Monday, January 12, 2009

சு.ரா வின் "அக்கரை சீமையிலே" மற்றும் "பிரசாதம்" - சிறுகதை தொகுப்புகள்

கி.ரா தனது வேட்டி தொகுதியில் சுந்தர ராமசாமியின் "அக்கரை சீமையிலே" மற்றும் புதுமைபித்தனின் "துன்பக்கேணி" சிறுகதைகள் குறித்து பிரமித்து எழுதி இருந்தார்.இரு கதைகளையும் தேடி படித்தேன்.இருகதைகளுக்கும் உள்ள ஒற்றுமை தாயகத்தில் இருந்து வேற்று நாட்டிற்கு பிழைக்க சென்ற கூலி தொழிலாளிகளை குறித்தது."துன்பக்கேணி" - சற்றே பெரிய சிறுகதை,தனி பதிவு போடும் அளவிற்கு விஷயம் கொண்டது.சு.ரா வின் "அக்கரை சீமையிலே" தொகுப்பில் இரெண்டு கதைகளை தவிர மற்றவை சொல்லி கொள்ளும் வண்ணம் இல்லை.ஆப்பிரிக்க நாட்டில் ரயில்வே கூலி தொழிலாளியாய் இருக்கும் தமிழனின் கதை.இக்கதை நாயகன் கொண்டிருக்கும் சூழல் இந்திய கூலிக்கும் பொருந்தும்.வறுமை,தினம் சண்டை இடும் மனைவி,ஓயாத புலம்பல்கள் என தொடரும் அவன் நாட்களுக்கு பெரும் பாரமாய் இருப்பது தாயகம் குறித்த நினைவுகள்.தாய் மண்ணை விட்டு பிரிந்து,கட்டாயத்தின் பேரில் அந்நிய மண்ணில் வாழும் பலரில் ஒருவனை பற்றிய குறிப்பு.இத்தொகுப்பில் பிடித்த கதை மற்றொரு "முதலும் முடிவும்" .சிறுவயது காதலை தீவிரமாய் கொண்டு கனவுகள் கொள்ளும் நாயகி விதி வசத்தால் காதலனின் தந்தையை மணக்கும் கதை.

முந்தைய தொகுப்பிற்கு மாறாக சு.ரா வின் "பிரசாதம்" தொகுதியில் உள்ள சிறுகதைகள் யாவும் அருமை.எனக்கு மிக பிடித்த கதை "சன்னல்" - படுத்த படுக்கையாய் இருக்கும் ஒரு நோயாளிக்கு அலுப்பை போக்குவதாய்,நிரந்தர தோழனாய் அமைந்த சன்னல் குறித்த பதிவு.வெகு வித்தியாசமான கதை வெளி.மருத்துவமனைகளில் தேடி பார்த்த சன்னல் காட்சிகள் நினைவிற்கு வந்தது உள்ளிருக்கும் சோகத்தை சற்றே மறந்து ஆறுதல் பெற ஜன்னல் காட்சிகள் அவசியமென தோன்றும்.மற்றொரு கதையான "ஒன்றும் புரியவில்லை" பெண்ணிற்கு திருமணம் ஏற்படுத்தும் மாற்றங்கள் சிறுவனின் பார்வையில் சொல்லப்பட்டது.

"பிரசாதம்" சிறுகதை - மகளின் பிறந்தநாளை கொண்டாத பணம் வேண்டி மாமூல் பெற ஒரு போலீச்காரன் கோவில் அர்ச்சகரோடு தெருவில் நடத்தும் நாடகம் நகைச்சுவை ததும்ப சொல்லப்பட்டுள்ளது.சூழ்நிலை மனிதனை எந்த நிலைக்கும் இழுத்து செல்லும் என்பதை சோகம் கலக்காது சொல்லுகின்றது இக்கதை.இவை தவிர்த்து "அடைக்கலம்","லவ்வு",ஸ்டாம்பு ஆல்பம்", "சீதைமார்க் சிகைக்க்காயதூள்" ஆகிய கதைகளும் ரசிக்கும் வண்ணம் உள்ளவையே.

வெளியீடு - காலச்சுவடு

7 comments:

Krishnan said...

லேகா, சுந்தர ராமசாமியின் "அக்கரை சீமையிலே" மற்றும் புதுமைபித்தனின் "துன்பக்கேணி" சிறுகதைகளை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி. வா மு கோமுவின் பெயரை அடிக்கடி கேள்வி படுகிறேன். அவர் புத்தகத்தை பற்றிய தங்கள் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

லேகா said...

நன்றி கிருஷ்ணன்,

வா.மு.கோ.மு வின் "கள்ளி" நாவல் குறித்த அய்யனாரின் பதிவை படித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.அதன் பொருட்டு இவரின் எழுத்துக்களை படிக்க ஆர்வம் மிகுந்தது.2008 இல் சிறந்த தமிழ் சிறுகதை தொகுப்பாக இவரின் "தவளைகள் குதிக்கும் வயிறு" விகடனில் இடம்பெற்றுள்ளது!!விரைவில் பதிவு செய்கின்றேன்..:-)

குப்பன்.யாஹூ said...

லேகா வாழ்த்துக்கள், நிறைய புத்தகங்கள் தேடி படிக்கும் ஆர்வம் சந்தோஷமாக இருக்கிறது.

அனேகமாக நீங்கள் வாசிக்காத எழுத்தாளர்களே இல்லை என கூறலாம்.

தங்களின் வாசிப்பும் பதிவும் சிறக்க வாழ்த்துக்கள்.

குப்பன்_யாஹூ

குப்பன்.யாஹூ said...

காயத்ரி - பாலை திணை மீண்டும் கலக்கலா வந்துட்டாங்க பதிவு எழுத.

படித்து முங்கி வாருங்கள் பாற்கடலில்.

http://gayatri8782.blogspot.com/2009/01/blog-post.html

லேகா said...

வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி ராம்ஜி.காயத்திரியின் வலைத்தளம் என் விருப்ப தளங்களில் ஒன்று..அவரின் புது பதிவு குறித்து நினைவூட்டியத்திற்கு நன்றி!!

ரௌத்ரன் said...

சன்னல் சிறுகதை கல்லூரி நாட்களில் வாசித்தது.இதை ஒரு குறும்படமாக எடுக்கும் ஆசை அன்றிலிருந்து இன்றுவரை இருக்கிறது.தேவையெல்லாம் தோதான ஒரு சன்னல் மட்டுமே..ஏற்கெனவே யாராவது எடுத்துள்ளார்களா என தெரியவில்லை..

லேகா said...

வருகைக்கு நன்றி ரௌத்திரன்.

//இதை ஒரு குறும்படமாக எடுக்கும் ஆசை அன்றிலிருந்து இன்றுவரை இருக்கிறது.தேவையெல்லாம் தோதான ஒரு சன்னல் மட்டுமே//

அருமை.வாழ்த்துக்கள்.