Sunday, October 10, 2010

இயல்பின் அழகை மீட்டெடுக்கும் வண்ணதாசனின் கதையுலகம்....



"ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் பிடித்த பட்டுப்பூச்சியை,அதை பிடித்த நேரத்தின் சந்தோஷத்தோடு உங்கள் கையில் அல்லது என் மிக அருகில் எதிர்படுகிற மனிதனின் உள்ளங்கைக்கு மாற்றிவிட்டால் போதும்."

-- வண்ணதாசன்



தேர்ந்த ஓவியனின் சித்திரங்களை போலவே வண்ணதாசனின் கதை மாந்தர்களும். இவ்வோவியங்கள் கால ஓட்டத்தில் தொலைத்த உறவுகளை/நினைவுகளை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் சந்தேகமில்லை.ஓவியத்தில் ஒளிந்திருப்பது தொலைத்த நட்பாகவோ.. மறக்கவியலா காதலியாகவோ....கண்டதும் கைபிடித்து கொள்ளும்,எங்கோ தூரத்து சிறுநகரில் வசிக்கும் சித்தப்பாவாகவோ,மதினியாகவோ இருக்கலாம். நினைவில் புதைந்து கிடந்த சில முகங்களை மீண்டும் காண வேண்டும் என்கிற ஆவலை கிளறிவிட்ட எதார்த்த ஓவியங்கள் தனுவும், சின்னுவும்,லீலாக்காவும்,சிறு மலரும்....கடல் மணலில் கால் புதைத்து சிப்பிகளை தேடி அலையும் சிறுமியின் மனநிலையில் வந்து விடுகின்றது வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் பொழுது.


வண்ணதாசனின் சமீபத்திய தொகுப்பான "பெய்தலும் ஓய்தலும்" வாசித்து முடித்ததும்,"சின்னு முதல் சின்னு வரை" வாசிக்க வேண்டும் போல இருந்தது.மிகப்பிடித்த குறுநாவல் அது.சின்னு குறித்து மிகவும் குறைவாகவே தெரிவிக்கபட்டிருக்கும்,முற்று பெறாத கவிதையை தந்து இஷ்ட சொற்கள் கொண்டு முழுமைபடுத்திக்கொள் என விட்டுவிடுவது போல.இந்நாவல் பேசுவதெல்லாம் குறுகி வரும் மனித மனப்பான்மைகள் குறித்து!கணவனை இழந்த சின்னு,அவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டிருப்பதை,சகிக்க முடியாத குற்றமென கொள்ளும் பொதுப்பார்வையை முன்வைத்து பின்னபட்டிருக்கும் கதை.நெற்றியில் விழும் சுருள் முடியை ஒதுக்கியபடி சின்னு அழகாய் சிரித்து கொண்டிருந்தாள் என்பதான முதல் வர்ணனையே இப்போதும் சின்னு குறித்து யோசித்தால் நினைவிற்கு வருகின்றது...!

இந்நாவலை முதல்முதல் வாசித்தது ஒரு வேனிற்கால பகலில்.பொதுவான கற்பிதங்களுக்கு பழகி போய்விட்ட மனிதமனங்கள் அத்தகைய பொழுதொன்றின் புழுக்கத்திற்கு ஒப்பானவையே.

'நகரத்திற்கு வெளியே கொஞ்சம் சொர்க்கம்' சிறுகதையின் நாயகன் தாஸ்,அலுவலகத்தில் மின்விசிறி கொஞ்ச நேரம் இயங்காவிட்டாலும் கூப்பாடு போடும் தாஸ் குறித்த தொடர் விவரிப்புகள் சுவாரஸ்யத்தை மீறிய எதார்த்தங்கள்...நைந்து போன விசிறியோடு இரவு வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் தாஸ் போன்றவர்களை நிச்சயம் ஒருமுறையேனும் சந்தித்திராமல் இருந்திருக்க முடியாது.வீட்டில் நிலைமை தலைகீழாய் இருக்க,பொது இடங்களில் வேறுவிதமாய் வெளிக்காட்டி கொள்ளும் இவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல மாறாக இயல்பே அதுவென சிறு புன்னகையோடு கடந்து செல்ல வேண்டியவர்கள்.

தனுவை குறித்து இன்னும் என்ன பேச?!!மௌனியாய் இருந்து கொண்டே அவனுள் காதல் வளர்க்கும் அந்த சிறுபெண்ணை குறித்து யோசித்தால்..மழை நனைத்த சாலையும்..வாதாம் மரங்களுமே முன்வருகின்றன."தனியாகி..தனுவாகி.." என அவனோடு சேர்ந்து கரைந்து போக செய்பவள்.நடுகையில் வரும் அந்த கிழவர்,விசித்திர கதைகள் சொல்லும் கதைசொல்லியை போன்றதொரு பாத்திர படைப்பு.அவரின் தர்க்கங்கள்.. செடிகள் மீதான தீராக்காதல்..."ஒண்ணை பிடிங்கினால் ஒண்ணை நடணும் .." என கூறும் இடத்தில் பிடுங்கி எறியப்பட்ட துளசி வாசனை.


"கூடு விட்டு" கதையில் வரும் லீலாக்கா, "அதெப்படி மறக்கும்,நீங்க சொன்னதை ஒரு சொட்டு விடாமல் உரை ஊற்றியில்லா வச்சிருக்கேன்" என்கிறாள் ஒரு இடத்தில்.."கையில் கோலப்பொடி இருக்கு,இல்லாட்டி உன் வண்டி ஹார்ன் சத்தத்தை பந்தை பிடிப்பது போல ரெண்டு கையிலயும் பிடித்து இருப்பேன்" என்கிறாள் வேறொரு சந்தர்ப்பத்தில்."கோபம்னா அப்படி ஒரு கோபம் எனக்கு..சில்லு சில்லா தெரிச்சு பட்டாசலைல கிடக்கு.நீ வந்திருந்தா உன் காலில் பூந்திருக்கும்" என்பவளை எதனோடு ஒப்பிடுவது..


"இந்த சாதாரண வாழ்வின் மத்தியில் காதல் தான் சில
தேவதை கதைகளை சொல்லி செல்கிறது"


"ஒரு முயல் குட்டி இரண்டு தேநீர் கோப்பைகள்" கதையில் வரும் சிறுமலர் அப்படி ஒரு தேவதையே.நட்பின் எல்லை எதுவென தீர்மானிக்க முடியாத நிலையில் நிகழும் சங்கடங்களை மெலிதாக அணுகி இருக்கும் இக்கதை கோபியின் சிறுகதை ஒன்றை நினைவூட்டியது.'உப்பு கரிக்கிற சிறகுகள்' கதையில் வரும் செல்வி,எல்லா கடல் மீதும் பறந்து விட்டு உப்பு கரிக்கும் சிறகோடு ஓய்வெடுக்க வரும் பறவையோடு தன்னை ஒப்பிட்டு கொள்கின்றாள்.சபிக்கப்பட்ட காதலி தேவதையாய் உருமாறும் கதை.

வண்ணதாசன் கைமாற்றி விட்டிருக்கும் பட்டுப்பூச்சிகள் இன்னும் எத்தனையோ..பொலிவற்ற நகர ஓட்டத்தின்,பதற்றம் நிரம்பிய முகங்களுக்கு மத்தியில் இந்த பட்டுபூச்சிகளின் தேவை அவசியமானது என்பதில் சந்தேகமில்லை..


சின்னு முதல் சின்னு வரை - விமலன் புக்ஸ் வெளியீடு(1991 )
வண்ணதாசன் கதைகள் - புதுமைப்பித்தன் பதிப்பகம்
பெய்தலும் ஓய்தலும் - சந்தியா பதிப்பகம்

12 comments:

Unknown said...

சரளமான நடை லேகா.
அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

thiyaa said...

உங்களின் பயணம் தொடரட்டும்

Jegadeesh Kumar said...

வண்ணதாசன் குறித்த அழகான பதிவு. பூமேல் நடந்து போகிற மாதிரி மென்மையானது அவர் எழுத்து. அவரது கல்யாண்ஜி என்கிற கவிஞர் அவதாரமும் எனக்கு மிகவும் உவப்பானது.
அவரது கிருஷ்ணன் வைத்த வீட்டில் சிறுகதை குறித்து நான் இப்படி எழுதியிருக்கிறேன்.
http://jekay2ab.blogspot.com/2010/04/blog-post_21.html

பகிர்வுக்கு நன்றி.

எஸ்.கே said...

உணர்வுபூர்வமான பதிவு! நன்றி!

R. Gopi said...

படிச்சுடுவோம்.

அப்புறம் நான் தஞ்சை பிரகாஷ் கதைகள் பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கேன்.

சமயம் கிடைக்கும்போது படிக்கவும்.

http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_21.html

பனித்துளி சங்கர் said...

நேர்த்தியான எழுத்து நடையில் ரசிக்கவைக்கும் வார்த்தை தொகுப்புகள் அருமை . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவான் இந்த பனித்துளி சங்கர்

ராம்ஜி_யாஹூ said...

பிடித்த எழுத்தாளர் பற்றி தேர்ந்த வாசகர் எழுதும் பொழுது படிக்க என்ன ஒரு சுவை.

வண்ணதாசனை, வண்ண நிலவனை தீபாவளிக்கு முன்பாக சென்று பார்க்க / புகைப்படம் எடுத்து கொள்ள ஆசையாக உள்ளது.

பதிவை படித்ததும் நாளையே நெல்லை எக்ஸ்பிரஸ் புடிக்க ஆசை ஏற்படுகிறது.

Unknown said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

கயல் said...

வண்ணதாசனை உங்களிடமிருந்து படிக்கும் போது மிகவும் மகிழ்வாயிருக்கிறது.

நிலாமகள் said...

பிடித்த எழுத்தாளர் பற்றி தேர்ந்த வாசகர் எழுதும் பொழுது படிக்க என்ன ஒரு சுவை!!

லேகா said...

நன்றி செல்வராஜ்

நன்றி தியா

நன்றி ஜெகதீஷ்

நன்றி எஸ்.கே

லேகா said...

நன்றி கோபி.தஞ்சை பிரகாஷ் குறித்த அறிமுகத்திற்கு நன்றி.

நன்றி சங்கர்

நன்றி தேவராஜ்

நன்றி கயல்

நன்றி நிலாமகள்

நன்றி ராம்ஜி.