Thursday, February 12, 2009

பெருமாள் முருகனின் "கூளமாதாரி"

பெருமாள் முருகன்,"ஏறுவெயில்" நாவலில் சமூக கட்டமைப்பின் காரணமாய் நடுத்தர குடும்பம் ஒன்றில் நிகழும் மாறுதல்களை அழுத்தமாய் பதிவு செய்திருந்தார்.இந்நாவல் விளிம்புநிலை சோகத்தை முற்றிலும் புதிய நடையில் சொல்லுகின்றது.கவுண்டர் வீடுகளில் வருட கூலிகளாய் விடப்படும் சக்கிலிய சிறுவர்களை சுற்றி சுழலும் கதை.கூளையன்,நெடும்பம்,வவுரி,செவுடி,மொண்டி இவர்களின் ஆடுகள்,தினசரி விளையாட்டு,தீரா நட்பு,பொய் கோபங்கள்,நினைவில் வந்து மறையும் அரிதான இனிய பொழுதுகள் என சிறு சிறு விஷயத்தையும் மிக நுட்பமாய் வர்ணித்தபடி செல்கின்றது.கதையின் நாயகன் கூளையன்.இருப்பினும் பெரும்பாலான கதை நாயகனை மையப்படுத்தி இல்லை.குழந்தைகள் உலகம் அற்புதமானது.கற்பனைகளும்,கனவுகளும் கொண்டு துள்ளி திரியும் அந்த பருவத்தின் மீதான ஏக்கம் யாவருக்கும் உண்டு.கிராமத்து சிறார்களின் உலகம் இதனிலும் சுவாரசியமானது.வயல் வெளிகளில் ஓடி திரிந்து,விருப்ப மரங்களின் ஏறி ஆடி,பூக்களையும்,பழங்களையும் தனதாக்கி கொண்டு,வித விதமாய் விளையாட்டுகள் பழகி, நினைத்த பொழுதில் கிணற்றில் குளித்து மகிழும் வாழ்கை இச்சிறுவர்களுக்கும் உண்டு.கூடுதலாய் இவர்கள் பெற்றிருப்பது கவுண்டச்சிகளின் ஏச்சு பேச்சுகள்,குறுக்கு ஓடிய செய்யும் கிடை வேலைகள்,அயர்ச்சி தரும் ஜாதியின் மீதான வசவுகள்,அடுத்த வருட கூலி குறித்தான பயம்.....

சிறுவர் இலக்கிய வகையில் வெகுவாய் சேரும் இக்கதையில் வரும் பல சம்பவங்கள் பொறாமை கொள்ள செய்பவை.ஆடுகள்,நண்பர்கள் என யாவற்றையும் மறந்து தனது பாட்டியின் ஊரில் கூளையன் செலவிடும் நேரங்கள்.மொத்தமாய் தேக்கி வைத்திருந்த உறக்கத்தை அனுபவிக்கும் நீண்ட பகல் பொழுதின் இனிமை,பசித்திருந்த பொழுதில் நண்பர்களோடு ஆற்று மீன் பிடித்து பாறையில் சுட்டு தின்றும்,பெரிய கவுண்டரோடு ராத்திரி ஆட்டம் எம்.ஜி.ஆர் படம் பார்த்து வந்ததும்,கவுண்டர் வீட்டு செல்வதோடு விடிய விடிய கருப்பசாமி கதை பேசியதும்,தனது விருப்ப ஆடான வீரனை சாமிக்கு படையல் இடும் நாளில் கோவிலை விட்டு வெகு தூரம் தனித்து வந்து அமர்ந்து சோகத்தை மறக்க முயலும் தருணங்கள் தருவிக்கும் வாசிப்பு அனுபவம் அலாதியானது.

நாவலின் பிற்பகுதி கூளையனை சோகத்தின் பிடியில் ஆழ்த்தும் நிகழ்ச்சிகள் வரிசையாய் விவரிக்கப்பட்டு நம்மையும் வதைக்கின்றது.வயதிற்கு அதிகமான முதிர்ச்சியோடு எதிர்காலம் குறித்த நிச்சயம் ஏதுமின்றி பொட்டல் காட்டில் ஆடுகளோடு பொழுதை கழிக்கும் இவர்களின் மெல்லிய சோகமும் மனதை கனக்க செய்வது.ஒரு வாரம் இடைவெளி விட்டு விட்டு படித்தேன் இந்நாவாலை.சோம்பல் கூட்டும் பகல் பொழுதுகள் இச்சிறுவர்களோடு கழிந்தது சுகானுபவம்.தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய வரிசை நாவல்களில் "கூளமாதாரி" இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

பெருமாள்முருகனின் ஏறுவெயில் நாவல் குறித்த எனது முந்தைய பதிவு

16 comments:

KARTHIK said...

போனவாரம் தான் இவரோட திருச்செங்கோடுங்குற சிறுகதை தொகுப்பு வாங்கினேன்.அருமையா இருக்குங்க.அவரோட எழுத்து ரொம்ப இயல்பா இருக்கு.இத்தனைக்கும் மறு பதிப்புங்குரதால வாங்கினேன்.நீங்க இணைப்புல குடுத்திருக்க அந்த சுட்டில வர்ற பதிவப் படிச்சிருந்தா கூட அவரப்பத்தி முன்னாடியே தெரிஞ்சிருக்கும் :-)).
இந்த புத்தகத்துக்கப்புரம் அவரோட மத்ததையும் வாங்கிப்படிக்கனும்குற எண்ணம் வருதுங்க.ஒருவேள எங்க ஊரு சுத்தி சுத்தி கதை நடக்குறதால இந்த மாதிரி ஈர்ப்பு ஏர்ப்படுதோ என்னவோ
தொடர்ந்து இதுபோல நல்ல எழுத்தாளர்களோட எழுத்துக்கள பதிவேத்துங்க.
வழக்கம் போல நல்ல பதிவுங்க.

குப்பன்.யாஹூ said...

உங்க விமர்சனத்தை படிக்க படிக்க நாவலை படிக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது.

ரயில் அல்லது நெடுந்தூர பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இந்த மாதிரி ஒரு புத்தகம் படித்து கொண்டு தென் தமிழ்நாட்டிற்கு செல்லும் பயணம் ஈடு இணை இல்லாத சுகம்.

நம் கற்பனைக்கு, சமூகம் பற்றிய சிந்தனை ஓட்டத்திற்கு அளவே இருக்காது.

குப்பன்_யாஹூ

லேகா said...

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி கார்த்திக்.

பெருமாள் முருகனின் ஏறுவெயில் முழுக்க முழுக்க திருப்பூர் நகரை பின்னணியை கொண்ட கதை.இந்நாவலும் கூட கோவை வட்டார கதை தான்.பல வட்டார வழக்கு வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை.நிச்சயம் இப்புத்தகம் இனிய வாசிப்பனுபவம் தரும்.

லேகா said...

நன்றி ராம்ஜி.

//ரயில் அல்லது நெடுந்தூர பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இந்த மாதிரி ஒரு புத்தகம் படித்து கொண்டு தென் தமிழ்நாட்டிற்கு செல்லும் பயணம் ஈடு இணை இல்லாத சுகம்.//

இந்த வாசிப்பனுபவம் எனக்கு பலமுறை கிட்டியுள்ளது :-))

Krishnan said...

வாசிக்கவில்லை.....படிக்க தூண்டுகிறது உங்களுடைய விமர்சனம்.

காமராஜ் said...

என்ன சொல்ல.....?
காலச்சுவடு வாழ்க

லேகா said...

நன்றி கிருஷ்ணன்.அருமையான நாவல் இது.கட்டாயம் வாங்கி படியுங்கள்.

லேகா said...

நன்றி காமராஜ் :-)

Muthu said...

http://muthuvintamil.blogspot.com/2006/02/2.html

http://muthuvintamil.blogspot.com/2006/02/1.html

இந்த புத்தகத்தை பற்றி பல நாட்களுக்கு முன் நான் எழதியது.

Muthu said...

இந்த புத்தகம் படித்தீர்களா?

http://muthuvintamil.blogspot.com/2006/07/blog-post_02.html

லேகா said...

நன்றி முத்து தமிழினி.

இந்த கதை படித்தீர்கள என்று பெயரை குறிப்பிடாமல் சொன்னது ஏன்? பெருமாள் முருகனின் "ஏறுவெயில்" மற்றும் "கூளமாதாரி" இரு நாவல்கள் மட்டுமே படித்துள்ளேன்."பீக்கதைகள்" இன்னும் படிக்கவில்லை.பரிந்துரைக்கு மிக்க நன்றி.

Muthu said...

//இந்த கதை படித்தீர்கள என்று பெயரை குறிப்பிடாமல் சொன்னது ஏன்? //

தற்செயலானதுதான்....இந்த கதை என்பது அந்த சுட்டியை குறிப்பது...

Anonymous said...

Hi,
I would suggest 'Kanganam' by Perumal Murugan as one of his best works. It describes the mindset of a 30 something unmarried man, who wants to marry and what happens. This is something new to our fiction, where the focus is mostly on unmarried women. It shows another facet of the marriage scenario.

லேகா said...

நன்றி அனானி.

நிச்சயமாய் "கங்கணம்" நாவல் வாங்கி படிக்கச் முயல்கிறேன்.பெருமாள் முருகனின் எழுத்து நடை எனக்கு மிக பிடித்த ஒன்று.

ரௌத்ரன் said...

சென்ற வருடமே இப்புத்தகம் கிடைத்தது...ஏனோ உள்ளே புக முடியாமல் சில பக்கங்களோடு நிறுத்தி விட்டேன்...மீண்டும் வாசிக்க வேண்டும்..இதே போல் உள்ளே புக முடியாமல் நிறுத்திய இன்னொரு புத்தகம்..இடாலோ கால்வினோவின்"குளிர் கால இரவில் ஒரு பயணி"...அதை வைத்து விட்டு யசுனாரி கவப்பட்டாவின் "தூங்கும் அழகிகள் இல்லம் படித்தேன்".பெரும்பாலும் என் ஊர் லைப்ரரியில் தேடும் எல்லா புத்தகங்களூம் கிடைத்து விடுவதாலான அலட்சியமாய் இருக்கலாம்.

சிவானந்தம் நீலகண்டன் said...

குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.

/மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/

http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1