Monday, August 11, 2008

தி.ஜானகிராமனின் "அன்பே ஆரமுதே" உணர்வுகளின் உண்மை புனைவு

தி.ஜானகிராமனின் நாவல்கள் வாசிப்போரை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும் வலிமை கொண்டவை.தி.ஜாவின் பெண்ணிய பாத்திரங்கள் யாவருக்கும் விருப்பமான கவிதைகள்.மோகமுள் நாயகி "யமுனா","கமலம்",அன்பே ஆரமுதே "ருக்கு",மரப்பசு "அம்மணி" என இயல்பு மாறா தனி தன்மை கொண்ட அவரின் பெண் பாத்திர படைப்புகள் நிஜ வாழ்வில் மிகுந்த தேவைகுள்ளானவர்கள்.சமீபத்தில் தி.ஜாவின் அன்பே ஆரமுதே மற்றும் கமலம்(சிறுகதை தொகுப்பு) நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் படித்தேன்.ஏனோ அன்பே ஆரமுதே நாவலை ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.இந்த ஒப்பீடு பலருக்கு விசித்திரமாய் தோன்றலாம்,இருப்பினும் கதை மாந்தர்கள்,கதை நிகழும் காலம்,இடம்,சொல்லப்பட்ட விதம் என யாவும் வேறுபட்டாலும் இவ்விரு கதைகளுக்கும் நிறைய தொடர்பு உண்டு கதையின் மைய கருத்தில்.இரு கதைகளிலும் நாயகி நாயகனால் தன் இளம் பருவத்தில் ஏமாற்ற படுகிறாள்,அந்நிகழ்ச்சிக்கு பிறகு அவள் வாழ்கை வேறு பாதை நோக்கி செல்கிறது.படித்து முடித்து சமுதாயத்தில் ஒரு நல்ல பதவியில் இருக்கும் இரு கதை நாயகிகளும் தன் நடுத்தர வயதில் நாயகனை மீண்டும் சந்திக்கிறாள்.நீண்ட உரையாடலோடு கூடிய பொழுதுகளால் அவனோடு நட்பு கொண்டு நண்பர்களாய் வாழ்வை தொடர முடிவு செய்கிறாள்.
தி.ஜா,அன்பே ஆரமுதே நாயகி ருக்கு பாத்திரத்தை வெளிகொண்டுவந்திருக்கும் விதம் அருமை. படித்த,சிந்தனைகளில் தெளிவும் முதிர்ச்சியும் கொண்டவளாய் ருக்கு இருக்கிறாள். ருக்குவை மணக்க மறுத்து காசி செல்லும் அனந்தசாமி அங்கு மருத்துவம் கற்று பண்டிதராய் சென்னை திரும்புகிறார். அனந்தசாமி துறவியாய்,மருத்துவராய்,அன்பின் உறைவிடமாய்,யாவரும் விரும்பும் மனிதராய் சித்தரிக்கபட்டுள்ளார்.கதை மாந்தர்கள் யாவரும் அவர் அவர் போக்கில் நல்லவர்களே!எந்த வித கட்டாயதிற்கும் உட்படாமல் தன் போக்கில் கதை அழகாய் செல்கிறது.அக்காலகட்டத்தில் திரைப்படம் மீது மக்கள் கொண்டிருந்த கண்மூடித்தனமான மோகம்,திரை நாயகன்/நாயகி என தன்னை நினைத்து ஆடல்,பாடல்,மேக் அப் பூச்சு ஆகியவற்றில் மோகம் கொண்டு வாழ்வின் நோக்கத்தை தெளிவாய் வகுக்காமல் சீரழியும் இளைஞர்களுக்கு படிப்பினையாய் சில கருத்துக்கள் இந்நாவலில் உண்டு.ருக்குமணி,அனந்தசாமி இவர்களோடு கதையில் காந்திமதி,ரெங்கன்,அருண்குமார் என பல பாத்திரங்கள் உண்டு.தி.ஜா கதையில் உறுதியாய் வலியுறுத்துவது பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பதே..

16 comments:

Mohandoss said...

//தி.ஜாவின் பெண்ணிய பாத்திரங்கள் யாவருக்கும் விருப்பமான கவிதைகள்.மோகமுள் நாயகி "யமுனா"//

யமுனா பெண்ணியக் கதாப்பாத்திரமா? இது பெண்ணியத் தோழர்களுக்குத் தெரியுமா?

//அம்மா வந்தாள் "அம்மணி"//

மரப்பசு 'அம்மணி'யைச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். அவங்களும் பெண்ணியக் கதாப்பாத்திரமா? அம்பை எழுதிய திண்ணை விமர்சனம் படிச்சிருக்கீங்களா மரப்பசு பற்றி?

என்னமோ போங்க நல்லாயிருந்தா சரிதான்.

லேகா said...

உங்கள் பதிவிற்கு நன்றி மோகன்தாஸ்.ஒருவருக்கு சிறப்பாய் தோன்றும் பாத்திர படைப்பு மற்றொருவருக்கு அபத்தமாய் தோன்றலாம்.எனக்கு பிடித்த ரசித்த நாவல் மாந்தர்களை குறிப்பிட்டுளேன்.திண்ணையில் அம்பையின் விமர்சனம் குறித்து கூறியதிற்கு நன்றி,நிச்சயமாய் படிக்கிறேன்!!

NILAMUKILAN said...

சென்ற முறை இந்தியா வந்த பொது.. மோக முள் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் வாங்கி வந்து வாசித்து அனுபவித்தேன். மோக முள் திரைப்படத்தையும் தேடி பிடித்து பார்த்தேன். படத்தில் நாவலின் தாகம் அதிகம் இல்லை. ஆனால் சில நேரங்களில் சில மனிதர்களில் திரைப்படம் நாவலின் தரத்துக்கு நிகராக அமைந்திருந்தது. லக்ஷ்மி அந்நாவலின் கதாநாயகிக்கு மிக நிகராக அற்புதமாக நடித்திருந்தார். (அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அன்பே ஆரமுதே நாவல் தங்கள் பதிவின் மூலம் படிக்க தூண்டுகிறது. அடுத்தமுறை இந்தியா வரும்போது வாங்கி படிக்கிறேன். நீங்கள் ப சிங்காரத்தின் நாவல் படித்திருக்கிறீர்களா? வாய்ப்பு கிடைத்தல் அவருடைய புயலிலே ஒரு தோணி படித்து பார்க்கவும்.

லேகா said...

வாங்க நிலா முகிலன்,
//மோக முள் திரைப்படத்தையும் தேடி பிடித்து பார்த்தேன். படத்தில் நாவலின் தாகம் அதிகம் இல்லை. ஆனால் சில நேரங்களில் சில மனிதர்களில் திரைப்படம் நாவலின் தரத்துக்கு நிகராக அமைந்திருந்தது//

மோகமுள் திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது,ராஜாவின் இசையினால் கூட இருக்கலாம்.சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் நான் பார்த்ததில்லை..பார்க்க ஆவலாய் உள்ளேன்!!

//நீங்கள் ப சிங்காரத்தின் நாவல் படித்திருக்கிறீர்களா? வாய்ப்பு கிடைத்தல் அவருடைய புயலிலே ஒரு தோணி படித்து பார்க்கவும்.//

தற்பொழுது நான் படித்து கொண்டிருக்கும் நாவல் புயலிலே ஒரு தோணி. கடலுக்கு அப்பால் இதன் தொடர்ச்சியாய் வருகிறது..இவ்விரு நாவல்கள் குறித்து விரிவாய் பதிவு செய்ய உள்ளேன்!!

ramachandranusha(உஷா) said...

லேகா, நல்ல விஷ்ய்ம் செஞ்சிக்கிட்டு வரீங்க. வாழ்த்துக்கள். எல்லாரும் திட்டிய மோக முள்
படம் எனக்கு மிகப் பிடித்து இருந்தது. அம்பி, யமுனா கேரக்டர் சரியாய் இருந்தது. கதையை இப்படி சுருக்கினால்தான் படம் எடுக்க முடியும்.
மலர் மஞ்சம் நாவலில் கூட ஒரு விதவை பெண் கல்லூரியில் படிப்பதாய் வரும் இல்லையா?
எழுதப்பட்ட காலக்கட்டத்தைப் பார்க்க வேண்டும் மோகன் தாஸ். ஐம்பது வருடத்திற்கு முன்பு
இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. சி.நே. சி. மனிதர்கள், அதில் கெடுக்கப்பட்டவள், கல்யாணம்
செய்துக்கூடாது என்று ஜெயகாந்தன் சொல்வதாய் நினைக்கலாமா :-)

லேகா said...

நன்றி உஷா.
//ஐம்பது வருடத்திற்கு முன்பு
இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது.//

மிகச்சரியான வார்த்தைகள்..புதுமைபித்தனின் பல சிறுகதைகள் இது போலவே என்னை யோசிக்க வைத்திருக்கின்றது.சமுதாய நடைமுறைக்கு மாற்றாக கருத்தோ நிகழ்வோ நாவலில் இடம் பெற்றால் நிச்சயமாய் அதற்க்கு எதிர்மறை விமர்சனம் வரும்,

சிறுகதையோ நாவலோ படித்து ஸ்லாகிப்பதோடு நில்லாமல் நம்மை எவ்வகையில் பண்படுத்துகிறது என அறிய வேண்டும்.அவ்வகையில் ஜெ.கேயின் சில நேரங்களில் சில மனிதர்கள்,தி.ஜா வின் மோகமுள் எனக்கு எடுத்துரைப்பவை ஏராளம்.

NILAMUKILAN said...

நன்றி லேகா. இளையராஜாவின் இசை நிச்சயம் படத்தின் சிறப்பம்சம். அதுவும் படத்தில் வரும் 'சொல்லாயோ வாய் திறந்து' பாடல் கேட்டதும் மனதில் மென் சோகம் வந்து அப்பி கொள்ளும். ஆனால் நாவலை படித்து அனுபவித்த நான் அந்த அளவுக்கு படத்தை ரசிக்க வில்லை என்பதே உண்மை.

லேகா said...

அத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் அத்தனை அருமை...யேசுதாசின் குரலில் காலை விடியலை விவரிக்கும் பாடல் எனக்கு மிக பிடித்த ஒன்று..

"ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்
காகங்கள் கரைந்து புலர்கின்ற பொழுதில்
நெல் மூட்டை சுமந்து வில் வண்டி இழுக்கும் மாட்டின் மணியோசை மயக்கும்
இதமான இளம் காற்று மனதோடு..........."

மீண்டும் இதை நினைவு கூற செய்தமைக்கு நன்றி முகிலன்.

ramachandranusha(உஷா) said...

மோகமுள் பாடல்கள் இணையத்தில் கிடைக்கிறதா?

ramachandranusha(உஷா) said...

மோகமுள் பாடல்கள் இணையத்தில் கிடைக்கிறதா?

லேகா said...

தேடி சொல்கிறேன் உஷா...மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள்!!

லேகா said...

தேடி சொல்கிறேன் உஷா...மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள்!!

Unknown said...

சுதந்திரத்தை கொண்டாடுவோம்!

சுதந்திர தினநல்வாழ்த்துக்கள்!
http://mohideen44.blogspot.com

Mohandoss said...

//எழுதப்பட்ட காலக்கட்டத்தைப் பார்க்க வேண்டும் மோகன் தாஸ். ஐம்பது வருடத்திற்கு முன்பு
இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது.//

இப்போதைக்கு இல்லை ஐம்பது வருடங்களுக்கு முன் இருக்கும் வழக்கத்தையே வைத்து, ஜமுனா எந்த விதத்தில் பெண்ணியவாதியா காண்பிக்கப்படுறான்னு சொல்லுங்களேன் உஷா தெரிஞ்சிக்கிறேன்.

லேகா,

//எனக்கு பிடித்த ரசித்த நாவல் மாந்தர்களை குறிப்பிட்டுளேன்.//

இதில் எனக்குப் பிரச்சனையில்லை. தி.ஜாவின் பெண்ணியக் கதாப்பாத்திரங்கள் என்று சொல்லி ஜமுனாவைச் சொல்லியிருந்ததைத் தான் கேட்டேன் ஏன் என்று.

நீங்களும் தான் சொல்லுங்களேன், அவர் நாவல் எழுதியக் காலத்திலே கூட பெண்ணிய விஷயமாக ஜமுனா கதாப்பாத்திரம் செய்வது எது!?

லேகா said...

Hi Usha,

Check out below link for Mogamul Songs,

http://www.musicplug.in/songs.php?movieid=4162

லேகா said...

மோகமுள் நாயகி "யமுனா" , ஜமுனா அல்ல...
தி.ஜாவின் பெண் கதாபாத்திரங்கள் என சொல்வதற்கும் பெண்ணிய கதா பாத்திரங்கள் என சொல்வதற்கும் என்ன வித்யாசம்?? எழுத்து பிழையால் வந்த விவாதம் என நினைக்கின்றேன்.