலவனின் ஆரம்பகால எழுத்துக்கள் வாசிப்பதற்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை தரவல்லவை,மழையோடு கொண்ட நெருக்கத்தை போல!! கம்பா நதியும் அது போலவே..

நாவல் வெளியீடு - அன்னம் பதிப்பகம்
விலை - 22 ரூபாய்

கீழ் கண்ட இணையத்தளத்தில் இந்நூலை பெறலாம்

http://www.anyindian.com/index.php?cPath=1_40&osCsid=2d94af152a0d96cf0bf5456e76fc1dc4

10 comments:

Unknown said...

விட்ட வண்ணநிலவன்,வண்ணதாசன் அவர்களுக்கும் ரசிகர்மன்றே வெச்சுடுவீங்க போல.

// இளையராஜாவின் இசையை தவிர்த்து மற்றும் ஒரு காரணம் வண்ணதாசன்,வண்ணநிலவனின் கதைகளும் அதன் மாந்தர்களும் அக்காலகட்டதினரே..இக்கதைகளில் விவரிக்கப்படும் புன்னை,வாதாம்,நாகலிங்க மரங்கள் ,மலை,அருவி,சாலை,தெருக்கள்,ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என எல்லாவற்றோடும் மிக நெருக்கமாய் உணர்வேன்.//

நானும் ஒரு முறை இவர்களையும் வாசித்துப்பார்க்கேறேன்.
நல்ல பதிவு லேகா.

லேகா said...

Nandri Karthick :-)

narsim said...

//வண்ணநிலவன் படைப்புகளில் குறிப்பிடதக்கவை "எஸ்தர்" ,"ரைநீஸ் ஐயர் தெரு" ,"தாமிரபரணி கதைகள்"//


"எஸ்தர்"... அருமையான படைப்பு..

லேகா said...

Tnx narsim :-)

Krishnan said...

வண்ணநிலவன் வண்ணதாசன் எழுத்துக்களை இப்பொழுது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

லேகா said...

கிருஷ்ணன் நிச்சயமாக புதிய வாசிப்பு அனுபவத்தை பெறுவீர்கள்!!

லேகா said...

கிருஷ்ணன் நிச்சயமாக புதிய வாசிப்பு அனுபவத்தை பெறுவீர்கள்!!

குப்பன்.யாஹூ said...

யாழிசை லேகா - மிக அருமையான பதிவு. மிகவும் பயனுள்ள பதிவும் கூட.

வண்ண நிலவன் மிக சிறந்த எழுத்தாளர். நமது எண்ணங்களை ஒழுங்குபடுத்தும் எழுத்தாளர்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.

ஆரம்ப காலத்தில் வெப் உலகம் இணைய தளத்தில் வண்ண நிலவன் எழுதிய , பிணம் தூக்கி சிறுகதை படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

நெல்லை நகரத்து தேர் அடி வீதிகளை, மாறார் புகை படக் கடை, சுப்பைத பிள்ளை இட்லி கடை எல்லாம் மிக அழாகாக நிதர்சனமாக எழுதி இருப்பார்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்கள் பதிவுகள் அனைத்தையும் படிக்க திட்டம் இட்டுள்ளேன்.

எஸ்தர் ஒரு இணையற்ற கதை.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன்

குப்பன்_யாஹூ

Anonymous said...

வண்ண நிலவனின் கதைகள் எழுதியது பற்றி எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.............

நானும் திருநெல்வேலி மண்ணை சேர்ந்தவன் தான்.......

அவர் குறிப்பிட்டுள்ள இடங்களில் நானும் கால் பதித்துள்ளேன் என்பது நினைத்து எனக்கு மிக பெருமையாக இருக்கிறது.........

உங்கள் அனைத்தும் பதிவுகளும் படிக்க ஆசை, கண்டிப்பா படித்து விடுவேன்....

என்னையும் உங்கள் நண்பர்கள் பிரிவில் சேர்த்து கொள்ளுங்கள்.....
மீண்டும் சந்திப்போம்
நன்றி...
---ரொட்ரிக்ஸ்
http://tamilwriter.blogspot.com
http://jebamail.blogspot.com

anujanya said...

'வண்ண' என்றாலே உங்களுக்குப் பிடிக்கும் என்பது தெரிந்ததே. இந்த மாத உயிர்மையில் எஸ்ராவும் வண்ணநிலவன் பற்றி எழுதியதைப் படித்தீர்களா? எஸ்தர் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

அனுஜன்யா