Thursday, February 5, 2009

எக்பர்ட் சச்சிதானந்தத்தின் "அம்மாவின் அத்தை" - குறுநாவல் தொகுப்பு

எக்பர்ட் சச்சிதானந்தம் குறித்த அறிமுகம் எஸ்.ரா வின் வலைத்தளத்தில் கண்டதும் அவரின் "நுகம்" சிறுகதை தொகுப்பை தேடி படித்தேன்.கிறிஸ்துவ மடங்கள் மீது இருக்கும் மேலோட்டமான பார்வையை தவிர்த்து உள்ளிருக்கும் மடாதிபதிகளின் அதிகார போக்கு,ஊழல்,போலி கரிசனம் முதலியவற்றை வெளிப்படையாய் பேசும் சிறுகதைகளின் தொகுப்பு அது.அதே போன்ற எதிர்பார்ப்புடன் இந்த தொகுப்பை படிக்க தொடங்கினேன்.நான்கு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல்.இந்தனை நாள் வாசிக்காமல் போனதிற்கு வருத்தம் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ள கதைகள்."அம்மாவின் அத்தை" ,நாயகன் தாமு தன் அம்மாவின் அத்தை குறித்தான பின்னோக்கிய நினைவுகளோடு பயணிக்கின்றது.வயதான காலத்தில் தனி ஒரு ஆளாய் குடும்பத்தை சமாளிக்கும் அத்தையோடு சோமுவிற்குள்ள நெருக்கத்தை பறைசாற்றி தொடரும் கதை அத்தையோடு சோமு தூரத்து கிராமத்திற்கு சென்ற நாட்களின் விவரிப்பில் சுவாரசியம் பெறுகிறது.குழந்தை பருவத்து நிகழ்வுகள் முழுதாய் நினைவில் இல்லாவிட்டாலும் ஒவ்வொருவருக்கும் சில பொழுதுகள் மறக்க முடியாதவை.அது போல அமைந்தது சோமுவின் பயணம்.செழித்த விளைநிலங்கள்,கபடம் அற்ற விவசாயிகள்,தூரத்து பறவை கூச்சல்,இருள் பொழுதின் மின்மினி கூட்டம் என விரியும் வர்ணிப்புகள் பொறாமை கொள்ள செய்பவை.

மேதில்டா - இத்தொகுப்பில் எனக்கு மிக பிடித்த கதை.நாயகனின் இளம் வயது ஆங்கிலோஇந்திய காதலி மேதில்டா மற்றும் நண்பனான அவளின் அண்ணன் பீட்டரை குறித்த கதை என்பதை விட குறிப்புகள் என சொல்லலாம்.படிப்பில் ஆர்வம் அற்று பட்டம் விடிவதில் மோகம் கொண்டு அதை தவம் போல மேற்கொண்டு வண்ண வண்ண பட்டங்கள் செய்து மைதானத்தில் பீட்டர் போட்டியிடும் காட்சிகள் சொல்லப்பட்டிருக்கும் விதம் உலகம் முழுதுமாய் பட்டங்களை மாறிபோனதாய் தோன்ற செய்தது.ஆங்கிலோ இந்தியர்கள் குறித்த கதைகள் தமிழில் மிக அரிது.காதல் மனைவியின் மரணத்தை ஏற்று கொள்ள இலயாது தவிக்கும் ஆங்கிலோஇந்திய கணவனை பற்றிய வண்ணதாசனின் சிறுகதை ஒன்று நினைவில் வந்து போனது.திடீரென யாவரும் எங்கே மறைந்து போனார்கள்?

கோபிகிருஷ்ணன் நடையில் உள்ள "இன்னொரு கிழவர்" அரசு அலுவலகம் ஒன்றின் தினசரி காட்சிகளை நகைச்சுவை கொண்டு விவரிப்பது".வீட்டோடு மருமகனான பிராமண வாத்தியார் பள்ளியில் வேலை செய்யும் சேரி பெண்ணுடன் கொள்ளும் காதலை மிக நுட்பமாக சொல்லும் மற்றொரு கதைக்கு சிறிதும் பொருந்தாமல் "அனுமார் கோவில் அய்யங்கார்' என ஏன் தலைப்பு என புரியவில்லை.இத்தொகுப்பின் முன்னுரையில் எக்பர்ட் சச்சிதானந்தம் தமது படைப்புக்களை வெளியிட முயற்சிமேற்கொள்ளவில்லை என சொல்லப்பட்டுள்ளது.மிகவும் வருத்தம் தரும் செய்தி அது.

வெளியீடு - தமிழினி
விலை - 55 ரூபாய்

8 comments:

குப்பன்.யாஹூ said...

வித்தியாசமான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி லேகா.

செழித்த விளைநிலங்கள்,கபடம் அற்ற விவசாயிகள்,தூரத்து பறவை கூச்சல்,இருள் பொழுதின் மின்மினி கூட்டம் என விரியும் வர்ணிப்புகள் பொறாமை கொள்ள செய்பவை.

இனிமேல் இவை எல்லாம் நாம் புத்தகங்களில் மட்டுமே பார்க்க முடியும் போல.

நுகம் புத்தகமும் வாங்கி படிக்க முயலுகிறேன்.

மற்றும் ஒரு பயனுள்ள பதிவு.

குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி ராம்ஜி.
அம்மாவின் அத்தை கதையில் நான் ரசித்து படித்த வர்ணிப்புகள் அவை.எங்க கிராமத்து காட்சிகளை நினைவூட்டியது!!

முந்தைய பதிவு தவறுதலாக வந்தது.உங்கள் பின்னூட்டம் அருமை.பதிவை நீக்கியதால் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.

narsim said...

மிக நல்ல அறிமுகம் லேகா...வழக்கம் போல்.

லேகா said...

நன்றி நர்சிம் :-)

Krishnan said...

நர்சிம் சொன்னதை வழிமொழிகிறேன் லேகா

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

விருபா - Viruba said...

லோகா,

"நுகம்" எக்பர்ட் சச்சிதானந்தன் என்பவரும் "அம்மாவின் அத்தை" தொகுப்பை எழுதிய சச்சிதானந்தனும் வேறுவேறு நபர்கள்.


இருவரும் காஞ்சிபுரத்துடன் தொடர்புடையவர்கள், தமிழினி இருவருடைய புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன் இதனை உங்கள் வலைத்தளத்தில் வந்து படிக்கவில்லைப்போலும், ஆனாலும் பரவாயில்லை. நீங்கள் அடிக்கடி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளத்தை மேற்கோள் காட்டிவதற்கும் பலன் கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்

- விருபா

லேகா said...

விருபா,

"நுகம்" மற்றும் "அம்மாவின் அத்தை" நூல்களின் ஆசிரியர்கள் குறித்து தெளிவுபடுத்தியதிற்கு நன்றி.

//நீங்கள் அடிக்கடி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளத்தை மேற்கோள் காட்டிவதற்கும் பலன் கிடைத்துள்ளது. //

:-)

என் வலைதளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரியும் இங்கு வண்ணதாசனும்,வண்ணநிலவனும்,கி.ராஜநாராயணனும் அதிகம் விவாதிக்கபட்டவர்கள் என்று.

எனக்கு பிடித்த நல்ல இலக்கியத்தை முழு மனதோடு பகிர்ந்து வருகின்றேன் எந்த வித அரசியலும் அற்று.