Monday, September 27, 2010

அகிராவின் 'DREAMS'

கனவுகளில் மட்டுமே எல்லாமும் சாத்தியம்.சமீபத்தில் ஒரு கனவு,கலைந்த மேகங்களுக்குள் ராட்சச பரமபத கட்டங்கள்,அதன் உள்ளிருந்து மெதுவாய் வெளி வரும் நிலா...பொதுவாய் கனவுகள் வருவது அரிது,அப்படியே வந்தாலும் சட்டென நினைவை விட்டு உதிர்ந்து விடும்.இது அப்படி அல்ல நீண்ட நேரம் கனவை குறித்து யோசித்து கொண்டிருந்தேன்.கனவுகள் தோற்றுவிற்கும் புதிர்களை விடுவிக்க எல்லா சமயமும் முடிவதில்லை.

இத்திரைப்படத்தை அகிரா தனது கனவுகளின் தொகுப்பாய் குறிப்பிடுகிறார்.எட்டு கனவுகளுக்கு(கதைகளுக்கு) வெகு நேர்த்தியாக வண்ணம் தீட்டி உள்ளார் அதே சமயம் அதிக பொறுப்புடனும்.உலகம் முழுதும் அங்கீகரிக்கபட்ட ஒரு இயக்குனருக்கு இருக்க வேண்டிய பொறுப்பை மிக சரியாய் இத்திரைப்படத்தில் அகிரா வெளிகாட்டி உள்ளார் என தோன்றியது.அழிந்து வரும் இயற்கை வளங்களை குறித்தும்,போரினால் ஏற்படக்கூடும் விபரீதங்கள் குறித்தும்,அணுசக்தியின் அபாயம் குறித்தும் பேசும் கதைகள் இவை.

வண்ண சிதறல்களாய் பெரும்பாலான காட்சிகள்.பூக்களும்,மரங்களும்,ஓவியங்களும் கூட நம்முடன் உரையாடுவது போன்ற தோற்றம். பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு அர்த்தம் கூட்டுகின்றது."Sunshine Through The Rain ",வெயிலோடு மழை பெய்தால் நரிக்கு கல்யாணம் என்னும் நாடோடிக்கதை கதை இங்கும் உள்ளதே.அப்படி ஒரு மழை நாளோடு தொடங்குகின்றது இக்கதை..மழையை வேடிக்கை பார்க்கும் சிறுவனை அவனது தாய், வெளியே சென்று நரியின் கண்ணில் அகப்பட்டால் அது கோவம் கொண்டு கொன்று விடும் என எச்சரித்து செல்கின்றாள்.அவள் பேச்சை கேளாமல் காட்டுக்குள் சென்று ஒளிந்திருந்து நரியின் திருமண கொண்டாட்டத்தை பார்க்கின்றான் சிறுவன்.பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் நரிகள் திருமண கோலாகலம் படமாக்கபட்டுள்ள விதம் அருமை.அவன் எதிர்பாரா சமயம் அவை அவனை கண்டு கொள்ள வீட்டிற்கு ஓடி வரும் சிறுவனிடம்.நரிகள் கோபம் கொண்டு அவனை தேடி வந்ததாகவும்,அவனை அவனே கொன்று கொள்ள கத்தியை கொடுத்து சென்றதாகவும் சொல்லி..மேலும் அவற்றின் கோபத்தை தணிக்க நேரில் சென்று மன்னிப்பு கோரி வருமாறு அவனை திருப்பி அனுப்புகிறாள் தாய்.....நரிகள் இருப்பிடம் தேடி ,அடர்ந்த மலர் தோட்டத்தில் வானவில்லிற்கு கீழ் அச்சிறுவன் நிற்பதோடு கனவு முடிகின்றது.


"The Peach Orchad ",பீச் மரங்கள் பூத்து குலுங்கும் பருவத்தில் கொண்டாடப்படும் பொம்மை திருவிழா நாளில்,சிறுவன் ஒருவன் தன் வீட்டில் இருந்து வெளியேறி ஓடும் அறிமுகமற்ற சிறுமியை பின்தொடர்ந்து செல்கின்றான்..அவனுக்காக அங்கு காத்திருப்பவர்கள் பீச் மரணத்தின் ஆத்மாக்கள், அவன் வீட்டு பொம்மைகளின் சாயலில்..அப்பகுதியின் பீச் மரங்கள் அழிந்ததிற்கு அவன் குடும்பமே பிரதான காரணம் எனக் கூறி அவனை தண்டிக்க போவதாய் அவை சொல்ல..சிறுவன் அழுது கொண்டே பீச் மரங்களின் மீதான தனது பிரியத்தை கூறுகின்றான்.அதில் நெகிழ்ந்து போய் அந்த ஆத்மாக்கள் அற்புத நடனத்தோடு பூத்து குலுங்கும் பீச் மரங்களை கடைசியாய் பார்க்க வாய்ப்பளிக்கின்றன...அழிந்து வரும் இயற்கை வளங்கள் குறித்து மரங்களின் மூலமே உணர்துவதான இக்கனவு நேர்த்தியான வர்ணங்களினால் அற்புதமாக காட்சியமைக்கபட்டுள்ளது.இக்கனவிற்கான வண்ணம் பீச்.

"The Blizzard ",இக்கனவிற்கான வண்ணம் வெள்ளை.அடர் பணியில் சிக்கி தவிக்கும் நான்கு மலையேற்ற வீரர்கள் பணி புயலில் சிக்கி இருப்பிடம் கண்டு கொள்ள முடியாது கொஞ்ச கொஞ்சமாய் தங்களின் நம்பிக்கையை இழந்து,மரணத்திற்கு தயாராகும் பொழுதில் அக்குழுவின் தலைவன் எங்கிருந்தோ வரும் தேவதையின் வதையில் சிக்கி பின்பு மயக்கத்தில் இருந்து தெளிவடைந்து பின் தங்களின் இருப்பிடம் மிக அருகில் இருப்பதை கண்டு கொள்வதான இக்கனவு கொஞ்சம் குழப்பம் ஏற்படுத்தியது."The Tunnel ", போரில் இறந்த ராணுவ வீரர்கள் உயிர்பெற்று வந்தால்..அவர்களின் கேள்விகளுக்கு விடை தேட முயலும் கனவு..தங்களின் குடும்பம் குறித்த நிறைத்த கவலையும்,மேலும் தங்களின் மரணம் போலியானது என்றும் நம்பி கொண்டிருக்கும் தனது படைவீரர்களின் ஆத்மாக்களோடு உரையாடும் படைத்தளபதி..அவற்றை சமாதானம் செய்து,போரின் மரணம் ஏற்பட்டதிற்கு மன்னிப்பும் கேட்டு விடைபெறுகின்றான்.இக்கனவிற்கான வண்ணம் நீலம்."The Crow",ஓவியங்கள் காட்சியாய் மாறுவதும்,காட்சிகள் ஓவியமாய் உருப்பெறுவதும்...நாயகன் ஓவியங்களுக்குள்ளாகவே நடமாடுவதும் என இக்கனவு தோற்றுவித்த மாய வலையில் இருந்து வெளிவர நேரம் பிடித்தது.Visual Treat என்பதற்கு முழுமையான அர்த்தத்தை இதில் உணரலாம்.வண்ணங்கள் கொண்டு கண்ணிறை காட்சிகளை சாத்தியபடுத்தி இருக்கின்றார் இயக்குனர்.வளர்ந்து வரும் ஓவியன் தனது அபிமான ஓவியரை ஓவியத்திலே தேடத் தொடங்கும் பயணம் வண்ணங்களின் உதவியுடன் அதி சுவாரசியமாகின்றது."Mount Fuji In Red" ,மிகப்பெரும் அணுசக்தி கூடம் ஒன்று வெடித்து சிதறினால் ஏற்படும் விளைவுகள் எத்தனை கொடூரமானது என்பதை ஓங்கிய குரலில் முன்வைக்கும் கனவிது.மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அவனுக்கே எதிரியாய் திரும்பும் அபாயம் குறித்த எச்சரிக்கையை முன்வைக்கும் இக்கனவிற்கான வண்ணம் சிகப்பு.

"The Weeping Demon ",ஆள்அரவம் அற்ற தரித்திர பூமி ஒன்றில் உலவும் நாயகன்,தலையில் ஒற்றை கொம்புடைய விசித்திர மனிதனை சந்திக்கின்றான்.அணுசக்தி பயன்பாட்டால் மரங்களும்,பூக்களும் முற்றிலுமாய் அழிந்து தங்களின் இனமும் பசியால் ஓலமிட்டு அலைவதை அழுகையுடன் பகிர்ந்து கொள்ளும் அம்மனிதனின் அழுகுரல் மோசமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் மனித குலத்திற்கான அழுத்தமான எச்சரிக்கை.இக்கனவிற்கான வண்ணம் கருப்பு.

"Village Of The Water Mills ",அழிந்து வரும் வளங்கள் குறித்த ஏக்கங்களையும்,அறிவியலின் பிடியில் சிக்கி அல்லலுரும் சமூகத்தின் மீதான கோபத்தையும் தாங்கி வந்த பிற கனவுகளை போலல்லாமல்,முற்றிலுமாய் இயற்கையை சார்ந்து இருக்கும் மாதிரி கிராமம் ஒன்றை பற்றியது இக்கனவு. பச்சை தாவரங்களும்..தண்ணீர் சலசலக்கும் ஓடையும்..நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்களும்,சின்ன சின்ன நம்பிக்கைகளும் என அந்த கிராமம் குறித்த செய்திகள் யாவும் ஒரு வயதானவரின் வாக்குமூலமாக வருகின்றது.(வயோதிக)மரணத்தை கூட அம்மக்கள் துக்கம் இன்றி நல்ல முடிவென்று எண்ணி கொண்டாடும் மனநிலை கொண்டிருப்பதாக காட்டி இருப்பது நேர்த்தி.பிற கனவுகளில் முன்னிறுத்தப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் இக்கனவில் விடை உள்ளது.

19 comments:

எஸ்.கே said...

மீண்டும் ஒரு சிறப்பான விமர்சனம் நன்றி!

thiyaa said...

அருமையான விமர்சனப் பதிவு

கார்த்திகைப் பாண்டியன் said...

“பீச் ஆர்ச்சர்ட்” படிக்கும்போதெ கொள்ளை கொள்கிறது - படம் பார்க்கும் ஆசை அதிகமாகி இருக்கிறது.. “ரான்” மற்றும் இந்தப்படம்.. சீக்கிரம் பார்க்க வேண்டும்..

Unknown said...

ரொம்ப நாள் முன்னாடி பார்த்த படம் லேகா இது, இவ்வளவு புரிந்துகொண்டேனா தெரியவில்லை. டிவிடி இருக்கு மறுபடி பார்க்கனும் போல இருக்கு, குறிப்பா நரி கல்யாணம்....... நன்றி

இனியாள் said...

நல்ல பகிர்வு லேகா, நீங்கள் தந்த இரவு வெகு அருமையாய் இருந்தது. அறிமுகத்திற்கு நன்றி. ஜெயமோகனின் வலை தளத்தை பார்வை இட்டு இருப்பினும் அவரின் எந்த புத்தகத்தையும் வாசித்தது இல்லை.

நர்சிம் said...

அறிமுகத்திற்கும் மிக நேர்த்தியான வரிகளுக்கும் நன்றி.

முதல் வரி எவ்வளவு உண்மை. கனவில்தான் எல்லாம் சாத்தியம்.

//அழிந்து வரும் வளங்கள் குறித்த ஏக்கங்களையும்,அறிவியலின் பிடியில் சிக்கி அல்லலுரும் சமூகத்தின் மீதான கோபத்தையும் தாங்கி வந்த பிற கனவுகளை போலல்லாமல்,முற்றிலுமாய் இயற்கையை சார்ந்து இருக்கும் மாதிரி கிராமம் ஒன்றை பற்றியது இக்கனவு//

மிகத் தேர்ந்த வார்த்தைகளைக் கொண்ட திரைப்பார்வை.

நன்றி

லேகா said...

நன்றி எஸ்.கே

நன்றி தியா

லேகா said...

நன்றி கார்த்திகை பாண்டியன். அகிராவின் திரைப்படங்கள் வெகு சமீபத்தில் தான் எனக்கு அறிமுகம்."Ran ","Seven Samuraai " ,"Throne Of blood " திரைப்படங்கள் பார்க்க வேண்டிய பட்டியலில் உண்டு.

நன்றி முரளி.

லேகா said...

இனியாள்,

இரவு கிறுக்கு சுலபத்தில் விடாது :-) .ஏற்கனவே சொன்னது போல..சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த நாவல் அது ..இரவு குறித்த வர்ணனைகளுக்காக மட்டுமே மீண்டும் ஒரு முறை வாசித்தேன். யட்சி,நீலி,இரவுலாவிகள்
.........என இனிதாய் கழிந்தன சில நாட்கள் :-)

ஜெமோவின் குறுநாவல் தொகுப்பு படிங்க.முழுமையான வாசிப்பனுபவமாக இருக்கும்.

லேகா said...

நன்றி நர்சிம்..மகிழ்ச்சி :-)

Jegadeesh Kumar said...

உங்கள் ராஷோமோன் பதிவைப் படித்து அத்திரைப்படம் பார்த்தேன். என் மனதில் ஓடியதை எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் பார்க்கவும்.

http://jekay2ab.blogspot.com/2010/09/blog-post_30.html

tt said...

பகிர்வுக்கு நன்றி லேகா.. என்னைப் பலமுறை பார்க்க வைத்த படம் இது.. குரோசவாவின் நூறாவது பிறந்த நாளையொட்டி நான் பார்த்து ரசித்த அவருடைய படங்களை என்னுடைய தளத்தில் பகிர்ந்திருக்கிறேன்..

http://tamizh-koodu.blogspot.com/2010/03/100.html

லேகா said...

நன்றி ஜெகதீஷ்குமார்.உங்கள் பார்வையில் படம் குறித்து வேறு சில புரிதல்கள் கிடைத்தது.

லேகா said...

தமிழ்,

அருமை.அகிராவின் திரைப்படங்கள் குறித்த உங்களின் எல்லா பதிவுகளை வாசித்துவிட்டேன்.பார்க்க வேண்டிய படங்களை குறித்து கொண்டேன்.

உங்கள் இணைய அறிமுகம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி:-)

tt said...

புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்த உங்களின் தேர்ந்த விமரிசனங்கள் தான் என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளத் தூண்டியது.. மிக்க மகிழ்ச்சி !

Prabhakar said...

I recently only saw Dreams. It was an entirely different cinematic experience. good post.

ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

ரவி said...

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

லேகா said...

Thanks Ravi :)