Saturday, January 31, 2009

எஸ்.ராவின் "கால் முளைத்த கதைகள்" - கட்டுரை தொகுப்பு

சில காரியங்கள்,சில நம்பிக்கைகள் காரணம் ஏதும் இன்றி நாம் தொடர்ந்து பின்பற்றி வருகின்றோம்.இயற்கையின் ரகசியங்களை கேள்விகள் ஏதும் இன்றி அப்படியே ஏற்று கொண்டிருக்கின்றோம்.எஸ்.ராவின் இந்த தொகுப்பு சிறுவர்களுக்கானது என எளிதாய் ஒதுக்கி தள்ள முடியாது.சூரியன் சந்திரன் தோன்றிய கதை, பறவைகள் நிறம் பெற்ற கதை,தென்னையும்,பனையும் தோன்றிய வரலாறு என பரவலாய் உலகின் பல பகுதிகளில் இருக்கும் நம்பிக்கைகளை பலவற்றை தொகுத்துள்ளார்.இந்திய உட்பட பிலிபைன்ஸ், பர்மா,தாய்லாந்து,இந்தோனேசியா,எகிப்து,மெக்சிகோ,கென்யா,அரேபியா என பல்வேறு நாடுகளில் உலவி வரும் நாடோடி கதைகள் படிக்க படிக்க சுவாரஸ்யம் கூட்டுபவை.கதைகள் கற்பனா திறனை கூட்டுபவை.இரவு பொழுதுகளில் என் கழுத்தை கட்டி கொண்டு கதை கேட்கும் குட்டி தங்கைக்கென கதைகளை சேகரித்து கொண்டிருப்பேன்.கதைகளின் தோழி என்ற வார்த்தை அவளை ஞாபகபடுத்தியது.சூரியனும்,சந்திரனும்,நட்சத்திரங்களும் தோன்றிய கதை இரவும் பகலும்,கடலும் நிலமும் பிரிந்த கதைகள் தேசத்திற்கு தேசம் வேறுபடினும் பொதுவாய் முன்னிறுத்துவது கடவுளின் படைப்பின் மகிமையை.வானவில்லின் வண்ணங்கள் கொண்டு பூக்கள் நிறம் பெற்றதும்,சாபம் பெற்ற காதலனும்,காதலியும் பூவும்,வண்டுமாய் மாறியதும்,கன்னி பெண்கள் பனைமரமாய் மாறியதும்,பாம்புகள் தென்னை மரமாய் மாறியதுமாகிய நாடோடி கதைகள் அவற்றின் மீதான பார்வையை மாற்றி அமைப்பவை.

50 திற்கும் மேற்பட்ட நாடோடி கதைகள் கொண்ட இத்தொகுப்பில் நான் ரசித்த கதைகள் உப்பு மற்றும் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு உருவானத்திற்கு சொல்லப்படும் நாடோடி கதைகள்.வியாபாரி ஒருவனின் பேராசையால் உப்பு தருவிக்கும் எந்திரம் கடலில் மூழ்கி அதை நிறுத்தம் மந்திரம் தெரியாததால் இன்றும் கடல் உப்பு தன்மை கொண்டுள்ளதாய் சொல்லுகின்றது குஜராத் பழங்குடியின கதை.ஒரே பெண்ணின் மீது ஆசை கொண்ட இரட்டையர்கள் அவள் மீதுள்ள காதலின் காரணமாய் எப்பொழுதும் இணைபிரியாதிருக்க வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பாக பிறவி எடுத்தாய் சொல்லுகின்றது வியட்நாம் தேசத்து கதை.நாள்முழுதும் பறவைகளுக்கும்,மிருகங்களுக்கும் வர்ணங்களை தீட்டிய கடவுள் இறுதியாய் வந்த குயிலை வர்ணம் ஏதுமின்றி அனுப்பியதால் அது சோகத்தோடு பாடி திரிவதாய் பிகார் பழங்குடியினர் நம்பிக்கை.

மேல சொன்ன கதைகள் இத்தொகுபிற்கான சிறிய அறிமுகம்.இதுபோன்ற எண்ணற்ற நாடோடி கதைகள் இதில் அடக்கம்.சர்ப்பம் நதியாகவும்,நதிகள் மரமாகவும்,மரங்கள் கடவுளாகவும் மாறியதாய் இருக்கும் நம்பிக்கைகள் ஆச்சர்யமூட்டுபவை.கதைகளை தருவிக்கும் ரகசிய குகையின் வாயில் எப்பொழுதும் திறந்தே இருக்கின்றது.அதை தேடி செல்வதும்,தேடாதிருப்பதும் அவரவர் விருப்பம்.எது எப்படியாயினும் கதைகளின் தோழியாய் இருப்பதே எனக்கு பெரும் மகிழ்ச்சி!!

வெளியீடு - உயிர்மெய்
விலை - 100 ரூபாய்

17 comments:

குப்பன்.யாஹூ said...

சிறந்த விமர்சனப் பதிவிற்கு நன்றிகள் பல லேகா.

நான் கூட இந்த புத்தகம் சிறுவர்களுக்கு என்று ஒதுக்கி வைத்து இருந்தேன். தங்கள் பதிவு படித்த பின்பு , புத்தகம் வாங்கி படிக்க ஆசை.

நீங்கள் சொல்வது போல கதைகள் சிறந்த தோழி/தோழன். சில கதைகள் நம் சிந்தனையை தூண்டி விடுபவை.

பெரிய கடின வேத நூல்கள், புராணங்கள் சொல்ல வரும் விடயத்தை சில சிறு கதைகள் நமக்கு எளிதாக சொல்லி விடும்.

குப்பன்_யாஹூ

கதிர் said...

உயிர்மெய்!!!

லேகா said...

வருகைக்கு நன்றி கதிர் :-)

chandru / RVC said...

அறிமுகத்திற்கு நன்றி :)

Krishnan said...

"கதைகளை தருவிக்கும் ரகசிய குகையின் வாயில் எப்பொழுதும் திறந்தே இருக்கின்றது.அதை தேடி செல்வதும்,தேடாதிருப்பதும் அவரவர் விருப்பம்". மிக நேர்த்தியான வரிகள் லேகா.

லேகா said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கிருஷ்ணன்.

எனக்கும் மிக பிடித்த வரி இது :-)

லேகா said...

நன்றி RVC

KARTHIK said...

// எஸ்.ராவின் இந்த தொகுப்பு சிறுவர்களுக்கானது என எளிதாய் ஒதுக்கி தள்ள முடியாது.//

இப்படி நெனச்சு நானும் கையில எடுத்துட்டு வெச்சிட்டு வந்துட்டேன்.மறுபடியும் போயி பாக்கும்போது இல்லை.அப்பையே நெனச்சன் வாங்கிருக்கலாமோன்னு.

லேகா said...

@ கார்த்திக்,

:-))
நல்ல புத்தகம்,வாசித்து பாருங்கள்.

குப்பன்.யாஹூ said...

சமீபத்தில் எழுத்தாளர் மாலன் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது கிடைத்த செய்தி, மாலன் தன் பதிவுகளை புத்தகமாக போட்டு உள்ளார்.

உங்களின் பதிவுகளைய்ம் புத்தகமாக வெளியிடலாம், எனவே உங்கள் பதிவுகளை சேகரித்து வைத்து கொள்ளுங்கள். (save in pen drive or store in separate place)

கண்டிப்பாக உங்களின் பதிவு தொகுப்பு தமிழ் எழுத்து இலக்கியம் ஆர்வலர்களுக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும்.

குப்பன்_யாஹூ

லேகா said...

நன்றி ராம்ஜி :-)

butterfly Surya said...

நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்.

உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. . அந்த சினிமாக்கள் எவை..?

அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.


உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும். நிறை குறை கூறவும்.

நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

நான் எஸ்ராவின் தீவிர ரசிகன்.. இந்த புத்தகத்தை இன்னும் வாசிக்கவில்லை.. விமர்சனம் நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்..

லேகா said...

நன்றி வண்ணத்துபூச்சியார்.
உலக சினிமா குறித்த உங்கள் பதிவுகளை படிக்க ஆர்வம் மேலிடுகிறது.
பகிர்தலுக்கு நன்றி.

லேகா said...

நன்றி பாண்டியன்.

அருண்மொழிவர்மன் said...

சிறுவர்களுக்கு பரிசாக வழங்கப்படக்கூடிய நல்ல தொகுப்பு

ஒரு சின்ன ஆலோசனை, வெளியீடு “உயிர்மெய்” என்று குறிப்பிடுகின்றீர்கள். வெளியீடு “உயிர்மை”. உயிர்மெய் என்று இன்னுமொரு தழ் வெளிவருகையில் இது வீண் குழப்பத்தை உண்டாக்கும்

லேகா said...

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி அருண்.

உயிர்மை - மாற்றி விட்டேன்!! :-)