Monday, November 24, 2008

"வேட்டி" - கி.ராவின் சிறுகதை மற்றும் கட்டுரை தொகுப்பு

கி.ரா வின் கதைகள் யாவும் கரிசல் மண்ணின் அனுபவ பகிர்தல்கள்.சற்றே கற்பனை கலந்து கேட்பவனை தன்வச படுத்த கதை சொல்லும் யுக்தி கதை சொல்லிகளுக்கே உண்டானது.அவ்வகையில் கி.ரா வின் கதைகளில் வரும் கற்பனை காட்சிகள் சுவாரசியமானவை.சில எழுத்துக்கள் எத்தனை முறை படித்தாலும் சலிக்காத வசீகரத்தை கொண்டிருப்பவை,கி.ரா வின் எழுத்துக்களை போல.நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் படித்த பொழுது இத்தொகுப்பு தந்த நிறைவு அலாதியானது.

கரிசல் பக்கத்து சம்சாரிகளின் நித்ய ஆடை வேட்டி.துங்கா நாயக்கரின் ஒரே ஒரு வேட்டி கிழிந்து விட கவலையில் அமர்ந்து அவர் வேட்டி குறித்து தம் சிந்தனையை ஓட விடுகிறார்.ஊரில் உள்ள ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தன் வேட்டியை பராமரிகின்றான் என நகைச்சுவை கலந்து சொல்லுகின்றது "வேட்டி" சிறுகதை. சீவி,சிங்காரித்து,மை பூசி அழகு பார்க்க கரிசல் பெண்களுக்கு நேரமும் இல்லை விருப்பமும் இருக்காது.பிறந்தது முதல் வீட்டு வேளையிலும்,காட்டு வேளையிலும் நாட்களை கழித்த பெண்ணொருத்தி திருமணம் அன்று தலையில் வைத்த பூவின் வாடை தாளாது மயங்கி விழுந்த கதை "பூவை".

இத்தொகுதியில் பெரும்பாலான கதைகள் கரிசல் பக்கத்து பெண்களை மையமாய் கொண்டவை.வேலை..வாழ்கையே வேலை சிறுகதை சம்சாரி வீட்டு பெண்ணொருத்தியின் காட்டிலும்,வீட்டிலும் கழியும் ஒரு நாள் பொழுதினை விவரிப்பது.கால சுழற்சியில் விவசாய வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்களை வயதான சம்சாரியின் பார்வையில் சொல்லும் கதை "எங்கும் ஒரே நிறை".மற்றும் புதிதாய் திருமணமான தம்பதியருகுள்ளான பிரியத்தை சொல்லும் கி.ரா வின் பிரபலமான சிறுகதை "கனிவு"ம் இதில் அடக்கம்.




இத்தொகுதியில் அமைந்த சற்றே நீண்ட சிறுகதை,"கரிசல் காட்டில் ஒரு சம்சாரி".எனக்கு பிடித்த சிறுகதையும் கூட.துரைச்சாமி நாயக்கர் - உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு,விவசாயத்தில் புதிய தந்திரங்களை கையாண்டு,பண விஷயத்தில் கருமி தனம் செய்து காண்பவர் ஆச்சர்யப்படும் வண்ணம் வாழ்ந்த சம்சாரி.உளவுக்கு மாடு பிடிப்பது,பஞ்ச காலத்திற்கு முன்பே தானியங்கள் சேமிப்பது,உறவுகளை விட்டு விலகியே இருந்து பணத்தையும்,சச்சரவுகளையும் குறைப்பது,பெரு மழைகால இரவில் வயலில் சென்று நீரின் தடம் மாற்றுவது,அதிக விலை பெறுமானமுள்ள தோட்டத்தை பேச்சு சாதுர்யத்தால் குறைவாய் பேசி முடிப்பது என செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் திட்டமிடுதலை கையாண்ட துரைசாமி நாயக்கரின் கதையை கதை சொல்லி தம் நண்பருக்கு சொல்வதை அமைந்துள்ள இக்கதை சில இடங்களில் எனக்கு என் தாத்தாவை நினைவூட்டியது.

சிறுகதைகள் தவிர்த்து கி.ராவின் சில கட்டுரைகளும் இதில் உண்டு.தமது கிராமமான இடைசெவல் குறித்த கி.ராவின் "எங்கள் கிராமம்".தாம் முதலில் எழுதிய கடிதம் குறித்தும் நினைவுகளை,கதைக்கு கரு உருவாக காரணமாய் அமைந்த சில நிகழ்ச்சிகளையும் குறித்து விரிவாய் பதிவு செய்துள்ளார்.இதில் புதுமைபித்தனின் "துன்பக்கேணி" மற்றும் சு.ரா வின் "அக்கரை சீமையிலே" ஆகிய கதைகள் சிறப்பானவை என குறிப்பிட்டு சொல்லி உள்ளார்.சிறுகதைகள்,கட்டுரைகள் தவிர்த்து கி.ரா வின் பல கடிதங்களும் இதில் உண்டு.மொத்தத்தில் கி.ராவின் கதைகள்,கட்டுரைகள்,கடிதங்கள் என யாவும் சேர்ந்த அறிய தொகுதி இது.

வெளியீடு - அன்னம் பதிப்பகம்

27 comments:

anujanya said...

பிறந்தது முதலே படிக்க ஆரம்பித்தீர்களா லேகா? உங்கள் பதிவுகளை எப்போதும் நீக்கி விடாதீர்கள். வாசிக்க விழையும் அனைவருக்கும் ஒரு reference point போல இருக்கும் உங்கள் பதிவுகள். டிக் செய்துகொள்ள வசதியாகவும் இருக்கும். M.Phil. மாணவியைப் பார்க்கும் LKG மாணவன் போல உணர்கிறேன். வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

narsim said...

//M.Phil. மாணவியைப் பார்க்கும் LKG மாணவன் போல உணர்கிறேன். வாழ்த்துக்கள்.
//

நான் Pre KG ஆக உணர்கிறேன்

லேகா said...

// உங்கள் பதிவுகளை எப்போதும் நீக்கி விடாதீர்கள். வாசிக்க விழையும் அனைவருக்கும் ஒரு reference point போல இருக்கும் உங்கள் பதிவுகள்//

நன்றி அனுஜன்யா.

என் நோக்கமும் அதுவே!!

லேகா said...

நர்சிம். இது கொஞ்சம் அதிகம் தான் :-((

ramachandranusha(உஷா) said...

எனக்கு பிடித்த எழுத்தாளர், அதாவது எழுத்து யாருடையது என்னும்பொழுது எல்லாம் சொல்வது கி.ரா தான். பாட்டி கதை சொல்வதுப் போல, எதிரில் உட்கார்ந்து கேட்பது போல இருக்கும், அவர் படைப்புகளை படிக்கும்பொழுது. அதுக்காகவே
பாண்டிசேரி சென்று அவரை பார்க்க, நாங்கள் திட்டம் போட்டு இருக்கிறோம். (நாங்கள் என்றால் நாலைந்து இணைய நட்புகள்)

லேகா said...

கதை சொல்லிகளுக்கே உரிய திறன் இது.கி.ரா வின் கதைகளை படிக்கும் பொழுது நானும் உணர்வது இதையே!!சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் கி.ரா வை பார்க்க தவறிவிட்டேன்,ம்ம்ம்ம்ம்ம்ம்......அவர் கையெழுத்திட்ட புத்தகம் மட்டுமே கிடைத்தது!!

பாண்டிச்சேரி பயணத்திற்கு வாழ்த்துக்கள்!! :-)

KARTHIK said...

// பாட்டி கதை சொல்வதுப் போல, எதிரில் உட்கார்ந்து கேட்பது போல இருக்கும், அவர் படைப்புகளை படிக்கும்பொழுது.//

உண்மைதாங்க

மறைவாய் சொன்ன கதைகள்ன்னு கிரா மற்றும் கழனியூரான் இருவரும் சேர்ந்து தொகுத்த நாட்டுப்புறத்து கதைகளின் தொகுப்பது.

நம்ம பக்கத்துல ஒரு தாத்தா கதை சொல்லுறமாதிரியே இருக்கும் அதுல வர்ற ஒவ்வொரு கதையும்.

KARTHIK said...

// narsim said...

//M.Phil. மாணவியைப் பார்க்கும் LKG மாணவன் போல உணர்கிறேன். வாழ்த்துக்கள்.
//

நான் Pre KG ஆக உணர்கிறேன்.//

நா இன்னும் மழைக்குக்கூட ஒதுங்களை

குப்பன்.யாஹூ said...

லேகா பாராட்ட வார்த்தைகளே இல்லை (சத்தியமாக சொல்கிறேன்). அன்றாட அலுவல்கள், அலைச்சல்கள் இடையே இவ்வளவு தீவிரமாக வாசித்தல், எழுதுதல் பாராட்டுதலுக்கு உரியது.
எனக்கு உள்ள வருத்தம் எழுத்தாளர் சுஜாதா இதை பார்க்க இல்லையே என்பதே.

அனுஜன்யா, நரசிம் பின்னோட்டங்களை நானும் வழிமொழிகிறேன்.

நான் எல்லாம் எட்டு புத்தகங்கள் படித்து விட்டு பந்தாவாக பதிவு எழுத வந்து விடுகிறேன். தங்களின் அடக்கம், இன்னும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் போற்றுதலுக்கு உரியது.

பதிவு உலகத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்வதில் தங்களின் பங்கு குறிப்பிடத் தக்கது.

கி ராவின் இந்த புத்தகம் வாசிக்க முயலுகிறேன்.

குப்பன்_யாஹூ

லேகா said...

மறைவாய் சொன்ன கதைகள் லாண்ட்மார்க்கில் பார்த்தேன் கார்த்திக்.அடுத்த முறை செல்லும் பொழுது வாங்க வேண்டும்!!நினைவூட்டியதிற்கு நன்றி.

லேகா said...

நன்றி குப்பன்_யாஹூ.கி.ரா வின் இந்த தொகுதி தற்பொழுது கிடைக்குமா என தெரியவில்லை.என்னிடம் உள்ளது 1980 களில் வாங்கியது,இந்நூலின் விலை அப்பொழுது எட்டு ரூபாய் :-)

கி.ரா வின் அனேக படைப்புக்களை வெளியிட்டது அன்னம் பதிப்பகம்.

லேகா said...

@நர்சிம்/கார்த்திக்/குப்பன்_யாஹூ

ஒரு நாளில் குறைந்த பட்சம் ஒரு மணிநேரம் மட்டுமே வாசிப்பேன்..சாப்பிடுவது,தூங்குவது போல அன்றாட காரியங்களில் ஒன்றாக மாறிவிட்டது!!அலுப்பு தரும் சென்னை வாழ்கையை மறந்திருக்க வாசிப்பு தினமும் அவசியமாகிவிட்டது!!

Krishnan said...

I liked reading KiRa's GopallaGramam and Gopalla Purathu Makkal. Great writer ! Thanks Lekha for sharing his short story collection.

லேகா said...

Tnx Krishnan.

According to me Gopalla Kiramam is the best, But Ki.Ra got Sagidya Academy award for "Gopalla Kiramathu Makkal"

குப்பன்.யாஹூ said...

லேகா- கி ரா வின் இந்த வேட்டி சிறுகதை தொகுப்பு சென்னை கடைகளில் இல்லை. இதே போல வண்ண நிலவனின் கம்பா நதி, தாமிரபரணி கதைகளும் கிடைக்க வில்லை.

www.nhm.com மூலம், கடல்புரத்தில் இலவசமாக கிடைத்தது, இரண்டாம் பக்கம் ஆரம்பித்ததும் என் கண் முன்னே உவரி, மணப்பாடு, புன்னக்காயல், இடிந்த கரை ஊர்கள் விரிந்தது, மேலே படிக்க முடியவில்லை.

முப்பதாம் தேதிக்குள் படித்து முடிக்க முயற்சி செய்கிறேன்.

I forgot to inform u that www.nhm.com, is offering free boks . They ask us to write reviews. I forgot the blog link,

narsim if you could give the link it would be gr8.

குப்பன்_யாஹூ

லேகா said...

//இரண்டாம் பக்கம் ஆரம்பித்ததும் என் கண் முன்னே உவரி, மணப்பாடு, புன்னக்காயல், இடிந்த கரை ஊர்கள் விரிந்தது, மேலே படிக்க முடியவில்லை.//

கடல்புரத்தில்,மிக சிறந்த படைப்பு.காதலை,ஏழ்மையை,ஏமாற்றத்தை வலியோடு வர்ணிக்கும் வண்ணநிலவனின் மற்றுமொரு சிறந்த நாவல்.வண்ணநிலவன் குறித்த தமது சமீபத்திய கட்டுரையில் கடல் புறத்தில் நாவல் குறித்தும் நாவல் நிகழும் இடங்களை சென்று பார்த்து வந்ததையும் எஸ்.ரா சொல்லி இருப்பார்.

nhm வலைத்தளம் குறித்து பகிர்தமைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

லேகா,

கிராவின் கிடை, கதவு, நாற்காலி ஆகிய சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. நீங்கள் படித்த இந்தத் தொகுப்பு இதுவரை நான் படிக்கவில்லை. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. கோபல்ல கிராமம் குறித்த என் கருத்தும் உங்களுடையதே.

கிழ்க்கு பதிப்பகத்தின் இலவச புத்தகம் குறித்த பா.ரா வின் அறிவிப்பு; பதிரியின் அறிவிப்பு.

துளசி கோபால் said...

நீங்கெல்லாம் கி.ரா.வைப் பத்திச் சொல்லச் சொல்ல எனக்கும் அவரைப் படிக்க ஆசையா இருக்கு.

இந்தமுறை ஊருக்கு வந்தால் புத்தகங்களில் கிராவுக்கு முதலிடம் தரணும்.

(போன முறை லா.ச.ரா)

Krishnan said...

Lekha here is the link where NHM is offering books for free to be review in blogs.
http://thoughtsintamil.blogspot.com/2008/11/nhm.html

லேகா said...

கோபால்,

கி.ரா வின் நாவல்கள் "கோபல்ல கிராம","கோபல்ல கிராமத்து மக்கள்" வாங்கி படிங்க.மற்றும் அவரின் பல சிறுகதை தொகுப்புகளும் அன்னம் பதிபகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

லேகா said...

Tnx a lot for sharing the link Krishnan :-)

லேகா said...

//கிராவின் கிடை, கதவு, நாற்காலி ஆகிய சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை//

நன்றி வேலன்.

கதவு,நாற்காலி இரண்டும் படித்திருகின்றேன்.கிடை சிறுகதை படிக்க வேண்டும்!!
பகிர்தலுக்கு நன்றி.

Jackiesekar said...

நல்ல படிப்பாளினி போல நீங்க, உங்க பதிவை படித்த போது கொஞ்சம் பொறாமையா இருந்தது,

லேகா said...

வருகைக்கு நன்றி சேகர்.

N A V ! N said...

இந்த புத்தகத்தை சிலமுறை வாங்க நினைத்து ஏனோ மனம் ஒட்டாமல், முன்னுரைகூட படிக்காமல் விட்டதுண்டு. உங்கள் உரை படித்த போது இப்புத்தகத்தை படித்துவிட வேண்டும்.. செந்நெல் என்ற ஒரு புத்தகம் உண்டு
கீழவெண்மணி படுகொலையை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகம்..சில விருதுகள் பெற்ற புத்தகம்கூட..

லேகா said...

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி நவீன் :-)

யாத்ரா said...

வேட்டி, கரிசல் காட்டில் ஒரு சம்சாரி கதைகள் வாசித்த நினைவிருக்கிறது. கி ரா கதைகள் என சுமார் அவரது 80 கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு வாசித்தது ஒரு மூன்று வருடங்களுக்கு முன்னால் இருக்கும், தற்போது தங்கள் தளத்தில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது,

கிடை என்னும் இவரது ஒரு கதையை அம்ஷன் குமார் ஒருத்தி எனும் பெயரில் குறும்படமாக எடுத்திருந்தார், பார்த்திருக்கிறீர்களா