Thursday, January 15, 2009

The Last Viceroy(1986)

1986 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் அடிமை இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இறுதி நாட்களை,நாடு சுதந்திரம் பெற லார்ட் மௌன்ட் பேட்டன் (Lord Mount Batten) வகித்த முக்கிய பங்கு குறித்து விரிவாய் அலசுகிறது.சுதந்திர கால கதைகள் எப்பொழுதும் கேட்பதற்கும்,படிப்பதற்கும் இனிமை.எளிதாய் பெற்றதல்ல இந்த சுந்தந்திரம் என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உணர இது போன்ற சரித்திர பதிவுகள் அவசியமே.



பெருத்த அரசியல் குழப்பங்களுக்கிடையில் இந்தியாவின் கடைசி வைசிராயாக மௌன்ட் பேட்டன் பதவி ஏற்பதோடு படம் துவங்குகின்றது.தனி நாடு கேட்கும் ஜின்னாவின் கோரிக்கைகள், இந்து முஸ்லீம் கலவரங்கள்,பாதிக்கப்படும் கிராமங்கள், அமைதி வேண்டி கிராமங்களுக்கு செல்லும் மகாத்மா,ஆங்கிலேய அரசிடம் தோழமையாய் பழகி சுயலாபம் சம்பாதிக்க விரும்பும் அரசியல் தலைவர்கள் என யாவற்றையும் கண்டு,நீடிக்கும் குழப்பத்தை முடிவிற்கு கொண்டு வர மௌன்ட் பேட்டன் நேருவையும் ஜின்னாவையும் அழைத்து பேசி முஸ்லிம்களுக்கு தனி மாநிலம் அமைக்க சம்மதிக்கின்றார்.அதன் பின் தொடரும் எல்லைகள் நிர்ணயம்,முப்படைகளை பகிர்தல் என யாவும் தீர்மானிக்கபட்டபின் 1947- ஆகஸ்டு 15 - ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெறுவதாக அறிவிக்கின்றார்.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க லார்ட் மௌன்ட் பேட்டன் குறித்த பதிவே.இருப்பினும் இந்தியாவின் சுதந்திர போராட்ட இறுதி நாட்களை வெகு நேர்த்தியாய் சொல்லுகின்றது.பிரிவினையை அதிகரிக்கும் முஸ்லிம்களுக்கு தனி மாநிலம் தருவதில் காந்திக்கும்,நேருவிற்கும் ஏற்படும் மாற்று கருத்து,பிடிவாத குணம் கொண்ட ஜின்னாவின் வாக்குவாதங்கள்,மௌன்ட் பேட்டன் மனைவி எட்வினாவிற்கும் நேருவிற்கும் இடையே மலரும் நட்பு கடந்த உறவு என மறைமுகமாய் அறியப்பட்டவை காட்சிகளாய் திரையில் வந்த பொழுது ஏற்பட்ட ஆச்சர்யம் மறுப்பதற்கில்லை.

சுதந்திரம் பெறுவதிற்கு முந்தைய இரு ஆண்டுகள் குறித்த முழு பதிவு இது.திரைபடத்தின் பெரும்பாலான காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கபட்டுள்ளன.இத்திரைப்படத்தில் என்னை கவர்ந்த ஒன்று நடிகர்கள் தேர்வு.மௌன்ட் பேட்டன், எட்வினா,நேரு,காந்தி, ராஜாஜி,வல்லபாய்படேல், இந்திராகாந்தி பாத்திரங்கள் ஏற்று நடித்தவர்கள் யாவரும் நிஜ தலைவர்களோடு கொண்டிருந்த உருவ ஒற்றுமை ஆச்சர்யம் கொள்ள வைத்தது.தேர்ந்த நடிகர்கள்,தெளிவான காட்சியமைப்பு,அளவான இசை,மேலும் அந்த நாளைய காட்சிகளை கண்முன் கொண்டு வர முயன்று வெற்றி பெற்ற கலை இயக்கம் என பிரமிப்பை ஏற்படுத்தியது இத்திரைப்படம்.

6 comments:

குப்பன்.யாஹூ said...

நல்ல புத்தகங்கள், திரைப்படங்களை அறிமுகம் செய்வதற்கு கோடானு கோடி நன்றிகள் லேகா.

பாரதி படத்தை கூட இன்னும் சிறப்பாக கமல், சுஜாதா பாரதிராஜா இணைந்து இன்னும் சிறப்பாக செய்து இருந்து இருக்கலாம் என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.


குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி ராம்ஜி.

பாரதி படத்தை இயக்கிய ஞானராஜசேகரன் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி.வழக்கமான மாசாலா திரைப்படங்களை தவிர்த்து புது முயற்சிகளில் இறங்கியவர்.இவரின் முதல் திரைப்படமான "மோகமுள்" என்னை மிக கவர்ந்த படம்.அது வணிக ரீதியான வெற்றி பெறவில்லை,ராஜாவின் இசை அற்புதமாய் அமைந்திருக்கும்.அதன் பின் வெளியான இவரின் பாரதி,பெரியார் திரைப்படங்களும் நல்ல முயற்சியே.

சிவாஜி,பாய்ஸ் என குப்பைகளுக்கு வசனம் எழுதுவதில் ஆர்வம் காட்டிய சுஜாதா இது போன்ற முயற்சிகளில் ஈடுபடாதது வருத்தமே.

Krishnan said...

"சிவாஜி,பாய்ஸ் என குப்பைகளுக்கு வசனம் எழுதுவதில் ஆர்வம் காட்டிய சுஜாதா இது போன்ற முயற்சிகளில் ஈடுபடாதது வருத்தமே". 100% நானும் உடன்படுகிறேன் லேகா.

குப்பன்.யாஹூ said...

ஞானசேகரன், சாயாஜி ஷிண்டே , தேவயானி மீது எனக்கு எந்த அளவும் வருத்தம் இல்லை, மிக சிறப்பாகவே பண்ணி உள்ளார்கள்.

மோகமுள் மிக அற்புதமான படம், நல்ல பாடல்கள்.


என் வருத்தம் பாரதி வேடம் கட்ட வேறு மாநிலத்தில் இருந்து நாம் ஆள் கொண்டு வர வேண்டியது இருந்ததே.

கமல் மும்பை எக்ஸ்பிரஸ், பம்மல் சம்மந்தம் போன்ற படங்கள் பண்ணியதற்கு பதிலாக பாரதி படம் பண்ணி இருக்கலாம்.


லாஸ்ட் வைஸ்ராய் பார்க்க முயலுகிறேன். கடைசி காலத்தில் ஆங்கிலேயர்கள், அரண்மனை ஊழியர்கள், அதிகாரிகள் மனது , உணர்வுகள் எப்படி இருந்து இருக்கும் என எண்ணுகிறேன். ௧௯௪௭ காலத்தில் இலக்கியங்கள், பத்திரிக்கைகளில் மிக சிறப்பான உணர்வு பூர்வமான கட்டுரைகள், எழுத்துக்கள் வந்திருக்கும் என நினைக்கிறேன்.

குப்பன்_யாஹூ

சுஜாதாவிடம் நான் கேக்க மறந்த கேள்வி இது- அவரால் எப்படி அரசு அலுவலகத்தில் குப்பை கொட்ட முடிந்தது. அதுவும் இலக்கிய அறிவு, விஞ்ஞான புலமை, தமிழ் ஈடுபாடு இவற்றை வைத்து கொண்டு எப்படி தான் அரசு அலுவலகத்தில் குப்பை கொட்டினாரோ.

அவர் போன்றோரை cognizant, இன்போசிஸ் நல்ல முறையில் பயன் படுத்தி இருக்கலாம்.

லேகா said...

நன்றி கிருஷ்ணன்

லேகா said...

//லாஸ்ட் வைஸ்ராய் பார்க்க முயலுகிறேன். கடைசி காலத்தில் ஆங்கிலேயர்கள், அரண்மனை ஊழியர்கள், அதிகாரிகள் மனது , உணர்வுகள் எப்படி இருந்து இருக்கும் என எண்ணுகிறேன்.//

இத்திரைப்படத்தில் மிக பிடித்தமாய் அமைந்ததே அது தான்..சுதந்திரம் பெறுவதிற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த தலைவர்களின் மனநிலையை மிக அழகாய் பிரதிபலித்தது இத்திரைப்படம்.