Monday, April 5, 2010

ராஜேந்திரசோழன் கதைகள்

இதுவரை வாசித்திடாமல் போனதற்கு வருத்தம் அடைய செய்த தொகுப்பிது.மனித மனங்களின் சலனங்களை எதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை கொண்டு விவரிக்கின்றன இக்கதைகள்.எல்லா கதைகளிலும் ஒரு பேரமைதி..அது கதைமாந்தர்களின் மன குமுறல்களின் சத்தத்திற்கு மீறி வாசகனை கட்டி போடுகின்றது.அமுங்கிய குரலில் இத்தனை காத்திரமான கதைகளை மிக நேர்த்தியாய் புனைந்துள்ளார் ராஜேந்திரசோழன்.இங்கு கதைமாந்தர்களே பிரதானம்.....வர்ணனைகள்,பூச்சு வேலைகள் யாதும் அற்ற வாழ்வின் நுட்பமான தருணங்களின் சாட்சியமாய் இக்கதைகள்.

இல்லறம் தாண்டிய உறவுகள் தேடும் ஆண் பெண் இருவருக்குமான புத்தியின் எதார்த்த விவரிப்பாய் "கோணல் வடிவங்கள்" மற்றும் "புற்றிலுறையும் பாம்புகள்" கதைகள்."புற்றிலுறையும் பாம்புகள்",இக்கதையில் எதிர் வீட்டு இளைஞன் குறித்து பகல் முழுதும் சடசடத்து திரியும் மனைவியின் அலட்டல்களுக்கு...பொறுமை காத்து விட்டு கடைசியாய் அவன் "சும்மா பொண பொணன்னிக்னு........இப்பதான் ஒரேடியா காட்டிக்கறா என்னுமோ பெரிய பத்தினியாட்டம்" என கூறும் ஒற்றை வரியில் எத்தனை அர்த்தம்!!கோணல் வடிவங்கள் சிறுகதை வெளிவந்த சமயம் எதிர்கொண்ட இலக்கிய விமர்சனங்களை தனது பின்னுரையில் விரிவாய் எழுதி உள்ளார் ராஜேந்திரசோழன்.ஆண் பெண் உறவின் பொருட்டு தொடரும் பகடை ஆட்டங்கள் தான் எத்தனை வகை என எண்ணும் படியான கதைகள் இத்தொகுப்பில் அதிகம்.வண்ணதாசன் சிறுகதை ஒன்று,காதலிக்கு கொலுசு வாங்க சென்ற கடையில் தனது பரிசு கோப்பையை விற்று பணம் பெற கெஞ்சி கொண்டிருக்கும் சிறுவனை கண்ட நாயகன் கொள்ளும் மனநிலை..சங்கடம்,மாறு படும் தேவைகளின் பொருட்டு தனது காரியம் அற்பம் என உணரும் தருணம்.இங்கும் அதே போன்றதொரு மனநிலைக்கு தள்ளபடும் நாயகன்,"ரோமியோ ஜூலியட்"திரைப்படம் காண கால் கடுக்க திரைஅரங்கின் முன் பகல் பொழுதொன்றில் நின்றிருக்கும் நாயகனை,சாலையில் வித்தை காட்டும் சிறுமிகள் இருவர்,அம்மை தழும்பு முதியவர் ஆகிய மூவரின் உணர்ச்சியற்ற யாசகம் "ரோமியோவாது ஜூலியட்டாவது..." என அவ்விடம் இருந்து வெளியேற்றுகின்றது.

தொழில் செய்யும் இடத்தில தனதிடத்தை வேறொருவன் ஆக்கிரமித்து கொள்ளும் சமயம் ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றத்தை ஏமாற்றமும்,பொறாமையுமாய் "எதிரி" சிறுகதை வெகு இயல்பாய் சொல்லி செல்கின்றது.நினைவுகளின் நீட்சியாய் கனவுகள் தொடர்வதை காரிருள் தரும் இறுக்கமான மனநிலையை போல விரியும் கதை "இச்சை". "எதிர்பார்ப்புகள்" மற்றும் "சிதைவுகள்" இரண்டுமே ஒரே வகையான கதை களங்கள்.அடலசன்ட் பருவத்தில் ஏற்படும் ஈர்ப்புகள்..இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் இடையில் சிக்கி திணறும் வாலிப மனங்கள் குறித்தான இக்கதைகள் மிக மிக நுட்பமாய் செதுக்கப்பட்டுள்ளன.

இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை தாமே வகை பிரித்துள்ளார் ராஜேந்திரசோழன்.இவ்வளவு வெளிப்படையாக தமது படைப்புகள் குறித்த விமர்சனங்களை ஒரு எழுத்தாளர் முன்வைப்பது ஆச்சர்யமாய் உள்ளது.இலக்கியம் குறித்து பின்வருமாறு தனது உரையில் குறிப்பிடுகின்றார்,


"இலக்கியம் என்பது இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு அனுபவ வெளியீடாகவே இருக்கிறது.ஒரு படைப்பின் வாசகன் தன சொந்த அனுபவத்திற்கும் படைப்பாளனின் வெளிப்பாட்டு அனுபவத்திற்கும் ஊடேயே படைப்பினால் விளையும் அல்லது படைப்பை உற்பத்தி செய்யும் அனுபவத்தை அடைகின்றான்".இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஆகசிறந்தவையே!!"டெய்லர் கந்தசாமி",கடன்","கைக்கிளை" ஆகியவை குறிபிடத்தக்கவை.கொஞ்சம் மிகுதியாய் போய் இருந்தால் கூட வக்கிர தொனியிலான கதைகளாக மாறி இருக்க கூடியிருக்கும்..மாறாக முழுக்க முழுக்க கதை மாந்தர்களின் நேரடி உரையாடல்களில் வாசகனுக்கு யாவும் நேர்த்தியாய் தெரிவிக்கபட்டுள்ளது.தவிர்க்க கூடா வாசிப்பு!!


வெளியீடு - தமிழினி
விலை - 250ரூபாய்

19 comments:

ராம்ஜி_யாஹூ said...

நன்றிகள் பல லேகா.
இடையறாது தமிழுக்கும் பதிவுலகிற்கும் தொடர்ந்து நல்ல பல புத்தங்கங்களை, எழுத்துக்களை அறிமுகம் செய்து வரும் உங்களின் பணிக்கு, கோடானு கோடி நன்றிகள். தமிழ் சமூகம் என்றென்றும் கடன் (கடமை) பட்டுள்ளது.

அண்ணாமலையான் said...

உபயோகமான பதிவு

Unknown said...

புத்தக அறிமுகத்திற்கு நன்றி லேகா

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு.

Anonymous said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் லேகா. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். பாசாங்கற்ற எழுத்துக்களில் வாழ்வை விவரித்துச் செல்லும் மொழி அவருடையது.

ஏறகனவே படித்திருந்தாலும் பைத்தியக்காரன் எழுதிய அடர் கானகத்தின் ராட்சஷ தனிமரம் - இராசேந்திர சோழன் என்ற பதிவிற்குப் பின் சிலகதைகளை மீண்டும் வாசித்தேன். எதிர் வீட்டு இளைஞன் கதையைத்தான் அவரும் சிலாகித்து எழுதிஉள்ளார்.

Madumitha said...

ராஜேந்திரசோழனின் கதைகளை
தனித் தனியாகப் படித்ததுண்டு.
தொகுப்பாக வாசிக்கும் போதுதான்
படைப்பாளியின் முழு உணர்வும்
புரிகிறது.
நன்றி.
தேடி படிக்கிறேன்.

பாலாஜி சங்கர் said...

பகிர்ந்தமைக்கு நன்றி 
நல்ல பதிவு

Karthick said...

wow I was impressed with your blog, Enjoyed reading it please keep up the good work ...:)

லேகா said...

நன்றி ராம்ஜி

நன்றி அண்ணாமலையான்

நன்றி விட்டாலன்

நன்றி சரவணகுமார்

லேகா said...

நன்றி வேலன் :-)

சிவராமனின் பதிவை பகிர்ந்ததிற்கு நன்றி.

ராஜேந்திரசோழன் எழுத்து ரொம்ப பிடித்து போனது..எதார்த்த விவரிப்பில் வாழ்வின் நுண்ணிய தருணங்களை சொல்லியுள்ள விதம் மனநிலையை சோதித்து கொண்டே இருந்தது..எளிதில் மறக்ககூடிய வாசிப்பில்லை.

லேகா said...

நன்றி மதுமிதா

நன்றி பாலாஜி

நன்றி கார்த்திக்

Jegadeesh Kumar said...

அழியாச் சுடர்கள் என்ற வலைப்பூ அருமையாக இருக்கிறது. நீங்கள் பார்ப்பதுண்டா?
http://azhiyasudargal.blogspot.com/

clayhorse said...

தங்கள் தளத்துக்கு என்னுடைய 'தமிழ்ப் புத்தக மதிப்புரை' இணையத்தில் இணைப்பு கொடுத்துள்ளேன். அவகாசமிருந்தால் பார்த்துச் செல்லவும்.
http://baski-reviews.blogspot.com/

Haripandi Rengasamy said...

லேகா, புத்தகங்களை விட உங்கள் விவரிப்புகள் அழகாய் இருக்கின்றன. நீங்கள் இலக்கிய புத்தகங்கள் மட்டும் படிப்பதுண்டா இல்லை வரலாற்று நூல்களையும் படிப்பதுண்டா ... ஏனெனில் நான் வரலாற்று ரசிகன் ...

லேகா said...

ஜெகதீஷ்,

நன்றி.

அழியாச் சுடர்கள் வலைத்தளம் குறித்து மிக சமீபத்தில் தான் அறிந்தேன்.

லேகா said...

நன்றி பாஸ்கி :-)

@ஹரி,

வரலாற்று புத்தகங்கள் வாசித்ததில்லை.நல்ல நூல்களை பரிந்துரைங்க.நன்றி

சு.சிவக்குமார். said...

வண்ணதாசன் சிறுகதை ஒன்று,காதலிக்கு கொலுசு வாங்க சென்ற கடையில் தனது பரிசு கோப்பையை விற்று பணம் பெற கெஞ்சி கொண்டிருக்கும் சிறுவனை கண்ட நாயகன் கொள்ளும் மனநிலை..சங்கடம்,மாறு படும் தேவைகளின் பொருட்டு தனது காரியம் அற்பம் என உணரும் தருணம்’ -----இது அசோகமித்திரனுடய கதையில்லையா...கொஞ்சம் உறுதிப்படுத்த இயலுமா...

லேகா said...

சிவகுமார்,

வருகைக்கு நன்றி.

நான் குறிபிட்டுள்ள அந்த சிறுகதை "ஜோதியும் நானும் அந்த பையனும்" வண்ணதாசனுடையது தான்.

ஜெ.க. பாண்டியன் said...

வாழ்த்துக்கள் லேகா,

தமிழ் எழுத்தளர்களின் மீதும், படைப்புகளின் மீதும் எனக்கு எப்போதும் பிரமிப்பும், ஈர்ப்பும் உண்டு, ஒரு வாசகனாக. முதன்முறையாக, ஒரு சக தமிழ் வாசகராக உங்கள் மீது மிகுந்த மரியாதையும், பிரமிப்பையும் உண்டாக்கியிருகிறது , தங்களது வலைப்பதிப்பு.
தாங்கள், வாசித்தவற்றை பிறர் அறிய கொடுக்கும் உங்கள் எண்ணமும் அதற்காக தங்கள் எடுத்துக் கொண்ட முனைப்பும் பாராட்டுதற்கும், சக தமிழனாக நன்றிக்கும் உரித்தானது.
மேலும், வார்த்தைகளுடனான தங்கள் பரிச்சயமும், மொழிநடையும் (மொழி நடம் என்றே கூறலாம் ) ஒரு பாரிய வாசிப்பிற்கான பின்புலத்தை உணர்த்துகின்றன. என்னை பொறுத்த வரை, எனக்கு வாசிப்பிற்கான ஒரு புதிய தளத்தையே அடையாளம் காட்டி இருக்கிறிர்கள். தங்களின், இந்த பரந்த வாசிப்பின் பிரதிபலிப்பு கண்டிப்பாக எழுத்தாக உருமாறியிருக்கும், அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி,

ஜெ.கந்தசாமி பாண்டியன்.