Monday, May 25, 2009

வண்ணதாசன் சிறுகதைகள்....

வண்ணதாசன்,தொடர்ந்து என்னை தமிழ் இலக்கியம் படிக்க ஆவலை தூண்டிய எழுத்துக்கள் இவருடையது.தமிழ் இலக்கிய உலகில் சத்தமாய் தம் படைப்புக்களை பதிவு செய்ததில் ஜெயகாந்தன்,புதுமைப்பித்தனின்,சு.ரா ஒரு வகை எனில்..தி.ஜா,கி.ரா, வண்ணதாசன்,வண்ணநிலவன்,எஸ்.ராவின் எழுத்துக்கள் அமுங்கிய குரலில் வாழ்க்கை எதார்த்தத்தை பதிவு செய்பவை.குழப்பமான மனநிலையிலோ,வெறுமையான பொழுதுகளிலோ எனது முதல் தேர்வு இவரின் சிறுகதைகள்.கூச்சலும்,எந்திரதனமும் பெருகிவரும் இந்நாட்களில் அமைதியான உலகிற்கான தேவை அதிகரித்து வருகின்றது.அந்த வகை சூழலுக்குள் வாசகனை கூட்டி செல்ல வல்லவை வண்ணதாசனின் கதைகள்.




வாதாம் மரங்கள் குறித்த முதல் அறிமுகம் வண்ணதாசனின் கதைகள் மூலமே எனக்கு கிடைத்தது.வாதாம் மரம் குறித்து ஆச்சர்யத்துடன் வீட்டில் விசாரித்தது நினைவிற்கு வருகின்றது.சில வர்ணிப்புகள் பார்த்திடா பொருட்களின் மீதான ஆவலை அதிகரிக்க செய்பவை."ஒரு வாதாம் இலை ஒரு நீலச்சிறகு" சிறுகதை கணவன் மனைவிக்கு இடையேயான அன்யோனியத்தை அழகாய் சித்தரிக்கின்றது.குற்றாலம் - அருவிகளின் இரைச்சலும்,மனதை வருடும் சாரலும்,குளிர் தென்றலோடு எண்ணெய் பிசுபிசுப்பு மணமும் கலந்து ஒருவித சௌதர்யத்தை ஏந்தி நிற்கும் ஊர்."ஒரு அருவியும் மூன்று சிரிப்பும்" - சிறுகதை குற்றால அருவி ஒன்றின் அருகில் எண்ணெய் கடை வைத்திருப்பவரை பற்றிய கதை.நித்தம் கடையில் முகம் சுளித்து வியாபாரம் செய்யும் அவர் சிறு நஷ்டத்திற்கு பிறகு அருவியில் குளிக்கும் சுகத்தை உணர்ந்து கடையை சாத்திவிட்டு புறப்படுவதை நகைச்சுவை கூட்டி சொல்லும் கதை.

"சொர்க்கத்திற்கு வெளியே கொஞ்சம் நரகம்",அலுவலகத்திலும்,நண்பர்களிடத்திலும் பகட்டாய் சுகவாசி போல பேசி திரியும் சிலரின் வீட்டு நிலை மோசமாய் இருப்பதை பேச்சில் அறிய முடியாது.இக்கதை நாயகன் தாஸ் அதுபோலவே பகட்டு பேர்வழி.அலுவலகத்தில் எப்போதும் சுத்தம் குறித்து பேசிக்கொண்டும்,மின்சாரம் இல்லாத நேரங்களில் அலுத்து கொள்ளும் தாஸ் இரவில் வீட்டில் ஆடு,மாடுகளுக்கு மத்தியில் உறங்கி போகும் காட்சிகளின் விவரிப்புகள் சிரிப்பை வரவைப்பவை."பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக",கதையின் சாரத்தை வெகு அழகாய் சொல்லும் தலைப்பு.வேலை தேடி கொண்டிருக்கும் இளைஞன் ஒருவனின் மனநிலை பண்டிகை நாளில் எப்படி இருக்கும்?தாழ்வு மனப்பான்மையும்,கொஞ்ச குற்ற உணர்ச்சியும் சேர்ந்து இயல்பை மாற்றி பண்டிகை குதூகுலத்தில் இருந்து தனித்து விட செய்வதை வெகு அழகாய் சொல்லி இருக்கும் கதை.

"சில பழைய பாடல்கள்", இந்த சிறுகதை கோபியின் இடாகினி பேய்கள் தொகுப்பில் ஒரு பகுதியை நினைவுபடுத்தியது.கோபி தான் நட்பு கொண்டிருந்த அலுவலக தோழி குறித்து விரிவாய் எழுதி இருப்பார்,அத்தொகுப்பில். ஆண் பெண் நட்புறவு இன்றைய அலுவலக சூழலில் வெகு இயல்பான ஒன்று.80 களில் இது சாத்தியம் இல்லை.விதவையான அலுவலக தோழியுடனான நாயகனின் நட்பை சொல்லும் கதை இது.."அவனுடைய நதி அவளுடைய ஓடை",சின்ன சின்ன காரியங்களில் கூட அழகை புகுத்தி சிறுகதையாய் நீட்டிக்கும் திறன் வண்ணதாசனுக்கு மட்டுமே உண்டு.முன்பெல்லாம் சாயுங்காலத்தில் பெண்கள் கூடி பேச அமர்ந்து விடுவார்கள்,அதை மையபடுத்திய கதை.தொலைக்காட்சியின் வரவால் அந்த காட்சிகள் இன்றைய சூழலில் சாத்தியம் இல்லை.

இந்த தொகுப்பில் வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளும் அடக்கம். இங்கு குறிப்பிட்டுள்ள சிறுகதைகளில் என்னை கவர்ந்தது அவற்றின் தலைப்புகள்.தலைப்புகள் தேர்வில் கல்யாண்ஜி தெரிகிறார்.வண்ணதாசனின் எழுத்து குறித்து பொதுவான சில எதிர்வினைகள் உண்டு.என்பதுகளிலேயே பின் தங்கிய எழுத்து என்றும்,ஒரு கட்டத்திற்கு மேல் அயர்ச்சி தருபவை என்றும்.ஏனோ அதை நான் எப்பொழுதும் உணர்ததில்லை. சொல்ல போனால் 80 களில் மீதான ஏக்கமும்,பிரியமும் அதிகரிக்க செய்தது ராஜாவின் இசையும்,வண்ணதாசனின் கதைகளுமே!!

வண்ணதாசன் சிறுகதைகள் குறித்த எனது முந்தைய பதிவு

வெளியீடு - புதுமைபித்தன் பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

38 comments:

Unknown said...

'வண்ணதாசன் சிறுகதைகள்' இது வரை நான் படித்ததில்லை. கி.ரா, எஸ்.ராவின் இவர்களுடைய எழுத்து போல் இருக்குமென்று ஆவலைத் தூண்டிவிட்டீர்கள்.

Venkatesh Kumaravel said...

வண்ணதாசனின் சிறுகதை ஒன்று ப்ளஸ் டூ-வில் துணைப்பாடப் பகுதியில் வந்தது நினைவிருக்கிறது. அவரே கல்யாண்ஜி என்ற பெயரில் எழுதும் கவிதைகள் அருமை! 65 ரூபாய் தொகுப்பு தான்... குடுத்த காசுக்கு மேலே அந்த புத்தகம்... சரியான படைப்பு!

லேகா said...

வருகைக்கு நன்றி கிருஷ்ணன் பிரபு.

வண்ணதாசனின் எழுது கி.ரா வை போலவோ,எஸ்.ரா வை போலவோ இருக்கும் என்ன சொல்லமுடியாது.இவரின் நடை வறுமையையும் கலைநயத்துடன் விவரிப்பது.

லேகா said...

வருகைக்கு நன்றி வெங்கி ராஜா,

//வண்ணதாசனின் சிறுகதை ஒன்று ப்ளஸ் டூ-வில் துணைப்பாடப் பகுதியில் வந்தது நினைவிருக்கிறது//

அப்படியா??ஆச்சர்யமாய் உள்ளது.நமது பாடத்திட்டங்கள் ரொம்ப மோசம்.சிறந்த இலக்கியம் மற்றும் எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம் கூட தமிழ் பாடங்களில் கிடையாது.கேரள தேசத்தில் இருந்து கற்று கொள்ளவேண்டிய பாடம் இது.

அங்கு தீவிர இலக்கிய வாசிப்பு அற்றவர்கள் கூட பஷீர்,தகழி குறித்தும் அவர்களின் படைப்புகள் குறித்தும் பரிடிச்சயம் கொண்டுள்ளனர்.காரணம் பாட திட்டத்தில் சிறந்த இலக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே.

சென்ஷி said...

//வண்ணதாசனின் எழுது கி.ரா வை போலவோ,எஸ்.ரா வை போலவோ இருக்கும் என்ன சொல்லமுடியாது.இவரின் நடை வறுமையையும் கலைநயத்துடன் விவரிப்பது.//

உண்மைதான். இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் பிரதிபலிப்பவை நடுத்தரவர்க்கத்தினரின் நிறைவேறாத ஆசைகளையும் அதன் சூழல்களையும்தான்.

அவரது எஸ்தர் கதை என்னால் உதறித்தள்ளவியலாத ஒரு சுமையை ஏற்பத்தியிருந்தது.

பகிர்விற்கு நன்றி லேகா.

சென்ஷி said...

//
அப்படியா??ஆச்சர்யமாய் உள்ளது.நமது பாடத்திட்டங்கள் ரொம்ப மோசம்.சிறந்த இலக்கியம் மற்றும் எழுத்தாளர்கள் குறித்த அறிமுகம் கூட தமிழ் பாடங்களில் கிடையாது.கேரள தேசத்தில் இருந்து கற்று கொள்ளவேண்டிய பாடம் இது.

அங்கு தீவிர இலக்கிய வாசிப்பு அற்றவர்கள் கூட பஷீர்,தகழி குறித்தும் அவர்களின் படைப்புகள் குறித்தும் பரிடிச்சயம் கொண்டுள்ளனர்.காரணம் பாட திட்டத்தில் சிறந்த இலக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே.//

பள்ளிக்காலங்களில் கிடைக்கும் துணைப்பாட நூல் வழியாக பல நல்ல கதைகளை இலக்கியவாதிகளால் ஆராதிக்கப்படுபவைகளை, அறியப்படாத வயதில் வாசித்ததுண்டு ...

NILAMUKILAN said...

தமிழில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் வண்ணதாசனும் ஒருவர். அவருடைய எழுத்துக்கள், மயிலிறகு வைத்து வருடுவது போன்ற ஒரு சுகானுபவம் தர கூடியது. நான் ரசித்து படிக்கும் சாருநிவேதிதா, வண்ணதாசனையும் நாஞ்சில் நாடனையும் எப்படித்தான் படிக்கிறார்களோ என கூறிஇருந்தது அதிர்ச்சி அளித்தது. இங்கு சாருவை பற்றி கூற கூடாதது தான் எனினும் வண்ணதாசனின் படைப்புகளை பற்றி படிக்கும்போது எனக்கு நினைவுக்கு வந்தது.

nanri

லேகா said...

வருகைகும் பகிர்விற்கும் நன்றி சென்ஷி.

எனது பள்ளி காலத்தில் துணைபாடத்தில் படித்தவற்றுள் கு.அழகிரிசாமியின் "ராஜா வந்திருகின்றார்" தவிர்த்து வேறொன்றும் உருப்படியாய் எனக்கு தோன்றவில்லை.தற்போதுள்ள பாட அமைப்பு பற்றி தெரியவில்லை.

மேலும் "எஸ்தர்" வண்ணநிலவனின் சிறுகதை.வண்ணநிலவனும் வண்ணதாசனும் நண்பர்கள்.இந்த சிறுகதை தொகுப்பிற்கு வண்ணநிலவன் எழுதியுள்ள முகப்புரை வெகு அருமை.

லேகா said...

வருகைக்கு நன்றி நிலா முகிலன்.

//வண்ணதாசனின் எழுத்து குறித்து பொதுவான சில எதிர்வினைகள் உண்டு.என்பதுகளிலேயே பின் தங்கிய எழுத்து என்றும்,ஒரு கட்டத்திற்கு மேல் அயர்ச்சி தருபவை என்றும்//

நான் குறிபிட்டுள்ள இந்த வரிகள் சாருவின் விமர்சனத்தையும் முன்வைத்தே.அவர் அவர் விருப்பம் அவர்களுக்கு!!:-)

குப்பன்.யாஹூ said...

வண்ண தாசன் எழுத்துக்கள் குறித்து தாங்கள் எழுதி உள்ளது மிகச் சரி. எந்த விதமான உயர்வினையும் இல்லை (There is neither exageration nor artificial appreciation in your words about Vannadasan writing) .

நாம் எல்லாம் பாக்கியவான்கள், வண்ண தாசன் எழுத்துக்களை படிப்பதற்கும், வண்ணதாசன், இளையராச காலங்களில் வாழ்வதற்கும்.

நெல்லை மற்றும் தென்மதுரை பகுதிகளை வைகோவிற்கு பிறகு மிகுந்த சிரதையுடன், உள்ள படியே வர்ணிப்பதில், எழுதுவதில் வண்ணதாசன் சிறந்தவர்.

கொக்கிரகுளம், பாளையம்கோட்டை வாய்க்கப்பாலம், டவுன் வாகையடி முக்கு பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களுக்கு வாசகர்களை தனது எழுத்திலேயே கொண்டு சென்று விடுவார்.

என் ஞாபகம் சரி எனில் சுஜாதாவின் அம்பலம் (பழைய வெப் உலகமுடன் இணைந்த காலம்), வண்ணதாசனின் -பிணம் தூக்கி தான் முதல் சிறுகதையாக இணையத்தில் வந்தது என எண்ணுகிறேன் (எஸ் ரா நன்கு அறிவார், அம்பலம் பற்றி).

பிணம் தூக்கி, கிடைத்தால் படித்து பாருங்கள், நெல்லை பெருநகர வீதிகளை இவர் வர்ணிக்கும் அழகு, கம்பர் தோற்று விடுவார்.


வண்ணதாசனின் எழுத்துக்களுக்கு பெருமை சேர்க்கும் (கட்டியம் கூறும் ) வகையில் இருக்கும் உங்களின் இந்த பதிவு, பதிவுலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று.

தமிழ் பதிவுலகை அடுத்த கட்டதிற்கு எடுத்து சென்று உள்ளீர்கள் , வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல லேகா.

தமிழ் தாயின் சார்பாக , தமிழ் மொழியின் சார்பாக சிறப்பு நன்றிகள் லேகா.


குப்பன்_யாஹூ

குப்பன்.யாஹூ said...

சென்ஷி - அவரது எஸ்தர் கதை என்னால் உதறித்தள்ளவியலாத ஒரு சுமையை ஏற்பத்தியிருந்தது.

மிகவும் சரி சென்ஷி. நன்றிகள்- வாசகனுக்கு நிரந்தர சுகம் அளிக்கும் எழுத்துக்கள் வண்ண தாசன் எழுத்துக்கள்.

லேகா said...

ராம்ஜி,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி :-)

//கொக்கிரகுளம், பாளையம்கோட்டை வாய்க்கப்பாலம், டவுன் வாகையடி முக்கு பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களுக்கு வாசகர்களை தனது எழுத்திலேயே கொண்டு சென்று விடுவார்.//

சரியாய் சொன்னீங்க.இவரின் எழுத்தை படித்த பிறகு நெல்லை மெது தனி மோகமே வந்தது.கோவில் ரத வீதி,சுலோசன முதலியார் பாலம்,தாமிரபரணி என குரிபிட்டுல்லவை யாவையும் பார்த்து தீர்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு.

லேகா said...

@ சென்ஷி @ ராம்ஜி

"எஸ்தர்" சிறுகதை வண்ணநிலவனுடையது.இவ்விருவருக்கும் இடையே உள்ள பெயர் ஒற்றுமை குழப்பதை விளைவிப்பது இயல்பே :-)

வனம் said...

வணக்கம் லேகா

ம்ம்ம் மிக மிக அருமையான படைப்பாளி வண்ணதாசன்,

நானும் இவரைப்பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என நிணைத்திருந்தேன்.

இவரின் புளிப்பு கனிகள், அப்பாவை கொண்றவன் படித்திருக்கின்றீர்களா ?

இராஜராஜன்

மொழி said...

நல்ல பதிவு லேகா.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

esnips.com

u can download famous english fictions in tis site. read stranger novel by albert camus...

scribd.com is another website to download famous english fictions...

Anonymous said...

esnips.com

u can download famous english fictions in tis site. read stranger novel by albert camus...

scribd.com is another website to download famous english fictions...

லேகா said...

நன்றி மொழி :-)

நர்சிம் said...

நெல்லை மற்றும் தென்மதுரை பகுதிகளை வைகோவிற்கு பிறகு மிகுந்த சிரதையுடன், உள்ள படியே வர்ணிப்பதில், எழுதுவதில் வண்ணதாசன் சிறந்தவர்.//


?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

??????????

???????

??

?

யாத்ரா said...

வண்ணதாசன் அவர்கள் மழை, இவரைப் படித்தால் ஒரு வாரத்திற்கு விடாமல் மனதில் மழை பெய்து கொண்டேயிருக்கும், என் ஆதர்சங்களில் ஒருவர், என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்.

நீங்கள் குறிப்பிட்டிருந்த மொத்த சிறுகதைத் தொகுப்பை வாசித்திருக்கிறேன், கிருஷ்ணன் வைத்த வீடு, பெய்தலும் ஓய்தலும், அகம் புறம் வாசித்திருக்கிறீர்களா.

கல்யாண்ஜி கவிதைகள், நிலாப் பார்த்தல், கேலிச் சித்திரம் கவிதைத் தொகுப்புகளை வாசித்திருக்கிறீர்களா.

லேகா said...

நர்சிம் :-))))))))))))

லேகா said...

யாத்ரா

வருகைக்கு நன்றி.

அனேகமாய் வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளையும்,குறுநாவல்களையும் படித்திருகிறேன்.விகடனில் வெளிவந்த அகம் புறம் நல்ல கட்டுரை தொகுப்பு!!

இவரின் கவிதைகள் பரிட்சயம் இல்லை.

அகநாழிகை said...

வண்ணதாசன் பற்றிய உங்கள் பதிவு அருமை. கதைகளை வாசிக்கும்போது காட்சியாகவே விரியும் தன்மை கொண்ட வண்ணதாசன் எழுத்துக்களை வாசிப்பது ஒரு சுகானுபவம்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

லேகா said...

//வண்ணதாசன் எழுத்துக்களை வாசிப்பது ஒரு சுகானுபவம்.//

உண்மை :-)

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி வாசுதேவன்.

சென்ஷி said...

//லேகா said...

@ சென்ஷி @ ராம்ஜி

"எஸ்தர்" சிறுகதை வண்ணநிலவனுடையது.இவ்விருவருக்கும் இடையே உள்ள பெயர் ஒற்றுமை குழப்பதை விளைவிப்பது இயல்பே :-)
//

:-((

மன்னிக்க.. ஆர்வக்கோளாறு அதிகமாகி விட்டது போல இருக்கிறது. ஆம் வண்ணநிலவனின் கதைத்தொகுப்பிலுள்ள கதை அது :-))

சென்ஷி said...

//எனது பள்ளி காலத்தில் துணைபாடத்தில் படித்தவற்றுள் கு.அழகிரிசாமியின் "ராஜா வந்திருகின்றார்"//

நானும் ராஜா வந்திருக்கின்றார் கதையை வாசித்ததுண்டு. இன்னமும் மனதில் தங்கியுள்ளது.. (மீண்டும் ஆர்வக்கோளாறு)

இரு வீட்டின் சிறுவர்களிடையே தோன்றும் விளையாட்டுப்போட்டியை வைத்து தொடங்கும் கதை.. ராஜா என்ற ஒரு சிறுவன் ஒரு வீட்டிற்கு வரும்போது அதை விளையாட்டுடன் சம்பந்தப்படுத்திப்பார்க்கும் கதை.

இதை ரமணா படத்திலும் குழந்தைகளின் சண்டையில் உபயோகித்திருப்பார்.

மேலும் சில கதைகள் வாசித்த நினைவுகள் உள்ளன. நினைவு வருகின்றபோது எழுதுகிறேன்.

நன்றி

இரா. வசந்த குமார். said...

i think sensei tried to mention the story "thanumai"...vannadhasan's fantastic 1...

லேகா said...

நன்றி சென்ஷி.

"ராஜா வந்திருகின்றார்" - தீபாவளி சமயத்தில் ஏழை குடும்பத்து சிறுவன் ஒருவனின் நிலையை விவரிக்கும் கதை.

'எஸ்தர்" - வண்ணநிலவனின் இக்கதை பஞ்ச காலத்தில் ஒரு கிராமமே புலம் பெயர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்ணொருத்தியின் மனவோட்டங்களை சொல்லும் கதை.ஒரு வித இருள் கவிழ்ந்த மனநிலையை உண்டு பண்ணும் கதை இது.சோகத்தை அழுத்தமாய் தெரிவிப்பதில் வண்ணநிலவன் வல்லவர்,இவரின் "கடல் புறத்தில்" ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

லேகா said...

சென்ஷி மனிப்பெல்லாம் எதற்கு?

இலக்கிய நூல்கள் குறித்து கட்டுரைகள் எழுதுவதை விட மிக பிடித்த விஷயம் அவை குறித்து விவாதிப்பது.அதற்கான தளமாய் பின்னூட்டமேடை உள்ளது.
ஆரோக்கியமான விவாதங்கள் எப்பொழுதும் சலிப்பதும் இல்லை.

லேகா said...

தனுமை - ம்ம்ம்ம்.......படித்து படித்து சலிக்காத கதை!!

மழை நேரம்,ஈரமான சாலை,உதிர்ந்த மலர்கள....இந்த சூழலில் தனியாகி..தனுவாகி என நாயகன் உருகுவதாய் வரும் விவரிப்பு சாரலென வருடும்!!

வண்ணதாசனின் சிறுகதைகளுள் மிக சிறந்த முதல் பத்தில் இதற்கு நிச்சயம் இடம் உண்டு.

நிலாரசிகன் said...

நல்லதொரு பகிர்வு. வண்ணதாசனின் தனுமை மிகச்சிறந்த சிறுகதை. பெய்தலும் ஓய்தலும் சிறுகதை தொகுப்பிற்கு பின் ஏதாவது புதிய தொகுப்பு வந்ததா?

எப்பொழுதெல்லாம் எங்கள் ஊர் ஞாபகம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் வண்ணதாசன் வாசிப்பேன் :)

லேகா,

கடல்பு"ர"த்திலா அல்லது "ற"வா?

Anonymous said...

Hi,
Vannalivanam's "Esthar' is indeed a heart-wrenching story.
Another short story of his 'Pambum Pidaranum' is very unique in terms of style and the matter being conveyed. (Almost surrealistic). A major break from his normal style.
But Vannanilavam never got into the isms, he just wrote what he thought was best.
Am intruding into Vanndadasan's post:), but could not resist when I read about Vannanilavan.
Ajay

லேகா said...

நன்றி நிலா ரசிகன்,.

"பெய்தலும் ஓய்தலும்" - இத்தொகுப்பை குறித்து இப்பொழுது தான் அறிகின்றேன்.
ஆனால் புதுமைப்பித்தனின் வெளியீட்டில் வந்துள்ள வண்ணதாசனின் சிறுகதை தொகுப்பில் எல்லா சிறுகதைகளும் அடக்கம்.

//எப்பொழுதெல்லாம் எங்கள் ஊர் ஞாபகம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் வண்ணதாசன் வாசிப்பேன் :)//

:-))) நெல்லை நகரத்தை வண்ணதாசனின் எழுத்துக்கள் மூலமே பெரிதும் அறிந்து கொண்டேன்..தேர் வீதி,தாமரை குளம்,சுலோச்சனா முதலியார் பாலம்,தாமிரபரணி என நேரில் காண விரும்பும் உள்ள பட்டியல் நீளம்.

கடல்புறத்தில் தான்.மாற்றிவிட்டேன்.

லேகா said...

அஜய்,

வண்ணநிலவனின் "பாம்பும் பிடாரனும்" குறித்து அதிகமாய் கேள்வி பட்டுள்ளேன்.அந்த கதை இன்னும் படிக்க கிடைக்கவில்லை:-( பகிர்தலுக்கு நன்றி.

மேலும்,வண்ணதாசன் குறித்து பேச்சு வரும் இடமெல்லாம் வண்ணநிலவன் குறித்து பேசாமல் இருக்க முடியாது.இருவருக்குமான ஒற்றுமைகள் அதிகம்.நெல்லையை மையமாய் வைத்து உறவுகளின் மேன்மையை எதார்த்தத்துடன் சித்தரிக்கும் இவர்களின் கதைகள் ஒன்றோடு ஒன்று பினைந்தவை.

நிலாரசிகன் said...

வண்ணநிலவனின் எஸ்தர் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
ரவி சுப்பிரமணியன் இயக்கத்தில்.

லேகா,

கடல்புரத்தில் என்பதே சரி.

அ.மு.செய்யது said...

நீங்கள் புத்தகங்களை ஆன்லைனின்ல் பெறுகிறீர்களா ??

இல்லை நேரடியாக சென்று வாங்கி விடுவீர்களா ??

பூனேவில் இருப்பதால் எந்த இணைய தளத்தை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பமாகவே இருக்கிறது.

வண்ணநிலவனின் புத்தகங்கள் வாங்க சிறந்த இணையதளம் எதுவென்று சொல்லமுடியுமா ??

( உயிர்மையில் தேடிப்பார்த்தேன்.பெரும்பாலான புத்தகங்கள் அங்கு இல்லை.)

அருண்மொழிவர்மன் said...

கற்றது தமிழ் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய ஆனந்த விகடன் படத்தின் சில காட்சிகள் “வண்ணதாசன் சிறுகதைகள்” படிப்பது போன்ற சுகானுபவத்தை தருகின்றன என்று எழுதி ராமிற்கு கைரவம் செய்திருந்தனர். அவராது “நிலாப் பார்த்தலில்” வரும் நிலாப் பார்க்க என்று போய் இலாப் பார்த்து எத்தனையோ நாளாயிற்று” என்றா வசனம் வரும். கவிதை நடையில் அற்புதமாக எழுதுபவர். ஆனால், அகம் புறம் இவரது முன்னைய எழுத்துகள் அளவு இல்லை என்றே சொல்லுவேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு வண்ணதாசன் / கல்யாண்ஜி இந்த பெயர் குழப்பம் அடிக்கடி வரும், தெளிவுபடுத்திக்கொண்டாலுமே.

நான் அவரின் நிலா பார்த்தல் என்ற கவிதைத் தொகுப்பு மட்டுமே இதுவரை படித்துள்ளேன்.

அவரின் சிறுகதைகளை படிக்கத்தூண்டும்படி இருக்கிறது இந்தப் பதிவு. வாசிப்பு லிஸ்ட்டில் இந்த புத்தகத்தையும் சேர்த்தாயிற்று.
நன்றி லேகா.